Advertisement

அத்தியாயம் பதிமூன்று :

எமை ஆளும் நிரந்தரா!

சைந்தவி மேலே ஏறி வந்த போது, விஜய் அவனின் அம்மாவிடம் கைபேசியில் பேசிக் கொண்டிருப்பது புரிந்தது.

“சும்மா அழாத, நான் நல்லா இருக்கேன். எனக்கு அங்க இப்போ வரப் பிடிக்கலை. வந்தா ஆளாளுக்கு ஏதாவது பேசுவாங்க. மூர்த்தி மாமா அவரால தான் இப்படி ஆகிடுச்சுன்னு என் பின்னாடி சுத்துவாரு. உன் பொண்ணு பெரிய இவ மாதிரி பேசுவா”

“இதெல்லாம் எனக்கு ஆகாது. அதனால வர முடியாது. நான் வெளிநாட்டுக்கு போயிட்டேன்னு நினைச்சு உன்னை நீ பார்த்துக்கோ. உனக்கு பணம் அப்போ அப்போ குடுத்து விடறேன். கொஞ்ச நாள் போகட்டும் உன்னை வந்து பார்க்கறேன்”

“ஒம்போது மணியானா நைனாவை வூட்டுக்குள்ள வெச்சு பூட்டிடு. அப்புறம் அவரை காணோம்னு கலாட்டா பண்ணக் கூடாது”

“அப்புறம் மா” என்றவன்,

“இனிமே நான் சைந்தவியோட தான் இருக்க போறேன்” என்றான்.

எதிர் முனை என்ன சொல்லியதோ, “நான் அவளோட தான் இருப்பேன். அவ நம்ம வீட்டுக்கு வந்தா கூட்டிட்டு வர்றேன். இல்லை உங்களை எங்களோட கூப்பிட்டுக்கறேன். எதுன்னாலும் உடனே இல்லை, கொஞ்சம் நாள் போகட்டும்”

“உன் பையன் உனக்கு வேணும்னு நினைச்சா இதுதான்! இல்லை அவன் வேண்டாம்னு நினைச்சா, உனக்கு என்ன இஷ்டமோ செஞ்சிக்கோ” என்றான் கறாராக.

எதிர் முனை திரும்பவும் என்ன சொல்லியதோ “ஏன் உன் பையன் வாழ்க்கை முழுசும் ஒத்தையாவே போயிடணும்னு நினைக்கறியா புள்ள குட்டின்னு வாழ வேண்டாமா?”

எதிர் முனை எதோ பேச, “நான் நல்லா இருக்கேன். ஒன்னுமில்லை, வலி எல்லாம் இல்லை. பார்த்துக்கறேன்” எனச் சொல்லி இன்னும் சில நிமிஷம் பேசி வைத்தான்.

அதுவரையிலும் பொறுமையாய் நின்றிருந்தாள்.

பேசி முடித்தவன் அவளைப் பார்க்க, புன்னகைக்க முயன்றவள், “என்னோட இருக்க பெர்மிஷன் கிடைச்சிருச்சா” என்றாள்.

“முதல்ல நீ எனக்கு பெர்மிஷன் குடுத்துட்டியா”

பதில் பேசாமல் கதவை பூட்ட ஆரம்பித்தாள். பூட்டி முடித்து திரும்பி பார்க்க, விஜய் பிரிட்ஜில் எதோ எடுப்பது தெரிந்தது.

“என்ன வேணும்” என்று வந்தவளிடம்,

“ஐஸ் க்யுப்ஸ், வெச்சா கொஞ்சம் வலி சீக்கிரம் குறையும்” என்றான்.

“நகரு” என்று அவளே எடுத்துக் கொடுத்தாள்.

ரூமின் உள் தான் கண்ணாடி இருக்க, அதன் முன் சென்று நின்று முகத்திற்கு வைக்க ஆரம்பித்தான். பொறுமையாக முகத்திற்கு வைத்தவன், பின்பு டீ ஷர்ட் கழற்றி படுக்கையில் அமர்ந்தவன் தோளில் வைக்க ஆரம்பித்தான்.

