Advertisement

அத்தியாயம் நான்கு :

யாருமில்லா தனியரங்கில்!     

“ப்ரித்வி ஈவ்னிங் போகலாமா” என்று சைந்தவியிடம் இருந்து கைபேசியில் ஒரு மெசேஜ் வந்தது.  

“எங்கே?” என்று பதில் மெசேஜ் அனுப்பியவனிடம், “எருமை, பத்து தடவை சொல்வாங்களா உனக்கு” என்ற பதில் மெசேஜ் வந்ததுமே அப்படி ஒரு புன்னகை ப்ரித்வியின் முகத்தினில்.

பின்னே அவனின் தங்கை அவனை திட்டி சண்டையிட்டு பல காலம் ஆகியிருந்தது அல்லவா?

அதையே பார்த்துக் கொண்டிருக்க, பதில் மெசேஜ் இல்லாததால் எழுந்து வந்திருந்தாள், சிறு தட்டலோடு உள் நுழைய அந்த ஸ்மரணையே இல்லாமல் மொபலை பார்த்தான்.

“அண்ணா டேய்” என்ற குரலுக்கு புன்னகையோடு ப்ரித்வி நிமிர்ந்தான்.

“என்ன ஆச்சு ஒரு வாரமா இப்படி தான் இருக்க? அதே மனைவி, அதே குழந்தை, அதே அப்பா, அதே அம்மா, அதே இம்சை நான்! என்ன ஆகிச்சுன்னு இப்படி சந்தோஷமா இருக்க?” என எதிரில் அமர்ந்தாள்.

“தெரியலை! சும்மாவே சிரிப்பு வருது”  

“சும்மாவே வருதா? ம்ம்ம்! எனக்கு தெரிஞ்சு காதலிக்கும் போது தான் அப்படி ஆகும். யாரை பண்ற? உன் பொண்டாட்டி உன்னை துவைச்சு தொங்க போடுவா!”

“இல்லைன்னா மட்டும் போட மாட்டாளா?” என்றான் அதையும் சிரிப்போடு.

“ஹேய் ப்ரித்வி, என்ன பண்ற இவ்வளவு சந்தோஷமா இருக்குற அளவுக்கு?” என மீண்டும் கேட்க,

“ஒன்னுமில்லையே” என்று தோளை குலுக்கினான்.

“என்னவோ போ!” என்றவள் “போகலாமா” என,

“இப்போ எதுக்கு ஹாஸ்டல் விட்டு தனி வீடு போகணும் சொல்ற, உன்னோட பத்திரம் பார்க்கணும். அதெல்லாம் விட முடியாது”  

“அண்ணா டேய், என்னோட பத்திரத்துக்கு நான் பொறுப்பு, இந்த ஹாஸ்டல் லைஃப் போர், என்னவோ என் லைஃப் ரொம்ப டல்லா இருக்கு, ஐ நீட் எ சேஞ் புரிஞ்சிக்கோ. எதோ ஜெயில்ல போய் டைம்க்கு டைம்க்கு சாப்பாடு தட்டை தூக்கிட்டு நிக்கற மாதிரி இருக்கு” என்றவள்,

“தோ, இங்க ஆபிஸ்ல இருந்து கொஞ்சம் தான் தூரம், அப்பார்ட்மென்ட் தான், சிங்கள் பெட் ரூம் பிளாட், பதிமூனாயிரம் ரெண்ட். இந்த வாடகைக்கு கிடைக்கவே கிடைக்காது! ப்ளீஸ் டா அண்ணா” என கெஞ்சினாள்.

முகத்தை சுருக்கி கெஞ்சும் தங்கை மனதை கொள்ளை கொள்ள, “இப்போ எதுக்கு அங்க போகணும் சொல்ற, எனக்கு காரணம் சொல்லு” என்றான் தன்மையாக.

“ஒரு காரணமும் இல்லை, ஐ நீட் எ சேஞ், பிலீவ் மீ”  

“சரி, பார்த்துட்டு சொல்றேன்!” என்றான் அவளுக்காக. அவளை அப்படி தனியாக விடும் எண்ணமெல்லாம் இல்லை.

