Advertisement

அத்தியாயம் தொண்ணூற்றி ஆறு :

வாழ்க்கையே போர்க்களம்.. வாழ்ந்து தான் பார்க்கணும்.. போர்க்களம் மாறலாம்.. போர்கள் தான் மாறுமா?

ஆனால் ஈஸ்வர் வரும் வரை அவர்கள் இருக்கவில்லை.. வர்ஷினி தன் கவனத்தை வர்ஷா பேசிய வார்த்தையில் வைக்க வர்ஷாவும் அவளின் மேனேஜரும் கிளம்பிவிட்டனர்.

வர்ஷினியின் முகத்தினில் தெரிந்த ஒரு இறுக்கத்தில், அஸ்வின் அணுகும் வகை தெரியாது தூரமாக நின்று பார்த்திருந்தான். 

யாருக்கும் வர்ஷா பேசிய விஷயம் தெரியவில்லை! சிறிது நேரத்தில் தானாக தெளிந்த வர்ஷினி, தன் நண்பர்களிடம், “சாரி, உங்க இடத்துல இப்படி ப்ராப்ளம் பண்ணிட்டேன்!” என மன்னிப்பை வேண்ட..

“என்ன சங்கீதா எங்களை தள்ளி நிறுத்துற?” என்று நிஷா வருத்தம் கொண்டாள்.

“வி ஆர் வித் யு, வர்ஷாக்கு எப்பவுமே பெரிய ஆள்ன்னு நினைப்பு. ஆனா இப்படி காசிப் பேசற ஆசாமி கிடையாது! எல்லாம் அந்த மேனேஜர் வேலையா தான் இருக்கணும்!” என்ற மோஹித்,

“அடிச்சிருக்க வேண்டாம்! கொஞ்சம் பொறுமையா ஹேண்டில் பண்ணியிருக்கலாம். ஏற்கனவே ஈஸ்வர் சர் மேல அவ ஏதேதோ பேசி வெச்சிருக்கா, இந்த மாதிரி விஷயமெல்லாம் ரொம்ப கவனமா கையாளணும். இப்போ நீங்க அப்பர் ஹேன்ட்ன்றதால, பணம் இருக்குறவங்க, அநியாயம் பண்றாங்கன்னு ஈசியா திசை திருப்பிடுவங்க! அதுவும் மீடியா போனா நமக்கு தான் அசிங்கம்!” என்றான் கவலையாக.

“பார்த்துக்கலாம் விடு மோஹித்!” என்று விட்டாள்.   

எவ்வளவு வேகமாக வந்தானோ ஈஸ்வர் சிறிது நேரத்தில் வந்து விட்டான். வந்ததும் வர்ஷினியின் பத்திரத்தை ஒரு பார்வையில் பார்த்தவன், “எங்கே அவங்க?” என்றது தான் அவன் கேட்ட முதல் கேள்வி.

“போயிட்டாங்க!” என அஸ்வின் சொல்ல,

“எதுக்கு போக விட்ட, உனக்கு அறிவில்லை? படிச்சு படிச்சு தானே சொன்னேன்! எந்த பிரச்சனையும் பண்ணக் கூடாதுன்னு” என்று அவனிடம் கத்தியவன்..

அவளின் நண்பர்களிடமும் கடிந்தான் “இவளை பத்தி உங்களுக்கு தெரியாதா! எதுக்கு அவ பக்கம் விட்டீங்க!”

“இப்ப என்ன ஆகும்? எனக்கும் அந்த பொண்ணுக்கும் என்னவோ, அதனால இவ அந்த பொண்ணை அடிச்சிட்டான்னு வரும்!” என்று பேச.. அங்கிருந்த எல்லாருக்குமே அது மாதிரி திரும்பவும் அநேக வாய்ப்புகள் என்று புரிந்தது.

ஒரு கணமான அமைதி.. “எதுக்கு நீங்க இங்க செக்யுரிட்டின்னு” என,

“அவங்களை யாரும் எதுவும் பண்ணாம பார்த்துக்கலாம்! அவங்க யாரையாவது அடிக்கும் போது என்ன செய்ய?” என்றான் அவனுமே..

அத்தனை பேரையும் வறுத்து எடுத்த பிறகு வர்ஷினியை பார்த்தான்.

“அடித்தது நான், நீ என்ன எல்லோரையும் கேள்வி கேட்கிறாய்” என்ற பார்வையை தாங்கி அவள் நிற்க..  

