Advertisement

அத்தியாயம் ஆறு:

நழுவிய இதயம்!

அலுவலகம் மிகவும் பரபரப்பாக இருந்தது. அன்று சில முக்கிய நபர்கள் வெளிநாட்டில் இருந்து வரவிருந்தனர். அதற்கு முன் தினமே விஜய் அலுவலகம் வந்து விட்டான் ஆனால் இன்னம் சைந்தவியை பார்க்கவில்லை.

என்னவோ பார்க்கும் தைரியம் வரவில்லை, எப்போதும் இல்லாத ஒரு பதட்டம். தனியாக இருந்திருகிறாள் என்ற ஒரு விஷயம் அவனை அறுக்கத் துவங்கி இருந்தது.

எப்படி நடந்தது திருமணம்? அவளுடைய அப்பாவை  எதிர்த்து திருமணம் செய்தாள், அவளிற்கும் அவர்களுக்கும்   யாதொரு பந்தமும் இல்லை என போலிஸ் ஸ்டேஷனில் எழுதிக் கொடுத்து தான் வந்தாள்.

அப்படி இருந்தவள் திரும்பி பெற்றோரிடம் போக, அவர்களும் வேண்டாம் என்று சொல்லிவிட, “அம்மா” சைந்தவியின் மன உணர்வுகள் எப்படி இருந்திருக்கும் என்பது நிதமும் அவனின் நினைவில் நிற்க, அவளை பார்ப்பதில் ஒரு பயம் வந்து அமர்ந்து கொண்டது.

அதனால் நேற்று அலுவலகம் வந்தவன், கமாலி ஷாவுடன் இணைந்து வேலைகள் செய்தாலும், சைந்தவி எங்கே இருப்பாள் என்று தெரிந்தவன் அந்த பக்கம் செல்லவே இல்லை.

இந்த கிளையண்ட்ஸ் வந்து சென்ற பிறகு பார்க்கலாம் என்று மனதை சமாதானம் செய்து வைத்திருந்தான். அதுவும் சைந்தவி இருக்கும் ப்ராஜக்ட் தான் அவர்கள் பிரசன்ட் செய்ய வேண்டும். அவள் இருக்கும் ப்ராஜக்டின் ப்ராஜக்ட் லீடர் தான் அதை செய்வான். அதனால் எப்படியும் சைந்தவியை முன்பே பார்த்து ஆக வேண்டும் என்று புரிய மனதை தயார்படுத்த ஆரம்பித்தான்.

அதற்கான முன்னோட்டாம் நடந்து கொண்டிருக்க , கமாலியும் இவனும் இன்னும் சிலரும் அமர்ந்து பிரசென்டேஷன் பார்த்திருந்தனர்.

கமாலி கூட கேட்டாள், “ஏன் விஜய் ரொம்ப டல்லா தெரியற”  

“இல்லையே, ஐ அம் ஓகே” என்ற பதில் சொன்னாலும் அவனுக்கே தன்னுள் வித்தியாசம் தெரிந்தது. கமாலி சென்னையில் பிறந்து வளர்ந்த வடநாட்டு பெண். சௌக்கார் பேட்டையில் இருந்து வருபவள். விஜய்க்கு மேற்பொருப்பில் இருப்பவள். ஆனாலும் விஜயிடம் ஒரு தோழமையுடன் பழகுவாள்.

“இல்லை, பொய் சொல்ற எதாவது ப்ராப்ளமா?” என்று கேட்டவளிடம்,

“புதுசா எதுவும் இல்லை, மிசஸ் ஷா!” என்றிருந்தான்.

அன்று அவர்களின் ப்ராஜக்ட் ப்ரொஜக்ஷன் என்பதால், சைந்தவியின் டீமில் எல்லோருமே உடைகளுக்கும் தோற்றத்திற்கும் சற்று கவனமெடுத்து வந்திருக்க, சைந்தவி சிகப்பு நிறத்தில் ஒரு சுரிதாரில் இருந்தாள். அவ்வளவு அழகாக அவளுக்கு பொருந்தி இருந்தது. பார்ப்பவர்கள் ஆண் பெண் என்ற பாரபட்சமின்றி “யு லுக் ப்ரெட்டி” என சொல்ல வைத்தது.

