Advertisement

அத்தியாயம் மூன்று :

உறவுகள் விசித்திரமானது நிமிடத்தில் இணையும்! நொடியில் உடையும்!

ப்ரித்வி மறந்தும் கூட விஜயிடம் சென்று பேசியதை சைந்தவியிடம் சொல்லவில்லை.

சென்று வந்த பிறகு அவனுக்கே ஒரு மாதிரியாகிவிட்டது, “எதற்கு நீ போய் அவனிடம் பேசினாய்” என்பது போல. அதுவே அவனுக்கு ஒரு குற்ற உணர்ச்சியை கொடுத்தது.  

அடுத்த நாள் அவனால் சைந்தவியை பார்க்கக் கூட முடியவில்லை, அவளை பார்ப்பதை தவிர்த்திருக்க, சைந்தவியின் முகமும் ஒரு சோர்வை காட்டியது.

“ஏன் சைந்து டல்லா இருக்க” என்று ப்ரியா கேட்கவும்,

“தெரியலை” என்ற பதிலோடு வேலையை தொடர்ந்தாள்.

“எமகாதகி, ஒரு வார்த்தை ஏதாவது பேசறாளா? எப்படியோ ப்ரித்வி இவ அண்ணான்னு இவளை பத்தி சொல்லிட்டா” என சைந்தவியின் காதினில் விழும்படி முனகினாள்.

அதற்கான பிரதிபலிப்பு எதுவும் இல்லாமல் சைந்தவி வேலையை பார்த்தாள். சைந்தவியின் பெயரில் சேர்ந்து இருக்கும் “விஜய்” என்பது அவளின் கணவனின் பெயர் என்று தெரியும், ஒரு முறை “பிரிந்து விட்டோம்” என்று சொன்னவள் பின்னர் அதை பற்றி பேசியதில்லை, பேச இடமும் கொடுத்ததில்லை.

இந்த ஒரு வருடமாக ப்ரியா சைந்தவியுடன் இருக்கிறாள். “எப்படி இது போன்ற மனைவியை வேண்டாம் என்று சென்றான்” என்று பார்த்திராத சைந்தவியின் கணவன் பைத்தியக்காரனாய் தான் தெரிவான். மற்றபடி அவளின் பிறந்த வீடு அதன் செல்வ சூழ்நிலை எல்லாம் தெரியாது.

மாலையில் ப்ரித்வியை தேடித் பிடித்த சைந்தவி “எனக்காக இவ்வளவு கஷ்டப்படுத்திக்காதே, நானா தேடிகிட்டது” என்று சற்று சிரித்த முகத்தோடு பேச அதன் பிறகே சற்று தெளிந்தான் ப்ரித்வி.

“அப்புறம் சொல்லு” என்றவளிடம் “என்ன சொல்ல?” என்றான்.

“என்ன பண்றாங்க உன் பெரிய மகாராணியும், உன் சின்ன மகாராணியும்” என்றாள்.

“நல்லாயிருக்காங்க, நெக்ஸ்ட் வீக் அவளுக்கு ஃபர்ஸ்ட் பர்த்டே”  

“என்ன ப்ளான்?”  

“என்ன ப்ளானா? என்னை யார் கேட்கப் போறா? என்னோட கல்யாணத்துக்கே என்னை கேட்கலை. அவளோட பாட்டி, தாத்தா, அம்மா, அப்புறம் இன்னம் அவளை சுத்தி இருக்குறவங்க, எல்லாம் செம ப்ளான்” என்றான்.

“நீ உனக்கு ப்ளான் எதுவும் இல்லையா?”

“இந்த பர்த்டேக்கு இல்லை, அடுத்த பர்த்டேக்கு அவ என்னோட தனியா வர்ற அளவு கொஞ்சம் பெரியவள் ஆன பிறகு, நம்ம தனியா செலப்ரேட் பண்ணலாம்”  

“டேய் அண்ணா, நேத்து இருந்து மூணு நாலு தடவை உன்னோட பாசத்துல வழுக்கி விழுந்துட்டேன். என்னை தயவு செய்து விடு” என்று சிரித்தாள்.