“அப்படி என்ன கோபம் உனக்கு! அடிக்கறது தப்பு! அவ பேசினா பதிலுக்கு பேசு. உனக்கு திட்ட வார்த்தையா தெரியாது. எதுக்கு அவங்களை அடிச்ச. இப்ப நாம் காம்ப்ரமைஸ் போனாக் கூட சாரி கேட்கணும். அது தேவையா?” என,

“என்ன? காம்ப்ரமைஸா!!!! போக மாட்டேன்! சாரியும் கேட்க மாட்டேன். இதை நான் பார்த்துக்கறேன். நீங்க எந்த அதிகப் பிரசிங்கிதனமும் பண்ணக் கூடாது. புரிஞ்சதா” என அவள் சொன்ன விதத்தில்,  

“முட்டாள்தனம் பண்ணாதே வர்ஷ். அவ மீடியா போனா நமக்கு தான் அசிங்கம்” என்றான்.

“என்ன, என்ன அசிங்கம்? பிரச்சனை ஆகிடுச்சு! இன்னும் அதை பார்த்து என்னால ஓட முடியாது! பின் வாங்கவும் மாட்டேன்! யார் பின்னையும் ஒளிஞ்சு நிற்க மாட்டேன்!” என அழுத்தி சொன்னவள்.. “போகலாமா” என,

“புரியாம பேசாதே! அவ மீடியால என் பேர் சொன்னா எனக்கு ஒன்னுமே கிடையாது! அவ உன் பேர் சொல்றதை நான் விரும்பலை புரிஞ்சதா!” என மிரட்டலாக பேசியவன்..

“அஸ்வின், நீ போ என்னன்னு பாரு! இந்த விஷயம் வெளில வராம பார்த்துக்கோ. எவ்வளவு பணம்னாலும் குடுத்துடு! நீங்க கூட போங்க!” என்று நிஷாவையும் மோஹித்தையும் சொல்ல,

அதுவரை இருந்த அமைதியும் அழுத்தமும் மறைய கோபம் பொங்கப் பெற்றவள்.. “நீ போன அப்புறம் நமக்குள்ள எந்த ஃபிரண்ட்ஷிப்பும் கிடையாது” என்று அஸ்வினை கை நீட்டி மிரட்ட..

அஸ்வின் தயங்கி நின்று விட்டான்.

“அஸ்வின்! உனக்கு அவளோட ஃபிரண்ட்ஷிப் முக்கியமா இல்லை அவ நல்லா இருக்குறது முக்கியமா! வீணா அவ பேரை ஸ்பாயில் பண்ணிக்குவா” என,

அடுத்த நொடி அஸ்வின் யோசிக்கவில்லை, நிஷாவோடும் மோஹித்தோடும் கிளம்பிவிட்டான்.

வர்ஷினியின் முகம் அப்படியே இறுகி விட்டது. அசையாமல் நின்றிருந்தவளை “வீட்டுக்கு கிளம்பு” என ஈஸ்வர் அவளை கைபிடித்து இழுத்து வந்து தான் காரில் தள்ளினான்.

வெளியில் இருந்த தாஸிற்கு எதுவுமே தெரியவில்லை.. “ஏன் பாப்பாவை தள்ளறீங்க?” என்று அவன் ஈஸ்வரிடம் பதறி கேட்க..

“என்னை கேளு! வேற என்ன பண்ணுவ நீ? கார்ல உட்கார்ந்து உட்கார்ந்து தூங்கு! உள்ள என்ன நடக்குதுன்னு கூட தெரிஞ்சிக்காதே!” எனக் கோபப் பட..

“என்னை வேணும்னா அடிச்சிக்கங்க! ஆனா பாப்பாவை தள்ளாதீங்க. நான் உங்க கிட்ட எத்தனை முறை சொல்லியிருக்கேன், பாப்பாவை சிநேகிதப் பசங்களோட சேர விடாதீங்கன்னு” என்று ஈஸ்வரிடம் சண்டை இடுவது போல வாக்கு வாதம் செய்தான்.

“என்ன செஞ்சேன் உங்க பாப்பாவை.. விட்டா அவளை அடிச்சு கொடுமைப்படுத்தற எஃபக்ட் கொடுக்கற. படிச்சு படிச்சு சொன்னேன் பிரச்சனை வேண்டாம்னு. அவங்களுக்கு ஒன்னும் கிடையாது, நமக்கு மரியாதை இருக்கா இல்லையா” என அவளை திட்டுவதை விட்டு தாஸை திட்டினான்.    

