Advertisement

அத்தியாயம் எண்பத்தி ஆறு :

பூபாளமே.. கூடாதெனும்
வானம் உண்டோ சொல்…

வீட்டிற்கு வந்துமே ஐஸ்வர்யாவிற்கு மனதே சமன்படவில்லை.. தன்னைச் சுற்றி என்ன என்னவோ நடந்திருக்கின்றது, தனக்கு எதுவுமே தெரியவில்லை என்ற ஆதங்கம் அதிகமாக இருந்தது..

காதல் என்று ஒருவன் தன் பின்னால் சுற்றியதும் தெரியவில்லை.. அண்ணனையும் தெரியவில்லை.. அவன் செய்த செயல்களும் தெரியவில்லை.. தோழியையும் தெரியவில்லை.. அவளுடைய கடினமான நேரங்களும் தெரியவில்லை.. தன்னை விட்டுவிட்டால் என தோன்றியிருந்த நினைவு தவறு எனப் புரிந்தது..

எல்லாம் விட காதல் சொல்லி நீ வேண்டாம் போ என்று சொல்லிப் போனவனை நினைத்து, அவனுக்கு இணையாக ஒருவன் வேண்டும் என்று காத்திருப்பது.. “இவ்வளவு முட்டாளா நீ உன் வாழ்கையில்” என்று தான் தோன்றியது..

ஆதங்கம் இருந்த போதும், மனது எதோ ஒரு வகையில் சமனப்பட்டு இருந்தது..

யாரோ ஒருவனுக்காக உன்னுடைய ஐந்து வருட வாழ்க்கையை வீணாக்கியிருக்கிறாய் நீ என அவளை அவளே திட்டிக் கொண்டாள்..

என்னவோ மனதினில் ஒரு புது உத்வேகம் கூட.. சஞ்சயின் அம்மாவிற்கு  அழைத்தவள்.. “மேம் நான் ஜாப் ரிசைன் பண்ணலை.. நாளைக்கு இருந்து வரட்டுமா?” என..

அவருக்கு இத்தனை நாளாக இருந்த டென்ஷனில் “என்னம்மா விளையாடுறீங்களா?” எனக் கத்தியே விட்டார் அவர்..

“சாரி மேம், எனக்கு நான் வராம இவ்வளவு லாஸ் ஆகும்னு தெரியாது” என,

“என்ன? என்ன லாஸ்? பணம் ஒரு பிரச்சனையே கிடையாது.. படிச்சா மட்டும் டாக்டர் கிடையாது, மனசுக்குள்ள அந்த ஃபீல் வரணும்.. நாலு பேஷன்ட் ஃபாலோ பண்ற நீ.. அவங்களோட ஓவம்.. ஸ்பெர்ம்ன்னு எல்லாம் ப்ரிசர்வ் பண்ணியிருக்கோம்.. அது இல்லாம ரெண்டு பேஷன்ட்க்கு இப்போ ரெண்டாவது மாசம்.. வந்த உடனே சக்சஸ் பண்ணி காட்டியிருக்க.. நீ பாட்டுக்கு போறேன்னு சொல்லிட்டுப் போயிட்டா.. இவங்களை யார் பார்ப்பா.. இவங்களுக்கு யார் பதில் சொல்லுவா?”   

“நான் பெத்து வெச்சிருக்குற ரெண்டு மடையன்களும் உன்கிட்ட என்னை பேச விட மாட்டேங்கறாங்க.. உயிர்மா இது? உயிரோட விளையாடுவியா?”

“அப்படி என்ன? ஏதாவது டிஃபிகல்டின்னா என்கிட்ட சொல்லியிருக்கலாம்.. உங்களை நம்பி பேஷண்ட்ஸ் வரலை.. என்னை நம்பி தான் வர்றாங்க.. என்னோட இத்தனை வருஷ ப்ராக்டிஸ்க்கு ஒரு அர்த்தம் இல்லாம பண்ணிட்டீங்க!” என பொரிந்தவர் ஃபோனை வைத்து விட..

அவருடைய வார்த்தைகள் சம்மட்டியாய் அடிக்க.. உடனே எழுந்தாள்.. அஸ்வின் இவளை வீட்டில் விட்டு எங்கேயோ வெளியில் கிளம்பிக் கொண்டிருக்க..

