அத்தியாயம் ஏழு:

நிலா உள்ளே செல்ல,

செந்தாமரை பெரியவர் முன் எப்போதும் அமர மாட்டார். அவர் நின்றிருக்க,

“அய்யா இப்போ தான் வந்திருக்கீங்க, என்ன சாப்பிடறீங்க?” என்றான் தமிழ்.

“ஒன்னும் வேண்டாம் தமிழ்” என்றவர், “பிள்ளைகளைப் பார்க்கணும்னு வந்துட்டேன்” என்றார்.

எதுவும் பேசவில்லை நிலா அவரின் எதிரில் அமர்ந்து கொண்டாள்.

பின் தமிழிடம் அவர் இங்கில்லாத நாட்களில் என்ன நடந்தது என்று கேட்டுக் கொண்டிருக்க…

அவன் அரசியல் நிலவரங்களை, ஊர் நிலவரங்களை சொல்லிக் கொண்டிருந்தான்.

அமைதியாக அமர்ந்திருந்தாள். பொதுவில் பள்ளி விட்டு வந்தால் பிள்ளைகள் உண்ணக் கொடுக்க என்று அவள் பரபரப்பாக இருப்பாள் ஆனால் இன்று அமைதியாக அமர்ந்து கொள்ள,

அதற்குள் சுதர்ஷன் சென்று குளித்து வந்திருக்க, கௌரிஷ் குளிக்கச் சென்றிருந்தான்.

டைனிங் டேபிள் சென்று என்ன இருக்கிறது என்று பார்த்து, ப்ளேட்டில் வைத்து நிலாவிடம் கொடுத்து, “அவளுக்கு ஊட்டுங்கம்மா” என்றவன் ஸ்ராவணியைப் பார்த்து “அம்மாக்கிட்ட போ” என்றான்.

அவள் சென்று அருகமர்ந்து கொள்ள, நிலாவின் கைகள் அவளுக்கு உணவை கொடுக்க ஆரம்பித்தது.

“என்ன குடிப்பீங்க தாத்தா?” என்றான் வீட்டினனாக சுதர்ஷன்.

“நீ என்ன கொடுத்தாலும்” என்று அவர் புன்னகையோடு சொல்ல,

“பாருடா, நான் கேட்டேன், வேண்டாம்னு சொல்லிட்டு இப்போ பையன் கேட்கவும் ஓகே வாம். எத்தனை வருஷமானாலும் என்ன உறவிருந்தாலும், வேலை செய்ய வந்தவங்கன்னு இவர் மறக்கறதில்லை” என்று தமிழ் செல்வனின் மனம் நினைத்தது. ஆனாலும் முகத்தில் சிறிதும் எந்த பாவனையும் காண்பிக்காமல் நின்றான்.   

செந்தாமரையிடம் திரும்பி “என்ன குடிப்பாங்க அத்தை” என்றான் சுதர்ஷன்.

ஆம்! அத்தை தான் அவனிற்கு, அதாவது அப்பாவின் உறவைக் கொண்டு, அவனின் அம்மாவினுடைய அப்பாவின் மனைவி என்ற சொந்தம் கொண்டில்லை.

அவர் “ஃபில்டர் காஃபி” என…

“அக்கா” என்று வேலை செய்யும் பெண்மணியை அழைத்து “ஃபில்டர் இறக்கிட்டு கூப்பிடுங்க” என்றான். சிறிது நேரமாகுமல்லவா.

பின் “நீங்க என்ன குடிப்பீங்க அத்தை” என்று அவரிடமும் கேட்டான்.

அவருக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை, பின்னே இங்கே வரவா என்று பயந்து வந்தார், இதில் உள்ளே வந்து பிள்ளையை அழுக்காய் பார்க்கவும் அவளை குளியலறை அழைத்து சென்று முகம் கழுவி உடை மாற்றி என்று அழைத்து வந்தார். அதற்கே நிலா என்ன சொல்வாளோ என்று பயந்திருக்க…

இப்போது “அத்தை” என்றழைத்து சுதர்ஷன் கேட்க…

சிரிக்கவா வேண்டாமா என்று தடுமாறி, என்ன சொல்ல என்று தயங்கி நின்றார்.