யாரு அது என்று தாஸ் கையை முறுக்க..

“தாஸண்ணா” என்ற வர்ஷினியின் ஒற்றை கடினமான அழைப்பில்.. வாயை மூடிக் கொண்டான்.   

இவர்கள் காரை கிளப்பிய சில நிமிடங்களில்.. அஸ்வினிடமிருந்து அழைப்பு.. “அவங்க நேரா கமிஷனர் ஆஃபிஸ் போயிட்டாங்க.. மேம் மேல கம்ப்ளைன்ட் குடுக்க போல” என்றான் பதறி.

“என்ன?” என்ற ஈஸ்வர் செய்வதறியாது சில நொடி அப்படியே ஸ்தம்பித்து விட்டான்.

“என்ன?” என்ற அவனின் பதறிய குரலில் ஈஸ்வரின் ஓய்ந்த தோற்றமே தெரிந்தது. “என்ன?” என அவள் கேட்க..           

“கமிஷனர் ஆஃபிஸ்க்கு கம்ப்ளைன்ட் கொடுக்க போயிருக்காங்க” என,

“போகட்டும்! அதுக்கு என்ன பார்த்துக்கலாம்?” என்றாள் அலட்சியமாக.  

“புரியாம பேசாதே! என்னால நீ கஷ்டப் படறதை எல்லாம் பார்க்க முடியாது! டென்ஷன் ஆகுது!” என இது போல சூழ்நிலைகளை விரும்பாதவனாக அவன் பதட்டத்தில் கண்களை மூடிக்கொண்டான்.  

வர்ஷினி என்று வரும் போது ஈஸ்வரால் சிந்திக்கவோ செயல் படவோ முடியவில்லை.

ஈஸ்வரின் பதட்டத்தை பார்த்தவள் “அட, என்ன இது? என்னை யாரும் ஒன்னும் பண்ண முடியாது!” என அவனை நெருங்கி அமர்ந்து கை பிடித்துக் கொண்டவள்..

“நீங்க எவ்வளவு பெரிய ஆள்! அவங்க யாரு, ஒன்னுமில்லாதவங்கன்ற வார்த்தை எல்லாம் நான் உபயோகிக்க விரும்பலை!”

“நாம தப்பு ஒன்னும் பண்ணலை! பயப்பட வேண்டாம்! எனக்கு ஒன்னும் ஆகாது” என சொல்லும் போதே.. கமிஷனர் ஆஃபிசில் இருந்து போன்.

“மிஸ்டர் விஸ்வேஸ்வரன் வைஃப்ங்களா, ஒரு என்குயரி நீங்க இங்க வர்றீங்களா?” என..

“எஸ் வர்றேன்!” என்றவள்.. “தாஸண்ணா” என்று அங்கே போகச் சொல்லி.. “பத்துண்ணா” என்று அவனையும் கமிஷனர் ஆஃபிஸ் வரச் சொன்னவள்.. “எனக்கு ஒரு பிரச்சனையும் வராது” எனத் திரும்பவும் அவனிடம் சொன்னவள்.. “ஹேய் சியர் அப்” என அவனை பற்றியிருந்த கைகளில் அழுத்தம் கொடுத்தாள்.  

ஆனாலும் ஈஸ்வரின் மனம் அடங்கவில்லை.. இப்படி பட்ட சூழ்நிலைகள் பெண் பிள்ளைகளுக்கு வருவதை அவன் விரும்பமாட்டான்.. ஐ பீ எல் எங்குமே வர்ஷினியின் பேர் கிடையாது.. பிலிம் டிஸ்டிரிபியுஷனிலும் அவளின் பேர் பின் தான், பத்துவும் முரளியும் மட்டுமே முன்! மற்ற அவளின் தொழிலுமே இப்போது அப்படி தான்!

நிறைய நிறைய பிரச்சனைகள் தொழில்களில் எப்போதும் வருவதால் அதன் உரிமையாளர் என்ற முறையில் எந்த சிக்கலும் வர்ஷினிக்கு வந்து விடக் கூடாது என்று தான் ஈஸ்வரின் இந்த ஏற்பாடு!

