Advertisement

அத்தியாயம் 09

இதமான காலைப் பொழுது. பளிச்சென்ற பளிங்குச் சிற்பம் போல புதுப் பூவாய் தலையில் சுற்றிய வெள்ளைத் துண்டோடு, காதோரம் நீர்த் துளிகள் சொட்ட, மெல்லிய சில்வர் க்ரீன் நிற டிசைனர் புடவையில் நின்றிருந்தாள் இசைவாணி. கண்கள் மட்டும் இமையாது கட்டிலில் துயிலும் கணவன் மீது! 

 

எப்போதும் மேல் சட்டையைக் கழட்டி வைத்துவிட்டு உள் பனியனோடு தான் உறங்குவான். அதீத சதைப்பற்று ஏதுமில்லாது அளவான கட்டுமஸ்தான உடல், மாநிறம், சதுர முகம், தலையிலும் நெஞ்சிலும் புஜத்திலும் அடரான முரட்டு முடிகள், பார்வைக்குத் தான் அவள் தொட்டுப் பார்த்ததில்லை. உறங்கும் நிலையிலும் இறுகிய தோற்றம் தான். அடங்காத ஒரு முரட்டுப் பிடிவாதக் குழந்தையாகத் தோன்றினான். 

 

உவமைக்குத் தானே தவிர, குழந்தை போன்ற அசட்டுத் தனங்கள் சிறிதுமில்லாத கம்பீரம்.  நடையிலும் பேச்சிலும் எதிராளியைக் கட்டுப்படுத்திடும் ஒருவித ஆளுமை, குறை என்று சிறிதுமில்லாத முழு ஆண்மகன்! சிறிது ஆராய்ச்சி, மெச்சுதலாய் ஒரு பார்வை தான்,  ரசிக்கவில்லை. 

 

ஆனாலும் நிமிடங்கள் சில கடந்து விட்டதை உணர்ந்தவள் நிமிர்ந்து கண்ணாடியில் தன் முகம் பார்த்தாள். கழுத்திலும், கைகளிலும் தெரியும் வெண்திட்டுகள் பளிச்சென்று அவளை வெறுப்படுத்திக் காட்டச் சின்ன சுணக்கம். ‘அவனுக்கு என்ன குறை? எந்த விதத்திலும் தான் அவனுக்குப் பொருத்தமில்லை’ என்றே தோன்ற வாடியது உள்ளம்! 

 

‘சரியாகி விடுமா? சரியானால் அவனுக்குத் தன்னைப் பிடிக்குமா? அதான் நேற்றே தன் இருப்பதை அறிந்தும் அவன் அன்னையிடம் சொன்னானே அவருக்காகத் திருமணம் செய்து கொண்டதாக. எனக்கு ஏன் இந்த திருமணம்?’ மீண்டும் மீண்டும் நேற்றைய இரவிலிருந்து இந்த கேள்வியிலே மனதில் வந்து நின்றது. பதில் தான் இல்லை! 

 

நீண்ட மூச்சோடு தன்னை தயார்ப்படுத்திக் கொண்டு வெளியே சென்றாள். உணவு மேசையில் செய்தித்தாளை விரித்தபடி பாரி அமர்ந்திருக்க, அவளைக் கண்டதும் சிறு புன்னகை புரிய, அவளும் புன்னகை முகமாகச் சமையலறை சென்றாள். தேவகி எதுவும் அவளை வேலை செய்ய விடுவதே இல்லை. 

 

கையில் காபியைக் கொடுத்து வெளியே அனுப்பப் பார்க்க, “அத்தை, எனக்கு உங்க ஸ்டைல்ல காஃபி எப்படி கலக்குறதுன்னாவது சொல்லிக் கொடுங்களேன்” எனக் கெஞ்சியபடி நின்று கொண்டாள். 

 

என்னவோ அவரிடம் வேலை கற்றுக்கொள்வது போலே, அவருக்கும் உதவிக் கொண்டிருக்க, சோம்பல் முறித்தபடி உள்ளே வந்தான் மனோ.  

