Advertisement

அத்தியாயம் ஐந்து:

காதலுக்கு கண்ணில்லை என்பது பொய், காதலுக்கு காதலே இல்லை என்பது தான் உண்மை!  

மூன்று மாத நோட்டிஸ் என்ற போதும் ப்ரித்வி இருந்ததினால் ஒரு மாதத்தில் ரிலீவ் ஆகி அங்கே சேர்ந்தாள்.

இவள் ஆஃபிஸ் விட்டு செல்லும் போதும் ப்ரியா தான் அப்படி ஒரு அழுகை, ஆச்சர்யமாய் பார்த்தாள் சைந்தவி. ப்ரியா என்ன தான் நெருங்கி பேசினாலும் பழகினாலும் தள்ளி தான் நிற்பாள். இப்போது ப்ரியாவின் அழுகை சற்று அசைத்தது.

“வாட்ஸ் அப் ல டச்ல இருப்போம். எப்பவாது டைம் கிடைச்சா மீட் பண்ணலாம், ப்ரித்வி கிட்ட எதாவதுன்னா சொல்றேன், நீயும் சொல்லு!” என சைந்தவி சொல்ல,

“உனக்கு கிஸ் பண்ணா பிடிக்காது, நான் ஹக் பண்ணிக்கட்டுமா?” எனக் கேட்டாள்.

சைந்தவி, நமது கலாச்சாரங்கள் மாறி வருகின்றன என்ற எண்ணத்தோடு “ம்ம் சரி” என, அணைத்துக் கொண்டும் அழுகை, என்னவோ மனதிற்கு இதமாக இருந்தது. தனக்காக ஒருவர் இப்படி அழுவது.

ஆனாலும் “லைஃப்ல நாம யாருக்காகவும் இவ்வளவு எமோஷனல் ஆகக் கூடாது. நிறைய பேர் இங்கே பாசிங் க்ளவுட்ஸ் தான்”

“இருக்கலாம் சைந்து, ஆனா இந்த எமோஷன்ஸ், இந்த பாண்டிங், இதனால எவ்வளவு தோல்விகள் வந்தாலும் மனிதர்களை பிடித்து வைப்பது இதுதான்” என்றவள்,

“ப்ளீஸ், நான் உன் பெர்சனல் பேசறேன் என்று நினைக்காதே, ஏதாவது பாசிபிளிட்டி இருந்தா, அவர் ரொம்ப பெரிய கொடுமைக்காரனா இல்லாம இருந்தா, உன் கணவரோட சேர்ந்து வாழு. ரொம்ப நாள் தனியா இருக்க முடியாது அன்ட் இங்க உன் அண்ணா வாஸ் வித் யு. பட் புது இடம் எப்படி இருக்கோ, அதுவும் நீ ரொம்ப அழகான பொண்ணு”  

“சும்மா என்னை பயப்படுத்தக் கூடாது சரியா” என்ற சைந்தவியின் குரலிலும் சற்று பயம், புது இடம் அல்லவா?

இங்கே தினமும் ப்ரித்வியை பார்த்தாள். அங்கே? ஆனால் விரும்பி தானே போகிறாள். ஆம், தனிமை வாழ்க்கை மிகவும் கடினமாக இருந்தது. அவளாக தான் விஜய்யை கட்டாயப் படுத்தி திருமணம் செய்து கொண்டாள். பின்னே அவளால் அங்கே அவர்களின் வீட்டினில் இருக்க  முடியவில்லை. “என்னால இங்கே இருக்க முடியலை எனக்கு உன்னை பிடிக்கலை” என்று சொல்லி வெளியே வந்தாள்.

திருமணமும் சிறுபிள்ளை தனம், கணவனை விட்டு பிரிந்ததும் அப்படியே. எப்படி அவளாக அவனிடம் போவாள். அதற்கான தைரியமில்லை, என்றாவது ஒரு நாள் ஏதாவது அதிசயம் நிகழ்ந்து வாழ்க்கை சரியாகும் என நினைத்திருக்க, இப்படி விவாகரத்து கேட்பான் விஜய் என்று நினைக்கவில்லை.

சேர்ந்து வாழும் தகுதியும் கிடையாது. பெற்றோரை விட்டு வந்து ஒருவனை திருமணம் செய்வதை கூட ஏற்றுக் கொள்ளும் இந்த உலகம், கணவனை விட்டு வருவதை என்றுமே ஏற்றுக் கொள்ளாது அல்லவா? நீச்சப் பிறவியாக அல்லவா அவள் பார்க்கப் படுவாள்.