சைந்தவி எட்டிப் பார்த்தாள், அவன் வைத்துக் கொண்டிருப்பது புரிய, உள்ளே போகவா? அவனுக்கு உதவலாமா? வேண்டாமா? ஒரு கூச்சம் தடுக்க, அவளால் கேட்க முடியவில்லை.

பத்து நிமிடமாக இரண்டு நிமிடத்திற்கு ஒரு முறை அவள் எட்டி பார்ப்பதும் போவதுமாக இருக்கக் கண்டவனுக்கு வலியையும் மீறி ஒரு சிரிப்பு தொற்றியது.

“சவீ” என்று அவனாகவே அழைக்க,

வேகமாக வந்தவள் “என்ன” என்றாள்.

“ஈசி. எதுக்கு இவ்வளவு வேகம்” என்றவன்,

“எனக்கு பின்னாடி தோள்ல வைக்க சிரமமா இருக்கு, வெச்சி விடறயா” எனக் கேட்டான்.

“ம்ம்” என்று தலையாட்டியடி படுக்கையில் ஏறி முழங்காலிட்டு அவன் பின்னால் நின்று வைக்க ஆரம்பித்தாள்.

குளிர்ச்சி அதிகமாகும் போது அவன் தோள்களை  ஆட்ட, “ஆடிட்டே இருக்க, நீ படுத்துக்கோ” என்றான்.

“இங்கயே படுக்கட்டுமா?” என விஜய் கேட்க,

“எல்லாத்துக்கும் எப்பவும் பெர்மிஷன் குடுக்க முடியாது” எனக் கோபமாக அவள் சொல்ல, அமர்ந்திருந்தவன் திரும்பி அவளை பார்த்தான்.

“அதனால என்ன பண்ணனும்னா பெர்மிஷன் கேட்க கூடாது” என்றாள் நிறுத்தி நிதானமாக அவனை முறைத்தபடி.

அதன் பிறகு எதுவும் பேசாமல் அவன் கவிழ்ந்து படுத்துக் கொள்ள, எங்கே கன்றிப் போயிருக்கிறது என்று பார்த்து பார்த்து வைத்தவள், “திரும்பி படு” என்றாள்.

திரும்பி படுத்தவனின் முன் புற தோற்றத்தை ஆராய்ந்தாள். அங்கே எதுவும் அவளுக்கு தெரியவில்லை. முதுகில் தான் அடி முன் புறம் இல்லை.

“எங்கே வலிக்குது?”

“எனக்கு தெரியலை, நீ தடவிக் குடு. நான் வலிக்கற இடத்தை சொல்றேன்”

அதை அவனால் தடவி பார்த்து சொல்ல முடியாதா என யோசிக்க மறந்து போனாள். மெதுவாக அவளின் தளிர் கரங்களால் சைந்தவி தடவிக் கொடுக்க, எங்கேயும் அவனுக்கு வலி இல்லை.

அவளின் தடவல் ஒரு மனதிற்கு ஒரு இதத்தையும், உடலிற்கு ஒரு சுகத்தையும் தர, கண்கள் மூடி சில நிமிடம் அனுபவித்தவன், பின் அவளின் கைகளை பிடித்து கொண்டு “வலிக்கலை” என்றான்.

ஒரு கையை அவன் பிடித்துக் கொண்டிருக்க, மறு கையால் அவனின் வீக்கம் இருந்த உதடுகளை தடவினாள். அந்த வலியிலும் அவனின் உடல் எங்கோ பறந்தது.

“ஏன் எப்போ பார்த்தாலும் பிரச்சனையில மாட்டிக்கிற?”

“நான் எங்கே போறேன், அது தானா தேடி வருது, என்னோட ராசி அப்படி, நான் அந்த இடத்துலயே இல்லைன்னாலும் என் பேரை இழுத்து விட்டுடறாங்க” என்றான்.

