Advertisement

அவனின் கண்களில் இன்னும் தூக்கம் இருந்தது. கண்களும் சிவந்து இருந்தது. அவனை பார்த்து புன்னகைத்தவள் “எப்படி இருக்கு இப்போ?” எனக் கேட்டாள்.

பதில் சொல்லாமல் கழுத்தில் கை வைத்து காய்ச்சல் என்பது போலக் காட்டினான். தொட்டுப் பார்க்க நன்கு உடலின் சூடு தெரிந்தது.

“அச்சோ என்ன இப்படி? எனக்கு ஏன் ஃபோன் பண்ணலை?”

“நீ போனப்போ தூங்கினவன், இப்போ தான் எழுந்தேன்! ஃபோன் அது எங்க இருக்கோ தெரியலை” என்று சொல்லிக் கொண்டே சோர்வாய் அமர்ந்தான்.

“இதுக்கு தான் நேத்தே ஹாஸ்பிடல் போகலாம் சொன்னேன்” என்று கடிந்தவள், “ப்ரித்வி வருவான், ஹாஸ்பிடல் போகலாம்” என்றாள்.

“போய் என்ன சொல்வோம்? நான் போலிஸ் ஸ்டேஷன்ல அடிவாங்கினேன்னா, வேண்டாம்! டேப்லட் போட்டா சரியாகிடும்!” என்றான்.

“அதுதான் நேத்தே போட்டோம் தானே, ஹாஸ்பிடல் போகலாம், ஏதாவது அடிதடி சொல்லிக்கலாம். போலிஸ் ஸ்டேஷன் எல்லாம் சொல்ல வேண்டாம். நீ கிளம்பு!” என்றாள் பிடிவாதமாக.

உடனே ப்ரித்விக்கு அழைத்தும் விட்டாள், அவன் இன்னும் ஹோட்டலை கூட அடையவில்லை, கைபேசி எடுத்து “என்ன?” என்றவனிடம்,

“இவனுக்கு ரொம்ப காய்ச்சல், நீ வா ஹாஸ்பிடல் போகலாம்” என்றாள் பரபரப்பாக.

“நீங்க கீழ வாங்க, நான் வந்துடுவேன்” என்று சொல்லி காரை திருப்பினான்.

“பிடிவாதம் பிடிக்காதே சவீ” என்று அவன் சொல்லிய போதும்,

“நீ வா போகலாம்” என்றாள் முகத்தில் சற்று கோபத்தையும் தேக்கி.

பின்பு அவர்கள் கீழே இறங்கி வர, ப்ரித்வி வர சரியாக இருந்தது.

அவனுடைய திருமணமும் இப்படி தான் சைந்தவியின் கோபத்திலும் பிடிவாதத்திலும் தான் நடந்தது. கொஞ்சம் பொறுத்திருந்தால் இந்த பிரிவு அவசியமற்றதாகி இருக்குமோ என்னவோ என விஜயிற்கு தோன்றியது.

அவர்களுடைய பிரிவும் அப்படி தான்! “உனக்கு வேலை கிடைச்சிடுச்சு தானே. நாம தனியா போயிடலாம். நீ அவங்களுக்கு பணம் கொடுத்துக்கோ” எனப் பிடிவாதம்.

“முடியாது என் அக்கா கல்யாணம் இருக்கு. இப்போ தான் சம்பாதிக்க ஆரம்பிச்சு இருக்கேன். என் பெத்தவங்க அதை அனுபவிக்க வேண்டாமா. தனியா முடியவே முடியாது” என்றவனிடம்,

அப்போதும் பிடிவாதம். “இல்லை என்னால இங்க இருக்க முடியாது” என்று.

“போறதானா போ, என்னால வர முடியாது” என்று விட்டான்.

கிளம்பிவிட்டாள்!

வாழ்க்கையின் ஏற்றத் தாழ்வுகளுக்கான மக்கள் இணையும் போது வாழ்க்கையை கொண்டு செல்ல நிறைய பக்குவம் வேண்டும். அந்த பக்குவம் அந்த வயதில் இருவரிடமுமே குறைவாக இருந்தது.