“விழு, விழு, ஒன்னும் பிரச்சனையில்லை” என்றவன், “சரி நான் கிளம்பறேன், நேத்தே லேட்டா போனேன்” என்று வாய் விட,

“ஏன் லேட் ஆகிடுச்சு? என்னை விட்டுட்டு உடனே கிளம்பிட்ட தானே”

“அதுவா ட்ராபிக் ஜாம் சுத்தி சுத்தி போனேன்” என்று சமாளித்து கிளம்பினான்.

பின்பு அப்படியே ஒரு வாரம் கடக்க, மகளின் முதல் பிறந்த நாள் விழா ஒரு நட்சத்திர விடுதியில் நடந்தது. பேத்தியின் பிறந்த நாள் விழாவை ஸ்கந்த நாதன் அசத்தியிருந்தார். அங்கே இருந்த பார்ர்டி ஹாலில் நடந்து கொண்டிருந்தது. அது அவர் ஆடிட் செய்யும் நிறுவனம் அதனால் அவருக்கு அங்கே இலவசம். 

பேபி ரித்திக்கா அவரின் ஆர்ப்பாட்டத்தை பார்த்து பயந்து அங்கே எழுந்த சத்தங்களில் வீரிட்டு அழ, கேக் வெட்டி முடித்தாகியிருந்தது. அவளின் பால் பாட்டிலை ஒரு கையினில் தூக்கிக் கொண்ட ப்ரித்வி, “நீங்க வந்தவங்களை பாருங்க, நான் இவளை கொஞ்சம் நேரம் வெளில வெச்சு அழுகை நின்ன பிறகு வர்றேன்” என வெளியே வந்தான்.

அந்த இரைச்சலில் இருந்து வெளியே வந்ததும் ப்ரித்விக்கே மனது ஷப்பா என்றிருக்க, குழந்தையின் அழுகையும் சற்று குறைந்தது. முழுவதுமாக குறைய அங்கிருந்த நீச்சல் குளம் அருகில் வந்தான்.

பின்பு அங்கே இருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்து குழந்தைக்கு பால் புகட்ட ஆரம்பித்தான். புகட்டிக் கொண்டே கண்களை சுழல விட, அங்கே ஒரு மூன்று பேர் அமர்ந்து ஒரு லிக்கர் பார்ட்டி நடந்து கொண்டிருந்தது. பார்வை அங்கே பதிந்ததும் பார்த்தான் அங்கே விஜயனும் அவனுடம் வெளிநாட்டவர் இரண்டு பேர்.

அது அவனின் ஆஃபிஸிற்கு வந்த மக்களாய் இருக்க வேண்டும் என்று ப்ரித்விக்கும் புரிந்தது. சரியாக அதே நேரம் விஜய் ப்ரித்வியை பார்த்து விட்டவன் “எக்ஸ்கியுஸ்மி” என்று கேட்டு இவனிடம் வந்தான்.

இவனை பார்த்ததும் புன்னகைத்தவன் “ப்ரித்வி நானே உன்னை பார்க்கணும் நினைச்சேன். பட் கஸ்டமர்ஸ் இருந்ததால அவங்களோட இந்த வீக் ஃபுல்லா ஆக்குபைட்”

ப்ரித்வி எதற்கு என்று யோசனையாகப் பார்த்தான். “ஒன்னுமில்லை நீப்பாட்டுக்கு வந்த, போன, என்ன நடந்ததுன்னு எனக்கு தெரியல்லையே” என்றவன்,

அப்போது தான் கையில் இருந்த குழந்தையை பார்த்து “யார் இந்த தேவதை” என்றான்.

“என் பொண்ணு” என இறுகிய முகத்தோடு சொல்ல,

“ஓஹ், உனக்கு கல்யாணமாகி குழந்தை இருக்கா” என்றான்.

ப்ரித்வி அவனைப் பார்க்கவும், “எனக்கு எதுவுமே தெரியாது, உன் தங்கச்சி போன பிறகு நானா எதையுமே தெரிஞ்சிக்க விரும்பலை, என்னோட காதுக்கும் எதுவுமே வரலை” என்றவன், “இந்த நேரத்துல இங்கே” என்றான்.

