அவர்களும் இவனைக் கண்டுகொள்ளவில்லை, இவனும் அவர்களை கண்டு கொள்ளவில்லை

அவனின் அக்கா செந்தாமரை தான், “சாப்பிடுடா” என்றார்.

“இல்லைக்கா வீட்டுக்குக் கிளம்பறேன், சொல்லிட்டுப் போகலாம்னு வந்தேன்”

“அவர் என்ன பண்றார் இன்னும் சாப்பிட வராம”

“வெளில தான் இருக்கார்”

“டேய், யாராவது பார்க்க வந்துடுவாங்க, அவரை சாப்பிட கூட்டிட்டு வா. சாப்பிட்டு எங்கேன்னாலும் போகட்டும்” என்றார் அவசரமாய்.  

“இவங்களை அனுப்பிக் கூப்பிட்டுக்கோ கா, நான் கிளம்பறேன்”

“நீ சொன்னா தான் கேட்பார், இவங்க போனா அப்பா அப்புறம் வர்றேன்னு சொல்லி லேட் பண்ணுவார், கூட்டிட்டு வாடா”

“நீ சொன்னா தான் கேட்பார்” என்ற அம்மாவின் வார்த்தையில் முறைப்பாய் அம்மாவையும் அவனையும் பார்த்தனர் மக்கள்.

ஆம்! கேசவ நாராயணனுக்கு எல்லாம் தமிழ்செல்வன் தான். அவனின் வார்த்தைக்கு இருக்கும் முக்கியத்துவம் வேறு யாரின் வார்த்தைக்கும் அவரிடம் இருக்காது.

சில சமயம் இவர்களுக்கு எதுவும் காரியம் ஆகவேண்டுமென்றாலும் அவன் மூலமாய் செல்லும் நிலைக்குத் தான் தள்ளப்படுவர்.

இதற்கு தாய் மாமன் தான், ஆனாலும் அதிகமாய் ஒட்டி உறவாட மாட்டர். அவர்களுக்கு தாய் மாமன் என்பதை விட, அப்பாவிடம் வேலை செய்பவன் அவரின் உதவியாளன் அவ்வளவே.   

வெளியே சென்று பார்த்தால் அவரோடு ஊர் பெரியவர்கள் பேச வந்துவிட்டனர்.

‘அச்சோ, உள்ளே சென்று சொல்லாமல் கொள்ளாமல் சென்றிருக்க வேண்டுமோ’ என்று நொந்து கொண்டான்.  

இவனைப் பார்த்ததும் எல்லோரும் வேகமாக எழுந்து நின்று “வணக்கம் தம்பி” என்றனர். சொல்வது கேசவ நாராயணனாய் இருந்தாலும் செய்வது அவன் தானே. எல்லோரும் அறிந்த தெரிந்த விஷயம் இது.

கேசவ நாராயணன் அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டு, அதனையெல்லாம் தமிழ்செல்வனிடம் சொல்லி என்னவென்று பார்க்கச் சொல்ல, இதற்குள் அந்த நேரத்திற்கு தகுந்தபடி அவர்களுக்குக் குடிக்க சாப்பிட என்று அதற்கும் சொல்லி, அதனையும் கவனித்து, இப்படியாக அவர்கள் பேசி முடித்து செல்லும் போது, இரவு மணி பத்து பத்து..

“நீங்க போய் சாப்பிடுங்க அய்யா, நானும் கிளம்பறேன்” என்று சொல்லி நிற்காமல் கிளம்பிவிட்டான்.

பின்னே இன்று வெளியிடம் செல்லாமல் இங்கே தானே இருக்கிறோம், மகன்களோடு சாப்பிடலாம் என்று நினைத்திருந்தான்.

இந்த நேரத்திற்கு சாப்பிட்டு முடித்திருப்பர்.

அவனுக்கு உணவு இருக்குமா இல்லையா என்று கூடத் தெரியாது. ஒன்பதரை மணிக்குள் சென்று விட்டால் இருப்பதற்கு வாய்ப்பு அதிகம் இல்லையென்றால் சந்தேகமே.

