Advertisement
அத்தியாயம் பதினொன்று :
பிரிவு உடலுக்கு தான் மனதிற்கு இல்லை!
உள்ளே வந்த இன்ஸ்பெக்டர் விஜயை பார்த்து “டேய், இன்னா துள்ளு துள்ளுனான் உன் மாமன். இப்போ அந்த எம் எல் ஏ பொண்ணு வராம உன் பொஞ்சாதியை அனுப்பமாட்டேன்” என்றான்.
பின்னே வந்த சைந்தவியும் அதனைக் கேட்டாள்.
விஜயின் மனதில் மத்தளங்கள் ஓடிய போதும், அதனை வெளியில் சற்றும் காமித்துக் கொள்ளவில்லை.
விஷ்ணு “என்ன இது?” என்று கோபமாக பார்த்துக் கொண்டிருந்தான். கமிஷனருக்கு அழைக்கலாமா என யோசிக்க ஆரம்பித்தான்.
“த பாரு, எம் எல் ஏ பொண்ணு போனதுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. நீ சும்மா என்னை புடிச்சு வெச்சு டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்க, நாளைக்கு உண்மையா நான் இல்லைன்னு தெரியும் போது, நீ தான் மாட்டுவ?”
“அப்புறம் இந்த பொண்ணு, இதை நான் துரத்தி விட்டு மூணு வருஷமாகுது, ஊருக்கே இது தெரியும்! அந்தப் பொண்ணை போய் கூட்டிட்டு வந்து என்னை மிரட்டுறியே, ஏதாவது பண்ணின நீ தான் மாட்டுவ? இவ கிட்ட டைவர்ஸ் கேட்டா குடுக்க மாட்டேங்கறா? எனக்கு குடுக்க சொல்லி கொஞ்சம் மிரட்டுங்க சார்” என்றான் அசால்டாய்.
இன்ஸ்பெக்டர் திரும்பி சைந்தவியை பார்த்தவன் “நீ இவனோட இல்லையா?”
“இல்லை, மூணு வருஷத்துக்கு முன்ன பிரிஞ்சிட்டோம்” என்றாள். உண்மையும் அதுதான் என்றாலும் இந்த பதில் விஜயின் கண்களில் பாஷயை உணர்ந்து.
சைந்தவியின் தோற்றமும் பெரிய இடத்துப் பெண்ணாய் தோன்ற, கூடவே விஷ்ணு வந்தவன் “நான் விஷ்ணு, ஏ சீ பீ லா அண்ட் ஆர்டர். இவளோட அண்ணன்” என்று சைந்தவியை காட்டியவன்.
“இவளை கூட்டிட்டு போகட்டுமா? இல்லை எங்க கமிஷனரை உங்ககிட்ட பேசச் சொல்லட்டுமா?” என்றான் அதிகாரமாய்.
அசிஸ்டெண்ட் கமிஷ்னர் ஆஃப் போலிஸ், இவனை விட பெரிய பதவி!
“உட்காருங்க சர்” என்று அவசரமாய் சொன்ன இன்ஸ்பெக்டர். அவனும் போய் அமர்ந்தான்.
“கமிஷனரை பேசச் சொல்றேன்” என விஷ்ணு மொபைல் எடுத்தான்.
“இல்லை, இல்லை, வேண்டாம்! நீங்க சொன்னா போதும். எனக்கு இதெல்லாம் தெரியாது. நீங்க வந்திருக்கவே வேண்டாம். ஒரு ஃபோன் பண்ணினா நான் வந்திருப்பேன்” என்றான் இன்ஸ்பெக்டர் அவசரமாக.
கமிஷனர் சட்டம் ஒழுங்கின் பெருமை தான் அனைவரும் அறிவரே. அவனின் பெயரே வேலை செய்யும் வெங்கட ரமணன்!
பின் இன்ஸ்பெக்டரே “நான் எம் எல் ஏ வை அவரை தான் பார்க்க சொல்லியிருக்கேன். சின்ன பொண்ணு சார், பதினாறு வயசு, டிரைவரோட போயிடுச்சு, டிரைவர் எல்லாம் இவனுங்க கூட்டாளிங்க” என்றான்.
