Advertisement

அத்தியாயம் இரண்டு :

காதல் அதன் வரையறை என்ன?

சைந்தவி சென்னையில் உள்ள ஒரு பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தாள். இது அந்த நிறுவனத்தில் அவளது இரண்டாவது வருடம். அவளின் கல்லூரியில் இருந்து வருடா வருடம் அங்கே நிறைய பேர் தேர்வாவர். அப்படி ப்ரித்வி தேர்வாகியிருக்க அதன் பின் அவளுமே. ப்ரித்விக்கு அங்கே நான்காவது வருடம்.

முதல் நிலையில் இருக்கும் நிறுவனம் என்று சொல்லிவிட முடியாது. ப்ரித்வியின் பெர்ஃபார்மன்சிற்கு அங்கே கிடைத்ததே அதிகம். அதனால் அங்கே குப்பை கொட்டிக் கொண்டிருந்தான். சில நாட்கள் வேலை அனுபவம் வேண்டும் பின்பு தொழில் பார்க்கலாம் என்று அவனின் அப்பா விட்டு வைத்திருந்தார்.

சைந்தவியின் செயலிற்கு பிறகு அவனை ஒரு வழியாக்கிக் கொண்டிருந்தார் அவனின் அப்பா.    

இன்னும் முதன்மையான நிறுவனத்தில் சைந்தவிக்கு அழைப்பு வந்த போதும் “இங்கே வா” என ப்ரித்வியின் அழைப்பை ஏற்று படிப்பை முடித்தவுடன் அங்கே சேர்ந்திருந்தாள்.

ஏதோ ஒரு வகையில் தொடர்பு வேண்டும் பிறந்த வீட்டினரோடு என்பதற்காக, ப்ரிதிவி சொன்னதும் சரி என்று விட்டாள். எல்லோரும் அவளை விட்ட போதும் அவளை விட்டிராத ஒரே ஜீவன். அதனையும் விட எல்லோரையும் விட பாதிக்கப் பட்டது அவன். அவளால் இன்னும் ஜீரணிக்க முடியவில்லை. இவளின் செயலிற்கு அவனுக்கு அப்பாவிடம் கிடைத்த தண்டனை அதிகம். 

பின்பு ஒரு முறை பார்த்த போது அப்பாவின் கண்களில் கூட சிறு இளக்கம் ஆனால் அம்மா, அவரின் பார்வை சைந்தவிக்கு ஒரு திமிரை கொடுத்தது, ஆம் நான் அப்படி தான் என்று.

ஓடி தான் போனாய் ஆனால் அந்த வாழ்க்கையை கூட உன்னால் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லையே என்பது போல.      

இந்த காதல் அவளுடைய வாழ்க்கையை மாற்றி விட்டது. பெற்றவர்களுக்கும் மகளாக முடியவில்லை, கட்டினவனிற்கும் மனைவியாக முடியவில்லை. பெற்றவர்கள் அவளின் திருமணதிற்கு பின் அவளை ஏற்றுக் கொள்ளவேயில்லை.

விஜயன், அவளாக தான் அவனை விட்டு வந்தாள், திரும்ப வா என அழைக்கவேயில்லை.

என்ன வாழ்க்கை இது எனத் தோன்றும். சில சமயம் செத்து விடலாம் எனத் தோன்றும். அப்போது ஊரில் அவளுக்கு தெரிந்த வகையில், இல்லை கேள்விப்படும், பத்திரிக்கையில் அல்லது செய்தியில் கேட்கும் விஷயங்களை எல்லாம் கொண்டு வந்து அவர்களுக்கு இருக்கும் தைரியம் உனக்கு ஏன் இல்லை எனக் கேட்டுக் கொள்வாள்.

காதல் உலகினில் இப்போது அவள் அதிகமாக வெறுக்கும் வார்த்தை. பெற்றோரிடமும் மதிப்பை இழந்து விட்டாள், கொண்டவனிடமும் மதிப்பை இழந்து விட்டாள்.

