அத்தியாயம் முப்பது :

மிச்சிகன் மாகாணத்தின் டெட்ராயிட் விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் வருவதற்காக காத்திருந்தான் விஜயன்.

ஆம்! விஜயன் சைந்தவிக்காக காத்திருந்தான்.

உபயம் ரிச்சர்ட்ஸ்…

அவன் இந்தியா வந்து சென்ற பிறகு பெரிதாக பேச்சுக்கள் இல்லை என்றாலும் அவ்வப்போது “ஹாய், ஹலோ” என்று மெசேஜ்கள் வாட்ஸ் சப்பில் வந்து குதிக்கும்.

அவளுமே ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசுவாள்.

ஒரு மெல்லிய நட்பு அவர்களுக்குள் இழையோடும். மிகுந்த மரியாதையான் பேச்சுகள் இருக்கும்.

இப்போது அக்சப்டன்ஸ் கொடுத்ததும் “அங்கே படிக்க வருகிறேன்” என்று சொல்லிவிட்டாள். பேசிக் கொண்டிருக்கும் ஒருவன் அவனின் நாட்டிற்கு இன்னும் மூன்று மாதத்திற்குள் செல்கிறாள், சொல்வது தான் மரியாதை என்று சொல்லிவிட்டாள்.

“நான் உங்களுக்கு எந்த வகையிலாவது உதவ முடிந்தால் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். எனக்கு அந்த சந்தர்ப்பத்தை கொடுப்பீர்களா?” என்று தெளிவான ஆங்கிலத்தில் கேட்டிருந்தான்.

மிகுந்த யோசனை தான், கேட்பது சரியா தவறா என்று தெரியவில்லை. கேட்டுத்தான் பார்ப்போமே என்று “என்னுடைய கணவருக்கு அங்கே வேலை கிடைத்து என்னோடு இருந்தால் மகிழ்ச்சி. அதற்கு ஏதேனும் உதவ முடியுமா?” என்று அவள் கேட்டுவிட்டிருந்தாள்.

“என்னால் முடிந்தால் நிச்சயம் செய்வேன்” என்று முடித்திருந்தான்.

“செய்துவிடுவேன்” என்று சொல்லவில்லை, “செய்ய மாட்டேன்” என்றும் சொல்லவில்லை.

இதோ இந்தியாவில் ரிச்சர்ட் கம்பனியின் ஒரு ப்ராஜக்ட் நடந்து கொண்டிருக்க, அதற்கு விஜயனை அனுப்புங்கள் என்று அவனின் அலுவலகம் மூலமே மெயில் அனுப்பிவிட்டான்.

இதொன்றும் சாதாரணமில்லை. நிறைய அண்டர் கிரவுண்ட் வேலைகள் செய்திருக்கிறான் என்று புரிந்தது.

“நன்றி” என்பது மிகச் சிறிய வார்த்தை என்று அவள் செய்தியனுப்ப…

“நட்புக்குள் நன்றி தேவையில்லை” என்ற செய்தி வந்தது.

இதோ அவள் செல்வதற்கு முன்பே விஜயன் சென்று விட்டான்.

ப்ரித்வி அவனை துரத்தாத குறை தான் “நீ கிளம்புடா, டைம் எதுவும் கேட்டுடாதே, இங்கே நான் பார்த்துக்குவேன். அங்கே அவளை யார் பார்த்துக்குவா கிளம்பிடு” என்று கிளப்பியே விட்டான்.

இங்கே வந்ததும் கம்பனி காண்பித்த இடத்தில் ஒரு வாரம் தங்கி, பின்பு ஃபார்மிங்டன் ஹில்ஸ் என்ற ஊரில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் ஒரு அபார்ட்மெண்டில் ஒரு பிளாட் வாடகைக்கு பார்த்துக் கொண்டான். அத்தியாவசிய பொருட்கள் இருக்க, மளிகைப் பொருட்கள் வாங்கி அவனே சமைத்துக் கொள்ளவும் ஆரம்பித்து விட்டான். இப்படியாக அமெரிக்காவில் அவனின் குடித்தனம் ஆரம்பமாகிவிட்டது.

