அவர் செய்யாவிட்டாலும் இன்றைய சூழலுக்கு அவனால் நிச்சயம் செய்து கொள்ள முடியும். கட்சியில் பதவி என்று எதுவும் கிடையாது. ஆனால் கட்சியில் செல்வாக்கு அதிகம், தொண்டர்களிடமும் அதிகம்.

சொல்லப் போனால் அவனின் தொகுதியில் மட்டுமல்ல அந்த கோவை மாவட்டத்தின் கிங் மேக்கர் அவன்.

அவர் யோசித்து நிற்க, தமிழ் செல்வனின் அக்கா என்பதனை வார்த்தைகளில் நிரூபித்தார் செந்தாமரை.

“அவன் பாட்டுக்கு இருக்குறான், அவனை உசுப்பேத்துறது நல்லதில்லை. அவன் கூட சும்மா தான் இருப்பான், அவனை சீண்டினா அவ்வளவு தான். கண்ணு க்கு தெரிஞ்சா களத்துல குதிச்சு, நீ தான் அடுத்த எம் எல் ஏ ன்னு சொல்லிச்சு ன்னு வைங்க…”

“நம்ம தொகுதில இடைதேர்தல் வர்ற மாதிரி சில நாள்ல சூழ்நிலை உருவாகிடும். நம்மளா அரைகூவல் விடற மாதிரி பேச வேண்டாம். அப்புறம் உங்க பையன்னால பைக் எரிஞ்ச மாதிரியான சூழ்நிலைகள் உருவாகிடும்” என்றார்

அவரோடே இருக்கிறார், அரசியல் களம் தெரியுமோ இல்லையோ நிலா நினைத்தால் நடக்கும் என்று தெரிந்து வைத்திருக்கிறார்.

முன்புமே அப்படித்தான் நிலா நினைத்தால் எல்லாம் நடக்கும்.

நடுவில் நடந்த சிக்கல்களில் அவளின் வாழ்க்கை மாறிப் போக, அவளின் வார்த்தைகள் எடுபடாமல் போனது.

பின்னர் அவளே எல்லாவற்றிலுமிருந்து விலகி நின்று கொண்டாள்.

இப்போது அப்படி அல்ல நிலைமை… அவள் எதுவும் இது தேவை என்று நினைப்பதில்லை அவ்வளவே. நினைத்தால் அடுத்த நொடி தமிழ்செல்வன் செய்து கொடுப்பான் என்பது செந்தாமரைக்கு திண்ணம்.

“ஒரு வேளை அவன் பசங்களை கொண்டு வர நினைப்பானோ?”

“இருக்கலாம், ஆனா அது உடனே கிடையாது இல்லையா! அதுக்குள்ள ராஜ் ஜை வளர்த்து விடுங்க. நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்” என்றார் அவர்.

கேசவ நாராயணனுக்கு வாசவியும் ராஜ நாராயணனும் இரு கண்கள் போல, பிள்ளைகள் என்றால் பைத்தியம்.

நிலா வை விட்டது குற்ற உணர்வோ என்னவோ, மற்ற மக்கள் அப்படி ஒரு செல்லம். வெளிப்படையாய் காண்பிக்க மாட்டார்.  ஆனால் அவர்கள் அப்படி ஒரு செல்லம் தான்.

அதனால் தான் தமிழ் செல்வனின் சிறு மாற்றமும் ராஜ நாராயணனின் அரசியல் வரவாலோ என்று பதட்டமாகிறார்.

செந்தாமரை மங்கம்மாவின் மகளாக இருந்த போதே நிலா தள்ளி தான் வைப்பாள். இப்போது சொல்லவும் வேண்டுமா கேசவ நாராயணனின் மனைவி. சில மனிதர்கள் மிக நெருங்கிய உறவாக இருந்தாலும் சிறு வயதில் வேண்டாம் பதிந்து விட்டாள் புதுபிக்க முடியாது.

அப்படி தான் கேசவ நாராயணனும் நிலாவின் மனதில். ‘அப்பா’ என்ற உறவிடம் தள்ளி நின்றே பழகி விட்டாள்.

