Advertisement

அத்தியாயம் 10

“இசை..! கண்ணத்திற.. இங்கப்பாரும்மா..” எனப் பதறியவன் அவளை உலுக்க, அவளால் விழிக்கவே இயலவில்லை. 

 

‘மாலையில் பார்க்கும் போது கூட நலமோடு தானே இருந்தாள், திடீரென எவ்வாறு காய்ச்சல்?’ சிறு பயமும் பதட்டமும் ஒரு நொடி திணறிப் போனான். மின் விளக்கை ஒளிரவிட்டவன், அவளை தூக்கி மடியில் கிடத்தியபடி, முகம் பார்க்க, அதிர்ந்தான். 

 

கழுத்தில் தெரியும் வெண்திட்டு மொத்தமாகவே செந்தாமரை நிறமாகச் சிவந்திருக்க, பதறியவன், முதுகுப்புறம், கால்கள், புடைவையை விலக்கி இடுப்பு வரைக்கும் ஆராய,  அதிர்ந்தே போனான். வெளியில் தெரியும் வெண்திட்டுகள் தான் அதிகமாகச் சிவந்திருக்க, அந்த வேதனையில் தான் காய்ச்சலும் கொண்டிருப்பாள் என்றும் புரிந்தது. 

 

அவன் காய்ச்சலில் சிறிதே கண் திறந்து மூடிய போதும், அனத்தல் குறையவில்லை. அரை உணர்வு நிலையில் அவன் மார்பில் கொடியாகச் சரிந்து கிடந்தவளால் அவன் கேள்விகளுக்குச் சரிவர பதிலளிக்க இயலவில்லை. மார்பைச் சுடும் அவள் சுடு மூச்சுக்காற்று அவனை உருக்க, அவள் தவிப்பதை அவனால் தாங்க இயலவில்லை. 

 

அவள் மொத்த உடல் உஷ்ணத்தையும் அவனுள் வாங்கிக்கொள்ளும் வேகம் தான், இருந்தும் இயலாமையில் தவித்தான். ‘இப்போது என்ன செய்வது?’ ஒரு நொடி யோசித்தவன், ராஜிக்கு அழைத்தான். நேரம் காலம் எல்லாம் அவள் தவிப்பின் முன் சிறிதும் யோசனைக்கு வரவில்லை. 

 

பிரகாஷ் அசந்து தூங்க, அட்டென் செய்த ராஜி, “அருள் அண்ணா..” எனப் பதறினாள்.

 

“ரிலாக்ஸ் ராஜி பதறாதே, ஒண்ணுமில்லை! இசைக்கு ஃபீவர் அதிகமா இருக்கு? என்ன செய்யன்னு தெரியலை” 

 

“மாத்திரை கொடுக்க அண்ணா, கொஞ்சம் வெட் டவலை வைச்சு நெற்றியில ஒற்றி எடுங்க” 

 

“அதில்லை ராஜிம்மா, சாதாரண ஃபீவரா தெரியலை. அவள் பாடியில இருக்கிற வொய்ட் பேஜஸ் எல்லாம் ரெட்டிஸ்ஸா மாறி இருக்கு, எதனால இப்படித் திடீர்ன்னு தெரியலை? என்ன மெடிஷன் கொடுக்கணும்? இல்லை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போயிடவா?” 

 

அவள் உடல்நிலை சரியாகத் தெரியாது விழித்த ராஜி பிரகாஷை எழுப்ப நினைத்தாள். பின் ஏதேனும் சண்டையிடுவானோ என்ற பயத்தில் எழுந்து சென்று பார்வதியையே எழுப்பினாள். அருளிடம் பேசிய பார்வதி அதிகப்படியான வெயில் அவள் சருமத்திற்கு ஆகாது எனத் தெரிவித்து, அவளுக்கு தர வேண்டிய மருந்து பற்றியும் தெரிவித்தார். பயப்படத் தேவையில்லை, சரியாகவில்லை எனில் காலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லலாம் என்றார். 

