Advertisement

டீம் லீடரிடம் லீவ் சொல்லி சைந்தவி கிளம்பிவிட்டாள்.

அரை மணிநேரத்தில் ப்ரியா வந்து விட, அவளின் ஸ்கூட்டியில் ஏறிக் கொள்ள, அங்கிருந்து ஒரு முக்கால் மணி நேரப் பயணம் சென்றார்கள்.

இவர்கள் அந்த ஸ்டேஷன் அருகே செல்லும் போதே பைக்கில் இருந்த ஒருவன் ப்ரியாவை நோக்கி கை அசைத்தான்.

ப்ரியா அவனருகே சென்று வண்டியை நிறுத்தவும், “என்ன? எதுக்கு அவசரமா வரச் சொன்ன?” என்றான்.

அவனுக்கு விஷயமே தெரியவில்லை. “இது என்னோட ஃபிரண்ட் இவங்க ஹஸ்பன்ட்” என ஆரம்பிக்க. ப்ரியா வள வள வென்று இழுப்பாள் என புரிந்தவளாக சைந்தவி விஷயத்தை சொன்னாள்.

“சர் நான் சைந்தவி, இவளோட முன்ன வொர்க் பண்ணினேன். இப்போ வேற ஆஃபிஸ் மாறிட்டேன். என்னோட கணவரை எதோ பிரச்சனைன்னு இங்க கொண்டு வந்து வெச்சிருக்காங்க போல, எங்களோடது லவ் மேரேஜ், நானும் அவரும் இப்போ மூணு வருஷமா சேர்ந்து இருக்கலை”

“இப்போ அவர் இருக்குற ஆபிஸ்ல தான் இருக்கேன், அவரை விசாரிக்க வந்தவங்க, நான் அவரோட வைஃப்ன்னு தெரிஞ்சு, என்னை இங்கே வர சொல்லிட்டாங்க”

“என் அண்ணாவை கூப்பிட ஃபோன் பண்ணினேன், அவன் ஃபோன் சுவிட்ச் ஆஃப், நான் தனியா இருக்கேன்னு ப்ரியா கூட வந்துட்டா” என கட கட வென சூழ்நிலையை சொன்னாள்.

குரல் செருமி செருமி அவள் பேசும் போதே அழுகையை அடக்கிக் கொண்டிருக்கிறாள் எனப் புரிந்தது.

“நான் விஷ்ணு” என்று சொன்னவன், ஏ சீ பீ லா அண்ட் ஆர்டர் ல இருக்கேன், போஸ்டிங்ல இருந்தாலும் அடுத்தவங்க லிமிட்ல உடனே ஒன்னும் பண்ண முடியாது. உங்க கணவர்க்கு எந்த வகையில உதவ முடியும்னு தெரியலை” என அவன் பேசும் போதே ப்ரியா அவனை முறைத்தவள்,

“வா சைந்து, நமக்கு என்ன ஆளா இல்லை, வேற நல்ல போலீசா பார்க்கலாம்” என உடனே சொல்ல,

விஷ்ணு அவளை அதட்டும் முன்னே சைந்தவி அதட்டினாள், “நீ கொஞ்சம் நேரம் பேசாம இரு” என்று. ப்ரியா சற்று அமைதியாகினாள்.

“நான் உங்களோட வர்றேன், உங்களுக்கு எந்த பாதகமும் இல்லாமல் வெளில கூட்டிட்டு வர்றேன், ஆனா அதுக்கு மேல என்னால என்ன முடியும்னு தெரியலை. ஏன்னா சிஸ்டம் அப்படி. முடிஞ்சதை கண்டிப்பா செய்யறேன்” என்றான்.

“புரியுது” என்று தலையசைத்தாள் சைந்தவி.

பின்பு ப்ரியாவை வரவேண்டாம் என நிறுத்தி அவர்கள் இருவரும் மட்டும் சென்றனர். வாசலில் நிறைய பேர் நின்றிருந்தனர். சைந்தவி எங்கேயும் பார்வையை ஓட்டவில்லை. அவளின் கவனம் எல்லாம் அவள் உள் நுழைவதிலேயே இருந்தது.

உள்ளே சென்று கண்களை சுழல விட, அங்கிருந்த ஒரு பெஞ்சில் அமர்ந்திருந்தான். சட்டையெல்லாம் அங்கங்கு இழுபட்டு கிழிந்திருந்தது. அவன் தலையை சுவற்றிற்கு முட்டுக் கொடுத்திருக்க, அவனின் முகம் தெரியவில்லை. விஜய் அமர்ந்திருந்த தோற்றம் சைந்தவியின் மனதிற்குள் பிசைந்தது.

