Advertisement

அத்தியாயம் தொண்ணூறு :

கல்லுக்குள்ளே சிற்பம் தூங்கிக் கிடக்கும்

சின்ன உளி தட்டி தட்டி எழுப்பும்

அது கல்லின் தோல்வியா இல்லை

உளியின் வெற்றியா

யார் சொல்வதோ யார் சொல்வதோ

பதில் யார் சொல்வதோ

 

ஈஸ்வர் வீட்டின் வேலையை மீண்டும் ஆரம்பித்து இருந்தான்.. வர்ஷினி கேட்டது போல எல்லாம் உள்ளடக்கி அவளின் ஸ்டுடியோவும் வைக்க தோதாக. பிரமாண்டமாய் அங்கே வீட்டின் முன் பகுதியில் அமைக்க, அதற்குத் தக்கபடி மாற்றங்களை செய்து கொண்டிருந்தான். 

தி கான்கரர்ஸ்.. இந்த அவர்களின் ஐ பீ எல் டீம் பேரிலேயே அவர்களின் டிஸ்டரிபியுஷன் கம்பனி ஆரம்பித்தது.. முரளிக்கும் பத்துவிற்கும் இன்னும் நம்ப முடியவில்லை.. “எங்களோட ஏன் பார்ட்னர்ஷிப்” என ஈஸ்வரிடம் கேட்க..

“என்கிட்டே கேட்டா அவ கிட்ட கேளுங்க?” என..

“அதெல்லாம் முடியாது, முடியாது, அவளுக்கு கோபம் வந்துட்டா” என தயங்கித் தயங்கி இருவருமே பேச..  

“அட, உங்கள் இருவரின் வீரத்தை நாம் மெச்சினோம்!” என்று ஈஸ்வர் வசனம் பேசினான்.

“டேய்” என்று முரளி கத்த, அதை கூட செய்ய முடியாது பத்து பார்த்து நின்றான்.

“போங்கடா, போங்கடா, சொல்றதை செய்ங்க! அவ்வளவு தான்.. நீங்க மூணு பேரும் தான் பார்ட்னர்ஸ்” என முடித்து விட..

இதோ கோலாகல ஆரம்பம்.. ஆனால் மிக சிறிய அளவில்… “எப்படி அந்த ஃபாரின் கம்பனி நம்மளோட டை அப்க்கு ஒத்துகிட்டாங்க” என்ற கேள்வியும் எழுப்ப,  

“நான் அந்தப் படத்துல வொர்க் பண்ணியிருக்கேன் அண்ணா!” என விளக்கம் கொடுத்தாள்.

அதற்கு பிறகே குடும்பத்தில் எல்லோருக்கும் அந்த விஷயம் தெரிய.. “நீ ஏன் சொல்லவேயில்லை” என எல்லோரும் கேட்க.. “நான் தான் சஸ்பென்ஸ் ஆ இருக்கட்டும்னு சொல்ல வேண்டாம்னு சொல்லிட்டேன்” என்று ஈஸ்வர் சமாளித்தான்.  

வேறு என்ன கேட்பார்கள்?

“ஆமாம், எத்தனை நாளைக்கு நீங்க என்னை நல்ல பொண்ணா ப்ரொஜக்ட் பண்ணுவீங்க?” என்று அவனிடம் ரகசியம் பேசினாள்.

“நீ எப்போ நல்ல பொண்ணு இல்லாம போன?” என்று அவளை முறைத்தவன்.. “நீ எல்லோர் கூடவும் தள்ளி நிக்கறது அப்படி ஒன்னும் யாருக்கும் தெரிய வேண்டாம், வாயை திறந்தே” என மிரட்ட..

அதன் பிறகு அவள் ஏன் வாயை திறக்கப் போகிறாள்..

அவளின் நண்பர்களும் வந்திருக்க.. அவர்களுக்கும் ஆச்சர்யம்.. “சொல்லவேயில்லை” என்று நிஷா குறைபட..

“நம்ம சக்சஸ் நம்மளே டமாரம் அடிப்போமா!” என்றாள்.

ஆனாலும் அவர்களுக்குத் தெரியும்.. இது மிகப் பெரிய ஸ்டார் வேல்யு கொண்ட ஒரு விஷயம் என..

“கங்க்ராட்ஸ்” என்றவர்கள்.. “எங்களுக்கு ஏதாவது ஆப்பர்சுனிட்டி வந்தா, எங்களையும் சேர்த்துக்கோ” என சொல்லவும் மறக்கவில்லை..

இப்படியாக அவளின் மற்றொரு பயணமும் துவங்கியது..