 

மனோ வாங்கி வந்திருந்த அவள் உடைமைகள் இன்னும் பிரிக்கப்படாமலே இருக்க, அதிலிருந்து அவள் மருந்தைத் தேடி எடுத்தான். ஏற்கனவே அவள் புடவையில் இருக்க, அதைக் களைத்தவன், பார்த்து பார்த்துச் சிவந்த இடங்களில் மட்டும் மருந்தைப் பூசினான். விரல் பட்டதோ வருடியதோ என்றே அறியாத நிலையில் தடவினான் எல்லாம் அவளுக்கு வலித்திடுமோ என்ற பயம் தான். காய்ச்சலுக்கும் மாத்திரையைப் புகட்டி விட்டவன், சமையலறை சென்று ஈரத்துணியை நனைத்து வந்து நெற்றியில் ஒற்றினான். 

 

உறக்கம் என்பதையே மறந்து, மூட மறுத்த இமையோடு அவளருகிலே அவனிருக்க, இது எதையும் அறியாத போதும் அவன் ஸ்பரிசம் உணர்ந்தாளோ என்னவோ அவன் நெஞ்சிலே சுருண்டாள். இவ்விடத்தில் கிடைக்கும் கதகதப்பும், இதமும் அவளின் தேவையாகிப்போனது. 

 

பொசுபொசு பூனைக்குட்டி போலே தன்னில் சுருண்டு கிடப்பவளைக் குனிந்து பார்க்க அவளை விலக்கிவிடும் எண்ணம் சிறிதுமில்லை, மாறாக மென்மையாக அணைத்தான். தன் மனைவி என்பதில் அவனுக்குக் கடமையும் அக்கறையும் உண்டு தான். ஆனால் சில நிமிடங்கள் முன் வந்த பயமும் பதைபதைப்பும் அவள் இன்றியமையாதவள் தனக்கு, என்பதை உணர்த்தியிருந்தது.  

 

ஒரே நாளில் உயிராகிப் போனாள்! அவனுள் ஏதோவொன்று மலர்ந்தது, ஒரு சுகம் பரவும் உணர்வு. அவளோடு இந்த நெருக்கம் பிடித்திருந்தது. முதல் முதலாக உணரும் பெண்மை வாசமா? இல்லை அவள் ஸ்பரிசமா? ஏதோ ஒன்று அவனுள் ஒரு இதம் சேர்ந்தது. கற்பாறையிலும் கசிவது போன்றே உருகியவன், அதை ரசித்தே அனுபவித்தான். 

 

அவ்வப்போது காய்ச்சலை ஆராயவென அவள் நெற்றியில் கை வைத்துப் பரிசோதித்தவனுக்குக் கரத்தை மீட்க தோன்றவில்லை. மெல்ல அவள் கேசம் வருடிக் கொடுக்க, அனத்தல் எல்லாம் குறைய, சுகமாக ஆழ்ந்த உறக்கத்தில் அமிழ்ந்தாள். 

 

அதிகாலை வெளிச்சம் பரவும் நேரம் கண் விழித்த இசை, முதலில் உணர்ந்தது கன்னத்தில் கூசும் அடர் முடிக் கற்றைகளைத் தான். எழ நினைக்கையிலே அவன் இறுகிய அணைப்பில் நிமிர்ந்து அருளைப் பார்த்தாள். அந்த அசைவில் கண் விழித்தவனும் அவளைப் பரிசோதித்துப் பார்த்தான். 

 

“லேசா சூடு இருக்கு.. கிளம்பு, ஹாஸ்பிட்டல் போவோம்..” என்றவனின் பார்வை அவள் முகத்திலே இருக்க, தன்னிலை உணர்ந்தவளால் தான் அவன் பார்வையை எதிர்கொள்ள இயலவில்லை. மெல்லிய நாணம்! 

