Advertisement

அத்தியாயம் பதினைந்து :

என்றும் நினைவில்! கனவில்! நனவில்!

எம் எல் ஏ வை அழைத்து “உன் மனைவி உதவி கேட்டு வந்திருக்கிறார். முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் முயற்சி செய்கிறேன். எனக்கு இதனால் எதுவும் தொல்லை வராது என்பதை நீ உறுதி கொடுத்தால் செய்கிறேன்” என்று பேசினான்.

எம் எல் ஏ உடனான உரையாடலை ரெகார்ட் செய்து கொண்டான். பின் எம் எல் ஏ மனைவியை திரும்ப அவனிடம் பெண்ணை கண்டுபிடிக்க உதவுமாறு கேட்க வைத்து அதனையும் ரெகார்ட் செய்து கொண்டான்.

அதன் பிறகே மூர்த்திக்கு தொலைபேசியில் அழைத்தான் பின்னிரவில்.

இவனின் அழைப்பு என்றவுடனே மூர்த்தி எடுத்து பூங்கோதைக்கு தெரிய வராதவாறு வெளியே வந்து பதட்டமாக “என்ன விஜயா?” என்றான்.

ஆம்! பூங்கோதை இப்போது நிறை மாத கர்ப்பிணி. அதனால் அவள் எதோ என்னவோ என்று பதட்டப் பட்டுவிடக் கூடாதே என்று தான் வெளியே வந்து பேசினான்.

அந்த எம் எல் ஏ பொண்ணு காணாம போனது என்று விஜயன் ஆரம்பிக்கும் போதே,

“உன்னை மறுபடியும் தொந்தரவு பண்றாங்களா?” என அவன் கோபப் பட,

“ஷ், பொறுமையா கேளு!” என்று விஜய் அதட்டினான்.

அமைதியானவனிடம், “அந்த பொண்ணை நம்மளால கண்டுபிடிக்க முடியுமா? அவன் கூட்டிட்டு போனானே ஒருத்தன் நான் சில வருஷம் முன்ன பார்த்தப்போவே சரி கிடையாது. இப்போ அவன் ஆளு எப்படி?” என்றான்.

“நமக்கெதுக்கு இதெல்லாம்” என்றான் மூர்த்தி.

“நமக்கெதுக்கா? கூட்டிட்டு போறதுக்கு நீதான் பணம் கொடுத்தியாமே” என அவனிடம் எகிறினான்.

திரும்பவும் அமைதியானான் மூர்த்தி.  

“சொல்லு மூர்த்தி” என்று அதட்ட,

“அது எனக்கு இப்படி பண்ணுவான்னு தெரியாது” என்றான் மூர்த்தி.

“இதுன்னு தெரியலைன்னாலும் எதோ ஒன்னுன்னு தெரியும் இல்லையா? இல்லைன்னா எம் எல் ஏ க்கு உனக்கும் ஆகாது. அவனோட டிரைவர்க்கு நீ ஏன் வட்டிக்கு பணம் கொடுக்கணும்” என்றான் கறாராய்.

“என்னைக்காவது எம் எல் ஏ சுத்தி நடக்கற விஷயம் நமக்கு தெரியணும்னா உபயோகமா இருக்கும்னு தான் கொடுத்தேன். சத்தியமா எனக்கு இப்படின்னு தெரியாது” என்றான் மூர்த்தி பாவமாய்.

“சரி, அதை விடு, என்ன பண்ணலாம்? எப்படி பிடிக்கலாம் அவனை? ரொம்ப சின்ன பொண்ணாமே! அந்தம்மா ரொம்ப அழுகுது. உதவி கேட்டு இங்க வந்து நிக்குது. பூவு கிட்ட சாயந்தரம் வந்ததாமே” என்றான்.

“நமக்கு இதெல்லாம் வேண்டாம் விஜயா! அந்த எம் எல் ஏக்கும் அவனுக்கும் என்ன தெரியாது! ஆனா காதலிச்சு பொண்ணை கூட்டிட்டு போற பையன் கிடையாது. மோசமானவன், ஏமாத்தி விடுவான். இல்லை பணம் பேரம் பேசுவான். பொண்ணுங்க விஷயத்துல அவன் சுத்தமில்லை. அவனை யாரு இந்த எம் எல் ஏ வை வீட்டுக்குள்ள விட சொன்னா! நமக்கு இது வேண்டாம்! எங்க எங்கயாவது லிங்க் இருக்கும். நாம எதுக்கு தேவையில்லாம பகை வளர்க்கணும். இதுக்கு உதவி பண்ண போய் நமக்கு சிக்கல் வந்தா?”