அவன் பார்த்து பார்த்து செய்ய, யாரோ அவளை இழுத்து விடுவதா? ஒரு கோபமும் கனன்ற ஆரம்பித்தது! “இப்போ நீ எதுக்கு போற? நீ வீட்டுக்கு போ! நான் பார்த்துக்கறேன்!” என்றான் கோபமாக.   

“நான் தான் போவேன்! நீங்க வரக்கூடாது! அவ சொல்றா, நான் நீங்க இருக்குற தைரியத்துல தான் பேசறேனாம். நீங்க இல்லைன்னாலும் நான் அப்படித்தான்னு காட்டணும்!” என,

“அவளுக்கு உன்னை காட்டி நீ என்ன பண்ண போற? எதுக்கு அவளோட பிரச்சனை பண்ணின? அவ என் பேரை இழுத்து விட்டா விட்டு போறா, அதுக்கு எதுக்கு அடிச்ச?” என்றான் ஈஸ்வர்.

“இன்னும் வர்ஷினியைப் பார்த்து அவள் பேசிய வார்த்தைகள் அவனுக்குத் தெரியவரவில்லை. இப்படி ஏதாவது இருக்கும்” என்ற கோணமும் அவனுக்கு இல்லை.

வர்ஷினிக்கும் அவள் பேசிய வார்த்தைகளை ஈஸ்வரிடம் பகிர்ந்து கொள்ள பிரியமில்லை.   

 “ப்ளீஸ்! என்னால முடியாதுன்னு தோணினா, அடுத்த நொடி நீங்க என்ன சொன்னாலும் கேட்கறேன்!” என.. அந்த குரலில் இருந்த புரியாத பாவனை, எதோ உணர்த்த, “ஏன் அவளை அடிச்ச?” என்றான் ஈஸ்வர்.

“அடிச்சிட்டேன் விடுங்க! நீங்க இப்படி பயம் கொடுத்தா நான் என்ன செய்வேன்?” என்றாள்.

ஆழ மூச்செடுத்தவன் “ஓகே, ஃபைன் பார்த்துக்கலாம் விடு!” என்று அவளின் கைகளை எடுத்து மடியில் வைத்துக் கொண்டவன், “அவ ஒரு ஆள்ன்னு! சே! அவள்ளாம் நமக்கு ரைவல்ரியா” என்று அப்போதும் சொன்னான்.

வர்ஷினி பின்பு எதுவும் பேசவில்லை. கமிஷனர் ஆஃபிஸ் வந்து இறங்கி இருவரும் உள்ளே சென்ற போதும், அவள் மட்டும் தான் தனியாக அந்த இன்குயரி நடக்கும் இடம் சென்றாள்.

மிகவும் கடினமான நிமிடங்கள் ஈஸ்வருக்கு!

அவன் அங்கே ஓரிடத்தில் அமர்ந்து கொள்ள.. யாரென்று தெரியாத யுனிபார்ம் போட்ட ஆட்கள் அவனுக்கு வணக்கம் வைத்து போக.. பதிலுக்கு மரியாதையாக அவனும் வணக்கம் செலுத்தினாலும், யாரோடும் பேச விருப்பமில்லாமல் அமர்ந்து கொண்டான்!

அங்கே தான் அஸ்வினும் நிஷாவும் மோஹித்தும் இருந்தனர். ஆனாலும் அவர்களை உள்ளே உட்கார எல்லாம் அனுமதிக்கவில்லை. இப்போது ஈஸ்வர் வரவும் அவர்கள் பக்கத்தில் வர, அவனின் ஆட்கள் என்று தெரிந்த பிறகே அனுமதித்தனர்.

“யார் என்குயரி பண்றா?” என ஈஸ்வர் கேட்க.. அவர்கள் சொன்ன பெயரில் ஒரு ஆசுவாசம் வரப் பெற்றான் ஈஸ்வர். அஸ்வினுமே நிம்மதியாக உணர்ந்தான்.   

வர்ஷினி அந்த ரூமின் உள் செல்ல, அதுவரை இருந்த தைரியம் குறைந்து ஒரு கலக்கம் வந்தது.

உள்ளே நுழைந்த வர்ஷினியை தான் அந்த சேரில் அமர்ந்தவன் விடாது பார்க்க.. அவனை வர்ஷினிக்குத் தெரியவில்லை.. அருகில் சென்றவுடனே கை குவித்து வணக்கம் என்பது போலச் சொல்ல.. தலையசைத்து அதை ஏற்றவன்.. “உட்காருங்க” என இருக்கையை காட்டினான்.

