எங்கு செல்கிறான் என்று தெரியாமல் கால் போன போக்கில் நடக்க ஆரம்பித்தான். ஐந்தரை மணிக்கு வேகமாக ஆரம்பித்த நடை ஆறரை மணிக்கு குறைந்து ஏழு மணிக்குத் தேய ஆரம்பித்து ஏழரை மணிக்கு நின்றது.
ரோடு வழியாக நடந்து கொண்டேயிருந்தான். ஏழரை போல நின்றவன், எங்கே இருக்கிறான் அவன் என்று பார்க்க அவனுக்கே அது எங்கே என்று சட்டென்று பிடிபடவில்லை.
சற்று சுற்றத்தை ஆராய, அவனின் ஊரை விட்டு பல கிலோமீட்டர் வந்திருந்தான். ஹைவேய்ஸ் அது, இருட்டியிருக்க, வாகனங்களின் வேகம் அது செல்லும் வெளிச்சத்தில் தெரிந்தது.
எந்த வேண்டாத பழக்கங்களும் இல்லாத திடகாத்திரமான ஆண்மகன். உடற்பயிற்சிக்குப் பழக்கப்பட்டவன். தற்காப்பு கலைகளில் வல்லவன். இந்த நடை அவனை ஒன்றும் செய்யாது. சற்று ஓய்வு கேட்கும் அவ்வளவே.
ஆனால் இன்றைய மனதின் சோர்வு அவனை இனியும் நடக்க முடியும் என்று தோன்ற செய்யாமல் இருக்க, ஹைவேய்ஸில் இருந்து பிரிந்து போகும் ஒரு சர்வீஸ் ரோடில் அமர்ந்தான்.
தன்னை யாரும் தனக்காகத் தேடுவதில்லையோ என்று தோன்ற மனது அமைதியிழக்க ஆரம்பித்தது. இதோ வேலை என்றால் கேசவ நாராயணன் முதலில் அவனைத் தான் தேடுவார். ருத்ர மூர்த்தியும் அப்படியே.
ஆனால் அவனை அவனுக்காகத் தேடுபவர் யார். மங்கம்மாவோடு அது முடிந்து போயிற்று. மக்கள் எல்லாருக்கும் முதலில் அம்மா தான். அம்மா ஏதாவது அப்பாவிடம் கேளுங்கள் என்றால் மட்டுமே தேடுவர்.
அப்பா எப்போது வருவார் என்று ஆர்வமாக காத்திருக்கும் மக்கள் கிடையாது. அப்படி சூழலே இருந்ததில்லை. பெரியவரோடு இருக்கிறான், பின் அரசியலிலும், அப்போது பல சமயம் நேரம் காலம் கிடையாது. அம்மா இருந்தால் போதும் பிள்ளைகள் அவர்கள் பாட்டில் எல்லாம் செய்து கொள்வர்.
என்னவோ எதுவும் பிடிக்கவில்லை. எதற்கு உயிரோடு இருக்க வேண்டும் என்ற எண்ணம் வெகுவாக தாக்கியது.
அப்படியே அமர்ந்திருந்தான். அன்று பார்த்து வேலைக்குக் கூட யாரும் அவனை அழைக்கவில்லை. பத்து மணிவரை அப்படியே அமர்ந்திருந்தான்.
இருட்டில் அப்படி ஒரு ஜீவன் அங்கே இருப்பது அந்த தேசிய நெடுஞ்சாலையில் யாருக்கும் தெரியாது. முதலில் தேசிய நெடுஞ்சாலையில் வண்டிகள் பறக்கும் வேகத்திற்கு யார் கவனிப்பர்.
நிலாவிற்கு தமிழ்செல்வன் பேசி சென்றது நெருடிய போதும் பெரிதாக அதனை மனதில் ஏற்றிக் கொள்ளவில்லை. அவளுடைய தினப்படி வேலைகள் நடந்து கொண்டிருக்க… உறங்கும் நேரமும் நெருங்கிவிட, மகளை உறங்க வைத்தவள் எழுந்து வெளியே வந்து பார்த்தாள்.
மகன்கள் இருவரும் படித்துக் கொண்டிருக்க, “பத்து மணியாச்சு தூங்குங்க, காலையில எழுந்து படிக்கலாம்” என்று சொல்லியபடி தமிழ்செல்வன் எதிர் வீட்டில் தென்படுகிறானா என்று பார்த்தாள்.
அங்கே ஆள் அரவமே இல்லை. கேட்டில் வாயிலாளி மட்டுமே இருக்க,
“அப்பு, அப்பா அங்கே இருக்குறாரான்னு கேளு” என்று கௌரிஷிடம் சொல்ல,
“அண்ணா, அப்பா அங்கே இருக்கிறாரா?” என்று கெளரிஷ் சத்தமாக கேட்டான்.
எப்போதும் தங்களிடம் வேலை செய்பவர்களையும் அண்ணா, அக்கா, மாமா, பெரியப்பா என்று ஏதாவது மரியாதையான முறை வைத்தே அழைப்பர் பிள்ளைகள். அப்படித்தான் தமிழ்செல்வன் பழக்கியிருந்தான். யாருக்கு எதுவும் உதவி செய்தாலும் பிள்ளைகள் மூலமே கொடுப்பான். நிலாவும் அப்படியே.
எந்த ஒரு சிறு விஷயம் என்றாலும் பிள்ளைகளுக்காக அத்தனை பேரும் ஓடி வருவர். அவர்களின் பின் நிற்பர். அதுவே பெற்றோருக்கு வேண்டும்.
வெளியில் இருந்து கௌரிஷ் கேட்க, வேகமாக இவனின் அருகில் வந்த செக்யுரிட்டி, “இல்லீங்களே தம்பி” என்றவர், வாயிலில் நிலா நிற்கக் கண்டு…
“போங்கடா போய்த் தூங்குங்க” என்றாள் அதற்கு பதில் சொல்லாமல்
ஸ்பீக்கரில் இருந்து எடுத்து, “என்ன எங்க இருக்க?” என்றாள் கோபமாகவே.
“ம்ம், நடுரோட்ல இருக்கேன். எங்க போகன்னு தெரியாம?”
“யேய், என்ன புதுசா ஓவரா பண்ணிட்டு இருக்க?”
“தெரியலை, என்ன என்னவோ ஆச்சு? என்ன பண்ணலாம்?” என்றான் அசட்டையாய்.
“ப்ச், எங்கயோ இரு? எனக்கென்ன” என்று ஃபோன் வைக்கப் போக…
“அது தானே! நான் எங்கே இருந்தா யாருக்கென்ன? யார் என்னை தேடப் போறா? யாரும் கிடையாது! எங்கம்மா போன போதே எல்லாம் போச்சு! எனக்கு எந்த குடுப்பினையும் கிடையாது!” என்றான் விரக்தியாய்.
மங்கம்மாவை இழுக்கவும் சற்று நிதானித்தவள் “எங்கே இருக்க?” என்றாள் மீண்டும்.
“நிஜம்மா தெரியலை, நடுரோட்ல ஒரு இடத்துல உட்கார்ந்து இருக்கேன். நடந்தே வந்துட்டேன். திரும்ப வீடு வர தெம்பில்லை”
“எதுவும் வண்டியை நிறுத்தி வர வேண்டியது தானே” என்றாள் எரிச்சலாக.