Advertisement

அத்தியாயம் தொண்ணூற்றி ஒன்னு :

பாட வந்ததோ கானம்… பாவை கண்ணிலோ நாணம்…

வர்ஷினியின் மனம் ஆழ் கடலின் அமைதியோடு இருந்தது. ஈஸ்வரின் பேச்சுக்களின் சாராம்சத்தை அணுஅணுவாக மனதினில் ஓட்டிக் கொண்டிருந்தாள். வாழ்க்கையே வண்ண மயமாக ஆகிவிட்டது.

காரில் வரும் போதும், உணவு வெளியில் முடித்த போதும், திரும்ப வரும் போதும், எதுவும் பேசவில்லை. ஈஸ்வரையும் பேச விடவில்லை.. பேசினால், “ப்ளீஸ், பேசாதீங்க, லெட் மீ என்ஜாய் தி மொமென்ட்” என்று விட.. அதை சொல்லும் போது அவளின் முகத்தில் தெரிந்த ஒரு அமைதி, ஒரு கெஞ்சல்.. கண்களில் தெரிந்த காதல்..

ம்கூம்! பின்பு ஏன் ஈஸ்வர் பேசப் போகிறான்.. வர்ஷினியை சைட் அடிக்கும் வேலையை மட்டுமே செய்து வந்து கொண்டிருந்தான்..

வீடு வரும் வரை மட்டுமே.. வரும் போது பத்து மணி.. வந்தால், வெளியில் தாஸ் அமர்ந்திருக்க, உள்ளுக்குள் ஒரு கும்பலே அமர்ந்திருந்தது..

பத்து, முரளி, கமல்லம்மா, மலர், ரஞ்சனி குழந்தையோடு!  ரஞ்சனியின் முகம் அதுவும் அழுது அழுது வீங்கி பார்க்கவே பரிதாபமாக..

“ஏன் இப்படி இருக்க ரஞ்சி?” என பதறி அருகில் ஈஸ்வர் போக..

வர்ஷினிக்கு சிரிப்பு வந்தது… இருந்தாலும் முயன்று அடக்கிக் கொண்டாள்.. பத்துவும் முரளியும் அமர்ந்திருக்க அவர்களுக்கு நடுவில் இடமில்லாத போதும் இடித்துக் கொண்டு அமர்ந்தவள்..

“என்னாச்சு பத்துண்ணா? அவங்கண்ணா திட்டினதுக்கு உங்க வீட்டுக்காரம்மா செமையா அழுதாங்களா?” என கேட்க..

அவள் கேட்கக் கேட்க.. ரஞ்சனியிடம் பேசிக் கொண்டிருந்த ஈஸ்வர் வர்ஷினியிடம் திரும்பி.. “என்ன உட்கார்ந்துட்ட? அம்மா கிட்சன்ல இருக்காங்க.. ஓடு, போய் பாரு!” என அதட்ட..

“இதோ போறேன்!” என்று எழுந்து விரைந்து விட.. முரளி ஈஸ்வரை நேரடியாக முறைத்தான்.. முறைத்தது மட்டுமல்லாமல் “நீ உன் தங்கச்சியோட பேசுவ, நாங்க எங்க தங்கச்சியோட பேசக் கூடாதா.. எதுக்குடா இப்போ அவளைத் துரத்தின.. அவளா இன்னைக்கு தான் எங்க பக்கத்துல வந்து உட்கார்ந்தா, அப்புறம் நாங்க அதை செய்யறது இல்லை, இதை செய்யறது இல்லைன்னு குறை மட்டும் சொல்லு! எங்களை பிரிக்கறதே நீதான்” என்று கடுப்பாக சொல்ல..  

“திடீர்ன்னு நீங்க பாசமலர் ஃபிலிம் ஓட்டறது எனக்கு எப்படித் தெரியும்.. ஆமா நீ இங்க என்ன பண்ற ஷாலினியை அங்க தனியா விட்டுட்டு.. முதல்ல எழுந்துரு, வீட்டுக்கு கிளம்பு! நீ அம்மா இன்னும் எல்லோரும் இங்க தான் இருக்கீங்க.. கிளம்புடா!” என்று அதட்டினான்.

“ஷாலினி தான் என்னை இங்க துரத்தி விட்டா!”  

