அன்றைய காலை முழுவதுமே ஒரு புன்னகை முகமாகவே இருந்தான் தமிழ்செல்வன்.
மதிய உணவிற்கும் வீட்டிற்கு சென்றான். நிறைய வேலைகள் இருந்தால் எங்கே இருக்கிறானோ அங்கே கடையில் உண்டு கொள்வான், இல்லை அக்காவே “வாடா சாப்பிட்டு வேலையை பார்” என்று அழைத்துக் கொள்வார்.
சென்னைக்குப் போகும் போது சென்னையில் ஒரு த்ரீ பெட்ரூம் அபார்ட்மென்ட் உண்டு. இவர்கள் சட்டமன்ற கூட்டத் தொடருக்கு செல்லும் போதோ இல்லை அமைச்சகம் மற்றும் கட்சி விஷயமாய் விஷயமாய் செல்லும் போதே அங்கே தங்கிக் கொள்வர். அங்கே சமைக்க ஆள் வந்து விடுவர்.
கேசவ நாராயணன் அங்கே தங்கிக் கொண்டாலும் இவன் அதிகம் இருக்க மாட்டான், இங்கே எல்லாம் பார்த்துக் கொள்ள ஆள் வேண்டும் என்று வந்துவிடுவான்.
மங்கம்மா இருந்தவரை மதிய உணவிற்கு வீட்டிற்கு வந்து விடுவான், அதன் பிறகு இங்கேயே இருந்தாலும் மதியம் வீட்டிற்கு வருவது அரிது.
நிலா காலையில் மில் சென்று விட்டு ஒரு இரண்டு அல்லது இரண்டரை போல வந்தால் மீண்டும் செல்ல மாட்டாள்.
அவள் வரும் நேரத்தை கணக்கிட்டு வந்தவன்,
மேஜையில் இருந்ததை எடுத்துப் போட்டுக் கொண்டே “நீ சாப்பிட்டியா கண்ணு” என்றான்.
சாதம், குழம்பு, ஒரு பொரியல் இருந்தது. அவள் உண்டு விட்டு மக்களுக்கு என்று ஏதாவது தனியாய் அவளின் கைப்பட செய்வாள்.
தமிழ் மதியம் உணவிற்கு வந்ததே அரிது, இதில் ஏதோ வெகுநாள் பேசி பழகி கொண்டிருப்பது போல பேசுகிறான். அமைதியாய் அவனின் எதிரில் வந்து அமர்ந்தவள்
“ஏன் எல்லாம் புதுசா பண்ற?” என்றாள் அமைதியான குரலில்.
“சமாதானமா போவோமே கண்ணு” என்றான் உணவில் கைவைத்துக் கொண்டே…
“எப்போ சண்டை போட்டோம், சமாதானமா போவ?”
“சண்டையில்லையா, அப்போ சரி” என்றவன் உண்ணுவதில் கவனம் வைத்துக் கொண்டே,
“நீயும் சாப்பிடு, அட்லீஸ்ட் ஹவுஸ் மேட்டா இருப்போம்” என்றான் மனதினில் சீக்கிரம் அவளின் ரூம் மேட் ஆக வேண்டும் என்ற வேண்டுதலோடு.
“என்னவோ நீ செய்யறது எதுவும் சரியில்லை” என்றாள் மீண்டும்.
“எந்தர்ரா முதல்ல” என்று அருகில் சென்றவள் அவனின் தட்டையும் கையில் எடுத்துக் கொண்டாள்.
‘தூக்கி வீசப் போகிறாளோ’ என்று பயந்தே விட்டான்.
“நீ என் பசங்களோட அப்பா போஸ்ட்ல இருக்க, அதுக்கு தகுந்த மாதிரி நடந்துக்கோ” என்று கடினமாய் சொல்ல,
மீண்டும் எழுந்து டைனிங் டேபிளில் அமர்ந்து கொண்டான் பரிதாபமாக.
பின்னே தான் அவன் முன்னே தட்டை வைத்தாள்.
வேகமாக உண்டு கொண்டிருந்தவனுக்கு உணவே இறங்கவில்லை.
“சாப்பிடு” என்று சொல்லி சமையலறை சென்று விட்டாள்.
அவன் சாப்பிட்டு கொண்டிருக்கும் போதே ஆம்லேட் எடுத்து வந்தவள், அவனுக்கும் கொடுத்து அவளுக்கும் உணவை வைத்துக் கொண்டு சோஃபாவில் அமர்ந்து கொண்டாள்.
அவள் உண்டு முடிக்கும் போது தான் இவனும் உண்டு முடித்தவன்,
அவள் கை கழுவி வந்ததும் கன காரியமாக “உன்னோட ஹஸ்பன்ட் போஸ்ட், அது எப்போ லைவ்ல வரும்” என்றான்.
“அதெல்லாம் கல்யாணமான கொஞ்சம் நாள்லயே செத்துப் போச்சு” என்றாள் நிஷ்டூரமாய்.
“மறுபடியும் உயிர் கொடுக்கலாமே”
“எரிச்சலாகுது உன்னோட இந்த பிஹேவியர் எல்லாம், தயவு செஞ்சு நிறுத்திக்கோ” என்றாள் அடிக்குரலில்.
முகத்தை பாவம் போல வைத்தவன் “முயற்சி செய்யறேன்” என்று சொல்லிச் செல்ல,
அவனின் பக்கத்தில் டம்ளர் ஒன்று பறந்து வந்து விழுந்தது.