 

“அம்மா காஃபி..” என இழுத்தவன், இசையைக் கவனித்ததும், “குட் மோர்னிங் அண்ணி” என்றான். அவளும் பதில் உரைக்க, சமையல் மேடையின் ஓரம் ஏறி அமர்ந்தான். 

 

இசையே அவனுக்குக் காபியைக் கொடுக்க, நன்றியோடு வாங்கிக் கொண்டவன் ஒரு வாய் வைக்கையிலே, “பல்லு விளக்குனியாடா?” என்றார் தேவகி. 

 

“அம்மா..” எனச் சிணுங்கியவன், “என் கோல்கேட்ல உப்பு, புளி, லவங்கம், சீரகம் எல்லாம் இருக்கு, டேஸ்ட் பார்த்துட்டேன், போதுமா?” என்றபடி முன் பற்களையும் இளித்துக் காட்டினான். இசை உதட்டைக் கடித்துச் சிரிப்பை அடக்க, தேவகி சத்தமாகச் சிரித்தே விட்டார். 

 

அதில் கடுப்பானவன், அன்னையைக் கடுப்பேற்ற நினைத்து, “காஃபி அமிர்தமா இருக்கு, சூப்பர் அண்ணி, இத்தனை நாள்ல கழனித்தண்ணியை தான் காஃபின்னு குடிச்சிட்டு இருந்தோம்” என்றான். 

 

இசை திருதிருவென விழிக்க, “இந்த அமிர்தமும் உங்கம்மா போட்டது தான், இன்னைக்குத் தானே நீ பல்விளக்கிக் குடிக்க, அதான் ருசியில வித்தியாசம் தெரியுது” எனக் குரல் கொடுத்தார் பாரி. 

 

‘அச்சோ! அசிக்கம்டா மனோ!’ தனக்கு தானே சொல்லிக் கொண்டவன் வெளியே வந்து தந்தையின் அருகே அமர்ந்தான். காய்கறிகளை எடுத்து வந்து அவனுக்கு அடுத்த இருக்கையில் அமர்ந்து இசையும் நறுக்கத் தொடங்கினாள். 

 

தந்தையிடம் நேற்றைய நிகழ்வை மானோ தெரிவிக்க, “அவன் பிடிவாதம் தான் எல்லாருக்கும் தெரிஞ்சதே, யாரால என்ன செய்ய முடியும்? கொஞ்ச நாள் போகட்டும், அவனை விட்டுத் தான் பிடிக்கணும்மா” என்ற பாரிக்கு, சரியெனத் தலையசைத்தாள். 

 

“நீ வேணா உங்கம்மா வீட்டுக்கு போயிட்டுவாம்மா, மானோவும் தேவகியும் கூட கூட்டிட்டிப் போயிட்டு வா” என்க, “இல்லை மாமா, அம்மாகிட்ட நான் பேசிக்கிறேன், இனியொரு நாள் போகலாம். இருக்கட்டும்” என்றாள். 

 

‘விருந்து என்றழைத்து அருள் வரவில்லை என்றால் பிரகாஷ் கோபம் கொள்வான். அதில் இவர்களையும் அழைத்துச் சென்று பிரச்சனை ஏன்?’ என்றெண்ணியே மறுத்தாள். 

 

அவரும் அமைதியாகி விட, “நானும் விக்கியும் வேணா உங்க வீட்டுக்குப் போயிட்டு, ராஜிக்கிட்ட கேட்டு உங்க திங்க்ஸ் எல்லாம் வாங்கிட்டு வந்திடுறோம் அண்ணி” என்றான் மனோ. 

அவளுக்கும் தேவையாக இருக்க, மறுக்காது சரியென்றுவிட்டாள். இரண்டு மூன்று நாட்களிலே அவனோடு ஒரு தோழமை உணர்வு வந்திருந்தது. 