“அதுதானே உனக்கு எப்படி தோணும்!” என்று அதற்கும் ஒரு பேச்சு பேசி.. ஷாலினிக்கு நேரடியாக அழைத்தவன்.. “முதல்ல உன் வீட்டுக்காரனை வீட்டுக்கு கூப்பிடு.. தனியா நிஷாந்த வெச்சிக்கிட்டு நீ என்ன பண்ணுவ, இங்க ஒண்ணுமில்லை! என்னவோ எனக்கு கோபம் பேசிட்டேன்! ஏன் நான் பேசக் கூடாதா?” என,

“பேசலாமே அண்ணா, பேசலாமே!” என்றவள், “அவர் கிட்ட கொடுங்க!” என சொல்லி, “கிளம்பி வாங்க!” என சொல்ல, முரளி வாசல் தாண்டிய பிறகு தான் மற்றவர்களைப் பார்த்தான்..

யாரும் உண்ட மாதிரியும் தெரியவில்லை.. உள்ளே சென்று பார்க்க, அம்மா சமைக்க.. வர்ஷினி உதவிக் கொண்டு இருந்தாள்.

அம்மாவின் முகமே சரியில்லை.. “மா, ஏதாவது வாங்கிக்குவோமா!” என,

“வேண்டாம்!” என்பது போலத் தலையசைப்பு.. “கோவமா இருக்காங்க!” என்று வர்ஷினி உதடு அசைத்து தெரிவிக்க.. “நீ போ” என்று அவளிடம் சைகை காட்டியவன்.. அவள் சென்றதும்.. “மா, என்ன கோபம்?” என்று அருகில் வர,

வர்ஷினி இல்லாததை உணர்ந்தவுடன் கரகர வென்று கண்களில் நீர்.. “என்னமா ரஞ்சினியை திட்டினதுக்கா சாரி, எதோ ஒரு கோபம் பேசிட்டேன்” என பதறினான்.

“அதுக்கில்லை” என்று சொன்னவர்.. “அப்பா திட்டிட்டார்” என அழ..

“அப்பா உன்னை திட்டினாரா? எதுக்கு?” என,

அழுதபடியே “ரஞ்சனிக்கு இவ்வளவு வாங்கினேன் இல்லையா, வர்ஷிக்கு ஒன்னுமே வாங்கலை! வாங்கக் கூடாதுன்னு இல்லை.. எனக்குத் தோணலை.. அப்பா திட்டிட்டார்!” என,

“சரி விடு, டபுள்லா வாங்கிடுவியாம்” என்று சமாதானம் செய்தான்.

“தப்பு தானே!” என அவர் சொல்லவும்.. “தப்பு தான்! ஆனா ரொம்ப தப்பு இல்லை.. உனக்கு வாங்கினியா?”  

“இல்லை” என்பது போல தலையாட்டியவரிடம், “ஒன்னும் தப்பில்லை விடு!” என்று வெகுவாக சமாதானம் செய்தவன், “கடையில டின்னருக்கு வாங்கலாமா” என,

“இல்லை, செஞ்சிட்டேன் விடு.. நம்ம தானே, கூட உன் மாமியார் மட்டும் தான் எக்ஸ்ட்ரா, அவங்க அழுத அழுகைக்கு இன்னைக்கு சாப்பிடுவாங்கன்னு தோணலை!” என,

“அச்சோ! இனிமே நீ யாரையாவது பேசுவ ஈஸ்வரா!” என்று அவனை அவனேத் திட்டிக் கொள்ள.. பார்த்த மலர் சிரித்து விட.. “இப்போ தான் நீங்க அழகா இருக்கீங்க, எங்கம்மா மாதிரி!” என்று சொல்லி அம்மாவின் கன்னத்தில் முத்தமிட்டு விலக..

இன்னுமே அவரின் முகம் மலர்ந்தது!

“பேருக்கு ஏத்த மாதிரியே இருக்கீங்க!” என்றவன்.. அவரை திருஷ்டி எடுக்க.. “போடா டேய் நீ!” என்று செல்லமாக அவனை வெளியில் துரத்தினார்..

வெளியில் வந்தால் கமலம்மா கண் கலங்கி அமர்ந்திருக்க.. வர்ஷினி அவனை பார்த்து முறைத்து அமர்ந்திருந்தாள், எல்லாம் உன்னால் தான் என்பது போல…

“வர்ஷி போ, அம்மாக்கு ஹெல்ப் பண்ணு!” என்று அவளை துரத்தியவன்.. ரஞ்சனியின் கையினில் இருந்து ரிஷியை வாங்கி.. சோர்வாக இருந்தவளைப் பார்த்து.. “போ, போய் முகம் கழுவி வா!” என்றான்..

அவள் எழுந்து செல்ல.. “மா, என்ன இது? எதுக்கு இப்படி கண் கலங்கறீங்க?” என,

“நாங்க என்ன தப்பு பண்றோம்” என அவர் கேட்க..