“இல்லை, முதல்ல எங்க வீட்டுக்கு பக்கத்துல இருந்தான். இப்போ நாங்க வேற வீடு மாறிட்டோம். எனக்கும் அந்த ட்ரைவர்க்கும் எந்த தொடர்புமில்லை. ஏன் என்னை பிடிச்சு வெச்சு நேரத்தை வேஸ்ட் பண்றாங்கன்னு தெரியலை” என்றான் அதற்கும் அசால்டாய்.
“இவனும், இவன் வாயும்! எத்தனை அடி வாங்கியிருக்கிறான். எவ்வளவு சிரமப் பட்டு பேசுகிறான். ஆனாலும் திமிர் குறைகிறதா” சைந்தவியின் கண்களில் நீர் தழும்பியது.
இதனை கவனித்த விஷ்ணு “நீ வெளில இரு” என்று சொல்லியவன், “அனுப்பிடட்டுமா” என இன்ஸ்பெக்டரிடம் கேட்டான்.
“அனுப்புங்க சர்” என்றான் இன்ஸ்பெக்டர்.
நடக்கும் போது சைந்தவி விஜயை பார்க்க, “என்னை பார்க்காம போடி” என்ற முறைப்பு விஜயின் கண்களில் தெரிந்தது.
பார்ப்பவர்களுக்கு எதோ துவேஷமாய் அவளை முறைப்பது போல தான் தோன்றியது. “இந்த பொண்ணை கூட்டிட்டு வந்து இவன் பிரச்னையை நான் தீர்த்து வைக்க இருந்தேனே” என்று இன்ஸ்பெக்டர் நொந்து கொண்டான்.
“இவர் மேல எப் ஐ ஆர் போட்டுட்டீங்களா?” என்ற விஷ்ணுவின் கேள்விக்கு,
“சும்மா சந்தேகத்துக்கு அரஸ்ட் பண்ணிருக்கோம்” என்றான் இன்ஸ்பெக்டர்.
குரலை தளைத்த விஷ்ணு, “பார்த்துக்கங்க, இவன் சொன்ன மாதிரி இவனை கவனிச்சிட்டு, பொண்ணை விட்டுடப் போறோம்” என விஷ்ணு சொல்லும் போதே,
கும்பலாய் சில ஆட்கள் உள்ளே நுழைந்தனர்.
அதில் வெள்ளை வேஷ்டி சட்டையில் இருந்த ஒருவன், “த பாரு இன்சு, பிரச்சனை உனக்கும் எனக்கும், அதுக்காக என் மச்சானை நீ இப்படி பண்ணி வெச்சிருக்க, விளைவுகள் பயங்கரமா இருக்கும். முதல்ல அவனை அனுப்பிவிடு!”
“இன்னா விளைவு? இன்னா பண்ணிடுவ?” என இன்ஸ்பக்டர் கோபமாக எழ,
“சொல்றதெல்லாம் இல்லை, செஞ்சு காட்டுவோம்! ஏதாவது தப்பு பண்ணியிருந்தா கூடப் பரவாயில்லை. சும்மா இருக்குறவனை பிடிச்சு இப்படி பண்ணியிருக்க. அந்த எம் எல் ஏ க்கு பொண்ணை ஒழுங்கா வளர்க்க துப்பில்லை, ஓட விட்டுடுட்டான். நீங்க என்ன சும்மா இருக்குற பசங்களை எல்லாம் பிடிச்சு இப்படி பண்றீங்க”
“இன்னும் அஞ்சு நிமிஷத்துல அவனை அனுப்பலை, பத்திரிக்கைகாரங்களை கூப்பிட்டு நாஸ்தி பண்ணிடுவேன்”
இதெல்லாம் எனக்கு சகஜம் என்பது போல முகத்தினில் எதையும் காட்டாமல் விஜய் மீண்டும் சுவரில் சாய்ந்து கண்களை மூடி இருந்தான்.
சைந்தவி கிளம்பியிருப்பாளா? கிளம்பியிருப்பாளா? என மனம் அடித்துக் கொண்டது. “இப்படியா ஆக வேண்டும் சூழ்நிலை. இனி எந்த முகத்தை வைத்து உன்னுடன் இருப்பேன் என்று வற்புறுத்த முடியும். அதனையும் விட நான் சென்றால் மீண்டும் அவளையும் இதில் இழுத்து விடுவார்களா அந்த பயத்திலேயே என்னால் போக முடியாதே!”