அப்போது தான் இன்னொரு இருக்கையில் வர்ஷா அமர்ந்து இருந்ததையே பார்த்தாள்.     

“அடிச்சீங்களா” என்றான் நேரடியாக.

“ஆம்” என்பது போல உடனே ஒத்துக் கொண்டாள்.

ஏன்?”

“தப்பா பேசினாங்க, அடிச்சேன்!” என,

“என்ன தப்பா பேசினாங்க?” என்றான்.

வர்ஷினி பதிலே பேசவில்லை. ஆனால் அமர்ந்து இருந்த பாவனையில் அதெல்லாம் சொல்ல முடியாது என்ற பிடிவாதம் தெரிய…

“என்ன பேசினீங்க?” என்றான் வர்ஷாவைப் பார்த்து.. அவன் கேட்கும் போதே வர்ஷினி திரும்பி வர்ஷாவை பார்த்த பார்வை “சொல்லிவிடுவாயா நீ?” என்ற மிரட்டல் அப்பட்டமாய் இருந்தது.

வர்ஷாவுமே அதை எப்படி சொல்லுவாள்? அவளை காயப் படுத்த சொன்னது.. திரும்ப சொல்லும் தைரியம் வரவில்லை.  

:ஊருக்குள்ள ஆயிரத்தெட்டு விஷயம் இருக்கு. இதை எனக்கு பார்க்கணும்னு எதுவும் கிடையாது. ஆனாலும் பார்க்கறேன்னா அதுக்கு காரணம் வேற” 

“இல்லை, எனக்கொன்னுமில்லை! இவங்க இனிமே என்னை எதுவும் செய்யாம இருந்தாப் போதும்! என்னை விட்டுடச் சொல்லுங்க!” என வர்ஷா சொல்ல,

“ஊருக்குள்ள அவ்வளவு பெரிய ரௌடின்னா நீ ஃபார்ம் ஆகியிருக்க?” என்ற கேள்வி கேட்கப்பட.. கேட்ட த்வனி மிரட்டினாலும், அந்த முகம் அவளை மிரட்டவில்லை.

எதிரில் இருப்பவருக்கு என்னை தெரியுமோ என்ற சந்தேகம் வர.. வர்ஷினி அவனை ஊன்றி கவனித்தாள்! ம்கூம்! அவனை பார்த்தது போலவும் இருந்தது! ஆனால் தெரிந்தது போலவும் இல்லை!

அவனின் பேர் இருந்த பலகையைப் பார்க்க அதில் வெங்கட ரமணன், ஐ பீ எஸ், கமிஷனர் ஆஃப் போலிஸ், என்றிருந்தது. மூன்று நான்கு வருடங்களுக்கு முன்பு சென்னையில் கல்லூரியில் படித்து இருந்த போது இந்த பெயர் மிகவும் பிரசித்தம்.   

“கம்ப்ளைன்ட் எல்லாம் இவங்க குடுக்கலை. நீங்க எதுவும் பண்ணாம இருக்க ப்ரொடக்சன் கேட்கறாங்க” என,

“என்ன பண்ணிடுவோம்? நாங்க ஒன்னும் பண்ண மாட்டோம்!” என்றாள்.

“அது எனக்கு தெரியும்! அவங்களுக்கு தெரியாது இல்லையா? சோ, உங்க வாய் மொழியா சொல்ல கேட்டேன்” என்றவன் வர்ஷாவிடம் திரும்பி..

“இவங்க எதுவும் பண்ண மாட்டாங்க! நான் பொறுப்பு! இவங்கனால உங்களுக்கு பயம் வேண்டாம். அண்ட் சீப் பப்ளிசிட்டி எல்லாம் வேண்டாம்! நான் லாஸ்ட் வீக் வந்த காசிப், உங்க பேட்டி எல்லாம் பார்த்தேன்!” என்று நிறுத்தினான். வர்ஷாவின் முகத்தினில் குற்ற உணர்ச்சி அப்பட்டமாய் தெரிந்தது.