அவளை பொறுத்தவரை அவள் செய்தது சரியா தவறா தெரியாது. ஆனால் பெற்றோரை விட்டு வந்ததும் மிகவும் முடியாத ஒரு சூழலில், கணவனை விட்டு வந்ததும் அவ்வாறே.

விட்டு வந்த காரணங்கள் பைத்தியக்காரத்தனமாக தோன்றலாம். அடுத்தவர்களிடம் சொன்னால் இதெல்லாம் ஒரு காரணமா என்று அவளை பரிகசிப்பர். ஆனாலும் நிஜம் அதுதான்!  

அன்றும் வேலையில் ஆழ்ந்திருந்தவளை ப்ரித்வி அலைபேசி மூலமாக அழைத்தவன், “சைந்து இரு கிளம்பிடாதே, நான் வர்றவரை வெயிட் பண்ணு” என்றான்.

நேரம் பார்த்தால் இன்னும் அரைமணிநேரம் இருந்தது. பின்பு வந்தால் அவனே கூப்பிடுவான் என்று வேலையில் ஆழ்ந்து விட, ப்ரியா அவளிடம் “கிளம்பலையா சைந்தவி” எனக் கேட்டாள்.

‘ப்ரித்வி வர்றன்னு சொல்லியிருக்கான்”  

“அப்போ சரி நான் கிளம்பறேன்” எனக் கூடவே சில தோழிகளும் பை சொல்ல, சிறிது நேரத்திலேயே வந்து விட்ட ப்ரித்வி, “போகலாம்” என்றான்.

அவனின் முகம் மிகவும் சீரியசாக இருந்தது.

“என்ன ப்ரித்வி ஏதாவது ப்ராப்ளமா?”  

“வா” என முன் நடக்க, பின் தொடர்ந்தாள். கார் பார்க்கிங்கில் வந்து கார் எடுக்க, மௌனமாக அவனுடன் முன் சீட்டினில் அமர்ந்தாள்.

சிறிது தூரம் வந்து ஒரு காஃபி ஷாப்பில் நிறுத்தினான். எதோ பேச விரும்புகிறான் என்று புரிந்து வர, அம்மா வீட்டினில் ஏதாவது பிரச்சனையா என்று தான் நினைத்தாள்.

ஒரு இடம் பார்த்து அமர்ந்த பிறகு, “ரொம்ப மிரட்டருற மாதிரி பேசறான்” என ப்ரித்வி சொல்ல, “ஒஹ் இது விஜய்” என புரிந்து போயிற்று.

“இவ்வளவு தடவை கேட்கறேன், என்ன பதிலே இல்லை சொல்றான்”

“அவனே பேசினானா?” என்றவளிடம், “ஆம்” என்பது போல தலையாட்டினான்.

“அவன் நம்பர் கூப்பிடு”  

“வேண்டாம் ஏன் வீண் பிரச்சனை?”

“என்னைக்கு இருந்தாலும் பேஸ் பண்ணி தானே ஆகணும். ஒளிஞ்சு ஓடறதுக்கு நான் எந்த தப்பும் பண்ணலை. இவ்வளவு நாளா இல்லாமல் இந்த ரெண்டு மூணு மாசமா தான் இதை கேட்கறான். சோ பதில் தெரியற வரைக்கும் கேட்டுட்டே தான் இருப்பான். ஃபோன் செய்!”  

ப்ரித்வி அழைக்கவும் இரு ரிங்கிலேயே எடுக்கப் பட்டது.

“ஸ்பீக்கர் ஆன் பண்ணு” என ப்ரித்வியிடம் சைகை செய்தாள், அவன் செய்யவும், “ஹலோ திஸ் இஸ் விஜயன்” என்ற குரல் கேட்டது. அதுவே சொன்னது எதோ வேலை செய்து கொண்டே அழைப்பை எடுத்திருக்கிறான் என்று. இது ப்ரித்வியின் அழைப்பு என உணரவில்லை.