 

குனிந்த தலையோடு, “இல்லைங்க, இப்போ பரவாயில்லை..” என்றவளின் மறுப்பெல்லாம் அருளின் பிடிவாதத்தின் முன் வலுவற்றுப் போனது. 

 

முழுதாய்ப் புலராத காலை, மெல்லிய வெளிச்சமிருக்க, வெயில் இல்லை ஆகையால் தனது இருசக்கர வாகனத்திலே மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்தான். தேவகி இன்னும் எழுந்திருக்கவில்லை, ஆகையால் வீட்டில் யாருக்கும் தெரியவில்லை. ஆனால் கிளம்புகையிலே ராஜி அழைத்திருக்க, அவளிடம் மட்டும் தெரிவித்திருந்தான். 

 

மருத்துவமனை என்றதும், உடனே செல்ல வேண்டுமென்று பார்வதி கேட்க, பிரகாஷும் பதறியபடி அன்னையை அழைத்து வந்திருந்தான். நேற்று வெயிலில் இசை அழைத்ததால் தான் எனப் பார்வதி புலம்ப, தங்கள் வீட்டு விருந்திருக்கு வராத கோபத்தோடு இதுவும் சேர்ந்து கொண்டது பிரகாஷிற்கு. 

 

மருத்துவரைப் பார்க்க, இசையை விடவும் அவள் நிலையைப் பற்றி அருள் தான் அதிக கேள்விகள் கேட்டான். காய்ச்சல் குறையாது மிகுந்த அசதியுற்று நிலை, அதை மீறியும் விக்டிலைகோ பற்றியும் அதிகம் கேட்டு அறிந்து கொண்டான். 

காலை நேரம் என்பதால் அப்படி ஒன்றும் ஆட்கள் நடமாட்டமில்லை. வெளியில் வர, அங்கிருக்கும் இருக்கையில் இசையை அமர வைத்துவிட்டு, மருந்தகம் நோக்கி அவன் நகர, சரியாக எதிரே வந்தனர் பிரகாஷூம் பார்வதியும். 

 

அருளைப் பார்த்ததுமே அவனுக்கு அப்படியொரு கண்மண் தெரியாத அளவிற்கான கோபம், “கல்யாணம் முடிச்ச இரண்டே நாள்ல என் தங்கச்சியை ஹாஸ்பிட்டல் வர வைச்சிட்டியேடா நீயெல்லாம் மனுஷனா?” எனச் சட்டையைப் பிடிக்காத குறையாக முன் நின்று கேட்டான். 

 

இரவெல்லாம் தவித்து, கண்விழித்துக் கவனித்தது எல்லாம் இவனுக்கு எங்கே தெரியப் போகிறது! பொது இடத்தில் இப்படிக் கேட்டால் பிறர் பார்வையில் இது எந்த மாதிரியான கட்சியாக உருவெடுக்கும்? எப்போதும் சுற்றுப்புறம், தன்மானம், மரியாதை எனப் பெரிதும் கௌரவம் பார்ப்பவன் அருள்வேலவன்! 

 

இதைச் சற்றும் எதிர்பாராது பதறிய இசையும், “அண்ணா, அவருக்கு எதுவும் தெரியாதுண்ணா?” என எழுந்து வர, என்னவோ குற்றவாளியைப் போலே கேட்டதில் அருளுக்கும் சினம் ஊற்றெடுக்க, “என் மனைவிடா, அவளை கவனிச்சிக்க எனக்குத் தெரியும், நீயெல்லாம் அது பத்திக் கேள்வி கேட்க வேண்டிய அவசியமுமில்லை. அவகிட்ட உனக்கு எந்த உரிமையுமில்லை” என அருளும் கத்தினான். 

 

“ஏய்! வாணி என் தங்கச்சி..” 

 

“ம்கூம், தங்கச்சியைப் பாரமா நினைச்சித் தள்ளிவிட்டவனுக்கு இப்போ மட்டும் என்ன உரிமை வேண்டி கிடக்கு?” 