“இவ பாருங்க சொல்லவேயில்லை, எத்தனை தடவை நம்ம பார்த்துட்டோம்.. இந்த விஸ்வா கூட வாயைத் திறக்கலை.. அவளோட சக்சஸ் நாம செலப்ரேட் பண்ணாம யாரு பண்ணுவா?” என்று ரஞ்சனி குறைபட..

“அவர் கிட்டயே சொன்னாலோ என்னவோ” என பத்து மனதினில் நினைத்துக் கொண்டவன் வெளியில் சொல்லவில்லை..

உண்மையில் வந்த நாளே பேச்சு வாக்கினில் சொல்லிவிட்டாள் ஈஸ்வரிடம்.. பார்க்கும் வரை இருந்த தயக்கங்கள் எல்லாம் பார்த்த பிறகு எதோ ஒரு வகையில் இல்லை.. கணவனிடம் சொன்னாளா எனத் தெரியாது ஆனால் வர்ஷினியின் விஷயங்கள் ஈஸ்வருக்கு தெரியாதது என எதுவும் கிடையாது..

இந்த ஆரம்ப விழா எல்லாம் முடிந்து மாலை ஈஸ்வரோடு அவனின் வீட்டிற்கு சென்றாள்..

வந்ததில் இருந்து செல்லவேயில்லை.. இப்போது தான் சென்றனர்.. அடுத்த நாள் ரஞ்சனியின் மகனுக்கு மொட்டை அடித்து காது குத்தப் போகிறார்கள்.. அதற்கு அதிகாலையிலேயே கிளம்ப வேண்டும்.. அதனால் அங்கேயே இருந்து கொள்ளலாம் என வந்து விட்டனர்..     

பாட்டி “உனக்கு வீட்டுக்கு வர இவ்வளவு நாளா?” என கோபிக்க..

“அவ வர்றேன்னு தான் சொன்னா பாட்டி. நான் தான் கூட்டிட்டு வரலை” என்று ஈஸ்வர் சொல்ல..

“அடேய் நிறுத்துடா, என்கிட்டயே வா!” என டைலாக் பேசினார் சௌந்தரி பாட்டி.  

“அவர் அப்படித் தான் பாட்டி! சும்மா சொல்றார்! நான் தான் வரலை!” என்று வர்ஷினி சொல்ல…

“ஏன் வரலை?” என்று அவர் நேரடியாகக் கேட்க..

“நீங்கல்லாம் ஏன் போனன்னு கேள்வி கேட்டா? அதுக்கு பயந்து தான் வரலை”  

“இப்போ மட்டும் கேட்க மாட்டோமா”  

“அப்போ எனக்கு கொஞ்சம் தைரியம் கம்மி, இப்போ கேளுங்க பார்ப்போம்”  

“சொல்லு ஏன் போன?”  

“அதெல்லாம் சொல்ல முடியாதுன்னு சொல்ற அளவுக்கு தைரியம் வந்துடுச்சு”

“ஓஹ், ரொம்ப தைரியம் வந்துடுச்சோ.. உன் வீட்டுக்காரன் குடுத்தானா?” என பாட்டி கிண்டல் செய்ய,  

“தெரியலையே” என சொல்லி வர்ஷினி சிரித்தாள்.

“என்னவோ போடிம்மா.. கணவன் மனைவின்னா சண்டை வராம இருக்காது, அதுக்காக பிரிஞ்சு போறது எதுக்குமே தீர்வு கிடையாது” என்றவர்..

“இனிமேலாவது ஒழுங்கா அவளோட குடும்ப நடத்துடா” என்று ஈஸ்வரை அதட்ட..

“நானா?” என்று அவன் பார்க்க..

“பின்ன, நீதான்! நீ அவளோட சரியா நடந்திருந்தா அவ ஏன் போறா.. தப்பு உன் மேல தான் இருக்கும்.. இங்க இருந்த கொஞ்ச நாள் நான் பார்த்திருக்கேண்டா, அவ உன்னை மட்டுமே பார்த்திருப்பா.. நீ என்ன சொன்னாலும் செய்வா.. நீ உன் தங்கைக்காகன்னு சம்பாரிக்க கிளம்பி, இவளை விட்டிருப்ப” என அன்றைய சூழ்நிலையை சரியாகக் கணிக்க.

“அப்படி எல்லாம் இல்லை பாட்டி, எனக்கு பக்குவம் கொஞ்சம் கம்மி.. ஹாஸ்டல்லயே வளர்ந்துட்டேனா உறவுகளோட அருமை தெரியலை” என வர்ஷினி சொல்ல,

“அப்படி சொல்லாதடி குழந்தே.. உனக்கு அதை சரியா இவங்க புரிய வெச்சிருக்க மாட்டாங்க” என சௌந்தரி பாட்டி சொல்லவும்,  

என்ன முயன்றும் வர்ஷினியின் கண்களில் நீர் துளிர்த்தது…

ஈஸ்வர் மெளனமாக தான் அமர்ந்திருந்தான்.. கடந்த காலங்கள் திரும்பி வாராதே!