 

“அண்ணன் ரொம்ப ஸ்ட்ரிட், எல்லாத்துலையும் பெர்பெக்ஷன் எதிர்பார்ப்பான், சின்னத் தப்புனாலும் தாங்கிக்க மாட்டான், கோபம் கொஞ்சம் அதிகம், கண்டிப்பும் அதிகம் தான் ஆனாலும் ரொம்ப அன்பானவன்! காட்டிக்க மாட்டானே தவிர, எல்லாருக்கும் பார்த்துப் பார்த்து செய்வான். பயப்படாதீங்க அண்ணி, அவனை நீங்க தான் அடக்கணும். உங்களை நம்பி தான் அடியேன் நாங்க எல்லாம் இருக்கோம்” என்க, இதழ் பூத்த சின்னச் சிரிப்போடு கேட்டிருந்தாள் இசைவாணி.  

 

“ம்ம், எம்பிள்ளை புகழ் பாடுனதெல்லாம் போதும். அண்ணன் கல்யாணத்துக்குப் போட்ட ஐந்து நாள் லீவ் நேத்தோட முடிஞ்சது, எழுந்து காலேஜ் கிளம்புடா” எனச் சமையலறையிலிருந்து தேவகி அதட்டலிட, “ஆறு நாள்ல? மறந்துட்டியாம்மா வேணா விக்கிட்ட கேளு” என்றான் மனோ. 

 

“இதுக்கு மட்டும் இரண்டுபேரும் கூட்டுச் சேர்ந்துடுவீங்கலே..” என்ற தேவகியின் குரல் அவனுக்குச் செவியில் ஏறவில்லை. 

 

நேற்றைய அலைச்சல், அசதியில் சற்று அதிக நேரம் உறங்கிவிட்ட அருள் அதன் பின்பு தான் எழுந்து தயாராகி வெளியே வந்தான். மௌனமோடு அவனுக்குக் காலை உணவு இசை பரிமாற, அவனோ தட்டிலிருந்த உணவைக் கவனியாது வெறித்த பார்வையில் இருக்க, அவன் பார்வை சென்ற திசையைக் கவனித்தவள் அதிர்ந்தாள். 

 

அவள் புடவை நழுவிய வெற்று இடையைத் தான் வெறிக்கப் பார்த்திருந்தான். அவளையும் அறியாது சட்டெனக் கைகள் புடவையை இழுத்து இடுப்பை மறைத்து விட, அவன் நிமிர்ந்து அவளைப் பார்க்க, இருவரும் நேராகப் பார்த்தனர். 

 

எதுவும் சொல்லி விடுவானோ என்ற சிறிய படபடப்பு அவள் நடுங்கும் உதடுகளில் தெரிய, அமைதியாக குனிந்து உணவுண்ணத் தொடங்கினான். ‘தங்கள் அறையில் இருக்கும் போது கூட இப்படியொரு பார்வை பார்த்ததில்லையே? இப்போது மட்டும் என்ன?’ அவள் சுணங்கினாள். 

தான் பார்த்ததையும் அவள் கவனித்து விட்டாள் என்ற சங்கோஜமின்றி உண்டவனின் சிந்தனை எல்லாம் வேறு. அவள் இடுப்பு மடிப்பிலும் விரல் அளவிற்கான சிறிது வெண் திட்டுத் தெரிய, ‘உடலிலும் இருக்கும் போல் இருக்கே! இது பற்றி தனிமையில் அவளிடம் பேசி அறிந்து கொள்ள வேண்டும்’ என்றே நினைத்தான். அதுவே யோசனையாக இருந்ததை அவள் அறியவில்லை. 

 

பொதுவாகக் கழுத்து முதல் கால் வரை முழுதும் மூடிய சுடிதார் அல்லது, ஜீன்ஸ் குர்த்தி தான் அணிவாள். புடவை எல்லாம் சமீபமாகக் கட்டப் பழகி, இப்போ தான் உடுத்தியும் இருந்தாள். அமைதியோடு உண்டவன் இடையிலே இரண்டு மூன்று முறை அவள் முகம் பார்த்தான்.

