Advertisement

அத்தியாயம் தொண்ணூற்றி நான்கு :

ஏழை காதல் வாழுமோ
இருளும் ஒளியும் சேருமோ
நீயோர் ஓரம் நான் ஓர் ஓரம்
கானல் நீரால் தாகம் தீராது..

தேடும் கண்களே தேம்பும் நெஞ்சமே
வீடும் பொய்யடி வாழ்வும் பொய்யடி..

அந்த கடினமான நாளை தான் ஈஸ்வரும் நினைத்திருந்தான். சிங்கப்பூரில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தான், ஃப்ளைட்டில் அமர்ந்திருந்தவனை அந்த நினைவுகள் தான் ஆக்கிரமித்தன.

வர்ஷினி காணாமல் போய் திரும்பவும் அவளை கண்ணில் காணும் வரை.. அஸ்வின் மட்டும் அன்று அங்கே இல்லாமல் இருந்திருந்தால், நினைக்கவே முடியவில்லை!

ஒரு ஆக்சிடென்ட், என் வீட்டில் இருக்கிறாள், வாருங்கள் என்ற தொலைபேசி அழைப்பு.. எங்கே தேடுவது என்று தெரியாமல் காரில் ஈஸ்வர் சுற்றிக் கொண்டிருந்தான்.. அந்த அழைப்பு வரும் போது ஒரு மணி.. லம்பாகினியின் ரெஜிஸ்ட்ரேஷன் நம்பர் வைத்து.. அவனை அழைத்து இருந்தார்கள்..

சென்றால் வர்ஷினி அப்போதும் போதை மயக்கத்தில்.. பார்த்தவுடன் கண்களில் நீர் தளும்பி விட்டது.. ஆனால் அவனுக்கு போதை மயக்கம் என்று தெரியாது… ஆக்சிடென்ட் மயக்கம் என நினைத்தான்.

அருகில் சென்று பார்க்கவும்.. ஒரு ஆழ்ந்த தூக்கம் போன்ற தோற்றம் தான்.. அவளை அவசரமாக ஆராய்ந்தான். எங்கும் அடிபட்டது போல தெரியவில்லை.

“தேங்க் யு சர், தேங்க் யு வெரி மச்” என்று உணர்ச்சி வசப்பட்டவன்.. “ரொம்ப நேரமா தேடிட்டு இருக்கேன்” என ஈஸ்வர் சொல்ல, அவனின் தோளில் தட்டிக் கொடுத்த அந்த போலிஸ் அதிகாரி.. “இவங்க வந்த கார் ஆக்சிடன்ட் ஆகிடுச்சு.. கூட இருந்த பையன் ஜி ஹெச் ல இருக்கான்.. என்ன நிலைமைல இருக்கான்னு தெரியலை.. அவனுக்கு கொஞ்சம் இஞ்சுரீஸ்”

“அவன் தான் இவங்க ஹஸ்பன்ட் கிட்ட விட்டுடுங்கன்னு கெஞ்சினான். இவங்க பேர் எதுலையும் வராம இருக்கவும் கெஞ்சினான்.. இன்னொரு கார்ல இருந்த ரெண்டு பேரும் ஸ்பாட் அவுட்” என.. என்ன இவ்வளவு சீரியஸா.. நெஞ்சம் படபடத்தது..    

“இவங்க ஏன் மயக்கமா இருக்காங்க தெரியலை.. நான் பயத்துலன்னு நினைச்சு அந்த பையன் ரொம்ப கேட்டதுனால இங்க கொண்டு வந்துட்டேன்” என,

ஈஸ்வர் தண்ணீர் கேட்டு அவளின் முகத்தில் மூன்று நான்கு முறை நன்கு வேகமாக அடித்தான்.. பார்த்திருந்த அந்த அதிகாரியின் மனைவி.. “வலிக்கப் போகுது” என்று பதற..

எதுவும் பேச முடியாதவனாக கன்னம் தட்டினான்.. மெதுவாக கண் விழிக்கவும்.. “வர்ஷி, வர்ஷி என்னை பாரு, என்ன பண்ணுது?” என அவளின் கண்களை பார்க்க அதில் போதை மயக்கம் தான்.. அந்த கண்கள் சில நொடிகள் அவனை பார்த்த போதே காட்டிக் கொடுக்க.. மீண்டும் அவளின் கண்கள் செருகியது.

