Advertisement

அவள் சென்றதும் “நீங்க கூட அன்னைக்கு டின்னர்க்கு வர்றதுக்கு ரொம்ப போர்ஸ் பண்ணுனீங்க. ஏன் பண்ணுனீங்க? இங்க நான் வந்தே பத்து நாள் தான் ஆகுது. இன்னும் உங்களை யார்ன்னு தெரியாது, வந்த அந்த பீப்பில் யார்ன்னு தெரியாது. சும்மா லஞ்ச்க்கு வான்னா, நாங்க என்ன பசங்களா?”

“இந்த மாதிரி போனா அவங்க வீட்ல என்ன இம்பேக்ட் இருக்கும்ன்னு தெரிய வேண்டாமா? பேரன்ட்ஸ்க்கு பிடிக்காம போகலாம், இல்லை கணவர்க்கு பிடிக்காம இருக்கலாம், எத்தனையோ இருக்கலாம், அத்தனை பேரும் ஆண்கள் நான் மட்டும் தான் பொண்ணு, அண்ட் இது என்னோட வேலை கிடையாது” என நேரடியாக சொன்னாள்.

ப்ரவீனிற்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.

“உங்க ஸ்டாஃப் நான்றப்போ நீங்க என்னை ப்ரொடக்ட் பண்ணனும். வரலைன்னா விடுங்க நாம போகலாம்னு அவங்க கிட்ட சொல்லணும். அதை விட்டு வா வான்னு என்னை ஃபோர்ஸ் பண்ணக் கூடாது” என்றாள். எப்போதும் யாரை பார்த்தும் பயமும் தயக்கமும் கிடையவே கிடையாது.

இப்போது சாரி கேட்பது அவரின் முறையாகிற்று.

“சாரி” என்று அவளும் சொன்னவள், “உங்களை சாரி கேட்க வைக்கறது என்னோட இன்டன்ஷன் இல்லை, ஸ்டில் எனக்கு சொல்லணும்னு தோணிச்சு” என்றவள் கூடவே “நிறைய பிரச்சனைங்க. நான் வேணா ரிசைன் பண்ணிடட்டுமா” என்றாள்.

“ஹல்லோ மேடம் வாட் இஸ் திஸ்” என சிரித்தவர், “எவ்வளவு பெரிய ப்ராஜக்ட் சக்சஸ் ஆனதுக்கு நீயும் ஒரு ரீசனா இருந்திருக்க, இவ்வளவு எஃபிசியன்ட் ஸ்டாப் எல்லாம் ரிசைன் பண்ண சொல்ற அளவுக்கு நான் என்ன முட்டாளா? இதெல்லாம் மறந்துடுவோம், போங்க போய் வேலையைப் பாருங்க! அப்படியே விஜய் கிட்ட, கமாலி சாரி கேட்டாங்க, நானும் கேட்டேன்னு சொல்லிடுங்க!”

“சும்மா வெளில பார்த்துக்குவேன்னு மிரட்டுறான். என்ன பண்ணிடுவானாம் அவன். ரொம்ப பேசறான். எங்களை மிரட்டுறான்” என சிரிப்போடு சொன்னாலும் எங்களை மிரட்டிட்டான் என்ற செய்தியும், என்ன செய்து விடுவான் அவன் மிரட்டியதை போல என்ற அலட்சியமும் தொக்கி நின்றது. உண்மையில் கமாலியை தான் மிரட்டினான். கமாலியை அவளிடம் பேசினாலும் சைந்தவியிடம் விட்டுக் கொடுக்காமல் பேசினார்.

ஒரு நிர்வாகியின் திறமையோடு பேசினார். இரண்டு நாட்களாக பார்த்து தானே இருந்தாள், ப்ரவீனுடன் முழு நேரமும் இருந்தான். அதற்கு முன் கமாலியுடன் அத்தனை ஏற்பாடுகள் செய்தான். இவர்கள் அவனை பேசுவதா என்று தோன்றியது. உடனே பதில் கொடுத்தாள்.