“ஜம்முனு சீக்கிரம் குழந்தை பெத்துக்கோ.. மனசுல இருக்கிற சஞ்சலம் எல்லாம் ஓடிப் போய்டும்.. தாய்மை எல்லாம் மறக்க வைக்கும்” என்றார் அந்த முதிய பெண்மணி..

“ம்ம்” என்பது போலத் தலையாட்டினாள்.. பின்பு உணவு உண்ணும் போது மலர் சமையலறை போகவும், கூட சென்றாள்..

“நீ போ வர்ஷி, நான் செய்யறேன்!” என,

“பரவாயில்லை அத்தை, நான் உங்களோட இருக்கேன்” எனச் சொல்லி.. ஈஸ்வர் உணவருந்தும் போது அவளையும் அழைக்க.. “நான் அத்தையோட சாப்பிட்டுக்கறேன்” என்று சொல்லிவிட..

அதை போல இருவரும் தான் அமர்ந்து உணவருந்தினர்.. மலர் வாய் ஓயாமல் பேச.. அவருக்கு பதில் கொடுத்தபடி இவளும் உண்ண.. தூரமாக அமர்ந்திருந்தாலும் இவர்களை தான் பார்த்துக் கொண்டிருந்தான் ஈஸ்வர்..

மனதிற்கு அவ்வளவு நிறைவாய் இருந்தது.. நன்றாக வந்திருக்க வேண்டிய உறவுகள் எல்லாம் தன்னால் தான் கெட்டது என்ற எண்ணம் தோன்றியது.

ஈஸ்வரும் வர்ஷினியும் இருந்ததினால் யாரும் உறங்கப் போகவில்லை.. சரணும் ப்ரணவியும் கூட அங்கே தான் சுற்றிக் கொண்டிருந்தனர்..  

“தூங்கவே இவ்வளவு நேரம் பண்ணினா, சீக்கிரம் எப்போ எழறது? போங்க! போங்க!” என்று பாட்டி அதட்ட..

ஈஸ்வருடன் அந்த அறைக்குள் பல வருடங்களுக்கு பிறகு நுழைகிறாள்..

ஏதோ நினைவுகள்.. மனதிலே..

“நிறைய மிஸ் பண்ணிட்டோம் லைஃப்ல” என்றான் ஈஸ்வர் பெருமூச்சோடு.. கூடவே “என்னால.. சாரி!” என்றும் சொல்ல..

“நீங்க மட்டுமில்லை, நானும் தான்.. ரெண்டு பேருக்குமே அப்போ ஒருத்தரை ஒருத்தர் ஹேண்டில் பண்ண தெரியலை”  

“இல்லை, உன் மேல தப்பில்லை, நான் தான்! உன்னோட வயசுக்கு உனக்கு அப்போ இருந்த பக்குவமே அதிகம் வர்ஷ்.. நான் தான், எனக்கு தான் எல்லாம் தெரியும்ன்ற கர்வம், என்னோட மமதை, என்னோட கோபம்,  என்னோட இழப்பு, என்னோட துரோகம், எல்லாம் மீறின எனக்கு உன் மேல இருந்த ஆசை!”

“உன்னை ஒரு வழியாக்கிட்டேன், சாரி!” என்றான் உள்ளார்ந்து.

“இன்னும் நாம எத்தனை நாள் இதையே பேசிட்டு இருப்போம்?” என்றாள் கண்களில் கலக்கத்தோடு.

“இந்த நினைவுகளை மறந்து போற அளவுக்கு நமக்குள்ள சில நிகழ்வுகள் நடக்கற வரை” என்று சொல்ல..

புரிந்தவளாக.. தூங்குவதற்கு ஆயதங்கள் செய்ய..

“ரொம்ப கஷ்டப் படுத்தரேனா வர்ஷ்?” என கேட்டுக் கொண்டே பின் புறம் வந்து அணைத்துக் கொண்டான்.

பதில் எதுவும் சொல்லாத போதும், அவனின் கைகளை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள், அப்படி எதுவும் இல்லை என்பது போல!

அந்த இதமான மனநிலை, அடுத்த நாள் கோவிலுக்கு செல்லும் போதும், அங்கே குழந்தைக்கு மொட்டை அடித்து குளிக்க வைத்து காது குத்தும் வரையிலும் இருக்க.. எல்லோரிடமும் கலகலப்பாக பேசாவிட்டாலும் பேசிக் கொண்டு தான் இருந்தாள்..

