Advertisement

அத்தியாயம் பன்னிரண்டு :

காதல் கைக்குள் அடங்கா காற்று! சுவாசமும் அதுதான் நேசமும் அதுதான்!

வீட்டிற்கு வந்ததும் விஜய் சோஃபாவில் அமர்ந்து கொள்ள, “இந்த டிரஸ் வேண்டாம் மாத்திட்டு உட்கார்ந்துக்கோ” என்றாள்.

“வேற இல்லையே”

“நான் வாங்கினேன், எனக்கு சைஸ் தெரியலை. சோ ரெண்டு சைஸ் வாங்கினேன். டி ஷர்ட்டும் த்ரீ ஃபோர்த்சும் இருக்கு. அப்புறம் என்ன வேணுமோ நாளைக்கு வாங்கிக்கலாம்”

“ம்ம்” என்பது போல தலையசைத்தவன், உடைகளை எடுத்துக் கொண்டு போனான்.

வெகு நேரம் வரவில்லை. பதட்டமாய் சைந்தவி பார்த்துக் கொண்டிருந்தாள்.

விஜய் காலையில் அவன் வீடு சென்றதுமே ஸ்டேஷன் அழைத்து செல்லப்பட்டிருந்தான். அதனால் குளிக்க வெல்லாம் இல்லை.

குளித்து உடை மாற்றிக் கொள்ளலாம் என நினைத்து  குளிக்க ஆரம்பிக்க, பச்சை தண்ணீர் தான் இருந்தாலும் அடிபட்ட இடங்கள் எரிந்தது. வலி தாங்க முடியவில்லை. ஒன்றும் நடவாதது போல அவன் காட்டிக் கொண்டாலும், அந்த இன்ஸ்பெக்டர் அப்படி அடித்திருந்தான்.

அழுகை வந்தது. யாரோ? என்னவோ? எங்கேயும் இவன் இல்லை! யாருக்கும் யாருக்குமோ பிரச்சனை என்றால் இவனை அடிப்பார்களா? இப்படி ஒரு சூழல் எல்லாம் சந்தித்ததில்லை. அவன் இதில் இருந்திருந்தால் இத்தனை வலித்திருக்காதோ என்னவோ?

முன்பெல்லாம் ஏரியாவில் ஏதாவது அடி தடி என்றால் முன் நிற்பான். கல்லூரி படிக்கும் சமயம் அப்படிதான். சைந்தவி அவனின் வாழ்க்கையில் வந்த பிறகு அது குறைந்தது. அவள் சென்ற பிறகு முற்றிலும் நின்றே விட்டது!

காதல் திருமணமோ? என்ன திருமணமோ? மனைவி விட்டு சென்று விட்டால் என்பது கேவலம் அல்லவா! அதனால் எல்லோரிடம் இருந்து ஒதுங்கிக் கொண்டான் ஏரியாவில்.

முன்பு போல இருந்திருதால் இன்ஸ்பெக்டர் இவனை ஸ்டேஷன் வர சொல்லவே யோசித்திருப்பான். இப்போது விஜய் மிகவும் அமைதியாகிவிட, யாருக்கும் அவனை தெரியவில்லை.

ஒரு சாதாரண மனிதனின் நிலை இதுதானா? மனம் நைந்து போயிற்று!

பணமில்லாதவர்களும் எளியவர்களும் உலகில் வாழ தகுதியற்றவர்களா என்ன?

ஒரு வழியாக குளித்து முடித்து சைந்தவி கொடுத்த உடையை அணிந்து வந்து அமர்ந்தான். சரியாக தான் இருந்தது.

தலையில் இருந்து ஈரம் சொட்டியது. “சாப்பிடறையா” என்றவளிடம்,

“நீ எப்படி அங்கே வந்த” என்று பதில் கேள்வி கேட்டான்.

“சாப்பிடு பேசலாம்” என விரைவாக, தோசையும் சட்னியும் வைத்துக் கொடுத்தாள்.

அமைதியாக உண்ணத் துவங்கினான். உணவை மெல்ல மிகவும் சிரமமாக இருந்தது,

“ரொம்ப வலிக்குதா?” என்றாள் இவனின் சிரமத்தைப் பார்த்து.

“ம்ம்” என தலையசைக்க,

“டாக்டர் கிட்ட போகலாமா?”

“வேண்டாம், வலிக்கு மாத்திரை போட்டுக்கறேன். ஏதாவது இருக்கா?”

“ம்ம்ம், வாங்கிட்டு வந்துட்டேன்” என்றாள் அதற்கும்.