“திஸ் இஸ் ப்ரித்வி”  

“ஓஹ்” என்ற குரல் கேட்கவும், செய்து கொண்டிருந்த வேலையை விட்டு ஃபோன் காலில் கவனம் செலுத்துகிறான் என்று புரிந்தது.

“திஸ் இஸ் விஜயன்” என்ற குரல் ஒலிக்கும் போதே அவனின் முகம் தான் சைந்தவியின் முன்.

கண்ணில் வரும் காட்சியெல்லாம் கண்மணியே உறுத்தும், காணாத உன் உருவம் கண்ணுக்குள்ள இனிக்கும்!

நெஞ்சு துடிக்கும் ஓசை அவளுக்கு கேட்டது.  

“சொல்லு ப்ரித்வி ஒத்துக்கிட்டாளா?” என அதிகாரமாக கேட்டான்.

“இந்த அதிகாரதினில், இந்த ஆளுமையில் தான் மயங்கி விட்டேன்” என மனது ஒரு பக்கம் சொல்ல,

“நான் தான் ஃபோன் பண்ணச் சொன்னேன்” என்று சைந்தவி பேசினாள்.

எதிர் முனையில் அப்படியே நிஷப்தம், சைந்தவியும் அமைதியாக அப்படியே இருந்தாள்.

ஒரு முழு நிமிடத்திற்கு பின் “சொல்லு” என்ற விஜயின் குரல் கேட்க,

“யாரை கேட்டும் நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கலை, நானா தான் செய்துகிட்டேன். அப்போ யார் சொல்லியும் நான் டைவர்ஸ் குடுக்க மாட்டேன். நானா கொடுத்தா தான் உண்டு” என்றாள் ஆழ்ந்த குரலில்.

அந்த குரலில் மீண்டும் எதிர்முனை பேச்சற்று நின்றது. பின் சில நொடிகளில் “சரி, யார் சொல்லியும் கொடுக்காதே! நீயே கொடு!” என்ற இலகுவான குரல் கேட்டது.

“டைவர்ஸ் எதுக்கு கேட்பாங்க? இன்னொரு கல்யாணம் பண்ண தானே. நான் பெர்மிஷன் கொடுக்கறேன். நீ பண்ணிக்கோ”  

“ஏய், என்ன?” என்ற விஜயின் கோபமான குரல் ஒலிக்க ப்ரித்வி கலவரமாக பார்த்தான்.

“என்ன நான் கல்யாணம் பண்ணிக்க நீ பெர்மிஷன் கொடுக்கணுமா, போடி!” என்றவன், “டைவர்ஸ் கேட்கறதுக்கு கல்யாணத்துக்கு இல்லை, உனக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் வேண்டாம்னு” என்றான் அலட்சிய குரலில்.

“டைவர்ஸ் கொடுத்துட்டா மட்டும் நடந்தது இல்லைன்னு ஆகிடுமா சம்மந்தம் இல்லைன்னு ஆகிடுமா”

“முதல்ல நீ கொடு அப்புறம் இருக்கா இல்லையா பார்க்கலாம்”

“நல்லா கேட்டுக்கோ, குடுக்க முடியாது! சும்மா அவங்க இவங்கன்னு தூது விடாதே! ப்ரித்வியை டிஸ்டர்ப் பண்ணாதே! எதுவா இருந்தாலும் தைரியமா என்கிட்டே பேசு” என அவனை உசுப்பி விடுவது போல பேசினாள். வேண்டுமென்று செய்யவில்லை வாழ்க்கை மேல் இருந்த கோபத்தினில் யாரிடம் காட்டுவது என்று தெரியாமல் தானாக வந்தது.  

“என்ன திமிர் ரொம்ப அதிகமாயிடிச்சு போல, என்கிட்டே தைரியம் அது இதுன்னு பேசற?”