இரு குடும்பமும் எப்போதும் பிரித்துப் பார்க்கப் படாததால், ஜகனின் மடியில் அமர்த்தி தான் ரிஷிக்கு காது குத்தினர்.. மலரும், நமஷிவாயமும் தான் சீரும் கொடுக்க.. சீர் வரிசையை இறக்கி விட்டனர் ஈஸ்வரின் வீட்டினர்.. 

அங்கே ஈஸ்வருக்கோ வர்ஷினிக்கோ தனியாக வேலை இல்லை.. முரளி மட்டுமே வந்திருந்தான் நிஷாந்துடன்.. நேற்றும் அப்படித்தான். ஷாலினி களைப்பாக உணருகிறேன் என்று சொன்னதால்.. கால் வீக்கமுமே அவளுக்கு அதிகமாக இருக்க.. அதோட இன்னும் சில உடல் உபாதைகள்.  அவளை அழைத்து வரவில்லை..     

வர்ஷினி முகத்திலும் ஒரு அமைதி.. இவள் எங்கே இருந்தாலோ, அங்கே தான் கமலம்மாவும் இருந்தார்.. அவளுமே விலக வெல்லாம் இல்லை. அவருடன் அவ்வப் போது பேசியபடி இருக்க..,

சமயம் கிடைத்த போது “சந்தோஷமா இருக்கியா பாப்பா?” என..

“சந்தோஷமா இருக்கேன்ம்மா” என பதில் சொல்ல.. அவர் அப்போதும் விடாமல் பார்க்க,  

“அச்சோ, நிஜமா” என்று அவரை தோளோடு அணைத்துக் கொள்ள… எல்லோரும் அவர்களைப் பார்த்தனர்… “நான் வந்ததுல இருந்து எல்லோரும் என்னை மியுசியம் டிக்கட் மாதிரி பார்க்கறாங்க, எப்போ நான் என்ன பிரச்சனை பண்ணுவனோன்னு” என,

“சே, சே, என்ன பாப்பா நீ”

“எனக்கு அப்போ அப்போ தோணுதும்மா” என சிரிக்க, எல்லோரும் அவர்களை தான் பார்த்து இருந்தனர்.

“முரளி, எல்லோரும் எங்களை ஏன் பார்க்கறீங்க” என அதட்ட… அப்போதும் அவர்களை தான் பார்த்தனர், பின்னே கமலம்மா அதட்டி பேசுவதா? என்பது போல..

வர்ஷினி சிரித்துக் கொண்டே சில நொடி ஈஸ்வரை பார்க்க.. “கிளம்பலாமா வர்ஷி?” என்றான்.. அவனுக்குள் சில கோபம்.

“இல்லை, இன்னும் கொஞ்சம் நேரம் இருக்கலாம்”  

அருகில் வந்தவன் “உனக்கு அன்னீசியா இருந்தா நாம போகலாம்” என்றான்.

“வேண்டாம்” என மறுத்து இருந்தவள்.. “எனக்குள்ள காம்ப்ளெக்ஸ் டெவலப் ஆகிடுசோ, எல்லோரும் என்னையே பார்க்கற ஒரு ஃபீல்” என அவனிடம் ரகசியம் பேசினாள்.

“இல்லை” என்று அவன் தலையசைத்த விதம், “நீ கவனிக்கப் படுகிறாய்” என்று சொல்ல,

“ஏன்?” என,

“எப்பவுமே நீ அப்படித் தான் வர்ஷ்” என்றான்.  

“எல்லோரும் எங்க ரிலேடிவ்ஸ் தான், ஆனாலும் நான் ஏன் தள்ளி நிக்கறேன்?” என்றும் கேட்க…

“அது ஒரு பீரியட்ல அப்படித் தான். பொண்ணுங்களுக்கு அப்பா வீடு அன்னியமாகிடும்.. எப்பவும் கூட இருக்குறவங்களுக்கே அப்படி.. நீ இதுல அதிக நாள் இருந்தது இல்லை” என்றும் சொல்ல,

“என்ன விஸ்வா இங்க வந்து ரகசியம்?” என்றபடி ரஞ்சனி வர..

“அது ஒண்ணுமில்லை, அத்தை சீர்ன்னு நான் எதுவும் செய்ய வேண்டாமான்னு கேட்டுட்டு இருக்கா? உன்னோட அப்பா வீட்டு முறை தானே செஞ்சோம், இவ அத்தை கூட இல்லையா” என நீட்டி முழக்கினான்.  

ஈஸ்வரின் குரலில் ஏதோ இருக்க, ரஞ்சனி அவனின் முகத்தை பார்த்தாள்.. “அத்தைக்கு இவங்க என்ன செஞ்சாங்க? அதெல்லாம் ஒன்னும் தேவையில்லைன்னு சொல்லிட்டேன்” என..

