அத்தியாயம் மூன்று:

பத்து மணி போல அவனுக்கு அழைத்து விட்டார் அலைபேசியில்,

டைனிங் டேபிளில் அமராமல் நால்வரையும் கீழே அமர்த்தி பின் பக்க தோட்டத்தில் இருந்த வாழை இலை அறுத்து, சூடாக இட்லி, கறிக் குழம்பு என்று பரிமாறினாள்.

“மா, நீங்களும் உட்காருங்க” என்று மகன்கள் சொல்ல,

“நீங்க சாப்பிடுங்க, நான் பாப்பாக்கு பார்க்கிறேன்” என்று சொல்லி

இவர்களுக்கும் பரிமாறி, மகளுக்கு சின்ன சின்னதாய் இட்லி பிய்த்து வைத்துக் கொடுத்தாள்.

அப்பா அருகில் இருப்பதால் அவளும் குழம்பில் தொட்டு சமத்தாய் சாப்பிட, கறியையும் அவளுக்கு தக்க சின்ன சின்னதாய் பிய்த்து வைத்தாள்.

பின் மகளின் டம்ளரில் தண்ணீர் இல்லாதது தெரிந்து அவள் எழுந்து அதனை கொண்டு வர, சரியாக அந்த நேரம் அலைபேசி அழைத்தது.

அவளின் கண்களில் “ஐயா” காலிங் பட, இவன் யாரென்று தெரியாமலேயே எழ முற்பட, “அப்பாவை உட்கார்ந்து சாப்பிட சொல்றா” என்றாள் விறைப்பாய்.

அவன் ஏன் அதற்குப் பிறகு எழப் போகிறான், அரை மணி நேரத்திற்கு மேல் அமர்ந்து உண்டு எழ, வீட்டின் வாயில் மணி ஒலித்தது.

எதிர் வீட்டிலிருந்து வேலையாள் “ஐயா உங்களை கூட்டிட்டு வர சொன்னாங்க” என்று.

“என்னன்னு கேட்டுட்டு வந்துடறேன்” என்று மகன்களிடம் சொல்ல…

நிலா வின் குரல் ஒலித்தது “போனமா வந்தமான்னு இருக்கணும், இன்னைக்கு உங்களோட தாண்டா” என்று.

“வந்துடறேன்” என்று சொல்லிச் சென்றான்.

“என்னடா, இன்னைக்கு தொகுதிக்கு போறேன்னு சொன்ன இன்னும் கிளம்பாம இருக்க” என்றார் அதட்டலாக.

“இல்லைங்கய்யா நானே வந்து சொல்லணும்னு இருந்தேன், நாளைக்கு இருந்து போறணுங்க”

“ஏன்டா? சின்னவரை நான் தொகுதிக்கு கிளப்பியிருக்கேன். இன்னைக்கு கிளம்பு”

நிலா அவனிடம் சொல்லும் வேலை, அதுவும் மகன்களுக்காக, தட்ட மனதில்லை.

“மதியத்துக்கு மேல கிளம்பறேணுங்க”

“ஏன் இப்போ என்ன அப்படி ஒரு வேலை?” என்றார் கோபமாக.

“இல்லை, கண்ணு பசங்களுக்கு வண்டி கத்துத் தர சொல்லுச்சு, “நானும் சரி ன்னு சொல்லிட்டேன், எனக்கு சின்னவரை நீங்க கிளப்பி இருக்குறது தெரியாது. காலையில கத்து குடுத்துட்டு மதியம் போல கிளம்பிக்கறோம்” என்றான் தயக்கமாக.  

“கண்ணு” என்ற அவனின் வாய் மொழி வார்த்தையைக் கேட்டதும் சற்று நிதானித்தார்.

அவர் “சரி” என்று சொல்ல வாய் திறக்கும் முன்னே அவரை அனுமானித்தவனாக ராஜ நாராயணன் “இல்லை, எனக்கு இப்போவே போகணும்” என்றான் பிடிவாதமாக.

முதல் முறை கிளம்புகிறான் அது தட்டிப் போவதில் அவனுக்கு விருப்பமில்லை.

கேசவ நாராயணன் அவனை ஒரு பார்வை பார்க்க “காலையில போயிட்டு வந்துடறோம், மதியம் போல அவர் சொல்லிக் குடுக்கட்டும்” என்றான்.