“ரித்திக்கா வோட முதல் பிறந்த நாள், அதோட செலப்ரேஷன்”  

“ஓஹ் பர்த்டே பார்ட்டியா?” என்று அவன் கேட்டுக் கொண்டிருந்த போதே,  குழந்தை அவனை நோக்கி கையை நீட்டி வர, ப்ரித்வி ஆச்சர்யமாக உணர்ந்தான்.

இதோ இந்த பார்ட்டியில் யாரிடமும் போகவில்லை அப்பா அம்மாவைத் தவிர. ஏன் பாட்டியிடம் கூட சுணங்கிக் கொண்டே இருந்தவள் இப்போது விஜயனை நோக்கி கையை நீட்டினாள்.

விஜய் எடுப்பதா வேண்டாமா என்ற யோசனையோடு குழந்தையைப் பார்க்க, புதிதாக முளைத்த இரண்டு பற்கள் இன்னும் வசீகரமாய் இருந்தது. கையை நீட்டிவிட்டான் அதுவும் தாவியது.

“என் வீட்டு பொண்ணுங்க எல்லோரையும் மயக்குற நீ விஜய்” என்றான் ப்ரித்வி.

எதோ சொல்ல வந்த விஜயன் பின்பு எதுவும் சொல்லாமல் குழந்தையை பார்த்திருந்தான், பின்பு பேச்சோடு பேச்சாக, “இந்த தேவதையோட அத்தை உள்ள இருக்காளா?” என்றான்.

“அவ இங்க எப்படி வருவா?”  

யோசனையோடு பார்த்த விஜயிடம் “என் அப்பா அம்மா எங்க சொந்த பந்தங்க யாருமே அவளை சேர்க்கவேயில்லை” என்றான்.

“என்ன?” என்று அதிர்ந்து நின்று விட்டான்.

“என்ன சொல்ற?”  

“ஆம்” என்பது போலத் தலையாட்டினான்.

“ஆனா நீ அவளை உங்க வீட்டுக்கு தானே கூட்டிட்டு போன. எனக்கு நல்லா ஞாபகமிருக்கு, பொய் சொல்லாதே! ஒரு பத்து பதினஞ்சு நாளைக்கு மேல நான், அவ எங்க இருக்கா? என்ன பண்றா? ஏதாவது பிரச்சனையா திரும்ப அவ உங்க வீட்டுக்கு வந்த பிறகு, பார்த்துட்டு தானே இருந்தேன்!”  

“எங்க வீட்டுக்கு தான் வந்தா, ஆனா அப்போ எங்க அப்பா அம்மா இல்லை. கைலாஷ் மானசரோவர் போயிருந்தாங்க. இருபது நாள் கழிச்சு தான் வந்தாங்க. வந்தவுடனே நீ எங்க வீட்ல இருக்குறதுல இஷ்டமில்லை சொன்னாங்க, கிளம்பிட்டா!” என்று ஆற்றாமையோடு பேசினான்.

பேச்சற்று நின்றான் விஜய்!

திரும்ப ஒரு கணமான சூழல்!

தன்னை விட்டு தன் பெற்றோரிடம் சென்று விட்டாள் என்று தான் நினைத்திருந்தான். இப்படி என்றுமே நினைத்ததில்லை.

“வெளில போன்னு சொல்லிட்டீங்களா?” என்ற விஜயின் குரல் வெளியே மிகவும் ஹீனமாக கேட்டது.   

ப்ரித்வி அமைதியாக நிற்க, “என்கிட்டே ஒரு வார்த்தை ஏன்டா சொல்லலை” என்றான் உடலும் மனமும் பதற ஏதோ அது அன்று நடந்தது போல, அது நடந்து தான் வருடம் மூன்றாகப் போகின்றதே!

அன்றைய நடப்பில் ப்ரித்விக்கு சைந்தவி வந்ததுமே பெற்றோர் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தான் இருந்தது. திரும்ப விஜயனிடம் போக சொல்ல எல்லாம் அவனே நினைக்கவில்லை.

அப்போது இல்லையென்றாலும் பிறகு கூட்டிக் கொள்வர் என்று நினைத்தான். ஆனால் அதற்கான சாத்தியக் கூறுகள் இதுவரையிலும் இல்லை. சைந்தவியும் அதன் பிறகு பெற்றோரை சந்திக்க எந்த முயற்சியும் எடுத்தது இல்லை. திரும்ப திரும்ப அவள் பேச முயற்சித்திருந்தால் இளக்கம் வந்திருக்குமோ என்னவோ? ஆனால் சைந்தவி அதனை செய்யவில்லை! 