இதற்கு முகத்தினில் ஒரு சிறு பொட்டு, மேலே ஒரு திருநீர் கீற்று, காதில் காதோடு ஒரு தோடு, தொங்கட்டான் கூட இல்லை, கழுத்தில் ஒரு மெல்லிய சங்கிலி இருந்தது. கையில் வளையல் என்பது போல எல்லாம் எதுவும் இல்லை. உடையே அப்படி தூக்கி கொடுத்தது.   

எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்க்க கமாலி ஷாவோடு விஜயும் வந்தான்.

“இதோ பார்க்கப் போகிறேன்” என்று இதயம் துடிக்கும் ஓசை உணர முடிந்தது.

“ஆர் யு ரெடி கைஸ்” என்றபடி கமாலி வர, “எஸ்” என்ற பதிலை ஓரிருவர் உரக்கச் சொல்ல, சைந்தவியின் பார்வை கமாலியை பார்த்து பின் அவள் பின் நின்ற விஜயின் மீது நிலைக்க, அவளின் கண்கள் விரிந்தது.

விஜயும் அவளை தான் பார்த்திருந்தான். அவனின் பார்வையில் அதிர்ச்சி இல்லை, ஆராய்ச்சி தான் இருக்க, தான் இங்கே இருப்பது முன்பே தெரியும் என உணர்ந்து கொண்டாள்.

முன்பே நடந்து வரும் போதே அவளை பார்த்து விட்டான். என்னவோ இது நாள் வரை இருந்ததை விட பார்த்தவுடன் அப்படி ஒரு ஏமாற்றம் “என்ன செய்திருக்கிறாய் நீ?” என்பதை போல.

பின்னே கையில் கிடைத்த பொக்கிஷத்தை நழுவ விட்ட உணர்வு. பார்வையை திருப்பவே முடியவில்லை.

அவள் அவனின் மனைவி, முன்பே திருமணமாகி விட்டது என்பதை எல்லாம் மீறி இப்போது தான் புதிதாய் பார்த்தாலும் அவளை காதலித்திருப்பான் என்றே தோன்றியது. பார்த்தது பார்த்தபடி இருந்தான், பார்வையை சிறிதும் மாற்றவில்லை.

சைந்தவியிடம் மூன்று வருடத்திற்கு முன் இருந்த சிறு பிள்ளைத்தனம் எல்லாம் குறைந்து மறைந்து இருந்தது. அதாவது எதற்கெடுத்தாலும் உணர்ச்சி வசப்படுவது. நிமிடத்தில் சைந்தவி தன்னை சுதாரிக்க முயன்றாள். ஆனால் முடியவில்லை. இவனுக்காக எல்லாம் விட்டு வந்தேனே? பின் இவனையும் விட்டு வந்தேனே? என்னவோ மனதை பிசைந்தது!

அப்போது பிரவாகமாக அவளுள் என்னவோ தப்பு செய்த உணர்வு, இதுநாள் வரையிலும் இருந்ததை விட அதிகமாக. நான் கடந்து போகும் ஆயிரம் ஆண்களில் ஒருவன் போல தான் இவனும் இருக்கிறான். ஆனால் என்ன ஈர்த்தது இவனிடம் என்னை.

அருமை பெருமையாய் வளர்த்த அப்பா அம்மாவை விட்டு இவனுடன் வந்தேன். எப்போதும் எனக்கு சொல்லி சொல்லி வளர்க்கப்பட்ட குல பெருமை, கௌரவம், அத்தனையும் உடைத்து, அவர்களையும் பெண்ணை வளர்த்திருக்கிறான் பார் என்று மற்றவர்கள் பார்வையில் இறக்கி வந்தேனே!

அவர்களின் மன வருத்தங்களும், நிராசைகளும் என்னுடைய வாழ்கையை முடிக்க வைத்து விட்டதோ? என்னென்னவோ எண்ணம்!

அப்படி ஒன்றும் இப்போதும் பின்னால் ஓடி விட மனம் துடிக்கவில்லை என்பது நிதர்சனமான உண்மை.

இவள் மிகவும் அழகாக இருப்பதை பார்த்து “உங்க டீம் சார்பா நீ பொக்கே கொடு” என்று கமாலி ஷா சொல்ல,

“டீம் லீடர் தான் கொடுக்கறதா ப்ளான்” என உடனே சைந்தவியும் பதில் சொன்னாள்.