தமிழ் செல்வனின் கை பேசியையும் எடுத்து சென்று ஹாலில் வைத்து விட்டு, மக்களுக்காக காலிஃபிளவர் சில்லி செய்வதற்காக ஆயத்தம் செய்து கொண்டிருந்தாள்.

தமிழுக்கு மக்கள் பள்ளியில் இருந்து வரும் வரை விழிப்பு வரவில்லை. அவர்களின் கார் கேட்டினுள் நுழையும் சத்தத்தில் தான் விழித்தான்.

‘தூங்கிட்டோமோ’ என்று நேரம் பார்க்க, ‘அம்மாடி ஒரு மணி நேரம் போச்சா’

கார் வந்து நிற்கவும்… மகன்கள் இறங்க, மகளோ அவளின் புறம் கதவை திறந்து இறங்கினாள். தலையெல்லாம் கலைந்து உடையெல்லாம் மண், பார்க்கவே கண்ட்றாவியான தோற்றத்துடன்.

என்னவோ யாருடனோ சண்டை போட்டது போல வந்தாள். பையையும் எடுக்கவில்லை.

“உன் பை எடு” என்று சுதர்ஷன் அதட்ட…

“மேகி க்கா, எடுத்துட்டு வாங்க” என்று அதிகாரமாய் சொன்னாள்.

அவளின் குரலில் வெளியே வந்தாள் நிலா, அவளைப் பார்த்ததும் அதிர்ந்து விழித்தாள்.

‘என்னடா இன்றைக்கு என்றைக்கும் விட அலங்கோலம். பள்ளியில் என்ன தான் பார்க்கிறார்கள்’ என்று கோபம் வந்தது நிலாவிற்கு.

மேகலாவை பார்த்தது சத்தமிட்டாள், ‘அவளை நீட் செய்து கூட்டிட்டு வரமாட்டியா’ என்று.

“அக்கா என்னை தொட விடலைக்கா, ஷூ ல மண்ணு. கழட்டு பாப்பா தட்டலாம்னு சொன்னா, விடவேயில்லை. காரெல்லாம் மண்ணு” என்றாள் பரிதாபமாக. அவளின் கவலை அவளிற்கு இனி சுத்தம் செய்ய வேண்டுமே.

நிலா, மேகலாவை விடுத்து மகன்களை முறைத்து பார்த்தாள்.

“என்ன சண்டை போட்டியா பாப்பா, யாரோடயும்?” என்று ஸ்ராவணியை நெருங்கி கேட்டான் தமிழ்.

கொஞ்சமும் தயங்காமல், பயமில்லாமல், “ம்ம்” என்று தலையசைப்பை கொடுத்தாள்.

அவளை விட்டு மகன்களை பார்த்தான்.

“பா, இன்னைக்கு எங்களுக்கு கிளாஸ் மூணரைக்கு முடியும். இவளுக்கு மூணு மணிக்கு. கிரௌண்ட்ல உட்கார வெச்சிருக்காங்க, அப்படியே விளையாடறவங்க விளையாடலாம்னு. ஹெல்பர் அக்காங்க இருந்தாங்க. ஆனாலும், அங்கே யாரோடவோ வம்பு போல, சண்டை கட்டி உருண்டு புரண்டிருக்கா?” என்றான் கெளரிஷ்.

“நாங்க கிளாஸ் முடிச்சு வரும் போது, இவளைத் தனியா உட்கார வெச்சிருந்தாங்க” என்றான் சுதர்ஷன்.

இந்த ‘தனியா உட்கார வெச்சிருந்தாங்க’ என்ற வார்த்தை நிலாவை அசைத்தது. ‘நாளைக்கு ஸ்கூல் போகணும்’ என்று மனதில் நினைத்துக் கொண்டாள்.

“என்னன்னு கேட்காம கூட்டிட்டு வந்துட்டீங்களா?” என்றான் மகன்களை பார்த்து தமிழ்.

