Advertisement

ப்ரித்வி சைந்தவியிடம் எந்த பதிலும் சொல்லவில்லை. “ரித்திக்கா என்ன சாப்பிடுவா?” எனக் கேட்டவளிடம்,

“பால் இருக்கா கொடு” என்றான்.

“பால் காய்ச்ச சைந்தவி எழுந்து போய் விட, ரித்திக்கா அவனின் மடியை விட்டு எழுந்து நடக்க ஆரம்பிக்க, அவளை போக விட்டான்.

ப்ரித்வி அப்படியே அமர்ந்து கொண்டான். இப்படி ஒரு சூழலை எதிர்பார்க்கவில்லை.

தத்தி தத்தி நடந்த ரித்திக்கா விஜயின் அருகில் சென்று, அவனின் கன்னத்தை தடவ, வலியில் உடனே விழித்து விட்டான்.

அருகில் குழந்தையை பார்க்கவும், மலர்ந்து சிரிக்க, அவளும் உடனே சிரித்தாள். மெதுவாக எழுந்து அமர்ந்தவன், கை நீட்ட, அவனின் கையை தன் தளிர் கரங்களால் குழந்தை பிடிக்க, அப்படியே அவளை தூக்கி தன் மடியில் வைத்துக் கொண்டான்.

ரித்திக்காவும் சமர்த்தாக அமர்ந்து கொண்டாள். விளையாட்டு பொருள் எதுவும் இல்லாமலேயே வெறுமனே அமர்ந்திருக்க, விஜயும் அவளை மடியில் வைத்துக் கொண்டே ப்ரித்வியை பார்க்க, அவன் எங்கோ பார்த்துக் கொண்டிருந்தான்.

“அம்மாடி, முதுகுல டின்னு வாங்கின நான் கூட இந்த எக்ஸ்ப்ரஷன்ல இல்லை. இவனை..” என்பது போல பார்த்தவன், “அப்பா கூப்பிடு” என்று ரித்திக்காவிடம் சொல்ல,

“பா” என அவள் சப்தம் கொடுக்க, அப்போதும் ப்ரித்வி கலையவில்லை. கிட்சன் உள்ளே இருந்து சைந்தவி தான் வந்து பார்த்தாள்.

ரித்திக்கா விஜயின் மடியில் இருப்பதை பார்த்து இன்னும் முகம் சுருங்கி போயிற்று. “என் போட்டோ ஏதாவது வீட்ல காமிச்சு என் கிட்ட போகக் கூடாது சொல்லியிருப்பாங்களோ” என நினைக்க கண்களில் நீர் மீண்டும் தளும்பியது.

எல்லோருக்குமே பால் விட்டு எடுத்து வந்தவள், ப்ரித்வியிடம் அவனுக்கு ரித்திக்காவிற்கும் கொடுத்தவள், “அவளுக்கு எவ்வளவு சூடு இருக்கணும்” என

“நான் ஆத்திக்கறேன்” என கையினில் வாங்கியவன். எங்கே மகள் எனத் தேட, அவள் விஜயின் மடியினில் ஆனந்தமாய் அமர்ந்திருந்தாள்.

“என்கிட்டே மட்டும் வர மாட்டேங்கறா. வீட்ல என் ஃபோட்டோ காமிச்சு போகவேண்டாம் சொல்லியிருப்பாங்களோ?”

“லூசு” என அவளைக் கடிந்தவன், “அவ யார் கிட்டயும் போக மாட்டா. ஆனா பார்த்த முதல் நாளே அவன் கிட்ட போனா, இப்போ ரெண்டாவது தடவை பார்க்கறா, போயிட்டா. என் வீட்டு பொண்ணுங்க எல்லாம் அவனை பார்த்து ஃபிளாட் ஆகிடறாங்கன்னு நான் கவலைல இருக்கேன். ஃபோட்டோ பார்த்து சொல்லிக் குடுக்கறாங்கலாம்” என கடிந்தான்.

பதில் எதுவும் பேசாமல் எழுந்து விஜயிடம் பால் கொடுக்கப் போக, ரிதிக்கா அந்த டம்பளரை பிடிக்க வர “சுடும்” என இழுத்துக் கொண்டாள்.

ப்ரித்வியும் விஜயிடம் பேசவில்லை, விஜயும் ப்ரிதிவியிடம் பேசவில்லை.