“திமிர் அதிகமாகிடுச்சா, எப்போ அது குறைஞ்சது அதிகமாக” என இன்னும் அலட்சியமாக கேட்டாள். இவள் ஏன் இப்படி பேசுகிறாள் என்று பார்த்திருந்தான் ப்ரித்வி ஆனாலும் தலையிடவில்லை.  

“அதுதானே நான் தான் தப்பா சொல்லிட்டேன்” என்றவன்,

“டைவர்ஸ் கொடுக்க மாட்டேன்னு சொல்லி, இப்போ நான் நல்ல பொசிஷன்ல இருக்கேன்னு என்னோட திரும்ப ஒட்டிக்கலாம்னு பார்க்கறியா” என அவனும் கடுப்பில் விஜய் பேசினான்.

அந்த பேச்சுக்களை எல்லாம் கேட்க பிடிக்காமல் ப்ரித்வி அந்த இடம் விட்டு நகர்ந்து விட்டான். “என்ன குறை இவளுக்கு? அழகில்லையா? அறிவில்லையா? படிப்பில்லையா? பணமில்லையா? இந்த கருமம் பிடித்த காதலில் விழுந்து வாழ்க்கையை தொலைத்து நிற்கிறாள்”

“எல்லோரையும் விட்டு அவனே கதி என்று சென்றவளை பார்த்து கேட்கும் கேள்வியா இது? ஒட்டிக்கிறியா என, ச்சே!” என வாய்விட்டு சொல்லிக் கொண்டான் ப்ரித்வி. 

அதுவரை கோபமாக அலட்சியமாக அவனை எதிர்கொண்டவளுக்கு இந்த ஒட்டிக்கிறாயா பேச்சு ஒரு வித துக்கத்தை கொடுத்தது.

“செத்தாலும் இனிமே எனக்கு அப்படி ஒரு எண்ணம் வராது” என்றாள் முயன்று குரலை ஸ்திரப் படுத்தி. எப்போது வேண்டுமானாலும் அது உடைந்து விடுவேன் என்றது.    

“வராது தானே, அப்புறம் என்னை விட்டு ஏன் தொலைய மாட்டேங்கற. நானா போன்னு சொன்னேன், நீயாதானே போன, அப்புறம் ஏன் முழுசா போக மாட்டேங்கற” என எரிச்சலாக பேசினான்.

“ஒட்டிக்கிற, தொலைய மாட்டேங்கற” என்ற வார்த்தைகள் அதிகம் அவளை தாக்கியது. அதெல்லாம் விஜயனிற்கு சாதாரண வார்த்தைகள். அவன் தினமும் பேசுவது. அவன் வளர்ந்த இடத்தினில் இதெல்லாம் சகஜம். சைந்தவிக்கு அந்த வார்த்தைகள் எல்லாம் பழக்கமில்லை. இருவரின் வாழ்க்கை முறைகளும் வேறு வார்த்தை முறைகளும் வேறு.  

அமைதியாக ஃபோனை அணைத்து விட்டு தலையை பிடித்து அப்படியே அமர்ந்து கொண்டாள். கண்களில் இருந்தும் கண்ணீர்.   

சில அடிகள் நடந்த ப்ரித்வி திரும்பி இவளை பார்க்க இவள் தலையை பிடித்து அமர்திருப்பதை பார்த்ததும் திரும்ப வந்தான். 

சைந்தவியின் கண்களில் கண்ணீரை கண்டதும் “என்னவாம் அவனுக்கு?” என்று அவ்வளவு கோபத்தோடு கேட்க, ப்ரித்வியின் கோபம் பார்த்தவள் நடப்பிற்கு திரும்பினாள்.

“கோபப்படாதே அண்ணா, பார்த்துக்கலாம்”  

“என்ன உனக்கு அவன் கிட்ட பிடிச்சது, இப்படி உன்னோட வாழ்க்கையை கெடுத்துட்டு நிக்கற, இன்னும் உனக்கு அவனை பிடிக்குதா? அவனோட வாழ இஷ்டப் படறியா?”

