பின் வண்டியை திருப்பிக் கொண்டு வர… “நீங்க எதுக்கு வந்தீங்க கண்ணு இந்த இருட்டுல”
அதற்கு பதில் சொல்லாமல் “ஏறச் சொல்லுடா?” என்றாள்.
“நான் ஓட்டட்டுமுங்களா?”
“ஏறச்சொல்லுடா” என்று மீண்டும் சொல்ல, சுதர்ஷனின் பின்னால் அமர்ந்தான்.
மூன்று பேர் என்பதால் வண்டியை வெகு நிதானமாக ஓட்டிச் சென்றாள் நிலா.
இத்தனை நேரம் இருந்த மனச் சுணக்கம் மறைந்தே விட்டது தமிழ் செல்வனுக்கு.
ஒரு அமைதியான பயணம்!
நாற்பது நிமிடமும் யாரும் வாயைத் திறக்கவில்லை. ஆனால் அந்த பயணத்தை வெகுவாக அனுபவித்தான், மனம் லேசாகிவிட்டது.
வீடு வந்த போது நேரம் பன்னிரெண்டை நெருங்கியது. கௌரிஷ் வெளி திண்ணையில் அமர்ந்திருந்தான்.
இவர்களைப் பார்த்ததும் எழுந்து உள்ளே சென்று நின்று கொண்டான்.
அவர்கள் உள்ளே வந்தது தான் தாமதம், “எங்க போனீங்கப்பா அவ்வளவு தூரம், அதுவும் நடந்து” என்று கெளரிஷ் வேகமாக கேள்வியைத் தொடுக்க…
“போங்க அப்பு, நாளைக்கு ஸ்கூல் இருக்குள்ள, அப்புறம் பேசலாம்” என்றவன், வேகமாக உணவு மேசைக்கு சென்று என்ன இருக்கிறது என்று பார்த்தான்.
சப்பாத்தி குருமா இருக்க, கைகளைக் கழுவி வந்தவன் அமர்ந்து உண்ண ஆரம்பித்தான்.
நிலாவின் கண்ணசைவில் பிள்ளைகள் உறங்கச் செல்ல, அவள் தான் வாயிலை பூட்டி வந்தாள்.
பூட்டி வந்தவள் அவன் முன் நின்று பேச ஆரம்பிக்க நினைக்கும் போதே,
“எனக்கு முடியலை கண்ணு. நாளைக்கு என்னைத் திட்டுங்க சரியா?” என்று சிறு குழந்தைக்கு சொல்வது போல சொல்லி, உண்டு முடித்து, ஓய்வறைக்கு சென்று வந்து உடை கூட மாற்றாமல் ஹாலில் நீட்டி படுத்து விட்டான். அதுவே சொன்னது அவனின் களைப்பின் அளவை.
படுத்தவன் அவனின் செயல்களைப் பார்த்து நின்றிருந்த நிலாவை பார்த்து படுத்திருக்க,
அவனின் பார்வையை எதிர்கொள்ளப் பிடிக்காமல்,
“போடா” என்று கையை நீட்டி திட்டிச் செல்ல..
அடுத்த சில நொடிகளில் சிட்டி ரோபோ போல அவள் முன்னே நின்றான்.
பயந்து பின் வாங்கியவள் நெஞ்சில் கை வைத்து ஆசுவாசப்படுத்திக்கொள்ள…
“என்ன எதுவும் உதவி வேணுமா?” என்றான் ரசனையாய் அவளின் செய்கையை, அவளின் கை இருந்த இடத்தைப் பார்த்து.
கடுப்பானவள், நிதானமாகவே, “இப்போ எதுக்கு என்னை நெருங்க முயற்சி பண்ற?”
“நானா? எவ்வளவு தள்ளி நிக்கறேன்! இப்படியா உன் பக்கத்துல வந்து நிக்கறேன்!” என்று இடைவெளியை அப்படியே குறைத்து அவளை நெருங்கி நின்றான்.
மூச்சுக் காத்து அவளின் மேல் படும் இடைவெளி.
பைத்தியக்காரன் போல் இரண்டரை மணி நேரம் நடந்திருக்கிறான், பின்னே ஒரு இரண்டரை மணி நேரம் ரோடில் அமர்ந்திருக்கிறான். உடையும் மாற்றவில்லை.
என்ன வாசனையாகவா இருப்பான்? ஆனால் இருந்தான், வியர்வை வாசனையாய்.
சட்டென்று வாயையும் மூக்கையும் பொத்தியவள் “நாறுற” என்று பற்களை கடித்துச் சொல்ல,
“அப்படியே நில்லுங்க, நான் போய் குளிச்சிட்டு வாசனையா வர்றேனுங்க” என்று ரசனை மாறாமல் சொல்லி நகர்ந்தான்.
“போடா” என்றாள் மீண்டும்.
சற்று தள்ளி நின்று திரும்பிப் பார்த்தவன் “எனக்குப் போக இடமில்லீங்க கண்ணு, அதையும் விட போக ஆளுமில்லீங்க, நீங்க மட்டும் தான் எனக்கு. பசங்க இருக்காங்க நம்ம பசங்க தான், நம்ம உயிர் தான்”
“ஆனா வளர்ந்து அவங்களுக்கு ஒரு வாழ்க்கைன்னு வந்துட்டா, நாம இரண்டாம் பட்சம் தான். அது தான் நிஜம். நம்ம மாதிரி ஒரு புருஷன் பொஞ்சாதி வாழ்க்கை அவங்களுக்கு வேண்டாம். அவங்க நல்லா வாழட்டும்”
“அதனால நான் சாகர வரை உங்களை விட்டு போக மாட்டேன்” என்று தீர்க்கமாய் பேசினான்.
