“இப்போ எதுக்கு இதெல்லாம் நினைக்கற?” என்று அவளை ஆதூரமாய் அணைத்துப் பிடித்தவாறே கேட்டான்.

“நான் பேபி வேணும்னு நினைக்கறப்போ இது ஞாபகம் வருது. நம்ம பேபியை நான் எப்படி வளர்ப்பேன்னு தெரியலை. இப்படி நம்மை விட்டு போகுமான்னு தெரியலை. போனாலும் நாம அவனையோ அவளையோ விடக்கூடாது”

“உங்களுக்குத் தெரியுமா பல முறை சாக கூட நினைச்சு இருக்கேன். ஆனா எப்படி சாகன்னு தெரியலை. வலிக்குமான்னு பயம், ட்ரை பண்ணி திரும்ப பிழைச்சு வேற ஏதாவது உடல் தொந்தரவு வந்துட்டா என்னை யாரு பார்த்துக்குவா? அந்த பயம் தான் என்னை சாக துணிய வைக்கலை” என்று தேம்பளோடு சொன்னாள்.

இன்னுமே இறுக்கி அணைத்துக் கொண்டான்.

“அதுக்கு அப்புறம் தான் குழந்தை தத்தெடுக்க நினைச்சேன்”

“பழசு எதையும் பேச வேண்டாம். நம்ம வாழ்க்கை நல்லா இருக்கும்” என்று மட்டுமே சொல்ல முடிந்தது. வேறு முடியவில்லை. செல்வது அவளது முடிவாக இருந்தாலும் விட்டு விட்டானே.

“சாரி, சாரி” என்றான் திரும்பத் திரும்ப.

இதோ ஆஃபிசில் சொல்லியாகிவிட்டது, அவள் செல்வதற்கு சரியாக மூன்று மாதங்கள் இருக்க, அவளுக்கு அங்கே பணம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை.

ப்ரித்வி அவளுடையை பேரில் ஐம்பது லட்சம் டிபாசிட் செய்தவன், அவளுக்கு கைச் செலவுக்கு என பத்து லட்சம் போட்டு விட்டான்.

அவனே சொல்லிவிட்டான் “நீ எனக்கு உன்கிட்ட இருக்கும் போது திருப்பிக் கொடு சரியா” என்று.

அவளிடம் சொல்லும் முன்பே விஜயனிடம் சொல்லிவிட்டான் “ப்ளீஸ், வேண்டாம்ன்ற மாதிரி எதுவும் சொல்லிடாதே. அப்புறம் அவ கைல கூட தொட மாட்டா. இதுல அப்பாவோட பணம் எதுவும் கிடையாது. ஐ ப்ராமிஸ். அவளை வேண்டாம்னு சொல்லிடாங்க தானே, அவங்க பணமும் அவளுக்கு வேண்டாம். இது பரம்பரையா வர்றதுல இருந்து வந்த பணம். அவளுக்கும் உரிமைப்பட்டது. அவ படிக்கட்டும்” என்று கெஞ்சுதலாக பேசுபவனிடம் என்ன சொல்வான்.

சொல்லுவதற்கும் உரிமை கிடையாது, பணமும் கிடையாது. அவளை விட்ட போது பார்த்தவன் ப்ரித்வி தானே.

மனதில் ஆயிரம் எண்ணங்களும் கவலைகளும் ஓடினாலும் சிறிதும் முகத்தில் காண்பித்து கொள்ளவில்லை விஜயன்.

சைந்தவி பின் வாங்கி விடுவாள் என்று தெரியும்.

தினமும் ஒரு முறையாவது “நான் போகணுமா” என்று கேட்டு விடுவாள்.

சைந்தவிக்கு வாழ்க்கையை சரியாகத் தான் கொண்டு செல்கிறோமா என்று தெரியவில்லை. அங்கே வர முயற்சி செய்கிறேன் என்று விஜயனும் சொல்லியிருந்தான்.

ஆனால் அவனின் அம்மா அப்பாவிடம் இருந்து பிரித்துக் கூட்டிப் போகிறோமோ என்ற கவலை வேறு.

