Advertisement

அத்தியாயம் பதினெட்டு:

மதிய நேரத்தில் தான் காலை உணவே உண்டிருந்தனர், விஜயனும் அவனின் வீடு சென்றிருக்க, செய்ய ஏதும் இல்லாதவளாக தூக்கமும் பிடிக்காமல் தன்னுடைய லேப்டாப் எடுத்து உட்கார்ந்து அலுவலக வேலை பார்க்க ஆரம்பித்தாள்.

கூடவே அதில் தோன்றும் சந்தேகங்கள் பற்றி விரிவாக படிக்க ஆரம்பித்தாள். படிப்பில் அவளுக்கு மிகுந்த ஆர்வம் என்பதால் நேரம் போவதே தெரியவில்லை, அவள் அந்த லேப்டாப்பிள் இருந்து தலை நிமிர்ந்த போது கிட்ட தட்ட மூன்று மணி நேரம் ஆகியிருந்தது.

இடத்தை விட்டு எழுந்தவள் தயாராகி பால் வாங்க சென்றாள். கடைக்கு நடந்து போகும் போது ஏனென்று தெரியாமல் ஒரு வெறுமை, ஒரு தவிப்பு, சரிவருமா என்ற பயம்,

பின்னே “நான் வரமாட்டேன்” என்று சொல்லி ஓரிரண்டு நாட்கள் கூட ஆகவில்லை வீடு சென்றிருக்கிறான். என்னவென்று சொல்லத் தெரியாமல் ஏதோ குறைந்தது. காலையில் சமைக்கும் போது தான் அர்த்தமில்லாத வாழ்வில் அர்த்தம் வந்தது போல உணர்ந்தது, இப்போது அதுவே அர்த்தமில்லாதது போலத் தோன்றியது.

எல்லாம் தப்புத்தப்பாக செய்திருக்க, மனதுக்கு பயமாய் இருந்தது. இப்போது அவன் எங்கு இருக்கிறான், அவனின் வீடு எப்படி இருக்கும், அவனின் பெற்றோரோடு என்னால் இருக்க முடியுமா. நான் என் அப்பா அம்மாவை விட்டு வந்து விட்டால், அவனும் வரவேண்டுமா?

அவனின் பெற்றோரோடு, ம்கூம், இருக்க முடியும் என்று தோன்றவில்லை. இப்படியே தனியே இருந்துவிடலாமா?. அவனை மட்டும் வா என்று எப்படி சொல்ல முடியும்? திரும்ப ஒரு வாழ்க்கை ஆரம்பித்து என்னால் இருக்க முடியாது என்று திரும்ப வந்து விடுவேனா… பயமாய் இருந்தது.

இயந்தரகதியில் பால் வாங்கித் திரும்பியவள், மனதளவில் மிகவுமே சோர்ந்து போனாள். வீட்டினுள் நுழைந்தவளுக்கு ஒரு மனஉளைச்சல் வெகுவாகத் தாக்க… ஓவென்று கத்தி அழத் தோன்றியது, எல்லாம் எடுத்து உடைக்கத் தோன்றியது.

இவனை மட்டும் பிடிக்கும், இவனின் வேறு எதுவும் பிடிக்காது… இது சரி கிடையாதே.

அவனை சென்று விட சொல்ல வேண்டும், முடியாது என்னால் முடியாது…

நீதானே அவனிடம் சொன்னாய், இத்தனை ஏற்றத் தாழ்வுகளோடு நடந்த திருமணம் தோற்கக்கூடாது என்று, இப்போது அவனை போகச் சொல்கிறாய்?

நோ! முடியும், உன்னால் முடியும்! சரி செய்து கொள்! என்று ஒரு பக்கம் மனம் சொல்ல…

இல்லை, இல்லை, சேர்ந்த பிறகு முடியாது என்று தோன்றினால் மீண்டும் விட்டுச்செல்ல நினைப்பேனா…..

மீண்டும் ஒரு முறை தோன்றியது… செத்துவிடலாமா என்று.

தலையை பிடித்து அமர்ந்து கொண்டாள்.