எல்லாம் மீண்டும் முடிந்து விட்டதா?
“என்னை பற்றி என்ன நினைப்பாள்? நிஜமாகவே எனக்கு இதற்கும் சம்மந்தம் என்று நினைப்பாளா?” மனதில் ஒரு இனம் புரியாத உணர்வு! ஒரு வலி!
பேசிக் கொண்டிருந்தது விஜயின் அக்காவின் கணவன் மூர்த்தி. இவன் அந்த ஏரியா கவுன்சிலர். காணாமல் போனது எதிர் கட்சி எம் எல் ஏ வின் பெண். ஏற்கனவே கவுன்சிலருக்கு எம் எல் ஏ விற்கும் பிரச்சனைகள் ஓட, கூடவே கவுன்சிலருக்கும் இன்ஸ்பெக்டருக்கும் கூட பிரச்சனைகள் ஓட,
விஜய் கவுன்சிலரின் மச்சான் என்ற ஒரே காரணத்தினால் தான் இன்ஸ்பெக்டர் அவனை தூக்கி வந்தான். நேற்றிரவு விஜய் வீட்டினில் இல்லாதது, எங்கே இருந்தான் என்று சொல்லாதது, இன்ஸ்பெக்டருக்கு சாதகமாய் அமைந்தது. உண்மையில் அவனிற்கே தெரியும், இதில் விஜய் எங்கேயும் இல்லை என்று.
“என்ன நாஸ்தி பண்ணுவியோ பண்ணிக்கோ, இது எம் எல் ஏ பிரச்சனை” என்றான் தெனாவெட்டாய் இன்ஸ்பெக்டர்.
“ஹி ஹி இன்னாது, எம் எல் ஏ வை நான் ஏன் நாஸ்தி பண்ணனும். அவனே பண்ணிக்குவான். அந்த புள்ள மூணாவது தபா இஸ்துகின்னு பூடுச்சு”
“நான் சொன்னது உன்னை, காலையில இருந்து ஏன் இந்த பக்கம் எட்டிப் பார்க்கலை. அல்லா ப்ரூஃபும் என் கைல, நீ ஒழிஞ்ஜடா” என்றான் மிரட்டலாய்.
எதிரில் விஷ்ணு இருப்பதை உணர்ந்த இன்ஸ்பெக்டர், “நான் என்னனு பார்த்து அவரை அனுப்பி விட்டுடறேன் சர்” என உடனே இறங்கி வந்தான். “சாரி இவன் பொஞ்சாதியை துரத்தி விட்டது தெரியாம வர சொல்லிட்டோம். நீங்க உங்க சிஸ்டரை கூட்டிட்டு போங்க” என்று மரியாதையாய் சொன்னான்.
இவர்கள் பேசுவது என்ன என்பது போல மூர்த்தி பார்த்திருந்தான்.
வேறு விஷ்ணுவும் பேசவில்லை “தேங்க் யு” என்று எழுந்து விட்டான். விஜயை ஒரு பார்வை பார்த்தவாறே விஷ்ணு கிளம்பினான். விஜய் கண்களை மூடி தான் இருந்தான். அதனால் விஷ்ணு கிளம்பியது தெரியவில்லை.
உள்ளே மூர்த்தி செல் போனில் எதோ இன்ஸ்பெக்டரிடம் காட்ட துவங்கி, “ஒரு தட்டு தட்டினா ஊர் ஜனம் முழுசும் உன் லட்சணத்தை பார்க்கும்” என்றான் ஒரு நக்கல் சிரிப்போடு.
என்ன காட்டினானோ தெரியாது, உடனே இறங்கி வந்த இன்ஸ்பெக்டர், “இவனை கூட்டிட்டி போங்க” என்றவன், “வீடியோ கொடு” என்று மூர்த்தியிடம் கேட்க,
“உன் கண்ணு முன்னாடி அழிச்சிட்டேன். என் உயிர் போனாலும் இது வெளில வராது. ஆனா நீ திரும்ப ஏதாவது பண்ணின இதுக்கு உயிர் வந்துடும்” என மூர்த்தி மிரட்டலாய் பேசினான்.