“ம்ம், ரொம்ப பெருமை போ” என்று சலித்துக் கொண்டவள்,

“இந்த மாதிரி ஒரு சிச்சுவேஷன் இனி உன் லைஃப்ல வரவே கூடாது. என்னால இதையெல்லாம் பார்க்க முடியலை” என்று சொல்லும் போது சைந்தவியின் கண்களில் தானாக நீர் நிறைய, படுத்த வாக்கிலேயே அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.

“வலிக்கப் போகுது” என அவள் பதற,

“ப்ச், கண்டவன் கிட்ட அடி வாங்கும் போது வலிக்காததா இப்போ வலிக்கும். பேசாம இரு!” என்று அவளை அணைத்துக் கொண்டவன்,

“சாரி சவீ, சாரி ஃபார் எவ்ரி திங்” என்றவன்,

“நீயே போறேன்னு சொல்லியிருந்தாலும் நான் உன்னை விட்டிருக்கக் கூடாது, அதுக்கு அப்புறம் உங்க அப்பாக் கிட்ட இருக்கேன்னு நினைச்சு பின்னையும் உன்னை பார்க்காம இருந்திருக்க கூடாது”

“உன்னால என்னோட இருக்க முடியலை. சரி அங்கேயாவது நல்லா இருக்கட்டும்ன்னு நினைச்சு விட்டேன். அதையும் விட நீ என்னை விட்டு போன கோபமும் இருந்தது. என்னவோ எல்லாம் தப்பா ஆகிடிச்சு” என அவன் பேசப் பேச,

சைந்தவி தேம்பி தேம்பி அழத் துவங்கினாள்.

“அழாத சவீ” என்று விஜய் சொன்னபோதும் நிறுத்தவில்லை. முகம் நிமிர்த்த முயன்ற போதும் நிமிர்த்தவில்லை. அவனுடைய நெஞ்சில் முகம் புதைத்து வெகு நேரம் அழுதாள்.

பின்பு மெதுவாக தலை நிமிர்த்தியவள், “அப்போ என்னால அங்க இருக்க முடியலை, அப்போ எனக்கு ரொம்ப பக்குவம் இல்லை போல. இப்போ அட்ஜஸ்ட் பண்ணிக்குவேன்னு நினைக்கறேன்” என,

“ரொம்ப பண்ண வேண்டாம். உனக்கு என்ன மாதிரி வேணுமோ மாத்திக்கலாம்” என்றான் அவனுமே.

“ஆனா என்ன காரணம்னாலும் என்கூட சண்டை போடு, இது வேணும்னு கேளு, ஆனா விட்டு போயிடாத, என்னால திரும்ப ரொம்ப ஸ்ட்ராங்கா என்னை காமிக்க முடியாது, உடைஞ்சு போய்டுவேன்”

“என்னை வேண்டாம்னு போன உன்னை நினைக்கக் கூடாதுன்னு வைராக்கியமா இருந்தேன். ஆனா மனசோட ஓரத்துல எப்பவும் நீ இருப்ப, அந்த எரிச்சல் தாங்காம தான் டைவர்ஸ் கேட்டேன்”

“கூடவே நீயும் வேற வாழ்க்கை அமைச்சிக்கட்டும்னு நினைச்சேன். எனக்கு லவ் சொல்ல வராம, காமிக்க தெரியாம இருக்கலாம், பட் ஐ லவ் யு வெரி மச்” என்றான் கரகரத்த குரலில்.

“நானும் அட்ஜஸ்ட் பண்ண முடியாம வந்தது ரொம்ப தப்பு. ரொம்ப நாள் இதை யோசிச்சு இருந்திருக்கேன். மனசு முழுக்க கில்டி கான்ஷியஸ் தான். இதுக்கெல்லாம் யாராவது வருவாங்களான்னு?”

