Advertisement

அத்தியாயம் எண்பத்தி மூன்று :

நில் என்று சொன்னால் மனம் நின்றா போகும்!

சூழ்நிலை பத்துவிற்கு ஈஸ்வரோடு எப்படி என்று தெரியாமலேயே இலகுவாகி விட்டது. 

ரஞ்சனிக்கு அழுகையே வந்து விட்டது.. கண்களில் நீரோடு நிற்க.. அப்போதுதான் அவளை கவனித்த ஈஸ்வர் அவளிடம் சென்றவன்..

“அம்மா, நீ அழுதா சகிக்கவே மாட்ட, அழுதுடாத”  

வேகமாக அருகில் வந்த வர்ஷினி ரிஷிக்காக கை நீட்ட, அவன் அம்மாவின் மீது முகம் புதைக்க.. “ஷ், தூரப் போங்க” என்று ஈஸ்வரை பார்த்து அதட்டினாள் வர்ஷினி.

“என்னை ஏன் திட்டுற” என அவன் கேட்க..

“சும்மா அவங்கம்மாவை அழுக வெச்சா, அவன் எப்படி வருவான். அண்ணி என்னை ஃபிரண்ட் ஆக்குங்க, இல்லை நான் அழுவேன்”  

“அச்சோ, ரஞ்சிஈஈஈஈ” என்று கத்துவது போல நடித்தவன், “அந்தக் கொடுமையில இருந்து எப்படியாவது என்னை காப்பாத்திடு” என்று சொல்ல,

“அய்யே! என்னைக் கிண்டல் பண்ணிட்டீங்களா, தேங்க் யூ” என்று பாவனையாக சிரிப்பது போல முகத்தை வைத்து வர்ஷினி சொல்ல..

“அம்மாடி, இதுக்கு நீ அழுதே இருக்கலாம்” என்று ஈஸ்வரும் சொல்ல..

என்ன முயன்றும் முடியாமல் முகத்தை சுருக்கி ஈஸ்வரின் புஜத்தில் கையினை முஷ்டியாக்கி குத்தினாள்.

இன்னும் நடப்பது எதுவும் நம்ப முடியாத போதும் ரஞ்சனியின் முகம் புன்னகைக்கு மாற, எல்லாம் தூர இருந்து வேடிக்கை பார்த்திருந்தான் பத்து…

என்னவோ ரஞ்சனியின் முகம் அவ்வளவு அழகாகத் தெரிந்தது.. அவளையே தான் பார்த்து இருந்தான்… அவளாகத் தேடி வந்து விட்டாள் என்ற ஒரே காரணத்திற்காக.. எல்லாவற்றையும் முயன்று சரியாக்கி கொண்டாள் என்பது தான் உண்மை..

ரஞ்சனியின் வாழ்க்கையில் சில பிரச்சனைகள் முன் நிறுத்தபடாமல் இருந்தால் அவளோடான தன் திருமணம் என்றுமே சாத்தியமல்ல என்று நன்கு புரிந்தது..

மனைவியாகப் பக்கத்தில் இருந்த போதே அவனால் தானாக அருகில் செல்ல முடியவில்லை.. இதில் தூர இருந்தால் எப்படி முடியும்.. சில மாத வித்தியாசமே இருவருக்கும்.. இப்போது நினைத்தால் சிரிப்பு தான் வந்தது.. “உங்க டேட் ஆஃப் பர்த் என்ன?” என்று அவளிடம் கேட்டது..

வர்ஷினி ரிஷியைக் கையினில் வாங்கிக் கொண்டவள்.. “அண்ணி, பத்துண்ணா உங்களை செமையா சைட் அடிக்கறாங்க” என,

ரஞ்சனிக்கு சிரிப்பு வந்து விட.. அவள் கண்களில் நீரோடு சிரித்தது இன்னும் அழகாகக் காட்டியது…

வர்ஷினியிடம் ஒன்றும் செல்லாமல் பத்துவின் அருகில் சென்று அமர்ந்தவள்.. “வர்ஷி சொல்றா, நீங்க என்னை செமையா சைட் அடிக்கறீங்களாம்! ஹ, ஹ, அவளுக்கு உங்க ரகசியமே தெரியலை.. நீங்க அதை மட்டும் தான் செய்வீங்கன்னு” என,

அதற்கும் பத்து சிரிக்க..

“அச்சோ, வாட் இஸ் திஸ், நான் உங்களைக் கேவலமா திட்டுறேன்! நீங்க ஆக்ஷன்ல இறங்க வேண்டாமா?” என முகத்தை சுளிக்க..  

“ஹ, ஹ, இங்கேயா” என வாய்விட்டு சிரித்தான் பத்து..