“சொல்றதை செய்” என்றாள் அதிகாரமாக கமாலி.

சில வருடங்களுக்கு பிறகு பார்க்கும் விஜய் முன் தான் அதட்டப்படுவது பிடிக்கவில்லை. முகத்தினில் அதனை பிரதிபலித்தாள்.

கமாலி சைந்தவியின் டீம் லீடரை பார்க்க, “சே எஸ்” என்றான் அவசரமாக அவன்.

அவனுக்காக கொடுக்கிறேன் என்ற பதிலை அவனிடம் கொடுத்தால், ஆனால் கமாலியிடம் சொல்லவில்லை. திமிர் தான், ஆனாலும் யாரிடமும் காட்டுவதில்லை. இன்று விஜய் முன் கமாலி அப்படி அதட்டவும் தானாக வந்தது.

கூடவே நீ வா போ என பேசுவது ஒரு எரிச்சலை கொடுத்தது. இந்த வேற்று மாநில மனிதர்களுக்கு தமிழ் வரும், ஆனால் மரியாதை வராது. “ங்க” என்ற மரியாதை பன்மையை சேர்க்க மாட்டர். சிறியவர்கள் என்றால் சேர்க்கக் கூடாதா? “மரியாதையா பேசுங்க” என்று சொல்ல வந்தவள், முதல் நாளே வேண்டாம் என்று அமைதியானாள். 

விஜயும் கமாலியை பார்த்தான் “ஏன் இப்படி அதட்டுகிறாள்?” என்பது போல,

அந்த இடம் விட்டு நகர, விஜய் அவசரமாக “ஏன் இப்படி அதிகாரம் பண்ணறீங்க மிசஸ் ஷா! அப்புறம் வேலை நடக்காது! நீங்க ஏதாவது சொன்னா டிலே பண்ணுவாங்க! அதுவுமில்லாம இப்படி பேசறதும் சரி கிடையாது!” என்றான்.

“எவ்வளவு திமிர் அவளுக்கு? நான் சொன்னா முகத்தை காட்டுறா? அழகா இருக்கோம்னு திமிர்!”  

“மிசஸ் ஷா, நீங்க பேசற முறை சரியில்லை! நீங்க நல்லவிதமா சொல்லியிருந்தா அப்படி யாரும் ரெஸ்பான்ஸ் பண்ண மாட்டாங்க! யு ஷுட் சேஞ் யுவர் ஆட்டிடியுட்” என்றான் ஸ்ட்ரிக்டாக.

அங்கே சைந்தவிவிடம் அவளின் லீடர் “சொன்னா ஓகே சொல்லிடுங்க, அவங்க அப்படிதான், இல்லை ஓவரா ரியாக்ட் பண்ணு வாங்க” என்று கமாலியைப் பற்றி சொன்னர்.

கூட இருந்த இன்னொரு பெண் “ஆமா, தைய தக்கான்னு குதிப்பாங்க”

இன்னொருவன் “ஆமா, ஆமா ஓகே சொல்லிடுங்க சைந்தவி, இல்லை இந்த பில்டிங் டேமேஜ் ஆகற பாவம் நமக்கு வேண்டாம்” என, அங்கே கொல்லென்ற சிரிப்பலை, அது சைந்தவியின் முகத்தினில் புன்னகையை கொடுக்க, பார்வை தானாக விஜய் இருந்த புறம் சென்றது.

நடந்து கொண்டே பேசிக் கொண்டிருந்த கமாலியும் விஜயும் இவர்களின் சிரிப்பு சத்ததினில் திரும்பினர்.

அப்போது சரியாக சைந்தவி விஜயை பார்க்க, அது கமாலிக்கு அது என்னவோ சைந்தவி தன்னை அலட்சியமாக பார்ப்பதாக ஒரு தோற்றம் கொடுத்தது. நிறைய வேலைகள் இருப்பதால் இப்போது டீம் வந்துவிடுவார்கள் என்பதால் எரிச்சலாக முறைத்து பார்த்து சென்றாள்,

அதனை விஜயும் கவனிக்கவில்லை சைந்தவியும் கவனிக்கவில்லை. இருவர் பார்வையும் ஒருவர் மீது தான். “எவ்வளவு திமிரா நிக்கறான். பொண்ணுங்க லவ் பண்ணலைன்னு சொன்னா விடாமா பின்ன சுத்தறவங்க பசங்க! ஆனா கல்யாணமாகின பின்ன நான் போறேன்னு சொன்னா ஏன் போகக் கூடாது சொல்லலை! திரும்ப வந்து என்னை ஏன் கூப்பிடலை! எஸ், காதல் கூட பொண்ணுங்களா போய் சொன்னா அதோட மரியாதை இருக்கறதில்லை!” மனதில் ஏதேதோ எண்ணங்கள் அலைகடலென ஆர்பரித்தது.