அதிகாரியும் பக்கத்தில் நின்று பார்த்து.. “இவங்க கண்ணு ஏன் ஒரு மாதிரி இருக்குது” என்றார்.

“இல்லை, அவளுக்கு ப்ளூ ஐஸ்.. கண்ணு நீல நிறமா இருக்கும்”  

“டாக்டர் கிட்ட போகலாமா, மயக்கமாகறாங்க?” என்று அதிகாரியின் மனைவி பதற..

“இல்லை, ஒண்ணுமில்லை” என்று ஈஸ்வர் சொல்லி.. “வர்ஷி, கண்ணு திற!” என்று அவளின் கன்னத்தில் வலிக்க அடிக்க..

“என்ன பண்றீங்க?” என்றான் அந்த அதிகாரியும்.. அதற்குள் கண் திறந்தவளிடம் “மாத்திரை எடுத்தியா” என,

“ம்ம், எடுத்தேன்! எனக்கு செத்துப் போகணும்” என்று சொல்ல.. அப்படியே நின்று விட்டான்.. கண்களில் நீர் இறங்குவேனா என நிற்க

அந்த அதிகாரி இவனை சந்தேகமாக பார்க்க.. “நான் விஸ்வேஸ்வரன், ஈஸ்வர் ஃபைனான்ஸ் எங்களோடது.. இது சங்கீத வர்ஷினி என் மனைவி.. கொஞ்சம் டரக்ஸ் எடுத்துப்பா, அந்த ஒரு எஃபக்ட்ல பேசறா.. இது என்னோட அட்ரெஸ், நான் இவளை கூட்டிட்டு போறேன்.. உங்களுக்கு எப்போ சந்தேகம்னாலும் நீங்க என்னை ரீச் பண்ணலாம்.. இவ தெளிவானதும் உங்களோட பேச வைக்கிறேன்” என்றான்.

“அனுப்புவதா, வேண்டாமா” என்ற சந்தேகம்.. அவளின் அப்பா வீட்டினர் பற்றி கேட்க.. விவரம் சொன்னவன்.. “அங்கே போக பிரியப் படமாட்டா, இந்த பழக்கம் யாருக்கும் தெரியாது, ப்ளீஸ்.. என்னோட அனுப்பிடுங்க” என்று கெஞ்சினான்..

“வர்ஷ், எழுந்துரு, எழுந்தரு” என அவளையும் தட்டி எழுப்ப.. “ம்ம்” என கண்விழித்தாள்.. “வீட்டிற்கு போகலாம்” என ஒருவாறு எழுப்பி நிற்க வைக்க.. அங்கிருந்த எல்லோரையும் பார்த்தாள்.. எதோ உருவங்கள் ஆனால் யார் என்ன என்று தெரியவில்லை..

ஆனால் எதிரில் இருந்தவர்களுக்கு இவ்வளவு அழகான பெண்.. ஈஸ்வர் ஃபைனான்ஸ் தெரியாதவர்கள் கிடையாது, ஈஸ்வரின் தோற்றம் பேச்சு என எதிலும் குறைவாகத் தோன்றவில்லை, ஏன் இப்படி? என்ற பரிதாபம் தான் தோன்றியது..  

எப்படியோ அவளை அழைத்து வீடு வந்தவன், அவளை வைத்து பூட்டி, காலை ஆறு மணிக்கு அந்த இளைஞன் யார் என பார்க்கப் போனான். எதோ அவளின் நண்பன் என நினைத்து.. அஸ்வினை கனவிலும் நினைக்கவில்லை.  

கத்தி குத்தப்பட்டு இருந்ததினால் ஆபரேஷனுக்கு ஏற்பாடு செய்ய இருந்தனர்..

இவனை பார்த்ததுமே “வர்ஷினி உங்க கிட்ட வந்துட்டாளா?” என்ற வார்த்தை தான்.