அதெல்லாம் இப்போது அபஸ்வரமாய் நினைவில் வர “எல்லா விஷயத்துக்கும் இவ்வளவு பிடிவாதமும் அவசரமும் தேவையில்லை” என்றான் சோர்வாக.

“நீ வாயை மூடு. எனக்கு தெரியும். நாம நேத்தே போயிருக்கணும்” என அதட்டினாள். அவளிற்கு பதட்டம் ஏன் என்று தெரியாமல் அதிகமாக இருந்தது. இந்த போலிஸ் ஸ்டேஷன் விஷயத்திலேயே பயந்து இருந்தாள், திரும்ப இரவு எம் எல் ஏ பெண் விவகாரம். இப்போது காய்ச்சல் எனவும் மனதினில் ஒரு கலவரம்.

சைந்தவியின் அதட்டலில் எதுவும் பேசாமல் அமைதியாகி விட்டான்.

கீழிறங்கியதும் தான் பர்ஸ் எடுத்துக் கொள்ளாதது ஞாபகம் வர “பர்ஸ் எடுக்கலை” என்றான்.

“என்கிட்டே இருக்கு” என சைந்தவி பேச, அதற்குள் ப்ரித்வி வர அவர்கள் கிளம்பினர்.

ஹாஸ்பிடல் சென்று அங்கிருந்த கேசுவாலிட்டியில் காண்பிக்க, அவர்கள் எக்ஸ் ரே, பிறகு சீடீ ஸ்கேன் எடுக்க வேண்டும் என்றனர்.

சைந்தவி பயந்து விட்டவள், “எடுத்து விடலாம்” என்று பரபரத்தாள்.

“ஷ், அமைதியாயிரு” என்று அவளிடம் சுள்ளென்று ஒரு அதட்டல் போட்டான் விஜய்.

அந்த அதட்டலில் பேந்த பேந்த விழித்தாள் சைந்தவி.

“அவளை கவனி ப்ரித்வி” என்றவன்,

அங்கிருந்த ட்யூடி டாக்டரிடம் “எனக்கு ஃபீவர் இருக்கு. அதுக்கு மெடிசின் குடுங்க. இந்த அடி பட்ட இடம் எல்லாம் தானா தான் சரியாகும், நாளாகும்! எக்ஸ் ரே இல்லை ஸ்கேன் எடுக்கற அளவுக்கு ஒன்னுமில்லை, அடிதடி எனக்கு சகஜம்! எனக்கு தெரியும்!” என்றான். எல்லாம் ஆங்கிலத்தில் ஒரு ஆளுமையோடு!

எந்த இடத்தினில் எப்படி பேச வேண்டும் என்று தெரிந்தவன்!

“நான் எங்க சீஃப் கிட்ட கேட்கறேன்” என்று அவன் எழ,

“இப்படி மறுத்து மறுத்து பேச தான் அடிதடி ஆகிடுச்சு” என்று பயம் வேறு காண்பித்தான். கூடவே “காய்ச்சலுக்கு மட்டும் பாருங்க, நீங்க என்னை சரியா ட்ரீட் பண்ணலைன்னு நான் கேஸ் எல்லாம் போட மாட்டேன்” என்றான்.

அந்த டாக்டர் “என்ன இது?” என்று பரிதாபமாக பார்த்து நின்றான்.

“உன் வாய் கொஞ்சம் நேரம் மூடறியா” என்று பொறுக்க முடியாமல் அதட்டினாள் சைந்தவி.

“இந்த வாய் இல்லைன்னா என்னை நாய் கூட மதிக்காதுன்னு நினைக்கிறியா” என்று மெதுவாக சைந்தவியிடம் விஜய் முணுமுணுக்க.

“நினைக்கலை, கன்பார்ம் பண்ணிட்டேன்!” என்று சைந்தவி சொல்ல,

அதுவரை டென்ஷனாக நடப்பதை பார்த்திருந்த ப்ரித்விக்கு மனது லேசானது.

“நீங்க ஃபீவர்க்கு மட்டும் பாருங்க டாக்டர்”  என்றாள் அவளாகவே.