“தெரியலை, ப்ரித்வி தெரியலை” என்றவள் தேம்பி தேம்பி அழத் துவங்கினாள்.

சூழலில் கணத்தை ப்ரித்வியால் தாள முடியவில்லை.   

“முதல்ல அழுகையை நிறுத்து” என்று அதட்டினான் கடினமான குரலில்.

தேம்பிக் கொண்டே நிமிர்ந்து பார்க்க, “எனக்கு நீ என்ன பண்ணுவியோ தெரியாது. நீ வாழ்க்கையில தோத்துப் போயிட்டன்னு ஆகவே கூடாது! புரிஞ்சதா! இந்த கல்யாண வாழ்க்கை நிலைக்குமா இல்லை வேற கல்யாணம் பண்ணப் போறியா எனக்குத் தெரியாது. ஆனா இப்படி நீ தனியா இருக்குறதை நான் அனுமதிக்க முடியாது. டூ யு காட் இட்” என்றான்.

என்ன வேறு திருமணமா நினைத்தாலே சைந்தவிக்கு உமட்டியது. “இந்த தன் திருமணம் ஏன் சரியாக வரவில்லை என்ற யோசனை தானே தவிர, இல்லை இந்த திருமணம் நடக்காமல் இருந்திருக்கலாமோ என்ற யோசனை தானே தவிர, அப்பா பேச்சை கேட்டிருக்கலாமோ? வேறு யாரையாவது திருமணம் செய்திருக்கலாமோ?” என்று க்ஷணப் பொழுதும் தோன்றியதில்லை.

“இப்படி பேசாதே, கண்டிப்பா லைஃப்ல தோத்துப் போக மாட்டேன். ஆனா வேற கல்யாணம் கிடையாது”.

“அப்போ அவனோட சேர்ந்து வாழு”  

“என்னை தொலைஞ்சு போன்னு சொல்றவன் கிட்ட என்னை சேர்ந்து வாழ சொல்றியா” என்று அழுகையோடு முறைத்தவள், “நான் பார்த்துக்கறேன் எழுந்திரு, போகலாம்! பொண்ணுங்களுக்கு கல்யாணம் மட்டும் வாழ்க்கை கிடையாது” என்று எழுந்து விட்டாள்.

காஃபி குடிக்காமலேயே பில் கொடுத்து வந்தனர். பின்னரும் அவளை ஹாஸ்டல் விடுமுன்னர் அவளுக்கு இரவு உணவை வாங்கி கொடுத்து விட்டவன், “பை” எனக் கிளம்பினான்.

“ரொம்ப குழப்பிக்காதே, சரியாகிடும்” என சைந்தவி தான் அவனுக்கு தேறுதல் உரைத்தாள். “சரி” என்பது போல தலையசைத்தாலும் ப்ரித்வியின் முகம் தெளியவில்லை.

அவள் ஹாஸ்டலின் உள் நுழைந்ததும் விஜயனை அழைத்தான் ப்ரித்வி.

அவன் எடுத்ததும் “எங்கே இருக்கிற, நான் பார்க்கணும்!”

“ஆஃபிஸ்ல ஒரு கான்ஃபரன்ஸ் கால் இருக்கு, கிளம்ப ஒன்பது மணிக்கு மேல ஆகும். இன்னைக்கு கஷ்டம் தான்!”  

ஒன்றும் பேசாமல் ப்ரித்வி வைத்து விட்டாலும் அவன் இருந்த இடத்தினில் இருந்து பத்து கிலோமீட்டர் தூரம் இருந்த விஜயனின் ஆஃபிஸிற்கு கிளம்பினான். சைந்தவியிடம் அவன் பேசிய வார்த்தைகள் அவனுள் கனன்று கொண்டிருந்தது.

அங்கே சென்று விஜயன் வரும் வரையிலும் அமர்ந்திருந்தான். ஒன்பது மணி என்ற போதும், எட்டரை மணிக்கே வெளியே வந்த விஜயன் ப்ரித்வியை எதிர்பார்க்கவில்லை.

