அன்று விடுமுறை தினமாதலால் வீடு சோம்பலாய் விழித்தது. எப்போதும் இருக்கும் சப்தங்கள் இல்லை. எப்போதும் என்ன சப்தங்கள் இருக்குமென்றால் ஸ்ராவணி எழவே மாட்டாள்.
“பாப்பா எந்திருங்க” என்று அவளை எழ வைப்பதற்குள் நிலா ஒரு வழியாகிவிடுவாள். சமையலையும் பார்த்து அவளையும் பார்த்து நிச்சயம் ஓய்ந்து தான் போக வேண்டும்.
“பாப்பா ஆச்சா” என்று கத்திக் கொண்டே இருக்க வேண்டும், எழுவதில் இருந்து, காலை கடன்களை கழிப்பதில் இருந்து, பல் தேய்ப்பது வரை அவ்வளவு நேரமெடுப்பாள், பின் குளிக்க வைக்க அவ்வளவு போராட்டம். அதையும் விட உணவுண்ண அதையும் விட போராட்டம்.
அண்ணன்கள் சத்தமிட்டால் சற்று வேகமாய் நடக்கும், ஆனால் நிலா சத்தமிட விட மாட்டாள். அப்பா இருந்தாலும் சத்தமிட மாட்டான். அவள் அம்மாவின் செல்லம் என்று அவனுக்குத் தெரியும்.
“பாப்பா” என்ற சத்தம் அவன் கொடுத்தாலே “என் பொண்ணு எனக்கு பார்த்துக்கத் தெரியும்” என்ற பார்வை நிலாவிடம் இருந்து அடுத்த நொடி அவனை நோக்கி பாயும்.
அதையும் மீறி அவன் சொல்லலாம். ஆனால் மகளிடம் “நீ அப்பா பேச்சை கேட்காதே” என்று சொல்லிவிடுவாளோ என்ற பயம் அவனை செயல் பட வைக்காது.
வெகு செல்லம்!
காலையில் அவள் பள்ளி கிளம்பும்வரை அவள் பின்னே மட்டுமே சுற்றிக் கொண்டிருப்பாள். மகன்களை இப்படி வளர்த்தது போல தமிழ்செல்வனுக்கு ஞாபகமில்லை. ஸ்ராவணிக்குத் தான் இப்படி.
மகன்கள் அம்மாவிற்குத் தெரியாமல் ஸ்ராவணியை அதட்டிக் கொண்டிருப்பர். அது சற்று வேலை செய்யும்.
தமிழ்செல்வன் விழித்து விட்டவன் எழாமல் அப்படியே படுத்திருந்தான். இன்னும் மக்கள் மூவரும் எழவில்லை. சமையலறையில் பாத்திரங்களின் ஒலி கேட்க, நிலா அங்கிருக்கிறாள் என்று புரிந்தது. பால் காய்ச்சி கொண்டிருப்பாள்.
இவன் ஹாலில் உறங்குவதால் அவன் எழும்வரை, வேலைக்கு உதவிக்கு இருப்பவர் யாரும் வீட்டினுள் நுழைய மாட்டர். பின் வாயிலில் ஒரு கதவு இருக்கும், அதன் வழியாக உள்ளே வருவர்.
“அம்மணி அரிசி ஆட்டிட்டீங்களா. நான் தான் வந்துருவேன் இன்னைக்கு ன்னு சொன்னனல்லோ”
அதற்கு எந்த பதிலும் நிலாவிடமிருந்து இல்லை.
“அங்க பாருங்க காசு வெச்சிருக்கேன், கடைக்கு போய் இதெல்லாம் வாங்கிட்டு வந்துருங்க” என்று கோழி கறி, ஆட்டு கறி இரண்டும் எவ்வளவு தேவை என்று லிஸ்ட் கொடுத்தாள்.
மகன்கள் இருவரின் உணவில், உடற்பயிற்சியில், விளையாட்டு பயிற்சியில், தற்காப்பு கலையில், மிகுந்த கவனம் செலுத்துவாள்.
ஞாயிறு விடுமறை தினத்தில் அவளாய் எதுவும் சொல்ல மாட்டாள். நேரம் கழித்து எழுந்து செய்வார்கள் அவ்வளவே. மற்றபடி பயிற்சியை நிறுத்தவெல்லாம் மாட்டார்கள்.