அவனின் கல்லூரி படித்த சிலரை இவனுக்குத் தெரியாவிட்டாலும், தெரிந்த நண்பர்கள் மூலம் பிடித்து நட்பாக்கிக் கொண்டான். மனிதர்களோடு பழகுவது தான் விஜயனுக்கு கை வந்த கலையாகிற்றே.

இதோ அவன் வந்து ஒன்றரை மாதங்கள் ஆகிவிட, எப்போது சைந்தவி வருவாள் என்று பார்த்திருக்க, இன்று அவள் வரும் நாள். சீனியர் ஒருவனின் கார் வாங்கி வந்திருந்தான்.

விமானம் வந்து விட்டது, இறங்கி விட்டது.

அவள் வருகிறாள், அவள் வந்து விட்டாள்.

இமை மூடாமல் விழிவிரித்து அவள் வரும் வழி பார்த்திருந்தான்.

ஆட்கள் வந்த வண்ணமிருக்க, அத்தனை கூட்டத்திலும் கண்கள் அவள் மீது மட்டுமே.

இவனைப் பார்த்ததும் வேகமாய் நெருங்கியவளுக்கு இமை சிமிட்டாமல் இருக்க முடியவில்லை. கண்கள் தான் கண்ணீரில் நிறைகிறதே.

அப்படியே நிற்பவளை “ஓய் பொண்ணே, என்ன இது?” என்று தோளை சுற்றி கை போட்டு ஆதூரமாய் அணைக்க, அவனின் மார்பில் தலை சாய்த்து நின்றாள்.

“என்ன இது? நான் பார்த்தவுடனே அழற மாதிரி பயங்கரமா இருக்கேனா”

பதிலில்லை!

“இப்படி அழுதா நான் பயந்துடுவேன்”

அதற்கும் பதிலில்லை!

“என்னடி உனக்கு? நிஜம்மா என்னை பயப்படுத்தற” என்றான் கலவரமாக.

அதற்கு தான் சற்று அசைந்தவள் தலையை தூக்கி பார்த்தது.

“என்னைப் பார்த்ததும் ஓடி வந்து என் மேல தாவிப்பன்னு நினைச்சா இது என்ன?”

“சும்மா தான்” என்றாள் கண்களில் நீரோடு, சன்ன சிரிப்போடு.

“ப்ரித்வி எப்படி இருக்கான்? ரித்தி எப்படி இருக்கா? அம்மா வீட்டுக்குப் போய் சொல்லிட்டு வந்துட்ட தானே. பூவு வீட்டுக்கும் போனியா? என்ன சொன்னா? ஜீவன் என்ன சொன்னான், அவன் வந்தானா வீட்டுக்கு நீ போனியா?” என்று கேள்வியாய் அடுக்கினான்.

“நான் எப்படி இருக்கேன் நீங்க கேட்கவே இல்லை” என்று செல்லமாய் சிணுங்கினாள்.

“அய்ய, இதெல்லாம் கேட்கணுமா? நான் பக்கத்துல இல்லை அப்போ நிச்சயமா நல்லா இருக்க மாட்ட”

“பாருடா” என்ற பார்வையை கொடுத்தவள், “நீங்க” என்ற கேள்வியை தொடுக்கும் முன்னர்.

“நான் எப்படி இருக்கேன்னு கேட்காத, நான் நல்லா இருக்கேன். ஏன்னு சொல்லு. கட்டில் முழுசும் நானே தூங்கறேன். யாரும் என்னை இடிச்சு எழுப்பி எழுப்பி விடலை, நிம்மதியான தூக்கம்” என்று கண்சிமிட்டி சொன்னான், அவள் டென்ஷனாவாள் என்று எதிர்பார்த்து.

அவளோ “ரொம்ப சந்தோஷம். இனியும் நிம்மதியா தான் தூங்குவீங்க, ஏன்னா நான் தனியா படுத்துக்குவேன்” என்றாள் அலட்டிக் கொள்ளாமல்.

“அம்மாடி, இது ஆகாதுடா சாமி எனக்கு நிம்மதி வேண்டாம். நீ தான் வேணும். நீ மட்டும் தான் வேணும்” என்று உடனே அந்தர் பல்டி அடிக்க…

இருவரிடமும் அப்படி பொங்கிய சிரிப்பு.

பின்பு பேகேஜ் வர காத்திருந்தனர். “எங்கம்மா என்ன சொல்லுச்சு?”