“ஏங்கே பார்த்த?” என, “பப்ல” என்றான்.. அப்போது ஈஸ்வருக்கு வேறு எந்த விவரங்களும் தெரியாது..  “வர்ஷினி, உங்க கிட்ட வந்துட்டாளா?” என்ற ஒரு வார்த்தைக்காக அவனை வேறு பெரிய ஹாஸ்பிடல் சேர்த்து அவனுக்கு எல்லாம் செய்ய..

மாலை திரும்ப அவனை வந்து பார்த்த போது தான் விவரங்கள்  தெரியும். அஸ்வின் ஆபரேஷன் முடிந்து ஐ சி யு வில் இருந்தான். ஆனாலும் பேச முடிந்தது. எந்த மாதிரி ஆபத்திலிருந்து தப்பித்து இருக்கிறாள். அப்படியே அமர்ந்து விட்டான். இன்னும் விஷயத்தை கிரகிக்க ஜீரணிக்க முடியவில்லை.   

அவனின் முகம் பார்த்தே “யார் கிட்டயும் எப்பவும் சொல்ல மாட்டேன்” என்றான் அஸ்வின் அவனாகவே.

“நீ ஹாஸ்பிடல் ல இருக்க, இன்னும் உங்க வீட்டுக்கு சொல்லலை” என்று ஈஸ்வர் சொல்ல,

“வேண்டாம், ஊருக்கு போயிருக்கேன்னு சொல்லிக்கறேன். கொஞ்சம் நல்லா சரியான பிறகு டிஸ்சார்ஜ் ஆகற மாதிரி மட்டும் பண்ணுங்க” என, “ம்ம்” என்று தலையாட்டி வந்தவன் தான்.. இன்னும் அஸ்வின் அவனுக்கு இவ்வளவு பெரிய உதவி செய்ததை நம்ப முடியவில்லை. ஒரு நாள் இரவு முழுவதும் பதிய வைத்துக் கொண்டான்.

ஒரு நாள் முழுதும் போதையில் இருந்து, அடுத்த நாள் காலையில் தான் வர்ஷினி சற்று தெளிவாக..அவளை அழைத்துக் கொண்டு அஸ்வின் காண வந்தான். அவளிடம் அதுவரை விவரம் எதுவும் சொல்லவில்லை.  

நடந்தது எல்லாம் அஸ்வின் அவளிடம் சொல்ல, முன்பிருந்தே அஸ்வினை அவளுக்கு பிடிக்கும், அது இன்னும் ஒரு அழுத்தமான நட்பாக மாறியது அப்போது தான்.

ஆனாலும் வர்ஷினி பெரும் மௌனத்தில் ஈஸ்வரிடம்.. “இப்படி ஒரு பப்பில் இருந்திருக்கிறாள், இருவர் அவளை தூக்கி தவறாக நடக்க எண்ணம் கொண்டிருந்தனர்” என்பது அவளை அவளே அந்த சமயத்தில் மிகவும் கீழாக உணர வைத்தது.

ஈஸ்வர் வேறு இந்த பழக்கத்தை “விடு, விடு” என்று சொல்ல.. அந்த தன் தவறை எல்லாம் கோபமாய் அவன் மீது திருப்பினாள்.

இன்னம் யார் யாரோ அவளை தூக்கி இருக்கின்றனர் என்பதை நினைத்துப் பார்க்க முடியவில்லை. முதலில் அந்த இளைஞர்கள், அஸ்வின், ஹோட்டல் ஆட்கள், அந்த அதிகாரி, சே சே எந்த நிலையில் உன்னை நீ வைத்துக் கொண்டாய், தாளவே முடியவில்லை.. எங்கெல்லாம் தொட்டார்களோ என்ற ஒரு நினைவு அவளின் சிந்தனை செயல் எல்லாம் முடக்கியது.  எப்போதும் போல யாரிடமும் தன் வேதனையை பகிர முடியவில்லை! அவளே தேடிக் கொண்டது தான்! ஆனாலும் மீண்டும் செத்துப் போகும் எண்ணம் வந்தது.

இதெல்லாம் ஒரு விஷயமா.. உனக்கு உடல் நிலை சரியில்லை.. உனக்கு உதவினார்கள் அவ்வளவே என்ற சமாதான எண்ணத்தை மனதில் பதிய வைத்தாள். அவளுக்கு அவளே எல்லாம்.

