“பாப்பா ஓடாத” என்று தமிழ்செல்வன் அதட்டலிட, நின்று மெதுவாக நடக்கத் துவங்கினாள்
“பா, அவ நீங்க சொல்றதை மட்டும் தான் கேட்கறா. எங்க எல்லோர்கிட்டயும் செல்லம் கொஞ்சுறா, அதுவும் சுதர்ஷன் எதுவும் பேசினா உடனே கண்ல தண்ணி விடறா” என்றான் கெளரிஷ்.
தமிழ்செல்வன் சுதர்ஷனை ஒரு பார்வை பார்க்க…
அந்த பார்வையை உணர்ந்தவன் “அவ குறும்பு செஞ்சா அதட்டினேன்” என்று விளக்கம் கொடுத்தான்.
அம்மாவிடம் எவ்வளவு நெருக்கமோ, அதே போல அப்பாவின் பார்வையைக் கொண்டே அவன் சொல்ல வருவதை உணர்ந்து கொள்வான்.
பெரிதாக அப்பாவிடம் நெருக்கம் காண்பித்ததில்லை. ஆனால் அவனின் பார்வை கொண்டே அவனை உணர்ந்து கொள்வான்.
“சரி கத்துக்கலாம், உங்க எக்சர்சைஸ் முடிச்சு, குளிச்சு சாப்பிட்டு, பின்ன கத்துக்கலாம், ஓகே”
மகன்களும் தலையசைத்து அவர்களின் உடற்பயிற்சி செய்ய மாடிக்கு விரைய,
“பாப்பா, வாங்க நம்மளும் போகலாம்” என்று மகளை அழைத்துக் கொண்டு மாடியேறினான்.
எல்லாம் பார்த்திருந்தாள் நிலா. மக்களை அப்பாவுடன் பழகக் கூடாது என்றெல்லாம் அவள் என்றுமே சொல்லியதில்லை. ஆனால் சொல்லியிருந்தால் என்று நினைத்து தமிழ்செல்வனே சிறு ஒதுக்கம் கொண்டு நிற்பான். தானாய் நடக்கும் எல்லாவற்றிற்கும் நிலா சொல்லித்தானோ என நினைப்பான்.
அவர்கள் வருவதற்குள் சமையலை முடித்து விடலாம் என்று எண்ணி நிலா சமையலில் இறங்கினாள்.
காலையில் முன்புற வராண்டாவில் கேசவ நாராயணன் அமர்ந்து பேப்பர் படித்திருக்க, எதிர்புற வீட்டின் மாடியின் முன்புறம் பெரிய இடம், அங்கே தான் சுதர்ஷனும் கௌரிஷும் உடற்பயிற்சியில் ஈடுபட்டனர்.
அவர் பார்க்கக்கூடாது என்று நினைத்தாலும் பார்வை தொட்டு விலகியது.
சீரழிந்து விட்டாள் என நினைத்தவள், வாழ்க்கையை செதுக்கிக் கொண்டாள் என்று அவராய் நினைத்துக்கொண்டார்.
அவள் என்றுமே சீரழியவில்லை. தாங்கள் தான் அவளின் வாழ்கையை சீரழித்து விட்டோம் என்று இதுவரை தெரியவில்லை.
“நம்ம பையன் இன்னும் தூங்கறான். இவங்க ரெண்டு பேரும் எழுந்து எப்படி உடற்பயிற்சி பண்ணிட்டு இருக்காங்க” என்று நினைத்தவாரே பார்த்திருந்தார்.
அவருக்கு அவர்கள் என்ன உடற்பயிற்சி செய்கிறார்கள் என்று கூட தெரியவில்லை. ஊன்றி கவனிக்கவில்லை. அவர்களின் பராக்ரமங்கள் அவரை எட்டியதில்லை. அவர்களை பற்றி அவரிடம் பேசுபவர் யார்.
அவரும் கேட்கமாட்டார். தமிழ்செல்வனும் பேச மாட்டான்.
அவர்கள் செய்து கொண்டிருந்தது களரி பயிற்சி.
இருவருமே களரி வீரர்கள், ஆறுவயதில் இருந்து கற்றுக் கொள்கிறார்கள்.