 

“கொஞ்சம் பொறுமையாப் பேசுங்க” கெஞ்சலாக அருளின் கை பிடித்த இசைவாணியை சிறிதும் கண்டு கொள்ளவில்லை. 

 

“எங்கம்மா பெரிய மனுஷி, அவங்க கூப்பிட்டும் விருந்துக்கு வராதவன் தானே நீ? என்னவோ தள்ளிவிட்டோம்னு பேசுற?”

 

“பின்ன? இவளுக்குச் சீர் செய்ய வக்கில்லை, அதுக்குத் தானே மான ரோஷம் எல்லாம் மறந்து எனக்குக் கட்டிக் கொடுத்திருக்க? இவளைப் பாரமா நினைக்கப் போய்த் தானே, என்னோட பகையை மறந்து..” என அருள் வார்த்தைகளை முடிக்கவில்லை, பிரகாஷ் அவன் சட்டையைப் பிடித்திருந்தான். 

 

இசை அதிர்ச்சியில் அசைவின்றி நிற்க, ஒரு நொடியில் போராடி மகனின் கைகளைப் பிரித்து விட்டார் பார்வதி. அவன் பாசத்தைக் குறை கூற பிரகாஷால் பொறுக்கமுடியவில்லை. அன்னையின் கட்டாயத்தில் சம்மதித்தவனுக்கு, இதில் தான் விருப்பம் இல்லையே! 

 

“சீர் செய்யலைன்னு என் தங்கச்சியைக் கொடுமைப் படுத்துவியா நீ? இதுக்கு திரும்பவும் உன்னை ஜெயில்ல உக்கார வைக்கிறேன் பாருடா” என எகிற, “டேய் மாப்பிள்ளைடா அந்த மரியாதையோட பேசு” எனப் பார்வதி கண்டித்தார். 

 

ஏற்கனவே இவ்வாறான அவமானத்தை இவனாலே பார்த்திருந்த அருளுக்கு அடிபட்ட உணர்வு, அகமும் முகமும் இறுகினான். மிகுத்த கோபம், இருக்கும் இடம் காரணமாக அடக்க முயன்றான். 

 

சட்டென இசையின் கரம் பற்றி தனதருகே இழுத்துக் கொண்ட பிரகாஷ், “இப்படியொரு கொடுமைக்காரனோடு நீ வாழணும்னு அவசியமில்லை வாணி..! நீ வா..” என்க, இசை பதற, பார்வதி நெற்றியில் அறைந்து கொண்டார். இப்படியொரு லூசு மகனைப் பெற்று வைத்துள்ளோமே!  

 

அருள் வார்த்தையின்றி இசையைத் தான் பார்த்திருந்தான், தனக்காக அவளிடமிருந்து ஒரு வார்த்தை வராதா என்ற எதிர்பார்ப்பு! தவிப்புடன் இருந்தவளுக்கு அருளின் மீது கோபம் தான். எவ்வாறு அவள் அண்ணனின் பாசத்தை இவன் குறைவாகச் சொல்லலாம் என்ற எண்ணம். 

‘தன் மீது விருப்பமில்லாமல் திருமணம் செய்து கொண்டதால் தான் விரட்டிவிட வீண் பழி சொல்கிறானோ? பிரகாஷ் இழுத்த போதும் தடுக்காது வேடிக்கை பார்க்கிறானே?’ என மிகவும் வலித்தது. 

 

‘இந்த வலியைத் தாங்குவதற்கு அண்ணனோடு சென்றுவிடலாமா?’ அவள் நினைக்க, சட்டென அவள் கைகளை பிரித்துவிட்ட பார்வதி, “வாழ வேண்டிய பிள்ளை வாழ்கையை கெடுக்காதடா, நீ கிளம்பு. அவளை அவர் பார்த்துப்பார். அவருக்கு இல்லாத உரிமையா?” என்றவர், மகனை இழுத்தார்.  