நேற்று அவள் வீட்டினுள் விஜய் படுத்திருந்த தோற்றம் பார்த்தே “நான் இருக்கிறேன் உனக்கு” என்று சொல்ல விழைந்தவள், இன்று முற்றிலுமாய் அவனுள் தொலைந்தாள். “அவன் எப்படி இருந்தால் என்ன? நான் அவனை காதலித்தது நிஜம் தானே” எனத் தோன்றியது

ஆம்! இன்னும் காதலிக்கின்றாலா எனக் கேட்டால் அவளிடம் பதில் கிடையாது. ஆனால் காதலித்தாளா எனக் கேட்டாள் ஆம் என்றே எங்கும் எதிலும் எப்போதும் சொல்வாள்.

விஜயின் துயர் துடைக்க மனம் பரபரபரத்தது.

அவளிடம் பேசிய கான்ஸ்டபிளை தேடினாள், அவரையும் காணவில்லை, யாரை பார்ப்பது என்று தெரியவில்லை அவனின் அருகில் போகலாமா என்றும் தெரியவில்லை.

அதற்குள் விஷ்ணு அங்கிருந்த நிலவரத்தை ஆராய முற்பட்டான். அங்கே நான்கைந்து கான்ஸ்டபிள்கள் தான் இருந்தனர்.

அங்கே எழுத்தர் என்று பலகை வைத்திருந்தவரிடம், “அவரை பார்க்கணும்னு கேளுங்க” என்று விஷ்ணு சொல்ல,

அவரின் அருகே சென்றவள் “சர் நான் அவரை பார்க்கணும்” என விஜயை காண்பித்து கேட்டாள்.

“யாரும்மா நீ?” என்று மேலும் கீழும் ஆராய்ந்தபடி அவளிடம் அவர் கேட்டார்.

“அவர் மனைவி”

“பொண்டாட்டியா? நீ ஏன்மா வந்த? ஏற்கனவே இங்க பத்திகிட்டு நிக்குது, பேசாம நீ கிளம்பு” என்றார் அவசரமாக.

“அவர்” என விஜயைக் காண்பிக்க,

“அதை அவங்க அக்கா வீட்டுக்காரர் பார்த்துக்குவார். போம்மா நீ, சின்ன பொண்ணு, அழகா வேற இருக்க, இந்த பிரச்சனையில உன்னை இழுத்து விட்டுடப் போறாங்க! போம்மா, இன்ஸ்பெகடர் வர்றதுக்குள்ள கிளம்பும்மா” என்றார் சலிப்பாக.

விஷ்ணு அருகில் வந்து “என்ன பிரச்சனை? ஏன் அவரை இங்கே வெச்சிருக்காங்க?” என்றான்.

“நீ யாரு?” என்றார் அவர் அலைட்சியமாக. விஷ்ணு தலையில் தொப்பி அணிந்திருந்தான். அதனால் அவனுடைய போலிஸ் கட்டிங் தெரியவில்லை. அவன் போலிஸ் உடையிலும் இல்லை.

“இவளோட அண்ணன்” என அறிமுகம் செய்து கொண்டான்.

“அப்போ உடனே இந்த புள்ளையை கூட்டிட்டு இடத்தை காலி பண்ணு, எதுன்னா கேட்கணும்னா தனியா வா சொல்றேன். இப்போ கிளம்பு” என்றார் விஷ்ணுவையும் பார்த்து.

“நீங்க கிளம்புங்க சைந்தவி. நான் என்னன்னு விசாரிச்சிட்டு வர்றேன்”

சைந்தவி திரும்பி விஜயை பார்த்தாள். அந்த எழுத்தர் சொல்வதை பார்த்தால் சற்று பயமாக இருந்தது. சென்று விடலாமா ப்ரித்வி வந்த பிறகு வரலாமா? அதற்கு முன் அவனை இன்னும் அடிப்பரோ எனப் பார்வை முழுவதும் விஜயின் மீது தான்.

“நான் இருக்கிறேன் பயப்படாதே” என்றாவது அவனிடம் சொல்ல வேண்டும் என்று மனது உந்தியது.

