Advertisement

                            கணபதியே அருள்வாய்

     எமை ஆளும் நிரந்தரா

அத்தியாயம் ஒன்று :

உனக்கான என் தவங்கள் தவமாய் பார்க்கப் படவில்லை ஏன் ?

“சைந்தவி” என்ற ப்ரியாவின் குரலிற்கு திரும்பியவள், என்ன என்பது போன்ற பார்வையை கொடுத்தாள்.

“திஸ் இஸ் நாட் வொர்கிங் ப்ளீஸ் செக்” எனக் கேட்கவும்,  

தன்னுடைய கம்ப்யுடர் மானிட்டரை விட்டு எழுந்து பக்கத்தில் இருந்த ப்ரியாவின் பகுதி சென்றவள் உட்கார்ந்த இரண்டே நிமிடத்தில் அதை சார்ட் அவுட் செய்ய,

“ஓஹ் வாவ் யா! எப்படி உன்னால முடிஞ்சது. நானே கண்டு பிடிக்கணும்னு ஹால்ஃப் அன் ஹவரா ட்ரை பண்றேன், யு ஆர் சேன்ஸ்லெஸ்” என ப்ரியா புகழ்ந்தபடியே அவளின் கன்னத்தில் முத்தமிட,

“அய்யே என்ன பண்ற?” என்று அதிர்ந்து பார்த்தாள் சைந்தவி.

“என்ன பண்ணினேன்? உன்னை கிஸ் பண்ணினேன்! உனக்கு எவ்வளவு அழகான கன்னம். அதுவும் உன்னோட சீரோ சைஸ் உடம்புக்கு இப்படி ச்சப்பி சீக்ஸ், எனக்கு அதை கிள்ளணும் போல ஆசை. ஆனா உனக்கு வலிக்கும் இல்லையா, சோ கிஸ் பண்ணினேன்!”  

“இதுக்கு நீ என்னை கிள்ளியே இருக்கலாம். இனிமே இப்படி பண்ணாதே, டூ யு காட் இட்” என்று சைந்தவி கடினமாய் சொல்லவும்,

“எஸ், ஐ காட் இட்ன்னு நினைக்கிறேன்” என ப்ரியா விளையாட்டுப் பேச்சு பேச,

“மொத்த சிஸ்டமும் கிராஷ் பண்ணிடுவேன். விளையாடாதே. உன்னால மொத்த ப்ராஜெக்ட்டும் அஃபாக்ட் ஆகும்”  

“நோ, நோ, வேண்டாம், வேண்டாம், இனிமே பண்ண மாட்டேன்!” என காதை பிடிக்க,

முறைத்தபடி எழுந்தாள், “அதுதான் சாரி சொல்லிட்டேன் தானே ப்ளீஸ்” எனப் ப்ரியா பேச,

“ரொம்ப பண்றோமோ” என சைந்தவிக்கே தோன்ற, அவளின் தோளில் “இட்ஸ் ஓகே” என்ற பாவனையில் தட்டியவள் எழுந்து அவளின் கம்ப்யுடர் முன் அமர்ந்தாலும் சிறிது நேரத்திற்கு மேல அமர முடியவில்லை, எழுந்து ரெஸ்ட் ரூம் செல்வது போல சென்றவள் அங்கே சென்றதும் தண்ணீரை அடித்து அவளின் கன்னத்தை கழுவினாள்.

அன்பில் செய்யும் சிறு செய்கை, ஆனாலும் அது சைந்தவிக்கு பிடித்தமில்லை. யாரும் அவளை சிநேகிதமாய் தொடுவது கூடப் பிடிக்காது. சிறு வயதில் இருந்தே, அவளை விட அவளின் பொருட்களை தொட்டால், இன்னும் கோபம் வரும். பின் அதனை தொடக் கூட மாட்டாள், வேண்டாம் என்று விடுவாள். அதே போல யாருடைய பொருட்களையும் அவளும் உபயோகிக்க மாட்டாள்.

சிறிது சமன்பட்டுக் கொண்டு வந்து அமர்ந்து கொண்டு வேலையை கவனிக்க, வெகு விரைவாக வேலையை முடித்து விட்டு எல்லோரையும் அவளின் இடத்தினில் இருந்தே வேடிக்கை பார்த்தபடி இருந்தாள்.