 

“மன்னிச்சிகோங்கங்க மாப்பிள்ளை, நான் அப்புறம் வீட்டுக்கு வரேன் வாணி” என்ற பார்வதி, மகனை இழுத்துக் கொண்டு சென்றுவிட, அருள், இசையோடு வீடு வந்தான். இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அருளுக்கு அப்படியொரு கோபம். அவளிடம் காட்டிவிடுவோமோ என்ற பயத்திலே கிளம்பிக் கடைக்குச் சென்றுவிட்டான். இசையும் தேவகியுடன் ஒன்றிவிட்டாள். 

 

பார்வதியும், ராஜியும் வந்து நலம் விசாரித்துச் சென்றிருந்தனர். இசைக்கு மிகுந்த வருத்தம். நள்ளிரவு தான் அருள் வர, அவள் உறக்காது அமர்ந்திருந்தாள். அருளுக்குக் கோபம் குறைந்திருந்த போதும் ஆற்றாமையும், வலியும் அப்பிக் கிடந்தது. மீண்டும் கோபத்தைக் கிளறி விடுவாளோ என நினைக்க, அதைத் தான் அவளும் செய்திருந்தாள். 

 

“உங்களுக்கு என் அண்ணனைப் பிடிக்காது தான், அதுக்குன்னு இப்படியா வீண் பழி சொல்லுவீங்க? அவன் பாசத்தை நீங்க எப்படி குறை சொல்லலாம்?” என உக்கிரமாகக் கேட்க, அருள் நெற்றியை பற்றிக் கொண்டான். 

 

உண்மையைச் சொல்லுவதென்றால், வலியில் இருப்பவனை வலிக்க வலிக்க அடித்திருந்த உணர்வு. ஏனோ அவன் மனம் காரணமின்றி இசையை ராஜியோடு ஒப்பிட்டிருந்தது. ராஜி திருமணத்திற்கு முன்பே பிரச்சனை எனும் போது பிரகாஷின் புறம் இருந்தவள், இவனையே யாரோ எனத் தூக்கி எரிந்து பேசினாள். ஆனால் இசை ஒரு சிறு சொல்லில் கூட தன்புறம் நில்லாது அவனுக்காகத் தன்னிடம் சண்டையிட, ராஜியின் காதலைப் போல் இசைக்கு தன்மீது நேசமில்லையோ என்றே நினைத்தான். 

‘நீ தான் அவளை மனைவியாக நினைக்கிறாய், அவள் உன்னைக் கணவனாக நினைக்கவில்லை’ மனம் வேறு கேலி செய்தது. 

 

கண்களை அழுத்த மூடித் திறந்தவன், “நான் உண்மையைத் தானே சொன்னேன். உங்கண்ணன் உன்னை அப்படி தான் நினைச்சான்” என்றான் அமைதியாக. அவன் காதுபடக் கேட்டிருந்த உண்மை தான் அது! இசைக்காக மட்டுமே அவனிடம் இவ்வளவு பொறுமை, பிறர் எனில் அவன் அவதாரமும் வேறாகியிருக்கும். 

“எது உண்மை? உங்க வீட்டுல இருந்து தானே பெண் கேட்டீங்க? நீங்க தானே வரதட்சணை, சீர் எதுவும் வேண்டாம்னு சொன்னீங்க? இப்போ வந்து என் அண்ணனை வக்கில்லாதவன், என் மேல பாசமில்லாதவன் எப்படிச் சொல்லலாம்? உங்களைக் கல்யாணம் செய்யாம இருந்திருந்தால் எங்க தகுதிக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் செய்து கொடுத்து கௌரவமா இருந்திருப்பான் என் அண்ணன், நானும் நல்லாயிருத்திருப்பேன்…” என்றவள் தாங்காது தேம்பினாள். 

