விஜயன் டைனிங் ஹாலில் ரித்தியோடு இருக்க, சைந்தவி சென்றவள் அவளின் பேகில் இருந்து உணவு சிந்தினாலும் உடையில் எதுவும் ஆகாதபடி ஒரு ஸ்கார்ப் எடுத்துக் கட்டி, ஒரு குட்டி பவலில் இட்லி ஒன்று வைத்து சாம்பார் வைத்து கொஞ்சம் கொஞ்சமாக ஊட்ட ஆரம்பித்தாள்.
“என்ன சைந்தவி, அத்தைக்கிட்ட உன் மருமக நல்லா வேலை வாங்கறா போல?” என்றார் அவளின் சித்தி முறையான ஒருவர்.
அதனுடனே “ஆமா, உங்க அப்பாவும் அம்மாவும் பேசினாங்களா?” என்று கேட்க, ஒரு சிரிப்பு மட்டுமே சைந்தவியிடம்.
விஜயன் பக்கத்தில் இருக்க அவனை “வாங்க” என்று சொன்ன உறவுகளிடம் மட்டுமே அவள் வாய் திறந்து பேசினாள். மற்றவர்களிடம் ஒரு புன்னகை, தலையசைப்பு அவ்வளவே.
“உங்கப்பா அம்மா பேசலைன்னா என்ன? நீ போய்ப் பேசு” என்று ஃப்ரீ டிப்ஸ் கொடுக்க… அதற்கும் ஒரு சிரிப்பே.
“நாளைக்கு எல்லாம் சேர்ந்துக்குவாங்க, நீ பேசாம வா” என்று அந்த பெண்ணின் கணவர் அவரை அழைத்துக் கொண்டு சென்றுவிட்டார்.
“ஆர் யு ஓகே” என்று விஜயன் சைந்தவியை பார்த்து கேட்க,
“எஸ், பெர்ஃபெக்ட்லி, இதெல்லாம் எதிர்பார்த்தது தான்” என்று சொல்லும் போதே விஜயனின் நண்பர்கள் வர, அவர்களிடம் பேசியபடியே குழந்தைக்கு ஊட்டி முடித்தனர்.
பின்னர் அனைவரும் மேடை ஏற… சைந்தவி குழந்தையோடு கீழேயே இருந்து கொண்டாள்.
ப்ரித்வியை காணவில்லை.
மேடையில் நண்பர்கள் ஆரவாரமாய் மணமக்களோடு புகைப்படம் எடுத்துக் கீழிறங்கி, உணவுண்ண சென்றனர்.
எல்லாம் ரித்திகாவோடே… ஸ்கந்தநாதனும் மேகலாவும் பார்த்து தான் இருந்தனர்.
புஃபே முறையில் உணவு…. முதலில் ரித்தியை விஜயன் வைத்திருக்க, சைந்தவி உண்டாள். அதன் பின் சைந்தவி வைத்திருக்க விஜயன் உண்டான்.
கூட்டம் வெகுவாகக் குறைந்திருக்க, மணமக்களும் உண்டனர். “நீங்க இங்கேயே இருங்க” என்று விஜயனிடம் ஜீவன் தனியாக சொல்ல,
“இல்லைடா, நாங்க வீட்டுக்குப் போயிட்டு காலையில வருவோம்” என்று சொல்லியே வந்தான்.
காஞ்சனா அவளின் அப்பா அம்மாவுடன் உணவுண்டாள்.
அவளின் பார்வை முழுவதும் முறைப்பாய் இயலாமையாய் தன் மகளை வைத்திருக்கும் இருவர் மேல் தான் இருந்தது.
அழகான பெண்கள் அங்கே பலர் இருக்க… எல்லோரையும் விட சைந்தவி தனித்து தெரிந்தாள். உணவுண்ட ரித்திகா அவள் மேலேயே உறங்கியிருந்தாள்.
“நான் போய் ரித்தியை வாங்கி வரவா” என்று காஞ்சனாவின் அம்மா கேட்க,
“வேண்டாம்” என்று விட்டார் மேகலா.
உறக்கத்தில் கை மாறினால் ரித்திகா அழ ஆரம்பித்து விடுவாள் என்பதினால் ப்ரித்வி வந்த பிறகு வாங்கிக் கொள்ளலாம் என்று மேகலா சொல்ல,
மகளை பார்த்ததும் பாசம் பொங்குகிறது என்று அர்த்தம் கொண்டனர், காஞ்சனாவும் அவளின் பெற்றோரும்.