“என் மேல படக்கூடாதுன்னு தப்பா போட்டியா இல்லை, தப்பா விழுந்திருச்சா?” என்ற முக்கியமான கேள்வியை கேட்டு வைத்தான்.
இருந்த கோபத்தில் இப்போது சரியாக அவனை நோக்கி ஒரு சொம்பை வீச, அதனை கேட்ச் பிடித்தவன்… அருகில் இருந்த சோபாவில் வைத்து,
“நாளைக்கு கண்டினியு பண்ணலாம், சாயந்தரம் பிள்ளைங்க இருப்பாங்க” என்று சொல்லி நடக்க,
வேகமாக ரூமின் உள் சென்று கதவை அடைத்து சாத்தினாள்.
“அட, ரொம்ப கோபப்படுத்திட்டோமோ, சரி கொஞ்சம் கேப் விட்டு அடிப்போம்” என்ற நினைப்பு தான். எதுவாகினும் பின் வாங்குவதாக இல்லை.
‘இப்போ போகவா வேண்டாமா, கதவு திறந்து கிடக்கு. என்ன செய்ய?’ என்று யோசித்து இருந்தான்.
பிள்ளைகள் வருவதற்கு இன்னும் ஒரு மணி நேரம் இருக்க, அதற்குள் நிலாவின் அறைக் கதவு திறந்தால் செல்லலாம் இல்லை அவர்கள் வந்த பிறகு செல்லலாம் என்று நினைத்தவன், திண்ணையில் சாய்ந்த வாக்கில் அமர்ந்து கொள்ள…
சில நிமிடங்களில் உறங்கிவிட்டான்.
எதிர் மாளிகையில் இருந்து பார்ப்பவர்களுக்கு நன்கு கண்ணில் படும்.
எதற்கோ போர்டிகோவிற்கு வந்த செந்தாமரையின் கண்களில் இது பட நின்று விட்டார்.
அவர் நிற்பதை பார்த்த கேசவ நாராயணன் வெளியில் வந்து பார்த்தார்.
அவன் அமர்ந்து கொண்டே உறங்குவதை பார்த்தவர். அவனுக்கு அழைக்க கைபேசி எடுக்க…
சரியாய் அந்த நேரம் நிலா வெளியில் வந்தாள், அவர் இங்கே பார்த்துக் கொண்டே கை பேசி எடுப்பதை பார்த்தவள் அவனை அழைக்கத்தானோ என்று நினைத்தவளாய் அவனின் அருகில் இருந்த கைபேசி எடுத்து அதனையும் அவர்களையும் பார்த்து நின்றாள்.
அழைப்பு செல்ல ஆரம்பிக்க, இதனை பார்த்து கேசவ நாராயணன் அணைத்து விட்டார். ஒலிக்க ஆரம்பித்து அடுத்த நொடி நின்று விட்டது.
பின் உள்ளே சென்று விட்டார்.
அங்கேயே நிலா பார்த்து நிற்க…
‘அச்சோ, உள்ளே போகவா இல்லை நிற்கவா’ என்று செந்தாமரைக்கு குழப்பமாகிவிட…
நிலா பார்த்திருப்பதை பார்த்து, அவளைப் பார்த்து சிரிக்க முயன்றார்.
அவரின் தடுமாற்றத்தை பார்த்தவள் உள்ளே சென்று விட…
இவர் ‘ஷப்பா’ என்று உள்ளே சென்றார். நிலாவைப் பார்த்து ஒரு பயம் தயக்கம் அவரிடம் எப்போதும் உண்டு. அவரால் அதனை களைய முடியவில்லை.
ஆனால் அது நிலாவிடம் மட்டும் தான். பெரியவரிடம் மட்டும் தான். மற்றபடி யாரிடமும் இல்லை, முக்கியமாய் கேசவ நாராயணனிடம் இல்லவே இல்லை.
அவர் ஹாலை கடந்து உள்ளே சென்றதும் பின்னே சென்ற கேசவ நாராயணன் “என்ன இவன் புதுசா பண்றான்?” என்றார்.
“தூங்குறான் அவ்வளவு தானே” என பதில் கிடைக்க…
“இல்லை, கூப்பிடறதுக்கு முன்னாடி நிற்பான், இப்போ கூப்பிட்டாக் கூட வரலை. இப்போ மதியம் ஒரு வேலை சொல்லியிருந்தேன், அங்கேயே உட்கார்ந்து தூங்கறான்” என்றார் அதிருப்தியாய்.
“அதனால என்ன? களைப்பா இருந்திருப்பான்”
“அவன் வித்தியாசமா நடந்துக்கறான். ராஜ் அரசியல்ல வர்றதுல அவனுக்கு விருப்பமில்லை போல”
“என்ன விருப்பமில்லை?”
“அவன் வரணும்னு நினைக்கிறான் போல”
“அட நினைச்சிருந்தா, பெரியவர் அவனுக்கு செய்யாமையா போயிருப்பார், இல்லை அவனுக்கு தொகுதில இருக்குற செல்வாக்குக்கு அவனால தானே செஞ்சிகிட்டு இருக்க முடியாதா? அப்படி எல்லாம் நினைக்கவே மாட்டான்” என்றார் ஸ்திரமாய்.
ஆம்! அது என்னவோ வாஸ்தவம் தான். அவன் கேட்டால் இல்லையில்லை, நினைக்கிறான் என்று தெரிந்தாலே பெரியவர் செய்து கொடுத்து விடுவார்.