ஒரு கோபம் எதற்கென்று தெரியாமல் பொங்கியது. விஜய் மட்டும் எதிரில் இருந்தால் அடித்து துவைக்கும் ஆவேசம்.

எழுந்து ரெஸ்ட் ரூம் செல்பவள் போல எல்லோரும் இருக்கும் இடம் விட்டு நகர்ந்து மாடிப்படி ஆரம்பமாகும் இடத்தினில் சென்று நின்று கொண்டாள். அங்கே யாருமில்லை.

ஒ வென்று கத்தி அழ வேண்டும் போலத் தோன்றியது. சுவரில் சாய்ந்து நின்று கையை கட்டி, ஒரு காலை மடித்து சுவரில் முட்டுக் கொடுத்து, தலையை சாய்த்து கண்களை மூடிக் கொண்டாள்.

தினம் தினம் இவனை பார்த்து சாதாரணமாகக் கடக்க முடியும் என்று தோன்றவில்லை.

கமாலியிடம் பேசி நேரம் பார்த்தான், இன்னும் டீம் வர ஒரு மணிநேரம் இருந்தது. மெதுவாக எழுந்து சைந்தவின் டீம் இருக்கும் இடம் செல்ல அங்கே அவளை காணவில்லை.

இவனை பார்த்ததும் “என்ன விஜய் இப்படி பேசறாங்க” என டீம் லீடர் பொங்கினான்.

“விடறா தம்பி, சொன்னேன்! ஆனா திரும்ப திரும்ப செஞ்சா ஒரு கம்ப்ளைன்ட் மெயில் தட்டி விடு! ஒரு வார்னிங் வாங்கினா தான் தெரியும். எங்கே அந்த நியு கம்மர்?”

“இங்கே தானே இருந்தாங்க”

“சரி நான் பார்க்கிறேன்” என வந்து பார்வையை ஓட்டினான். வெளியில் வந்து பார்க்க ரெஸ்ட் ரூம் தாண்டி படி ஏறும் இடத்தில அவள் நின்றிருப்பது தெரிந்தது. நின்றிருந்த விதம் மனதை உருக்கியது.

சற்று அருகில் சென்று “சவீ” என்றான். ஆம்! சைந்தவியை சுருக்கி சவீ என்று அழைக்கும் ஒரே ஒருவன் அவன் மட்டுமே!

சட்டென்று கண்ணை திறந்தவள் நிமிர்ந்துப் பார்த்தாள், கூடவே “ஹேய், தூர நில்லு!” என்றாள் சின்ன சிரிப்புடன்.

அந்த பாவனையில் அசந்து விட்டான். அழுத அல்லது கோபமான இப்படி ஒரு சைந்தவியை எதிர்பார்த்து வர, இப்படி ஒரு பேச்சை எதிர்பார்க்கவில்லை

அவன் விழித்து பார்க்க, “பக்கத்துல வந்தா நான் ஒட்டிக்குவேன். நீ வேற பெரிய பொசிஷன்ல இருக்க” என்றாள் சிரிப்பு வாடாமல். அது ஒரு நக்கல் பேச்சு போல தோன்றவேயில்லை. ஆனாலும் அவள் சொன்ன விதம் அவனை காயப்படுத்துவதை விட அவள் எவ்வளவு காயப் பட்டிருப்பாள் என தான் காட்டியது.

“அது, அது” என்று விஜய் தடுமாற, “ஷ், டைம் ஆச்சு” என்று கை கடிகாரத்தை பார்த்தவள், “நான் வேற பொக்கே குடுக்கணும் ரைட், உங்க ஹெட் ஆர்டர், கிளம்பறேன்!” என்று அவனை வேகமாக கடந்து போய் விட்டாள்.