“எல்லாம் இவ்வளவு யோசிச்சு செய்யற, அப்புறம் யாராவது வந்து கூப்பிட்டா போலிஸ் ஸ்டேஷன் வந்துடுவியா” என்றான் ஆதங்கமாக.

“எனக்கு நீ ன்னு வரும் போது எந்த யோசனையும் ஓடறதில்லை” என்றாள் ஆழ்ந்த குரலில்.

“அது அப்போ, இப்போ கூடவா முட்டாள்தனம் பண்ணுவ!”

“அப்போ, இப்போன்னு இல்லை. எப்போவுமே நான் இப்படி தான் போல. எனக்கே இதுவரை தெரியலை” என்றவள் எழுந்து போய்விட்டாள். செல்லும் அவளையே பார்த்திருந்தான்.

பின் அவளுக்கும் இரு தோசை சுட்டுக் கொண்டு வந்து அமர, அப்போது தான் இரண்டு தோசை சாப்பிட்டு இருந்தான்.

“போதும் சவீ, சாப்பிட முடியலை!”

“இன்னும் ஒன்னாவது சாப்பிடு, சோர்வா இருந்தா வலி அதிகமா இருக்கும்” என்றாள்.

“அப்படி என்ன உனக்கு என்கிட்டே பிடிச்சது?” என்றான் திடீரென்று. உணவருந்தி கொண்டிருந்தவள் தலையை நிமிர்த்த அவனை பார்த்தாள்.

அவனையே பார்த்திருந்தாள். முகம் ஒரு பக்கம் வீங்கி, உதடும் வீங்கி, கண்கள் சற்று சிறியதாகி என முகமே ஒரு மாதிரி இருந்த போதும், அந்த முகத்தை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போலத் தான் தோன்றியது.

என்ன பிடித்தது இவனிடம் எல்லாம் விட்டு போனேன்,  சில வருடங்களாக அவள் அவளுள் கேட்டுக் கொண்டிருக்கும் கேள்வி, விடை தான் இல்லை!

அவனுடைய தலையில் இன்னும் தண்ணீர் சொட்ட “நீ தலையை சரியா துவட்டலை” என்றாள்.

சைந்தவி அவனை விடாது பார்த்தது மனதில் ஒரு இதத்தை கொடுத்திருக்க, அவளின் பதிலில் அவனையும் மீறி சிரிக்க ஆரம்பித்தான்.

சிரிக்கும் போது வலி அதிகமான போதும் முகத்தை சுருக்கிக் கொண்டே சிரித்தான்.

“வலிக்கப் போகுது” என சைந்தவி பதறினாள்.

ஒரு வழியாக சிரிப்பை அடக்கியவன், “நான் தலையை துவட்டாததினால உனக்கு என்னை பிடிச்சதா” என்றான்.

“ஒரு பக்கம் வாய் நல்லா இருக்குன்னு பேசின, அந்த பக்கமும் டேமேஜ் பண்ணிடுவேன். ஒழுங்கா சாப்பிடு!” என்ற செல்ல மிரட்டலோடு சாப்பிடுவது போல குனிந்து கொண்டாலும் அவளின் முகத்திலும் புன்னகை.

இரவு ஏழு மணியை நேரம் நெருங்கிக் கொண்டிருக்க, உண்டு முடித்ததும், அவனுக்கு ஒரு வலி நிவாரண மாத்திரை கொடுத்தாள். பின் சாமான்கள் தூக்கி கிட்சன் சென்றாள்.

அதனை கழுவிக் கொண்டே ஹாலை பார்த்த போது சோபாவில் படுத்து கொண்டிருந்தான்.

“அங்க ரூம்ல படுத்துக்கோ” என குரல் கொடுத்தாள்.

“இல்லை, எனக்கு இங்கயே வசதியா இருக்கு” என்று விட்டான்.

அதற்கு மேல் சைந்தவி வற்புறுத்தவில்லை. ஆனால் வந்தவள் சோஃபாவில் இருந்து நீட்டிக் கொண்டிருந்த விஜயின் கால்களுக்கு அங்கிருந்த டீபாயை நகர்த்தி முட்டுக் கொடுத்து, அவன் கால் அழுந்தாமல் இருக்க ரூமில் இருந்து ஒரு தலையணை எடுத்து வந்து வைத்தாள்.

“நீ இப்படி எல்லாம் பண்ணப் பண்ண என்னோட குற்ற உணர்ச்சி அதிகமாகிட்டே போகுது” என்று ஒரு பெருமூச்சோடு சொன்னான்.