இவனை பார்த்தால் உணவை இவன் உண்பதற்கு தயாராய் வைப்பாள். இல்லையென்றால் அவர்கள் உண்டு தூங்கிவிடுவர். அவன் வீட்டிற்கு வருவானா உண்பானா என்று தெரியாதே.    

வேகமாய் செல்லும்போது பத்து மணியாகி பதினைந்து நிமிடங்கள் ஆகிவிட, கேட் பூட்டியிருந்தது. வாட்ச் மேன் இவனைப் பார்த்ததும் சாவி எடுத்து திறந்து விட்டான். இரவு மட்டும் ஒன்பது மணி போல ஒரு வாட்ச் மேன் வருபவன், காலை ஏழு மணிக்கு சென்று விடுவான்.

இவன் பலசமயம் கூட்டங்கள் சென்று விட்டோ இல்லை வெளியூர் சென்று விட்டோ வருவதனால் இந்த ஏற்பாடு. அப்படி கௌரவமாய் சொல்லிக் கொள்ளலாம். கதவை திறந்து விடுவாளா தெரியாதே.

ஐந்து வருடங்கள் முன்பு வரை அவனின் அம்மா இருந்தார். இப்போது அவரில்லை. அவர் இருந்தவரை எல்லாம் அவர் பார்த்துக் கொள்வார். இப்போது இந்த ஐந்து வருடங்களாக நிலா பார்ப்பாளா இல்லையா என்று தெரியாது. அதற்கான அவசியத்தை அவன் கொடுக்கவேயில்லை.

அவனிடமிருந்த சாவி கொண்டு வீட்டின் கதவை திறந்து உள்ளே நுழைந்தான்.

மகன்கள் இன்னும் உறங்கியிருக்கவில்லை, அடுத்த நாள் ஞாயிறு விடுமுறை தினம் தான். இருவரும் ஹாலில் அமர்ந்து திங்களன்று ஆரம்பமாகவிருக்கும் பரீட்சைக்கு படித்துக் கொண்டிருந்தனர்.

அப்பாவை பார்த்ததும் புன்னகைத்தனர்.

பின்னர் புத்தகத்தில் மூழ்கிவிட்டனர்.

மனைவியின் அறையின் கதவு திறந்து தான் இருந்தது, எட்டி பார்த்தான், ஸ்ராவணியை அணைத்தவாறு நிலாவும் உறங்கிக் கொண்டிருந்தாள். மகளை உறங்க வைக்க என படுத்தவள் அவளும் உறங்கிவிட்டாள் என்று புரிந்தது.

உள்ளே சென்றவன் உறங்கிக் கொண்டிருந்த இருவரையும் பலநொடிகள் கண்களில் நிரப்பிக் கொண்டான். போர்வையை எடுத்து இருவருக்கும் போர்த்தி விட்டு, ஏ சீ ஆன் செய்து அதனை மிதமான குளிரில் வைத்து கதவடைத்து வெளியே வந்தான்.

சரியான பசி அவனிற்கு, கை கால் கழுவக் கூட இல்லை. டைனிங் டேபிள் மேல் என்ன இருக்கிறது என்று பார்க்க, சாம்பார் மட்டும் இருந்தது. வேறு எதுவும் இல்லை.

ஃபிரிட்ஜில் இருந்து மாவு எடுத்து அடுப்பின் முன் சென்று தோசைக் கல்லை வைத்து அடுப்பை பற்ற வைத்தான்.

பார்த்திருந்த கௌரிஷ் வந்தவன், “பா நீங்க இன்னும் சாப்பிடலையா, நீங்க வருவீங்களா இல்லையா தெரியலை, நாங்க நீங்க அங்கே இருந்ததைப் பார்த்தோம், அதான் அம்மா சாம்பார் வெளில வெச்சிட்டாங்க. தள்ளுங்க நான் சுடறேன்” என்று சொல்ல…

“நானே சுட்டுக்கறேனுங்க அப்பு. நீங்க போங்க போய் படிங்க”

“பா, நீங்க தள்ளுங்க நான் சுடறேன்”  

இவர்களை இருவரையும் சுதர்ஷன் பார்த்திருப்பது புரிந்து பரிதாபமாய் திரும்பி அவனைப் பார்த்தான்.

