Advertisement

அத்தியாயம் பதினாறு :

என் வாழ்வில் நீ வந்தது விதியானால்                                                          நீ எந்தன் உயிரன்றோ!

எவ்வளவு நேரம் அமர்ந்திருந்தாள் என்று சைந்தவிக்கு தெரியாது. “என்ன எதிர்பார்க்கின்றாய் நீ?” என அவளுக்குள் அவளோடு போராட்டங்கள், சொல்லத் தெரியவில்லை! உணரவும் முடியவில்லை!

ஒரு இரவிற்குள் என்ன இது? அவளை குறித்து அவளிற்கே நீச்சமாக இருந்தது. விஜய் திரும்ப வந்த போது காலை எட்டு மணி, அதுவரையிலும் அப்படியே அமர்ந்திருந்தாள்.

“ஆஃபிஸ் போகலையா சவீ, என்னோட இருக்கியா?” என்று விஜய் கேட்ட பிறகு தான் நேரம் பார்த்தவள்,

“அச்சோ இன்னும் முப்பது நிமிஷத்துல கிளம்பணும்” என்று எழுந்து விட்டாள்.

திரும்ப அவனை இந்த நிலையில் தனியாக விட்டு எப்படி போவது என யோசித்து “நான் போகட்டுமா? இருக்கட்டுமா?” என விஜயையே பார்த்துக் கேட்டாள்.

“உனக்கு இருக்கணுமா? போகணுமா?” என்று விஜய் அவளிடம் பதில் கேள்வி கேட்கவும்,  

“போறேன், ப்ரியா வண்டி வேற கொடுக்கணும், இன்னைக்கு போயிட்டு வந்தா, இன்னும் ரெண்டு நாள் வீக்கென்ட் லீவ் தானே” என்றாள்.

உண்மையில் அவளுக்கு விஜயோடு இருக்க முடியவில்லை. இந்த பிரிவு, இந்த மூன்று வருடம், இப்போது அப்படி ஒரு கோபத்தைக் கொடுத்தது. மூர்த்திக்கு சிக்கல் வந்து விடக் கூடாது என்று இவ்வளவு கவனம், அப்போது நான்? நான் நானே சென்றாலும்.., ஏன் விட்டான்?” என்ற கோபம்

விஜயிற்கு அவளை பார்த்ததுமே தெரிந்தது எதோ அவள் சரியில்லை என்று.

“எதுவும் பிரச்சனையா சவீ? இல்லை கோபமா?” என்றான் அவளை அனுமானிக்க முயன்றவனாக.  

“இல்லை, எதுவும் இல்லை” என்றவள் ரூமின் உள் சென்று மின்னல் போல குளித்து தயாராகி அரைமணிநேரத்தில் கிளம்பினாள்.

“உன்னோட லீவ் எவ்வளவு நாள் சொல்றது”  

“நான் சொல்லிக்குவேன்” என்றான் அவளையே கூர்ந்து பார்த்தவாறு.

“ஏன்? ஏன் இப்படிப் பார்க்கிற?” என்றாள் உடனே.

“ஒன்னுமில்லையே” என்றான் அவளைப் போலவே.

ஏதோ ஒரு ஒதுக்கம் அவளிடம் தென்பட்டது. அதுவுமில்லாமல் என்ன ஆகிற்று அந்த பெண்ணிற்கு என்று கேட்கவில்லை என்பதையும் குறித்துக் கொண்டான்.

“இல்லை எதோ இருக்கு” என்றாள் பதிலுக்கு.

“உனக்கு ஏதாவது இருக்கா? உனக்கு இருந்தா எனக்கும் இருக்கு! உனக்கு இல்லைன்னா எனக்கும் இல்லை!” என்றான் பளிச்சென்று.

என்ன பேச்சு இது முகத்தை சுருக்கினாள்.

அருகில் வந்தவன் “எதுவும் குழப்பிக்காதே ஆஃபிஸ் போயிட்டு வா” என்றான் ஆழ்ந்த குரலில்.

தலையசைத்தவள் கதவின் புறம் நகர்ந்து கொண்டே, “நீ என்ன சாப்பிடுவ” என்றாள் விட்டு போகிறோமே என்ற தவிப்பு சிறிது எட்டிப் பார்க்க,  

“நான் பார்த்துக்கறேன்” என்றவன்,

“நீ என்ன சாப்பிட்ட?”