மங்கம்மா தான் இருவரையும் அவனிடம் அழைத்து வந்து “டேய், பசங்களுக்கு தற்காப்பு கலை கத்துக்கொடுக்கணுமாம், நிலா கண்ணு சொல்றா”
“எதுவும் சேர்த்து விடு, காராத்தே, சிலம்பம் இது மாதிரி” என்று சொன்ன போது…
களரி சேர்க்க தமிழ்செல்வன் நினைத்து, அவரிடம் சொல்ல, அவரும் நிலாவிடம் சொன்னார்.
எல்லாம் ஒரே கூடத்தில் இருந்த போது தான்.
“எது சிறப்பா இருக்குமோ சேர்க்கச் சொல்லுங்க. எனக்கு இது அதுன்னு எதுவும் கிடையாது, அவனுங்க ஆரோக்யமா வலிமையா இருக்கணும். என்னை மாதிரி யார் கிட்டயும் அடி வாங்கக் கூடாது. அவங்க மேல கைவைக்க யாரும் யோசிக்கணும்” என்று சொல்லும்போதே அவளின் குரல் கமறி விட்டது.
மேலே தமிழ்செல்வன் எதுவுமே கேட்கவில்லை.
ஆனாலும் மங்கம்மா நிலாவிடம், இப்போ என்ன கண்ணு, உனக்கு எவ்வளவு அடிக்கணுமோ இவனை அடி. வாங்கிக்குவான். ஆனா இவ்வளவு வெசனப்பாடாதே”
“அதான் வாழ்க்கையிலயே அடிச்சிட்டா. இதுல உடம்புல வேற அடி வாங்கணுமா?” என்ற எண்ணம் தான் அப்போது அவனின் மனதில் ஓடியது.
இதோ கேசவ நாராயணன் கண்டும் காணாமல் அவர்களின் பயிற்சியைப் பார்த்து அமர்ந்திருக்க, ராஜ நாராயணனன் வந்து அமர்ந்தான் “பா எனக்கும் வேலை குடுங்க” என்று.
“என்ன கண்ணு கேட்கறீங்க? வேலை குடுக்கறதுங்களா, என்ன வேலைங்க?” என்றார் புரியாமல்.
“அதான்பா அரசியல்ல உங்க அடுத்த மூவ் என்ன? எனக்கு சொல்லுங்க, நானும் வரணும்ங்க!”
அவர் வேண்டாம் என்றெல்லாம் சொல்லவில்லை. அவருக்கு தெரியும் மகனின் ஆர்வம். அவரின் ரத்தம் அல்லவா, அவருக்கெல்லாம் அரசியலில் ஆர்வம் என்ற வார்த்தைக்குள் அடங்காது, அவருக்கு இருப்பதெல்லாம் வெறி.
உறக்கம், விழிப்பு, ஊண் உணவு எல்லாம் அஃதே.
என்னவும் செய்வார் அதற்காக.
செய்தும் இருக்கிறார்.
மகன் ஆர்வமாய் இல்லையென்றாலும் அதில் தான் இழுத்து வந்திருப்பார். அவருக்கு பிறகு அவரின் வாரிசாக அவன் வரவேண்டும் என்பதே அவரின் விருப்பம்.
“இப்போ எதுக்குங்க அது, உங்க படிப்பை முதல்ல முடிங்க”
“அதெல்லாம் அரியர் வெக்காம முடிச்சிடுவேனுங்க, எனக்கும் சொல்லிக் குடுங்க. எனக்கு லீவ் நாள்ல நீங்க போகும்போது, இல்லை முக்கயமா எதுவும் போகும் போது என்னை கூட்டிட்டு போங்க” என்றான்.
வெகு நாளாய் அப்பாவிடம் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தவன், இன்று பேசிவிட்டான்.
“சரி” என்றவர், “இன்னைல இருந்து தமிழை தொகுதி முழுக்க ஒரு ரவுண்டு அடிக்க சொல்லியிருக்கேனுங்க, அவனோட போங்க, வேலை கத்துக்கோங்க, நான் போகும் போதும் என்னோட வாங்க”
“எனக்கு அவரோட போக வேண்டாமுங்க, நான் உங்களோட வர்றேனுங்க”
“தம்பி உங்களை என்னோட வரவேண்டாம்னு சொல்லலை, அவனோட போனா நல்லா வேலை கத்துக்கலாமுங்க. அதுக்காக சொல்றேனுங்க. ஏன் அவனோட போனா என்னங்க? உன்ற மாமன் தானுங்களே!”