“அவங்களும் அதையே குடிப்பாங்க” என்று தமிழ்செல்வன் பதில் சொன்னான்.

என்னவோ செந்தாமரைக்கு தம்பியே அந்நியமாய் தெரிந்தான், இந்த அவனின் குடும்பத்தை அவனோடு இப்படி அருகில் ஒன்றாய் பார்த்தது போல ஞாபகமில்லை. அவர்களின் கூட்டிற்குள் இவர் இல்லை.

அம்மா இருந்த போதும் அவர்களின் வீட்டிற்கும் பெரிதாய் வந்ததில்லை. அம்மா அவளை பார்க்க எதிர்வீடு வந்துவிடுவார். தம்பி அவனின் மனைவி குழந்தைகளோடு எப்படி இருப்பான் என்று கூட அவருக்குத் தெரியாது. நிலாவை கண்டாலே ஒதுங்கி நிற்பார். ஏனென்று தெரியாத ஒரு பயமிருக்கும். அவளின் அப்பாவிற்கு இரண்டாவது மனைவியானதாலோ என்னவோ.

தமிழ் அவரின் வீட்டில் அவரோட பேசுவான், எல்லாம் வேலை நிமித்த பேச்சுக்கள், அவரின் வாழ்க்கையை பற்றிய குடும்பத்தை பற்றிய பேச்சுக்கள்.

அவனின் மனைவி மக்களைப் பற்றி பேசிய மாதிரி ஞாபகமில்லை. ஏன் அவரின் அம்மா மங்கம்மாவே செந்தாமரையிடம் பேசியதில்லையே.

நிலாவின் துளைக்கும் பார்வை ஒரு பதட்டத்தை கொடுத்தது.

“உட்காருங்க அத்தை” என்று சுதர்ஷன் உபசரிக்க…

அவர் எங்கே பெரியவர் முன் அமர்வார்.

“பெரியய்யா முன்ன அவங்க உட்கார மாட்டாங்க” என்று தமிழ்செல்வன் சன்னக் குரலில் சொல்ல..

வேகமாய் ஒரு முக்காலியை கொண்டு வந்து போட்டான்.

“ம்ம்” பெரியவரிடம் ஒரு மெச்சுதலான பார்வை…  

“பிள்ளைகளை நல்லா வளர்த்திருக்க” என்றார் வாய்விட்டு.

“நீங்களும் என்னை நல்லா தான் வளர்த்தீங்க” என்ற வார்த்தை உடனே அவளிடமிருந்து அடுத்த நொடி வந்தது.   

பெரியவர் என்ன சொல்வது என்று தெரியாமல் பார்க்க…

“ம்ம், சொல்லுங்க, அப்புறம் நேரா இங்க வந்திருக்கீங்க, என்ன விஷயம்?” என்றாள் கறாராய்.

ஸ்ராவணியை தவிர எல்லோர் முகத்திலும் ஒரு பதட்டம் என்ன இப்படி பேசுகிறாள் என்று.

“எதுக்கு இவ்வளவு கோபம்?” என்றார் அவர் கனிவாகவே.  

“இப்போ கோபத்தைக் கேட்கறீங்களா? எப்போவுமே இருக்குற கோபத்தை கேட்கறீங்களா? இல்லை நேத்தைய என்னோட கோபத்தை கேட்டீங்களா?” என்றாள் பளிச்சென்று.

“இல்லைன்னா இப்படி வர்றதுக்கு வாய்ப்பில்லையே” என்று அவரை நோக்கி சொன்னவள்,

தமிழிடம் திரும்பி “அவரை முதல்ல ரெஸ்ட் ரூம் கூட்டிட்டு போங்க, ரெப்ரெஷ் ஆகி வரட்டும்” என்று சொன்னவள்,

“என்ன போவீங்களா, இல்லை உங்க வீட்டுக்குப் போகணுமா?” என்றாள் கறாராக.