என்ன குற்றச்சாட்டு இது என ரஞ்சனி விழி விரித்துப் பார்த்தாள். “நீயென்ன இன்னும் சின்னப் பொண்ணா? உனக்குத் தெரியாதா? இந்த வீட்ல இருக்குறவங்களுக்கு என்ன பழக்கம் தெரியும் தெரியாதுன்னு எனக்குத் தெரியாது”

“இவ இங்க வந்து இத்தனை நாள் ஆச்சு? வீட்டுக்கு வா வான்னு கூப்பிடறீங்க.. இத்தனை நாள்ல அவளுக்கு சின்னதா ஏதாவது கிஃப்ட்? எதுவுமே கிடையாது! வெளிநாட்ல இருந்தாலும் பொண்ணுக்கு செய்யற முறை மாறிடுமா?”
“இங்க இருக்குற அப்பா அம்மா வீட்ல ஒரு விஷேசம்ன்னா அவளுக்கு செய்யாம விட்டுடுவாங்களா? ஒன்னு பார்சல் அனுப்புவாங்க, இல்லை இங்க வரும் போது உடுத்திக்கட்டும்னு ஏதாவது எடுக்க மாட்டாங்க? செய்ய மாட்டங்க? என்னவோ அவளோட சண்டைன்னு நீ பேசவே இல்லை? இதுதான் சாக்குன்னு அவளோட அண்ணனுங்களும் பேசலை? அதனால் எதுவும் செய்யலை” என அவளிடம் பொரிந்தான்..

வர்ஷினியின் தாத்தா பார்த்து இருக்க அவரையும் விட்டேனா என்று “என்னவோ தாத்தா? எல்லாம் எனக்கு தெரியும்னு பேசறீங்க, எப்படி உங்களுக்கு இதெல்லாம் தெரியாமப் போகுதுன்னு தெரியலை, வீட்டையே உங்களால பார்க்க முடியலை, இதுல நாட்டை எங்க பார்ப்பீங்க?” என்று நேரடியாக அவருக்கு மட்டும் கேட்குமாறு சொன்னான்.  

மலர் எதோ பேச வர.. “மா, நான் உங்க பொண்ணு கிட்ட பேசலை.. இவளோட வீட்டு ஆளுங்க கிட்ட தான் பேசறேன்.. அதை ஞாபகம் வைங்க” என்று அவரையும் வார்த்தையால் கடித்தான்.      

அவர்களிடமாவது பேசி விட்டான்.. முரளியையும் பத்துவையும் “நீங்க எல்லாம் சுத்த வேஸ்ட்டுடா” என்ற பார்வை பார்த்தான்.

வர்ஷினி எதுவும் பேசவில்லை, அமைதியாக இருக்க.. “வா போகலாம்” என்று அவன் நடக்க, பின்னோடு சென்றாள்..   

ஈஸ்வருக்கு சற்று கோபம் வந்ததில் இருந்தே.. என்னவோ ஈஸ்வரின் மனைவியாகத் தான் அவள் பார்க்கப் படுகிறாள், அந்த வீட்டுப் பெண்ணாக குறைவு என்பது போல தான்..

காரில் போகும் போது, “என்னை கம்ப்ளைன்ட் பண்ணக் கூடாது சொல்லி, நீங்க ஏன் இப்போ பண்றீங்க?” என்றவள்.. “இப்போ எல்லோரும் என்ன சொல்வாங்க தெரியுமா?” என்று நிறுத்த..  

“உன்னை மாதிரி நானும் மாறிட்டேன் சொல்வாங்க” என சிரித்தவன்… “யாரும் நமக்கு செய்ய வேண்டாம், எல்லோருக்கும் நம்ம செய்வேம் வர்ஷ். ஆனாலும் முறைன்னு ஒன்னு இருக்கு இல்லையா.. இந்த ரஞ்சிக்கு ரொம்ப அலட்சியம்” என தங்கையை திட்ட ஆரம்பித்தான்.

“ஐயோ விடுங்க, நீங்க இன்னைக்குப் பேசியிருக்க கூடாது. வேற எப்பவாவது சொல்லியிருக்கலாம்” என..

“ப்ச்” என சலித்தவன்.. “எதுக்குமே உன்னை முன்ன நிறுத்தவேயில்லை.. உங்கப்பா இருந்தா அவர் இப்படி நடக்க விடுவாரான்றது வேற.. இப்படி இவங்களே உன்னை நடத்த மாட்டாங்க.. என்னவோ போ” 

“வேணும்னு செய்ய மாட்டாங்க, அவங்களுக்குத் தெரியலை.. எல்லோரும் உங்களை மாதிரியே இருப்பாங்களா?” என கிண்டல் செய்ய,    

அதை காதில் வாங்காதவன் “உனக்கு ஏதாவது வேலையிருக்கா?” என

“இப்போதைக்கு எதுவும் இல்லை” என்று வர்ஷினி சொல்லிவிட,

“நாம எங்கேயாவது போகலாமா வர்ஷ்?”  