  

வாடிய முகமில்லை ஆனாலும் புன்னகைக்குப் பஞ்சம் தான். ‘வெளியில் செல்வோம்’ என அவளைக் கிளம்பச் சொல்ல, அவள் திருதிருவென விழிக்க, தேவகியும் அவளைத் தள்ளிவிடாத குறையாக அனுப்பி வைத்தார். பெரியவர்களாகக் கேட்டாலும் செய்ய மாட்டான் ஆகையாலே அவர்கள் சொல்லவில்லை, ஆனாலும் அவனாகவே அழைத்துச் செல்வதில் அவர்களுக்கு மகிழ்ச்சி. 

 

பைக்கை ஸ்டார்ட் செய்தவனிடம், “நேத்தே பத்மா கூப்பிட்டா, இன்னைக்கும் வந்திட்டுப் போனா, மதியம் விருந்துக்கு அவங்க வீட்டுக்கு வந்திடு அருள்” என வாசலில் நின்றபடி தேவகி உரைத்தார்.

 

அவனும் சரியெனத் தலையசைக்க, வெளிர் பட்டில் மல்லிகைச் சரம் சூடியபடி வந்த இசைவாணி கண்கூசும் உஷ்ண வெயிலையும், அவன் வண்டியையும் ஒரு பார்வை பார்த்தாள். இருசங்கர வாகனத்தில் ஏறத் தான் பயம் கொள்கிறாளோ என நினைத்து, “பயப்படாதம்மா, அவனை நல்லாப் பிடிச்சிக்கோ, நீயும் மெல்ல ஓட்டுடா” என்றார் தேவகி. 

 

அப்போதும் அவள் தயங்கி நிற்க, அருளும் புருவம் சுருக்கி ஒரு பார்வை பார்க்க, அதில் சின்ன உதறலோடு சட்டென அவன் பின் சென்று ஏறிக்கொண்டாள். 

 

நடராஜரை கோவிலுக்குத் தான் முதலில் அழைத்து வந்திருந்தவன், “வண்டியை நிறுத்திட்டு வரேன், அர்ச்சனை பொருள் வாங்கிட்டு வா” என்றான் கட்டளை போல.

 

‘கட்டளை தானா? இல்லை அவன் குரலே அவ்வாறு தானா?’ என்ற குழப்பத்தில் அவளும் சென்று வாங்க, சரியாக அவனும் உடன் வந்தான். அன்று அப்படியொன்றும் கோவில் கூட்டமில்லை. இருவரும் தம்பதிகளாகச் சென்று சன்னிதியில் வணங்கினர். அர்ச்சகர் தந்த விபூதியை நெற்றியில் இட்டுக் கொண்ட, இசையின் மனதில் அவர்கள் முதல் சந்திப்புத் தான் ஞாபகம் வந்தது. 

 

‘இதே கோவிலில் இந்த இடத்தில் தானே?’ அவள் பார்வை சற்றுத் தள்ளி விழ, அவனும் ஒரு முறை அவ்விடத்தைப் பார்த்துவிட்டு நடக்கத் தொடங்கினான். எதுவும் பேசாது செல்பவனின் பின்னே அவளும் சென்றாள். 

 

அன்று கூடத் தன்னை தவிர்க்கவில்லையே. வாழ்க்கை என்னும் போது நான் குறையாகத் தான் தெரிகிறேனோ? இவனுக்கு ஏன் தன்னைப் பிடிக்கவில்லை? பின் ஏன் இந்தத் திருமணம்?’ சுழல் போலே அவள் மனம் அதிலே சிக்கித் தவித்தது. 

 

அவனோ ஒவ்வொரு சன்னிதியாகச் சென்று வணங்க, இசையும் விசையால் இழுபடுவது போலே அவன் பின்னே சென்று கொண்டிருந்தாள். அத்தனைக் கடவுள்களையும் வணங்கி முடிய, ஒரு மண்டபத்தின் படியில் அமர, சிறு இடைவெளியில் இசையும் உடன் அமர்ந்தாள். 

