“இன்னாது எந்த புள்ளை? என் சம்சாரத்துக்கு தெரியும். கேட்டுச்சு என்கிட்ட. ஆனா இந்த புள்ளைக்கு எப்படி தெரியும்? தெரியாதில்லையா! அதனால அது கேட்டாலும் நான் கூட்டி வரலை” என்றான் தினவாக.
மறைமுக வார்த்தையில் நீ குடுக்குற மரியாதைக்கு உன்னைப் பார்க்க வேற வருவாங்களா என்ற வார்த்தைதான் ஓடியது.
பூங்கோதை இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்து நின்றாள்.
“விஷேஷ நாளு என்கிட்டே வாயை குடுத்து வாங்கிக் கட்டிக்காத, அப்படியே அம்மாவோட செயின் வளையல் நான் வாங்கிக் குடுத்தது எங்கே, உன்கிட்ட தானே இருக்கும், அம்மா போட்டுக்கணும் எடுத்துட்டு வா”
“அம்மா எங்கே?”
“நான் புடவை மாத்திட்டு வர அனுப்பினேன். நீ எடுத்துட்டு வா”
“ஏன் அம்மாக்கு கேட்கறியா இல்லை உன் சம்சாரத்துக்கு கேட்கறியா” என்று அலட்சியமாய் நீட்டி முழக்கினாள்.
சைந்தவிக்கு மனதிற்கு ஒரு மாதிரி ஆகிவிட முகமும் சுருங்கி விட்டது. மூர்த்தியின் அம்மாவிற்கும் சங்கடமே, இதென்ன இவள் இப்படி பேசுகிறாள் என்று. ஆனால் பூவிடம் வாய் கொடுக்க முடியாது.
விஜயனுக்கு கோபம் பொங்கிவிட “சரி, நான் வாங்கிக் குடுத்ததை குடுக்காதே. நீ அம்மாக்கு என்ன வாங்கிக் குடுத்த, அதைக் குடு. அவங்களை போட்டுக்கச் சொல்றேன்” என்றான்.
“நானா? நான் எதுக்கு வாங்கிக் குடுக்கணும்”
“வேலை மட்டும் வாங்கத் தெரியுதுல்ல. அம்மாக்கு செய்யணும்ன்ற அறிவு வேண்டாம். இதுல சீர் ன்னு ஒரு பெரிய லிஸ்ட் வேற குடுத்திருக்க” என்று அவன் பேச ஆரம்பிக்கும் போதே மூர்த்தி வந்து விட்டான்.
“த பாரு, அவளை என்னால அடிக்க முடியாது. உன்னை அடி வெளுத்துடுவேன், ஒழுங்கா பேசி, நடக்கச் சொல்லு”
“என்ன அடிச்சிடுவியா நீ” என்று பூவு பொங்கினாள்.
மூர்த்தியின் தோளைச் சுற்றி கையை போட்டவன் “அப்புறம் அந்த இன்சு ஆசுபத்திரில இருக்கானாம், அப்படியா?” என்று நக்கலாய் கேட்டான்.
மொத்த பேரும் அதிர்ந்தனர்.
“நீயா விஜயா?” என்றான் மூர்த்தி தடுமாறி.
“நானா என்ன?” என்று கேட்டுக் கொண்டே விஜயன் பார்த்த பார்வை, கைகலினால் மூர்த்தியின் தோளைச் சுற்றி அவன் கொடுத்த அழுத்தம் மிரண்டு விட்டான்.
“நீயா நீ இல்லையே”
“அது” என்றவன் “உன் சம்சாரத்துக்கிட்ட சொல்லு, விஜயனும் அவன் சம்சாரமும் உன் வீட்டு விஷேஷத்துல நிக்கறது மரியாதையா இல்லை சீர் வர்றது மரியதையான்னு”
“அப்போ நீ எனக்கு ஒன்னும் செய்ய மாட்டியா?”
“ஏன் செய்ய மாட்டேன், எனக்கு புள்ளை பொறக்கட்டும் நீ அதுக்கு சீர் செய்யு, நீ எவ்வளவு செய்யறன்னு பார்த்துட்டு அதுக்கு தக்க செய்யறேன்” என்றான் மிதப்பாக.