“ஒரு வார்த்தை பேசிட்டு போயிடட்டுமா?” என எழுத்தரிடம் கேட்டாள்.

“சீக்கிரம் பேசிட்டு போம்மா” என அவர் சொல்ல, அவள் விஜயின் புறம் செல்லவும், தன் தலையில் இருந்த தொப்பியை கழற்றிக் கொண்டே “நான் விஷ்ணு, ஏ சீ பீ, என்ன பிரச்சனை?” என அவன் ஹோதாவாக கேட்டான்.

இப்போது எழுத்தர் அவசரமாக எழுந்து நின்று அவனிடம் பேசத் துவங்க, சைந்தவி விஜயின் அருகில் சென்று “விஜய்” என அழைத்தாள்.

அந்த குரல் கேட்டததும் வேகமாக கண் திறந்தவன், தலை நிமிர்த்தி பார்த்தான். அடித்ததில் ஒரு பக்கம் முகம் வீங்கி, உதடும் தடித்து இருந்தது. பார்க்க பார்க்க சைந்தவியின் கண்களில் அவளையும் மீறி கண்ணீர் பெருகியது.

“நீ, நீ இங்க எங்க வந்த?” என்றான் விஜய் அவளை பார்த்ததும் அதிர்ந்து. உடனே வேகமாக “போ, இங்கிருந்து போ முதல்ல, இங்க இருக்காத உடனே கிளம்பு. யாரோட வந்த?” என்றான்.

பேசிக் கொண்டிருந்த விஷ்ணுவை கை காட்டியவள் “அவரோட வந்தேன், என் ஃபிரண்ட் ப்ரியாவோட ஃபியான்சி அவரும் போலிஸ்” என்றாள்.

“யாரா வேணா இருக்கட்டும். நீ இருக்காத கிளம்பு, நான் வந்துடுவேன்!” என்றான்.

“எப்போ?” என்றாள் உடனே.

“நாளைக்கே வந்துடுவேன் போ” என்றான்.

“இங்க என்னை வரச் சொன்னாங்க!”

“சொன்னா, சொல்லிட்டுப் போறாங்க, நீ வராத போ! பத்திரமா இரு!” என்று சொன்னான். அதற்கு மேல் என்ன சொல்வது என்று தெரியவில்லை. எங்கே போக சொல்வான் பாதுகாப்பிற்காக அவளை!

“ப்ளீஸ் சவீ, கிளம்பு, பத்திரமா இரு, நான் வந்துடுவேன். நான் எதுவும் பண்ணலை, என்னை இவங்க ஒன்னும் பண்ண முடியாது, போ!” என்றான்.

அவள் தலையாட்டியபடி விஷ்ணுவை பார்க்க, இவனிடம் விரைந்து வந்த விஷ்ணு “ப்ரியா வெளில இருக்கா, நீங்க ரெண்டு பேரும் வீட்டுக்கு போயிடுங்க. நான் என்னன்னு அப்டேட் பண்றேன். பசங்கன்னா கூட இருக்க வெச்சிக்குவேன். பொண்ணுங்க சேஃப்டி முக்கியம், அரசியல்வாதி எல்லாம் இதுல இன்வால்வ் ஆகியிருக்கான். நீங்க போங்க” என்றான்.

“ம்ம்” என்று தலையாட்டியபடி அவள் படியிரங்கவும் அவளிடம் பேசிய கான்ஸ்டபில் வரவும் சரியாக இருந்தது.

“என்னம்மா ஐயாவை பார்த்துட்டியா?”

“இல்லை” என அவள் சொல்லும் போது, அங்கு நின்று கொண்டிருந்தவர்களின் பார்வை எல்லாம் அவளின் மீது இருந்தது.

“டேய், அண்ணி மாதிரி இல்லை” என எவனோ சப்தமாக சொல்லும் ஒலி கூட கேட்டது.

அதற்குள் அந்த இன்ஸ்பெக்டர் வர, “யாரு இது ஏட்டு?” என்று அவளை பார்த்ததும் நின்றான்.

“நான் ஃபோன்ல சொன்னேன் தானே, விஜயோட பொஞ்சாதி” என அவர் சொல்ல,

அவளை விடாது பார்த்துக் கொண்டே “உள்ள கூட்டிட்டு வா” என சொல்லி போக, அந்த இன்ஸ்பெக்டரின் பார்வையில் சப்த நாடியும் ஒடுங்கியது சைந்தவிக்கு.

Advertisement