“பக்கா லோக்கல் சென்னை பையன் சர் அவன். நீங்க இங்க பார்க்கற மாதிரி இல்லை. சும்மா விளையாட்டுக்கு எல்லாம் மிரட்ட மாட்டான். சொன்னா செய்வான்! சும்மா செஞ்சிடுவியா நீ ன்னு யாராவது சீண்டினா செஞ்சிட்டு தான் வேற வேலை பார்ப்பான். அவனோட நிறைய பேர், இவனுக்கு ஒண்ணுன்னா அத்தனை கிளம்பி வந்துடுவாங்க”

“ஆனா இனிமே எல்லாம் ஒன்னும் பண்ண மாட்டான். பண்ணனும்னா அப்போவே பண்ணியிருப்பான்” என்று சொல்லி, “நான் கிளம்பட்டுமா சர்” என்று பெர்மிஷன் கேட்டாள்.

“நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து இல்லையா?”

“இல்லை” என்பது போல தலையாட்டினாள்.

“ஏன்?”

“சொல்ற மாதிரி எதுவும் இல்லை” என்றாள் சிறு புன்னகையுடன்.

விஜயை அழைத்தார், அவன் வந்ததும் “உன் வைஃப் கிட்ட கமாலியும் சாரி கேட்டுட்டா, நானும் கேட்டுட்டேன் சரியா” என்றவர், “இப்படி இனி மிரட்டுற மாதிரி எல்லாம் பேசக் கூடாது” என்றார் பொறுமையாகவே.

“கமாலி கூப்பிடறேன், நீ பேசினதுக்கு சாரி கேளு” என்றவர் அவனின் பதிலுக்கு கூட காத்திராமல் அவளை அழைத்து விட்டார்.

விஜய் “நான் சாரி எல்லாம் கேட்க மாட்டேன், உங்களுக்கு என் மேல என்ன ஆக்ஷன் எடுக்கணுமோ எடுங்க” என்று பேசினான்.

“நீ பேசினது தப்பு விஜய். அவங்களுக்கு வார்னிங் குடுக்கப் போறேன். அவங்க சைந்தவிகிட்ட சாரியும் கேட்டுடாங்க! இப்போ நீ உன்னோட பார்ட்ல இருந்து கேட்கணும். இங்கே தான் எல்லோரும் வொர்க் பண்ண போறீங்க. இப்படி பிரச்சனைகளோட நான் ஆஃபிசை விட்டுட்டுப் போக முடியாது” என்றார் ஸ்ட்ரிக்டாக.

“உங்களுக்கு என்ன பண்ணணுமோ பண்ணிக்கங்க, இவங்க கிட்ட என்னால சாரி கேட்க முடியாது” என்று வேகமாக எழுந்து வெளியே நடக்கத் துவங்க,

“ஒரு நிமிஷம்” என்ற சைந்தவியின் குரலுக்கு தேங்கினான்.

“சின்ன விஷயம், இதுக்கு இப்படி ரியாக்ட் பண்ண வேண்டாம். அவங்க அப்படி பேசினா அது அவங்களோட மீன் மைன்ட் காட்டுது, பிரச்சனைகளை காம்ப்ளிகேட் பண்ண வேண்டாம். ஒரு சாரினால ஒன்னும் ஆகிடப் போறதில்லை” என்றாள் ஒரு ஆளுமையான குரலில்.

விஜய் நின்று அவளை ஒரு பார்வை பார்த்தான். அவளின் பார்வையில் “சொல்லிட்டுப் போ” என்ற கட்டளை இருந்தது. நொடியில் “சாரி” என்ற விஜய், பின் வெளியில் நடந்து விட்டான்.

“நான் மீன் மைன்ட்டா” என்று கமாலி பேச,

“இது ரொம்ப பாலிஷ்ட் வொர்ட்ஸ். இன்னும் மோசமா கூடப் பேசுவேன். வேண்டாம்னு பார்க்கிறேன். வேலைல ஏதாவதா பேசுங்க, தட்ஸ் ஃபைன். அதை விட்டு பெர்சனல் க்ரிட்டிசிசம் எல்லாம் எப்பவும் டாலரேட் பண்ண மாட்டேன்”

“இப்போ நீங்க பேசினப்போ ஒரு சாரி கேட்க சொன்னார் சர். நான் பேசினாலும் என்கிட்டயும் அதுதானே சொல்வார். கேட்டுட்டுப் போறேன்” என்றவள்,

“தேங்க் யு சர்” என்று கிளம்பிவிட்டாள்.

“இப்போது இந்த சைந்தவி என்ன சொல்கிறாள்? நான் செய்தது சரி என்கிறாளா இல்லை தவறு என்கிறாளா” என்று பிரவீன் தான் குழம்பிப் போனார்.