“அதெல்லாம் பசங்க தான் செய்யணும்”
“அது அப்போ, இப்போ அம்மாப்பா கிட்ட சொத்து இருந்தா சமமா பிரிச்சு வாங்கியிருப்ப தானே. அப்போ சீர் மட்டும் செய்ய மாட்டியா? செய்யி! இதுவரை சம்பாதிச்சதுல உனக்கு குடுத்தேன் தானே. உனக்கு கல்யாணம் நடத்திக் குடுத்துட்டேன் தானே. உன் புருஷன் இந்த மூணு வருஷத்துல உன் பேருல சொத்தா வாங்கிப் போடறான். ஆனாலும் நான் குடுத்த பணத்தையும் வாங்கின?”
“தம்பி நல்லாயிருக்கட்டும், அவனும் ஒரு சொத்து வாங்கட்டும்ன்னு நீ நினைச்சியா. எனக்குத் தேவையில்லை நீ வெச்சிக்கோன்னு சொன்னியா? வந்த வரைக்கும் லாபம்னு வாங்கி போட்டுக்கிட்ட இல்லையா?”
“இதுல அம்மாக்கு இத்துனூண்டு தங்கம் வாங்கிக் குடுக்கலை, இதுல நான் வாங்கிக் குடுத்ததை எடுத்துக் குடுன்னு கேட்டா, உன் சம்சாரத்துக்கு குடுக்கறியான்னு கேட்கற? அசிங்கமா இல்லை!” என்று கேட்டே விட்டான்.
மூர்த்திக்கு தான் மிகவும் அவமானமாக போய் விட முகம் கன்றி விட்டது.
“எனக்கு இவ பணம் வாங்கினது தெரியாது. எவ்வளவுன்னு சொல்லிடு நான் குடுத்துடறேன்.
“பணம் இங்கே பிரச்சனை கிடையாது. நினைப்பு தான் பிரச்சனை. எனக்காக அவ செஞ்சா அவளுக்காக அதை விட பல மடங்கு நான் செஞ்சிட்டேன். ஆனாலும் சீர் ன்னு ஒரு பெரிய லிஸ்ட் என்கிட்டே பணமில்லைன்னு தெரிஞ்சும் குடுத்துட்டு, இப்போ அம்மா விஷேஷ வீடு வெறும் மஞ்சள் கயிறு மட்டும் போட்டிருக்காங்களே, நகை ஆளுங்க வர்ற முன்ன எடுத்துக் குடுன்னு கேட்டா, என்னா பேச்சு பேசுது. ஏன் உன் சம்சாரத்துக்கு குடுக்க கேட்கறியான்னு?”
“அந்த புள்ள பெத்தவங்க, பணம், சொத்து, நகைன்னு எல்லாம் விட்டு எனக்காக வந்துச்சு. இந்த நகையை போட்டு நான் அவளை நிறைக்கப் போறேனா? ஒரு மனசாட்சி வேண்டாம்!”
“எல்லா பணத்தையும் இவக்கிட்டயும் அம்மாக்கிட்டயும் குடுத்துட்டு ஒத்த ரூபா கையில இல்லாம, சைந்தவி பணத்துல சாப்பிட்டு, சம்பளம் எப்போ வரும்னு உட்கார்ந்து இருக்கேன். இருக்க கொஞ்சம் பணத்தையும் ஹாஸ்பிட்டல்க்கு கட்டினேன். என்ன பெரிய முறை. உங்ககிட்ட இருக்கு, கட்ட வேண்டியது தானே”
“அதையும் நான் தான் கட்டணும்னு சொல்றா. அதையும் கட்டினேன். நான் உழைச்சு வர்ற காசு. ஒத்த பைசா எனக்கு கொடுக்க ஆள் கிடையாது”
“இல்ல தெரியாம தான் கேட்கறேன், நான் என்ன லார்டு லபக்குதாஸ் குடும்பமா. ஏதோ படிச்சு கொஞ்சம் சம்பாரிச்சா இவளுக்கு செஞ்சு செஞ்சே வாழ்க்கைல நான் கடனாளியா இருக்கணும். என்ன ஒரு எண்ணம்?” என்று விலாசிவிட்டான்.