அதற்கு பதில் சொல்லாமல் “நீ தூங்கு, நான் முன்ன பூட்டிட்டு பக்கத்துல இருக்குற கடைக்கு போயிட்டு வர்றேன், கொஞ்சம் சாமான் வாங்கணும்!”

“நைட் ஆகிடுச்சு”

“இல்லை, ஏழு மணிதான் ஆகுது. பக்கம் தான்” என அவனுக்கு வசதி செய்து கொடுத்து, தலை துவட்டு என்று ஒரு டவலுடன் நின்றாள்.

துவட்டி விட ஆசை இருந்த போதும், சைந்தவி அதனை செய்யவில்லை. துவட்டி விட கேட்க ஆசை இருந்த போதும் விஜயும் கேட்கவில்லை. மௌனமான சில நொடிகள்.

சைந்தவி கிளம்பிவிட, பின் சாமான்கள் வாங்கி அவள் வந்த போது ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் விஜய்.

அப்படியே அமர்ந்து அவனை பார்த்திருந்தாள். “வா என கூட்டி வந்து விட்டேன். இருப்பானா? போய் விடுவானா? நான் செய்தது சரியா? தவறா? பார்த்து நான்கு நாட்கள் தான் ஆகின்றது.

அதற்குள் என்ன செய்து வைத்திருக்கின்றேன். நான் கடக்கும் பல ஆண்களில் இவனும் ஒருவன்! என்ன ஈர்த்தது இவனிடம் என யோசித்த நான்கே நாட்களில் மீண்டும் இவனை வாழ்க்கையோடு இணைத்துக் கொண்டேன்! நிலைக்குமா? மீண்டும் சென்று விடுவானா?”

“அவனின் வீட்டிற்கு போனால், நிச்சயம் உன்னை கூப்பிடுவான். ஆனால் இப்போதும் என்னால் முடியுமா?” யோசிக்க யோசிக்க உடல் தளர அப்படியே அமர்ந்து விட்டாள்.

கிட்ட தட்ட ஒரு மணிநேரம் அமர்ந்திருந்தாள் உணர்வின்றி!

வீட்டின் அழைப்பு மணி அடிக்க, யாராயிருக்கும் என தோன்றிய போதும், இன்னும் அடித்தால் விஜயின் உறக்கம் கலைந்து விடுமோ? என வேகமாக கதவை திறந்தாள்.

ப்ரித்வி கையில் ரிதிக்கா! கதவை முழுவதுமாக திறந்தவளின் முகத்தினில் அப்படி ஒரு பரவசம்.

ஆம்! இதுவரை ரித்திக்காவை நேரில் பார்த்ததில்லை. திறந்ததும் கை நீட்ட, குழந்தை முகம் திருப்பி அப்பாவிடம் புதைந்தாள்.

“பாருடா இவளை” என சலிப்பது போல பேசியவள், “உள்ள வா ப்ரித்வி” என நகர்ந்து வழி விட,

உள்ளே வந்தவன் அங்கே விஜய் சோஃபாவில் உறங்கிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ந்து நின்று விட்டான்.

அவனின் அதிர்ந்த பார்வையை பார்த்து “நான் உனக்கு ஃபோன் பண்ணினேன் அது சுவிட்ச் ஆஃப்” என்றாள்.

“அதுக்கு அப்புறம்  நான் உன்னை எத்தனை முறை கூப்பிட்டு இருக்கேன் பாரு. நீ ஃபோன் எடுக்கலைன்னு தான் வந்தேன்” என்றான்.

“உட்காரு” என்று அங்கிருந்த சோபாவை காட்டினாள். பின் அவளுக்கு அமர இடமிலாமல் சைந்தவி தரையில் அமர, ப்ரித்வியும் அருகே அமர்ந்தவன், அமைதியாக அவள் பேசுவதற்கு காத்திருந்தான்.

“என்ன பேசுவது?” என்று சைந்தவிக்கு தெரியவில்லை. ரித்திக்காவை இழுக்க, அவள் அப்பா மடியை விட்டு இறங்குவேனா என்றாள்.

“அத்தை டா பட்டு” என ப்ரித்வி அவளுக்கு சொல்லிக் கொடுக்க, “தை தை” என்றபோதும் சைந்தவியிடம் போகவில்லை.

அதிலேயே சைந்தவியின் முகம் சுருங்கி விட, அதற்கு பின் பேசும் மனநிலை இல்லாதவளாக, “ஒரு பிரச்சனை அவனுக்கு வான்னு கூப்பிட்டேன், வந்துட்டான்!” என முடித்துக் கொண்டாள்.

Advertisement