“எங்கே?” என்றவளிடம்.. “யாருமில்லாத இடத்துக்கு!” என்று கண்ணடித்தவன்.. காரை விரட்ட.. அது சென்று நின்ற இடம்.. முன்பு ஒரு முறை குழந்தைகளோடு அழைத்து வந்த இடம்..

இவன் காரை பார்த்ததுமே ஓடி வந்தார்கள் சில இளைஞர்கள்.. “எப்படியிருக்கீங்க தல?” என்று ஆர்வமாகப் பேசினார்கள்.

“நல்லாயிருக்கேன், நீங்க எப்படி இருக்கீங்க?” என ஆரம்பித்து அவர்களிடம் சில நிமிடங்கள் பேச.. ஈஸ்வரையே ரசித்து பார்த்திருந்தாள்.

ஈஸ்வர் அதனை கவனிக்கவேயில்லை.. அவன் பாட்டிற்கு இளைஞர்களுடன் அளவாலாவிக் கொண்டிருந்தான்.

இருவர் அவனிற்கு படகை ரெடி செய்ய ஓடினர்.

ஒரு இளைஞன் தான் “தல, அண்ணி உங்களை ரொம்ப நேரமா பார்த்துட்டு இருக்காங்க? ஏதாவது வேணுமோ என்னவோ?” என எடுத்துக் கொடுக்க..

திரும்பி பார்த்து “ஏதாவது வேண்டுமா?” என்று சைகையில் கேட்க,

“ஒன்றுமில்லை, நீங்க பாருங்க” என்று அவளும் சைகையிலேயே சொல்ல..

பார்க்கவே கவிதையாய் இருந்தது.. ஆனாலும் வர்ஷினி பார்வையைத் திருப்பவேயில்லை..

படகு ரெடி ஆனதும் அவர்கள் சொல்ல.. கிளம்பியவன்.. நடந்து கொண்டே “என்ன நீ என்னை அப்படிப் பார்க்கற?” என,

“ஏன் பார்த்தா என்ன? பார்க்கக் கூடாதா?” என பதில் கேள்வி கேட்டாள்.

“பாரு, பாரு, எவ்வளவு வேணா பாரு!” என சொல்லிக் கொண்டே போட் அருகில் வந்து ஏறி அவளுக்கும் கை கொடுக்க.. அவளும் ஏற, அவர்களுடன் இரு இளைஞர்களும் ஏறிக் கொண்டனர்… அவர்கள் படகை செலுத்த..

“இந்த போட் வாங்க அண்ணா தான் அண்ணி காசு குடுத்தார்.. இப்போ என்கிட்டே இந்த மாதிரி இன்னும் ரெண்டு போட் இருக்கு” என ஆர்வமாக சொல்ல,

“இதை விட இன்னும் பெருசா வாங்க என் வாழ்த்துக்கள்” என வர்ஷினி உடனே சொல்ல, “தேங்க்ஸ் அண்ணி! தேங்க்ஸ்! தேங்க்ஸ்!” என்றான் அவன் முகம் மலர்ந்து..

பின்பு இவர்கள் மேலே ஏறிக் கொள்ள.. அவர்கள் கீழே படகை செலுத்த ஆரம்பித்தனர்..

மாலை நான்கு மணி வெயில் தாழ்ந்து இருந்தது.. சிறிது தூரம் வந்த வந்த பிறகு கண்ணுக்கு எட்டிய வரை கடலின் நீல நிறம் மட்டுமே தெரிந்தது.

வானமும் அன்று நீல நிறத்திலேயே இருக்க.. கடலும் வானமும் எங்கே சேர்கிறது என்றே தெரியாத ஒரு காட்சி..

“லவ்லி இல்லை” என்று ஈஸ்வர் சொல்ல ….

ஈஸ்வர் அதனை பார்த்திருக்க, வர்ஷினி இன்னும் அவனை தான் பார்த்திருந்தாள்.. பதில் இல்லாது போக பார்வையை திருப்பினான். விடாது அவனையே பார்த்திருந்த வர்ஷினி கண்களில் பட..

“அச்சோ, என்ன நீ என்னை இவ்வளவு சைட் அடிக்கற?” என,

“நீங்க தான் அடிக்கலை, நானாவது அடிக்கலாம்னு?” என சொல்ல..

“நான் அடிக்கறது இல்லையா? இது உனக்கே ஓவரா தெரியலை?” என்று நெருங்கி நின்று கொண்டான்..