எவ்வளவு நேரம் அமர்ந்திருந்தாள் என்று தெரியவில்லை… இருட்டியதும் தெரியவில்லை… கதவைத் தாளிடவும் இல்லை… அமர்ந்திருந்தவள் ஒரு கட்டத்தில் அப்படியே உறங்கிப்போனாள்……

விஜயன் வீடு வரும் போது இரவு பத்து மணி, தேவையான உடைகள் அவனின் லேப்டாப் எல்லாம் தூக்கிக் கொண்டு வந்தான். முதல் முறை வந்தவன், அவனின் பொருட்களை வாசல் படியில் வைத்து மீண்டும் கீழிறங்கி… திரும்ப கொண்டு வந்தான்.

அவன் கதவில் பையை சாத்தி வைத்திருக்க, அவன் மீண்டும் வந்த போது பையின் பாரத்தில் கதவு லேசாய் திறந்து இருந்தது.

“என்ன கதவு திறந்திருக்கிறது?” என்று பதறி அவன் திறக்க, எங்கும் இருட்டு, பயந்து போனவன், “சவீ” என்று குரல் கொடுத்துக் கொண்டே மின்விளக்கை போட, அந்த குரலுக்கு கூட விழிக்கவில்லை, ஆழ்ந்த உறக்கம்.

வேகமாக அருகில் சென்றான், உறங்குகிறாள் என்று புரிந்தது. சில நொடி தான் ஆனாலும் மனதின் பயம். ஹப்பா கைகால்கள் விழுந்து விட்டது என்று தான் சொல்லவேண்டும்.

ஒரு தளர்வு…

அப்படியே மடங்கி கீழே அமர்ந்தவன் அவளின் கன்னத்தை ஆதூரமாய் தொட, விழுக்கென்று எழுந்தமர்ந்தாள். பின்பு விஜயனைப் பார்த்ததும் தளர்ந்து பின்னால் அப்படியே சாய….

“கதவை கூடத் தாள் போடலை, கதவுத் தானா தொறக்குது, ஒரே இருட்டு பயந்துட்டேன்” என்றான்

சோபையாய் ஒரு புன்னகை…

விஜயன் விடாது அவளின் முகத்தைப் பார்க்க…

இன்னும் உதடுகளை இழுத்துப் பிடித்தாள் சிரிப்பதை போன்று.. ஆனால் முடியவில்லை… கண்களில் வேகமாய் நீர் நிறைந்தது.

வேகமாய் எழுந்து அவளின் அருகில் அமர்ந்தவன், “என்னாச்சு” என்றான் பதறி.

கண்களில் இருந்து நீர் வேகமாய் இறங்கி அவளின் உதடுகளை தொட.. பேசுவதற்கு வாய் திறந்தால், அந்த உப்பின் சுவை தெரிந்தது.

“என்னடா?” என்றான் மீண்டும் பயந்து.

“நீ போயிடறையா” என்றாள்.

“ஏன்? என்னாச்சு? எதுக்கு?” என்று கேள்விகளை கூர்மையாய் அடுக்கினான்.

“எனக்குத் திரும்ப உன்னோட இருக்க பிடிக்காமப் போயிட்டா, இன்னும் ரொம்ப கெட்ட பொண்ணாகிடுவேன். அதுக்கு இப்போவே போயிடு” என்று பலகீனமாய் சொல்ல…

நிச்சயமாய் ஒரு பயம் விஜயனுக்கு, இந்த வருடங்களாய் அவளை விட்டது இல்லாமல் இனியும் விட்டு விடுவேனா என்று.

“போயிடு” என்ற அவளின் குரல் அப்படி யாசகமாய் ஒலித்தது.

திணறினான். “இவளுக்கு என்னோடு இருக்கப் பிடிக்கவில்லை, என் வீட்டைப் பிடிக்கவில்லை என்று தானே விட்டேன். பிடித்த வாழ்க்கை அமைத்துக் கொள்ளட்டும் என்று”

“அதை யோசித்த மாதிரி தெரியவில்லை. யோசிக்க போவது மாதிரியும் தெரியவில்லை. அதனால் தானே மீண்டும் இவளின் வாழ்க்கையில் வந்தேன். இப்படி சொல்கிறாள்?” அவனும் தளர்ந்து அமர்ந்து விட்டான்.