ஆனாலும் யாரையும் பார்க்கப் பிடிக்கவில்லை, பேச பிடிக்கவில்லை. ஈஸ்வரை பிடிக்கவேயில்லை. எல்லாம் இவனால், செத்து விடு என்று ஒரு மனம், நான் ஏன் சாக வேண்டும் என்று ஒரு மனம்! தனிமை தனிமை! ஈஸ்வரை பார்க்கப் பார்க்க இவனை கொன்று புதை என்று ஒரு மனம்.. தானாக சிதையும் சிந்தனைகள் அல்ல சிதைக்கும் சிந்தனைகள்!          

இன்னும் ஈஸ்வருக்கு நடந்ததில் இருந்து வெளியே வரவே முடியவில்லை. இதில் அவளின் மனதில் என்ன இருக்கின்றது என்று பார்த்து எப்படி சமாதானம் செய்வான். எப்போதும் போல அவளின் உணர்வுகளை புரிந்து கொள்ளவில்லை!             

எல்லாம் மனதில் வைத்து மறுகி இருந்தவளிடம், அதிலிருந்து வெளியே கொண்டு வராமல் பழக்கத்தை விடு விடு என்று ஈஸ்வர் ஜெபிக்க.. எல்லாம் அவன் மேல் திருப்பினாள்! “உன்னை எனக்கு பிடிக்கலை! நீ என்னை ஏமாத்திட்ட! நான் நினைச்ச மாதிரி நீ இல்லை! என்னை விட்டுடு! நான் ஹாஸ்டல் போறேன்! இங்கே இருந்தா எனக்கு தேவையில்லாதது எல்லாம் தோணுது! இங்கே இருந்தா திரும்பவும் மாத்திரை எடுக்கத் தோணும்”  என பேசப் பேச..                        

திரும்பவும் தன்னை எதுவும் அவள் செய்து கொள்ளக் கூடாதே என்று தான் ஹாஸ்டல் போக அனுமதித்தான்.

பிரிவென்பது ஆகிவிட்டது இன்னும் ஐஸ்வர்யாவின் விஷயத்தை ஏன் மறைக்க வேண்டும். மீண்டும் சேரும் போது திரும்பவும் இது வாழ்க்கையில் சிக்கல் ஆகிவிடக் கூடாது என்று. ஆம்! ஈஸ்வரை பொறுத்தவரை அவளை விடும் எண்ணம் எல்லாம் இல்லை. ஆனால் அவள் இவ்வளவு சிக்கலை தேடிக் கொள்ளும் போது அவள் வழியில் சென்றால் அன்றி அவளை மீட்க முடியாது என்று மனம் சொல்ல பிரிய முடிவெடுத்தான்.    

அதனால் ஐஸ்வர்யாவின் விஷயம் சொல்ல முடிவு செய்து, ஐஸ்வர்யாவிடம் காதல் சொன்னது சொல்லிவிட!

அதுவரை ஹாஸ்டல் போக மட்டும் நினைத்து இருந்தவள் மனதில் பிரளயம்! சொல்லப் போனால் அது அவளை மீட்டு எடுத்தது. இவ்வளவு துரோகம் செய்து விட்டான், நீ இவனுக்காக உன்னை அழித்துக் கொள்வாயா என்பது போல ஒரு எண்ணம்! ஒரு திடம்!  “நீ எனக்கு வேண்டாம் இனிமே, நீ என்னை பார்க்கவோ பேசவோ கூடாது” என்று ஸ்திரமாய் மறுத்து விட்டாள்.  

அப்போது தான் அஸ்வினுடன் இன்னும் இன்னும் நட்பு பலப் பட்டது!

இவன் வீட்டினரும், அவளின் வீட்டினரும், ஏன், ஏன் என்று மாற்றி மாற்றிக் கேட்க, யாருடைய கேள்வியும் அவளை தாக்கி மீண்டும் எதுவும் செய்து கொள்ளக் கூடாது என யாரையும் அணுக விடவில்லை!