“நீ முடிச்சிட்டியா” என்ற ப்ரியாவின் கேள்விக்கு, “இன்னும் இருக்கு கொஞ்சம் கேப் எடுத்திருக்கேன்” என்றுரைக்க, “இல்லை முடிச்சிட்டன்னா, எனக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணேன்” என்றவளிடம்,  

“முடிச்சிட்டேனா பண்றேன்” என்ற சுருக்கமான பதிலோடு மீண்டும் வேடிக்கை பார்க்க, அதற்குள் அவளின் டீம் லீடர் அழைக்க எழுந்து சென்றாள்.

எதிரில் வந்தமர்ந்தவளின் கழுத்தில் தொங்கிய ஐ டீ கார்டை சிறிது நேரம் வெறித்தான் ப்ரித்வி. எஸ். சைந்தவி விஜய் என்ற பெயர் அதில் இருந்தது.

அதை பார்த்ததும் “அஃபிஷியலா அன் அஃபிஷியலா” என்ற கேள்வியை சைந்தவி முன் வைக்க,

“அன் அஃபிஷியல்” என்றான் ப்ரித்வி.

“அதை ஏன் நம்ம ஆஃபிஸ்ல பேசணும்?”

“வேற எங்கே பேச, நீ வீட்டுக்கு வரமாட்ட, நீ தங்கி இருக்குற பொண்ணுங்க ஹாஸ்டல்க்கு நான் வர முடியாது. என்ன பண்ணலாம்?”  

“சரி சொல்லு ப்ரித்வி” என்றவளின் குரலில் சிறு இளக்கம்.

“எங்களோட படிச்ச ஒரு ஃபிரண்ட் மூலமா டைவர்ஸ்க்கு கேட்டிருக்கான் விஜய்”              

சில நாட்களாக தொடர்ந்து வற்புறுத்தல் இப்போது ப்ரித்வி மூலமாக, “என்ன பண்ணலாம்னு இருக்கே சைந்து?”

“குடுக்க மாட்டேன் அண்ணா. அவனுக்கு வேற கல்யாணம் பண்ணனும்னா பண்ணட்டும். நான் நோ அப்ஜக்ஷன் தர்றேன். ஆனா டைவர்ஸ் குடுக்க மாட்டேன்” என ஸ்திரமாக சொன்னாள்.

“சைந்து இந்த உறவை பிடிச்சு வெக்க வேண்டிய அவசியம் என்ன, சேர்ந்து இருக்கலைன்றப்போ?”

“எங்கே பிடிச்சு வெச்சேன் அவனை பிடிச்சு வைக்க முடியுமா? யாராலையும் முடியாது! அது தெரியாம புரியாம தானே இந்த நிலமையில இருக்கேன்” என்றுரைத்தவளின் குரலில் அப்படி ஒரு விரக்தி.

“சேர்ந்து வாழலாமே” என்ற வார்த்தைகள் ப்ரித்வியின் வாய் வரை வந்ததை அப்படியே விழுங்கிக் கொண்டான். “அவனோடா? என் தங்கையா?” என்ற எண்ணம் இதுநாள் வரையிளுமே இருந்தது. இப்போதும் இருக்கின்றது.  

விஜய்.. இல்லையில்லை விஜயன்! அதுதான் அவனின் பெயர்! காதலாகி, கசிந்துருகி, வீட்டை விட்டு வெளியே வந்து என சொல்லிக் கொண்டாலும், ஓடி வந்து, திருமணம் செய்து, போலிஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்து, பெரிய கலாட்டாவாக நடந்தது அவளின் திருமணம்.  அப்படி நடந்த திருமணம் அது விவாகரத்தில் முடிந்தால் பின் அவளின் வாழ்க்கைக்கு என்ன அர்த்தம். மனதில் அப்படி ஒரு சோர்வு.  

முன் குறிப்பு :

“இந்த ப்ரித்வி எங்கே போனான், எனக்கு வீட்டுக்கு போகணும், கிரௌண்ட் போயிருப்பான். எருமை கொஞ்சம் கூட நான் வெயிட் பண்ணுவேன் போகணும்ன்னு அறிவிருக்கா” என்று அண்ணனை திட்டியபடி அவன் எங்கே என பறந்து விரிந்த அந்த காலேஜில் யாரை கேட்பது என்று தெரியாமல் விழித்து நின்றாள் சைந்தவி.