தோற்றுபோனாலும்! அது தனக்கே தெரிந்தாலும்! அதனை யாரிடமும் தெரியவிட்டதில்லை சைந்தவி! இப்போதும் செவ்வனே அதனை செய்தாள்.

விஜய் கால்கள் தளர படிகளில் அமர்ந்து விட்டான். தானாக கைகள் தலையை தாங்கிக் கொள்ள, அறிவும் மனதும் ஒன்றே சொன்னது, “உன்னை இவள் பைத்தியமாய் அலைய விடப் போகிறாள் இனி” என்று.

பின்னே பெரிய அவளின் நலம் விரும்பி மாதிரி, அவள் பெற்றோருடன் சென்ற பிறகு, தன்னுடனான வாழ்க்கை பிடிக்கவில்லை எனும் போது, அவளை கட்டாயப் படுத்தக் கூடாது என நினைத்து தான் ஒதுங்கிக் கொண்டான். அவர்கள் அனுப்பியது இது நாள் வரையிலும் தெரியாது.

ஆம்! அவனின் வீட்டினில் சைந்தவியால் பொருந்தவே முடியவில்லை. அதனை அனுதினமும் பார்த்தவன் அவன்.

இனி கிடைக்க மாட்டாள் அவளை திரும்பப் பார்த்து தன்னுடைய மனதை மீண்டும் ஏன் கஷ்டப் படுத்திக் கொள்ளவேண்டும் என்று திரும்பப் பார்க்க முயலவேயில்லை. 

கிடைக்கவே கிடைக்காது என்ற ஒன்று கிடைத்த பின், “கிட்டாதாயின் வெட்டென மற” என்று நினைத்து செயல் செய்த முட்டாள் அவன்.  

இதோ இப்போது டைவர்ஸ் கேட்டது கூட மூன்று வருடமாகிவிட்டது சைந்தவி ஏதாவது வாழ்க்கை அமைத்துக் கொள்ள நினைத்தால் அமைத்துக் கொள்ளட்டும் என்று தான்.

தான் இப்படி ஒரு முடிவு எடுக்க வேண்டி வந்த எரிச்சலில், அவள் தன்னை விட்டு சென்று விட்டால் என்ற எரிச்சலில் தான் அந்தப் பேச்சுக்கள்!

ஆனால் இன்னும் உணரவில்லை, தன்னுடனான வாழ்க்கையை அவளுக்கு பிடிக்கும்படி தான் மாற்றவில்லை என! வசதி வாய்ப்பு என்பதை விட, செயல்களில் ஒரு அன்னியோன்யம், ஒரு பரிவு, கண்களில் காட்டப்படும் காதல் என அவன் எதனையும் காட்டியதில்லை, திருமணத்தின் முன்னும் அப்படித்தான்! ஆனால் எல்லோரையும் துறந்த வந்த அவளிடம் அதற்கு பின்னாவது காட்டியிருக்க வேண்டும்!   

அப்பா, அம்மா, அக்கா என அவர்களின் முன் மிக மிக கண்ணியம் காக்கிறேன் பேர்வழி என்று அவளை அப்போது அதிகமாக கண்டு கொண்டானில்லை. அதிகம் பேசக் கூட மாட்டான். யாரிடம் பேசுவாள் அந்த பேதை பெண். செய்யக் கூடாது என்றில்லை, அவனுக்கு அது தெரியவில்லை.

உண்மையில் அவனுக்கு காதலிக்க வரவில்லை! அதாகப் பட்டது இப்போதைய காதல்களின் அடிப்படைகளான பார்க்கும் போதெல்லாம் ஐ லவ் யு சொல்லிக் கொள்வது, ஃபோனில் மணிக்கணக்காகப் பேசுவது, கட்டி அணைப்பது, முத்தம் கொடுப்பது என்று.

இந்த அடிப்படைகள் எதுவும் இல்லாமல் ஒரு காதல்! இதெல்லாம் அவன் செய்திருந்தால் நிச்சயம் சைந்தவி அவனிடம் பித்தாகி இருக்க மாட்டாள்! இதெல்லாம் செய்யாத விஜய் அவளை அதிகம் கவர்ந்தான். ஆயினும் எங்கே என்று சொல்ல முடியாத இடத்தில் சறுக்கி போனான்.