பின்னால் சாய்ந்து காலைத் தூக்கி டீபாய் மேல் வைத்தவன், “பசிக்குது எதுவும் இருக்கா, இல்லை ஆர்டர் பண்ணலாமா?” என்றான்.

“நான் என்ன பேசுகிறேன், இவன் என்ன பேசுகிறான்” என்று சைந்தவி பார்க்க…

“சாப்பிட்டு தெம்பா பேசலாம், எனக்கு ரொம்பப் பசிக்குது, மதியம் இங்க சாப்பிட்டுப் போனது தான். இன்னும் டீ கூடக் குடிக்கலை” என்றான் சோர்வான குரலில்.

பின்னே அவனின் அம்மா அப்படி ஒரு ஆர்ப்பாட்டம் “எங்களை விட்டு போறியா நீ” என்று.

“நான் வெளிநாடு போறேன்னு நினைச்சிக்கோ மா, இப்போதைக்கு அப்பப்போ வர்றேன், பின்ன வர்றதை அப்புறம் யோசிக்கலாம்” என்று சொல்ல…

இடையில் அவனின் அக்கா வேறு, “ஓஹ், பொண்டாட்டி வந்தவுடனே அப்பாம்மாவை விட்டுட்டியா?” என்று.

அவன் பதிலே சொல்லவில்லை…

அது அவளின் கோபத்தை கிளப்பியிருக்க, வெகுவாக வார்த்தைகளை விட்டிருந்தாள். என்னவோ அவளுக்கு சைந்தவியை பிடிப்பதில்லை.

“இனி பணம் எதுவும் என்கிட்டே இருந்து எதிர்பார்க்காதே, அப்பா அம்மாவையும் கொஞ்சம் நாள் நீ பார்த்துக்கோ. எல்லாத்தையும் உங்களுக்கு குடுத்துட்டு பொண்டாட்டி கையை எதிர்பார்த்துட்டு இருக்க முடியாது” என்றிருந்தான் தெளிவாக.

ஆம்! அவனிடம் அவனின் சம்பாத்தியம் எதுவும் இல்லை.

அவனின் படிப்பு செலவு சிலது ஸ்காலர்ஷிப், சிலது ட்ரஸ்ட் மூலம், சிலது பூங்கோதை மூலம். ஆம்! அவனின் ஃபீஸ்சில் ஒரு பகுதி, பின் அவனின் தினப்படி செலவு. குடும்ப செலவின் பெரும்பகுதி எல்லாம் பார்த்தது… பூங்கோதை தான்.

அவனின் அப்பா ஆசாரி வேலை, தோன்றினால் செல்வார், பணம் வந்தாலும் பாதி தான் வீட்டிற்கு, மீதி அவரின் குடிக்கு. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் குடிக்க காசில்லை என்றால் தான் வேலைக்கே செல்வார். அதுவரை மனிதர் பக்கா, அவரின் காசில் தான் இதுவரை குடிக்கிறார். விடவேண்டும் அவர் நினைத்தால் தானே விடுவார். விடவேண்டும் என்று இதுவரை நினைக்கவில்லை. அதே போல பகலில் குடிக்கும் பழக்கம் இல்லை. ஆறு மணிக்கு மேல் தான். இருக்கும் கெட்ட பழக்கத்தில் அவர் கடை பிடிக்கும் சில நல்ல பழக்கம்.

பூங்கோதை விஜயனை படிக்க வைத்தேன், குடும்பத்தை பார்த்தேன் என்று சொல்ல, உடன் என்றோ சைந்தவிக்கு உடை எடுப்பதற்காக கடன் வாங்கி குடுத்த ஆயிரம் ரூபாய்க்காக அவள் பேசிய பேச்சு அவனின் கையை கட்டி வைத்திருக்க…

இதையெல்லாம் விட அவர்களின் வாழ்க்கை தரத்தை இவனே உயர்த்த நினைத்தான். அதனால் அவனுக்கு தேவையானது மட்டுமே எடுத்தவன் பாக்கி பிரித்து அம்மாவிடமும் அக்காவிடமும் கொடுத்து விடுவான்.