பின்பு உறவுகள் இருக்க, அவர்களோடு பேசவே நேரம் சென்றது.
மேகலா ப்ரித்வி உணவுண்ணவில்லை என்றழைக்க அவரின் அழைப்பு ஏற்கப்படவில்லை.
கணவரிடம் சொல்ல, “சின்ன பிள்ளையா அவன். ஃபிரண்ட்ஸ்ஸோடா இருப்பான் வந்துடுவான்” என்றார்.
சைந்தவியும் கவனித்தாள், ப்ரித்வியை வெகு நேரமாக காணவில்லை. பட்டுவை வைத்திருப்பது அவளுக்கு ஒன்றுமில்லை, ஆனால் ப்ரித்வி எங்கே?
விஜயன் அருகில் வரவும் “ப்ரித்வி எங்கே ரொம்ப நேரமா காணோம்” என்று சைந்தவி கேட்கவும்…
“தெரியலையே”
“எதுவும் பார்ட்டி போகுதா தனியா?”
“போகுது, ஆனா அவன் பார்ட்டி பண்ற ஆள் கிடையாதே”
“எங்க இருக்கான்னு பாருங்க” என்று சைந்தவி சொல்ல, ப்ரித்வியைத் தேடி விஜயன் சென்றான்.
நண்பர்களிடம் விசாரிக்க…. மண்டபம் பக்கத்தில் இருந்த ஒரு உயர்தர ஹோட்டலின் பாரில் இருப்பது தெரிய… விஜயனுக்கு அதிர்ச்சி.
அவனுக்குத் தெரிந்த ப்ரித்வி குடிக்க மாட்டான், குடிக்கவே மாட்டான். ஏன் குடிப்பவர்களின் அருகில் கூட நிற்க மாட்டான்.
வேகமாக அங்கே செல்ல… அங்கிருந்த டேபிள் மேல் தலை கவிழ்த்து படுத்திருந்தான். இவன் எழுப்பவும், அவனால் நிற்க முடியவில்லை.
ப்ரித்வியை கை தாங்களாக பிடித்து அவனின் கார் வரை வந்து… அவனின் பாக்கெட்டில் இருந்த சாவியால் கதவை திறந்து அவனை உள்ளே அமர வைத்து… அந்த ஆடியை மண்டப வாசலில் நிறுத்தியவன்….
நண்பன் ஒருவனுக்கு அழைத்து ஸ்கந்தநாதனை அழைத்து வரச்சொன்னான்.
ஸ்கந்தநாதனோடு மேகலாவும் வர, அவர்களுக்கு மகனைப் பார்த்ததும் அதிர்ச்சி.
அவர்கள் கேட்காத போதும், “ரொம்ப நேரமா காணோம்னு சைந்தவி பார்க்கச் சொன்னா, தேடிப் போனா பக்கத்துக்கு ஹோட்டல்ல இருக்குற பார்ல இருந்தான். எப்படியோ கூட்டிட்டு வந்துட்டேன்” என்று சொல்லிவிட்டான்.
அவர்கள் எதுவும் பதில் பேசவில்லை, அவர்களின் டிரைவரை அழைத்தவர்கள் “மெதுவா வீட்டுக்குப் போ, நாங்க எங்க கார்ல்ல வந்துடறோம்” என்று சொல்லி,
உள்ளே சென்று இப்படி என்று சொல்லாமல் “அவருக்கு டையர்டா இருக்கு அண்ணா, நாங்க கிளம்பறோம் காலையில வர்றோம்” என்று சொல்லி கிளம்பினர்.
அவர்கள் செல்வதை பார்த்ததும் “மேம், பேபி” என்றான் பின்னோடு சென்று தயங்கி,
காஞ்சனா எங்கே என்று அவரின் பார்வை அலச…
தங்கைக்கு வரும் பரிசு பொருட்களின் அருகே நின்றிருப்பது தெரிய, “என்கிட்டே குடுங்க” என்றார் நேரடியாக விஜயனிடம்.
வேகமாய் சென்று சைந்தவியின் கையில் இருந்து வாங்க, கை மாறியதும் அழுகைக்கு மாறிய ரித்திகா, விஜயின் “ஒண்ணுமில்லை பேபி” என்று தட்டி கொடுத்ததில், உடனே உறக்கத்திற்கு செல்ல… ஆச்சர்யமாய்த் தான் பார்த்திருந்தார்.