அவனின் கண்களை சட்டென்று தன் கைகளால் மூடி விட்டவள்.. “என்னோட புடவை கலர் சொல்லுங்க?” என,

இதனை ஈஸ்வர் எதிர்பார்க்கவில்லை.. சற்று யோசித்து நின்று.. “ஞாபகம் வரலை” என்றான் பரிதாபமாக.   

“இதுதான் நீங்க சைட் அடிச்ச லட்சணம்” என சுனங்கியவள்.. கைகளை எடுத்த நொடி.. அவளின் புடவை தலைப்பை அவனின் முகத்தின் மீது போட..

ஈஸ்வரின் கண்கள் தானாக மூடி அதை வாசம் பிடித்தது.. அந்த வாசத்தில் அவளின் வாசத்தை தேடியது.. பின்பு விழி விரித்து அதன் நிறத்தை பார்க்க முற்பட.. அது தெரியவேயில்லை.. நீலமாக இருக்கக் கூடும் என அனுமானித்து.. அதனையே சொல்ல..          

“உன்னோட கண்ணோட கலர்” என சொல்லிக் கொண்டே புடவையை விலக்கி தன் கழுத்தில் சுற்றிக் கொண்டு அவளின் கண்களை பார்த்தான்.  

 “ஹப்பா, ஒரு வழியா என் புடவையைப் பார்த்துட்டீங்க, ஆனா அப்போக் கூட என்னைப் பார்க்கலை” என்று கிண்டல் மொழி பேச,

“காலையிலிருந்து நாம எங்கே ஃப்ரீ” என அவளை இடையோடு அணைத்துப் பிடித்தான்.   

“நாம இல்லை, நீங்க.. என்ன ஞாபகத்துல இருந்தீங்க? ஒரே யோசனை” என்று திருத்தியவள், “பார்த்து பார்த்து மேட்ச் பண்ணினேன் எல்லாம். நீங்க பார்க்கவேயில்லை” என்று குறைபட..

இடையை அணைத்து இருந்தவன்.. இறுக்கத்தை அதிகரித்து.. “எனக்கு உன் கண்ணை பார்த்துட்டா, வேற எதையுமே பார்க்கத் தோணாது!” என்று உண்மையை உரைக்க..

ஈஸ்வரின் முகத்தை பார்த்தவாரே அவனின் கண்களோடு தன் நீல நிறக் கண்களை கலக்க விட்டவள், “என்னை பார்த்த நாள்ல இருந்து, என்னை பத்தி என்ன நினைச்சீங்க, அது நல்லதா இருந்தாலும் கெட்டதா இருந்தாலும் எனக்கு தெரியணும்! நீங்க கண்டிப்பா சொல்லணும்! அதுவும் என்கிட்டே அப்படி ஏன் பிஹேவ் பண்ணுனீங்க சொல்லணும்! ஐஸ்வர்யாவை விட்டு ஏன் வந்தீங்க, எல்லாம் மறைக்காம சொல்லணும்!” என்றாள். கண்களும் பிடிவாதத்தை காட்டியது, குரலிலும் கட்டாயமாக நீ சொல்லியே ஆக வேண்டும் என்ற கட்டளை இருந்தது.

“சொல்றதை பத்தி ஒண்ணுமில்லை, நீ ஹர்ட் ஆனா?”

“சொல்லுங்க, ஹர்ட் ஆனேனா இல்லையான்னு சொல்றேன்” என்றபடி நின்றவாக்கிலேயே அவனின் நெஞ்சினில் முகத்தை புதைத்துக் கொண்டாள்.

சொல்ல ஆரம்பித்தான், அவனின் காதல் கதையை எதையும் மறைக்காமல்.. “அவளின் கண்களோடு இருந்த மூச்சு முட்டுதல்.. உடலோடு இருந்த மோகம்.. அது கொடுத்த தாகம்.. வர்ஷினியோடு அவனின் செய்கை.. அது கொடுத்த தாக்கம்..  ஐஸ்வர்யாவிற்கு செய்த துரோகம்.. பைனான்சிற்காக பணத்தின் பின் ஓடியது.. பின்பு அவளை மணமுடித்தது.. அதன் பின்னான அவனின் செயல்கள் அவளோடு.. வேண்டும் வேண்டும் என்ற உணர்வு.. தீராத மோகங்களும் தாகங்களும்..    பின் ரஞ்சனிக்காக ஓடியது.. வர்ஷினியின் மோகத்தில் இருந்து வெளியே வர துடித்தது.. அதனால் வாழ்க்கையை சிதைத்து கொண்டது” என அத்தனையும்.. எதனையும் விடவில்லை.  