அவள் சென்றதும் பிரவீன் கமாலியிடம், “மிசஸ் கமாலி ஷா, ஒரு சின்சியர் அட்வைஸ் உங்களுக்காக, எழுதி வெச்சிக்கங்க, இன்னும் ஐஞ்சு வருஷத்துல இந்த பொண்ணு உங்களுக்கு மேல பொசிஷன்ல இருக்கும். நான் ரிடையர் ஆகறதுகுள்ள எனக்கு மேல பொசிஷன்லையும் இருக்கலாம். பார்த்துப் பேசுங்க” என்றார்.

“ரொம்ப புத்திசாலி, கூடவே ரொம்ப பொறுமையா விஷயங்களை ஹேண்டில் பண்றா. தென் அப்பியரன்ஸ் அதுவும் எல்லோரையும் அட்ராக்ட் பண்ணுது. ரொம்ப சிலருக்கு தான் இது போல அமையும் அண்ட் விஜய் சொன்னான் அவங்கப்பா மல்டி மில்லியினறாம்”

“அத்தனையும் இவனுக்காக தூக்கிப் போட்டுட்டு வந்தாளாம். சோ, பணமும் முக்கியமில்லை. இப்படி இருக்குறவங்களை பார்க்கறது ரொம்ப ரேர். அதாவது ரொம்ப டிடர்மைண்டா இருக்குறவங்களால தான் இது முடியும். இந்த மாதிரி ஆளுங்க லைஃப்ல அச்சீவ் பண்ண முடிவு பண்ணினா சீக்கிரம் ஆச்சீவ் ஆகிடுவாங்க!” என சைந்தவியை சிலாகித்து பேச, ஐயோ என கமாலி நொந்து போனாள்.

விஜய் அவனிடத்தில் அமர்ந்தவனுக்கும் சைந்தவியை பற்றிய யோசனை தான். இதுவல்ல அவன் பார்த்திருந்த சைந்தவி. சந்தோஷமோ துக்கமோ உடனே காட்டுவாள். பொறுமை என்பதே இருக்காது. ஆர்ப்பாட்டமாய் தான் பேசுவாள். அமைதியான பேச்சே இருக்காது. சாரி என்று யாரிடமும் கேட்க மாட்டாள். எப்போதும் ஒரு திமிர், கர்வம் இருக்கும். அழகான பெண் என்பதையும் மீறி விஜயை ஈர்த்தது இந்த குணங்களே!

அமைதியாக அமர்ந்து விட்டான். பிரவீன் அன்று இரவு ஹைதராபாத் கிளம்ப இருந்தவர், அவனை அழைத்து “என்னை ஃபிளைட் ஏத்திவிட வர மாட்டியா” என்றார்.

“வரமாட்டேன்” என்பதை போலத் தலையசைக்க, “வாடா டேய் வாடா, இப்போ நான் உன்னோட பாஸா கூப்பிடலை சரியா” என கைபிடித்து இழுக்க, வேறு வழியில்லாமல் அவருடன் கிளம்பினான்.

அவர்கள் இறங்கி வந்து வாயிலில் நின்றனர் கார் வருவதற்காக. அப்போது சரியாக ப்ரித்வி வந்தான் சைந்தவியை பார்ப்பதற்காக. அவளிடம் கீழே இருக்கிறேன் என்று கைபேசியில் சொல்லிவிட்டு நின்றிருந்தான் அவனின் வெள்ளை நிற ஆடி காரில்.

கார் பிரியரான பிரவீன் “யாருக்குடா அந்த ஆடி கார் வெயிட் பண்ணுது” என்று விஜயிடம் பேசிக் கொண்டிருக்க. விஜய் அப்போதுதான் காரை பார்த்தான். அந்த சமயம் ப்ரித்வி காரின் விண்டோவை இறக்கினான் விஜயை கவனித்தவனாக.

“என் மச்சான் பாஸ்” என்ற விஜயை பிரவீன் புரியாமல் பார்த்தார்.

“சைந்தவியோட அண்ணா” என்று விளக்கம் கொடுத்தான்.

“ஓஹ்” என அவர் பார்க்க, அங்கிருந்த படியே விஜய் ப்ரித்விக்கு கை ஆட்ட, பதிலுக்கு ப்ரித்வியும் கை ஆட்டினான்.

இவனும் செல்லவில்லை, அவனும் வரவில்லை!