பூவு ஏதோ பேச வர…
“உன் தம்பியா அவன் இங்கே வரலை. நான் கூப்பிட்டேன் எனக்காக வந்திருக்காங்க. இனி நீ பேச வேண்டிய அவசியமில்லை. இல்லை பேசு பேசித்தான் ஆவேன்னா நீ என்னை தான் அசிங்கப் படுத்துற. அப்படி பணம் காசு இல்லாமையா நான் உன்னை வெச்சிருக்கேன்” என்ற மூர்த்தியின் குரலில் அவ்வளவு கலக்கம் வருத்தம்.
மூர்த்தியின் வார்த்தைகளில் பாவனையில் தானாய் பூவின் கண்களில் நீர் நிறைந்தது.
அதற்கும் “எதுக்குடா அவளை அழ வைக்கிற, நான் அவளோட தம்பி இல்லைன்னு உன்கிட்ட சொன்னேனா?” என்று விஜயன் சண்டையிட்டான்.
“சும்மா அவரை எதுக்குடா பேசற?” என்ற பூவின் கண்களில் கண்ணீர் இறங்கியது.
“சரி அவரை பேசலை உன்னை பேசறேன்” என்று சொல்ல, அச்சோ இவனை நிறுத்த ஆள் இல்லையா என்று சைந்தவி பரிதாபமாய் பார்த்திருந்தாள்.
அதற்குள் விஜயனின் அம்மாவும் அப்பாவும் வந்து விட்டனர்.
பூவின் கண்களில் கண்ணீர் பார்த்து “ஏன் கண்ணு, ஏன் அழற?” என்று பதறி ஓடி வந்தார் விஜயனின் அம்மா.
“யம்மா விழுந்து வாரி வைக்காத, என்னால சீர் செய்ய முடியாதுன்னு சொன்னேன் அழறா”
“என்ன முடியாதா? ஏன் முடியாது?” மூர்த்தியிடம் “தம்பி நீங்க பணம் குடுங்க அவன் செய்யட்டும் அப்புறமா திருப்பிக் குடுக்கட்டும்” என்று சொன்னார் உடனே.
விஜயன் “பாரு உன் சம்சாரத்தோட லட்சணத்தை என்ற பார்வை கொடுக்க மூர்த்தி கூனி குறுகி விட்டான்.
“த பாரு, நான் காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். உனக்கு முன்ன பண்ணிக்கிட்டேன். சூழ்நிலை அப்படி. அது என் விருப்பம். அது உனக்கு தப்புன்னா அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது. எங்களை ஒழுங்கா நடத்தினா உன்னோட எங்க உறவு தொடரும் இல்லையா இதுதான் உங்க வீட்டுக்கு நான் வர்றது கடைசி முறை” என்று பூங்கோதையிடம் தெளிவாக சொன்னான்.
பின் “சும்மா சீர் சீர் ன்ன ஊட்டுப் பக்கம் எட்டிப் பார்க்க மாட்டேன். உன் பொண்ணையே பார்த்துக்கோ நீ. எல்லாம் அவளே செய்வா உனக்கு” என்று அம்மாவையும் மிரட்ட அவரும் பரிதாபமாக நின்றார்.
சைந்தவி என்ன பேசுவது என்று தெரியாமல் எல்லாம் பார்த்து அமர்ந்திருந்தாள்.
அதற்குள் காலை டிஃபன் நேரமாகிவிட எல்லாம் வரத் துவங்கினர்.
காலை உணவை முடித்து பின் பூஜை பின் பேர் வைப்பது பின் மதிய உணவு என்று தடபுடலாய் மூர்த்தி ஏற்பாடு செய்திருந்தான்.
வெளியில் பாட்டு ஸ்பீக்கரில் அலறிக் கொண்டிருக்க, இவர்களின் வாக்கு வாதம் அதனால் வெளியில் கேட்கவில்லை.
இப்படியாக முழுதாக கொட்டி விட்டு சைந்தவியைத் திரும்பிப் பார்க்க, அவளின் பார்வையில் என்ன இருந்ததோ, அமைதியாக அவளருகில் அமர்ந்து விட்டான்.