அதுவரை கூட எப்படியோ அமைதியாக சென்று கொண்டிருந்த வாழ்க்கை, விஜய் டைவர்ஸ் என்று கேட்ட பிறகு அவளுக்குள் பிரளயத்தை ஏற்படுத்தி கொண்டு இருந்தது.

தன்னை தானே கேவலமாக உணர்ந்தாள். அதுவே இன்னம் குற்றவுணர்சியைக் கொடுத்தது.

என்ன இருந்தாலும் வாழ்க்கை வாழ்ந்தாக வேண்டும், சில நாட்களாக செத்துப் போவோமா என்ற தற்கொலை எண்ணமும் தலை தூக்கியது.

அதன் பொருட்டே வீடு பார்த்தாள். ஆம்! ஒரு குழந்தையை தத்தெடுத்துக் கொள்ளலாம் என்ற முடிவு. அதில் பல நடைமுறை சிக்கல் இருப்பதால் வீடு பார்த்தாள். குழந்தை தத்துக் கொடுக்கும் இடத்தில் சென்று எழுதி வைத்து விட்டாள், கணவரின் பெயர் விஜயன் என குறிப்பு கொடுத்தே.

தனியொருத்தி என்றால் குழந்தை தத்துக் கொடுக்க மாட்டர் என்று தெரியும். அதனால் விஜயிடம் “உனக்கு டைவர்ஸ் தானே வேண்டும் கொடுக்கிறேன். நான் குழந்தை தத்தெடுக்கும் போது நீ என் கணவன் என்று சொல்லிக் கொள். நான் எடுத்த பிறகு உனக்கு விவாகரத்து கொடுக்கிறேன்” என சொல்லலாம் என்ற எண்ணம்.

இதோ புது ஆஃபிஸ் வந்து பத்து நாட்கள் ஆகிவிட்டது. புது இடம், இன்னும் தனிமை. அழகான பெண் கூட, பார்ப்பதற்கும் சற்று சிநேகப் படுத்திக் கொள்ள தூண்டும் தோற்றம். அதனால் அவளின் டீமில் இருந்த பலரும் ஆர்வமாய் பேசினார். எல்லோரிடமும் ஒரு மலர்ந்த புன்னகை, தான் குறைவாக பேசுபவள், அமைதி போல, அவளே ஒரு தோற்றம் ஏற்படுத்திக் கொண்டாள்.

விஜய் இவள் வேலையில் சேரும் நாள் தெரிந்து வீட்டில் இருந்து வேலை செய்வதாக பதினைந்து நாள் சொல்லி சென்றிருந்தான்.

தன்னை உடனே சைந்தவி முன் நிறுத்த இஷ்டப் படவில்லை. கூடவே அவனுக்கும் குற்ற உணர்ச்சி, திருமணத்தை ஸ்திரமாக மறுத்திருக்க வேண்டும். அல்லது செய்து கொண்ட பிறகு அதனை நிலைக்க வைத்திருக்க வேண்டும், இப்படி அவள் தனியாக நிற்பது ஆண்மகனான அவனுக்கு இழுக்கு அல்லவா?

நடந்து முடிந்த விஷயத்தை கிரகித்து ஜீரணித்து கொண்டிருந்தான்.

அதற்குள் அவனின் ஹெட் கமாலி ஷா அழைத்திருந்தாள். “அரே பாய், என்ன நீ கஸ்டமர்ஸ் வர்றாங்க, யாரு அவங்களை கவனிப்பா? என்னால எல்லாம் கம்பனிக்காகன்னு எவன் கிட்டயும் சிரிச்சு சிரிச்சு பேச முடியாது, வந்துடு!” என்றாள்.

“மிசஸ் ஷா, இந்த ஒரு டைம் வேற யாரையாவது வெச்சு மேனேஜ் பண்ணுங்க”  

“என்னோட வேலை அது! என்னால எவன் கிட்டவும் போய் நீ பாருன்னு சொல்ல முடியாது! புரியுதா ஒழுங்கா வந்து சேர்”

“வரலைன்னா”

“கூல், நான் வேலையை விட்டு போயிடுவேன். என்னை வேலையை விட வெச்ச பெருமை உன்னை தான் சேரும். எவனுக்கு என்னால பதில் சொல்ல முடியாது!” 

“என்ன ஒரு ப்ளாக் மெயில்? இப்படி ஒரு சீனியர் எங்கயும் யாருக்கும் இருக்க மாட்டாங்க”  

“வாடா தம்பி வாடா” என தணிந்து பேசினாள்.

