Advertisement

அத்தியாயம் பத்து :

சொல்லத்தான் வார்த்தையில்லை!

அன்று அலுவலகத்திற்கு விஜய் வரவில்லை. சைந்தவி கவனித்தாள். வீட்டில் போராடிக் கொண்டிருப்பான் எனத் தெரியும். அவளோடு வந்து இருப்பது அவனுக்கு அவ்வளவு சாதாரணமல்ல. அவனின் அம்மா அழுது அழுதே அவனை ஒரு வழி செய்வார் எனத் தெரியும்.

மனதிற்கு சற்று சுவாரசியமாய் இருந்தது, எப்படி இதை சமாளிப்பான் பார்ப்போம். முடியுமா அவனால் தெரியாது. ஆனால் உண்மை சொல்லி வந்தால் மட்டுமே வீட்டினுள் விஜய் பிடிவாதமாயேனும் வர முடியும்.

இல்லை அவன் வீட்டினுள் இருந்து கொள்ளட்டும், நான் வெளியேறி விடுவேன் என்ற பிடிவாதம் அமர்ந்திருந்தது.

“நீ எங்களை விட்டு போயிடுவ போயிடுவ” என்று விஜயிடம் சொல்லி சொல்லியே சைந்தவியை போகும் சூழ்நிலைக்கு வரவைத்து விட்டார்கள்.

விஜயின் அக்கா பூங்கோதை அவளை முறைத்துப் பார்க்கும் நேரங்கள் தான் அதிகம். ஒரு டிகிரீ முடித்து பீ பீ ஓ வில் வேலை பார்த்து வந்தாள். விஜயின் படிப்பின் பெரும் பகுதி செலவை பார்த்தது அவள் தான்.

அதுவுமே சைந்தவியின் மனதில் ஒரு உறுத்தல் அக்காவின் திருமணம் முடியாமல் தனியாக கூப்பிட்டோமே என்று. ஆனால் என்றுமே அவர்களுக்கு செய்ய வேண்டாம் என்ற வார்த்தைகள் எல்லாம் வந்திருக்காது.

இவளை பார்த்த நாளில் இருந்து பூங்கோதைக்கு பயம். இன்னும் அவளின் பொறுப்புகள் கூடிப் போகுமோ என்பது போல. விஜயன் சைந்தவியோடு தனியாக போய்விட்டால் வீட்டை யார் பார்ப்பர் என்று.

சைந்தவியின் காதல் தெரிந்து, அவளின் அப்பா வேறு திருமண ஏற்பாடு செய்ய, விஜயினோடு திடீரென்று நடந்த திருமணம், அதன் பொருட்டு உடுத்திய உடையோடு சென்றாள்.

பூங்கோதையின் சுரிதார்கள் இரண்டு தான் அவளுக்கு கொடுக்கப்பட்டன. அவள் உபயோகித்து வந்தது. இரண்டு உடை விஜயால் வாங்கிக் கொடுக்க முடியாது என்றில்லை. ஆனால் அதற்கும் அவன் அக்காவிடம் தான் பணத்திற்கு நிற்க வேண்டும். அப்பா கட்டிட வேலை செய்யும் ஆசாரி பணம் கொடுத்தால் உண்டு இல்லையென்றால் இல்லை.

“எல்லாம் நாங்க பார்த்துக்கறோம்” என்று அம்மாவும் அக்காவும் சொன்ன பிறகு என்ன செய்வான். அவன் அப்போது இறுதி செமஸ்டரில் இருந்தான்.

“அம்மா அவளுக்கு டிரஸ்”

“அக்காது நல்லதா ரெண்டு கொடுக்கச் சொல்றேன். அப்புறம் வாங்கிக் கொள்ளலாம்” என்று விட்டார். சைந்தவிக்கு யாருடைய பொருட்களையும் உபயோகிக்க முடியாது. ஒரு வாரம் கழித்து சைந்தவி கல்லூரி போக ஆரம்பித்த பிறகு “எனக்கு ஆயிரம் ரூபாய் பணம் வேண்டும்” என விஜயிடம் கேட்க,

அவன் எதற்கென்றல்லாம் கேட்கவில்லை ஏற்பாடு செய்து கொடுக்க, இவள் அந்த பணத்திலேயே மூன்று உடைகள் எடுத்துக் கொண்டு வந்தாள்.

அடுத்த நாள் இந்த உடைகளை பார்த்த அவனின் அக்கா “எப்படி உனக்கு ட்ரெஸ் வந்தது” எனக் கேட்க, விஜய் பணம் கொடுத்தான் எனச் சொல்ல,

சைந்தவியிடம் பூங்கோதை எதுவும் பேசவில்லை. விஜயிடம் அப்படி ஒரு சண்டை. “பணம் கேட்ட என் கிட்ட, பணமில்லைன்னு நான் கடன் வாங்கி கொடுத்தேன், இப்போ இதுக்கு அவசியமென்ன. என்கிட்டே இருக்குறதிலேயே நல்ல டிரஸ் தான் அவளுக்கு கொடுத்தேன். இது அனாவசிய செலவு, இதெல்லாம் எனக்கு ஆகாது” என்று ஏகத்திற்கும் குதித்தாள்.