“ஒன்னுமில்லை” என்பது போல தலையசைத்தாள்.

நேரம் பார்த்தவன் “போ, போய் அங்கே சாப்பிட்டுக்கோ?” என அவளைக் கிளப்பினான்.

கதவை திறந்து வெளியே சென்றவள், திரும்பி பார்த்து “நீ இருந்துக்குவியா? நான் இருக்கணும்னு இல்லையா?” என்றாள்.

“நீ இருக்கிறாயா? அல்லது இரு!” இப்படி விஜயின் வாய்மொழியாக சைந்தவியின் ஆழ் மனம் எதிர் பார்த்ததோ?  

“தூங்க தான் போறேன், தூங்கி எழுந்தா தான் என்னால யோசிக்கவே முடியும். நான் தூங்கிட்டா நீ சும்மா உட்கார்ந்து இருக்கணும், ஆஃபிஸ் போயிட்டு வந்துடு. அப்புறம் வீக்கென்ட் தானே, ரெண்டு நாள் லீவ் தானே, போயிட்டு வா!” என அவள் சொல்லியதையே திருப்பி சொல்லவும், மனமே இல்லாமல் கிளம்பியவள், தன்னுடைய மனதினை நினைத்து தனக்குத் தானே நொந்து கொண்டாள்.

என்ன வேண்டும்? அவளை அவளுக்கே தெரியவில்லை!

விஜய் மேல் எப்பொழுதும் இல்லாத அளவு ஒரு கோபம் பொங்கியது. கூடவே அவனோடே இருக்க வேண்டும் போலவும் இருந்தது. எப்படியோ யோசனைகள் அவளை சிதறடித்த போதும் ஆஃபிஸ் வந்து சேர்ந்து விட்டாள்.

அப்பொழுது தான் ப்ரியாவின் டூ வீலரை அவளின் ஆஃபிசில் விடாமல் எடுத்து வந்து விட்டது புரிந்தது.

 பின் ப்ரியாவிற்கு அழைத்தவள் “சாரி, ப்ரியா எதோ ஞாபகத்துல இங்க ஆஃபிஸ் வந்துட்டேன்” எனப் பேச,

“என்ன ஞாபகம் அப்படி உனக்கு? ரொம்ப நாள் பிரிஞ்சி இருந்தவங்க சேர்ந்த உடனே அதுவா? என்று விஷமமாய் கேட்டாள். அப்படி ஒரு உற்சாகம் ப்ரியாவின் குரலில்.

அதை கெடுக்க மனதில்லாதவலாக “அது என்ன அதுவா?” என்றாள் சைந்தவி.

“அதுதான் கசமுசா!” என்றாள் ஹஸ்கி வாய்சில் ப்ரியா.

அவள் பேசியதில் அப்படி ஒரு சிரிப்பு பொங்க, “பார்க்க தான் அவன் பெரிய ரௌடி மாதிரி பில்ட் அப் கொடுப்பான், கசமுசா பண்ற அளவுக்கு எல்லாம் தைரியம் கிடையாது. ரொம்ப ஸ்ட்ரிக்ட்  ஆஃபிசர் அவன்?” என சைந்தவி பேச,

“அவர் பண்ணலைன்னா என்ன? நீ பண்ணிடு! அப்புறம் உன்னை விட்டு போற ஞாபகமே வராதில்லையா?” என்றாள் சில்மிஷமாக.

இந்த புறம் சைந்தவி அப்படியே அமைதியாகிவிட,

அவளின் அமைதியினால் ப்ரியாவிற்கு தான் பேசியது சரி கிடையாது போலத் தோன்றியது.

“சாரி லூசு மாதிரி உளறிட்டேனா” என்று ப்ரியா அப்படியே அப்செட் ஆகிவிட்டாள்.

“அய்யே எதுக்கு இவ்வளவு அப்செட் ஆகிற,  கசமுசா தானே பண்ணிடுவோம் விடு!” என்று இலகுவாக சொன்னவள்,

“தேங்க்ஸ் பார் தி டைம்லி ஹெல்ப் ப்ரியா, அண்ட் என்னால உனக்கு தான் திட்டு விழுந்திருக்கும். இப்படி உனக்கு ஃபிரண்ட் தேவையான்னு?”  