வீடு! ஆம், சைந்தவிக்குள் சில முடிவுகள்! வாழ்க்கை வாழ்ந்தாக வேண்டுமே! எதையும் யாரிடமும் காட்டவில்லை. அதற்கான வேலைகள் ஆரம்பித்து விட்டாள்.

எந்த நிகழ்வுக்கும் யாரும் பொறுப்பு கிடையாது. எல்லாம் அவளால் என்ற நிதர்சனம் புரிந்தவள். நடந்து விட்ட நிகழ்வுகளுக்கு வருத்தங்கள் உண்டு தான். ஆனால் யாரிடமும் காண்பிப்பது இல்லை, ப்ரித்வி அவளை தாங்கிக் கொண்டாலும் தன்னுடைய மன ஆதங்கங்களை கொட்டியதில்லை.

ஒரு வகையில் அவள் செய்தது தவறு என்பது அவளின் எண்ணம் கூட, ஆனால் அப்படி தான்!  இன்று நினைத்தால் அவளுக்கே அவளின் செயல்கள் எல்லாம் சிறு பிள்ளைத்தனமாய் தோன்றியது.

தவறும் சிறு பிள்ளை தனமுமாய் தோன்றியது. அவளின் காதலும் திருமணமும்!

விஜயை விட்டு அவள் வந்தது. பெற்றோர் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது அவளுக்கு மிகப் பெரிய அடி!

அப்போது இத்தனை நாட்கள் பெற்று வளர்த்தது? நான் வீட்டை விட்டு வந்தது தவறில்லை என்று  அவளுக்கு அவளே ஸ்திரமாக்கி கொண்டாள்.

மாலை சைந்தவிக்காக ப்ரித்வி வீடு சென்று பார்த்தான் அவளுடனே! வீடு நன்றாக இருந்தது ஃபுல்லி ஃபர்நிஷ்ட். நன்றாக இருந்தாலும் தனியாக எப்படி இருப்பாள்.

“தனியா எப்படி இருப்ப?”

“ப்ரித்வி ப்ளீஸ் நான் தனியா இருந்து பழகணும்”

“ஏன் பழகணும்?”

“தோ பார், சும்மா என்னை கவனிச்சிட்டு காஞ்சனா கூட ரித்திக்கா கூட நீ ஸ்பென்ட் பண்ற டைம்ல கூட டிஸ்டர்ப்டா இருக்க. அதனால தான் காஞ்சனா அவ்வளவு ரியாக்ட் பண்றா”

“நான் என் வாழ்க்கை பார்க்கறேன், நீ உன் வாழ்க்கை பார், சரியா!” என்றாள்.

“நான் அப்பா கிட்ட பேசட்டுமா? உன்னை நம்ம வீட்டுக்கு கூப்பிட்டுக்க சொல்லி”  

“தயவு செஞ்சு அப்படி மட்டும் செஞ்சிடாதே ப்ரித்வி, கூப்பிட்டாலும் நானும் வரமாட்டேன். நடந்த எதையும் சரி செய்ய நினைக்காதே”

“அப்போ, அப்போ விஜய் கிட்ட பேசட்டுமா, இப்போ கொஞ்சம் நல்லா தான் இருக்கான். நீங்க ஏன் புது வாழ்க்கை ஆரம்பிக்க கூடாது” என்றான் தயங்கி தயங்கி.

“ப்ரித்வி நீ என்ன பேசற? டைவர்ஸ் கேட்டா குடுக்க முடியாது சொல்லும் போதே, என் கூட ஒட்டிக்கிறியா கேட்கறான்”  

“அவனோட ஸ்லாங் அப்படி! ஒன்னு அப்பா அம்மாகூட காம்ப்ரமைஸ் பண்ணு, இல்லை கணவன் கூட! ரெண்டு செய்யலைன்னா எப்படி சைந்து?” என்றான் தன்மையாக.