 

தன்னைத் திருமணம் செய்ததைக் குறைவாகச் சொன்னது அருளுக்குச் சுருக்கென்று குத்துவது போன்றிருந்தது. அவள் கண்ணீர் அவனைக் கரைத்தாலும் அவளின் இந்த கண்ணீர் அவள் அண்ணனிற்காக என்பதைச் சகிக்க முடியவில்லை. அவளின் ‘என் அண்ணன்’ என்ற வார்த்தையே அவனுக்கு அனலைத் தெளிப்பது போலிருந்தது. 

 

“இங்க பாரு, நீ சொன்ன எதுவும் நடக்கலையே! ஆனால் நான் சொன்னது உண்மை தான், உங்கண்ணன் அப்படி தான் உன்னை நினைச்சான்..” அவன் பேசும் போதே, “இல்லை, நீங்க அவனை அவமானப்படுத்த பொய் சொல்லுறீங்க” என இடையிட்டாள். 

 

சட்டென அவள் தோள்களை அழுத்தப் பற்றியவன், “அவமானமா? யாருக்கு? எனக்குத் தான் அவமானம்! இந்த ஊருக்குள்ள எனக்கு எவ்வளவு மதிப்பு இருக்குன்னு தெரியுமா? உங்க தெருவைத் தாண்டினா உன் நொண்ணனை யாருக்கும் தெரியாது. அவன் என் சட்டையைப் பிடிக்கிறான், அதுவும் பொது இடத்துல நின்னுட்டு என் சட்டையைப் பிடிக்கிறான், என்னை ஜெயிலுக்கு அனுப்புறேன்னு சொல்லுறான்.. ம்ம்.. இதுல.. அவனுக்கு அவமானமா..?” என்றவன் பற்களைக் கடித்தான். 

 

அவனின் உயரம், அவன் மனதிலிருக்கும் காயம், ஆதங்கம் என மொத்தமாகவே அருளை அறியாதிருந்தாள் இசைவாணி. 

 

ஒரு நொடி அவன் செயலில் மிரண்டு விழித்தாள் இசை. முகத்தில் வலியும் கண்களில் மிரட்சியும் அப்படியே தெரிய, மெல்லக் கரங்களைத் தளர்த்திய அருள், “இதுக்கும் மேல நீ அவனைப் பத்திப் பேசின நான் மனுஷனா இருக்க மாட்டேன். உன் அண்ணன் எல்லாம் உன் வீட்டோட வைச்சிக்கோ! இந்த வீட்டுல, வெளியில எப்பவும் நீ அருளோட மனைவி தான். அதை மனசுல வைச்சி நடந்துக்கோ. புரியுதா..?” என்றான். 

 

உன் அண்ணனை விட நான் உனக்கு முக்கியமானவன் எனப் புரிய வைக்க, முயற்சித்தாலும் அவன் குரலில் இருந்த கடினமும் உறுதியும் அவளுக்கு மிரட்டலாகத் தான் சென்று சேர்ந்தது. 

 

விலகியவன் குளிக்கச் செல்ல, உடைந்து அழுதே விட்டாள் இசைவாணி. தன் அண்ணனையும் பிடிக்கவில்லை, தன்னையும் பிடிக்கவில்லை ஆற்றாமையில் விம்மிய நெஞ்சோடு விசும்பினாள். 

 

அவள் குரல் கேட்ட போதும் அண்ணனுக்காக அழுபவளைச் சமாதானம் செய்யத் தோன்றவில்லை. அதை விடவும் அவன் ஏக்கம் ஏமாற்றமாகிப்போன வலி! ‘ஒரே நாளில் அவளை நான் மனைவியாக ஏற்றிருந்தேனே! அவள் ஏன் என்னைக் கணவனாக உணரவில்லை?’ என மருகியவனுக்கு, அவன் தான் உணர்த்த வேண்டும் என்பது மறந்து போனது. 

Advertisement