அவனை பார்த்ததும் நின்று விட்டவன், பின்பு உடனே “ஹாய் ப்ரித்வி” என்று ஒரு புன்சிரிப்போடு எதிர்கொள்ள,

அந்த சிரிப்பைப் பார்த்ததும், அவனைப் பார்த்ததும், அப்படி ஒரு கோபம் எரிச்சல் கிளம்பியது ப்ரித்விக்கு, விஜயனின் சிரிப்பு ப்ரித்வியை எட்டவில்லை.

இறுகிய முகத்தோடு நின்றான். இரண்டு மூன்று வருடங்கள் இருக்கும் அவனைப் பார்த்து. விஜயனின் தோற்றத்தை ஆராய்ந்தான். ப்ரித்வி போல ஒரு நிறம், ஒரு மேல் தட்டு தோற்றம் இல்லாவிட்டாலும், விஜய் கல்லூரி நாட்களிலேயே ஒரு வசீகரிக்கும் தோற்றத்துடன் தான் இருப்பான். அதனாலேயே அவனின் வசதி வாய்ப்பு சைந்தவிக்கு தெரியாமல் போயிருக்கும் என்பது ப்ரித்வியின் அனுமானம்.

இப்போது இன்னும் அந்த வசீகரம் கூடி இருந்தது. எதுவுமே நடவாவது போல “ரொம்ப ஹாட்டா இருக்க போல” என்று விஜய் பேச,

அந்த நிமிடத்தினில் வார்த்தை வராது தடுமாறினான் ப்ரித்வி. முகமும் அப்படி ஒரு இறுக்கத்தை காட்டியது.

கூலாக வந்து “கம்மான் ப்ரித்வி, கம்! ஒரு கூல் பீர் அடிக்கலாம்!” என்று சொல்லி அவனின் தோளில் கை போடவும், அவனுடைய கரத்தை ப்ரித்வி விலக்கி விட்டான்.

“சரி பேசு” என கைகட்டி புன்னகையுடன் சொல்ல,

அப்படியே ஒரு ஆத்திரம் பொங்க விஜயின் சட்டையை பிடித்து விட்டான், “எப்படி? எப்படி உன்னால ஒன்னுமே நடக்காத மாதிரி இப்படி கூலா பேச முடியுது?”  

சட்டையை பிடித்ததற்கு விஜயிற்கு கோபம் வந்திருக்க வேண்டும். ஆனால் வரவில்லை! காரணம் ப்ரித்வி! கண்கள் எல்லாம் கலங்க தான் ப்ரித்வி அவனின் சட்டையை பிடித்திருந்தான்.

“என்ன உன் பிரச்சனை?” என்றான் அமைதியாக விஜயன்.

“என்ன பிரச்சனையா? நீதான் பிரச்சனை!” என வார்த்தைகளை கடித்து துப்ப, அதற்குள் இரண்டொரு பேர் நடந்தவர்கள் நின்று “விஜயன்” என்றபடி அருகில் வந்தனர்.

“என்னோட ஃபிரண்ட் தான், ஒன்னும் ப்ராப்ளம் இல்லை!” என்றவன் ப்ரித்வியின் கைகளை விலக்கி அவனை பார்த்தான்.

“என்னடா பெரிய பொசிஷன் உன்னது? வந்து ஒட்டிக்கப் பார்க்கிறியான்னு சைந்து பார்த்து கேட்கற? உனக்கு தெரியுமா எங்கப்பாவோட ஒரு ரெண்டு நாள் லாபம் உன்னோட சம்பளம். அதை விட்டு தானே உன்கூட வந்தா, என்னவோ பெரிய இவன் மாதிரி பேசற? டைவர்ஸ் கேட்கற? அப்புறம் அவ என்ன பண்ணுவான்னு யோசிக்க மாட்டியா?” என ஆவேசமாக பேசினான்.