“தப்பெல்லாம் இல்லை.. சொல்லப் போனா நீங்க வர்ஷியை பார்த்துக்கணும்ன்னு எந்த அவசியமும் கிடையாது தான்.. செய்யலைன்னா, செய்யலை! விட்டுடுங்க! ஆனா செஞ்சா அதை சரியா செய்யணும்!”

“உங்க வீட்டு குழந்தை, அவனுக்கு மொட்டை அடிச்சு காது குத்தப் போறீங்க.. முடிவெடுத்த உடனே எங்கம்மா கிட்ட சொல்லிட்டீங்க.. அவங்களும் அதுக்கு தேவையானது எல்லாம் ரெடி பண்ணிடாங்க”

“ரெண்டு நாளைக்கு முன்ன இன்வைட் பண்ணும் போது தான் அவளுக்குத் தெரியும், அதுவரை தெரியாது.. உங்க வீட்டு பொண்ணு தானே.. அவகிட்ட சும்மா சும்மா பேசலைன்னாலும் இதெல்லாம் சொல்ல வேண்டாமா.. நான் எத்தனை நாள் ஃபெவிகால் வெச்சு உங்களோட ஒட்ட வைக்க முடியும்.. இது கண்டிப்பா தப்பு தான்!” 

“எங்க வீட்ல ஒரு விசேஷம் ரஞ்சனிக்கு தெரியாம லாஸ்ட் மினிட்ல யாரோ மாதிரி இன்வைட் பண்ணினா விட்டுடுவாளா?”

“வர்ஷி முகம் பார்க்கற கண்ணாடி மாதிரி… நாம எப்படி நடக்கிறோமோ அதைத் தான் நம்மகிட்ட காட்டுவா.. நீங்க எல்லாம் ஷேர் பண்ணினா தானே அவ பண்ணுவா?” .. என்றான் பத்துவை பார்த்து..

ரஞ்சனியைப் பார்க்கவில்லை.. அதுவே சொன்னது இன்னும் அவனுக்கு கோபம் தான் என..

“இனிமே இந்த மாதிரி நடக்காம பார்த்துக்குறோம்.. ஏதாவது தப்பு பண்ணினா சொல்லிக் குடுங்க” என்று பத்து சமாதானக் கொடி பறக்க விட..

“இல்லை, இந்த மாதிரி இனி நடக்காது! சாரி, உங்களோட ஒரு விசேஷத்தை என்னோட பேச்சால டிஸ்டர்ப் பண்ணிட்டேன்.. ரியல்லி சாரி.. தனியா சொல்லியிருக்கலாம்.. அப்போ என்னவோ ஒரு கோபம்!” என..

அதற்குள் வர்ஷினி வந்து சாப்பிட அழைக்க.. “வாங்க” என்று அனைவரையும் எழுப்பிச் சென்றான்.. ரஞ்சனி “வேண்டாம்” என்று முறுக்கிய போதும்.. “நீ சாப்பிடலைன்னா பத்துவும் சாப்பிட மாட்டானாம்” என்று பத்துவை இழுக்க..

“தோடா! நீங்க அண்ணா தங்கை சண்டைல என் அண்ணாவை ஏன் இழுக்கறீங்க” என்று வர்ஷினி பேச..

“நான் எங்க உங்க அண்ணாவை இழுத்தேன், அந்த ரைட்ஸ் எல்லாம் ரஞ்சனிக்கு மட்டும் தான்! அவ தான் பத்து வோட ஹோல் சோல் ப்ரொபரைட்டர்” என,

ரஞ்சனியின் முகம் புன்னகைக்கு மாற.. “டேய், விஸ்வா சாப்பிட விடு!” என்று மலர் அதட்ட..

“அம்மா! நான் யார் கையையும் பிடிக்கலை! ஏன் வர்ஷ் கையை கூட பிடிக்கலை” என்று பாவனையாக சொல்ல,

எல்லோருமே சிரித்து விட்டனர்.. “சாரி, விஸ்வா!” என ரஞ்சனி சொல்ல..

“சாரி எல்லாம் எனக்கு வேண்டாம். நாங்க அப்படியா வளர்திருக்கோம் பொண்ணை.. நாத்தனாரை கூட சரியா பார்க்காம.. இந்த பேச்சு வர்ஷினின்றதால இல்லை.. யார்னாலும் உனக்கு சொல்லுவேன். என்ன மத்தவங்கன்னா தெரிஞ்சிருக்காது. வர்ஷினின்றதால எனக்கு தெரிஞ்சது, அவ்வளவு தான்!” என மீண்டும் சொல்ல..