அவளின் மிக நுட்பமான உணர்வுகள் எல்லாம் ஈஸ்வரின் புரிதலுக்கு அப்பார்ப்பட்டு இருக்க.. அந்த பிரிவு வந்து விட்டது.. எல்லாப் பெண் குழந்தைகள் போல அவள் வளரவில்லை என்பதை மறந்து விட்டான். அம்மா அக்கா தங்கை பெண் தோழிகள் காதலி என்று எல்லோரையும் பார்த்து இருந்தவனுக்கு.. இவளை தெரிந்து கொள்ள முடியவில்லை தவறி விட்டான்.

நான் என்ற அகந்தை மமதை, என்னை தவிர யாரும் அவளை சமாளிக்க முடியாது என்ற எண்ணம், வாழ்க்கையில் அப்பாவும் தவறி, அம்மாவும் தவறி, அவளுக்கு என்னை விட சிறந்த வாழ்க்கை யார் கொடுப்பார் என்ற எண்ணம், அதையும் விட அவனின் மோகமும் காதலும், எல்லாம் சேர்ந்து அவளை இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டது

உண்மையில் ஈஸ்வர் என்ற மனிதனை சந்திக்காமல் வேறு யாரைவது திருமணம் செய்திருந்தால் சங்கீத வர்ஷினி நன்றாக தான் இருந்திருப்பாள். அவளுக்கு இந்த பழக்க வழக்கங்களும் வந்திருக்காது.           

இது எதுவும் புரியாதவனாக ஈஸ்வர் வர்ஷினியை அருகில் வைத்துக் கொள்ளவும் முடியாமல், அவளை விடவும் முடியாமல், மிகவும் கடினமான நிமிடங்கள்! அவனுமே அவனின் மனைவியாகப் பட்டவள் இப்படி இருக்கிறாள் என்பதை கடந்து வர மிகவும் சிரமப் பட்டான்.

வர்ஷினி மீது ஈஸ்வர் வைத்திருந்த அதீத காதலே அவளின் மீது வெறுப்பு வராமல் அவனைக் காப்பாற்றியது. “வர்ஷினி கடந்து வந்தது அப்படி ஒன்றும் பெரிய விஷயம் இல்லையே! வாழ்க்கையில் பல பெண்கள் இதனையும் விட கடினமான விஷயங்களை சந்திக்கிறார்கள்! அவர்கள் எல்லாம் இப்படியா இருக்கிறார்கள், இப்படி பழக்க வழக்கம் பழகுகிறார்களா!” என்ற எண்ணம் அவனுக்கு வரவேயில்லை!   

ஈஸ்வரின் எண்ணம் முழுவது வர்ஷினி இதில் இருந்து மீண்டும் வந்து விட வேண்டும் என்பது மட்டுமே! அதற்காக எதையும் செய்ய தயாராக இருந்தான், அவளை விடுவது உட்பட!  திரும்பவும் அவள் மாத்திரை எதுவும் உட்கொள்ளவில்லை என்ற நம்பிக்கை வரும் வரை செத்து செத்து தான் பிழைத்தான். மனதின் ஓரம் ஏதாவது நடந்து விடுமோ என்ற பயம் அவளை பிரிந்த எப்போதுமே     

எப்படியோ மீண்டும் அவனிடம் வந்து விட்டு விட்டாள். தொலைத்திருந்தால், அவனுமே தொலைந்து தான் போயிருப்பான்.

மீண்டு விட்டான்! மீட்டும் விட்டான்!

ஃபிளைட் இறங்கி அவனின் லகேஜ் எடுத்தவன், எந்த திசை செல்வது என்று தெரியாமல் நின்று விட்டான்   அன்று தானே வர்ஷினியும் வருகிறாள். ஆனால் இன்னும் நான்கு மணிநேரம் இருக்கிறது. வீட்டிற்கு போகப் பிடிக்கவில்லை, அமர்ந்து கொண்டான் அங்கேயே.

ஈஸ்வர் அங்கே அமர்ந்திருந்த போது ஆக்ட்ரஸ் வர்ஷா வர.. இவனை பார்த்ததும் “ஹல்லோ சர்” என்று அருகில் வந்தாள். அவனால் முகத்தை திருப்பப் முடியவில்லை. “ஹல்லோ” என்று மரியாதை நிமித்தம் சொன்னான்.