“சரி” என்ற வார்த்தை தமிழ் செல்வனின் வாய் மொழியாக வரவில்லை, அமைதியாக நின்றிருந்தான். 

செந்தாமரை இதனைப் பார்த்திருந்தவர் “அவன் தான் தயங்குறான்ல, ஒன்னு மதியம் போகலாம், இல்லை முதல் நாள் செண்டிமெண்ட் நினைச்சா அப்பாவோட போ” என்று எளிதான தீர்வு கொடுத்தார்.

“அதெப்படி நாம சொன்னா நம்ம பேச்சை தான் கேட்கணும்” என்று வாசவியும் சொல்ல…

“இப்படியெல்லாம் பேசக் கூடாது” என்றார் செந்தாமரை கண்டிப்பாக.

அதற்கும் அமைதியாக தான் நின்றிருந்தான் தமிழ்செல்வன்.

“ஏன்மா ராஜ் பீல் பண்றான் தானே. அதையே மதியம் கத்துக் குடுத்தா என்ன?”

கேசவ நாராயணனை பார்த்தவன் அவரிடம் மெல்லிய குரலில் “கண்ணு கோவிச்சிக்கிச்சுன்னா அப்புறம் என்னைப் பசங்களுக்கு கத்துக் குடுக்கவே விடாது, கோபம் வந்தா என்ன பண்ணும்னு சொல்ல முடியாதுங்களே” என்றான் தன்மையாகவே.

கேசவ நாராயணன் எந்த பதிலும் கொடுக்கவில்லை.  

ஆனால் அது காதில் விழப் பெற்ற வாசவி “கோபம் வந்தா என்ன பண்ணுவாங்க?” என்று வார்த்தையை விட்டாள்.

நிலாவின் கோபத்தின் அளவை அறிந்தவன், தமிழ்செல்வன் மட்டுமே.

அவளை ஒரு பார்வை பார்த்து “எனக்கெப்படி வாசவி தெரியும், அவங்களுக்கு தான் தெரியும்” என்றான் நிமிர்வாகவே.  

அடுத்த வார்த்தை பேசினால் “உன் வேலையை மட்டும் பாரு” என்று தமிழ்செல்வன் திருப்பிக் கொடுத்து விடுவான்.   

“சும்மா பூச்சாண்டி” என்று வாசவி முணுமுணுத்தாள்.

“எதுக்கு பிரச்சனை? எங்கடா போகலாம்னு இருந்த சொல்லு, நான் போறேன். அங்க யாரு நம்ம ஆளுங்க பேசிட்டு சொல்லு” என்று முடித்து விட்டார் கேசவ நாராயணன்.

தமிழ்செல்வன் அலைபேசியை எடுத்துக் கொண்டு வாயிலை நோக்கி செல்ல, அவன் வாயிற்படியை தாண்டும் நேரம்…

அவன் வரவில்லை என்ற எரிச்சலில் ராஜ நாராயணன் “அப்படி வண்டி சொல்லிக் குடுக்கணும்னா ஏதாவது வண்டில சொல்லிக் குடுங்க, எங்கப்பா உங்களுக்கு குடுத்த வண்டில சொல்லிக் குடுக்காதீங்க” என்று சத்தமாய் சொல்லிவிட…

“டேய், என்ன பேசற நீ?” என்று செந்தாமரை பெரிய அதட்டலிட…

கேசவ நாராயணன் “என்னங்க தம்பி பேச்சு இது?” என்று அவரும் அதட்டினார்.

ராஜ நாராயணன் என்னவோ சரியாய் பேசியதை போல வாசவி மிதப்பாய் பார்த்து வைத்தாள்.

பேசும் போது சுற்றம் பார்த்துப் பேச வேண்டும் என்ற அறிவு ராஜ நாராயணனுக்கு இல்லை.

அங்கிருந்த நிலா வின் விசுவாசி அடுத்த நொடி இந்த விஷயத்தை நிலாவின் காதுகளுக்கு கொண்டு சென்று விட்டான்.