“அதான் சாரி சொல்லிட்டால்ல” என்று பத்து பரிந்து வர.. அவனிடமும் ஈஸ்வர் எதோ சொல்லப் போக..

“தெய்வமே! விட்டுடுங்கோ பாவம்! இதுக்கு மேல தாங்க மாட்டாங்க!” என்று வர்ஷினி அவனை நோக்கி பாவனையாக கைகூப்பி சொன்னாள்.

“இவன் தெய்வம் இல்லை! நீ தான் தெய்வம்! இவனோட குப்பை கொட்டற தானே!” என்று ரஞ்சனி சொல்ல…. எல்லோரும் சிரித்தனர்…

“ஹப்பா, இனிமே நீ எதையாவது பேசுவ!” என்ற பார்வையை வர்ஷினி பார்க்க.. “அச்சோ, நான் ஏன் பேசப் போறேன்!” என்ற பாவனையை ஈஸ்வரின் கண்கள் காட்ட.. இருவருமே அதனை வெளியில் காட்டாமல் இருக்க மிகுந்த பிரயர்தனப் பட்டனர்..

“இப்படி பேசி பேசி தான் உன்னை துரத்தி விட்டுட்டானா விஸ்வா” என விளையாட்டு போல கேட்டு விட்டாள். உண்மையில் உணர்ந்தெல்லாம் வரவில்லை, தானாக தான் வந்தது. ஆனால் சொன்ன விதம் பதிலை எதிர்பார்ப்பது போல ஒரு தோற்றம் கொடுக்க,  

வர்ஷினியின் முகம் மாறிவிட்டது, “மீண்டுமா?” என்று ஈஸ்வர் பதறி பார்க்கும் போதே,

“பேசி துரத்தலை அண்ணி, பேசாம துரத்திட்டார் என்னை!” என நிறுத்தினாள். அந்த குரல் எல்லோரையும் அசைத்தது. “என்னவோ அவங்க தங்கையோட வீட்டுக்காரர் என்னவோ பேசிட்டாராம். அதனால வீட்ல இருக்குறவங்க கூட பேசாம வெக்காம பணம் பணம்ன்னு ஓடி ஓடி என்னை ஓட வெச்சிட்டார்!” என வர்ஷினி கணமான குரலில் சொல்ல..

அங்கே அப்படியே மௌனம் ஆட்கொண்டது..

எல்லாம் உங்களால் தான் என்ற குற்றச்சாட்டு வர்ஷினியின் பார்வையில் இல்லை. ஆனால் எல்லாம் உங்களுக்காகத்தான் என்ற செய்தி இருந்தது.. அதில் சிறு கர்வம் கூட.. பார் என் கணவன் என்னிடம் மட்டுமே தவறுகின்றவன்.. வேறு யாரிடமும் இல்லை, எதிலும் இல்லை என்பது போல!

அமர்ந்திருந்த அனைவரும் ஸ்தம்பித்து அமர்ந்திருந்தனர்.  

பத்துவின் பக்கம் அமர்ந்திருந்த வர்ஷினி அவனின் கை பிடித்துக் கொண்டாள், “இது நான் குற்றம் சொல்றதுக்காக சொல்லலை.. நீங்க தெரிஞ்சிக்கணும்னு சொன்னேன்.. என்னோட பின்னாடி சுத்திட்டு இருந்தாலும், என்னோட நினைவுகள் அதிகமா இருந்தாலும், இவரோட செயல் எல்லாம் எப்பவும் உங்களுக்காகவும், குடும்பத்துக்காகவும் தான்!”

“இவர் ஒரு வார்த்தை சொன்னா நீங்க இப்படி அழுவீங்களா, என்ன நம்ம கிட்ட தப்புன்னு யோசிக்க மாட்டீங்களா”

“அப்பான்றவர் மட்டும் தான் என்னோட ரொம்ப க்ளோஸ்.. அப்போ அப்பா இறந்த சமயம் தான் பத்துண்ணா இவரைப் பத்தி தெரியாம பிரச்சனை பண்ணிட்டாங்க.. அதோட பாதிப்பு எனக்கு மட்டும் தான்.. நான் இன்னும் தனியாயிட்டேன்” என்றவளின் கண்களில் அடக்க முயன்றும் கண்ணீர் வந்தது..

“எங்களோட வீட்ல எல்லாம் அப்பா அப்பா அப்பா தான்.. எல்லோரும் என்ன அவர் சொல்வாங்களோ அதை மட்டும் தான் செய்வாங்க.. அதனால் தனியா எதையும் யோசிச்சதும் இல்லை செஞ்சதும் இல்லை.. அதோட தாக்கம் இன்னிவரைக்கும் இருக்கு!”