வாழ்க்கை எப்படியோ? அவளை வஞ்சித்ததோ இல்லை நிந்தித்ததோ…?
ஆனால் அவளுக்கு கிடைத்த வரம் அவளின் மகன்கள். அம்மாவின் முகத்தை கண்களை பார்த்தே புரிந்து நடப்பார்கள். அவளின் எண்ணத்தை சொல்லும் வாய் மொழியாய் சொல்லும் அவசியமே இருக்காது. அம்மா மட்டுமல்ல அப்பாவிடம் கூட.
தமிழ்செல்வன் மெதுவாக எழுந்து அப்போது தான் அமர்ந்தான். அது அவளின் கண்களில் பட காஃபியை கொண்டு வந்து டைனிங் டேபிள் மேல் வைத்து சென்றாள்.
அவன் வீட்டில் இருக்கும் போது என்ன தேவையோ வந்துவிடும். அவன் கேட்கும் அவசியமே இருக்காது.
எழுந்தவன், தன்னை சுத்தப்படுத்தி வந்து அமர்ந்து அந்த காஃபியை பருகி முடிக்க, “அம்மா” என்ற ஸ்ராவணியின் கத்தல் கேட்டது. அவளுக்கு எழுந்ததும் அம்மா வேண்டும்.
நிலா ஏதோ வேலையாய் இருக்க, “வர்றேன் பாப்பா” என்ற அவளின் குரல் கேட்க…
இவன் எழுந்து ரூமின் உள் சென்றவன், “அம்மா வேலையா இருக்கா கண்ணு, நீ எழுந்துரு. போ, பாத்ரூம் போயிட்டு முகம் கழுவிட்டு வா” என்று சொன்னான்.
எல்லோரிடமும் அடம் பிடிக்கும் ஸ்ராவணி, அப்பா சொன்னதும் எழுந்து அவளே அவளின் வேலையை செய்து கொள்ளச் சென்றாள்.
பின் குளியலறை கதவை திறந்து வந்தவள், “ஸ்ராவணி ரெடி” என்று முகம் கழுவி நீரோடு நிற்க…
அவன் அங்கிருந்த துவாலையை கொடுத்து “முகம் துடை” என்றான். அவளும் அப்படியே செய்ய, “போ சாமி கும்பிட்டு திருநீறு வெச்சு அம்மாக் கிட்ட போ” என்றான்.
அவன் சொன்னபடி செய்து அம்மாவிடம் சென்று நின்றவள், “மா, உன் பட்டு குட்டி ரெடி” என்றபடி அம்மாவை ஓடி சென்று அணைத்துக் கொள்ள…
மகளை தூக்கி கன்னத்தில் முத்தம் வைத்து இறக்கியவள், “ஓடு போய் உட்காரு அம்மா பால் கொண்டு வர்றேன்”
வேலையாய் இருந்தாலும், தமிழ்செல்வன் உள்ளே சென்றதை பார்த்தாள். அவன் தான் அவளை எழுப்பிக் கூட்டிக்கொண்டு வந்திருப்பான் என்று புரிந்தது.
அவளுக்கும் தெரியும் அட்டாகாசம் செய்யும் மகள், அப்பாவின் வார்த்தைகளை சமத்தாய் கேட்டுக் கொள்வாள் என்று.
அவள் டைனிங் டேபிள் சென்று அமர, அவள் முன் சென்று பாலை வைத்தாள். தமிழ்செல்வன் அருகில் வந்தமர, அவன் மகளின் அருகில் இருக்க பிரியப்படுகிறான் என்று புரிந்து அவள் உள்ளே சென்று விட…
“அப்பா உனக்கு ஆத்தி தரட்டுமா பட்டு” என்று சொல்லியபடி ஆறவைத்து அதனை கொஞ்சம் கொஞ்சமாய் டம்ளரில் ஊற்றி கொடுக்க, எந்த ரகளையும் செய்யாமல் சமத்தாய் குடித்தாள்.
அதற்குள் மகன்களும் எழுந்து வர, இருவரும் நேராய் அம்மாவிடம் தான் உள்ளே சென்றனர்.
