அத்தியாயம் இருபத்தி ஒன்பது :

பூவின் வீட்டில் விஷேஷம், விஜயனும் சைந்தவியும் வெகு முன்பாகவே சென்று விட்டனர். காலை ஏழு மணிக்கே. அவனுக்குத் தெரியும் மூர்த்திக்கு அவ்வளவாக எடுத்துக் கட்டி செய்ய பக்குவங்கள் போதாது என்று. திருமணத்திலேயே பார்த்திருந்தான். பணத்தை தண்ணீராய் இறைத்தாலும் வேலைகள் வெகு தாமதமாக நடந்தன. இதற்கு அத்தனை ஆட்கள் அவனுடன்.

காரிலிருந்து இறங்கவும், அந்த இடத்திலேயே தோற்றத்தில் நடை உடை பாவனைகளில் அவனும் சைந்தவியும் அவ்வளவு வித்தியாசப்பட்டு தெரிந்தனர்.

எப்போதும் விஜயன் தோற்றத்திற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பான். இப்போது காதல் மனைவி கை கூடியதால் என்னவோ இன்னுமே வசீகரனாய் தெரிந்தான்.

“நம்ம விசி யா இவன்” என்று வீட்டின் முன் அமர்ந்திருந்த அவனின் அப்பா விழி விரித்து பார்க்க, அம்மாவுமே அவனை ஆசையாய் நோக்கினார்.

உடன் சைந்தவி, முன்பே அழகி இப்போது இன்னுமே தேஜஸ் கூடி தெரிந்தாள்.

இருவரையும் பார்த்ததும் அந்த அம்மா அப்பாவிற்கு தோன்றியது இது தான் “என் புள்ள நல்லா இருந்தா சரி”

அதுவும் அவ்வளவு பெரிய காரில் வந்து இறங்கவும், பெருமை பிடிபடவில்லை அவனின் அப்பாவிற்கு. ஏதோ வேலையாய் வெளியே வந்த அம்மாவும் அப்படியே நின்றார். இருவரும் பூங்கோதையின் வீட்டில் தான் இருந்தனர்.

விஜயன் அவர்களின் வீடு சென்று பூட்டி இருக்கவும், இங்கே வந்தான்.

பெற்றோர் இருவரும் அலுங்கிய தோற்றத்தில் இருக்க, அவர்களை பற்றி தெரிந்ததாலோ என்னவோ, புது உடைகள் அவர்களுக்கு எடுத்து வந்திருந்தான். எப்போதும் பணம் கொடுப்பான், இந்த முறை அவனே எடுத்து வந்திருந்தான்.

“விசி கண்ணு” என்று அம்மா ஆசையாய் வந்து அவனின் கை பிடிக்க

பதிலுக்கு அவரின் கையை பற்றிக் கொண்டவன் “மா என்ன சீலை இது, விஷேஷம் இன்னும் நல்லா கட்டணும் இல்லையா, நான் எடுத்துட்டு வந்திருக்கேன், வீட்டுக்கு போய் கட்டிட்டு வரலாம்”

“இங்க வேலை இருக்கே கண்ணு”

“வேலை நான் பார்க்கறேன். நீ போய் மாத்திட்டு பளபளன்னு வரணும், நைனா நீயும் போ” என்றவன், காரில் இருந்து அந்த பைகளை எடுத்துக் கொடுத்தான்.

எல்லாம் பார்த்து நின்றிருந்தாள் சைந்தவி.

அவளை சில வருடங்களுக்கு பிறகு இப்போது தானே பார்க்கின்றனர்.

“வா கண்ணு” என்றார் அவளைம் பார்த்து தயக்கத்தோடு.

பார்த்து நின்றிருந்த கணவரையும் பார்த்து “வா ன்னு கூப்பிடு” என்றார் அதட்டலாக.

“வா ம்மா” என்றார் அவர்.

பதிலுக்கு என்ன பேசுவது இருவரையும் பார்த்து சைந்தவிக்கு தெரியவில்லை.

பார்த்து தலையசைத்து சிரித்தவள் தயங்கி, நான் என்ன செய்ய வேண்டும் என்பதாய் விஜயனைப் பார்த்தாள்.