“என்னை ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போறியா?” என, எப்போதும் இப்படிக் கேட்கவே மாட்டாள்..

“ஓகே சொல்லவா?” என அஸ்வின் ஆர்வமாகக் கேட்க,

“ம்ம்ம், உன் தலை! கூட்டிட்டுப் போடா!” என்றாள் எரிச்சலாக. இத்தனை நாட்கள் அண்ணன் துணை தேடியதே இல்லை.. இப்போது மனது தேடியது. 

அஸ்வின் உடனே அழைத்துக் கொண்டு போகவும்.. லக்ஷ்மியின் கேபின் சென்றவள்.. “நீ இங்கேயே இரு” என்று அஸ்வினிடம் சொல்லி..உள்ளே சென்று “சாரி மேம்.. இனிமே இப்படிப் பண்ண மாட்டேன்” என்று சிறு பிள்ளையாய் மன்னிப்பை வேண்டி நிற்க..

அவளை எதிர்பாராதவர் ஆச்சர்யப்பட்டு “நான் இப்போ பேஷன்ட் பார்த்துட்டு இருக்கேன்” என்றார்.

“நீங்க பேஷன்ட் பாருங்க, நான் உங்களைப் பார்க்கிறேன்!” என,

அவருக்கு சிரிப்பே வந்துவிட்டது.. “இதென்ன விளையாட்டு பேஷன்ட் பார்க்கும் போது, வெயிட் பண்ணு போ! அவங்களுக்கு ப்ரைவசி வேணும்!”  

சிரிப்புடன் திரும்பியவள் “சாரி” என்று அந்த பேஷண்டிடம் சொல்லி வெளியே போய் அஸ்வினுடன் நின்று கொள்ள..

அங்கே இருந்த அட்டன்டரும் சிஸ்டர்களும்.. “உட்காருங்க மேம்” என்று ஆளாளுக்குச் சொல்ல,

“அட, நீ பெரிய டாக்டர் தான் போல!” என்று அஸ்வின் சொல்லவும்..

“பின்ன இல்லையா? உன் மனைவிக்கு நான் தான் பிரசவம் பார்க்கணும்! அந்த பயம் இருக்கணும்!” என,

“நானா? கல்யாணமா?” என்று சிரித்தவன்.. “முதல்ல நீ பண்ணு நீ பெத்துக்கோ?” என அண்ணனாக அதட்ட..

அதற்குள் வெளியே வந்த நர்ஸ்.. “மேம் உங்களை டெலிவரி ரூம் போகச் சொன்னாங்க.. பார்த்துட்டு இருக்கிறதாம், அவங்க வந்து உங்களை ரிலீவ் பண்றாங்களாம்”

“நானே பார்த்துக்கறேன், நான் தேவைன்னா கூப்பிடறேன்னு சொல்லுங்க” என்றவள், “நீ போ அஸ்வின்” என..

“நீ எப்படி வருவ?”

“இங்க ஹாஸ்பிடல் கார் இருக்கும்” என்றவளிடம்,

“சரி” என்பது போலத் தலையாட்டினாலும்.. “ஏதாவதுன்னா எப்போன்னாலும் கூப்பிடு” எனச் சொல்லி சென்று விட்டான்..

சஞ்சயிற்கும் தெரியாது, விதார்த்திற்கும் தெரியாது.. ஆனால் ஐஸ்வர்யா திரும்பவும் ஹாஸ்பிடல் சேர்ந்து விட்டாள்.

வீட்டிற்கு வந்து உண்ணாமல் திரும்ப வேலையில் வர்ஷினி உட்கார்ந்து விட.. ஈஸ்வருக்கு என்னவோ அன்றைக்கு பசித்தது.. அவன் உண்டு உறங்கச் சென்று விட்டான்.. பேசியே சில நாட்கள் ஆகிவிட்டது..

உறங்கியவன் எழுந்து பார்த்தால் மணி பன்னிரெண்டை நெருங்க.. வர்ஷினி இன்னும் ரூமின் உள் வரவில்லை..

சென்று பார்க்க அப்படியே வேலை பார்த்துக் கொண்டிருந்தாள்.. “எதுக்கு இப்போ இப்படிப் பேய் மாதிரி வேலை பார்க்கிறா? என்ன அவசியம்? இன்னும் சாப்பிடக் கூட இல்லை!” என்ற நினைப்பு வர..