“அதனால் தான் பெரியம்மா என்ன செய்யறதுன்னு தெரியாம தடுமாறிடறாங்க!”

“எனக்கு இந்த நிமிஷம் வாழ்க்கையில் அதிகமான கம்ப்ளைன்ட்ஸ் இல்லை.. திரும்ப ஏதாவது பேசி அதை அதிகமாக்க வேண்டாம்.. யாருமே.. நானுமே! நீங்களுமே!” என பொதுவாக எல்லோரையும் பார்த்து சொன்னவள்..

“சாரி பத்துண்ணா, உங்களை ப்ளேம் பண்ணனும்னு சொல்லலை!” என,

பத்து அமைதியாகத் தான் இருந்தான்.. “விடு, பரவாயில்லை” என்ற வார்த்தை எல்லாம் வரவில்லை.. ஆனால் முகம் மிகவும் இறுகி விட்டது.. முகத்தில் சொல்லொணா ஒரு துயரம் கூட ..

“அண்ணா, ப்ளீஸ்! விட்டுடுங்க!” என்று வர்ஷினி தான் மீண்டும் மீண்டும் சொல்லும் படி ஆகிற்று..

இப்பொது ரஞ்சனியை முறைத்து தான்  எல்லோரும் பார்த்தனர்.. “ஐயோ” என ஒடுங்கி தான் அமர்ந்திருந்தாள்.. பத்துவின் முகம் பார்க்கவே பயமாக இருந்தது .. மீண்டும் கண்களில் நீர் துளிர்த்தது..

“நான் வேணும்னு ஒன்னும் கேட்கலை, விளையாட்டு போல தான் பேசினேன்” என்று விளக்கம் சொன்னாலும் சூழ்நிலை இலகுவாக வில்லை.. 

“அண்ணா, ப்ளீஸ், சரியாகிடு! பாரு, அண்ணி அழறாங்க!” என வர்ஷினி  சொல்ல,

“அவ அழறா, என்னால முடியலை, அவ்வளவு தான்!” என்றான் பத்து..

“திரும்ப எது யாருக்குள்ள நடந்தாலும், எங்களுக்கு தான் அது திரும்பும்! ப்ளீஸ், அண்ணா, விட்டுடு!” என வர்ஷினி மீண்டும் மீண்டும் சொல்ல..

பிடித்திருந்த வர்ஷினியின் கையை தட்டிக் கொடுத்தவன்.. “விட்டுட்டேன்” என்றான் ஒரு சோர்வான புன்னகையோடு..

ஒரு இயலாமையோடு வர்ஷினி ஈஸ்வரைப் பார்க்க, “விடு, சரியாகிடுவான்” என்பது போல பாவனை காட்டியவன்,

“பத்து, ரொம்ப நேரம் ஆகிடுச்சு! இன்னும் வீட்டுக்கு போக வேண்டாம்.. இங்கயே இருந்துக்கங்க” என,

 “இல்லை கிளம்பறோம்” என பத்து எழ,

“பத்துண்ணா, நீங்க இங்க தான் இருக்கீங்க” என்று பேசிக் கொண்டே ரிஷியை கையினில் வர்ஷினி வாங்கிக் கொள்ள..

அந்த செய்கையில் புன்னகை மலர.. “இதென்ன என் பையனை தூக்கிட்டா இருப்பேனா?” என பத்து கேட்க,

“இருக்க மாட்டியா அப்போ, நீ!” என வர்ஷினி முகத்தை சுருக்க..

“நீ சொன்னாலே இருப்பேன்னு சொல்ல வந்தேன்” என,

“அப்போ நான் சொன்னா இருக்க மாட்டியா பத்து?” என ஈஸ்வர் கேட்க..

“ஐயோ, புருஷனும் பொண்டாட்டியும் ஒரு பார்ம்ல தான் இருக்கீங்க போல” என பத்துவே சொல்லி, “நான் இருக்கிறேன்! இருக்கிறேன்! இருக்கிறேன்! போதுமா!” என..

“ஹப்பா உங்கண்ணன் லாயர், கோர்ட் போறான்னு இப்போ தான் ப்ரூவ் பண்றான்!” என ஈஸ்வர் கிண்டல் செய்ய…  

வர்ஷினியின் அருகில் வந்த பத்து, “ஐ கேர் ஃபார் யு பாப்பா.. எனக்கு அதை எப்படி காட்றதுன்னு தெரியாம இருக்கலாம்.. நடுவுல நம்மளும் கொஞ்சம் முட்டிக்கிட்டோம்.. ஆனாலும் நீ எனக்கு ரொம்ப முக்கியம் பாப்பா.. எங்களை விட்டு தள்ளி போயிடாதே!”  என தோளோடு அணைத்துக் கொண்டான்..