சென்னையில் இருக்கும் பழமை வாய்ந்த புகழ் பெற்ற பொறியியல் கல்லூரி. ப்ரித்வி, அவளின் அண்ணன், அந்த கல்லூரியில் பொறியியல் மூன்றாம் வருடத்தில் இருந்தான், அவன் படிப்பதினாலேயே சைந்தவியையும் அங்கே தான் அவளின் அப்பாவும் அம்மாவும் சேர்த்திருந்தனர்.

சைந்தவி மிக நன்றாக படிக்கும் பெண், அண்ணா யுனிவெர்சிட்டியில் இடம் கிடைத்த போதும், தனியாக மகள் ஏன் வேறு கல்லூரி போக வேண்டும் என நினைத்து அவளின் அப்பா அவளை அங்கே வேண்டாம் எனச் சொல்லி, அதைவிடவும் ரேங்கில் சற்று பின்னைடைந்து இருக்கும் கல்லூரியில் சேர்த்தார்.

சைந்தவி “அப்பா அங்கே போறேன்” என்றதற்கு “வேண்டாம் அண்ணனுடன் போ” என்று விட்டனர்.

சற்று கட்டுப் பெட்டியான அல்ல, மிகவும் கட்டுப் பெட்டியான குடும்பம். அவளின் அப்பா ஸ்கந்தநாதன் ஆடிட்டர், அம்மா மேகலா குடும்பத் தலைவி. சொந்தமாக ஆடிட்டிங் ஆஃபிஸ் இருந்தது. தன்னுடைய தொழிலில் ஒரு உயர்ந்த ஸ்திரமான இடத்தினில் இருப்பவர். சென்னையில் உள்ள பிரபலங்கள் பலர் அவரின் கிளையண்ட்ஸ். 

ப்ரித்வி படிப்பில் மிகுந்த சுமார் ரகம், ஆடிட்டிங் பாஸ் செய்ய மாட்டான் என்று புரிந்தவராக பொறியியல் சேர்த்தார். படிக்கட்டும் பின்பு வேறு ஏதாவது தொழில் பார்த்து வைத்து விடலாம் என்று. மகள் படிப்பில் சுட்டி அவளை சொல்ல, அவளுக்கு கம்ப்யுடர் மீது அப்படி ஒரு மோகம். கம்ப்யுடர் எஞ்சினியரிங் தான் வேண்டும் என்று சொல்லி விட வேறு வழியில்லாமல் அதனில் சேர்த்தார்.

அப்பொழுதும் ப்ளஸ் டூ முடித்தவுடன் சீ ஏ படிப்பதற்கு சில ஆரம்ப பரீட்சைகள் இருக்க, அதனை எழுத சொல்லி வற்புறுத்த, சென்றவள் ஒரு கேள்விக்கு கூட பதிலளிக்காமல் வந்திருக்கிறாள் என்று மேகலா மூலமாக தெரிந்த பிறகு அவளை வற்புறுத்துவது வீண், பின் இதுவும் செய்யமாட்டாள் வேறு எதுவும் செய்ய மாட்டாள் என்று புரிந்தவராக அவளிஷ்டப்படி படிக்க அனுமதித்தாலும், அண்ணனின் காலேஜ் என்று சொல்லி விட வீட்டில் சில பல எதிர்ப்புகளை தெரிவித்து பின் வேறு வழியில்லாமல் சேர்ந்தாள்.

இப்போது இரண்டு மாதமாக அண்ணனுடன் கல்லூரி வருகிறாள். இருவரும் என்பதால் கார் வாங்கி கொடுத்து விட்டிருந்தார்.

இன்னும் சைந்தவி கார் பழகவில்லை, அதற்கான அனுமதி இன்னும் அப்பாவிடம் இருந்து கிடைக்கவில்லை. அதனால் ப்ரித்வியை எதிர்பார்த்து தேடி இருந்தாள்.

அப்போது ப்ரித்வியின் நண்பன் ஒருவன் வந்து “பேஸ்கட் பால் ப்ராக்டிஸ்ல இருக்கான், கொஞ்சம் நேரம் வெயிட் பண்ணச் சொன்னான்” என்று சொல்லி சென்றான்.  