“தை தை” என்ற ரித்திக்காவின் சப்தம் மட்டும் கேட்டது.

“அவள் பால் குடிக்கணும்” என்று சைந்தவி சொல்லவும்,

“வாங்கி என் கிட்ட கொடு” என்றான் விஜய்.

ப்ரித்வி ஆற்றி வைத்திருந்ததை வாங்கி விஜயிடம் கொடுக்க, பொறுமையாக சிப் சிப் பாக ரித்திகாவிற்கு கொடுக்க, ப்ரித்வியின் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள் சைந்தவி.

ஒரு ஆதங்கத்தோடு ரித்திக்கா விஜயின் மடியில் அமர்ந்து பால் குடிப்பதை பார்க்க, அவளின் பார்வையை விஜயும் கவனித்தான்.

ப்ரித்வி அவளிடம் மெதுவாக “என் புத்திசாலி தங்கையையே நிமிஷத்துல காலி பண்ணிடறான். அவ குழந்தை அவ எம்மாத்திரம்” என்றவன், “என்ன அவன் முகத்துல காயம்” எனக் கேட்டான்.

“ஏதாவது வீர தீர சாகசம் பண்ணியிருப்பான்” என்று முடித்துக் கொண்டாள். அவளுக்கு எதுவும் தெரியாது, தெரியாமல் விஜய் போலிஸ் ஸ்டேஷனில் அடி வாங்கினான் என்று சொல்ல மனதில்லை.

அமைதியாக அமர்ந்து கொண்டாள். பால் குடித்த குழந்தை விஜயின் டி ஷர்டில் முகம் துடைக்க விஜய் ஆச்சர்யமாக பார்க்க “என்கிட்டே அப்படி பண்ணுவா?” என்று ப்ரித்வி சொல்ல குழந்தையை மென்மையாக அணைத்துக் கொண்டான்.

“நான் உனக்கு இங்க வர்றதுக்கு ஃபோன் பண்ணனும் நினைச்சேன் ப்ரித்வி, ஆனா சந்தர்ப்பம் அமையலை. சொல்லாம வந்துட்டேன், சாரி!” என்றான்.

“எவ்வளவு நாள் இருப்ப?” என்று ப்ரித்வி கேட்க,

“என்ன கேள்வி இது?” என்பது போல சைந்தவி முறைத்து பார்த்தாள்.

“சைந்தவி விடற வரைக்கும் இப்போதைக்கு இருப்பேன். சைந்தவி விடலைன்னாலும் எப்போவுமே இருப்பேன்” என்றான் சற்று திமிராகவே.

“நல்லா பேசற நீ! ஆனா எனக்கு புரியலை!”

“உனக்கு புரிஞ்சு நீ என்ன பண்ண போற” என்றான் அதிகாரமாக.

“ஆரம்பிச்சிட்டான்டா இவன்” என ப்ரித்வி பார்த்திருந்தான்.

“ஏன் இப்படி பேசற?” என சைந்தவி இடை புகுந்து விஜயிடம் கேட்டாள்.

“அவன் அப்படி பேசினா, நான் இப்படி தான் பேசுவேன், ஒரு தடவை என்னோட நாலேட்ஜ் இல்லாம எல்லாம் நடந்தா அப்படியே விட்டுவேனா? ஒரு வார்த்தை கூட தனியா இருக்கேன்னு இவன் சொல்லலை. இவனோட போனேன்னா, இவன் பார்த்துக்குவான்னு தானே நான் நினைப்பேன்” முகம் வலியில் சுருங்க சுருங்க பேசினான்.

“என்ன பார்க்கலை அவன்? அவன் தான் பார்த்துக்கிட்டான்” என சைந்தவியும் பேசினாள்.

“என்ன இருந்தாலும் நீ தனியா இருக்குறது, எனக்கு தெரிஞ்சிருக்கணும்”

“அது நீயே தெரிஞ்சிருக்கணும், சும்மா ப்ரித்வியை தப்பு சொல்லக் கூடாது” என்றாள் சைந்தவியும் கோபமாக.

பின்பும் விஜய் பேச வர, “ஷ், பேசாதே!” என சைந்தவி அவனை அதட்ட, பின்பு விஜய் பேசவில்லை. ஆனால் மனது எப்போதையும் விட வருத்தம் கொண்டது.