விஜயை விட சைந்தவி மிகவும் மனம் நொந்து விட்டாள். “சாரி எனக்கு இப்படியாகும்னு தெரியாது” என விஜயிடம் சொல்ல,

“பூவு எப்பவும் அப்படி தான். நீ மனசுல வைக்காதே” என அவன் ஈசியாக சொல்லிப் போனான்.

சைந்தவியால் அப்படி ஈசியாக எடுத்துக் கொள்ள முயலவில்லை, அதன் பிறகு எதற்கும் விஜயிடம் பணம் கேட்டதில்லை. அப்போதுதான் அவளுக்கு அவளின் அப்பா ஃபீஸ் கட்டியிருந்ததினால் எந்த பிரச்சனையும் இல்லை.

இரு நாட்களுக்கு ஒரு முறை நூறு ரூபாய் கொடுப்பான். அதை வைத்து அவள் கல்லூரி போகும் செலவு வரும் செலவு என சமாளித்துக் கொள்வாள்

யோசிக்க யோசிக்க அந்த வாழ்க்கை இப்போது கனவு போலத் தோன்றியது. பெற்றவர்களுடனான வாழ்க்கையும் அப்படித் தான், இவனுடனான வாழ்க்கையும் அப்படித் தான்.

இவளின் காதல் பற்றி ப்ரித்வி தான் வீட்டினில் அப்பாவிடம் சொன்னான். அதன் பொருட்டே அவர் திருமண ஏற்பாடு செய்ய, அதன் பொருட்டே இவளின் அவசர திருமணம் விஜயனோடு.

இல்லயென்றால் அந்த சமயத்தில் திருமணம் எல்லாம் நடந்து இருக்காது. சைந்தவி படிப்பை முடித்த பிறகு திருமணம் என்று வந்திருந்தாள், இந்த பிரியும் நிலை வந்திருக்காதோ என்னவோ?

எதுவாகினும் நடந்தால் தானே தெரியும்!

மதியமாக இவள் லஞ்ச் செல்லும் போது அங்கே ரிசப்ஷனில் ஒரு போலிஸ் கான்ஸ்டபில் அமர்ந்திருந்தார். பார்த்தபடியே தான் உணவிற்கு கடந்தாள். உணவு முடித்து திரும்ப வரும் போது அங்கே கமாலி நின்று அவருடன் பேசிக் கொண்டிருந்தவள், இவளை பார்த்ததும் “இதோ இந்த பொண்ணு அவனோட மனைவி” என காண்பித்து கொடுத்தாள்.

அவர் உடனே யாருக்கோ கைபேசியில் அழைத்தவர், “ஐயா அவனோட பொண்டாட்டின்னு ஒரு பொண்ணை காட்டுறாங்க” என்றார்.

எதிர்புறம் என்ன சொல்லியதோ தெரியவில்லை, “ம்ம், சரிங்க கூட்டிட்டு வர்றேங்க” என்றார்.

“மா, உன்னை ஐயா வரச் சொன்னார் வா” என சைந்தவியைப் பார்த்து சொல்ல, இவளுக்கு தலையும் புரியவில்லை, வாலும் புரியவில்லை! ஆனாலும் மனதினில் பயம் ஏறியது.

கமாலியை பார்த்து “என்ன?” என்று கேட்டாள்.

“தெரியலை, விஜய் இங்கே தான் வேலை பார்க்கிறானா விசாரிச்சாங்க! ஆமாம் சொன்னேன், அப்போ சரியா நீ வந்தே. உன்னை அவன் மனைவின்னு காட்டினேன், ஏன் நீ அவன் மனைவி தானே?” என்றாள்.

கமாலி சொல்லியிருக்க வேண்டிய அவசியமேயில்லை. கமாலியை ஒரு பார்வை பார்த்தவள், திரும்ப கான்ஸ்டபிளிடம் பயப்படும் நேரம் இதுவல்ல எனப் புரிந்து பேச ஆரம்பிக்கும் முன்னே கமாலியிடம் “நீங்க போங்க” என்றாள் கறாராக.

அவளை முறைத்து பார்த்து கமாலி செல்ல, அவளை விட்டு கான்ஸ்டபிளிடம் “சொல்லுங்கண்ணா” என்றாள் மிகவும் மரியாதையாக.