“சிக்கல் வந்தாலும் பரவாயில்லைன்னு நாம ஏன் செய்யனும்? உன்னை தேவையில்லாம இழுத்து விட்டிருக்காணுங்க, கூட தங்கச்சியை வேற போலிஸ் ஸ்டேஷன் இழுத்து விட்டிருக்காங்க. எனக்கு செய்ய மனசில்லை! நேத்து பகல் முழுசும் எவ்வளவு சிரமப் பட்ட எப்படி அதுக்குள்ள உதவி செய்யலாம்னு சொல்ற?”

“விடு மூர்த்தி, சைந்தவி தான் பண்ணலாம்னு சொல்றா, கல்யாணம் பண்ணப்போ அவ என்கிட்டே முதல் முதலா கேட்டது ஒரு ஆயிரம் ரூபாய். அதை உன் பொண்டாட்டி கிட்ட இருந்து வாங்கி கொடுத்துட்டு, அதுக்கான கடனை போன மாசம் வரைக்கும் அடைச்சேன்” என்றான் ஆழ்ந்த குரலில்.

மூர்த்தி அப்படியே அமைதியாகிவிட, இவன் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த சைந்தவி குழப்பமாக பார்த்தாள்.

“இப்போ ரெண்டாவதா இதை கேட்கறா. நான் பண்ணனும், அதையும் விட எம் எல் ஏ எல்லாம் தூக்கி போடு, ஒரு சின்ன பொண்ணு அதை நாம காப்பத்தணும் தானே! நாளைக்கு நம்மை சேர்ந்தவங்க யாராவதுக்கு இந்த மாதிரி ஆகிட்டா, விட்டுடுவோமா? எனக்கு நீ செஞ்சு குடுக்கற!” என்றான் கட்டளையாய்.

சில நொடிகள் அமைதி! பின் மூர்த்தி “உனக்காக முயற்சி செய்யறேன். ஆனா முடியுமா தெரியலை” என்றான்.

“சரி செய்!” என்று ஃபோனை வைத்தவன் ரூமில் இருந்து வெளியே வந்து, “நீங்க வீட்டுக்குப் போங்க, எங்களால முடிஞ்சவரை முயற்சி செய்யறோம்” என்றான் விஜய்.

அந்த பெண்மணி நம்பியும் நம்பாமலும் நிராசையான முகத்தோடு கிளம்பினார். பார்ப்பதற்கே பாவமாக இருந்தது. முடிந்தவரை செய்தாயிற்று இதற்க்கு மேல் என்ன செய்ய?

இவ்வளவு நேரம் வலியை காமித்துக் கொள்ளாமல் இருந்தவன் அவர் சென்றதுமே “அம்மா” என வாயை இரு புறமும் பிடித்துக் கொண்டு சோபாவில் அமர்ந்தான்.

அவனுக்கு எதிரில் இருந்த சேரில் அமர்ந்தால் சைந்தவி, மிகவும் கலவரமான முகத்தோடு அமர்ந்திருந்தாள்.

“எதுக்கு இவ்வளவு டென்ஷன்?” என்றான் உதடுகளுக்கு அதிகம் அசைவு கொடுக்காமல். சைந்தவி புரியாமல் பார்க்க, “வா” என்பது போல தலையசைத்தான்.

அவள் அருகே வரவும் பக்கத்தில் உட்கார் என்பது போல சைகை செய்தவன் “எதுக்கு இவ்வளவு டென்ஷன்” என மெதுவாக கேட்டான்.

“பயமாயிருக்கு” என்றாள் மனதை மறையாது.

“அது இந்த மாதிரி அடி தடி உனக்கு புதுசு அதுதான் பயம்”  

“நாம தேவையில்லாம இதுல நுழைஞ்சிருக்க வேண்டாம். அப்போ அந்தம்மா பார்த்தா பாவமா இருந்தது, இப்போ பயமா இருக்கு!”

அவளின் முகத்தை பார்த்தவன் “ஒரு வேலை செய்யுமுன்ன எவ்வளவு வேணா யோசிக்கலாம். செய்ய ஆரம்பிச்ச பிறகோ, செய்யும் போதோ யோசிக்க கூடாது” என்றான் உதடுகளை அதிகம் அசைக்காமல்.