“பத்துண்ணா!!!!!!” என வர்ஷினி சிரித்தவள்.. “நான் எப்போவும் இதை இல்லைன்னு சொல்லவே இல்லை.. உங்களை நான் கண்டிப்பா குறை சொல்லலை விடுங்க, அண்ட் நான் யாரையுமே எதுக்குமே தேடறது இல்லை.. இனிமே பழகிக்கறேன்!” என்றவள்,

கமலம்மாவிடம் வந்து “பெரியம்மா நோ வொர்ரீஸ்.. தள்ளி தான் நின்னேன், விட்டு விலகி எல்லாம் போகலை, விலகவும் மாட்டேன், சரியா!” என குழந்தைக்கு சொல்வது போல சொன்னவள்..    

ரஞ்சனியை பார்த்து “அண்ணி, இவன் தூங்கிட்டான்!” என ரிஷியை காட்டியவள்.. “நான் என்னோட படுக்க வெச்சிக்கட்டுமா” என,

“தூக்கத்துல உருள மாட்டியே” என ரஞ்சனி கேட்க,

“நான் தூங்கின பிறகு நடக்கறது, எனக்கு எப்படித் தெரியும்” .. அவள் கேட்ட பாவனையில் எல்லோர் முகத்திலும் புன்னகை எட்டிப் பார்த்தது. 

ஈஸ்வரை ரஞ்சனி பார்க்க.. “உன் பையனை யாரும் இடிக்க மாட்டாங்க, சரியா!” என வாக்குறுதி கொடுக்கவும் ..

“ம்ம், சரி!” என்றாள் ரஞ்சனி.. சரணை எப்போதும் ஈஸ்வர் கூட படுக்க வைத்துக் கொள்வது தானே..

ஆனாலும் மலர் வர்ஷினிக்கு ஒரு கிளாஸ் எடுக்க.. “மா, நான் பார்த்துக்குவேன்!” என்றான் ஈஸ்வர் அவரிடமும்.  

வீட்டு ஆளாக எல்லோருக்கும் படுக்க ஆயத்தங்கள் செய்து கொடுத்து ஈஸ்வர் அவனின் ரூம் உள்ளே வந்த போது.. ரிஷியை படுக்க வைத்து அருகில் படுத்திருந்த வர்ஷினி குழந்தையின் கன்னத்தை, கால்களை, கைகளை என வருடிக் கொடுத்து கொண்டிருக்க..  

“அவனை எழுப்பிடாதே” என ஈஸ்வர் சொல்ல..

வார்த்தையாடாமல் உடனே சரி என்றவள், அப்போதும் ரிஷியின் கன்னத்தில் மெலிதாக முத்தமிட்டு விலகி.. “இங்கே வாங்க” என்று ஈஸ்வரை அழைக்க, அருகில் வந்தவனிடம்.. “குனி” என்பது போல சைகை காட்ட.. குனிந்தவனின் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டாள்..

குழந்தை காட்டி “அவனை இப்படி கிஸ் பண்ணனும் போல இருந்தது.. முழிச்சிக்குவான் இல்லையா?” என..

“ஈஸ்வரை இப்படி உனக்கு கிஸ் பண்ணத் தோணாதா?” என ஈஸ்வர் பாவம் போலக் கேட்க..

“ஈஸ்வரை எல்லாம் இப்படிக் கிஸ் பண்ணத் தோணாது!” என்று சொல்லியபடியே, “வர்ஷினி தூங்கிட்டா” என கண்களை மூடி திரும்பி படுத்துக் கொள்ள..

சில நொடி அமைதி.. பின் மெதுவாக அவளின் காதில் “வேற எப்படி கிஸ் பண்ணத் தோணும்” என்ற குரல் கிசுகிசுப்பாய் கேட்க.. காது மடலில் பட்டும் படாமல் அந்த இதழ்களின் உராய்தல் உடல் உள்ளம் என அனைத்தையும் வர்ஷினிக்கு சிலிர்க்க வைத்தது.

கண்களை திறக்காமலேயே “அதெல்லாம் பண்ணும் போது தெரிஞ்சிக்கங்க” என சொல்லிய வர்ஷினியின் குரல் அப்படி கொஞ்சியது.. அதை அனுபவித்தபடியே அவளின் கன்னத்தில் அழுத்தமாக முத்தம் பதித்து விலகினான்.                 