அவரிடம் வந்தவன், “நான் கார்வரை கொண்டு வந்து கொடுக்கிறேன்” என்று சொல்ல…
அவருமே ரித்திகா அழுது ஆர்பாட்டம் செய்யும் அபாயம் இருப்பதால், அமைதியாக நடக்க… அவர்களின் பின்னோடு குழந்தையை தூக்கிக் கொண்டு நடந்தான்.
மண்டபத்தில் அநேகம் பேர் பார்க்க… சைந்தவியும் உணர்வுகளற்று பார்த்திருக்க… காஞ்சனாவும் அவளின் பெற்றோர்களும் கூட பார்த்திருந்தனர்.
“மா எங்கே போறாங்க?” என்று காஞ்சனா பதறி கேட்க…
“வீட்டுக்கு போயிட்டு காலையில வர்றாங்களாம், உன்னை இங்கேயே இருக்கச் சொன்னாங்க, உன் ட்ரெஸ் எல்லாம் எடுத்துட்டு வந்துட்ட தானே”
“இருக்கு, ஆனா எப்படி என்கிட்டே சொல்லாமப் போவாங்க, அவங்க பொண்ணைப் பார்த்ததும் நான் கண்ணுக்குத் தெரியலைப் போல, இவரையும் காணோம்” என்று ஆதங்கமாய்ப் பேசினாள்.
“அமைதியா இரு, எல்லோரும் பார்க்கறாங்க” என்று மகளை அடக்கிவிட்டார்.
சைந்தவியின் அருகில் வந்து அமர்ந்தவன், “அப்புறம் என் மாமனாரும் மாமியாரும் என்ன சொன்னாங்கன்னு கேட்கலை?”
“அழுதா, உங்கப்பாக்கிட்ட கை மாறினது. அழக்கூடாதுன்னு தட்டி கொடுத்தேன், என் குரல் கேட்டதும் திரும்பத் தூங்கிட்டா, டிரைவர் இல்லை ப்ரித்வியோட போயிட்டான், உங்கம்மா தான் கார் ஓட்டறாங்க” என்றான் கூடுதல் தகவலாக.
“ப்ளீஸ், என்கிட்டே அவங்களைப் பத்தி பேச வேண்டாம். நீங்க இருக்கீங்க, ப்ரித்வி இருக்கான். எனக்குப் போதும்” என்று சொன்னபோது அவளின் குரல் வெகுவாக கலங்கியிருந்தது.
“சரி பேசலை, இரு கேப் புக் பண்றேன்” என்றவன், அதைச் செய்து ஜீவனிடம் சொல்லி அவர்கள் வீடு வந்தனர்.
திரும்ப காலையில் விரைவாய் தயாராகி இருவரும் செல்ல, ப்ரித்வி வரவில்லை. ஸ்கந்தநாதன், மேகலா மற்றும் ரித்திகா மட்டும் இருந்தனர்.
ப்ரித்வி காணோம் என்று சைந்தவி சொல்ல… “ஹேங்கோவரா இருக்கும், அவனுக்குப் பழக்கமில்லை புதுசு, இங்க வேணாம்னு விட்டுட்டு வந்திருப்பாங்க”
ரித்திக்கா சிணுங்கி கொண்டே இருந்தாள். மேகலா அவளை சமாளிக்க திணறிக் கொண்டிருந்தார்.
காஞ்சனா தங்கையோடு இருக்க, மணமேடையில் அமர்ந்திருந்த ஜீவன், அவனின் அம்மாவிடம் சைந்தவியையும் ஜீவனையும் என்னோட வந்து இருக்கச் சொல்லுங்க” என்று சொல்ல
சைந்தவி மறுத்துக் கொண்டிருந்தாள், “வேண்டாம் சித்தி” என்று, ஆம் முறை வைத்து தான் அழைக்க வைத்துக் கொண்டிருந்தார்.
“அவன் கத்துறான் வா” என்று அவர் கட்டாயப்படுத்த…
ரித்திகாவை சமாளிக்க முடியாமல், ஸ்கந்தநாதன் ரித்தியைத் தூக்கிக்கொண்டு நடக்க ஆரம்பித்தார்.