பேஸ்கட் பால் கோர்ட் நோக்கி சென்றாள். அங்கே சில பேர் அமர்ந்திருக்க, சில பேர் ப்ராக்டிசில் இருக்க, அந்த சில சில பேர்கள் ஆண்கள் மட்டுமே!

இவள் உள்ளே நுழைந்ததுமே அமர்ந்திருந்த அனைவரின் பார்வையும் ஒரு நிமிடத்தில் இவள் மீது திரும்ப, விளையாடிக் கொண்டிருந்தவர்கள் சிலரும் திரும்ப, ஆனால் ப்ரித்வி இவளை கவனிக்கவில்லை.

அவன் விளையாடிக் கொண்டிருந்தான்.

இவள் அவனை எப்படிக் கூப்பிடுவது என்று பார்க்க, எல்லோரும் அப்படி பார்த்திருந்தனர். ஏனென்றால் அப்படி ஒரு அழகி சைந்தவி!

அதனையும் விட அப்படி ஒரு மென்மை அவளின் தோற்றதினில் இருக்கும். அப்படி ஒரு நிறம், சிரித்தாள் கூட முகம் சிவந்து விடுவது எதிரில் இருப்பவருக்கு தெரியும். நல்ல உயரம், மாடலிங் அழகிகள் உணவு உண்ணாமல் வைத்துக் கொண்டிருக்கும் உடல் வாகு இவளுக்கு இயற்கையிலேயே இருக்கும். அப்படி உணவை கட்டுவாள் ஆனால் உடல் எடை ஏறவே ஏறாது.

அதனையும் விட அவர்கள் க்ரீம், லோஷன், ஃபேஷியல் என போட்டு பாதுக்காக்கும் சருமம், இவளுக்கு இயற்கையாக நாள் முழுவதும் வெயிலில் காய்ந்தால் கூட இருக்கும்.

ஆளை அசரவைக்கும் அழகி! ஆனால் தோற்றத்தினில் மட்டும் தான் மென்மை. பேச்சினில் கிடையவே கிடையாது.

“ப்ரித்வி” என சத்தமாக அழைக்க, சட்டென்று திரும்பினான் ப்ரித்வி. இவளை பார்த்ததும், விளையாட்டில் “ஒரு நிமிஷம்” என்று சொல்லி இவளிடம் வந்தான்.

வந்து கொண்டே எல்லோர் பார்வையும் இவள் மேல் இருப்பதை பார்த்தவன் “இங்க ஏன் வந்த, கொஞ்சம் நேரம் வெயிட் பண்ணச் சொன்னேன் இல்லையா?” எனக் கடுப்பாக சொல்லவும்,

“ஐ நீட் டு கோ ஹோம், நான் வீட்டுக்கு போகணும்” என ஒன்றையே தமிழிலும் ஆங்கிலத்திலும் சொன்னாள்.

“ஜஸ்ட் ஒரு டென் மினிட்ஸ் வந்துடறேன்”  

“சரி நான் இங்கேயே உட்காருறேன்”

“இங்கே எல்லாம் வேண்டாம் போ” என ப்ரித்வி சொல்ல, அவள் மறுக்க, என நேரம் கடக்க, பார்ப்பவர்களுக்கு இருவருக்கும் இடையே வாக்குவாதம் என்று புரிந்தது.

“ப்ரித்வி” என்ற அழைப்பு கேட்க, திரும்பியவனிடம்,

“எவ்வளவு நேரம் தான் ஃபிகர் கிட்டப் பேசுவ, பேசறது நீ, இங்க அத்தனை பேரும் உங்களை தான் பார்க்கறாங்க. கேம் டிஸ்டர்ப் ஆகுது” என சத்தமாக சொல்லிக் கொண்டே அவர்களை நோக்கி வந்தான்.   

“இதுக்கு தான் சொன்னேன்” என சைந்தவியிடம் சொல்லிக் கொண்டே அவளை பார்த்து முறைத்தான் ப்ரித்வி.

