“நான் என்ன பண்ணட்டும்”

“பெரியவரோட இருங்க” என்றவள்,

“எனக்கு எப்போ தேவையோ கூப்பிடும் போது வாங்க”

அவரிடமும் “இவர் உங்களோட இருப்பார்” என்று சொல்லிவிட்டாள்.

பேத்தியின் மீது மிகுந்த பாசம் கொண்டவர், யாரிடம் தப்பு என்று சொல்ல முடியாமல் என்னென்னவோ நடந்து விட்டது.

அவருடைய தற்போதைய எண்ணம் தாங்கள் செய்து வைத்த திருமணத்தில் எந்த பிரச்னையும் செய்யாமல் நன்றாக வாழ்கிறாள், அவள் சொல்படி கேட்போம் என்ன இப்போது என்று.

அவரிடம் அவளுக்கும் தமிழ்செல்வனுக்கும் சரியில்லை என்பதை காண்பித்துக் கொள்ளவில்லை. எதோ அவர் நடத்தி வைத்த திருமணம் அதனை ஏற்று அவனுடன் வாழ்வது போல தான் அவரிடம் மட்டுமல்ல அனைவரிடமும் காண்பித்துக் கொண்டிருந்தாள்.

அவர்களைப் பற்றி தெரிந்த ஒரே ஆள் மங்கம்மா. அவர் உயிர் போனாலும் விஷயம் வெளியில் போகாது.

“சரி என்னுடன் தமிழ் இருக்கட்டும்” என்றுவிட்டவர்,

கேசவ நாராயணனிடமும்ம் “நம்மோட இருக்கட்டும்” என்று விட்டார்.

கேசவ நாராயணனுக்கு பயம் எங்கே அவரை ஓரம் கட்டிவிடுவானோ என்று.

இல்லை, இல்லவே இல்லை. சொன்ன வேலையைச் செய்வான். பெரியவரிடம் எந்த அனுகூலமும் எடுத்துக் கொள்ளவில்லை. அவராய் பேத்தியின் கணவன் என்று முன் நிறுத்த முயன்றாலும், “கண்ணுக்கு இது பிடிக்காதுங்க” என்று ஒதுங்கிக் கொள்வான்.

பெரியவர் வீட்டில் இருக்கும் நேரம் வாசவியும் ராஜ நாராயணனும் தான் அவருக்கு தேவையானதை செய்வர். அவர் இல்லாத போது செந்தாமரை செய்வாள்.

எல்லாம் தமிழ்செல்வனின் பார்வைக்குள் இருக்கும். தானாக எல்லாம் சரியாக நடப்பதால் அவன் பெரியவரை கவனிக்கும் அவசியம் இல்லவே இல்லை.

அவன் உணர்ந்திருந்தான், தாத்தாவை பார்த்துக்கொள்ள வேண்டிய தார்மீக பொறுப்பு நிலா தனக்கு இருப்பதை உணர்ந்திருக்க, அதில் அவளுக்கு இஷ்டமில்லாது போயிருக்க, அதனால் தன்னை அவரோடு இருக்க வைத்து விட்டாள் என்று.

தன்னுடைய வட்டத்திற்குள் அவளும் அவளின் மக்கள் மட்டுமே. வேறு யாரையும் அவள் அனுமதிக்கவில்லை.  

அவனுக்கு நிலாவைப் பற்றிய புரிதல் தானாகவே வெகுவாக இருக்கும். பிறந்து ஒரு மாத குழந்தையாக அவளைப் பார்த்துக் கொள்ள மங்கம்மா வந்தார். அவரோடு வந்தவன் தானே.

அவளை பற்றி நன்கறிவான். அன்றைய வார்த்தைகளுக்கான காரணம், அவனின் அவனின் ஆதங்கமே. சொல்பேச்சு கேட்காமல் எத்தனை இழுத்துவிட்டுக் கொண்டாள் என்று.

ஒரு க்ஷணமும் அவளை தப்பாய் நினைத்தெல்லாம் பேசவில்லை. ஆனால் அவளின் மனநிலை புரியவில்லை. அவளை அது எப்படி காயப்படுத்தும் என்ற அனுமானமில்லை.

இதோ இன்று வரை சரியாகவும் இல்லை, சரி படுத்தவும் முடியவில்லை.  