இதோ அவனின் அக்காவின் குழந்தைக்கு பெயர் வைக்கும் வைபவம், அவனின் அம்மா அவனிடம் “நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்குல்ல கண்ணு” என்று கைபேசியில் கேட்க…

அவன் பதிலே சொல்லவில்லை.

அதனால் அவனின் அம்மா செய்வான் என்று நினைத்துக் கொண்டார்.

“நாளைக்கு வந்துடு கண்ணு” என்று அவர் சொல்ல…

“என்னம்மா, கூப்பிடாமயே வரச் சொல்றியா?” என்றான்.

“இங்க வந்து கூப்பிட்டாங்க கண்ணு” ‘

“அங்கே வந்தா நீ போ. நான் என் பொண்டாட்டியோட இங்க இருக்கேன். என்னைக் கூப்பிடாத இடத்துக்கு நான் எப்படி வர” என்று விட்டான்.

அவர் அதை மகளிடம் சொல்ல, “என்ன உன் பையன் ஓவரா சீன் போடறான்” என்றாள் வழக்கம் போல.

“கண்ணு அவன் வரணும் தானே”

இவர்களின் பேச்சை வைத்து இது தான் விஷயம் என்று கிரகித்த மூர்த்தி அவனின் அம்மாவை கூட்டிக் கொண்டு “நான் அழைக்க செல்கிறேன்” என்று சொல்லி அவர்களை வீடு சென்றான்.

சைந்தவி அவர்களை முறையாக “வாங்கம்மா, வாங்கண்ணா” என்று அழைத்து, அவர்களுக்கு பருக உண்ண கொடுக்க என்று கிட்சன் நோக்கி சென்றாள்.

“அப்புறம் மா, நான் சொன்னா தான் வருவீங்க. இல்லை என்னை கூப்பிடணும்னு உங்களுக்குத் தெரியாது” என்று மூர்த்தியின் அம்மாவிடம் சண்டையே போட்டான்.

அவர் பரிதாபமாக பார்த்தார்.

“மூர்த்தி தான், இல்லை நாங்க வந்தா உனக்கு பிடிக்குமோ தங்கச்சிக்கு பிடிக்குமோன்னு” என்று இழுத்தான்.

“எனக்காக அவ என்னோட லைன் வீட்டுக்கு வந்து இருந்தா மூர்த்தி. இங்க வர்றது அவளுக்கு பிடிக்காதா? ஏன் உன் சம்சாரம் சொல்லிச்சா?” என்றான் காட்டமாக.

“இல்லல்ல, நானே நினைச்சேன்”

“அது தானே நீ என்னைக்கு அவளை விட்டுக் குடுத்திருக்க?” என்றவன் உள்ளே சென்று ஒரு லிஸ்டை எடுத்து வந்து கொடுத்தான்.

மூர்த்தி வாங்கிப் பார்த்தவன் “என்ன இது?” என்று அரண்டு விட்டான்.

“உன் பொண்டாட்டி எங்கம்மா மூலமா எனக்குக் குடுத்த லிஸ்ட், என்கிட்டே பணமில்லை, செய்யலைன்றது வேற, பணமிருந்தாலும் செய்ய மாட்டேன். இவ்வளவு எல்லாம் முடியாது. இதுவரை சம்பாரிச்ச எல்லாம் பூவு கிட்டயும் அம்மாக் கிட்டயும் குடுத்தேன், இப்போ அம்மாக்கிட்ட கேட்டா காசில்லை செலவாகிடிச்சுன்னு சொல்லுது”

“எங்கம்மா நல்லதா ஒரு புடவை கூட அதோட விலையைப் பார்த்து எடுக்காது. அது காசு செலவு பண்ணுமா? பூவு தான் பத்திரப்படுத்தியிருக்கும். அம்மாக்கு தான் செஞ்சிருக்கும். ஆனா அதுக்காக நான் கடனாளி ஆக முடியாது இல்லையா?”

“குடும்பமாகிடுச்சு, எனக்கும் தேவைகள் அதிகமாகிடுச்சு. பூவுக்கும் நிறைய செஞ்சிட்டேன். இனி என்கிட்டே பைசா கிடையாது. அதையும் விட செய்யவும் விருப்பம் கிடையாது”

“பார்த்துக்கோ” என்று விட்டான்.