“என்னுடைய மனைவியுடம் இருக்கிறேன். எத்தனை நாள் இருப்பாய் எனக் கேட்கிறான்”. தன்னையே மிகவும் கீழாக உணர்ந்த போதும் “உன் தங்கை தான் சென்றாள்” என்று ஒரு வார்த்தை கூடச் சொல்லவில்லை என்பதை விட அவனின் மனதிலும் அது தோன்றவில்லை.

சில கணமான நிமிடங்கள்.

ப்ரித்வி பின் நேரமாகிறது என எழுந்து கொள்ள, குழந்தையை மீண்டும் மென்மையாக அனைத்து கீழே விட்டான். அவனும் எழுந்து ரித்திகாவின் கை பிடித்துக் கொண்டவன்,

“அந்த பக்கம் கை அத்தை பிடிச்சிக்குவாங்க” எனக் குழந்தைக்கு சொல்லி, சைந்தவியிடம் பிடி என்பது போல சைகை செய்தான். அவள் தயங்கி தயங்கி பிடிக்க எந்த எதிர்ப்புமில்லாமல், குழந்தை கை பிடித்துக் கொண்டாள்.

“போகலாமா” என மெதுவாக விஜய் நடக்க, “ஹாஸ்பிடல் போயிட்டு வந்தாச்சா?” என்றான் ப்ரித்வி.

“இல்லை போகலை” என்றான் விஜய்.

“போகலாமா”

“வேண்டாம், தேவைன்னா போயிக்கறேன்” என்று விட்டவன்,

வெளியில் வந்து “அத்தை கை பிடிச்சி குட்டி ஏஞ்சல் கீழ வரைக்கும் போவீங்களாம்” என சொல்லி கைவிட்டவன், ப்ரித்வியிடம் ஒரு தலையசைப்போடு உள்ளே வந்து விட்டான்.

ரித்திக்காவும் சமர்த்தாக அத்தையின் கை பிடித்து கீழே வரை வந்தாள். “நான் அவன் பின்னாடி போகக் கூடாது, அவனை பிடிக்கக் கூடாதுன்னு நினைச்சாலும், அவன் பின்னாடி தான் போறேன்! அவனை தான் பிடிக்குது!” என்றாள் ப்ரித்வியை பார்த்து.

ப்ரித்வி பதில் சொல்லாமல் ஒரு பார்வை மட்டும் பார்த்தான்.

“எல்லாம் சரியாகிடும்னு நம்பிக்கை இருக்கு” என்றாள் ப்ரித்வியை பார்த்து.

“எனக்கு நீ நல்லா இருக்கணும்! அதையும் விட உன்னை வேண்டாம்னு சொன்ன எல்லோர் முன்னாடியும் நிமிர்ந்து நடக்கணும், சரியா! காதல், எனக்கு அதை பத்தி பெருசா தெரியலை. ஆனா எப்படி நடந்தாலும் கல்யாணம் கல்யாணம் தான்!

“அதை தோத்துப் போக விடாத, காதல் கல்யாணம் பண்றது பெருசில்லை. அதை நிலைக்க வைக்கணும். என்னோட தப்பும் இருக்கு. உன்னை கூட்டிட்டு போன பிறகு உன்னை வீட்டுல அப்பாவும் அம்மாவும் சேர்க்கலைன்றப்போ விஜய் கிட்ட சொல்லியிருக்கணும். உன்னை தனியா விட்டிருக்க கூடாது!” என்றான்.

“எங்கே தனியா விட்ட? முன்ன காலேஜ் ஹாஸ்டல்ல இருந்தேன். திரும்ப வொர்கிங் விமன்ஸ் ஹாஸ்டல்ல”

“சைந்து” என்று அதட்டல் இட்டவன், “என்னால தான் இப்படி ஒரு பிரிவோன்னு நானே எப்பவும் யோசனைலை இருக்கேன், ப்ளீஸ்..” என்ற கெஞ்சலில் முடித்தான்.

“உன்னோட போன் சுவிட்ச் ஆஃப் பண்ணாதே, மதியம் எல்லாம் பயந்துட்டேன். அப்புறம் ப்ரியா தான் ஹெல்ப் பண்ணினா. அவளுக்கு நாளைக்கு தேங்க்ஸ் சொல்லிடு”  என்ற தலையசைப்போடு அவனுக்கு விடை கொடுத்தாள்.

Advertisement