அவளும் அந்த ஃப்ளைட்டில் தான் வந்திருந்தாள். ஆனால் இவன் கவனிக்கவில்லை, அவளுமே.. இறங்கும் போது தான் கவனித்து இருந்தவள், அவன் அமரவுமே அருகில் வந்து.. “நீங்க ஏன் என்கிட்டே எந்த எக்ஸ்ப்ளனேஷனும் கேட்காம என்னை டீம்ல இருந்து எடுத்துட்டீங்க, ஹௌவ் கேன் யு டூ திஸ்” என்று சற்று போர்ஸாக கேட்க,

அந்த துவனி ஈஸ்வருக்கு ஒரு கோபத்தை கொடுத்தது. தன்மையையாய் கேட்டிருந்தால், பதில் கூட சொல்லியிருப்பானோ என்னவோ. அவளை ஒரு பார்வை பார்க்கவும். அந்த பார்வையே ஒரு கிலியை அவளுக்குக் கொடுத்தது. ஈஸ்வரை அவள் அதிகம் பார்த்ததில்லை. அதனால் அவனைத் தெரியவில்லை.

ஈஸ்வரை விட வர்ஷாவை தெரிந்தவர் அனேகர். அவன் விளம்பரப் பிரியன் அல்ல, தன்னை எதிலும் முன் நிறுத்தவே மாட்டான். சிலர் கவனிக்க.. “என்ன எக்ஸ்ப்ளனேஷன்” என தோரணையாக கால் மேல் கால் போட்டபடி ஈஸ்வர் கேட்க..   

அதற்குள் அவளின் மேனஜர் அருகில் வந்தவன்… “வணக்கம் சர்” என்று பெரிய கும்பிடாகப் போட.. அவனை முதல் பார்வையிலேயே ஈஸ்வருக்கு பிடிக்கவில்லை.. அவன் புறம் பார்த்தவன்.. “யார்” என்பது போல வர்ஷாவைப் பார்க்க “என் மேனேஜர்” என,

“அதான் பேமென்ட் கொடுத்துட்டோம்ல.. எதுன்னாலும் ஆஃபிஸ்ல வந்து பாருங்க.. அங்க வந்து கேளுங்க எக்ஸ்ப்ளனேஷன். திஸ் இஸ் நாட் தி ப்ளேஸ் அன்ட் திஸ் இஸ் மை பெர்சனல் டைம்” என்று கடினமாக சொல்லி வர்ஷாவை பார்த்தான். இப்படி ஒரு கடினத்தை வர்ஷா எதிர்பார்க்கவில்லை.

“சரிங்க சர்! சரிங்க சர்! ஆஃபிஸ் வர்றோம்!” என மேனேஜர் பதில் கொடுக்க.. ஈஸ்வர் கண்டுகொள்ளவேயில்லை, பேச்சு முடிந்தது என்பதாக மொபைலை பார்க்க ஆரம்பித்தான்.

வேறு வழியில்லாமல் அவர்கள் கிளம்ப.. வர்ஷாவின் மனம் கனன்று கொண்டிருந்தது.. அப்படி என்ன அலட்சியம் என்பது போல. இதுவரை பார்த்தவர்கள் எல்லாம் மேலே விழுந்து பழக, அப்படி இல்லாமல் இருந்தாலும் ஒரு முக்கியத்துவம் இருக்கும். இவ்வளவு அலட்சியம் இருக்காது.

பணம் இருந்தால் இவர்கள் பெரிய ஆட்கள் நான் ஒன்றுமில்லாதவளா என்ற கோபம் வலுபெற்றது.

அவள் சென்ற பிறகு தான் நினைத்தான். முதலில் செக்யுரிட்டி ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும் என

அஸ்வின் சில நாட்களாக சொல்லிக் கொண்டு தான் இருந்தான். இவன் தான் “எனக்கென்ன பயம். வர்ஷி கூட நீயும் தாஸும் இருக்கீங்க” என்று மறுத்து விட்டிருந்தான்.. இன்றைக்கு என்னவோ தோன்றிற்று. யாரோ ஃபோட்டோ எடுத்தது போலவும் கூட இருந்தது. கூடவே என்னை யார் எடுப்பர் அந்த நடிகையாய் இருக்கும் என்று விட்டுவிட்டான்.