“அது” என்ற பார்வையோடு விஜய் நிற்க, டாக்டர் வேகமாக மாத்திரை எழுதி நீட்டினான்.

விஜய் வாங்கி நடக்க, சைந்தவி அவன் பின் நடக்க , “சாரி டாக்டர்” என்று ப்ரித்வி சொல்லி அவர்களை பின் தொடர்ந்தான்.

“டெஸ்ட் எடுக்க சொன்னா, ஏதாவது இருக்கணும்னு அர்த்தம் இல்லை. எதுவும் இல்லைன்னு பார்க்க தான் டெஸ்ட் எடுக்கறது” என்று வெளியில் வந்தது சைந்தவி விஜயிடம் சீறினாள்.

“நான் தான் சொல்றேனே, எனக்கு ஒன்னுமில்லை. நேத்து காலையில் இருந்து சாப்பாடு தண்ணி இல்லை, நேத்து நைட் ரெண்டு தோசை கொஞ்சம் பால் சாப்பிட்டேன். பின்னே இதுவரை எதுவும் சாப்பிடலை, சாப்பிட்டா எல்லாம் சரியாகிடும்!” என்றவன்,

“எனக்கு நான் வெஜ் சாப்பிடணும் இப்போ. அப்போ தான் எனக்கு தெம்பு வரும்” என்றான்.

சைந்தவிக்கு அந்த வாசனை கூட ஆகாது , பரிதாபமாக பார்த்து நின்றாள். அது விஜயிற்கும் தெரியும்.

அதனால், ப்ரித்வி என்னை நான் சொல்ற இடத்துல ட்ராப் பண்ணிட்டு இவளை வீட்ல விடு , நான் சாப்பிட்டிட்டு வந்துடுவேன். நான் வரும் போது ஏதாவது வாங்கிட்டு வர்றேன்” என்றான்.

அண்ணனும் தங்கையும் விஜயை “என்னடா இது?” என்று பார்த்து நிற்க, “மனுஷனோட ஆரோக்யத்துக்கு ரொம்ப முக்கியம் தூக்கமும், சாப்பாடும். காலையில இருந்து நல்லா தூங்கி எழுந்துட்டேன். இப்போ சாப்பிடணும்! சோ ப்ளீஸ்..” என்றான் தணிவாக.

வேறு பேசாமல் ப்ரித்வி விஜய் சொன்ன இடத்தினில் அவனை விட்டான். அது ஒரு சிறிய நான் வெஜ் மெஸ்!

அவன் இறங்கவும், “நான் தான் சாப்பிட மாட்டேன், ஆனா ப்ரித்வி சாப்பிடுவான்” என சைந்தவி சொல்ல,

“சாரி சவீ, அவனை கூப்பிட்டா உன்னை யார் வீட்ல விடுவா. உன்னை கூட்டிட்டு அவன் கிளம்பட்டும்” என்றான் அசால்டாக.

சைந்தவி அவனை முறைத்துப் பார்க்க, “ரொம்ப பசி என்னை அப்புறமா முறைச்சு பாரு” எனச் சொல்லி மெஸ் உள்ளே சென்று விட்டான்.

சைந்தவியைப் பார்த்து “போகலாமா” என்ற ப்ரித்வி, “எப்படி நீ இவனை லவ் பண்ணின?” என்ற மில்லியன் டாலர் கேள்வியை கேட்டான்.

“இத்தனை வருஷமா நான் அதை தான் யோசிச்சிட்டு இருக்கேன்” எனக் கடுப்பாக மொழிந்தவள்,

“இனிமே நீ இதை என்கிட்டே கேட்ட, நான் உன்னை அடிச்சிடுவேன்!” என மிரட்டினாள்.

அந்த பாவனையில் “உன் வீட்டுக்காரன் டாக்டரை மிரட்டுறான்! நீ என்னை மிரட்டுற! மொத்தத்துல ரௌடி பேமிலி!” என்று போலியாக மிரட்டி , “போகலாமா!” என்றான்.

“போடா அண்ணா!” என்றவள்,

“இப்போ அவன் கடைக்காரரை மிரட்டுறதை வேடிக்கை பார்ப்போம்!” என்றாள் சலிப்பாக.