“எப்படி அப்படியே கரக்ட்டா சொல்ற?” என்று சொன்ன பிறகு, “அச்சோ உளறிட்டேன்” என அசடு வழிந்தவள்,

உடனேயே “நான் சொல்லிட்டேன் உங்க பின்னாடி எல்லாம் நான் சுத்தலை. ஆனா இவ ஃபிரண்ட்ஷிப்காக எத்தனை நாள் சுத்தினேன்னு” என்று பெருமையாக சொன்னவள்,  

“நோ வொர்ரீஸ் அவனை என் பின்னாடி சுத்த விடறேன் பாரு, போலிஸ்னா பெரிய இவனா? சும்மா அட்வைஸ் பண்றான்” எனத் திமிர் பேசினாள்.  

“ஐயோ அம்மா, ஆளை விடு நீ, ஒழுங்கா அண்ணாக்கிட்ட ரொம்ப ஃபிரண்ட் ஆகிடனும், என்கிட்டே இருக்குறதை விட” என்று சொல்லி, “ஈவ்னிங் வரும்போது வண்டியோட வர்றேன்” என்று ஃபோனை வைத்தாள்.

உடனே கமாலியிடம் இருந்து அழைப்பு வந்தது , “நேத்து எதுக்கு ஆஃபிஸ்க்கு போலிஸ் வந்தது” என நேரடியாக கேட்டாள்.

“எனக்கு தெரியாது”

“அவங்க விஜய் தானே கேட்டாங்க, சொல்லிட்டேன் எங்க இருப்பார்ன்னு, அவ்வளவு தான். வேற எனக்கு தெரியாது” என முடித்துக் கொண்டாள்.

கமாலியும் ஏதாவது தெரிந்து கொள்ள முடியுமா எனப் பார்த்தாள், ஒன்றும் முடியவில்லை!

“விஜய் நேத்தும் வரலை, இன்னைக்கும் வரலை, எந்த இன்ஃபர்மேஷனும் இல்லை!”

“உங்க கிட்ட பேசிக்கறேன்னு சொல்லிட்டார்” என்று பதிலளித்தாள் சிறிதும் சிநேகபாவம் இன்றி. அது இல்லாவிட்டால் போகிறது மேலதிகாரி என்ற பாவனையும் இல்லை, “நீ கேட்டாய் நான் சொன்னேன்” என்ற பாவனை தான் சைந்தவியிடம்.

“இவளை எதற்கு கூப்பிட்டோம்” என்று நொந்து விட்டாள் கமாலி!

“லீவ்னா இன்ஃபர்மேஷன் குடுக்கணும்” என்றாள் அப்போதும் கெத்தை விடாமல்.

“அதை நீங்க அவர் கிட்ட தான் சொல்லணும். என் கிட்ட ஏன் சொல்றீங்க?”

“உன் ஹஸ்பன்ட் தானே”

“ஆமாம்! என் ஹஸ்பன்ட் தான்! ஆனா என்கிட்டே வேலை பார்க்கலை, இந்த ஆஃபிஸ்ல தான் வேலை பார்க்கிறார். அப்போ நான் ஏன் சொல்லணும்? என்னோட விஷயத்துக்கு மட்டும் தான் நான் ரெஸ்ப்பான்சிபில்” என்றாள் கடமையாக.  

“அம்மாடி என்ன பதில் இது?” என்று அசந்து கமாலி, “நீ போ” என்று சைந்தவியை அனுப்பினாள்.

அவளை அழைத்து பேசிய சில நிமிடங்களில் விஜய் விடுப்பிற்காக அழைத்தான்.

“எனக்கு உடம்பு சரியில்லை, ஒரு வாரம் லீவ் வேணும், மோஸ்ட்லி நெக்ஸ்ட் வீக்கென்ட் ஜாயின் பண்ணுவேன்”  

“இப்போ தான் உன் வைஃப் கூப்பிட்டு கேட்டேன். ஒன்னுமே சொல்லலை”  

“என் லீவ் அவ எதுக்கு சொல்லுவா? நான் தானே சொல்லணும்!”

“அப்போ வொர்க் வீட்ல இருந்து பார்க்கிறியா?” என்றாள் கடமையின் உருவமாக.