 

அவன் பார்வை எதிரே இருக்கும் செய்திப்பலகையை வெறிக்க, அதைப் பார்த்த இசை, “அது வந்து, தினமும் அன்னதானம் போடுறாங்க இல்லையா அதுக்கு நன்கொடை எவ்வளவுன்னு எழுதி வைச்சி இருக்காங்க, நோட்டீஸ் போர்ட்” என்றாள். 

 

அவள் குரலில் அவளிடம் பார்வையைத் திருப்பியவன், “ஏன் எனக்கு வாசிக்கத் தெரியாதுன்னு நினைச்சியா?” என்க, ஆமென தலையும் அசைத்து விட்டாள். 

 

அவன் முகம் மெல்லியதாய் வாட, அவளுக்கு என்னவோ போலாகிவிட்டது. பிரகாஷ் தான் இவனை படிக்காதவன் என்றுரைத்திருந்தானே. அதுவே அவள் மனதில் இருக்க, சிறிதும் யோசிக்காது சட்டென அவனுக்கு விளக்கம் கொடுத்து அவன் கேள்விக்குத் தலையும் உருட்டியிருந்தாள். 

 

இப்போதே அவன் முகம் பார்த்தவள் சிறு சந்தேகத்தோடு உள்ளிறங்கிய குரலில், “என்ன படிச்சிருக்கீங்க?” என்க, அவனோ பதில் சொல்லாது, “அப்போ என்னைப் பத்தி எதுவுமே தெரியாமலா கல்யாணத்துக்குச் சம்மதம் சொன்ன?” என்றான் அதிர்ச்சியாக. 

 

அவள் கனத்த அமைதியில் இருக்க, “ராஜி கூடச் சொன்னதில்லையா?” என்றான் வியப்பாக. அவள் எவ்வாறு சொல்லுவாள்? இவன் பெயருக்கே பிரகாஷ் ஆடும் ஆட்டத்தை, இவன் அறிந்திருக்கவில்லையே! 

 

இசை மௌனமாகவே இருக்க, ஒற்றை விரலில் அவள் முகம் நிமிர்த்தியவன், “அப்பறம் எப்படிச் சம்மதம் சொன்ன? உங்கண்ணன் சொன்னானா?” என்றான் விடாப்பிடியாக. 

 

பதறியவள் மறுப்பாகத் தலையசைத்தபடி, “அம்மா தான் சொன்னாங்க..” என்று விட்டு, பிரகாஷிற்கு இதில் விருப்பமில்லை என உடன் வந்த வார்த்தையை வாய்க்குள்ளே விழுங்கியிருந்தாள். 

 

“ஹோ.. உங்க வீட்டுலையும் உங்கம்மா ஆசை தானா?” என்றவன், லேசாக மலர்ந்த இதழோடு, “இனி என்னைப் பத்தி எதுன்னாலும் எங்கிட்டையே கேட்டுத் தெரிஞ்சிக்கோ” என்றான். 

 

முகம் மலர்ந்தவள் உற்சாகமாகத் தலையசைக்க, அவள் தாடைக்குழியில் ஒற்றை விரல் கொண்டு ஏந்தியிருந்த அவள் முகம் அவன் விரலில் கனத்தது. மலர்ந்த முகமும், காதோடு ஆடிய ஜிமிக்கியும் அவனை வசீகரிக்க, அதை ரசித்தவனின் அவளின் ஆர்வமான கேள்விகளுக்கு தன்னிலை உணராது பதில் சொல்லிக் கொண்டிருந்தான். 

 

அவனுக்கும் அவளிடம் கேட்கக் கேள்விகள் இருந்தன தான், ஆனால் அனைத்தும் இப்படிப் பொதுவில் கேட்க இயலாது அவர்கள் அறையில் தான் கேட்க இயலும் எனச் சேமித்து வைத்திருந்தான். நேரம் சென்றதே தெரியவில்லை, பின்னே மணியைப் பார்த்தவர்கள் எழுந்து கொண்டனர். அத்தனை நேரம் பேசியதில் அப்படி ஒன்றும் அவன் சிடுமூச்சி, முசுடு இல்லை என்பதே அவளுக்குத் திருப்தியாக இருந்தது. 