கோபமும் பொங்க.. “இன்னும் சாப்பிடாம என்ன பண்ற நீ? முதல்ல இதை ஷட் டவுன் பண்ணு” என அதட்டினான்.

திரும்பி ஒரு பார்வை பார்த்தவள் திரும்ப வேலையில் மூழ்க..

“என்ன திமிரா? பேசிட்டே இருக்கேன் நீ முகத்தை திருப்புற” என்று வேகமாக அருகில் வர..

“வேற என்ன பண்றது?” என்று பதிலுக்கு கத்தியவள், “நீ தானே பேச வேண்டாம் சொன்ன.. அப்போ நான் என்ன பண்ணட்டும்? நான் உன்கிட்ட பேசுவேன், நீ என்கிட்டே பேசுன்னு கெஞ்ச சொல்றியா?” என வர்ஷினி ஈஸ்வரை பார்த்த பார்வை.. விட்டால் அடித்து விடுவாள் போல இருந்தது..

அந்த நீல நிறக் கண்களில், அவ்வளவு ஆவேசம், கோபம், எல்லாம் தெரிய, “இப்போ சண்டை வேண்டாம், முதல்ல சாப்பிடு!” என,

“சாப்பிடறது என்னோட இஷ்டம்! அதை நீங்க ஒன்னும் டிக்டேட் பண்ண வேண்டாம்!”

“எதுக்கு உனக்கு இவ்வளவு திமிர்?”  

“ஏன்? ஏன் இருக்கக் கூடாது? அப்படி தான் இருக்கும்! எல்லாம் உன்னோட இஷ்டம் கிடையாது!”  

“என்ன? என்ன என்னோட இஷ்டம்?”

“என்ன? என்ன இல்லை? முதல் நாள் என்னைப் பார்த்ததுல இருந்து என்னைப் பார்த்துட்டு இருக்க நீ, அதை பத்துண்ணா கூட நோட் பண்ணியிருக்காங்க! ஆனா நான் பேச வந்தப்போ எவ்வளவு அலட்சியமா என்னை நீ ட்ரீட் பண்ணின.. அது உன் இஷ்டம்!”

“அதுக்கப்புறமும் முடியாம என்கிட்டே உரிமை எடுத்த.. அது உன் இஷ்டம்!”

“அப்புறம் என்னை கல்யாணத்துக்கு ஃபோர்ஸ் பண்ணின அது உன் இஷ்டம்!”

“கல்யாணமும் பண்ணிக்கிட்ட அது உன் இஷ்டம்!”

“கல்யாணம் செஞ்சு என்னை உன் இஷ்டத்துக்கு ஆட்டி வெச்ச.. அது உன் இஷ்டம்!”

“என்னை வீட்டை விட்டு கூட்டிட்டு போன.. அது இஷ்டம்!”

“திரும்ப என் கூட டைம் ஸ்பென்ட் பண்ணாம, வெக்காம, என் பக்கத்துல கூட வராம இருந்த.. அதுவும் உன் இஷ்டம்!

“உன் லவ் ஸ்டோரி சொல்லி என்னை உன்னை விட்டு போக வெச்ச.. அதுவும் உன் இஷ்டம்!”

“அப்புறம் உன்கிட்ட வந்தா தான் எனக்கு டைவர்ஸ் குடுப்பேன்னு சொல்லி வர வெச்ச.. அது உன் இஷ்டம்!”

 “இப்போ வந்த பிறகு என்னவோ நான் உன்னை டார்ச்சர் பண்ற ஃபீல் எல்லோருக்கும் கொண்டு வர்ற.. அதுவும் உன் இஷ்டம்”

“இப்போ என்னை பேசாதன்னு சொல்லிட்ட.. அதுவும் உன் இஷ்டம்!”  

“சொல்லு! என் இஷ்டப்படி நான் ஏதாவது உன்கிட்ட நடந்துக்கிட்டேனா, சொல்லு!” என ஆவேசமாகப் பேச,       

செய்தது எல்லாம் அவள் லிஸ்ட் போடவும்.. அவள் இது போல என்ன செய்தால் என்பதே ஈஸ்வருக்கு ஞாபகத்தில் வரவில்லை.. எதுவும் இருக்கின்றதா என்று தெரியவில்லை!  