“இவ்வளவு டென்ஷன் ஏன் ஆகற? இதுல என் தப்பு என்ன இருக்கு இப்போ டைவர்ஸ் கேட்கறதை தவிர. அவளா தான் வந்து லவ் யு சொன்னா. அதுக்கு அப்புறம் தான் நான் சொன்னேன். அவளா தான் வந்து கல்யாணம் பண்ணனும்ன்னு ஒத்தை கால்ல நின்னா. அதுக்கு அப்புறம் தான் பண்ணினேன். அதுவும் கல்யாணமாகாம என்னோட அக்கா வீட்ல இருக்கும் போது பண்ணினேன். திரும்ப கொஞ்சம் மாசம் கழிச்சு அவளா தான் வந்து என்னால இங்க இருக்க முடியாது வெளில போகலாம் சொன்னா, என்னால எங்க குடும்பத்தை விட முடியாது சொன்னேன்”

“போயிட்டா..”

“இதுல என்னோட தப்பென்ன இருக்கு, நான் எங்கே விட்டேன் அவளை, ஆச்சு விட்டு போய் மூணு வருஷம் ஆச்சு!” 

“ஓஹ், அவ உன்கிட்ட லவ் சொன்னதால அவளோட லவ்க்கு மதிப்பில்லையா?”  

“நான் எப்போ அப்படி சொன்னேன்” என்றான் தன்மையாகவே.  

“அப்படி தான் ஃபீல் பண்றேன். ஒருவேளை நீ லவ் சொல்லியிருந்தா அவ விட்டு போயிருந்தாலும் பின்னாடி போய் சமாதானம் செய்திருப்பியோ. அவளால தனியா இருக்கவே முடியாது! ஆனா இந்த மூணு வருஷமா தனியா இருக்கா! இப்போ வாழ்க்கை முழுசும் நீ இருன்னு சொல்ற!” என்ற ப்ரித்வியால் அதற்கு மேல் அங்கே நிற்க முடியவில்லை.

ஆண் பிள்ளைகள் அழமாட்டார்கள் என்று யார் சொன்னது. ப்ரித்விக்கு அழுகை வந்தது. பேசாமல் திரும்ப நடக்க ஆரம்பித்து விட்டான்.

செல்லும் ப்ரித்வியை பார்த்திருந்தான் விஜயன். அவனின் சொல் செயல் எல்லாம் முடங்கியது!

ஏன் தனியாக இருக்கிறாள் என்ற யோசனை பலமாகத் தாக்கியது.

இவ்வளவு பேசும் ப்ரித்வியால் சைந்தவியை வீட்டிற்கு அழைக்க முடியாது. அவளை பெற்றோர் ஏற்றுக் கொள்ளவேயில்லை. அவன் துணை நிற்பது இது வரையிலுமே அவர்களுக்கு தெரியாமல் தான், தெரிந்தும் இருக்கலாம், ஆனால் அதை பேசினால் அதற்கான ஆதரவு இருக்காது என்று தெரியும்.

இது எதுவுமே விஜயனிற்கு தெரியாது. அவளின் பெற்றோர்கள் ஏற்றுக் கொள்ளாதது தெரியவே தெரியாது! அவனை விட்டு சென்று வீட்டினரோடு இருக்கிறாள் என்று தான் நினைத்திருந்தான். அன்றைய சூழல்கள் அவனை அப்படி தான் நினைக்க வைத்திருந்தன.

புரியாமல் குழம்பி நின்றான்!   

வேண்டாம் என்று போய்விட்டாள், அவளை நினைத்து உருகி, மருகி, தாடி வைத்து புலம்பி, குடித்து, இப்படி ஒரு ரகம் அல்ல விஜயன். பல நினைவுகள் மனதிற்கு சொந்தமாக இருந்தாலும், மனதோடு தான்! ஏக்கங்கள் இருந்தாலும் மனதோடு தான்! எல்லாம் அவன் மனதோடு தான்!

   

Advertisement