அன்று மாலை பெரியவர் வந்துவிட்டார்.

அவர் வரும் போது தான் மேகலா பள்ளியில் இருந்து பிள்ளைகளை அழைத்து வந்தாள். அவரின் கார் வீட்டினுள் நுழைந்ததும், காரை விட்டு இறங்கியவர், வீட்டினுள் செல்லாமல் பிள்ளைகளை பார்த்ததும் வெளியே வந்தார்.

“மேகிக்கா என்னோட பேக் எடுத்து வாங்க” என்று சொல்லி ஸ்ராவணி காரிலிருந்து இறங்கியிருக்க…

சுதர்ஷனும் கௌரிஷும் ஸ்ராவணியை மிரட்டிக் கொண்டிருந்தனர். “பாப்பா உன் பேக் எடு” என்று.

“அண்ணா கை வலிக்குது” என்று செல்லம் கொஞ்சினாள்.  

“ஒன்னும் வலிக்கலை நீ எடு”

அவளின் பையை காரில் இருந்து எடுத்தவள் அதனை கீழே வைத்து பின் லஞ்ச பேக் எடுத்து கீழே வைத்து தர தர என இழுத்து செல்ல ஆரம்பித்தாள்.

அண்ணன்கள் இருவரும் டென்ஷனாகி “பாப்பா” என்று கத்த…

அவர்களின் கத்தலில் என்னவோ ஏதோ என்று நிலா வெளியே வந்து விட்டாள்.

பார்த்தது இவர்களைப் பார்த்து நின்ற பெரியவரை தான்.

“ஓஹ் வந்துட்டாரா” என்ற பார்வை பார்த்தவள், பின்பு மக்களிடம் திரும்பி “என்னடா சத்தம்?” என்றாள் அதட்டலாக.

“ஒன்னுமில்லையே” என்று அவர்கள் ஸ்ராவணியைப் பார்க்க, சமத்தாய் இரு பையையும் ஒற்றை கையில் தூக்கி இருந்தாள்.

“என்ன அலும்பு பண்ணுது இந்த வாண்டு” என்று பெரியவர் வாஞ்சையாய் பார்த்திருந்தார்.

பெரியவரிடம் பிள்ளைகளை இதுவரை நெருங்க விடவில்லை நிலா. அவராய் அழைத்து பேசும் போது மரியாதை அதற்கு குறைவிருக்காது. ஆனால் அதையும் மீறி பாசம், நெருக்கம் கிடையாது.   

“டேய், என்னடா பண்றீங்க பாப்பா வை, பாரம் தூக்க விடறீங்க, நீங்க ஒரு பை வாங்க வேண்டாம்” என்று வேகமாய் நடந்து வந்தவள் பையை வாங்க, ஸ்ராவணி அவளின் கால்களை கட்டிக் கொண்டாள்.

“பேகை தரையில இழுத்து வர்றா வேணும்னே, மண்ணுல புரண்டு இருக்காம்மா ஸ்கூல்ல, பாருங்க அவ டிரெஸ்ஸையும் தலையையும்”

உடை மண், தலையில் காலையில் போட்டு விட்ட இருப்பக்க போனி டெயில் ஒரு பக்கம் அவிழ்ந்து இருந்தது.

பார்க்கவே சகிக்க மாட்டாமல் இருந்தாள்.

“முதல்ல அவளை பாத்ரூம்ல தள்ளி குளிக்க வைங்கம்மா” என்றான் சுதர்ஷன்.

அதுவரையும் இவர்களை தான் பார்த்து நின்றார் பெரியவர்.

பின் மெதுவாக இவர்களை நோக்கி நடந்து வர, அவர் வருகிறார் அப்போது பிள்ளைகளை வீட்டினுள் அழைத்து எப்படி செல்ல என்று நிலா தடுமாற…

அதற்குள் அவர் இவர்கள் வீட்டின் வாயிலுக்கு வந்துவிட்டார்.

சரியாக அப்போது தமிழ்செல்வன் வந்து விட்டான். அவனுடன் கேசவ நாராயணனும் ராஜ நாராயணனும் தொகுதி விசிட் முடித்து வந்தனர். இவர் வருவது தெரிந்து வந்துவிட்டனர்.

வாயில் எல்லாம் வரிசையாக கார்கள்.