“இப்போ என்ன பண்ணனும், அய்யய்யோ நான் பண்ணினது தப்புன்னு உன் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்கறேன்னு சொல்லணுமா? என்ன எதிர்பார்க்கிற நீ?” என,

“ஏன் கேட்டா என்ன? கெஞ்சினா என்ன? என்ன குறைஞ்சு போய்டுவ நீ.. ஆனா அப்படியெல்லாம் செஞ்சிடாத.. எனக்கு உன்னைப் பிடிக்கலை” என அவனை கடந்து போக..

கை பிடித்து நிறுத்தினான்.. என்ன என்பது போல பார்த்தவளிடம்.. “சாரி, பேசாதேன்னு சொன்னது தப்பு தான்!” என,

“பேசாதேன்னு சொன்னது தப்பு கிடையாது! ஒரு கோபத்துல எல்லோரும் சொல்றது தான். ஆனா திரும்ப நீ வந்து என்கிட்டே பேசினியா?” எனக் கேட்க.. அப்போது அந்த குரலில் ஒரு அடக்கப் பட்ட துக்கம்.  

இப்போது வாயடைத்து போனான்..

அடுத்த நிமிடம் சீறினாள், “என்ன நீ அவ்வளவு பெரிய இவனா? நீ செய்யறது எல்லாம் செய்வ, ஆனா சாரி சொல்லிட்டு என் பின்னாடி வந்தா.. ஐ லவ் மை ஹஸ்பன்ட்னு நான் உன் பின்னாடி வந்துடணுமா..  உனக்கு பிடிச்சா நான் உன் பின்னாடி வந்துடணுமா?” எனக் கத்த..

“வராத! எனக்கு பிடிச்சிருக்குன்னு வரவேண்டாம்!. உனக்கு பிடிச்சிருக்கு தானே, அதுக்காக வா.. எனக்காக வராத, உனக்காக வா!” என,

இதை ஈஸ்வர் சொல்லச் சொல்ல, அடுத்த நிமிடம் “பிடிச்சிருந்தாலும் சொல்ல மாட்டேன், போ!” என முகம் அழுகைக்கு மாறியது.

“சொல்லாதே, சொல்லவே வேண்டாம்! ஏன்னா அதுதான் எனக்குத் தெரியுமே!” என்றான் இதமாக.

“ஏய், என்ன நக்கலா? தொலைச்சிருவேன் போடா?” எனச் சொல்ல..

“அதுதான் வாழ்க்கையே தொலைச்சிட்டு இருக்கியே இன்னும் என்ன தொலைக்கணும்?”

“நீ முதல்ல உன்னோட கர்வத்தை தொலை, என்ன நான் டார்ச்சர் பண்ணினாலும் என்னவோ எனக்காக எல்லாம் பார்த்து செய்யற மாதிரி எல்லோரையும் நினைக்க வைக்கறயே அதை தொலை!” என்றாள் ஆங்காரமாக..

“நீ நினைச்சிருந்தா ஒரு நிமிஷத்துல நான் செஞ்சதை சொல்லியிருந்தா.. என்னோட கர்வம் தொலைஞ்சு போயிருக்கும்! நீ அது தொலையாம காப்பாத்தி விட்டிட்டு இப்போ தொலை தொலைன்னா எங்க போய்  தொலைப்பேன்!” என,

அதற்கு பதிலே சொல்லாமல் “நீ எதுக்கு இப்படி செய்யற, எனக்காகவா? கிடையாது, நெவர்! உனக்கு நான் வேணும்னு தானே போடா!” எனச் சொல்லி மீண்டும் லேப்பிடம் போக வேண்டி, என்னோட நேரத்தை வேஸ்ட் பண்ணாதே, எனக்கு வேலையிருக்கு” எனச் சொல்ல..