“ரொம்ப வலிக்குதா?” என சைந்தவி கேட்க,

“ரொம்ப ரொம்ப” என்றான் இதுவரை பேசிக் கொண்டிருந்த குரல் மாறி பாவம் போல.  

பாவமாக சைந்தவி பார்க்க சிரித்து விட்டவன், “சரியாகிடும்” என்றவன் “சியர் அப் மிசஸ் விஜயன்” என்றான்.

அப்போதும் அவள் முகம் தெளியவில்லை.

அவளை ஆதூரமாக அணைத்துப் பிடித்தவன், “இப்போவாவது அந்த ரகசியத்தை சொல்லு உனக்கு ஏன் என்னை பிடிச்சது. முதல்ல உனக்கு என்னை பிடிக்கணும் பிடிக்கணும் நினைச்சு இருந்தேனா, அப்புறம் உனக்கும் என்னை பிடிச்சிடுச்சு. அப்புறம் நாம லவ் சொன்ன பிறகு..” என்று அவன் பேச, குறுக்கிட்டு,  

“நாம இல்லை, நான்!” என்று சைந்தவி எடுத்துக் கொடுத்தாள்.

“சரி நீ தான் சொன்ன, ஓகே!” என்றவன்,

“அதுக்கு பிறகு இவ்வளவு அழகான, நான் கனவுல கூட நினைக்க முடியாத பொண்ணு, என்னை நனவுல லவ் பண்ணுதுன்னு எல்லாருக்கும் பெருமை காட்ட டைம் போயிடுச்சு. அப்போ தான் உங்கண்ணனுக்கு தெரிஞ்சு உங்கப்பா கிட்ட சொல்லி, அவர் அவசரமா மாப்பிள்ளை பார்த்து, கல்யாணம் பண்ணப் போக…”

“நீ என்னை கல்யாணம் பண்ற சூழ்நிலை வந்துடுச்சு. அதுக்கு பிறகு எங்கக்கா, அவளால நான் உன்கிட்ட ரொம்ப பேச முடியலை. இதுல நான்  கேட்கவேயில்லை தானே, சொல்லு உனக்கு ஏன் என்னை பிடிச்சது” என்று விடாமல் வலியோடு பேசினான்.

அவனின் முகத்தினை பார்த்தவள் “உன் வாயை கொஞ்சம் மூடறியா” என்று கடுப்பாக சொன்னாள்.

“நான் தான் மூடணும்னு இல்லை, நீ கூட மூடலாம் உன் வாயால” எனப் பேச,

அவனை முறைத்து பார்த்தாள். 

“ஓகே, நீ சொன்னா சரி” என்று கைகளால் வாயை மூடவது போல பாவனை காட்டினான்.

கண்களை மூடி சோஃபாவில் சாய, அவளை சுற்றி வளைத்திருந்த விஜயின் கை அவள் வசதியாக சாய்வதற்கு தடையாக இருக்க,

“கை எடு” என்றாள்.

“ஏன் சோஃபால தான் வசதியா? என் மேல இல்லையா?”

“வலிக்கும்” என்றாள்.

“எனக்கு இந்த வலி வேணும்” என்றான் ஆழ்ந்த குரலில்.

சைந்தவி எதுவும் பேசாமல் அவனின் தோள் வளைவில் சாய்ந்து கொள்ள, அவளை அணைத்தவாறே சோஃபாவில் சாய்ந்தான்.

சிறிது நேரத்தில் அப்படியே சைந்தவி உறங்கிவிட, அவளை விலகி எழுந்தவன், அவள் உறக்கம் கலையாதவாறு அவளைத் தூக்கி சென்று படுக்கையில் விட்டு அவளை வசதியாக உறங்க செய்தவன், பின் வந்து மூர்த்திக்கு அழைத்தான்.

“ஏதாவது தெரிஞ்சதா?”

“ம்கூம் இல்லை” என்றான்.

“ப்ச், எதாவது பண்ணு மூர்த்தி. எனக்கு என்ன பண்ணனும்ன்னு எல்லாம் தெரியாது. ஆனா உனக்கு தெரியும்னு எனக்கு தெரியும், யோசிக்காதே!” என்றான் மீண்டும்.

பூவு திட்டும்” என்றான் தயங்கி.

“உனக்கு பூவுகிட்ட  திட்டு வாங்கறது புதுசா? எதோ அவார்ட் வாங்கற மாதிரி வாங்குவ! சரி விடு, நான் பூவுகிட்ட சொல்லி சொல்றேன். அப்போதான் செய்வியோ என்னவோ? ஃபோனை அவ கிட்ட குடு!”