“கிளம்புடா?” என்றான் எரிச்சலாய் இன்ஸ்பெக்டர்.
விஜயின் அருகில் செல்ல, அதில் ஒருவன் “ண்ணா போகலாம்” என்ற குரல் கேட்டு கண் திறந்தான் விஜய்.
எழ ஒருவன் கைபிடித்து உதவ, எழுந்து நின்றவன், திரும்பவும் அவனின் கை பிடித்து உதவ,
“வேண்டாம்” என்று மறுத்தவன், இன்ஸ்பெக்டரை பார்த்து “சார் வரட்டா” என்றான்.
“வராத, போடா”
“ஆங் நீ சொன்னா ரைட்டு” என ஒரு பார்வை பார்த்து கிளம்பினான்.
“இன்னடா முறைக்கிற?”
“இன்னா சார் நீ, நான் பார்க்கறதே அப்படி தான்! போறேன்!” என சொல்லி அவனிற்கு ஒரு சல்யுட் வேறு வைத்தான்.
“ஏய் இன்னா திமிரா?” என இன்ஸ்பெக்டர் எகிற,
அசால்டாய் தோள்களை குலுக்கி வெளியில் நடக்க துவங்கினான்.
வெளியில் வரும் வரை விஜய் எதுவும் பேசவில்லை. வெளியில் வந்ததும் கும்பலாய் அவனை ஆட்கள் சூழ்ந்து கொள்ள, “டேய் இங்கே இன்னா ஷோ காட்டுறாங்கன்னு இத்தனை பேர் நிக்கறீங்க, கிளம்புங்கடா!” என்று எரிந்து விழுந்தான்.
அவனுடைய கத்தலில் எல்லோரும் தள்ளி நிற்க, “யார்ரா இருக்கா இங்க?” என கர்ஜித்தான்.
“நைனா அங்க குந்திகின்னு இருக்கு” என எவனோ சொல்ல,
“தூக்கிட்டு போய் வீட்ல கடாசுங்கடா அதை. நானே ரெண்டு நாள் கழிச்சு வருவேன்னு அம்மா கிட்ட சொல்லிடு. சும்மா ஒப்பாரி வெச்சிகிட்டு கிடக்கும்” என்றவன் மூர்த்தியை பார்க்க,
அவன் ஒரு தயக்கத்தோடு அருகில் வர, சுற்றி இருந்த எல்லோரும் காணாமல் போனார்.
“இன்னா பண்ணிட்டு இருக்க நீ, தொலைச்சிருவேன். உன் கருமத்துகுள்ள என்னை இழுத்து விடுவியா? அக்கா வூட்டுக்காரனாச்சேன்னு சும்மா போறேன்” என அதற்கு மேல் பேசாமல் விஜய் நடக்கத் துவங்கினான்.
“டேய், வண்டியை கொண்டு வாங்கடா” என அவசரமாக மூர்த்தி கத்தினான்.
விஜயின் அருகில் ஒரு பொலேரோ வந்து நிற்க, “நான் வரலைன்னு அவன்ட்ட சொல்லுங்கடா” என நடந்து கொண்டே இருந்தான்.
மூர்த்தி ஓடி வர, விஜய்க்கு அப்போது தான் மொபைல் ஸ்டேஷனில் இருப்பது புரிய, “என் பர்ஸ், ஃபோன் அங்க இருக்கு”
“டேய் போய் எடுத்துட்டு வாங்கடா” என்றான் மூர்த்தி.
சிலர் மொபைல் எடுக்க வேகமாக ஓடினர்.
மூர்த்தி அவன் பின்னோடு போக, “டேய் வராத” என விஜய் சொல்லச் சொல்ல சென்றான். “போய் தொலையேண்டா” என விஜய் கத்தினான்.
“தெரியாம நடந்துடுச்சி” என மூர்த்தி வேகமாக முன் போய் நிற்க,
“சொன்னா கேட்க மாட்டியா நீ” என ஒரே கையில் அவனின் சட்டையை பிடித்து, அவனை தூக்கியே விட்டான்.
Advertisement