Advertisement

அருகில் இருந்தவர்கள் வேகமாக திரும்ப இவர்களை நோக்கி ஓடி வந்து, “ண்ணா, விடுண்ணா” என பிரித்து விட்டனர்.

“ப்ச்” என சலித்து மூர்த்தியை இறக்கி விட்டவன். அவனின் சட்டையையும் சரி செய்து, “என்னை வுட்டுடு, நீ கிளம்பு, உன் பாசத்தை பொழியாத!” என்றான் சலிப்பாய்.

அதற்குள் மூர்த்தியின் மொபைல் அடிக்க, பூங்கோதை தான் அவனை அழைத்து இருந்தாள். மூர்த்தி எடுக்கவும் “ஃபோனை அவன் கிட்ட குடுங்க” என,

விஜயிடம் நீட்ட, “இன்னாடா நீ, உன்னை வெளில எடுத்தா, நீ அவர் மேல கை வைப்பியா” என்றாள் கோபமாக.

“அட, சட்டையை கூட நான் இன்னும் விடலை. அதுக்குள்ள உனக்கு யாரு சொன்னா?” என ஆச்சர்யம் போல வினவியவன், “அவன் வெளில எடுத்தானா? அவனால தான் நான் உள்ள போனேன். வை போனை!” என்று வள்ளென்று விழுந்தான்.

“இவளை என்கூட பேச விட்டுடாத. இவளை என்னால அடிக்க முடியாது. நீ தான் வாங்குவ” என்று மூர்த்தியை பார்த்து சாதரணமாகவே சொன்னவன், நடக்க ஆரம்பித்து உடனே திரும்பினான்.

என்னவோ ஏதோவென்று வேகமாக மூர்த்தி அருகில் போக, “நீ என்ன பண்றேன்னு பூவுக்கு அடுத்த செகண்டு நியுஸ் போகுது, உன் பொஞ்சாதி கிட்டன்னாலும் உனக்கு நடக்குறதை அடுத்த செகண்ட் சொல்றான்னா, நாளைக்கு வேறயும் சொல்வான், வேற ஆளுங்க கிட்டயும் சொல்வான். இந்த மாதிரி ஆளுங்களை கூட வெச்சிக்காத, உனக்கு சேஃப்டி இல்லை” என்று சொல்லி, நடந்து கொண்டே அந்த ரோடின் முனைக்கு வந்தான்.

அங்கே சைந்தவி நின்று கொண்டிருந்தாள். சற்று தள்ளி ப்ரியாவும் விஷ்ணுவும்.

அவள் சென்றிருப்பாள் என்று நினைத்தவன், அவளை பார்த்ததும் அதிர்ந்தான். “நீ என்ன பண்ற இங்க?” என்று வேகமாக அவளிடம் வந்தவன்,

“கிளம்பு முதல்ல” என்று அதட்டினான்.

சைந்தவி அசையாமல் நின்றாள்.

“யாராவது கூப்பிட்டா வந்துடுவியா? அறிவு வேண்டாம்! எனக்கு அவனுக்கு ஒரு சம்மந்தமுமில்லைன்னு சொல்ல முடியாது” என்று திட்ட, அதற்கும் பதில் பேசவில்லை.

அதுவரை ப்ரியாவை விஷ்ணு திட்டிக் கொண்டிருந்தான். “ஒரு ஏ சீ பீ நான் என்னை வந்து ரோட்ல நிக்க வெச்சு வேடிக்கை பார்த்துட்டு இருக்க. என்ன ஃபிரண்ட் ஷிப் இது? இந்த மாதிரி பிரச்சினையான ஆளுங்களோட” என முதலில் சைந்தவியை திட்டியவன், பின் “அந்த பொண்ணு எப்படி இந்த மாதிரி ஆளை லவ் பண்ணுச்சு” என்று விஜயையும் திட்டி கொண்டிருந்தான் ஏகத்திற்கும்.

ப்ரியா அவனிடம் பளிச்சென்று சொன்னது, “கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை”

“என்னை கழுதைன்றியா?”

“புரியலையா?” என சிரித்தவள், “எனக்கு உங்களை வீட்ல பார்த்து உடனே முடிவு பண்ணிட்டாங்க. ஆனா இவ ஃபிரண்ட்ஷிப் வாங்க நான் எத்தனை நாள் இவ பின்னாடி சுத்தியிருப்பேன் தெரியுமா? உங்களை விட அவ பின்னாடி சுத்தியிருக்கேன்!” என விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்த போது தான் விஜய் வந்தான்.

இருவரும் அவர்களை வேடிக்கை பார்த்திருந்தனர்.

சைந்தவியின் இந்த பதில் பேசா பாவனையில் விஜய் நிதானத்திற்கு வந்திருந்தான். “கிளம்பு சவீ” என்றான் பொறுமையாக.

மெதுவான குரலில் அவள் எதோ சொல்ல, அவனுக்கு கேட்கவில்லை “சத்தமா பேசு” என்றவனிடம்,

“என்னவோ சாவி எல்லாம் கேட்ட?”