அவள் கையை விடாதவன், “எனக்கு உன்மேல அக்கறை இல்லைன்னு சொல்யா வர்ஷ்” என,

“இருக்கு நினைச்சு தான் நான் உன்னைக் கல்யாணம் பண்ணினேன்.. அப்போ என் மனசு முழுக்க நீங்க.. உங்களோட என் வாழ்க்கை மட்டும் தான்! நீங்க என்ன சொன்னாலும் செஞ்சேன்.. உங்க முகம் பார்த்து நடக்க தான் விரும்பினேன், பழகினேன்! ஆனா எல்லாம் மாறிப் போச்சு.. எனக்கு வேலையிருக்கு” என கையினை உருவ..

“ஏன் எதுக்கு இப்படி பேய் மாதிரி உழைக்கிற?”  

“என்னோட ஐடென்டிடிக்காக.. பணம் இங்கே விஷயமில்லை.. சேன்ஸ் வரும் போது அதை யூஸ் பண்ணிக்கணும்.. அதை விட்டு நம்ம இஷ்டத்துக்கு வேலை செஞ்சா சேன்ஸ் வராது.. இன்னும் கொஞ்சம் உயரம் போன பிறகு அப்படி டைம் ஃபிக்ஸ் செஞ்சு பண்ணலாம்.. இப்போ முடியாது!” என்றவள்,

“இது கூட நீங்க சொன்னதுனால தான்! நம்ம ஹனிமூன் ட்ரிப் அப்போ சொன்னீங்கன்னு நினைக்கறேன்.. உனக்கு உங்க அப்பா, அம்மா, என்னோட, யார் ஐடண்டிடியும் வேனாடாம்னு! அதுக்கு தான் வொர்க் பண்றேன்.. அதை நான் அடையறதுல யாரோட உதவியும் வேண்டாம்!” எனச் சொல்லி கம்ப்யுடர் முன் அமர..  

“எனக்கு நம்ம ஹனிமூன் டைம்ல என்ன பேசினோம்னு ஞாபகமேயில்லை, வேற சிலது தான் ஞாபகம் இருக்கு பியுட்டி!” என்றான் தன்னால் மெதுவாக பெருமூச்சோடு.  

ஈஸ்வர் பேசின வார்த்தை வர்ஷினியின் காதுகளை சென்று அடையவே இல்லை, அதனால் அவள் திரும்பவும் இல்லை.. 

சிறிது நேரம் நின்று பார்த்தவன் திரும்பச் செல்ல.. அவன் செல்லும் அரவம் உணர்ந்து “போடா” என அவளின் வாய் முணுமுணுத்தது..

ஆனால் வர்ஷினி போடா என்றதற்கு நேர் மாறாக சில நிமிடத்தில் திரும்ப வந்தவன்.. உணவைக் கையில் வைத்திருக்க.. “சாப்பிட்டிட்டு வேலை பார்” என..

“ப்ச்” என சலித்தவள், “மறந்துடுவேன், என்னோட ஐடியா  திரும்ப எனக்கு ஞாபகம் வராது, நானே செம பசில இருக்கேன், என்னை டெம்ப்ட் பண்ணாதீங்க!” என கடுப்பாகச் சொல்ல,

“வாயைத் திற” என அவளின் வாயின் அருகில் சப்பாத்தியைக் கொண்டு போக.. சில நொடி அவனை பார்த்தாள்.. “ஷ், அப்புறம் சண்டை போடலாம் திற” என அதட்ட

“சண்டையே தான் போட்டுட்டு இருப்போமா?” என்றவளின் குரலில் ஆதங்கம் நன்றாகவே வெளிப்பட..

அதையும் விட கண்களில் கண்ணீர் மழுக்கென்று நின்றது.. ஈஸ்வர் பார்க்க பார்க்க வர்ஷினி அவனை பதிலுக்கு பார்க்க பார்க்க அந்த நீல நிறக் கண்கள் நீரில் நிரம்பி அது இறங்க.. 

“நீ அழற, என்னால அழ முடியலை, அவ்வளவு தான் அழட்டுமா?” என

“வேண்டாம், வேண்டாம், உன் முகம் அப்புறம் பார்க்கவே சகிக்காது” என,

வர்ஷினி சொன்ன விதத்தில் இருவர் முகத்திலுமே புன்னகை எட்டிப் பார்த்தது.

தாமரை மேலே நீர்த்துளி போல்
தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன
நண்பர்கள் போலே வாழ்வதற்கு
மாலையும் மேளமும் தேவையென்ன?

    

 

Advertisement