விஷயம் என்னவென்றால் கௌரிஷிற்கு தோசை சுட வராது, தோசை கல்லோடு ஒட்டிக் கொள்ளும் இல்லை பிய்ந்தோ தீய்ந்தோ எடுப்பான்.

இருக்கும் பசிக்கு அவன் சோதனை எலி ஆகும் பொறுமை இல்லை.

தமிழ் செல்வனின் பார்வையை உணர்ந்தவன், சுதர்ஷன் எழுந்து வந்தான்.

“போங்க, போய் முகம் கை கால் கழுவி வாங்க” என்றவன்,

“டேய் ப்பு வெங்காயம் கட் பண்ணு” என்றான்.

மகனின் கவனிப்பில் முகம் மலர்ந்த தமிழ்செல்வன் வேகமாக அவன் சொன்னதை செய்ய விரைய, அவன் திரும்பி வரும் போது, டைனிங் டேபிளில் அவனுக்காக சூடாக முட்டை தோசை காத்திருந்தது.

அடுப்பில் ஆனியன் தோசை வெந்து கொண்டிருந்தது. சுதர்ஷன் சுட, கௌரிஷ் பரிமாற, மகன்களுடன் அமர்ந்து சாப்பிட முடியாத வருத்தம் மறைந்து மனது இலகுவானது.

வயிறு நிறைய உண்டவன், ஹாலில் ஒரு தலையணை எடுத்து போட்டு படுத்துக் கொண்டான். அவன் உறங்குமிடம் அதுதான். கட்டில், மெத்தை, ஏ சி என்று சகல வசதிகளும் இருந்தாலும் அவனுக்கு கட்டாந்தரை தான்.

“நாளைக்கு லீவ் தானே தூங்குங்க, நாளைக்குப் படிப்பீங்கலாம்” என்று சொல்லி மகன்களையும் உறங்க அனுப்பிவிட்டான்.

அவர்களும் அவர்களின் அறைக்கு சென்று விட்டனர். மூன்று அறை ஒன்று மகன்களுக்கு, ஒன்று அம்மாவிற்கும் மகளிற்கும், மற்றொன்று இவனிற்கு. ஆனால் அதில் இவன் உறங்கியதே இல்லை. எப்போதும் இந்த கூடம் தான், வெறும் தரை தான். குளிறினால் ஒரு பாய் விரித்துக் கொள்வான்.

உடலில் அதீத களைப்பு இருந்த போதும் உறக்கம் அண்டவில்லை. இரவில் அவனின் ஒரே துணையான இளையராஜாவின் இசையை ஒலிக்க விட்டான்.           

பாடல்கள் ஒலிக்க ஆரம்பிக்க… மெல்லிய குரலில் அதனோடு இணைத்துக் கொண்டான் அவனின் குரலையும்.   

நிலாவிற்கு உறக்கம் கலைய… போர்வை போர்த்தப்பட்டிருப்பது புரிய, அவன் வந்துவிட்டான் என்றும் புரிந்தது.

மகன்கள் உறங்கிவிட்டார்களா என்று பார்க்க நினைத்து கதவை சிறிதும் ஓசை செய்யாமல் திறந்தாள்… இருட்டான கூடமும் அதில் தெரிந்த மெல்லிய ஒளியும் அவர்கள் உறங்கச் சென்று விட்டனர் என்று புரிந்தது.

உடன் இவனது மெல்லிய ஒலியும்….    

நான் தேடிடும் ராசாத்தியே,

நீ போவதா ஏமாத்தியே,

வா வா கண்ணே இதோ அழைக்கிறேன்….

இரவின் நிஷப்தத்தில் பாடலோடு அவன் குரலும் கேட்பவரை மயக்கும் வல்லமை கொண்டது.

அவளைத் தவிர…  

சிறிதும் சத்தம் செய்யாமல் கதவை மூடி உறங்கச் சென்றாள்.

துள்ளி எழுந்தது பாட்டு சின்ன குயிலிசை கேட்டு…