அவளுடைய அந்த பாவனையில் எதிரில் இருந்தவனால் சில்லென்று விழ முடியாமல், “ஒரு கேஸ்க்கு உன் வீட்டுக்காரனை போலிஸ் ஸ்டேஷன்ல வெச்சிருக்காங்க”

“நான் இங்க வேலை பார்க்கறேன்னு அவன் சொன்னான், இங்க தான் நிஜமா பார்க்கறானான்னு தெரிஞ்சிக்க என்னை அனுப்பினார். நான் கேட்டப்போ நீ வந்த, அந்தம்மா உன்னை காமிச்சிக் கொடுத்தது. சே, நானும் தேவையில்லாம உன்னை சொல்லிட்டேன். இப்போ கூட்டிட்டு வரச் சொல்றாங்க” என்றார்.

“என்ன கேஸ்?” என்றாள் பயந்து பயந்து.

“எம் எல் ஏ புள்ள காணல, டிரைவரோட ஓடிப் போச்சு போல, அந்த டிரைவர் கூட ஸ்நேகிதம்னு நினைச்ச அத்தனை பேரையும் கூட்டிட்டு வந்திருக்காங்க. நேத்து நைட் அந்த பொண்ணு காணோம். உன் வீட்டுக்காரன் நேத்து நைட் வீட்டுக்கு வரலை. எங்கே இருந்தன்னு கேட்டா வாய் திறக்க மாட்டேங்கறான். எனக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லைன்னு சொல்றான். அவன் எதோ இந்த மாதிரி தான் கல்யாணம் பண்ணினானாமே”

“அதுல உங்காளோட அக்காவும் அக்கா வீட்டுக்காரரும் கொஞ்சம் பேச, அய்யா டென்ஷன் ஆகி உங்க வீட்டுக்காரனை நொங்கெடுத்துட்டு இருக்கார்” என அவர் சொல்ல சொல்ல,

“என்ன?” என்று அதிர்ந்து நின்றாள்.

“ஆமாம் மா, அடி பலம்”

அதற்கு மேல் ஒரு நொடி கூட யோசிக்கவில்லை, “எங்கேன்னு சொல்லுங்க நான் வந்துக்கறேன்”

“என்னோட வாம்மா”

“உங்களோட எல்லாம் வர முடியாது, நான் வந்துக்கறேன்” என்றாள் மீண்டும்.

அவரிடம் பேசிக் கொண்டே ப்ரித்விக்கு அழைக்க, அவனின் ஃபோன் சுவிட்ச் ஆஃப்” என வந்தது.

உடனே ப்ரியாவிற்கு அழைத்தாள், “ப்ரியா ப்ரித்வி கிட்ட போன் கொடு, அவன் போன் சுவிட்ச் ஆஃப்” என்றவளிடம்.

“ப்ரித்வி இன்னைக்கு லீவ்”

“என்ன லீவா?” என்ற சைந்தவியின் குரலில் என்ன உணர்ந்தாளோ ப்ரியா, “என்ன சைந்து ஏதாவது பிரச்சனையா?” என்று கேட்டாள் உடனே.

சைந்தவிக்கு வார்த்தை வராமல் தொண்டை அடைத்தது.

ப்ரித்வி இல்லாமல் எப்படி போவாள் தனியாக, ஆனால் போகவேண்டுமே!

“சொல்லு சைந்து, நான் இருக்கேன் உன்கூட சொல்லு” என வற்புறுத்தினாள் ப்ரியா.

“எனக்கு இங்க போலிஸ் ஸ்டேஷன் வரை போகணும்”

“எதுக்கு?” என்றாள் அவள் பதறி.

என்னவோ அந்த பதறல் மனதிற்கு இதமாய் இருந்தது. விஜய்யை அங்க வெச்சிருக்காங்களாம், என்னை வரச் சொல்றாங்க”

“யாரு விஜய்?”

“விஜயன்”

“ஓஹ், உனக்கு போகணுமா”

“ம்ம்”

“இரு, பயப்படாதே நான் வர்றேன்”

“நீ, நீ எப்படி வருவ? வேண்டாம்!”

“அதெல்லாம் வருவேன், பயம் வேண்டாம் சரியா, உன் ஆஃபிஸ் வாசல்ல வெயிட் பண்ணு, நான் வந்து பிக் அப் பண்றேன்” என்றாள் ப்ரியா.

“உனக்கு ஏதாவது ப்ராப்ளம் வந்துட்டா” என்று அப்போதும் சைந்தவி பயப்பட,

“ஹேய் எனக்கு ஆள் இருக்குப்பா. அவனை வரச் சொல்றேன். இப்போதான் மாப்பிள்ளை பார்த்தாங்க எனக்கு. அவன் போலிஸ் தான் ஒன்னும் பிரச்சனையில்லை”  அவள் தைரியம் சொல்ல, அப்போது தான் மனது சற்று ஆசுவாசமானது.

Advertisement