பிரவீன் யோசனையுடன் பார்க்க, “அவன் என்னை பார்த்து கை ஆட்டுறதே இப்போ தான் பாஸ்” என்றவன், “எப்பவும் அவன் தங்கைக்கு நான் ஈக்குவல் இல்லைன்னு தான் பார்ப்பான்” என அவர்கள் பேசும் போதே இவர்களுக்கு கார் வந்துவிட,

ப்ரித்வி அவனின் காரை நகர்த்தினால் தான் இவர்கள் செல்ல முடியும். ஆனால் சொல்லும் அவசியமின்றி அதற்குள் சைந்தவி வந்து விட்டவள் இவர்களை கவனித்தாலும், கண்டுகொள்ளாமல், ப்ரித்வியிடம் “ரொம்ப நேரமா வெயிட் பண்றியா” என்று முன் அமர்ந்தாள்.

ப்ரித்வி அதற்கு பதில் சொல்லாமல் “விஜய் பார்த்தேன், அந்த கார்ல இருக்கான்” எனவும்,

“இருப்பான், இருப்பான், பாஸ்ன்னு ஒருத்தனை சொல்லி அவனுக்கு அல்லக்கை வேலை பார்த்துட்டு இருக்கான். இடியட்! பெரிய இவன் மாதிரி எல்லோருக்கும் வேலை செஞ்சு கொடுக்கறான்! முட்டாள் மாதிரி நடந்துக்கறான். கொஞ்சம் கூட கெத்து மெயின்டெயின் பண்ணத் தெரியலை” எனப் பொரிந்தாள்.

“என்னவோ பண்ணிட்டு போறான், உனக்கு என்ன?” என்று ப்ரித்வி சொல்ல,

“என்னடா அண்ணா போட்டு வாங்கறியா? கிளப்பு வண்டியை! உனக்கு அதெல்லாம் வராது, என்னை வீட்ல விடு, உனக்கு பனிஷ்மென்ட் என்னோட ப்ளாக் காஃபியை நீ குடிக்கணும்” என்று ப்ரித்வியிடம் ஒரு சிரிப்போடே பேசிக் கொண்டு இருந்தாள்.

விஜயால் பார்வையை அவளிடம் இருந்து திருப்பவே முடியவில்லை.

ப்ரவீனிற்கு ஒன்பது மணிக்கு பிளைட், அவர் ஓரிரு வார்த்தைகள் சைந்தவியை பற்றி அவனிடம் பேச முற்பட்ட போது, “பாஸ் ப்ளீஸ், என்னோட பெர்சனல் நான் யாரோடவும் பேச இஷ்டப் படறது கிடையாது. ப்ளீஸ் தப்பா எடுக்காதீங்க” என்று விட்டான்.

அதற்கு மேல் பிரவீனும் பேசவில்லை. அவருடைய குடும்பத்தை பற்றி பேசி, வேறு பலதும் பேசி, என நேரத்தை கடத்தி விட்டார்.

அவரை அனுப்பி விட்டதும், ஒரு கேப் பேசி, அட்ரஸ் சொல்லி, ஒரு வழியாக பத்து மணிக்கு சரியாக சைந்தவி இப்போது இருக்கும் அபார்ட்மெண்ட்ஸ் கண்டு பிடித்தான். எங்கே இருக்கிறாள் என்று தெரிந்து கொள்ள அலுவலகம் வந்த முதல் நாளே முகவரி எடுத்துவிட்டான்.

அங்கிருந்த செக்யுரிட்டி யார் வீட்டிற்கு எனக் கேட்க, சைந்தவியின் வீட்டிற்கு, அவளின் கணவன் என்று சொல்லவும், “இருங்க கேட்கறேன்” என்று அவன் அலைபேசி எடுத்தான்.

“சர்ப்ரைஸ்” என்றவன், செக்யுரிட்டிக்கு சந்தேகம் வராதவாறு “நீங்களும் வாங்க” என்று அவனையும் அழைத்து வந்து செக்யுரிட்டி விட்டே பெல் அழுத்த வைத்தான்.

யார் இந்த நேரத்தில் என்று ஐ க்ளாஸ் வழியாக சைந்தவி பார்க்க, அங்கே செக்யுரிட்டி தெரிய, கதவை முழுவதுமாக திறக்காமல் லேசாய் திறந்தாள்.

Advertisement