பின்பு வர்ஷினி வரும் வரை பொறுமையாய் அமர்ந்திருக்க, வர்ஷினி அவனை எதிர்பார்க்கவில்லை. ஈஸ்வரை பார்த்ததும் மனதில் ஒரு உற்சாகம், குதூகலம்! அவனை பார்த்தும் வேகமாய் அருகில் வந்தவள்.. “நீங்க வீட்டுக்கு போய் இருப்பீங்க நினைச்சேன்” என,

“உன்னை விட்டுட்டு வீட்டுக்கு போய் எனக்கு அங்க என்ன இருக்கு?” என ஒரு முறுவலோடு கூற..   

ஈஸ்வரை அணைத்துக் கொள்ள துடித்த மனதை அடக்கி கையை மட்டும் பிடித்துக் கொண்டாள். அவளின் தொடுகையில் இடையோடு அணைத்துப் பிடிக்க தோன்றிய மனதை அவனுமே கடிவாளமிட்டான்.

“நீங்களும் வந்திருக்கலாம். இனிமே எல்லாம் தனியா எங்கயும் போக மாட்டேன். வேலையாவது ஒன்னாவது! ஐ டோன்ட் வான்ட் எனிதிங்” என,  

“இனிமே எங்கயும் தனியா உன்னை விட மாட்டேன்!” என்றான் அவனும் புன்னகையோடு.    

வேகமாக அந்த நேரம் அஸ்வின் ஏர்போர்ட் உள்ளே வந்தான். இருவரையும் பார்த்து ஆசுவாசமானவன். “நீங்க பிக் அப் பண்றேன்னு சொல்லவேயில்லை. தாஸ் ஒரு பக்கம் வர்றான் நான் ஒரு பக்கம் வர்றேன்” என ஈஸ்வரை குறை பட்டு, “ட்ராபிக்ல லேட் ஆகிடுச்சுன்னு டென்ஷன் வேற” என,

“எதுக்கு டென்ஷன், யு எஸ் வரை தனியா போயிட்டு வந்துட்டேன். இங்க வரமாட்டேனா” என வர்ஷினி சொல்ல..

“உங்களுக்கு எதாவதுன்னு டென்ஷன் இல்லை, நீங்க யாரையும் எதுவும் பண்ணிடக் கூடாது இல்லையா, அந்த டென்ஷன்” என்று அஸ்வின் கிண்டல் செய்ய..

“எஸ், அது என்னவோ கரக்ட் அஸ்வின்!” என்று ஈஸ்வர் ஆமோதிக்க..  

“ஹி, ஹி, கிண்டலா” என வர்ஷினி கிண்டலாக கேட்க,

“சே! சே! உங்களை யாராவது கிண்டல் பண்ண முடியுமா?” என அஸ்வின் சொல்ல,

“எஸ், அது என்னவோ கரக்ட் அஸ்வின்” என்று முன்பு போலவே சொன்னவன், “அவளை அவளே பண்ணிக்குவா, வேற யாரும் வேண்டாம்!” என.

ஈஸ்வரின் தோளில் பட்டென்று ஒரு அடி வைத்தவள், கை நீட்டி பத்திரம் என மிரட்ட..  

“விஸ்வா நான் எதுவுமே பார்க்கலை” என்று அதற்கும் அஸ்வின் கிண்டல் செய்தான்.

“அடிக்க தானே செஞ்சேன்! நான் என்னவோ உங்களை கிஸ் பண்ணது போல இவன் ஏன் பில்ட் அப் குடுக்கறான்” என்று வர்ஷினி ரகசியம் பேச,

ஈஸ்வருக்கு சிரிப்பே அடக்க முடியவில்லை வாய் விட்டு சிரிக்க, அதற்கும் தோளில் செல்லமாய் ஒரு அடி வாங்கினான்.  

காலம் சிறிது.. காதல் மனது..
தேவன் நீதான் போனால் விடாது..

 

Advertisement