அவள் இவனை பார்த்தாள் தானே, “ஃபிகர்” என்று சொன்னவனை முறைத்துப் பார்த்திருந்தாள். உடனே பார்வையை அவன் மீது செலுத்திய ப்ரித்வி, “திஸ் இஸ் மை சிஸ்டர் விஜய்” என்று அதிகாரமாக சொல்லவும்,  

“ஓஹ்” என்றவன், உடனே “சாரி” என்றும் ஒரு கையை உயர்த்தி சொன்னான், மற்றொரு கையினில் பால் இருக்க, நடந்து வந்தவன் அங்கேயே நின்று விட்டான்.

அதற்குள் சைந்தவி விஜயை பார்த்து “ஓஹ் சிஸ்டர்ன்னு சொன்னா சாரியா, அப்போ வேற பொண்ணா இருந்தா ஃபிகர்ரா கேர்ள்ஸ் ஆர் அல்வேய்ஸ் கேர்ல்ஸ். ரெஸ்பெக்ட் தெம்!” என கை நீட்டி குரலுயர்த்தி சொல்ல,

“ம்ம்! சொல்லிட்டல்ல, அப்படியே ஃபாலோ பண்ணிக்கறேன். இப்போ நீ கிளம்பு, கை நீட்டிப் பேசாதே!” என்று சொன்னவனின் பேச்சினில் அப்படி ஒரு ஆளுமை.

அவனை பார்வையால் அளந்தாள் சைந்தவி, மாநிறதிற்கும் கருமைக்கும் இடைப்பட்ட ஒரு நிறம், நல்ல உயரம், அகன்ற தோள்கள், வசீகரமான முகம், கண்களில் அப்படி ஒரு அலட்சியம்! ஸ்லீவ் லெஸ் பனியன் ஷார்ட்ஸ் ஸ்போர்ட்ஸ் ஷூ என ஸ்போர்ட்ஸ் லுக்கில் இருந்தான். 

அவனில் இருந்து வியர்வைகள் வடிந்து கொண்டிருக்க அதனை துடைக்காமல் அவன் நின்று பேசியது சற்று கவர்ச்சியாக இருந்தது.    

அவனின் பதில் சைந்தவியை கிண்டல் செய்வது போல தோன்ற இன்னும் அவனை முறைத்து பார்த்தாள்.   

அவளை விடுத்து ப்ரித்வியிடம், “ஒன்னு விளையாடு இல்லை அவளை கூட்டிட்டு கிளம்பு” என்றவன் குரலை தழைத்து, “எல்லோரும் உன் சிஸ்டரை வாயை தொறந்து பார்த்துட்டு இருக்கானுங்க. அனுப்பு இல்லை கிளம்பு!” என்றான் ப்ரித்விக்கும் சைந்தவிக்கும் மட்டும் கேட்குமாறு! 

உடனே ப்ரித்வி அவனின் உடமைகளை எடுக்க விரைய,

விஜய் பேசியதைக் கேட்டு இன்னும் சைந்தவி முறைக்க, “எவ்வளவு முறைச்சு பார்த்தாலும் எனக்கு ஒன்னும் ஆகாது. உன் கண்ணு வலிக்கப் போகுது, கிளம்பு முதல்ல!” என்று சைந்தவியையும் அதட்டினான்.

பின்னே எல்லோரும் அவளை விடாது பார்க்க, “இவ ஏன் இங்கே வந்தா?” என்ற எண்ணம் தான் அவனிற்கும்.

“என் கண்ணு வலிச்சா உனக்கென்ன?” என சைந்தவி பேச,  

“அதானே! எனக்கென்ன? முறைச்சு பாரு, நல்லா பாரு” என்று நக்கல் பேசியபடி, ஒரு கையால் பாலை உருட்டி அதனை ஒற்றை விரலில் தாங்கி நின்ற போதும் பார்வை சைந்தவிடம் இருக்க,

வெகு நேரம் முறைக்க முடியாமல் கண்களை சுருக்க, அதில் விஜய்க்கு சிரிப்பு வந்துவிட, வாய் விட்டு சிரித்து விட்டான். அவன் சிரிப்பு இன்னும் அப்படி ஒரு கோபத்தை சைந்தவிக்கு கொடுத்தது.