வேகமாக சென்று அவரின் முன் விஜயன் நிற்க, அப்படியே ரித்திகா அவனிடம் தாவிவிட்டாள். ஸ்கந்தாதன் பயந்து பின் முறைக்க “சாரி, நான் பேபியை வெச்சிருக்கேன்” என்றபடி வந்தவன்,
“அங்கே ஹோமப்புகை நான் இவளை வெச்சிருக்கேன் நீ போ” என்று சைந்தவியை மட்டும் அனுப்ப, அங்கே தங்கையின் பின்னே காஞ்சனா நின்றிருக்க, அவளின் பக்கமாய் வேறொரு பெண்ணை நிறுத்தி அவளை தவிர்த்து ஜீவனின் பின் புறம் சைந்தவி நின்றாள்.
ஸ்னேஹா திரும்பி பார்த்து மரியாதையாக சைந்தவியை “வாங்க அண்ணி” என்று சொல்ல… ஜீவன் முகத்தில் வெகு திருப்தி.
“குட் கேர்ள்” என்று அவளுக்குக் கேட்க மெல்லிய குரலில் காம்ப்ளிமென்ட் கொடுத்தான்.
காஞ்சனாவின் அம்மா சென்று “அண்ணி வாங்க” என்று மேகலாவை மேடைக்கு அழைத்து வந்துவிட்டார்.
அவர் தயங்கவெல்லாம் இல்லை, வந்து விட்டார். ஆனால் பார்வையை மகளின் புறம் திருப்பக்கூட இல்லை, அவளும் திரும்பவில்லை.
காஞ்சனாவிற்கு இவர்கள் இருவரை பார்ப்பது தான் தலையாய வேலையாய் இருந்தது. தன்னுடைய மகளைப் பார்ப்பதை விட்டு இவர்களைத் தான் பார்த்திருந்தாள்.
திருமணம் நல்லபடியாக முடிந்தது…
நேற்றை போல, ரித்திகாவிற்கு உணவூட்டி என்று பாந்தமாய் பார்த்துக் கொண்டனர்.
விஜயன் பின் இருப்பது தெரியாமல், அவர்கள் வீட்டின் பெரியவர் ஒருவர் ஸ்கந்தநாதனிடம் “காதல் கல்யாணம் எல்லாம் சாதாரணமாகிடுச்சு, பொண்ணுக்கிட்ட பேசினா என்ன? ரெண்டு பேரும் கண்ணுக்கு நிறைஞ்ச ஜோடியாத்தான் தெரியறாங்க, அந்த பையன் நமக்கு சமமில்லைன்னா என்ன? நல்லா தானே இருக்காங்க!”
ஒரு பெருமூச்சு விட்ட ஸ்கந்தநாதன் “இங்க காதல் கல்யாணம் ன்றதை விட அருமை பெருமையா வளர்த்த எங்க பொண்ணு எங்களை வேண்டாம்னு விட்டுட்டு போயிட்டா பெரியப்பா. போனவ போனவளாவே இருக்கட்டும். இனி எங்களுக்கு வேண்டாம். அவ நல்லா வாழறதை நான் எப்போ வேண்டாம்னு சொன்னேன். நல்லா இருக்கட்டும், எனக்கு வேண்டாம்”
“தோ, அவங்களோட ப்ரித்வி பேசறான். எல்லாம் பண்றான். இதுல நாங்க இல்லைன்னா என்ன? அவ எங்களுக்கு வேண்டாம்” என்றார் உறுதியான குரலில்.
“அவ எங்கடா உங்களை வேண்டாம்னு வந்தா, நீங்க தானேடா அவளை துரத்தி விட்டீங்க. நீங்க கல்யாண ஏற்பாடு பண்ணலைன்னா அவ ஏன் வந்திருக்கப் போறா?” என்று வாய் வரை பேச வார்த்தைகள் வந்த போதும் அமைதியாக இருந்து கொண்டான்.
பின் ரித்திகாவை சென்று மேகலாவிடம் கொடுத்து, சைந்தவியிடம் “கிளம்பலாம்” என்றான்.
“ஏன்?” என்ற கேள்வியை அவளின் பார்வை பிரதிபலிக்க…
“நாம இருந்தா உங்க அப்பா அம்மாவை யாரும் எதுவும் கேள்வி கேட்பாங்க, சமாதானம் பண்றோம்னு இறங்குவாங்க, அவங்களுக்கு தர்மசங்கடம் கிளம்புவோம்” என்றவன் சைந்தவியை அழைத்து கிளம்பியும் விட்டான்.