“போடா” என்று சொல்லிவிட்டு நிற்காமல் சென்று விட்டாள்.
பின் அவனும் சென்று குளித்து உடை மாற்றி அதன் பின் வந்து சோஃபாவில் அமர்ந்தவனுக்கு யோசனை. ‘முன்னமே நாம குளிச்சிருந்தா தைரியமா இன்னும் கொஞ்சம் ஒட்டி நின்னு கண்ணு கிட்ட அடி வாங்கியிருக்கலாமோ இல்லை ஒரு தள்ளு முள்ளு நடந்திருக்குமோ’ என்று நினைததவனுக்கு அப்படி ஒரு சிரிப்பு.
சற்று சத்தமாய் சிரித்து விட்டான்.
உறங்கியிராத நிலாவிற்கும் இவன் உருட்டிக் கொண்டே இருப்பது புரிந்தது.
இதில் சத்தமாய் சிரிக்க, அது என்னவோ சத்தமாய் கேட்க…
வேகமாய் வெளியில் வந்து பார்த்தாள்.
பார்த்தது சோபாவில் நன்கு சாய்ந்து, தலைக்கு கைகளை கொடுத்து கால் மேல் கால் போட்டு தோரணையாய் அமர்ந்து சிரித்து கொண்டிருந்த தமிழ் செல்வன் தான்.
‘என்னடா இவன் இன்னைக்கு இந்த அக்கப் போர் பண்றான்’ என்பதாக நின்று பார்த்தாள்.
சட்டென்று சிரிப்பை நிறுத்தினான். ஆனாலும் புன்னகைத்தவாரே “உடம்பெல்லாம் வலி, தூக்கம் வரலை, சுதர்ஷன்கிட்ட பால் காய்ச்சி குடுடான்னு கேட்க நினைச்சேன், கண்ணு வந்துட்டீங்க” என்றான் பாவனையாய்.
‘ம்ம், உன் மேல’ என்று மனதில் நினைத்தவன் வெளியில் சொல்லவில்லை.
சொன்னால் உள்ளே சென்று விடுவாள்.
அவளோடு சிறிது நேரம் இருக்க மனம் விழைய “பசிக்குது, கால் வலிக்குது” என்றான் பாவம் போல.
வேறு வழியில்லாமல் அவளே உள்ளே பால் காய்ச்ச ஆரம்பிக்க,
இவன் செய்யும் ரோதனையில் அவளுக்கும் பசிக்க. தனக்கும் சேர்த்து காய்ச்ச ஆரம்பித்தாள்.
நேரம் ஒரு மணியை தாண்டியிருக்க, அப்பாவும் அம்மாவும் செய்த கலாட்டாவில் சுதர்ஷனுக்கும் சரியாய் உறக்கமில்லை.
யார் உறங்கினாலும் கதவுகள் திறந்தே தான் இருக்கும். அதனால் தான் நிலா எழுந்து வந்தாள். இப்போது சுதர்ஷனும் எழுந்து விட்டான். அவன் எழும் அசைவில் கௌரிஷும் எழுந்து கொள்ள,
சுதர்ஷன் முதலில் ரூமில் இருந்து வெளியில் வர. பின்னே கௌரிஷும்.
“தம்பு நீங்க ரெண்டு பேரும் தூங்கலையா?”
பிள்ளைகள் வந்து விட்டதால் சிறிது மரியாதையை குரலில் கொண்டு வந்து “நீங்க பண்ற அலும்புல யாரு தூங்க முடியும்” என்றாள் எரிச்சலாக.
தமிழ்செல்வன் பதில் பேசும்முன்னே “மா என்ன பண்றீங்க கிட்சன் ல”
“பால் விடரேண்டா”
“எங்களுக்கும்” என்று மக்கள் இருவரும் அப்பாவுடன் சோஃபாவில் அமர… இவன் நடுவில் இருக்க, இருபுறமும் இருவரும் அமர்ந்தனர் அவனை இடித்தபடி.
தமிழ்செல்வனின் சுணங்கிய மனது எல்லாம் காணாமல் போகவில்லை… கண்காணாமல் போய்விட்டது. அவனின் முகமே பூரித்து விட்டது.
மகன்களோடு “நாளைக்கு பரீட்சை இருக்கா” என்று பேச ஆரம்பித்து விட்டான்.
சமையலறையில் இருந்து திரும்பி பார்த்த நிலாவின் கண்களிலும் இது பட, மூவரும் அமர்ந்திருந்தது அவ்வளவு பாந்தமாய் இருக்க. அவளையும் மீறி மனது மகன்களை ரசிக்க… அந்த கண்பார்வையில் தமிழும் இருந்தான்.
பின் திரும்பி நால்வருக்கும் பால் விட்டு “தம்பு” என்று குரல் கொடுக்க…
“இருங்கடா நான் கொண்டு வர்றேன்” என்று முதல் ஆளாய் தமிழ்செல்வன் எழுந்து போனான்.