சில பல நிமிடங்களுக்கு பிறகு கேசவ நாராயணன் தமிழ் செல்வனுக்காகக் கொடுத்த பைக் என்று சொல்லப்பட்ட ஒன்று தீப் பிடித்து எரிந்து கொண்டிருந்தது.     

வேகமாக வெளியில் வந்து பார்த்தனர் அனைவரும், திகு திகு வென எரிந்தது.  

இதற்கு அதுவரை வெளியில் நின்று அலைபேசியில் கேசவநாராயணன் தொகுதிக்கு செல்வதற்கு எல்லா ஏற்பாடும் செய்து விட்டு அதனை சொல்வதற்காக மாளிகையினுள் சென்றான்.

மற்ற கார்களுக்கும் வண்டிகளுக்கும் தீ பரவாமல் இருக்க, வேலையாட்க்கள் வேகமாக தண்ணீர் ஊற்றி அணைக்க…

அவளின் வீட்டு மாடியில் நின்ற நிலா இதனைத் தான் விழியெடுக்காமல் பார்த்திருந்தாள்.

முதலில் தமிழ்செல்வன் அவள் நிற்பதை பார்க்க, பிறகு வீட்டினர் அனைவருமே அவள் பார்ப்பதைப் பார்த்தனர்.

ஒரு வேலை இவளோ என்று தமிழ்செல்வன் மனதினில் நினைத்து அதிர்ந்து பார்த்திருந்தான்.

அசையாமல் அவள் நின்று பார்த்த தோரணை அப்படி.

கேசவ நாராயணன் காலையில் தானே நல்ல விதமாய் நினைத்தோம், இவளா செய்திருப்பாள் என்று ஆராய்ச்சியுடன் பார்த்தார்.

“நம்ம வீட்ல ஏதாவதுன்னா வேடிக்கை பார்க்க வந்துடுவாங்க இவங்க” என்று வாசவி அம்மாவிடம் முணுமுணுத்தாள்.  

செந்தாமரையோ, வாசவியோ, ராஜ நாராயணனோ இதற்கு காரணம் நிலாவாய் இருப்பாள் என்று அனுமானிக்கவில்லை.  

இதழ் கடையில் சிறு சிரிப்புடன் பார்த்து நின்றாள். தூரத்தில் இருந்து இவளை பார்க்க மற்றவர்களுக்குத் தெரியவில்லை.  

கீழே வீட்டில் இருந்த சுதர்ஷனும் கௌரிஷும் அங்கே செல்லப் போக…

“டேய்” என்ற அம்மாவின் அதட்டலில் நின்றனர்.

“எங்கே போறீங்க? பாப்பா எங்கே உள்ள போ” என்று பேச….

பதில் பேசாமல் உள்ளே நடந்து விட்டனர்.

அவர்களுக்கு என்ன நடந்தது என்றெல்லாம் தெரியாது. அங்கே ஏதோ தீ, அப்பா அங்கே சென்றிருக்கிறார் என்று விரைந்தனர்.

“பா எரியுதுப்பா, எப்படிப்பா வேற வண்டிக்கும் பரவிடப் போகுது”  என்று ராஜ நாராயணன் ஆட்களை ஏவ, வாசவி பதைத்துப் பார்க்க, அவர்கள் சற்று தூர அகன்றதும்…  

“போலிஸ்க்கு ஃபோன் பண்ணுடா” என்றார் கேசவ நாராயணன்.

“தானா எரிஞ்சதா யாரும் எரிச்சாங்களான்னு தெரியணும் என்றார் கோபமாக.

“போலிஸ் எல்லாம் வேணாம். சி சி டீ வீ பார்த்தா தெரிஞ்சிடும். நான் பார்த்து சொல்றனுங்க ஐயா”

“ஏன் போலிஸ் வேணாம்?”

“கண்ணு க்கு கோபம் வந்தா என்ன பண்ணும்னு தெரியாதுன்னு சொன்னனுங்களே ஐயா” என்றான் முத்தாய்ப்பாய்.  

தான் யோசித்தது போல இவனும் சொல்கிறானே என்று நினைத்தவர்,  

“என்னடா வாய் பேசற, உன்ற பொண்டாட்டி தானே. உனக்கு அவளை அடக்க முடியாது”

அவருக்கு பதில் கொடுக்கவில்லை அப்படியே நின்றான்.