இறங்கிய தமிழ்செல்வனின் கண்களில் பட்டது அங்கே நின்றிருந்த பெரியவர் தான்.

சுதர்ஷனை ஒரு பார்வை பார்க்க, சரியாக தந்தையை படித்தவன்  “வாங்க தாத்தா” என்றான் முறையாக.

“உங்கம்மா கூப்பிடலையே?”

“அதுவும் உங்க வீடு தான் அவ எதுக்கு உங்களை தனியா கூப்பிடுவா. உள்ள வாங்க ஐயா” என்று தமிழ்செல்வன் வந்துவிட்டான்.

ராஜ நாராயணன் அதற்குள் வந்தவன் “காசிக்கு போயிட்டு வந்துருக்கீங்க, வீட்டுக்குள்ள வந்து போங்க தாத்தா. அம்மா பாத பூஜை பண்ண அங்க நின்னுட்டு இருக்காங்க” என்றான்.

கேசவ நாராயணன் சொல்லி அவன் வந்திருந்தான்.

அவ்வளவு தான் நிலா வின் பார்வை மாறிவிட்டது.

‘போய்விடுவாரா’ என்பது போல அவள் பார்த்து நிற்க…

“உங்க அம்மாவை இங்கே வரச்சொல்லு இங்கயே பண்ணச் சொல்லு” என்று விட்டார் பெரியவர்.

அங்கெல்லாம் செந்தாமரை அதிகம் வந்ததே இல்லை.

அவருக்கு அங்கு வர அழைப்பே இல்லை. அம்மா இருந்தது அங்கே தான், தம்பி இருப்பதும் அங்கே தான். ஆனால் அது நிலாவின் வீடு.

அவர்கள் செந்தாமரையை பார்க்க மாளிகைக்கு வந்து விடுவதால் அவருக்கு செல்லும் அவசியமே இல்லை.

பெரியவர் எப்போதாவது செல்வாராய் இருக்கும், ஆனால் அவர் சொல்லும் போது எப்படி செல்லாமல் இருக்க… கேசவ நாராயணனை தான் பார்த்தார்.

அவர் ஒரு தலையசைப்பைக் கொடுக்க…

எதிர் வீடு வந்தார்.

அவர் அவரின் காலை கழுவி பொட்டு வைத்து ஆரத்தி எடுக்க…

நிலா வை ஒரு பார்வை பார்த்துவிட்டு முயன்று “உள்ள வாக்கா” என்றான் தமிழ்செல்வன்.

‘சென்றால் நிலாவிற்கு பிடிக்குமா பிடிக்காதா தெரியலையே’ என்று செந்தாமரைக்கு பதட்டமாகி விட்டது.

அவர் செய்வதறியாது நிற்க…

“தங்கப் பொண்ணு உங்க பாட்டியைக் கை பிடிச்சு கூட்டிட்டு போங்க” என்றார் பெரியவர்.

எதற்கு இந்த தேவையில்லாத வேலையைப் பார்க்கிறார் என்று மனது முழுவதும் எரிச்சல் மூண்டது.

ஸ்ராவணி நிமிர்ந்து அம்மாவின் முகத்தை பார்க்க, ‘போ’ என்பது போல தலையசைத்து சம்மதம் கொடுத்தாள் நிலா.  

நடப்பது எதுவும் பிடிக்கவில்லை, ஆனால் யாரையும் அவமானம் செய்யும் வழக்கம் இல்லை.

இப்படி இதுவரை தர்ம சங்கடங்கள் நிகழ்ந்ததில்லை.

காலையில் அவன் முகம் பார்த்து புன்னகைத்து சென்றதே மனதின் ஓரத்தில் தொந்தரவு செய்து கொண்டிருக்க… இப்போது இது வேறா என்று ஏகமாய் சங்கடம் கொண்டது மனது.

ஸ்ராவணி அவளின் பாட்டியின் கை பிடித்து உள்ளே அழைத்துப் போக. அவளின் பையை அண்ணன்கள் ஆளுகொன்றாய் எடுத்துப் போக அவர்களைத் தொடர்ந்தான் தமிழ்செல்வன்.

“பா, என்ன நடக்குது?” என்று வாசவியும் ராஜ நாராயணனும் அப்பாவிடம் கேட்க…

“எனக்கே தெரியலையே. எதுக்கு உங்கம்மா அங்கே போனா?” என்று கோபப்பட்டார்.