என்னவோ அம்மா சொல்ல, கெளரிஷ் சத்தமாய் சிரிக்க, சுதர்ஷன் புன்னகைத்திருப்பான் என்று அனுமானிக்க முடிந்தது.
பால் டம்ளர்களோடு வெளியில் வந்தவர்கள் அவர்களும் டைனிங் டேபிளில் அமர, “அண்ணா நான் குடிச்சிட்டேன், நான் தான் ஃபர்ஸ்ட்” என்றாள் ஸ்ராவணி.
“எஸ் பட்டு குட்டி, எப்பவுமே ஃபர்ஸ்ட்” என்று கௌரிஷ் அவளின் கன்னம் கிள்ளி முத்தம் வைக்க.
அப்பாவை பார்த்த சுதர்ஷன் “பா, உங்களுக்கு இன்னைக்கு வேலை இருக்கா” என்றான்.
என்னடா நம்மிடம் கேட்கிறான், எதற்கு கேட்கிறான் என்று பார்க்க… பார்வையை உணர்ந்த சுதர்ஷன்…
“எனக்கும் கெளரிஷ் க்கும் பைக் கத்துக்கணும்”
“பதினஞ்சு வயசு தாண்டா ஆகுது”
“நிறைய ஓட்ட மாட்டோம், ஆனா கத்துக்கறோம், ஹைவேஸ் எல்லாம் போகவே மாட்டோம், சும்மா இங்க வீதில சுத்தறோம்”
“உங்கம்மாக்கிட்ட கேட்டுட்டீங்களா?”
“அம்மா தான் உங்கக் கிட்ட கத்துக்க சொன்னாங்க”
என்னவோ மகன்கள் வந்து கேட்கிறார்கள் அப்பாவிடம் என்று இதுவரை உற்சாகம் கொண்டிருந்த மனது அம்மா சொல்லி கேட்கிறார்கள் என்றதும் சுணங்கியது.
அவளிடம் இல்லாத ஆட்களில்லை, அவளின் கண்பார்வையில் வேலைகள் சிரம் தாழ்த்தி செய்வார்கள். அவளுக்கென ஒரு சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி இருந்தாள்.
பெரும்பாலும் பெண்கள் தான். அவர்களே அவளுக்கு கார் ஓட்டுவார்கள், பைக்கும் ஓட்டுவார்கள், கனரக வாகனம் கூட ஓட்டுவார்கள்.
ஆண்களும் இருக்கிறார்கள் ஆனாலும் என்னிடம் சொல்லியிருக்கிறாள். மகன்களுக்கு எல்லாம் சிறப்பாய் இருக்க வேண்டும், யாரிடமும் விட மனதில்லை என்று புரிந்தது.
அப்படியும் இல்லாமல் தன்னுடைய வாழ்க்கையை யார் முன்னமும் விட்டுக் கொடுக்க பிரியப்படமால் தன்னை வைத்துக்கொள்கிறாளோ என்றும் தோன்றியது.
எதுவாகினும் அவன் மங்கம்மாவின் மகன் அவனை விட மாட்டாள் என்றும் புரிந்தது.
அவளுக்கும் அவனின் அம்மாவுக்குமான ஒட்டுதல் மிக அதிகம். அவளுக்காக எதுவும் செய்வார் மங்கம்மா.
மகனெல்லாம் இரண்டாம் பட்சம் தான். அதன் பின்னே தான் மகள் கூட வருவாள்.
யாரும் செய்யத் துணியாததை அவளுக்காகச் செய்தார்.
“இன்னைல இருந்து எலக்ஷன் வேலை ஆரம்பிக்க இருக்கோம்டா” என்று அவன் முடிக்கும் முன்னேயே…
“எல்லாம் நாளைக்கு இருந்து ஆரம்பிக்கலாம்” என்ற நிலாவின் குரல் கேட்க…
“அதை தான் அப்பு நானும் சொல்ல வந்தேன்” என்று கௌரிஷிடம் முணுமுணுத்தான்.
“மா, அப்பாவும் அதைத்தான் சொல்ல வந்தாராம்” என்று சுதர்ஷன் கத்தி சொல்ல,
ஸ்ராவணி “மா, அப்பா அதைத்தான் சொல்ல வந்தாராம்” என்று அண்ணன் போலவே சொல்லிக் கொண்டு அம்மாவை நோக்கி ஓடினாள்.