“சரி வேண்டாம், நான் அவளுக்கே கூப்பிடுறேன்!” என ஃபோனை வைக்கப் போக,

“வேண்டாம், வேண்டாம், தூங்கறா! எழுப்பாத! நானே பார்த்துக்கறேன்!” என்று மூர்த்தி வைத்தான்.

வைத்த விஜயன் “ஷப்பா இவன் கிட்ட என்னமா பிட்டை போட வேண்டியிருக்கு” என்று சலித்தவன், அமைதியாக அமர்ந்து கொண்டான் விடியும் வரை.

நான்கு மணிக்கு அழைத்த மூர்த்தி “பிடிச்சிட்டம் விஜயா” என,

“எப்படி மூர்த்தி?” என அதிசயித்தான்.

“அது அப்படி தான்!” என அவன் சொல்ல,

“அப்போ சரி, இனிமே பூவு தூக்கத்தை கெடுக்கறேன்னு சொன்னா நீ வேலை முடிச்சிடுவ!” என்றான் உற்சாகமாக.

விஜயிற்கு அவர்களால் வாங்கிய அடி பட்ட அவமானம் எல்லாம் நினைவில் இல்லவே இல்லை.

மூர்த்திக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி, பின் இப்படி எல்லாம் விஜய் அவனிடம் பேச மாட்டான்! ஏன் யாரிடமும் இப்படி அவன் பேசுவானா என்பதே அவனுக்குத் தெரியாது! அவன் பார்த்த வரை எப்போதும் அவனின் முகத்தினில் ஒரு இறுக்கம் இருக்கும். இலகுவான பேச்சுக்களே இருக்காது.

அதுவும் இன்று நடந்த நிகழ்வுக்கு பிறகு தன்னிடம் இனி பேசக் கூட மாட்டான் என நினைத்திருக்க, இந்த விஜயனின் செய்கை அவனை அசைத்தது.

“சரி, அவங்களை எங்க விட?”

“நீ தனியா போகாதே! அப்புறம் நீயே கடத்தி வெச்சிருந்தன்னு எம் எல் ஏ சொல்ல வாய்ப்பிருக்கு நானும் வர்றேன்” என்றான்.

“நான் இருக்குற இடம் வந்துட்டு என்னை கூப்பிடு, நான் கீழ வர்றேன்” என்றான் விஜய்.

“எனக்கு உன் இடம் தெரியாதே”  

“சும்மா கதை விடாத, எம் எல் ஏ  வீட்டுக்காரம்மாக்குத் தெரியும் போது, உனக்கு தெரியாதா? வா!” என்றான். அதனோடே  “பொண்ணுக்கு சேதாரம் எதுவும் இல்லையே” எனக் கேட்க,  

“யாருக்கு தெரியும்? அது அந்த பொண்ணுக்கு மட்டும் தான் தெரியும்!” என்றான் இளக்காரமாக.

“இன்னா மூர்த்தி இப்படி சொல்ற?”

“வேற வீட்டை விட்டு போனா இப்படி தான், அந்த பையனை உட்ட அடில இது கம்முனு குந்தியிருக்கு. அவன் மூஞ்சப் பார்த்தாலே எனக்கே சோறு தண்ணி இறங்காது போல. இந்த புள்ள எதை பார்த்து போச்சோ” என்றான் அலட்சியமாக.

மனதில் சுருக்கென்று ஒரு வலி! “இப்படி தான் சைந்தவியை பார்த்தும் சொல்லியிருப்பார்களோ?”  

வேறு பேச்சை வளர்க்காமல் “கீழ வந்து கூப்பிடு” என்றவன், பின் அந்த பெண்மணிக்கு அழைத்தான். “பொண்ணை கண்டு பிடிச்சிட்டோம், கூட்டிட்டு வர்றோம்”  

அவருக்கு சந்தோஷத்தில் பேச்சே வரவில்லை. “பொண்ணை இனி பார்த்துக்கறது உங்க திறமை” என்றான்.

“இவரை போய் ஆஸ்பத்திரில படுக்கச் சொல்றேன், பொண்ணு போனதுனால ஹார்ட் அட்டாக்ன்னு. அவளுக்கு அப்பா மேல பாசம் அதிகம். பொண்ணுக்கு அப்போதா கொஞ்சம் பயம் வரும்” என்று எம் எல் ஏ வின் மனைவியே சொன்னார்.