மூர்த்தியின் அம்மா விஜயனிடம் “கண்ணு எங்களுக்கு சீர் பெருசில்லை, நீ எங்களோட இருக்குறது தான் பெருசு. பூவா கட்டின பிறகு தான் இவன் ஒழுங்கா இருக்கான். இதெல்லாம் எதுவும் தேவையில்லை. நாங்க எதுவும் நினைக்க மாட்டோம்” என்றார்.

காஃபியுடன் வந்த சைந்தவியின் கண்கள் எல்லாம் அந்த லிஸ்டிலேயே இருந்தது.

“நீங்க கண்டிப்பா வரணும்” என்று சொல்லி அவர்கள் செல்ல…

“பூவுக்காக வர்றனோ இல்லை, குட்டிக்காக வருவேன்” என்றான்.

பின்னர் அவர்கள் செல்ல “நாம எப்படி சும்மா போவோம்”

“சும்மா தான் போவோம்” என்றான் திடமான குரலில்.

அந்த குரல் அவனின் ஆளுமை அவளை எப்போதும் போல ஈர்த்தது. இல்லை என்பது வேறு, என்னிடமில்லையென்று என்றும் அவனையே அவன் கீழாக நினைக்கவே மாட்டான்.

“தங்கம் வேண்டாம், ஆனா வெள்ளில ஏதாவது, ட்ரெஸ் அந்த மாதிரி வாங்கலாம்”

“சவீ ப்ளீஸ்” என்று அவன் ஆரம்பிக்கும் போதே, வேகமாக வந்து அவனைக் கட்டிக் கொண்டு இதழில் வேகமாக இதழ் பதித்து விலகியவள், “குட்டிக்காக ப்ளீஸ்” என்றாள்.

செல்லமாக அவளின் இதழ்களில் அடித்தவன் “திஸ் இஸ் பேட்”

“ஓஹ், பாய்ஸ் கொஞ்சினா வைஃப் மேல உள்ள லவ், ஆனா கேர்ல்ஸ் கொஞ்சினா காரியம் ஆகவா?” என்று முகம் சுருக்கி சொல்ல…

அவள் ஹர்ட் ஆகிவிட்டால் என்று புரிந்து, எதையும் யோசிக்காது வேகமாக அவளின் கால்களில் விழுந்தவன் “நோ ஃபெமினிசம், நோ மேல் ஷாவநிசிம்” என்று தலையை தூக்கி சொல்லியவன்…

“எனக்குத் தெரியும், எனக்குத் தெரியும் நீ என் மேல பைத்தியம்னு” என்றும் சொல்லி பார்த்தான்.

ஒற்றை விரல் கொண்டு “எழுந்திரு” என்றாள் முறைப்பாய்.

அவன் பாவமாய் எழுந்ததும் சைந்தவி அவனை மீண்டும் கட்டிக் கொண்டு முத்தமிட…

“நான் ஒத்துக்கறேன், ஒத்துக்கறேன், நீ என் மேல பைத்தியம்னு ஞாபகம் வராத நான் தான் பைத்தியம்னு” என்றவனை மீண்டும் கட்டிக் கொண்டாள்.

அவளை “ஏய் என்னடி பண்ற” என்றவன் அப்படியே தூக்கிக் கொள்ள…

வாழ்நாள் முழுமைக்கும் ஞாபகம் வைத்துக் கொள்ள சில நொடிகள்.

“நாம போகலாம்” என்று அவனின் கையோடு கை கோர்த்துக் கொண்டவள், “திஸ் இஸ் நாட் பேட் ன” என்று அவனின் தோள் சாய்ந்து கேட்டாள்.

“லவ் யு” என்றவன் “என்னவோ கர்மா இருக்கு எனக்கு. இப்படி பைத்தியமா என் மேல ஒரு பொண்ணு” என்றான் கர்வமாக.

“அது தான் எனக்கே தெரியுமே” என்றாள் காதலாக அவனை பார்த்தபடி.

வீட்டை பூட்டி கிளம்பிய போது இருவர் மனமுமே மகிழ்ச்சியில் நிரம்பி இருந்தது.