அவன் இருந்தால் மிசஸ் ஷா விற்கு யானை பலம். எல்லாம் அவன் பார்த்துக் கொள்வான், எப்போதும் அவன் பார்த்துக் கொள்வான். விஜயிற்கு இது மற்றவர்களின் வேலை நான் செய்ய மாட்டேன் என்பது போல கிடையாது. எல்லா விஷயத்திலும் ஆர்வம் அதிகம். அவன் இருக்கும் இடத்தினில் அவனின் முக்கியத்துவம் இருக்குமாறு பார்த்துக் கொள்வான். அதற்காக யாரும் அனாவசியமாக வேலை வாங்க முடியாது.     

“சரி, எனக்கு இதனால என்ன பெனிபிட் அஃபிஷியலா” என பேச ஆரம்பித்தான். ஆதாயம் இல்லாமல் எதையும் அவன் செய்வது இல்லை. ஏனென்றால் அப்படி செய்யும் செயல்களுக்கு மதிப்பு இருப்பதில்லை. இது வேலை இது உதவி அல்ல என்ற தெளிவு அவனிடம் இருந்தது.    

ஆம்! அதுதான் அவனின் சிறப்பு, யாரிடமும் எளிதில் நண்பன் ஆகிவிடுவான். பேச்சும் அவ்வளவு சுலபமாக வரும். யாராக இருந்தாலும் நிமிடத்தில் கவர்ந்து விடுவான்.

இந்த மாதிரி ஒரு விஷயம் தான் சைந்தவியை மிகவும் ஈர்த்தது. பின்பு காதலாக்கியது. எதையும் எதையும் தெரிந்து கொள்ளவில்லை, யார் அவன், அவனின் பின்னணி என்ன? திருமணதிற்கு முன்பு தான் தெரியும். விஜய் “என் வீட்டினில் உன்னால் பொருந்த முடியாது” என்று சொல்ல, “முடியும், என்னால் முடியும்” என்று அவன் மேல் இருந்த காதல் சொல்ல வைத்தது.

மேல் தட்டு சூழலில் வளர்ந்த அவளால் ஒரு பக்கா லோக்கல் வட சென்னை பையனுடன் குடும்பம் நடத்த முடியுமா? அவர்களின் வீட்டினில் இருக்க முடியுமா? அவர்களின் கருவாட்டுக் குழம்பு, குழாயடி சண்டை, இங்கே பேசினால் பக்கத்துக்கு வீட்டில் எட்டிப் பார்க்கும் ஆட்கள், ஒரு சமையல் அரை, ஒரு கூடம், ஒரு ரூம் மட்டுமே இருந்த அவர்களின் லைன் வீடு, குளிக்க வேண்டும் என்றால் சமையல் அறையில் தான் கதவை மூடி குளிக்க வேண்டும், ஒரு இடத்தில காமன் டாய்லெட்கள் இருக்க, அங்கே தான் போக வேண்டும்!

முடியவில்லை! எதுவுமே முடியவில்லை!

காதலாவது? ஏதாவது? அந்த உணவு இறங்கவேயில்லை! அப்படி என்ன? காதலித்து மனம் புரிந்தால் பசி எடுக்காதா என்ன? முகம் பார்த்தால் எதையும் சமாளித்து விடலாமா என்ன?

அந்த இடம், அந்த இடத்தினில் இருந்து தான் அவளின் வீட்டிற்கு வேலை செய்யும் ஆட்கள் வருவார்கள்!

கண்டிப்பாக எதுவும் தெரியாமல் எல்லாம் திருமணம் நடக்க வில்லை! விஜயின் மீது இருந்த காதல் எல்லாம் பொறுத்துக் கொள்வேன், பழகிக் கொள்வேன், அவனுக்கு வேலை கிடைக்கும் வரை தானே என நினைத்திருக்க,

சத்தியமாய் இரண்டு நாள் கூட அவளால் அங்கே தாக்குப் பிடிக்க முடியவில்லை என்பது வாழ்க்கையின் நிதர்சனம்.

ஆனாலும் ஆறு மாதங்கள் இருந்தாள். வேலை கிடைத்த பிறகு “நாம் வேறு இடம் போகலாமா” என்றதற்கு, “என்னால் என் பெற்றோரை விட்டு வர இயலாது” என்ற பதில் தான் வந்தது.  

அப்போது “நான் என் பெற்றோரை விட்டு தானே வந்தேன். உன்னால் ஏன் முடியாது?” என்ற கேள்வி! அவ்வளவு நாள் வருமானம் இல்லை எதோ சமாளித்தாள், அங்கே இருந்தே கல்லூரி போய் வந்தாள். இப்போது அவனுக்கு வேலை கிடைத்து வருமானம் இருக்கு எனும் போது அந்த இடத்தினில் அவளால் முடியவில்லை. மனம் முரண்டியது. சகிப்புத் தன்மை முற்றிலும் உடைந்தது.   