பணம் வீணாகாது என்று தெரியும். பூங்கோதை பணத்தில் மிகவும் கெட்டி, சிறு அனாவசிய செலவு கூட இருக்காது. ஏன் அவளின் திருமணத்தை மிகவும் விமரிசையாக விஜயன் செய்ய விருப்பப்பட, அனாவசிய செலவு என்று மறுத்துவிட்டாள்.

மூர்த்தி அவளை மிகவும் விரும்பி பல வருடம் பின்னால் சுற்றி திருமணம் செய்து கொண்டான். நல்லவன் ஆனால் அரசியலில் இருக்கிறான், அதற்கான சில குணங்கள் உண்டு, கும்பிடு போடுவது, ஏறி மிதிப்பது போல.

விஜயனுக்கு பெரிதாக விருப்பமில்லை. அரசியல் கலாட்டாக்கள் அடியாள் கலாட்டாக்கள் என்று இருந்ததால். ஆனால் பூவிற்கு மூர்த்தி மேல், அவனின் ஹோதா மேல் விருப்பம் என்று தெரியும். இல்லையென்றால் இத்தனை வருடம் பின்னால் சுற்ற விட்டிருக்கமாட்டாள்.

விருப்பம் புரிந்து நல்ல படியாக திருமணத்தை நடத்திக்கொடுத்தான். பணமும் சென்ற மாதம் வரை அம்மாவிற்கும் அக்காவிற்கும் தான் கொடுத்தான்.

சைந்தவியோடு வாழ்க்கையை இணைக்க முடிவெடுத்த பிறகு, இனி கொடுக்க தேவையில்லை, கொடுத்த வரை போதும் என்று முடிவெடுத்து விட்டான்.

அதை அவர்களிடமும் சொல்லிவிட்டான்.

அம்மா அழுது கரைந்தார் என்றால், அக்கா ஒரு ஆட்டம் ஆடினாள். அப்படி ஒன்றும் அம்மாவை தனியாய் விட்டு வரவில்லை. பூங்கோதை நன்றாய் பார்த்துக் கொள்வாள், இதுவரையும் எல்லாம் அவள் தான். அதனால் தைரியமாய் வந்து விட்டான். இப்போது பூங்கோதைக்கு நிறை மாதம் என்பதால் அம்மாவின் முழு நேரமும் அவளிடம் தான்.

இப்படி அவன் வந்த பிறகு, இந்த சைந்தவியின் பாவனை, வெகுவாய் அவனை பாதித்தது.

“காலையில செஞ்ச சப்பாத்தி மாவு இருக்கு, அந்த கிரேவியும் இருக்கு, அதையே சாப்பிடலாமா?” என்றாள்.

“ம்ம்” என்றவனின் தலையசைப்பிற்கு பிறகு, வேகமாக எழுந்து, சப்பாத்திக்கு பதிலாக பூரி செய்தவள், இரண்டு பேக்கட் மேகியும் செய்தாள். அவனுக்கு பூரி மட்டும் பத்தாது, பூரி மாவு அளவாகத்தான் இருந்தது.

எல்லாம் அவன் முன் வைக்க, வேகமாக உண்ண ஆரம்பித்தான். பசி தாங்க மாட்டான் போல என்று புரிந்தது. இன்னும் பெரிதாய் எதுவும் தெரியாதே. அவனின் வீட்டில் அவள் உண்டதே அவளுக்குப் பெரிய விஷயம். இதில் அவன் என்ன உண்கிறான் என்று அவள் கவனித்ததே கிடையாது.