முதலில் அவள் சொல்வது புரியவில்லை. புரிந்த பின், மனதில் அலையாய் ஒரு மகிழ்ச்சி. ஆனால் அதனை முழுமையாக அனுபவிக்க முடியவில்லை. கூடவே இப்படி ஒரு சூழ்நிலையில் செல்லவும் விருப்பமில்லை.

“நீதானே வரக் கூடாது சொன்ன” என்றான் வேண்டுமென்றே.

“நான் சொன்னா? நான் சொல்ற எல்லாம் நீ கேட்டுடிவியா! இல்லை கேட்டு இருக்கியா?” என்றாள் தீர்க்கமாக.

“அது, அது இப்போ பிரச்சனை” என தடுமாறினான் விஜய். எதிலும் சைந்தவியை இழுத்து விட அவனுக்கு மனதில்லை.

“நீ எப்போ பிரச்சனையில்லாம இருந்திருக்க, இல்லை அது எனக்கு தெரியாம இருந்திருக்கா?” என்றாள் அமைதியாகவே.

அவளை விட்டு சுற்றும் முற்றும் பார்த்தவன், அங்கே விஷ்ணுவும் அருகில் ஒரு பெண்ணும் நிற்க பார்க்க, அவர்களின் அருகில் சென்றவன்,

கை கூப்பி வணங்கி “தேங்க் யு” என்றவன், “இது ரொம்ப சின்ன வார்த்தை, ஆனா நீங்க இன்னைக்கு பண்ணினது பெரிய உதவி, ரொம்ப ரொம்ப நன்றி” என்றான் விஷ்ணுவையும் ப்ரியாவையும் பார்த்து.

“அச்சோ அண்ணா, கையை இறக்குங்க! நீங்க யார்ன்னு எனக்கு தெரியாது. ஆனா சைந்தவியோட ஐ டீ கார்ட் பார்க்கும் போதெல்லாம் விஜயன்ர ஒருத்தரை பார்க்க அவ்வளவு ஈகரா இருப்பேன்”

“இதெல்லாம் ஒன்னுமேயில்லை. என்னால முடிஞ்சது சொன்னேன். இவரும் வந்துட்டாரு அவ்வளவு தான்!” என்றவள் அவனின் தோற்றம் பார்த்து “ரொம்ப வலிக்குதா?” என்றாள்.

விஜயினால் அதற்கு பதில் சொல்ல முடியவில்லை. ஒரு புன்னகையை மட்டும் சிந்தினான். “அவளை வீட்ல விட்டுடுங்க. என்னை சுத்தி என்ன நடக்குதுன்னு எனக்கே தெரியலை. இப்போ போய் அவளோட போக வேண்டாம்ன்னு பார்க்கிறேன்” என விஜய் சொல்ல,

சைந்தவி விஷ்ணுவிடம், “சர், நீங்க இவளை வீட்ல விட்டுடறீங்களா. நான் இவளோட ஸ்கூட்டி எடுத்துக்கட்டுமா?” என்று கேட்டாள்.

விஷ்ணுவின் பதிலுக்காக எல்லாம் ப்ரியா காத்திருக்கவில்லை. “எடுத்துக்கோ” என சாவியை உடனே கொடுத்தாள். ஆனால் சைந்தவி வாங்காமல் விஷ்ணுவை பார்க்க,

“ஹேய், இது டூ மச்! அவரை ஏன் பார்க்கற, என்னை விடாம எங்க போய்டுவார்?” என்றாள்.

“அதுக்கு பார்க்கலை, ஸ்கூட்டி வாங்கிட்டு அதனால எதுவும் உனக்கு ப்ராப்ளம் வந்திடக் கூடாதுன்னு அவர் நினைக்கலாம் இல்லையா?” என சைந்தவி பேச,

இலகுவான ப்ரியாவின் முகம் நொடியில் மாறி “எனக்கு தெரியாமல் எதுவும் பேசிவிட்டாயா?” என விஷ்ணுவை பார்த்தாள்.

“ஐயோ நான் எதுவும் நினைக்கலை, வேணும்னா என்னோட பைக் கூட ஓட்டத் தெரிஞ்சா எடுத்துட்டு போங்க!” என அவசரமாக விஷ்ணு சொல்ல,

“ம்ம் அது” என்றாள் ப்ரியா வாய் விட்டே!

“தேங்க் யு” என சைந்தவி ஆத்மார்த்தமாக சொன்னாள்.

“எனக்கு தேங்க்ஸ் எல்லாம் வேண்டாம்” என்று ப்ரியா முறுக்கினாள்.

“என்ன திடீரென்று?” என்று சைந்தவி புரியாமல் பார்க்க, அருகில் வந்த பிரியா, சைந்தவியின் கன்னத்தில் முத்தமிட்டாள்.

சைந்தவியின் கண்களில் நீர் தளும்பியது. “இப்படி எல்லாம் பண்ணாத, நிறைய டைம் உன்னை நான் மைன்ட் பண்ணவே மாட்டேன்!”