“பொதுவா நான் இதை பார்க்கறது இல்லை. என் மனைவி தான் காட்டினா. இதென்ன ஈஸ்வரை பத்தி யாரு இப்படி பேசறான்னு கோபம். அவரை பார்த்த எல்லோருக்கும் அவரை தெரியும். அவர் ஒரு பொண்ணை ஆசைக்கு இணங்க சொல்றார்ன்றது சுத்தப் பைத்தியக்காரத்தனம்”

“அப்போ உங்களை தான் தப்பா நினைப்பாங்க. கவனமா இருங்க. மேனேஜர்ன்னு எவனாவது சொல்றது கேட்டு நடக்க வேண்டாம். இப்ப நான் அவனை துரத்தி விட்டது துரத்தி விட்டதாவே இருக்கட்டும்!”

“ரெண்டு மாசம் முன்னே ஒரு பிரச்சனைன்னு வந்தீங்க! உடனே சால்வ் பண்ணிக் கொடுத்தேன் இல்லையா?”  

“ஆம்” என்பது போல தலையாட்டினாள் வர்ஷா!

ஆம்! விளம்பரத் துறையில் இருந்தவளுக்கு அடிபணிய சொல்லி சில சிக்கல்கள். அந்த நேரம் தான் ஐ பி எல் மேட்ச், விடியோ ஷூட் எல்லாம். அந்த மனஉளைச்சலில் தான் போகவில்லை. அந்த காரணத்தை சொல்லவும் முடியவில்லை. மிகவும் ஒருவன் அவளை தொந்தரவு கொடுக்க…

அப்போது தான் முதல் முதலில் ரமணன் உதவியை நாடினாள். பெண்களுக்கு வரும் தொந்தரவுகளுக்கு உடனே உதவுவான் எனக் கேள்விப்பட்டு! மூன்றே நாட்களில் ரமணன் அதை முடித்திருக்க அந்த தைரியத்தில் இப்போது திரும்பவும் வந்தாள்.   

“முன்னே சொன்னீங்க, அது உண்மைன்னு எனக்கு தெரியும் ஹெல்ப் பண்ணினேன்! ஆனா இப்போ நீங்க இவங்க எல்லோர் மேலயும் சொல்றது அபத்தம். ஆனாலும் இவங்க அடிச்சது தப்பு. இனி உங்களை எதுவும் செய்ய மாட்டாங்க!” என,   

தலையசைத்த வர்ஷா, ஆனாலும் கலவரமாகப் பார்க்க.. “பயம் வேண்டாம்” என்றவன்.. “இது என் பெர்சனல் நம்பர், நீங்க என்ன பிரச்சனைன்னாலும் உடனே கூப்பிடுங்க” என்றான்.

“பேசினதுக்கு சாரி கேளுங்க! நீங்க அடிச்சதுக்கு சாரி கேளுங்க!” என பஞ்சாயத்து பேச,  

வர்ஷா உடனே “சாரி” என்று விட.. வர்ஷினி அமைதியாக தான் இருந்தால், சாரி கேட்கும் எண்ணமும் இல்லை!

ரமணன் வர்ஷினியை பார்க்க. “அவங்க திரும்ப எதுவும் பேசாம இருந்தா, அவங்களுக்கு என்னால எந்த பிரச்சனையும் வராது கண்டிப்பா! ஆனா அடிச்சதுக்கு சாரி எல்லாம் கேட்க மாட்டேன்!” என்றாள். குரலிளுமே ஒரு அடக்கப்பட்ட கோபம். அது நேர்மையானவர்களிடம் தென் படும் கோபம்..

மூன்று வருடங்களுக்கு முன்பு மயக்கமாய் பார்த்த வர்ஷினி அவனின் ஞாபகத்தில் வந்தாள். அப்போது அந்த நீல நிறக் கண்களை பார்த்திருந்தான். ஆனால் வெகு சில நிமிடங்கள். இப்போது நன்றாகப் பார்த்தான். அப்போது சொருகிய தெளிவில்லாத கண்கள். இப்போது தெளிவாய் இருந்தது. அதில் ஒரு காந்த சக்தி கூட!

வர்ஷினி அழகான பெண் என்றாலும் “இந்தக் கண்ணை பார்த்து தான் அந்தப்பய பைத்தியமா சுத்தறான் போல, இந்த பொண்ணு மேல” என்று ரமணனிற்கு தோன்றியது.  

வராது வந்த நாயகன் -ஒரே சிறந்த ஓர் வரன் தராதரம் புரிந்தவன் நிரந்தரம் நிறைந்தவன்
வரம் தரும் உயர்ந்தவன் கரம் கரம் இணைந்தவன்
இவன் தலைவி நாயகன் 

 

  

 

Advertisement