 பத்து அமைதியாய் படுத்திருக்க.. ரஞ்சனி அவனின் முகத்தை பார்ப்பதும், பின்பு திரும்புவதுமாக இருந்தாள்.. அவள் பார்ப்பது உணர்ந்ததாலும் பத்து திரும்பவில்லை.. சிறிது நேரம் அமர்ந்து அமர்ந்து பார்த்தவள்.. ஒரு இயலாமையில் படுத்துக் கொள்ள.. சில நொடிகளில் பத்துவின் இறுகிய அணைப்பில் இருந்தாள்..

அந்த அணைப்பு ஒரு அழுகையைக் கொடுக்க.. அவனை கட்டிக் கொண்டு கண்ணீர் விட்டாள்.

“என்ன உனக்கு பிரச்சனை? ஏன் இப்படி பண்ற?”  

“என்ன பண்ணினேன்?” என்றாள் கலக்கமாக.

“எனக்கு சொல்லத் தெரியலை.. பிசினெஸ் தவிர்த்து எல்லா விஷயத்திலையும் நீ தான் இப்போ கைட் பண்ற.. அப்படி இருக்கும் போது வர்ஷினின்னு வந்துட்டா மட்டும் எதுவும் ஏன் சொல்றது இல்லை, எல்லாம் தப்பாகுது!” என,

“நான் ஒன்னும் பண்ணலை” என,

“ஒன்னும் பண்ணலைன்னா என்கிட்டே நீ வந்திருப்ப. ஏன் இப்படி அப்செட்டா இருக்கீங்கன்னு கேட்டிருப்ப? நான் உன்னை அடிச்சிருக்கேன்.. பணத்துக்காக தான் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டன்னு மோசமா திட்டியிருக்கேன்.. ஆனாலும் நீ அதை ஒரு கட்டத்துல மன்னிச்சு, என்னை அரவணைச்சிக்கிட்ட.. அதுக்காக தான் அஸ்வின் உனக்கு பிடிக்காதவன்னு தெரிஞ்சு, அவனோட பாப்பாக்கு நட்புன்னு தெரிஞ்சு.. உனக்காக நான் அவ கிட்ட கூட பேசாம இருந்தேன்! என்னோட மனைவிக்கு நான் செய்ய வேண்டிய கடமை அது”

“இங்க அவ வர்றவரைக்குமே பேசலை.. எங்கப்பா ஸ்தானத்துல இருந்து பார்த்துக்க வேண்டிய கடமைப் பட்டவன். ஆனாலும் கடமைல இருந்து தவறினேன்.. உனக்காக மட்டும் தான்!”

“நான் மனைவிக்காகன்னு தங்கையைக் கூட விட்டுடேன்.. ஆனா உங்கண்ணன், அவங்க ரெண்டு பேரும் பிரியற நிலைமை வந்த போதும் உன்னை விடலை!”

“பாப்பா எவ்வளவு கர்வமா நிக்கறா.. நம்மளால நிக்க முடியுதா.. என்னை நீ எவ்வளவு கீழ இறக்கிட்டு இருக்கேன்னு பாரு!”   

“இந்த மாதிரி ஒரு நிலமையில, திரும்ப என் தங்கை எனக்கு முக்கியம்! உன்னால தான் எல்லாம்ன்னு உன்னை விட்டுட்டு போனா, அதை விட முட்டாள் தனம் கிடையாது.. அவ வாழ்க்கையில் ஈஸ்வர்ன்ற மனிதன் தான் முக்கியத்துவம் வாய்ந்தவன்!”   

“ஆனா.. ஒரு அண்ணனா எனக்குரிய இடம் அவ வாழ்க்கையில இருக்கணும் இல்லையா… அதை சிக்கல் ஆக்கிடாதே… எங்கப்பா எங்க வீட்டு சுவர்ல நாங்க புழுதில விளையாண்ட இடத்தை மாட்டி வெச்சிருப்பார்.. இன்னும் நாங்க அதை எடுக்கலை.. உங்க வாழ்க்கை இவளாலதான்னு காட்டிட்டே இருப்பார்!”

“இன்னைக்கு நாம அவளுக்கு என்ன செய்யறோம்.. ஐ பீ எல் டீம் வாங்கற அளவுக்கு அவங்க பெரியாளுங்க, நாம அவங்களுக்கு வாங்கிக் கொடுக்கறது ஒன்னுமே இல்லை.. ஆனா கொடுக்கறதுன்றது ஒரு அன்பின் வெளிப்பாடு இல்லையா?”