“நீ என்னை மட்டுமில்ல, யாரையுமே மைன்ட் பண்ண மாட்ட. இது ஒரு விஷயமே இல்லை!” என்று விட்டாள்.

சைந்தவி அவளின் ஸ்கூட்டியில் அமர்ந்து ஸ்டார்ட் செய்தவள் திரும்பி விஜயை பார்த்தாள்.

“நீ போ சவீ, இந்த ப்ராப்ளம் எல்லாம் கொஞ்சம் செட்டில் ஆகட்டும்!”

ம்கூம்! வண்டி நகரவேயில்லை, ஒரு நிமிடம் போல நின்று பார்த்தான், ப்ரியாவும் விஷ்ணுவும் சுவாரசியமாய் இவர்களை தான் பார்த்தார்கள்!

அதற்கு மேல் முடியாதவனாக விஜய் சைந்தவியின் பின் அமர்ந்தான். சைந்தவி ப்ரியாவையும் விஷ்ணுவையும் பார்த்து தலையசைத்து ஸ்கூட்டியை நகர்த்தினாள்.

“உன் ஃபிரண்ட்க்கு செம பிடிவாதம் போல” என விஷ்ணு பேசப் பேச, ப்ரியா அவனிடம் ஒண்டினாள். ப்ரியாவின் மீது பார்வை பதித்திருந்த விஷ்ணு சுற்றிலும் பார்வையை விரட்ட,

அங்கே ஒரு இருபத்தி ஐந்து பேராவது இருப்பர்.

“எங்கே இருந்தாங்க இவனுங்க எல்லாம்?” என விஷ்ணு விழிக்க,

“ஏ சீ பீ உனக்கே தெரியலை. எனக்கு எப்படி தெரியும்? கொஞ்சமாவது அலர்ட்டா இரு” என்ற ப்ரியாவின் வார்த்தையை காதில் வாங்காமல் பைக்கை கிளப்பியவன், “ஏறுடி முதல்ல, இந்த இடத்தை விட்டு கிளம்பலாம்! இல்லை எனக்கு இவனுங்களுக்கும் கனக்ஷன்னு யாராவது சொல்லிறப் போறாங்க?” என்றான்.

“என்ன போலிசோ?” என்று சலித்துக் கொண்டே ப்ரியா ஏறினாள்.

“கிரிமினல்ஸ் விட போலிஸ் தாண்டி இப்போல்லாம் ரொம்ப பயப்பட வேண்டியிருக்கு” என பைக்கை நகர்த்தினான்.

அங்கே மூர்த்தியிடம் “ண்ணா, விஜயண்ணன் அண்ணியோட சேர்ந்துட்டார் போல. அண்ணியோட போறாரு” என்றான் ஒருவன். சுற்றிலும் எல்லோரும் நின்றனர்.

“அந்த பொண்ணு மாதிரி தான் தெரியுது” என்று மூர்த்தியும் சொல்ல,

“அவங்க தாண்ணா. நான் அவங்க ஸ்டேஷன் படி ஏறும்போது பக்கத்துல பார்த்தேன்”

“என்னவோ அவன் நல்லா இருந்தா சரிடா. என் பிரச்சனையில இந்த இன்சு அவனை இழுத்து விட்டுட்டான். இப்போ வேண்டாம் ஆனா அந்த இன்சு வை சும்மா விடக் கூடாது” என சொல்லிக் கொண்டே கிளம்பினர்.

அங்கே சைந்தவி ஸ்கூட்டியை ஒட்டிக் கொண்டிருக்க, பின்னால் அமர்ந்திருந்த விஜய்க்கு ஒவ்வொரு அணுவும் வலித்தது, உடலும் சரி! மனமும் சரி!

ஸ்கூட்டியை ஓரிடத்தில் நிறுத்தியவள் “ஒரு நிமிஷம்” என்றாள்.

விஜய் இறங்க, வேகமாக சென்று அவனிற்கு ஒரு பிரெஷ் ஜூஸ் வாங்கி வந்து “குடி” எனக் கொடுத்தவள், அடுத்த நொடி திரும்ப காணாமல் போனாள். வேகமாக அவனால் குடிக்க முடியவில்லை. ஆனாலும் சில்லென்ற ஜூஸ் தொண்டையில் இதமாய் இறங்க மெதுவாக குடித்தான்.

அவன் குடித்து முடிப்பதற்குள் சில கவர்களுடன் வந்தவள் “போகலாம்” என்றாள்.

“உனக்கு” என்றவனிடம்,

“வேண்டாம்” என்பது போல தலையசைத்தாள்.

“குடி பத்து நிமிஷத்துல ஒன்னும் ஆகாது”

“இல்லை வாமிட் வர்ற மாதிரி இருக்கு, வீட்டுக்கு போயிடலாம்” என்றால் அன்றைய நிகழ்வுகளில் அலன்றவளாக.  ஸ்கூட்டியில் ஏறி அமர்ந்து ஸ்டார்ட் செய்ய, எதுவும் பேசாமல் விஜய் ஏறிக் கொள்ள, அவளுடைய வீட்டினை நோக்கி செலுத்த ஆரம்பித்தாள்.

Advertisement