“தாத்தா சொல்லியிருப்பாரா இருக்கும். இல்லை அம்மா அங்கே போக மாட்டாங்க”

“நான் சொன்னேன் இல்லையா, பாரு, என்ன இருந்தாலும் அவர் பேத்தி அவருக்கு ரொம்ப முக்கியம். சும்மா சீண்டி பெரியவரை எதுவும் பகைக்காதீங்க. என்னோட அரசியல் வாழ்க்கை எனக்கு ரொம்ப முக்கியம். அவர் இருக்குற அவர் சொல்றது தான் இந்த ஏரியால. புரிஞ்சு நடந்துக்கோங்க” என்றார் மகனிடமும் மகளிடமும்.

அவர்கள் எல்லோரும் உள்ளே சென்றிருக்க, வெளியில் நின்றது தாத்தாவும் பேத்தியும் தான்.

அவளின் அழைப்பிற்காய் அவர் பார்த்து நின்றார்.

“ஆமாம், திடீர்னு என்ன இங்க வந்திருக்கீங்க?”

“ஏன் நான் வரக் கூடாதா?”

“என் கேள்விக்கு இது பதில் கிடையாது”

“என் பேரப் பசங்களோட இருக்கணும்னு ஆசை. வேறோண்ணும்மில்லை. வயசாகிடுச்சு, வயசுல இருக்குறவங்களுக்கே எப்போ என்ன நடக்கும்னு தெரியலை. அதான் எனக்கு இவங்களோட பேசணும் பழகனும், எப்போ என்கிட்டே பேச விடுவ?” என்றார் நேரடியாக.

“நான் அவங்களை வேண்டாம்னு சொல்றதில்லை”

“நீ ஒதுங்கி நிக்கற. அதனால அவங்களும் ஒதுங்கி நிக்கறாங்க”

“ஆமாம், எந்த சாமி சொல்லுச்சு காசில இருந்து வந்ததும் எங்க வீட்டுக்கு வரச் சொல்லி” என்றாள் ஆழ்ந்த குரலில்.

அவளுக்கு பதில் சொல்லவில்லை.

அவர் பார்த்து நிற்க…

இவர்களை உள்ளே காணோம் என்று தமிழ்செல்வன் வெளியே வர, இருவரும் நிற்பதை பார்த்தவன் வேகமாக அருகில் வந்தான்.

“உள்ள வாங்க அய்யா” என்று அவன் அழைத்தான்.

“பேரப் பிள்ளைகளை பார்க்க வந்தேன், பார்த்துட்டேன்” என்று அவர் கிளம்ப முற்பட்டார்.

நிலா வை முறைத்துப் பார்த்தான் ‘அவரை வாசலோடு அனுப்புவியா’ என்ற பார்வையைக் கொண்டு.

நிலா அசையாது நிற்க,

“நீங்க வாங்க” என்றவன் “சுதர்ஷன்” என்று குரல் கொடுக்க…

அவனும் விரைந்து வர “தாத்தாவை கை பிடிச்சு அழைச்சுட்டு போ” என்றான்.

பின்னே அவரைத் தொட்டு அழைத்து செல்ல எல்லாம் இதுவரை உரிமை எடுத்தது இல்லை.

சுதர்ஷன் “வாங்க தாத்தா” என்று அழைத்துச் சென்றான்.

நிலா அங்கிருந்த திண்ணையில் அமரப் போக “உள்ள போ” என்றான் அடிக்குரலில்.

அவள் யாரையும் அவமானப் படுத்துவதில் அவனுக்கு விருப்பமில்லை. விடவும் மாட்டான்.  

அவள் ‘முடியாது’ என்பதாய் முறைத்து, “தேவையில்லாதது எல்லாம் செஞ்சிட்டு இருக்கீங்க” என்றாள் காட்டமாய். 

“மா பாரு, நான் முகம் கை கால் கழுவி ட்ரெஸ் மாத்திட்டேன், அந்த பாட்டி மாத்தி விட்டாங்க” என்று ஸ்ராவணி ஓடி வர வேறு வழியே இல்லாமல் உள்ளே சென்றாள்.    

செல்லும் அவளையே பார்த்திருந்தான்.  

பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
இரு மனம் சுகம் பெறும் வாழ் நாளே…