“என்னால இங்க இருக்க முடியலை!”

“என்னால வர முடியாது”

அப்படி ஒரு கோபம் “நான் இங்கே இருக்க மாட்டேன் போறேன்” என்றவளிடம்,  

“போ” என்று விட்டான்.

அதை இன்னும் அவளால் ஜீரணிக்க முடியவில்லை.

வந்து விட்டாள். காதல் எனும் பேய் அவளின் வாழ்க்கையில் ஏன் வந்தது நோகாத நாளில்லை. 

என்னவோ காதல்? அப்படி ஒன்றும் அவன் முகம் பார்த்தே ஜீவிக்க தோன்றவில்லை, அவனை கண்ணில் ஒரு முறையாவது காண்பேனா என்று தோன்றவில்லை!

வாழ்க்கையில் இப்படி கேவலமாகத் தோற்று விட்டோம் என்ற உணர்வை தான் கொடுத்தது. இப்போது இருக்கும் மனநிலையில் அவன் வீடு இருப்பது போன்ற இடத்தினில் இருக்கும் ஒருவன் எல்லாம் அவளை கவர்ந்தே இருக்க மாட்டான். ஆனால் அன்று என்ன ஆனதோ தெரியவில்லை.

அப்படி ஒன்றும் அறிவிலிப் பெண் அல்ல! வாழ்க்கையின் நிதர்சனங்கள் புரியாதவளும் அல்ல! மனிதர்களை மதிக்க தெரியாதவளும் அல்ல! கர்வியோ, திமிர் பிடித்தவளோ அல்ல!

ஆனாலும் அந்த சூழலில் பொருந்தவே முடியவில்லை!

அவர்களின் திருமணம் ஒன்றும் அப்படி இளமையின் தாக்கத்தினாலும் அல்ல!

வீட்டை எதிர்த்து திருமணம் செய்திருந்தாலும் ஒரு கட்டி பிடித்தல், முத்தம் கொடுத்தல் கூட அவளால் இயலவில்லை. அவள் வளர்ந்த சூழல், அவளின் நெறி முறைகள் அதை திருமணதிற்கு முன் தவறாகவே காட்டியது. திருமணதிற்கு பின் அதன் எண்ணம் கூட இல்லை! எப்படி இங்கே இருப்பேன் என்ற எண்ணம் மட்டுமே! எப்போது இது சரியாகும் என்ற எண்ணம் மட்டுமே!    

ஏதோ மோகமும் அல்ல! ஏதோ தாகமும் அல்ல! அப்படி பட்ட உணர்வுகள் இன்னும் அவளில் இனம் காணத் துவங்கவில்லை.

ஒரு கன்னத்து முத்தம், ஒரு நெற்றி முத்தம் என ஒரு சிறு பரிமாற்றம் கூட கிடையாது. திருமணதிற்கு முன்பும் சரி! பின்பும் சரி!

விஜயுமே அப்படிதான்! இந்த விஷயத்தில் சிறு தடுமாற்றமும் இல்லாத ஆண்மகன்! அவனை பொறுத்தவரை சைந்தவி ஒரு அழகான தேவதை பெண். அவளை ஆராதிக்கும் உணர்வு தான் அதிகம் அப்போது! பார்க்கும் பார்வையிலேயே ஒரு பரவசம் தெரியும்! 

திருமணம் முடிந்த பிறகு வீட்டில் திருமணமாகாத அக்கா இருக்கிறாள் என்ற எண்ணம் எப்போதும் இருந்தது என்பதை விட, அவளுக்கு முன் திருமணம் செய்து கொண்ட ஒரு குற்ற உணர்ச்சி. ஆதலால் காதல் செய்த போதும் காதல் மட்டுமே செய்தனர்!    

காதல் மட்டுமே திருமணத்தின் பிரதான காரணம்! அந்த காதல் பிடித்ததினால் வந்தது!

ஆனால் அது எங்கே தொலைந்து சில நாட்களில் என தெரியவில்லை. காதல் திருமணத்தின் காரணம் என்றாலும், காதலுக்கு பிறகு அவளை பிடித்து வைத்தது திருமணம் என்ற பந்தம் மட்டுமே. ஆனாலும் சில காலத்திற்கு மேல் அந்த சூழ்நிலைகளில் தாக்கு பிடிக்க முடியவில்லை.

என்ன காதலோ? வந்ததும் தெரியவில்லை! சென்றதும் தெரியவில்லை!

காயங்கள் ஆறாத போதும் வடுக்கள் நின்றது! 

Advertisement