“எனக்கு அவரோட போக விருப்பமில்லை” என்ற அவனுடைய எதிர்ப்பை ராஜ நாராயணன் தெரிவித்தான்.
“ஏனுங்க? என்ன காரணம்? சொன்னாதானுங்கலே தெரியும்” என்றார்
“அதெல்லாம் எனக்கு சொல்லத் தெரியலை. எனக்கு உங்களோட தான் வரணும்” என்று பிடிவாதம் பிடித்தான்.
“அரசியல்ல முதல்ல கத்துக்க வேண்டியது இது தானுங்க தம்பி, பொறுமை இருக்கணும்ங்க, பிடிச்சது பிடிக்காததுன்னு எதுவும் இருக்கக் கூடாதுங்க. அந்த நேரத்து தேவை என்னவோ அதுக்கு தக்க போயிடணும்”
“இப்போ அவன் கிட்ட நிறைய கத்துக்கலாம் போங்க! என்ன செய்யறான் எப்படி பேசறான் ஆளுங்க கிட்டன்னு பாருங்க” என்றார் கறாராக.
முகம் சுணங்கினாலும் அவர் சொல்லுகிறார், அதுவும் இன்று தான் அவன் அரசியலை நோக்கி முதல் அடி எடுத்து வைக்கப் போகிறான். அதனால் உடனே எழுந்து தயாராக சென்றான்.
இங்கே அவன் குளித்து கடவுளை வணங்கி தயாராகி உணவு உண்ண அமர்ந்தவன், அவனின் அப்பாவிடம் “இன்னும் வரலையா அவர்?” என்று கேட்டான்.
“மணி என்ன கண்ணு ஒன்பதரை தானே ஆகுதுங்க, பத்து மணி போல வருவானா இருக்கும்” அவன் அவனின் மக்களுடன் இருந்தது அவரும் பார்த்தார் தானே.
அவன் இன்று செல்ல மாட்டான் என்றெல்லாம் அவர் நினைக்கவில்லை. ஏனென்றால் அவன் இதுவரை எந்த வேலையையும் எக்காரணம் கொண்டும் தட்டியதில்லை. இவர் சொல்வதை சிரமேற்கொண்டு செய்வான்.
தமிழ்செல்வன் அவருக்குப்பட்ட நன்றி கடன் அப்படி.
உறவு முறை எல்லாம் அவனுக்கு ஒன்றுமேயில்லை. அந்த நன்றி கடனுக்காக தான் அவரோடு இருக்கிறான்.
மகன்கள் உடற்பயிற்சி முடிந்து குளிக்க செல்ல, இவனும் கீழே இறங்கி குளித்து விட்டு வந்தவன் பார்க்க, மக்கள் யாரையும் காணவில்லை, ரூமில் குளித்து தயாராகின்றனர், ஸ்ராவணியும் அவர்களுடன் இருக்கிறாள் என்று புரிந்தான்.
நிலா மட்டுமே சமையல் அறையிலிருந்து சமைத்ததை எடுத்து வந்து டைனிங் டேபிளில் வைத்துக் கொண்டிருந்தாள். வேலை செய்யும் பெண்மணியும் காணவில்லை.
ஒரு இதமான மனநிலை, டைனிங் டேபிளில் அமர்ந்தவன், நிலாவை தான் அவள் பார்த்தும் பாராமல் பார்த்திருந்தான்.
அதற்குள் ஸ்ராவணி ஓடி வந்து அம்மாவிடம் ஏதோ கேட்பது புரிய, அவள் பதில் சொல்வதும் தெரிய… தலையை அசைத்து, அபிநயம் பிடித்து மனைவி பதில் சொல்வதை ஆசை தீர கண்களில் படம் பிடித்தான்.
இரவு உறங்கும் நேரம், பாடலோடு வெளியில் பாடுவதை இப்போது மனதிற்குள் அவனையும் மீறி பாடினான்.
பூபாளம் கேட்கும் பொழுதுள்ளவரையில்
இன்பங்கள் உருவாக காண்போம்
குரல் ஓசை குயில் ஓசை என்று
மொழி பேசு அழகே நீ இன்று
உன்னிடம் மயங்குகிறேன்
உள்ளத்தால் நெருங்குகிறேன்
எந்தன் உயிர் காதலியே
இன்னிசை தேவதையே