“என்னோட ட்ரெஸ்ல இருந்து, அம்மாவோட ட்ரெஸ் எல்லாம் நீ தான் வாங்கற! ஏன் வர்ஷியை மட்டும் மறந்துட்ட? முதல்ல இருந்தே உனக்கு அவளை அவ்வளவா பிடிக்கறது இல்லை! ஏன்?” என…

என்ன சொல்லுவாள்? வர்ஷினியிடம் அவளுக்கு எந்த கோபமுமே கிடையாது! ஆனாலும் ஐஸ்வர்யாவின் இடத்தில அவள் வந்த போது.. அது கொடுத்த சிக்கல்கள் தானே.. ஒரு உண்மை தோழியாய் அது கொடுத்த கசப்புணர்வுகள் தானே.. அப்போதும் அதில் வர்ஷினியின் தவறு எதுவுமே கிடையாது எனத் தெரியும் தான்..

இதில் பத்து… அவன் வர்ஷினியைக் கொண்டு செய்த செயல்கள்.. பின்பு அஸ்வின்.. என வர்ஷினியுடன் அவளை எதுவுமே நெருங்க விட்டதில்லை.. அவ்வளவே!

“என்னன்னு எனக்கு சொல்லலைன்னா போகுது.. நீ எதுவும் செய்யலைன்னா கூடப் போகுது.. ஆனா என்ன செய்யணும்னு சொல்லிடு, நாங்க செஞ்சிடுவோம்.. எனக்கு நிஜமாவே தெரியலை.. எனக்கே என்னை நினைச்சா ரொம்ப அசிங்கமா இருக்கு”

“முரளிக்கு இந்த மாதிரி கம்ப்ளைன்ட்ஸ் இருக்காது! ஏன்னா அவன் எப்பவுமே பாப்பாவோட க்ளோஸ் கிடையாது, தள்ளி தான் நிற்பான்.. அதுவுமில்லாம ஷாலினி அண்ணி, இப்ப அவங்களுக்கு டெர்ம் டேட் பக்கம் வந்துடுச்சு.. அதனால் அவங்க ரொம்ப சோர்வா இருக்காங்க, எதையும் கவனிக்கறது இல்லை, எங்கேயும் வர்றது இல்லை.. குழந்தை பிறந்த பிறகு ஒரு நாள் வர்ஷினியை பார்த்தாக் கூட அவளை சரி பண்ணிடுவாங்க!” என பேசி முடித்தவன் அப்படியே படுத்திருக்க..

அழுது முடித்தவள், அவனின் முகம் பார்த்து, “எனக்கே எங்கே தப்பு பண்றேன்னு தெரியலை.. முடிஞ்ச அளவு சரி பண்றேன்!” என்றாள் உண்மையாக.

“தட்ஸ் மை கேர்ள்” என பத்து சொல்லி.. “எதாவது அவளை கேள்வி கேட்டு சீண்டிடாதே.. அடுத்த நிமிஷம் தப்பெல்லாம் நம்மை நோக்கி தான் வரும்.. அதனால் அவ ரொம்ப வருத்தப்படுவா.. நம்மால அவளுக்கு எந்த வருத்தமும் இருக்கக் கூட.. உங்கண்ணா மாதிரி பேசாம இருந்தாலும் பார்த்து பார்த்து உனக்கு செய்வாங்க, அப்படி எல்லாம் எனக்கு வராது!”

“ஆனா குட்டி வர்ஷினியா இருந்த போது இருந்தே அவளை எனக்கு ரொம்பப் பிடிக்கும்.. அடுத்து எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தா அவளை மாதிரி தான் எனக்கு வேணும்..”

“அவளோட என்னோட உறவு என்னைக்கும் நல்லா இருக்கணும்! அது உன் கைல தான் இருக்கு.. அவளை உன் அண்ணாவோட மனைவியா பார்க்காதே! என் தங்கையா தான் நீ பார்க்கணும்! அதே மாதிரி நீ அவ கிட்ட ஈஸ்வரோட தங்கையா நடந்துக்கக் கூடாது! என்னோட மனைவியா தான் நடந்துக்கணும்!” எனச் சொல்ல..

“ம்ம்” என்ற ரஞ்சனியின் குரல் ஸ்திரமாய் தான் ஒலித்தது..

“என்னோட வெற்றியும் தோல்வியும் உன்கிட்ட தான் ரஞ்சனி” என சொல்லிக் கொண்டே பத்து ரஞ்சனியை இன்னும் நெருக்கமாய் அணைத்துக்கொள்ள..

“தோற்க விடமாட்டேன்!” என்பது போல அவளும் அவனை இறுக்கமாய் அணைத்துக் கொண்டாள்.

நாம் தோற்றாலும் அவள் ஜெயிக்க வேண்டும் என்பதே ஆட்டத்தின் நியதி!

Advertisement