“ப்ச், யோசிக்கலாம் விடு!” என்றவள், “வீடு மட்டுமில்லை ப்ரித்வி, நான் ஜாப் கூட வேற கன்சர்ன் பார்க்கலாம் இருக்கேன், இங்கே சேலரி குறைவு, இம்ப்ரூவ்மென்ட்டும் இல்லை” என்று தயக்கமாக சொல்லவும் அதிர்ந்து விட்டான்.  

“என்ன?” என்று கூவியவன், “இப்போ பணத்துக்கு என்ன அவசியம், நான் கொடுக்க மாட்டேனா” என்றான் கோபமாக.

“ப்ச் ப்ரித்வி, உளறாதே! எத்தனை நாள் கொடுப்ப? உனக்கு உங்கப்பா சொத்து இருக்கு. எனக்கு நான் தான் சம்பாரிக்கணும்!”              

“எப்படி உனக்கு அப்பா சொத்து கொடுக்காம போயிடறார்ன்னு நான் பார்க்கறேன்” என ப்ரித்வி பேச,

“முட்டாள்தனம் பண்ணாதே! பணம் எனக்கு ஒரு விஷயமில்லை, இருந்திருந்தா விஜய் கிட்ட ஒன்னுமில்லைன்னு தெரிஞ்சும் அவனை நம்பி வந்திருக்க மாட்டேன். அண்ட் என்னை வேண்டாம்னு சொன்னவங்க சொத்தும் எனக்கு வேண்டாம். ப்ளீஸ்! என்னை சுயமரியாதையோட வாழ விடு, பயப்படாதே நான் நல்லா இருப்பேன். ஐ ஸ்வேர்!” என்றவள்,

“இங்க இருந்து இன்டர்வியு வந்திருக்கு, அங்க போகலாம்னு இருக்கேன்!” என்று சொல்ல,

“ஆங்” என்று இன்னும் அதிர்ந்தவன், “அது விஜய் இருக்கும் இடம், இவளுக்கு அது தெரியாதா?” என்று ப்ரித்வி விழித்தான்.

நிஜமாய் அவளுக்கு தெரியாது! 

பார்க்க வேண்டும் என்று சொல்லியிருந்த விஜய் இதுவரை ப்ரித்வியை பார்க்கவில்லை. நேற்று தான் அழைத்தவன், “உங்க இடத்துல எனக்கு தகுந்த மாதிரி ஏதாவது வேலையிருக்கா?” என சொல்லி அவனின் பிரசன்ட் டெசிக்னேஷன் அண்ட் சேலரி சொல்ல,

“அவ்வளவு எல்லாம் இங்கே ஆஃபர் பண்ண மாட்டாங்க, அண்ட் இங்க இப்போதைக்கு நீட் இல்லை. அதை விட கம்மியான போஸ்ட் ஐ மீன் என்னை மாதிரி ப்ராஜக்ட் லீடர் வேணா இருக்கு”  

“அதுக்கு என்ன சேலரி?” என்றவனிடம்,

“நீ வாங்கறதுல பாதி”  

“ப்ச்” என சலித்தவன், “சரி சொல்லு, மெயில் ஐ டீ என்ன? நான் யாருக்கு ரெஸியும் அனுப்பணும்” எனக் கேட்டான்.

“எதுக்கு? இங்க எதுக்கு நீ வரணும்? அவ்வளவு பெரிய பொசிஷன் அண்ட் சம்பளம் விட்டு”  

“அடேய், என்னடா நீ? டைவர்ஸ் தான் குடுக்க மாட்டேன்னு சொல்லிட்ட, அப்புறம் வேற என்னன்னு யோசிக்கணும் இல்லை”  

“இங்க வந்து அவளை டார்ச்சர் பண்ண போறியா?”  

“பரவாயில்லை ஃபோன்ல பேசறேன், இல்லை உன் தலையை அப்படியே சுவர்ல இடிச்சிருப்பேன், சேர்ந்து வாழ விடுடா”  

“ஹப்பா, பயந்துட்டேன்!”  