அந்த ஆறு மாதங்கள் எப்படி அந்த வீட்டில் சைந்தவி இருந்தாள் என்று இப்போது கேட்டால் அவளுக்கு சொல்லவேத் தெரியாது. தினத்தை எப்படியோ கடத்தினாள். அவனுக்கு வேலை கிடைத்ததும் சென்று விடுவோம் என்று அவளின் மனதை அவளே தயார் செய்து வைத்திருந்தாள். அது முடியாது என்ற போது அவளால் முடியவில்லை. வந்து விட்டாள்.

பூரி எல்லாம் காலியான பிறகும் பசிக்கு அவன் நிமிர… மேகியை எடுத்து வைத்தாள்.

“உனக்கு” என்று அவன் கேட்க…

“எனக்கு கொஞ்சம் மேகி இருக்கு, அது போதும், அப்புறம் பழம் இருக்கு, அப்புறம் பால் இருக்கு” என்று சொல்ல…

அவளைப் பார்த்து புன்னகைத்தான். முகத்தில் அடிபட்டு முகம், உதடில் வீக்கம் இருந்த போதும், அந்த புன்னகை சைந்தவியை வசீகரிக்க தான் செய்தது.

உதடுகளை சிரிப்பிற்கு விரித்தவன், வலியில் நிறுத்திவிட…

“என்ன சிரிப்பு?”

“பழம் இருக்கு, பால் இருக்கு நாம இருக்கோம் அப்போ நமக்கு ஃபஸ்ட் நைட்டா” என்றான்.

“நாம இதெல்லாம் பேச வேண்டாம், எனக்கு உங்களோட இருக்க முடியும்னு தோணலை, நான் நினைச்ச மாதிரி ஒரு குழந்தையை அடாப்ட் பண்ணிக்கறேன். அப்புறம் நீங்க கேட்ட டைவர்ஸ் கொடுக்கறேன்” என்றாள் பட்டென்று.

“எல்லாமே அவசரம் உனக்கு, காதலும் அவசரம், கல்யாணமும் அவசரம், நாம பிரிஞ்சதும் அவசரம். சோ, உன்னோடது எல்லாம் முடிஞ்சு போச்சு. இப்போ நாம சேர்ந்து இருக்கறோம்னா உன்னால இல்லை என்னால, இனி நீ நினைச்சாலும் பிரிய முடியாது. அப்படியே நீ பிரிஞ்சே ஆகணும்னு நினைச்சா…”

“ரெண்டு விஷயம் தான் நம்மை பிரிக்கும். ஒன்னு நம்ம ரெண்டு பேர்ல யாரோ ஒருத்தர் இந்த உலகத்துல இல்லாமப் போகணும், இல்லை இன்னொன்னு என்னை பிரிஞ்சு வேற ஒருத்தனை நீ கல்யாணம் செஞ்சு உன்னோட வாழ்க்கையை அமைச்சிக்குவன்னு சொல்லு, இந்த நிமிஷம் டைவர்ஸ்க்கு நாம ப்ரொசீட் பண்ணலாம்”

“இன்னைக்கு இதுக்கு மேல எனக்குப் பேசத் தெம்பில்லை, எனக்கு உடம்பெல்லாம் ரொம்ப வலி, முகமும் வலிக்குது” என்றவன், அப்படியே ப்ளேட்டில் கை கழுவி, அந்த சோஃபாவில் படுத்து கண்மூடிக் கொண்டான்.

வேகமாய் விரைந்தவள் அவனின் மாத்திரைகளை எடுத்து வந்து “மாத்திரை சாப்பிட்டு படுங்க” என்று அவனை எழுப்ப…

இவளை என்ன செய்வது என்று தெரியாமல், புரியாமல் மாத்திரையை உட்கொண்டு மீண்டும் சோஃபாவில் படுக்கப் போக…

“உள்ள போய் படுங்க” என்றாள்.

“நாம சேரரோமா பிரியரோமான்னு தெரியாம ஒரே பெட்ல படுக்க வேண்டாம்” என்று கடுமையை கூட்டி சொன்னவன்… சோபாவில் படுத்துவிட்டான்.

சைந்தவிக்கும் என்ன செய்வது என்று தெரியாமல் புரியாமல் நின்றாள்.

Advertisement