“ப்ரித்வி கூட தான் போனேன். அவன் என்னை தனியா விடலை, அத்தைக்கும் மாமாக்கும் ரொம்ப சந்தோஷம் என்னை பார்த்ததும். அப்புறம் நானும் கிளம்பறேன்னு சொன்னேன், உங்களை நல்லா பார்த்துக்கணும்னு சொன்னாங்க. நானும் இங்கே வேலைக்கு போவேனான்னு கேட்டாங்க. இல்லைன்னு மட்டும் சொல்லிட்டேன். ஸ்காலர்ஷிப் ஹையர் ஸ்டடீஸ்ன்னு பேசப் போகும்போதே அவங்க வேற பேச்சு மாத்திட்டாங்க. விட்டுடேன்”

“அப்புறம் நான் வெளியே வரவும், ப்ரித்வி என்கிட்டே சொல்லவேயில்லை. உங்கம்மா கைல ஐம்பதாயிரம் ரூபாய் பணம் நீங்க குடுக்க சொன்னீங்கன்னு குடுத்துட்டான்”

“அத்தை, நேத்து தானே மூர்த்தி மாப்பிள்ளை விசி குடுத்துச்சுன்னு இருபதாயிரம் குடுத்தார்ன்னு சொன்னாங்க”

“இது இன்னைக்கு காலையில சொன்னான் விஜயன். நீங்க தனியா வெச்சிக்கோங்க. எதுவும் அவசரம்னா ஆகும். அதனால என்கிட்டே குடுத்திருப்பாங்கன்னு சொல்லிட்டான்”

“சரி விடு பார்த்துக்கலாம். பூவு என்ன சொல்லுச்சு?”

“என்ன சொல்லுவாங்க? எப்பவும் போல விறைப்பா சுத்தினாங்க, மூர்த்தி அண்ணாவும் அவங்க அம்மாவும் நல்லா பேசினாங்க”

ஆம்! அன்று விஷேஷதில், குறைவு என்று இல்லாமல் அவனால் முயன்ற வரை நிறைவாகவே சீர் செய்திருந்தான் விஜயன். ஆனால் அது பூவு கொடுத்த அதிகப்படியான லிஸ்டில் பாதியளவு கூட கிடையாது.

அதனால் அவள் முகத்தை தூக்கிக்கொள்ள, விஜயன் கண்டு கொள்ளவில்லை. திரும்ப வாக்கு வாதமும் செய்யவில்லை. இதுதான் நான், சரியென்றால் தம்பி என்று சொல்லு இல்லையென்றால் தேவையில்லை என்ற மனப்பான்மை தான்.

ஊருக்கு கிளம்பும் முன்னர், பூங்கோதையின் வீட்டின் பக்கம் வீடு பார்த்து அப்பா அம்மா இருவரையும் குடி வைத்து விட்டவன், மூர்த்தியிடம் “பூவு எங்க அப்பா அம்மாவை பார்த்துக்கும் எனக்கு தெரியும், ஆனாலும் உன்னை நம்பி விட்டுட்டு போறேன், அவங்களுக்கு சிறு குறையும் வரக் கூடாது”

“அவங்களை தனியாவும் விட்டுடாதே. மாசம் மாசம் அவங்க செலவுக்கு பணம் அனுப்புவேன் அம்மாக்கிட்ட குடுத்துடு. ஏதாவது ஆளை செட் பண்ணிடு, எங்கப்பா தினமும் வீடு போய் சேர்ந்திடணும்”

“அப்புறம் பஞ்சாயத்து பண்றேன்னு பிரச்சனையை ரொம்ப இழுத்து விட்டுக்காத அளவா பண்ணு. எங்க இருந்தாலும் உன் மேல ஒரு கண்ணு இருக்கும். பார்த்து நடந்துக்கோ” என்றவன்,

“அப்புறம் உன் புருஷனை விட்டு போறேன். அவனை ரொம்ப டார்ச்சர் பண்ணாம பத்திரமா பார்த்துக்கோ. ரொம்ப பண்ணினா பிச்சிக்கிட்டு போயிடப் போறான்” என்றான் பூவிடம்.