ஒரு அழகான பெண்ணின் முன் அவளுக்கு கடுப்பை கிளப்பி சிரித்துக் கொண்டிருந்த விஜயை அங்கிருந்த அநேகம் பேர் முறைத்து பார்க்க, சிலர் வெட்டவா குத்தவா என்ற பார்வையை கூட கொடுத்தனர்.

சிரிப்போடே திரும்பி அவன் விளையாடப் போய்விட, அதற்குள் ப்ரித்வி வந்துவிட, அவனுடன் நடக்கத் துவங்கியவள் “யார் அவன் ரொம்ப பண்றான்?” என,

“அவன் பண்ணலை, நீ தான் பண்ற, போன்னு சொன்னா போகணும்”  

“என்ன போகணும்? நான் உன் தங்கைன்னு இங்க இருக்குறவங்களுக்கு தெரியாதா?”  

“எப்படித் தெரியும்? நான் இங்க இருக்குறவங்களோட பழகறது ரொம்ப குறைவு. நீ வந்து ரெண்டு மாசம் தான் ஆகுது!”

“இருந்தாலும் உன் ஃபிரண்ட்ஸ்க்கு எப்படித் தெரியாம இருக்கும்?”

“என் ஃபிரண்ட்ஸ்க்கு தெரியும், இவங்க என்னோட விளையாடுறாங்க, ஜஸ்ட் என்னோட டீம் மேட்ஸ். நாட் க்ளோஸ் டு மீ”  

“என்னவோ அவனுக்கு ரொம்ப திமிர்” என்று முனகிக் கொண்டே ப்ரித்வியுடன் சென்றாள்.

அங்கே விஜயிடம், “ஏன்டா டேய், காலேஜே அவ பின்னாடி சுத்துது. அப்படி அழகா இருக்கா! நீயேண்டா பேசி கடுப்பேத்துற” என்று அவனின் நண்பன் ஜீவன் கேட்கவும்,  

“என்ன காலேஜ் சுத்துதா? நான் சுத்தலையே” என்று அலட்சியம் போல சொல்லவும்,

“நீ சுத்திட்டாலும்” என்றவன், “நீ சுத்த மாட்டடி, நீ சுத்த வைக்க தான் பார்ப்ப” என்று விஜயை கணித்தவனாக சொல்ல,  விஜயின் புன்னகை பெரிதாக விரிந்தது. கூடவே “ஏன் நீயும் ஒரு ட்ரை பண்ணேன்” என்றான் கிண்டலாக. “பண்ணலாம்னு இருக்கேன்” என்று சீரியசாக பதில் சொன்னவனிடம்,

“பார்த்துடா போனவாரம் தான் ஃபைனல் இயர்ல ஒருத்தன் இப்படி எதோ பண்ணினான்னு ப்ரித்வி அவனை ஒரு வழி பண்ணிட்டான்னு பேச்சு. இன்னும் அவன் காலேஜ் கூட வரலை”  

“அப்போ உனக்கு ப்ரித்வியோட தங்கச்சின்னு முன்னமே தெரியுமா?” என்றான் ஆச்சர்யமாக.  

“தெரியாம? காலேஜே சுத்துதுன்னு சொல்ற அந்த பொண்ணை எனக்கு எப்படிடா தெரியாம இருக்கும்” என கண்ணடித்தான்.

“ஆங்” என வாய் பிளந்து பார்த்து இருந்த நண்பனிடம், “நாம கவனிக்கறது முக்கியமில்லை மச்சி நம்மை கவனிக்க வைக்கணும்” என்றான் விளையாட்டு போல,  

“அப்போ” என ஜீவன் இழுக்க, “ரொம்ப இழுக்காதடா! ஜஸ்ட் ஒரு அழகான பொண்ணு நம்மளை பார்க்கணும்னு ஒரு ஆவல்! அவ்வளவு தாண்டா! கற்பனையை பறக்க விட்டு எங்க குழந்தைக்கு என்ன பேர் வைக்கன்னு நீ யோசிக்காதே!” விஜயன் பேசப் பேச “ஆங்” என இன்னும் ஜீவன் வாயை பிளக்க, சத்தமாக அதை பார்த்து சிரித்துக் கொண்டே விஜயன் பந்தை கூடையை நோக்கி வீச தூரமாக இருந்தாலும் கச்சிதமாக பந்து கூடையில் விழுந்தது. 

Advertisement