இந்த யோசனைகள் ஓட ப்ரித்வி அமைதியாக நின்றான்.

“நீங்க பாவி ஆனதும் இல்லாம என்னையும் ஆக்கிட்டீங்களே டா. என்னை கல்யாணம் பண்ணினது தானே பிரச்சனை. அப்போ என்னை விட்டு வந்தா ஏத்துக்கணும் தானே. அப்போவும் ஏன்டா இப்படி பண்ணுனீங்க. என்னை கல்யாணம் பண்ணினது கொலை குற்றத்தை விட மோசமோ, உங்கப்பா பேத்தி பிறந்த நாளுக்கு பார்ட்டி பண்றார். இப்படி ஒரு சமூக வாழ்க்கையில இருந்து என்னடா பண்ணப் போறீங்க” ஆவேசமும் ஆதங்கமும் கலந்து.  

அதற்குள் ப்ரித்வியை தேடி அவனின் மனைவி காஞ்சனா வந்து விட்டாள், விஜயனின் பேச்சு தடை பட்டது.

“இங்கேயே என்ன பண்ணறீங்க, எவ்வளவு நேரம் ஆச்சு, வாங்க!” என்றவள், அப்போது குழந்தை வேறொருவனின் கையினில் இருப்பதை பார்த்தாள்.

“யார் இவன்” என்ற பார்வை பார்க்க, அவளுக்கு விஜயனை தெரியாது.

“என் ஃபிரண்ட்” என்றபடி ப்ரித்வி குழந்தையை வாங்கினான்.

“நான் கூட உங்க எஸ் ஆன தங்கை கிட்ட பேசிட்டு இருக்கீங்கலோன்னு நினைச்சேன்” என சிறு நக்கல் சிரிப்போடு சொல்ல, ப்ரித்வியின் முகம் கோபத்தில் இறுக, கூடவே விஜயனை அவசரமாக பார்த்தான்.

விஜயனின் முகத்தினில் தெரிந்த தீவிரத்தில் எங்கே காஞ்சனாவை நீச்சல் குளத்தில் தள்ளி விட்டு விடுவானோ என்று பயந்து விட்டான். அவசரமாக குழந்தையை காஞ்சனாவிடம் நீட்டினான்.

விஜயனின் கை, வாயை விட அதிகம் பேசும் என அறிந்தவன் தானே!

“ஏய், உள்ள போ!” என அடிக் குரலில் அதட்ட, அதற்கான பிரதிபலிப்பு அதிகம் இல்லாமல் காஞ்சனா திரும்பி நடந்தாள்.

“உன் பொண்டாட்டி உனக்கு ரொம்ப மரியாதை கொடுப்பா போல”

“உங்க கல்யாணத்தினால எனக்கு வந்த பொண்டாட்டி இவங்க” என்ற ப்ரித்வியின் பதிலில் என் மனைவியை மரியாதை இல்லாம பேசாதே என்ற செய்தி இருந்தது, அது விஜயனிற்கும் புரிந்தது.

“என்கிட்டே யார் எப்படி நடந்துக்கறாங்களோ அதை அப்படியே பத்து மடங்கா திருப்பி கொடுப்பேன். அது நட்புன்னாலும் சரி, விரோதம்னாலும் சரி, சண்டைன்னாலும் சரி, எப்படி இப்படி உன் தங்கையை பேச அனுமதிக்கிற” என்றான்.

ப்ரித்வி ஒன்றும் சொல்லாமல் நடந்தான், வேகமாக அவன் முன் சென்று நின்றவன் “எனக்கு உன்னை பார்த்து பேசணும், நாளைக்கு இல்லை நாளனைக்கு ஃப்ரீ பண்ணிக்கோ” என்றான் அதிகாரமாக.

“பண்ணலைன்னா என்ன பண்ணுவ?”  

“நீ எப்படியும் தூங்கற டைம் உன் வீட்ல தானே இருப்ப, அங்க வந்து பேசுவேன்” என்றான் சொன்னதை செய்வேன் என்ற த்வனியில்.