“எப்படி உன் சம்சாரம் போன மாதிரியா?” என்று பூ நக்கல் செய்ய,

“அவ என்னை விட்டு போனான்னா என்னால கிடையாது, உன்னால.  அதனால தான் உனக்குச் சொல்றேன்” என்று குட்டு வைத்தே வந்திருந்தான்.

அதையும் விட சைந்தவியிடமும் இதனை கேட்டிருந்தாள் “என்ன ஒழுங்கா அவனோட குடும்பம் நடத்துவியா, இல்லை விட்டு போயிடுவியா” என்று.

சைந்தவி இதனை யாரிடமும் சொல்லியிருக்கவில்லை. விஜயனுக்கு தெரிந்தால் வருந்துவான் சண்டையிடுவான் என்று.

ஆனால் பதில் சொல்லியே வந்திருந்தாள் “விட்டு போகமாட்டேன்னு எல்லாம் காரண்டீ குடுக்க முடியாது, ஆனா போனாலும் உங்க தம்பிகிட்ட தான் திரும்ப வருவேன்”

இப்படியாக பூவு அடங்கவே இல்லை.

ஆனால் தங்கள் இருவரின் உறவுக்குள் பூவிற்கு நுழைய அனுமதியில்லை என்று விஜயன் தெளிவாக இருக்க, சைந்தவியை பொறுத்தவரை எப்போதுமே அவர்களின் உறவுக்குள் யாரும் நுழைய அனுமதித்தது இல்லையே.

இதோ இந்தக் கதையெல்லாம் பேசி அவர்களின் அபார்ட்மென்ட் வந்திருந்தனர்.

அவன் கதவை திறந்து உள்ளே நுழையவும், அவன் எதிர்பார்த்திருந்தபடியே தாவி அவன் மீது ஏறிக் கொள்ள தடுமாறி நின்றான்.

“சொல்லிட்டு செய்ய மாட்ட, விழுந்திருப்பேன்” என்று முறைத்தான்.

“யாரு நீங்க, விழுந்திருப்பீங்க, என்னைத் தூக்க முடியலைன்னா அப்புறம் எதுக்கு தினமும் எக்சர்சைஸ் பண்ணனும். எதுக்காக?” என்று அவளும் முறைத்தாள். எல்லாம் அவன்மீதிருந்த படியே.

“வர வர ரொம்ப பேசற நீ”

“அப்படித்தான் பேசுவேன்”

“பேசு, பேசு, என்னவும் பேசு” என்று அவளை வைத்தபடியே சோபாவில் அமர்ந்து கொண்டான்.

“என்ன பேச?” என்றாள் அவனைப் பார்த்து.

“எனக்கென்ன தெரியும். நீ தானே சொன்ன”

“போடா” என்றவள் அவனைக் கட்டிக் கொண்டு அவன் மேல் சாய்ந்து கொண்டாள்.

அவ்வளவே, அதன் பிறகு என்ன பேசினாலும் பதிலில்லை, அமைதியாக அவன் மேல் சாய்ந்த படியே இருந்தாள் அந்த நிமிடங்களை அனுபவித்தபடி.

“என்னை பாருடி, ஒரு கிஸ்ஸாவது பண்ண விடு, இல்லை நீயாவது குடு”

அதற்கும் அசைவில்லை.

அதற்குள் அவனின் அலைபேசி அடிக்க, வேறு யார் அவளின் உடன்பிறப்பே, ப்ரித்வி.

“என்னடா வந்துட்டாளா?”

“வீட்டுக்கே வந்துட்டோம்”

“சொல்ல வேண்டாமா இடியட்”

“தேங்க்யூ” என்று பணிவாகச் சொன்னான்.

தலையை தூக்கியவள் “உங்களைத் திட்டுறான்”

“நம்ம ஆர்மி அங்கே இருக்கு. தெரியாம என்னை திட்டுறான். ரித்தி பேபி” என்றவன் சத்தமாக குரல் கொடுக்க, “மாமா” என்ற சத்தம். அப்பாவை “டிஷூம் விடு, மாமா ஆங்க்ரி” என,

“பா” என்று ப்ரித்வியின் தோளில் செல்லமாய் அவள் அடிக்கும் சத்தம் மிக மெதுவாய் கேட்க, சில இனிமையான நொடிகள்.