யோசனைகளோடு அமர்ந்திருக்க. அவனின் அலைபேசி அடித்தது. கமாலி ஷா அழைத்திருக்க எழுந்து சென்றான். “எங்கே போன? எவ்வளவு நேரம் தேடுறது?” என டென்ஷனாக கேட்டாள்.

“எதுக்கு தேடறீங்க?” என கேட்ட போது தான் வைஸ் பிரசிடென்ட் பிரவீன் அவருடன் இருப்பதை பார்த்தவன், “ஹல்லோ பாஸ்! எப்போ வந்தீங்க?” என்று ஆர்பாட்டமாக அவரிடம் கை குலுக்கினான். ஆம்! நொடியில் மாறிக் கொண்டான்.

பின் கமாலியிடம் “மிசஸ் ஷா, எதுக்கு இப்படி ஒரு ரியாக்க்ஷன்! எவ்ரி திங் இஸ் பெர்ஃபெக்ட் ஆன் அவர் சைட், டென்ஷன் ஆகாதீங்க! டென்ஷன் ஆகறேன் பேர்வழின்னு மத்தவங்களை டென்ஷன் பண்ணறீங்க” என்றான் சற்று கடினமாகவே.

“அப்புறம் பாஸ் வேற என்ன விஷேஷம்? உங்க தொப்பை குறைஞ்சிருச்சு? தண்ணி அடிக்கறதை குறைச்சிட்டீங்களா இல்லை அக்கா உங்களை அவங்க பின்னாடி சுத்த வெச்சு ட்ரில் வாங்கறாங்களா?” என்று அவரிடம் கண்ணடித்து சன்னமாக பேச ஆரம்பித்தான்.

“உனக்கு ஃபோன் பண்ணிட்டாளா”  

“அதெல்லாம் உங்களை நைட் அதிகம் தண்ணி அடிக்க விடாம பார்த்துக்கணும்னு ஆர்டர், உங்களை திரும்ப ஹைதராபாத் அனுப்பற வரை எனக்கு அதுதான் வேலையாம்”   

“ஒரு ரெண்டு நாள் அவ தொல்லை இல்லாம இருக்கலாம்னா, அதுக்கு பதிலா உன்னை அப்பாயின்ட் பண்ணியிருக்காளா?”

“நீங்க வேற சும்மா சொன்னா கேட்க மாட்டேன்னு, உங்க டெஸ்ட் ரிப்போர்ட்ஸ் எனக்கு வாட்ஸ் அப் பண்ணியிருக்காங்க”  

“இது வேறயா?” என அவர் நொந்து கொள்ள,

“விடுங்க பாஸ், பார்த்துக்கலாம் லிமிட்டா” என்று அவருக்கு தகுந்த மாதிரி பேசினான்.

“இந்த பிரவீன் வந்ததுல இருந்து பெரிய ஸ்ட்ரிக்ட் ஆபிசர் மாதிரி முகத்தை வெச்சிருந்தான், இப்போ இப்படி சிரிக்கறான். இவன் சரியான வசியக்காரன்” என்று கமாலி விஜயை பற்றி நினைத்தாள்.

ஆம்! எல்லோரையும் கவரும் வசியக்காரன், வார்த்தை ஜாலக்காரன் இது எதையும் மனைவியிடம் செய்ததில்லை!

இது அல்ல அவன்!  

வாழ்க்கையில் வசியங்களும் ஜாலங்களும் அவசியமா என்ன?

ஆனால் சில விஷயங்கள் அவசியமோ அனாவசியமோ செய்தால் தப்பில்லை!

“நீ அழகாக இருக்கிறாய்” என்ற ஒற்றை பொய், நிஜம் போல நிஜமாய் பெண்களை அழகியாக்கும்! பல ஆண்மக்களுக்கு இது தெரிந்தாலும் ஆண் என்ற கர்வம் அதனை சொல்ல விடாது.

மனைவி என்பவள் வேறிடத்தில் இருந்து பிடுங்கி நட்டு வைக்கப்படும் ஒரு செடி போல, துளிர்ப்பதும் தளர்வதும் சுற்றம் கையினில்.   

பெற்றோர் அமைத்துக் கொடுக்கும் திருமணங்களில் இதனை செய்ய நிறைய பேர் இருக்க, காதல் திருமணத்தில் அவன் மட்டுமே! 

அது தவறும் போது காதல் தவறிவிடுகிறது!   

Advertisement