ப்ரித்வி மௌனமாக நடக்க, “என்கிட்டே முறைக்கறதை விட்டு உன் பொண்டாட்டிக்கு முதல் மரியாதை கத்து கொடு” என்றான்.

ப்ரித்வி நிற்கவேயில்லை நடந்து விட்டான். காஞ்சனாவிடம் பேசாதே என்றால் இன்னும் அதிகம் பேசுவாள். கண்டு கொள்ளாமல் விட்டு விட்டால் கூட ஒரு முறையில் நின்று விடும் என்று அனுபவப் பூர்வமாக அறிந்தவன் ப்ரித்வி.

என்னவோ அவன் நடப்பது விஜயனிற்கு கோபம் கொடுக்க, “எனக்கு பதில் சொல்லிட்டு போடா, என்கிட்டே அப்படி கண்கலங்கி பேசற, ஆனா உன் மனைவி இப்படி பேசறதை அனுமதிக்கிற” அவன் வந்த வேகத்திற்கு பயந்து விட்டான் ப்ரித்வி.

“நான் சொன்னா இன்னம் பேசுவா” என்று உண்மையை சொல்லிவிட,

“பேச முடியாத படி பேசணும்! சொல்லு, ஒரு பையனோட பொண்ணு எஸ்கேப் ஆகறது காதல்ல ரொம்ப சாதாரணம். ஆனா ஒரு குழந்தை பொறந்த பிறகு பொண்டாட்டியை விட்டு புருஷன் எஸ்கேப் ஆனா ரொம்ப கேவலம், இனி நீ பேசினா நான் அதை தான் செய்வேன்னு சொல்லுடா”  

“ஆங்” என விஜயனை வாய் பிளந்து பார்த்தான் ப்ரித்வி.

அதற்குள் அந்த வெளிநாட்டவர் எழுவது போலத் தெரிய, விஜயன் இவனை முறைத்தவாறே சென்று விட்டான்.

“ஷப்பா” என்றிருந்தது ப்ரித்விக்கு, கூடவே இனி காஞ்சனா பேசினால் இப்படி ஒரு பதில் கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டான்.

முன்பே இவனிடம் தானாக பேசியிருக்க வேண்டுமோ? சைந்தவி வீட்டை விட்டு வெளியே வந்த போதே அவனின் சட்டையை பிடித்துக் கேள்வி கேட்டிருக்க வேண்டுமோ என்று தோன்றியது.

“எஸ் சாகி இவங்க கல்யாணம் பண்ணிட்டு, என்னை என் மனைவியை விட்டு எஸ் ஆக சொல்றான்” எனத் தோன்றும் போதே ஒரு சிரிப்பு வந்தது.

“எம காதகன்” என்று கூடவே தோன்றியது.

ஆனால் இவர்கள் வாழ்க்கை ஏன் இப்படி ஆகிவிட்டது என்ற பரிதாபமும் தோன்றியது.    

சிரிப்போடு பார்ட்டி ஹால் உள் நுழையப் போனவனை “ப்ரித்வி” என்ற குரல் தேக்க,

“இவ்வளவு திட்டறேன் சிரிக்கற, என்னை திட்டுறதை விட்டு உன் மனைவியோட நீ பொழைன்னு சொல்ல மாட்டியா?” எனக் கேட்டு பின் அவன் பாட்டிற்கு நடந்தான் விஜய்.

“ஷப்பா” என்று மூச்சு விட்டவன், “கொஞ்சம் நேரத்துலயே நம்மளை ஒரு வழி பண்றானே, அதான் சைந்துவை கவர்ந்திட்டான் போல” என்ற நினைவு பெரிதான ஒரு முறுவலை கொடுத்தது.

கூடவே அந்த வார்த்தைகள் ஒரு இனம் காண முடியாது நிம்மதியை தைரியத்தை கொடுத்தது.

அதோடே ப்ரித்வி பார்ட்டி ஹால் உள் வந்து அந்த புன்னகை வாடாமல் நிற்க, அவனின் முகத்தினில் இருந்த தெளிவு அவனின் பெற்றோர் மனைவி என எல்லோரையும் பார்க்க வைத்தது.            

Advertisement