“கேட்டோம் பா, யாரோ தெரியலை. அந்த பையனை நாங்களும் பார்த்ததில்லை. அவள் கிளாஸ் இருக்குறவங்களை எங்களுக்கு தெரியும். இந்த பையன் ஒரு வாரம் முன்ன நியு அட்மிஷன் போல அவளோட கிளாஸ்க்கு. அவனோட சண்டை. அவனை அவங்கப்பா வந்து கூட்டிட்டு போய்ட்டார். நாங்க பார்க்கவும் இல்லை”

“என்ன பாப்பா இது? என்ன நடந்தது சொல்லுங்க” என்றான் மகளிடம்.

“எப்பவும் போல என்னோட போனி டெயில் லூசா ஆகிடுச்சுப்பா” என்று இரு கைகளையும் நீட்டி முறித்து சலுகையாக சொல்ல ஆரம்பித்தாள்.

“என் தலை கலைஞ்சு நான் உட்கார்ந்து இருக்கும் போது என்னை பார்த்து பார்த்து சிரிச்சான்”

“எனக்கு ரொம்ப கோபம் சிரிக்காத சொன்னேன்”

“அதுக்கும் சிரிச்சான்”

“எனக்கு கோபம் வந்துடுச்சு, அப்படியே அவன் மேல பாய்ஞ்சு அவனை கீழ தள்ளி, அவன் தலையை பிடிச்சு ஆட்டி விட்டுடேன். அவனும் என் தலையை பிடிச்சு ஆட்டினான். நான் அவனை ஒரு குத்து விட்டேன்” என்று ஏதோ வீர மங்கை போல பேச…

மகளின் ஆக்ஷனோடு கூடிய விவரிப்பில், கேட்டிருந்த தமிழ் செல்வனுக்கு சிரிப்பே வந்துவிட்டது.

“அவன் உன்னை திருப்பி அடிக்களை” என்றான் சிரிப்போடே.

“அவன் அடிக்கும் முன்ன ஹெல்பர் ஆன்ட்டி பார்த்து அவனை பிரிச்சு விட்டுட்டாங்க”

“அப்போ நாளைக்கும் சண்டை இருக்கா?” என்று கௌரிஷ் விளையாட்டு போல கேட்க,

“அப்பு” என்று அதட்டிய நிலா,

“அவளை தனியா ஸ்கூலுக்கு அனுப்பினா கூட இப்படி வம்பு பண்ணிட்டு வர மாட்டா போல. நீங்க என்னடா பண்றீங்க?”

“நாளைக்கு நான் ஸ்கூலுக்கு வர்றேன்” என்று அதட்டினாள்.

“அந்த பையன் பேரு என்ன?” என்று மகளிடம் கேட்க

“அகில் ஆதர்ஷ்” என்றாள் ஸ்ராவணி.

‘ஆதர்ஷ்’ என்ற பெயர் நிலாவை நெருட,

தமிழ் செல்வனின் முகம் சிரிப்பை துடைத்து கடினமாகியது.

“எப்படிடா, உங்க ஸ்கூல்ல நியு அட்மிஷன் இடையில எடுக்க மாட்டாங்களே?” என்று நிலா மகன்களை கேட்க…

“தெரியலை மா, ரொம்ப இன்ப்ளுயன்ஸ் இல்லைன்னா பாசிபிள் இல்லை” என்று மக்களும் சொல்ல…

“நாளைக்கு நான் ஸ்கூலுக்கு வர்றேன்” என்றான் தமிழ் செல்வன் மக்களிடம்.

‘ஆதர்ஷ்’ என்ற பெயர் பல பல நினைவுகளைத் தட்டி எழுப்பியது இருவருக்குமே.

நிலாவின் முகம் யோசனையை தத்தெடுக்க, தமிழின் பார்வை நிலாவைத் தான் பார்த்தது.

ஒரு காலத்தில் நிலாவின் மிக மிக நெருங்கிய நண்பன் ஆதர்ஷ்.

அவனால் தான் நிலாவின் வாழ்கை தலைகீழாய் மாறியது என்றும் சொல்லலாம். நண்பன் என்று நம்பி ஏமாந்து போனாள் என்றும் சொல்லலாம்.

இல்லையில்லை ஆதர்ஷே ஏமாந்து தான் போனான், அது தான் உண்மை!