“நாளைக்குள்ள அந்த பையன் பண்ணின தப்பு ஏதாவது இருந்தா ஆதாரம் இருக்காப் பார்க்கறோம். பொண்ணை காப்பாத்திக்கங்க” என்றான்.

மூர்த்தி வர ஒரு மணி நேரம் ஆகிவிட, அவன் வந்து அழைக்கவும் தான் சைந்தவியை எழுப்பி விஷயம் சொன்னான்.

“ஷப்பா” என்ற நிம்மதி எழுந்தாலும், “நீங்க போக வேண்டாம்” என்றாள்.

“நான் போகணும் சவீ, எனக்காக மூர்த்தி செஞ்சிருக்கான். அவனுக்கும் எம் எல் ஏக்கும் ஆகாது, இவனை ஏதாவது மாட்டி விட்டா? பூவுக்கு என்னால் பதில் சொல்ல முடியாது!”

“அப்படி கூட செய்வாங்களா?”

“செய்வாங்க சவீ? இது அப்படிப்பட்ட உலகம் தான்!” என்றவன் கிளம்ப,

“நீ போக வேண்டாம்” என்றாள் சிறு பிள்ளை போல,

“சவீ போகணும், என்னால யாரும் எப்பவும் சிக்கல்ல மாட்டக் கூடாது, கஷ்டப் படக் கூடாது!”  

“அவங்களால தானே நீ இப்போ சிக்கல்ல மாட்டின, அடிவாங்கி கஷ்டப்படுற” 

“நான் போகணும் சவீ, கீழ வெயிட் பண்றாங்க!”

அவ்வளவு  தான் மனதில் என்னவென்று சொல்லத் தெரியாத ஒரு கோபம் பொங்கியது. ஆவேசமாக அவனின் சட்டை பிடித்தவள், “அப்போ என்னை மட்டும் ஏன் விட்ட? என்னை ஏன் விட்ட டைவர்ஸ் வேற கேட்ட?” எனக் கத்தினாள்.

“நிஜம்மா நீ கஷ்டப் படக்கூடாதுன்னு தான் விட்டேன். உனக்கு என்னோட சூழல் பிடிக்கலை தானே”  

“சூழல் தானே பிடிக்கலை, உன்னை பிடிச்சது தானே. அப்போ நீ ஏன் உன் சூழல் அப்போ மாத்திக்கலை? என்னை விட்டுட்ட?”

“நான் விடலை, நீ தான் போன” என்று சொல்லியே விட்டான்.

அப்படியே அசையாமல் நின்று விட்டாள்.

“சவீ” என அழைக்க, கண்களில் நீர் நிறைய அவனை பார்த்தாள்.   

“ப்ச்” என சலித்தவன், “எப்போவும் நான் விடலை, நீ போறேன்னு சொன்ன, போன்னு சொன்னேன், அவ்வளவு தான். அதுவும் நீ உன் வீட்டுக்கு தானே போன. நீ தனியா போனன்னு எனக்கு எப்படி தெரியும்? இப்போ கேட்கற மாதிரி அப்போ ஏன் கேட்கலை? என்னை தேடி வரலை?” என அவனும் பதிலுக்கு கத்தினான்.

அவனிடம் பதில் பேசாமல் அமர்ந்து கொள்ள, அதற்குள் திரும்ப மூர்த்தி அழைக்க, “ப்ளீஸ் சவீ” என்றான் கெஞ்சல் குரலில்.

“போ”  என்றாள் இறுகிய குரலில்.

வேகமாக கதவை திறந்து வெளியேறினான் ஏனென்றால் விடிந்து கொண்டிருந்தது.

அதற்குள் பெண்ணை எம் எல் ஏ விடம் சேர்ப்பித்து விட்டால் பரவாயில்லை என்று மனது சொல்ல விரைந்தான்.

சைந்தவிக்கு நடப்பது எதுவுமே பிடிக்கவில்லை. அவள் தான் சொன்னாள், அவள் சொல்வதற்காக தான் செய்தான். ஆனாலும் என்னவோ ஒரு பயம் இப்போது! சொல்லத் தெரியவில்லை!

அமைதியாக அமர்ந்து கொண்டாள். காதலித்து இருக்க வேண்டாமோ என்று தான் தோன்றியது. ஆனாலும் அவனை பிடிக்கிறதே!  

அவனை பிடிக்கும் அவளை அவளுக்கே பிடிக்கவில்லை!

 

Advertisement