 

வெளியில் வர, ‘சினிமாவிற்கு சொல்வோமா?’ என்க, அவள் ‘வேண்டாம்’ என்றாள். அவனுக்குச் சினிமா பார்க்கும் பழக்கமெல்லாம் இல்லை, அதைவிட மூன்று மணி நேரம் ஒரு இடத்தில் வேலை இல்லாமல் அமர்வது அவனுக்குச் சுத்தாமாக இயலாத காரியம் தான். இருந்தும் அவளுக்காக கேட்டான். அவள் பார்ப்பாள் தான் ஆனால் அதெல்லாம் வீட்டில் தான், தியேட்டர் சென்று பார்க்கும் பழக்கமில்லை, தோழிகளோடும் சென்றதில்லை. 

 

ஜவுளிக்கடை ஏற்கனவே அவள் அறிந்தது தான், ஆகையால் அவன் ஃபர்னிச்ஷர் ஷோரூக்கு அழைத்து வந்து, அவளை அறிமுகப்படுத்தினான். பார்த்துப் பார்த்துக் கவனித்து,  தொழில் பற்றியும் அவளிடம் விளக்கினான். அவன் செயல்கள் அனைத்தும் அவனின் பாதியவள், அவனுக்கு முக்கியம் அவள் எனச் சொல்லாமல் சொல்லியது. 

 

மதிய உணவு நேரமே கடந்து விட, சூரியன் வானுச்சியில் ஏறி உஷ்ணமாய் ஜொலித்துக் கொண்டிருந்தான். இந்த அனல் காற்றிற்கு வீட்டிற்கே செல்லலாம் என நினைத்த அருள், இசையோடு கிளம்பினான். வழியில் பேக்கிரியில் நிறுத்தியவன், சித்திப்பா வீட்டிற்கு செல்கிறோம் என்பதால் இரு வீட்டிற்கும் தனித்தனியாக ஸ்வீட், ஸ்நாக்ஸ் வாங்கிக்கொண்டான். 

 

அவள் பயம் கொள்கிறாள் என்றெண்ணி மிதமான வேகத்தில் தான் வண்டியை ஓட்டினான். அவளோ அளவான இடைவெளியில் அமர்ந்து கொண்டு பிரேக் இடும் போது மட்டும் சட்டென அவன் தோள்களை பற்ற, அந்த கரங்களில் உணரும் மென்மை அருளின் தேகத்தைச் சிலிர்க்கச் செய்தது.  

 

வீட்டிற்குள் வந்ததுமே, “ஹே.. சித்தப்பா வந்தாச்சி..” என எதிரே துள்ளி வந்து அருளின் கரத்தைப் பற்றினாள் க்ருஷ்மி. 

 

அவனும் அவளைத் தூக்கிச் சுற்றியபடி வீட்டிற்குள் வர, இசையும் சிறு சிரிப்போடு பின் வந்தாள். மனோ மட்டுமல்லாது அவன் பெற்றோர்களும் அங்கு தான் இருக்க, சில நிமிடங்களிலே கணேஷும் அவன் தந்தையும் வந்துவிட்னர். ஜெகன் மட்டும் அலுவலகம் சென்றிருந்தால் அங்கு இல்லாது போக, இசை அனைவரிடமும் சகஜமாகப் பழகினாள். 

 

மதிய விருந்து அனைவருமே குடும்பமாக அமர்ந்து உண்டு முடிய, பின் அப்பாக்களோடும் கணேஷோடும் தொழில் பற்றிப் பேசியபடி ஹாலில் அமர்ந்திருந்தான் அருள்வேலவன். வீட்டினர் அனைவரும் இருக்கவே என்னவோ படிப்பு பற்றிப் பேசும் நல்ல பிள்ளையாக விக்கியும் மனோவும் அவன் அறைக்குள் ஓடிவிட்டனர். 

 

பத்மாவும் தேவகியும் சமையலறையை ஒதுங்கு வைத்தபடி வரவிற்கும் ஜெகனின் திருமணம் பற்றி பேச்சில் இருக்க, சீதா இசையை அவள் அறைக்கு அழைத்து வந்திருந்தாள். அவளின் திருமண புகைப்படம், குழந்தையின் புகைப்படம் என அனைத்தையும் காட்டி, குடும்பத்தைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தாள் சீதா. 