“என்னவோ போ, இவ்வளவு நாளா அவளோட நீ இருக்குறதால உன்னை விடறேன். ஆமாம்! எப்போ இருந்து நீங்க ரெண்டு பேரும் இவ்வளவு க்ளோஸ் ஆனீங்க” என்ற முக்கியமான கேள்வியை கேட்டான்.

“உன் ரெஸியும் எனக்கு அனுப்பு, நான் யாருக்கு அனுப்பணுமோ அனுப்பிக்கறேன்” என்று ப்ரித்வி வைத்து விட்டான்.

ஆம்! இப்போது விஜயின் வீட்டை விட்டு சைந்தவி வந்த பிறகு, அவளை ப்ரித்வி வீட்டிற்கு அழைத்து போய், அப்பா அம்மா வீட்டை விட்டு அனுப்பிய பிறகு தான், அவ்வளவு நெருக்கம் அண்ணனிற்கு தங்கைக்கும்! அதற்கு முன் வரை அப்படி இவ்வளவு நெருக்கமில்லை!”

இப்போது அந்த யோசனைகளோடு இருந்தவன் “சரி, என்னவோ பண்ணு” என்று சைந்தவியிடம் முடித்து விட, “ஷப்பாடா” என்று ஆசுவாச பெருமூச்சு விட்டாள்.

சரியாக அவளை ஹாஸ்டலில் இறக்கி விட்ட சமயம் விஜயின் அழைப்பு, “என்ன ரெஸியும் அனுப்பினேனே, என்ன ஆச்சு?” என்று அதிகாரமாக கேட்டான்.

“இவன் ஒருத்தன்” என்று மனதிற்குள் சலித்த ப்ரித்வி, சைந்தவி சொல்லியதைச் சொன்னான்.

“ஓஹ் வாவ், நான் பார்த்துக்கறேன்!”  

“சைந்து கஷ்டப்பட மாட்டாளே”  

“நல்லதா நினை முதல்ல” என்று சொன்னவன், “நான் இங்கே இருக்கேன்னு மறந்தும் சொல்லிடாதே” என்று மிரட்டியவன், “அவளை விட்டுட்டீங்க தானே அப்படியே விட்டுடுங்க” என்றான்.  

ப்ரித்வி பதில் சொல்லாது இருக்க,

“முதல் தடவை இருந்த பிரச்சனைகள் எல்லாம் சரி பண்ணப் பார்க்கறேன், அவளை விடு ப்ரித்வி, முன்ன தான் என்கிட்டே அவளை வீட்டை விட்டு அனுப்பினதை சொல்லலை, இப்போவாவது விடுங்க டா!” என்றான் முழுவதும் தணிந்து.

ப்ரித்வி அப்போதும் பதில் பேசாமல் இருந்தான்.

“இவ்வளவு நாளா யாரும் யாரையும் பார்த்துக்கலை, இப்போ என்னவோ தானா அமையுது விடு, அப்படியே விடு”  

“ஆனா அவளோட காரணங்கள் எல்லாம் அப்படியே இருக்கு விஜய்”  

அந்த பதிலில் எரிச்சல் ஆனவன், “உன்னை கேட்டு உன் தங்கை என்னை கல்யாணம் பண்ணிக்கலை. அதனால உனக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை!” என்று முகத்தினில் அடித்தார் போல கூறி விஜய் வைத்து விட்டான்.

“பெரிய இவன் மாதிரி பேசறான்” என்று முனகிக் கொண்டே வைத்தான் ப்ரித்வி.

என்னவோ இந்த வருடமாக இல்லாமல் விஜய் அணுகுவது, இவள் அவன் இருப்பது தெரியாமல் அங்கே வேலைக்கு போவது, சேர்வதோ பிரிவதோ ஏதாவது ஒன்று நடக்கட்டும் என நினைத்து ப்ரித்வி பார்வையாளன் ஆனான்.

Advertisement