“நானும் அவளும் வேலை பார்க்கறோம், நீங்க போய் ஜம்முன்னு தயாராகி வாங்க” என்றான்.

அம்மாவின் கழுத்தில் வெறும் மஞ்சள் கயிறும். கைகளில் கண்ணாடி வளையலும் மட்டுமே இருந்தன. நகைகள் அம்மாவிற்கு வாங்கிக் கொடுத்திருக்கிறான்.

தினமும் அணியச் சொன்னாலும் “அது இன்னா கண்ணு தொந்தரவா இருக்கு, போக வர போட்டுக்கறேன்” என்று விட்டார். வற்புறுத்தியும் அணியவில்லை. “கழுத்து வெயிட்டா இருக்கு கண்ணு. கண்ணாடி வளவு தான் அம்சம்” என்று விட்டார்.

இன்று அணிந்திருக்க வேண்டும் என்று யோசனையோடு பார்த்து நின்றான்.

மகனின் யோசனைப் பார்வைகள் கண்ணில் படவில்லை. மகனை மருமகளை பார்த்த சந்தோஷத்தில் அவன் என்ன சீர் கொண்டு வந்தான் என்று கேட்க மறந்தே போனார்.

அவன் சைந்தவியை அழைத்துக் கொண்டு உள்ளே செல்ல, வழியில் கண்ட அனைவரும் “வாங்க அண்ணா, விஜி தம்பி” என்று என்ன உபயோகித்தாலும், “வாங்க அண்ணி, வாம்மா” என்ற முகமன்கள் சைந்தவியையும் நோக்கி பாய்ந்தது.

உள்ளே சென்றால் குழந்தையின் அழுகை சத்தம் காதை பிளந்தது. பூங்கோதை குளிக்கச் சென்றிருக்க, குழந்தை அவளின் பாட்டியின் கைகளில் அந்த கத்து கத்திக் கொண்டிருந்தாள்

அவர் பதறி வாயிலை பார்த்திருந்தார் விஜயனின் அம்மாவிற்காக.

“ஏன் ம்மா இந்த கத்து கத்தறா?” என்று விஜயன் வர…

“பசிக்கும் போலக் கண்ணு, ஆனா பால் குடுத்து தான் பூவு என்கிட்டே குடுத்துட்டு போச்சு” என்றார்.

இருந்த பதட்டத்தில் சைந்தவியை “வா” என்று அழைக்கக்கூட மறந்திருந்தார். ஒரு ஓரமாய் கால் நீட்டி அமர்ந்து குழந்தையை ஆட்டி ஆட்டி சமாதானம் செய்து கொண்டிருந்தார்.

“என்கிட்டே குடுங்க” என்று சைந்தவி வாங்கி ஃபேன் அடியில் நின்று மொத்தமாய் இருந்த கை துண்டை தவிர்த்து, மெல்லியதாய் இருந்த உடையில் நன்கு காற்றோட்டமாய் பிடிக்க, அழுகை குறைந்தது. அப்போதும் தேம்பல் இருந்தது.

“பட்டுக் குட்டிக்கு என்ன வேணும், காத்து வேணுமா?” என்று பேசினாள்.

அது தேம்பலை நிறுத்தி உறக்கத்திற்கு கண் மூடியது

“நமக்கு பழக்கம் ஓரமா உட்கார்ந்துக்குவோம், காத்து இருந்தாலும் பிரச்சனை இல்லை, இல்லைனாலும் பிரச்சனை இல்லை, குழந்தை அப்படியா பூவு ரூமுக்குள் ஏ சி ல ஏ வெச்சிருக்கும். இங்க குட்டிக்கு வெக்கை தாங்கலை” என்று அவரிடம் கடிந்த விஜயன்,

ஒரு சேர் எடுத்து ஃபேன் அடியில் போட்டு “உட்காரு” என்றான் சைந்தவியை.

அப்போது தான் அவளை உணர்ந்து “வாம்மா” என்றார் மலர்ந்து அவர்.

“எங்க மூர்த்தி” என்றான் விஜயன்.