 

“அருள் பொறுப்பான பையன் இசை, என் கணவருக்குத் தொழில் வைச்சிக் கொடுத்ததே அவன் தான்” என்க, ஆர்வமாகக் கேட்டிருந்தாள். 

 

“எனக்குக் கல்யாணமாகும் போது அவர் தனியார் ஸ்கூல்ல தான் டிச்சரா வேலைப் பார்த்தாரு, பின்ன என் நகை, வீட்டுல கொடுத்த கொஞ்சம் பணம் எல்லாம் சேர்த்து, ஒரு அரசியல்வாதிட்ட அரசு வேலைக்காகப் பணம் கொடுத்திருந்தார். ஆனால் அவன் ஏமாத்திட்டுப் போக, அதை வெளியிலும் சொல்ல முடியாம ஒடிச்சி போயிட்டார். நானும் அப்போ மாசமா இருந்தால எங்க அம்மா வீட்டுல இருந்தேன், அவர்பாட்டுக்கு எங்களைப் பத்தி கொஞ்சமும் யோசிக்காம மனசொடிஞ்சி சூசைட் ட்ரை பண்ண, அருள் தான் சரியான சமயத்துல காப்பாத்தினான். 

 

வீட்டுல பெரியவுங்க எல்லாம் திட்ட, எங்க வீட்டுல இருந்தும் வந்து சண்டை போட, அருள் தான் எல்லார்கிட்டையும் பேசிச் சமாதானம் செய்து வைச்சான். அது மட்டுமில்லாம அவருக்கும் ஒரு டிபார்மென்ட் ஸ்டோரும் வைச்சிக் கொடுத்தான். இன்னைக்கு நாங்க நல்லா வாழுறோம், இந்த வாழ்க்கை அருளால தான் இசை!” என்றவள் கலங்கினாள். 

 

“ச்சு.. என்னதிது? கண்ணைத் துடைங்க சீதாக்கா” எனக் கரத்தைப் பற்றி ஆறுதலாகத் தட்டிக் கொடுத்தாள் இசை. 

 

ராஜியை விடவும் சீதாவிடம் அதிக நெருக்கம் வந்திருந்தது. வார்த்தைகளில் மட்டுமல்லாது இருவருக்குள்ளும் ஒரு சகோதரத்துவ உணர்வு மலர்ந்தது. 

 

அனைவரும் மாலை தான் வீடு வந்தனர். வந்ததுமே அருள் முக்கிய வேலையென்று வெளியே சென்றுவிட, இரவு உணவிற்குக் கூட காத்திருக்க விடாது, இசைச் சாப்பிட வைத்து அனுப்பினார் தேவகி. தாமதமாகத் தான் வீடு திரும்பினான் அருள். இருவருமே இன்று இதமான மனநிலையில் இருக்க, அவளோ உறங்கியிருந்தாள். ‘அசதியாக இருக்கும் போலே’ என நினைத்தவன் தொந்தரவு செய்யாது அவனிடத்தில் படுத்து விட்டான். 

 

பின்னிரவில் மெல்லிய முனங்கல் ஓசையில் உறக்கம் கலைந்து எழுந்தான் அருள். சிறு சத்தமென்றாலும் விழித்துவிடும் பழக்கமுண்டு அவனுக்கு. அவள் புறம் திருப்பியவன் ஏதோ உறக்கத்தில் உளறுகிறாள் போலும் என்றே நினைத்தான். சின்னச் சிரிப்போடு அவளை தன் புறம் திருப்ப, தொட்ட அவன் விரல் சுட்டது. 

 

மறுநொடி அவன் பதறி எழ, அவள் உடல் அனலாகக் கொதிக்க, தன்னிலை மறந்த நிலையில் தாங்காது அனத்திக் கொண்டிருந்தாள் இசைவாணி. 

Advertisement