சொல்லி முடித்ததுமே.. அவன் அணைப்பில் இருந்த படியே அவனின் முகத்தை நிமிர்ந்து பார்த்தவள் “இப்போ அது போச்சா?” என்றாள்.

“எது?” என்றான் புரியாமல்..

“உங்க மோகமும் தாகமும்” என்று வாய்விட்டே சொல்ல..

அணைப்பை இறுக்கி உடலோடு உடலை முழுதாக உராய விட்டவன்.. “இல்லை! இல்லை! இல்லவே இல்லை! நான் இந்த உலகத்துல இருக்குற வரை அது போகாது.. வயசானாலும்!” என்று வர்ஷினியின் கண்களை பார்த்துக் கொண்டே சொன்னவன்..      

“ஆனா அதை அடக்கத் தெரிஞ்சிக்கிட்டேன்… ஆசைகளுக்கும் தேவைகளுக்கும் அதுக்கான நேரங்கள் இருக்குது.. இப்போ இந்த நிமிஷம் என்னால ஒன்னுமே முடியலை” என்றவன்.. சில நொடி நின்று.. வர்ஷினியின் இதழ்களில் முத்தமிட.. அவளின் உடல் ஈஸ்வரின் கைகளில் தோய்ந்தது!

வர்ஷினியாக தன் இதழ்களை பிரித்துக் கொள்ளும் வரை விடவில்லை..  மீண்டும் அவனுள் முகத்தை புதைத்தக் கொள்ள..   

“அந்த நேரத்துக்காக வெயிட் பண்ணிட்டே இருக்கேன்” என்று நிறுத்தியவன்..

“இந்த மோகமும் தாபமும் உன்கிட்ட மட்டும் தான் பியுட்டி.. உன் கிட்ட மட்டும் தான்.. இது இப்போ நீ என் மனைவின்றதால சொல்லலை.. அப்படி நீ என் வாழ்க்கையில வராம இருந்திருந்தாக் கூட உன் கிட்ட மட்டும் தான் இருந்திருக்கும். அது நிறைவேறி இருந்தாலும் சரி இல்லைன்னாலும் சரி! அதுல மட்டும் உனக்கு எப்பவும் எந்த சந்தேகமும் வரவே கூடாது” என்றான் கிளர்ந்து.

முகத்தை நிமிர்த்தி பேசிக் கொண்டிருந்தவனின் இதழோரத்தில் இதழ் பதித்து விலகியவள் “வராது” என சொல்ல…

மலர்ந்த ஈஸ்வரின் முகம்.. “உன்கிட்ட சொல்லிட்டு வந்தேன் இல்லையா அப்போ.. இந்த மாதிரி தான் சிங்கப்பூர்ல இருக்கும் போது.. அங்க இருக்குற தீவுல ரெண்டு நாள் கூட தனியா கடலுக்கு நடுவுல இருப்பேன்.. இந்த நீல வானத்திலயும் இந்த நீல கடல்லையும் உன்னை தேடிக்கிட்டே..”

“இந்த கடல் என்னை வா வான்னு கூப்பிடும்.. குதிச்சு ஆழமா உள்ள போய்டுவேன்.. அங்க பார்க்கிறதெல்லாம் உன்னை மாதிரியே.. உன் கண் மாதிரியே தோணும்! மீனை துரத்துவேன்! அந்த மீன் காணமப் போயிடும், எந்த மீன் அதுன்னு ரொம்ப நேரம் அங்க இருக்குற மீனையெல்லாம் விரட்டுவேன்” என்று ஈஸ்வர் சொல்லிக் கொண்டே வர..

ஒரு மாதிரி அவனின் வர்ணனைகளை பிரமித்து கேட்டுக் கொண்டே இருந்தாள்.. மனதின் எங்கோ ஒரு மூலையில் இருந்த தனிமையும், வாழ்க்கையின் மீது வர்ஷினிக்கு இருந்த குறைகளும் அவளை விட்டு ஓடியே போயின!

மலர்கள் கேட்டேன்
வனமே தந்தனை!
தண்ணீர் கேட்டேன்
அமிர்தம் தந்தனை!

எதை நான் கேட்பின்
எதை நான் கேட்பின்?
உனையே தருவாய்!

காட்டில் தொலைந்தேன்
வழியாய் வந்தனை!
இருளில் தொலைந்தேன்
ஒளியாய் வந்தனை!

எதனில் தொலைந்தால்
எதனில் தொலைந்தால்?
நீயே வருவாய்!

பள்ளம் வீழ்ந்தேன்
சிகரம் சேர்தனை!
வெள்ளம் வீழ்ந்தேன்
கரையில் சேர்ந்தனை!


எதனில் வீழ்ந்தால்
எதனில் வீழ்ந்தால்?
உன்னிடம் சேர்ப்பாய்!

Advertisement