எல்லாம் ஒரே ஏரியாவில் சுற்றிகொண்டிருந்தவர்கள், நான்கைந்து வயது வித்தியாசம் இருந்தாலும் அப்போதிருந்து பேர் சொல்லியே பழக்கம், அதை திருமணதிற்கு பின்னும் விஜயன் மாற்றினான் இல்லை.

“எங்கயோ காலையிலேயே போனான் கண்ணு. இன்னும் காணோம்”

“என்ன செய்யணும் என்கிட்டே சொல்லுங்க”

“பந்தல் போட ஆள் வரச் சொன்னேன் காணோம், டிஃபன்க்கு சேர் போடணும் மேல மாடில, டிஃபன் வரணும்” என்று அவர் அடுக்கினார்.

“யக்கா” என்று பந்தல் போடுபவன் அப்போது தான் அழைக்க, வெளியில் சென்ற விஜயன் வேகமாக அவன் பின் தலையில் ஒரு தட்டு தட்டினான்.

“ண்ணா” என்று கத்தினான் அவன்.

“ஏன்டா இதென்ன கவுன்சிலர் வீட்டு விஷேஷம்ன்னு ஆடிட்டு வர்றீங்களா? என் வீட்டு விஷேஷம்டா. இன்னும் அரை மணி நேரம் எல்லா வேலையும் முடிஞ்சிருக்கணும்” என்று அதட்டலிட்டான்.

“மா, டிஃபன்க்கு யார் கிட்ட சொன்னீங்க. எப்போ வரும்னு கேட்கறேன்” என்று கேட்டு கைபேசியில் அழைக்க, வேகமான உத்தரவுகள் பறக்க… வேலைகள் நடக்க பரபரப்பாய் நடக்க ஆரம்பித்தன.

குளித்து பூவு வந்து பார்க்க, சைந்தவி ஹாலில் அமர்ந்திருக்க கையில் குழந்தை.

அப்போது விஜயனுடன் வந்த போது, இருபது வயது நிரம்பாத பெண். கவனித்து பார்த்திருந்தால் கண்டு கொண்டிருப்பாள். வந்ததும் கவனித்தது மகளை கையில் வைத்து ஒரு அழகான பெண் அமர்ந்திருந்தது.

“வாங்க” என்று மலர்ந்த முகத்தோடு சொல்லிவிட்டவள், பின்னரே கவனித்து பார்த்தாள். அவளோ என்று நினைக்கும் நேரம் விஜயன் உள்ளே வந்தான்.

பூங்கோதையை பார்த்ததும், சைந்தவி குழந்தையோடு எழ முற்பட “குட்டி தூங்கறால்ல எந்திரிக்காத” என்றான்.

பின் அக்காவை பார்த்து “என்ன ரெண்டு பேரும் வந்திருக்கோம், பார்த்துட்டு நிக்கற, வாங்கன்னு சொல்ல மாட்டியா” என்றான்.

“சொல்லிட்டாங்க” என்று சைந்தவி சொல்ல முற்படும் போதே…

“குட்டிய வெச்சிருந்தா, அந்த வேலையை மட்டும் பார்க்கணும். அவளைப் பார்க்கத்தானே வந்த, பின்ன என்ன எங்க அக்கா கூப்பிட்டு நீ வந்தியா இல்லைல?” என்றான் அதிகாரமாக.

சைந்தவி அமைதியாகிவிட்டாள்.

பாவம் அவனின் அக்கா இன்று சிக்கி சின்னாபின்னமாகப் போகிறார் என்று உடனே தெரிந்தது. ஆனால் பூங்கோதையும் அவனுக்கு மேல் என்று தெரியவில்லை.

“என்னா கூப்பிடணுமா? எதுக்கு கூப்பிடணும், ஏன் குழந்தை பொறந்தா இந்த புள்ளைக்கு வந்து பார்க்கணும்ன்னு தெரியாது. உன்னோட தானே இருக்கு” என்று சரிக்கு சமமாய் நின்றாள்.

பூங்கோதையின் வார்த்தைகள் ஏதோ செய்த போதும் “ஏன் இவனிடம் வாய் குடுக்கிறது” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள் சைந்தவி.