“எதுக்கு” என்று ப்ரித்வி புரியாமல் விழித்தான்.

“வேற ஒன்னுமில்லை, அவன் கிட்ட காசு இல்லை!” என்றாள் கடுப்பாக.

ப்ரித்வி அப்படி ஒரு சிரிப்பு பொங்க, சிரித்து விட்டான். பின் “என்ன பண்ணலாம்?” என்ற பார்வையோடு சைந்தவியை பார்த்தான்.

அவளின் பெரிய கர்சீப் எடுத்து முகத்தில் கட்டிக் கொண்டவள், ப்ரித்வியோடு மெஸ்ஸில் நுழைந்து ஒரு ஓரமாக அமர்ந்து கொண்டனர். எதையும் கவனிக்காத விஜய் உணவை உள்ளே தள்ளிக் கொண்டிருந்தான்.

“ஹே ப்ரித்வி, நீ அங்க பார்க்காத” என சைந்தவி சொல்ல,

“ஆமாம், அவனுக்கு வேற நான் கண்ணு வைக்கணுமா, போடி!” என தங்கையிடம் முறுக்கியவன்,

“ஆனாலும் ஒரு பக்கம் உதடு வீங்கியிருக்கும் போதே இந்த கட்டு கட்டறான்” என்றான்.

அவன் தலையில் ஒரு கொட்டு வைப்பது போல சைந்தவி ஆக்ஷன் செய்ய, பேச மாட்டேன் என்பது போல ப்ரித்வி வாய் மேல் கை வைக்க, அண்ணன் தங்கை இருவர் முகத்திலும் சிரிப்பு!

விஜய் அவர்களை முன்னே அனுப்பியதால் அவசரமாகவே உண்டான். “அவசரமா சாப்பிடறான், மெதுவா சாப்பிட சொல்லட்டுமா” என சைந்தவி எழ,

ப்ரித்வி தன் தங்கையை ஆதூரமாகப் பார்த்தவன், “பேசாம உட்காரு” என்று கை பிடித்து அமர்த்தினான்.

விஜய் உண்டு முடித்தவன், பின்பு பில் வந்ததும் அணிந்திருந்த த்ரீ ஃபோர்த்சின் பாக்கெட்டை பார்க்க, பர்ஸ் இல்லாதது புரிய, அப்படி ஒரு அதிர்ச்சி அவன் முகத்தினில் தன் மறதியை நினைத்து.

அவன் முகத்தினில் தெரிந்த அதிர்ந்த பாவனையில் அப்படி ஒரு சிரிப்பு சைந்தவிக்கு பொங்கியது. ஆனாலும் அடக்கி கொள்ள, அப்படி எதுவும் ப்ரித்விக்கு இருக்கவில்லை, வாய் விட்டு சத்தமாக சிரித்து விட்டான்.

“எவன்டா அவன் இப்படி சிரிக்கிறது?” என்று வாய்க்குள் சொல்லிக் கொண்டே விஜய் பார்வையை ஓட்ட, ப்ரித்வியை பார்த்தவன் இன்பமாக அதிர்ந்தான்.

“ஷப்பா” என்ற ஆசுவாசப் பார்வையை வீசி, பக்கத்தில் கண்களை மட்டும் காட்டிக் கொண்டிருந்த சைந்தவியை பார்த்தான்.

அந்த கண்களில் பார்வையை நிலைக்க விட, இரு புருவத்தையும் உயர்த்தி இறக்கி “எப்படி நாங்கள், உன்னை விட்டு விடுவோமா” என்று சைந்திவி வினவ,

அந்த பாவனையில் விஜய் மயங்கி, அவளை பதிலுக்கு காதலோடு  பார்த்த பார்வையில், பாவனையில் சத்தியமாய் சைந்தவி மீண்டும் மயங்கினாள்.

கணவன் மனைவி எல்லாம் மறந்து மீண்டும் காதலர்கள் ஆகினர்.

என்ன காதலோ ? கருமமோ ? கர்மமோ ? மாயையோ ? மாய வலையோ ?

Advertisement