“அது நம்ம வீடு கண்ணு” என்றார்.

“அப்போ எதுக்கு அங்க இருக்குறவன் எங்கப்பா வாங்கிக் குடுத்த வண்டி, அதுல என் பசங்களுக்கு கத்துக் குடுக்கக் கூடாதுன்னு இவர் கிட்ட சொல்றான்”

“ஒழுங்கா இருக்க சொல்லுங்க, இல்லை என்ன பண்ணுவேன்னு தெரியாது”

செந்தாமரை பதட்டமாகி விட்டார். பின்னே அவள் பேசுவது ராஜநாரயணனை பற்றி அல்லவா.

“மா” என்று சுதர்ஷன் வாயெடுக்கும் முன்னரே, நிலா பார்த்த பார்வையில் வாயை மூடிக் கொண்டான்.

“எந்த பாத்ரூம் டா” என்று பெரியவர் அந்த இடத்தை விட்டு எழ,

“ம்ம், அப்புறம், உங்க அடியாள் கிட்ட தனியா பேசப் போறீங்களா? இந்த புள்ள ரொம்ப பேசறா இவளை அடிச்சு அடக்கி வைன்னு” என்று சொல்ல,

பிள்ளைகள் முன் இது என்ன பேச்சு என்று தமிழ் கண்டனமாய் பார்த்தான்.

பெரியவர் எதுவும் பேசாமல் “வாடா” என்றழைத்து அவனின் அறை சென்றார்.

பின்பு அவர் தன்னை சுத்தப்படுத்தி வர, சுதர்ஷனின் கண்பார்வையில் மணக்க மணக்க ஃபில்ட்டர் காபி மற்றும் ராகி பக்கோடா வந்தது.

ஸ்ராவணியும் வீட்டில் ஆட்கள் இருக்க சமத்தாய் அமர்ந்திருந்தாள்.   

கெளரிஷும் குளித்து வந்திருந்தான். தமிழ்செல்வன் நின்றிருந்ததால் மக்கள் இருவரும் நின்றே இருந்தனர்.

அம்மா அமர்ந்திருந்தாலும் அப்பா நிற்கிறார் என்பதால் மக்கள் இருவரும் நிற்பது பெரியவருக்கு மனதிற்கு அத்தனை திருப்தியாய் இருந்தது.

அமர்ந்தவர் இந்த சின்ன குட்டி தான் அலும்பு பண்ணுது என்றார் ரசனையாக. வெளியில் சொல்லவில்லை, மனதினில் சொல்லிக் கொண்டார், அப்படியே என் பொண்ணு போல என்று.

ஆம்! அவரின் பெண் தீபா இப்படி தான் மிகவும் குறும்பான பெண் அவ்வளவு செல்லம், அதற்கு நேர்மார் நிலா, குறும்பெல்லாம் இருக்காது, எப்போதும் நான் தான் பெரிய ஆள் என்ற ஆளுமை இருக்கும்.

மகளுக்கு ஆசை ஆசையாய் திருமணம் செய்து வைத்தார், அதன் பின் அவருக்கு அத்தனை மனவுளைச்சல்கள். ஒன்றும் சொல்வதற்கில்லை. இப்போது வாழ்க்கை நன்றாக செல்வது போல  அவருக்கு தோன்றியது.

ஆனால் பேத்தியின் திருமண வாழ்க்கை தமிழுடன் இணக்கமாய் இல்லை என்று அவருக்கு என்ன தெரியும். சீரும் சிறப்புமாய் வாழ்கிறாள் என்றல்லவா அவர் நினைத்துக் கொண்டிருக்கிறார்

ராகி பக்கோடா உண்டு, காஃபி அருந்தி முடித்தவர், கேசவ நாராயணனுக்கு அழைத்து “ராஜ் வீட்லையா இருக்கான்” எனக்கேட்டு “அவனை எதிர் வீட்டுக்கு அனுப்பிவிடு” என்று சொல்ல…

கேசவ நாராயணனுக்கு பதட்டமாகியது.