“அவ்வளவு ஒன்னும் கில்டி கான்ஷியஸ் தேவையில்லை. நானும் இன்னும் உன்னை நல்லா பார்த்திருக்கணும். அப்போதைய என்னோட நிலைமை அதுக்கு என்னை விடலை”

“இல்லை நான் பண்ணினது பெரிய தப்பு. எந்த கல்யாணம் பொதுவா தோத்துப் போகக் கூடாது, அதிலயும் நம்ம மாதிரி வாழ்க்கையோட ஏற்ற தாழ்வுகளோட நடக்குற காதல் கல்யாணம் தோத்துப் போகவே கூடாது”

“இனம் , பணம் , பழக்க வழக்கம் ன்னு அத்தனை வித்தியாசத்தையும் மீறி நாம எல்லோரும் மனுஷங்க. அப்படி இருக்கும் போது இந்த மாதிரி கல்யாணம் தோத்துப் போகும் போது அந்த மாதிரியான விஷயங்கள் தான் வாழ்க்கையில முக்கியம்னு ஆகிடுது இல்லையா”

“நாம வாழ்க்கையில தோத்துப் போகக் கூடாது. நமக்காக இல்லைன்னாலும் இந்த விஷயங்களுக்காக” என்றாள் மிகவும் உணர்ந்து.

“லவ் யு டி” அவளை இன்னும் இறுக்கமாக அணைத்துக் கொண்டான். அவளின் இந்த சிந்தனைகளும் யோசனைகளும் விஜயை பெருமைப் படுத்தின.

“உண்மையில நீ எனக்கு வேண்டாம்னு தனியா இருந்துடலாம் தான் நினைச்சேன், ஒருவேளை நீ சந்தோஷமா இருந்திருந்தா, உன் கூட வர நினைச்சு இருக்க மாட்டேனோ என்னவோ? ஆனா நீ ஒரு கஷ்டத்துல இருக்கும் போது என்னால உன்னை விட முடியலை. என்னோட லவ் எல்லாம் அப்படியே தான் இருக்கு போல, பார்த்து நாலு நாள், அதுக்குள்ளயே திரும்பவும் நான் ஃபிளாட்” என்று அவனின் மார்பில் முகம் புதைதபடியே பேசினாள்.

சைந்தவி சொன்ன வார்த்தைகளும், அதன் தாக்கமும் அதிகமாய் இருந்த போதும், அதனையும் மீறி அவளின் உதடுகள் அவள் பேசும் போது அவனின் வெற்று மார்பில் கோலம் இட, என்னவோ இன்னும் இன்னும் வேண்டும் என்றது.

“சவீ என்னை பாரேன்” என்றான்.

நிமிர்ந்து அவனை பார்க்கவும், “நான் உன்னை கிஸ் பண்ணிக்கட்டுமா?” எனக் கேட்க,

அவனை முறைத்து பார்த்தவள், “இப்போ தானே சொன்னேன், எல்லாத்துக்கும் பெர்மிஷன் கேட்க கூடாதுன்னு”

ம்கூம், அதெல்லாம் அவனின் காதில் விழுந்தது போல தெரியவில்லை. “பண்ணிக்கட்டுமா” என்று கேட்டது அவனின் பாஷையில் பண்ணப் போகிறேன் என்பது தான் போல!

சைகையால் அவளை முகத்திற்கு அருகில் அழைக்க,

“இதேதடா” என்று பார்த்து இருந்தவளிடம், கண்களில் ஒரு யாசிப்பை காட்டினான்.

நொடியும் யோசிக்கவில்லை, அவன் சொன்னதை செய்ய, ஒரு பதட்டத்தோடு முதல் முத்தத்தை பதிக்க, அது வலியை கொடுக்க, பதித்த க்ஷணம் விலகி விட்டான்.

முகத்தினில் ஒரு இயலாமையும் வேதைனையும் தெரிந்தது.

“வலிக்குதா” என்றாள்,

“ஆம்” என்பது போல தலையாட்ட,

“பரவாயில்லை நாளைக்கு பண்ணலாம்” என்று சொல்லி, அவனின் கன்னத்தில் ஒரு இதமான முத்தம் பதித்து, மீண்டும் அவன் மீது சாய்ந்து கொண்டு, “எல்லாம் சரியாகிடும்” என்று சொல்லிக் கொண்டாள்.

அவளிற்கும்! அவனிற்கும்! இருவருக்குமாக.

Advertisement