“இல்லை, ஐ அம் சிக், என்னால ஒன்னும் முடியாது, வந்து தான் எதுவும்!”  

“அப்போ உன்னோட வேலையை யார் செய்வா?”

“அது எனக்கு தெரியாது, லீவ் மெயில் அனுப்பியிருக்கேன்!” என்றவன் மேலே கமாலி பேசும்முன், “என்னோட லீவ் சேங்க்ஷன் பண்ணினதுக்கு தேங்க்ஸ்” என்றான்.

“ஆங், நான் எப்போ பண்ணினேன்” என்று கமாலி யோசிக்கும் போதே ஃபோன் வைக்கப்பட்டு இருந்தது.

விஜய் இல்லையென்றால் கமாலிக்கு வேலை அதிகம், இப்போது அவனுடன் பிணக்கு வேறு! உரிமையாக வீட்டில் இருந்தாவது செய்து கொடு என்று கேட்க முடியாது. வேறு வழியில்லாமல் அவளே செய்ய ஆரம்பித்தாள்.

சைந்தவி அவளின் வேலைகளைத் தன்னை போல பார்த்தாலும் சிந்தனை முழுவதும் விஜய் மட்டுமே.

ஆனாலும் வேளைகளில் ஒரு வேகம் இயற்கையாகவே இருந்தது. நேற்று மதியம் விடுப்பு எடுத்து சென்றதினால் அந்த வேலையையும் சேர்த்து அன்றைய வேலையையும் சேர்த்து மதியத்திற்குள் முடித்தவள் தன்னுடைய கைபேசியை ஆராய்ந்தால் ஏதாவது விஜய் அழைத்திருக்கிறானா என்று.

அந்தோ பரிதாபம்! ம்கூம் அழைக்கவேயில்லை!

எங்கே சைந்தவி சென்றதும் உறங்கியவன் உறங்கிக் கொண்டே இருந்தான்.

ப்ரித்வி தான் உணவு இடைவேளையில் அழைத்தவன் விஜயை பற்றி அவளிடம் விசாரிக்க , “அவன் லீவ்ல இருக்கான் ப்ரித்வி, நான் ஈவ்னிங் ப்ரியா வண்டியோட வர்றேன், திரும்ப நீ என்னை வீட்ல விட்டுடு” என்றாள்.

பின்பு மாலை அங்கே சென்று ப்ரியாவை பார்த்து மீண்டும் நன்றி சொல்ல,

“எனக்கு தேங்க்ஸ் எல்லாம் வேண்டாம், அண்ணாக்கு சரியானதும் என்னை ரெண்டு பேருமா சேர்ந்து ட்ரீட்க்கு கூட்டிட்டு போங்க” என்று பேரம் பேசினாள்.

“டீல்” என்று சைந்தவி சொல்ல, பின்பு சிறிது நேரம் பேசி ப்ரித்வியுடன் கிளம்பிய பிறகு காரில் ஆழ்ந்த மௌனம்.

சைந்தவியின் முகத்தை ப்ரித்வி கூர்ந்து கவனித்த படி ஓட்ட, “ரோட் பார்த்து ஓட்டு நீ, ஒரே நாள்ல என்கிட்டே என்ன சேஞ் எக்ஸ்பெக்ட் பண்ற” என்றாள்.

“உன்னோட சந்தோஷம்” என்றான் ப்ரித்வி.

சிரித்து விட்டவள் “எப்போ இருந்து நீ இப்படி ஆன ப்ரித்வி” என்றாள்.  

“ரித்தி பிறந்ததுக்கு அப்புறம்” என்றான் அவனும் புன்னகையோடு.

பின்பு வீடு வர, அவளை இறக்கி விட்டவன் , கிளம்பினான்.

“வீட்டுக்கு வா ப்ரித்வி”  

“வர்றேன்! ஏதாவது சாப்பிட வாங்கிட்டு வர்றேன், நீ போ, யு லுக் சோ டயர்ட்!” என்றான் கரிசனையாக.

“ம்ம்” என்று தலையாட்டி மேலே ஏறியவள், வீட்டின் பெல் அழுத்த பல முறை அடித்த பிறகு தான் விஜய் வந்து கதவை திறந்தான்.

Advertisement