ரஞ்சனி முகத்தை சுளிப்பதையும், பத்து சிரிப்பதையும், ஈஸ்வரும் வர்ஷினியும் பார்த்து இருந்தனர்… ஏனோ அதைப் பார்த்த போது இருவர் முகத்திலுமே புன்னகை..

அதற்குள் தாத்தா வர.. வேகமாக ரஞ்சனியிடம் வந்த வர்ஷி, “அண்ணி, வாங்க!” என அழைக்க.. என்னவென்று புரியாத போதும் வர்ஷினியின் பின் செல்ல.. அது  சமையலறை.. அங்கு சென்றதும்..

“அண்ணி, எல்லோருக்கும் என்ன சாப்பிடக் கொடுக்க பாருங்களேன்!” என.. அங்கே இருவர் மட்டுமே சாப்பிடக் கூடிய அளவு உணவுகள்.  

“தோடா, நான் உங்க வீட்டுக்கு வந்திருக்கேன்! நான் சமைக்க மாட்டேன்” என..

“தோடா, நான் எங்க அண்ணியோட அண்ணா வீட்டுக்கு வந்திருக்கேன்” என்று வர்ஷி சொல்ல..

“அட” என்று வர்ஷினியின் பதிலில் அசந்தவள், “சரியான கேடி நீ” என்று அவளின் காதை பிடித்து திருகுவது போல ஆக்ஷன் செய்ய..

“ரிஷிஈஈஈஈ, உங்க அம்மா என்னை அடிக்கறாங்க!” என்று சத்தமாக குழந்தையிடம் புகார் படிக்க.. குழந்தை என்னவென்று தெரியாத போதும் சிரித்தது.

வர்ஷினியின் சத்தம் அவ்வளவு சீரியசாக இருக்க.. பத்துவும் ஈஸ்வரும் விரைந்து வந்தனர் … அங்கே வந்த போதே விளையாடுகிறார்கள் எனப் புரிந்து பார்க்க,

“பாரு விஸ்வா, உன் பொண்டாட்டி என்னை சமைக்க சொல்றா?” என,

ஈஸ்வர் என்ன இது என்பது போல வர்ஷினியைப் பார்க்க,

“நான் என் அண்ணியோட அண்ணா வீட்டுக்கு வந்திருக்கேன், அப்போ யார் என்னைப் பார்க்கணும், என் அண்ணி தானே!” என புதிய தியரி பேச..

“இல்லை, உன் அண்ணியோட அண்ணாவோட மனைவி!” என ஈஸ்வர் சொல்ல,

“ப்ச், கடவுள் தான் உங்களை எல்லாம் காப்பாத்தணும், சரி, நானே செய்யறேன்” என்றவள், ரிஷியிடம் திரும்பி “நாம செய்யலாம் வாடா கண்ணா” என அருகில் இருந்த ஷெல்பை திறக்க..

கை எட்டிய ஒரு கண்டெய்னரை, அடுத்த நிமிடம ரிஷி இழுத்து வெளியே விட..

“ரிஷிஈஈஈ” என வர்ஷினி கத்த கத்த.. அவன் கீழ் இருந்த ஒரு டப்பாவை இழுக்க.. அவன் இழுத்ததால் ஒரு டப்பா தான் விழுந்திருக்கும்.. ஆனால் வர்ஷினி அவனின் கையில் இழுத்ததை எடுத்து சரி செய்கிறேன் என்று அதே இடத்தில் வேகமாக நுழைக்க.. அது எந்த முறையில் அடுக்கி வைக்கப் பட்டு இருந்ததோ எல்லாம் வேகமாக வெளியே விழ..

வர்ஷினி தங்கள் மேல் விழுந்துவிடுமோ என்று குழந்தையுடன் தள்ளி நிற்க, அத்தனையும் சரிந்தது..

மூவருமே அவளைப் பார்த்து முறைத்து நின்றனர்..  

திரும்பி மூவரையும் பார்த்து “சாரி, கொஞ்சம் ஸ்லிப் ஆகிடுச்சு” என,

மூவருமே இப்போது வர்ஷினியைப் பார்த்து, “நீ சமைக்கவே வேண்டாம்! முதல்ல ரிஷியைத் தூக்கிட்டு வெளிய கிளம்பு!” என,

“அது! அதைத் தானே நான் முன்னமே சொன்னேன்! இப்போ யாருக்கு வேலை, உங்களுக்கு தானே!” என்று கெத்தாக சொல்லி வர்ஷினி போக..

ஈஸ்வரும், பத்துவும், உடனே குனிந்து கடமையாய் அந்த டப்பாக்களை எடுத்து அடுக்க ஆரம்பிக்க.. “என்ன கடமையடா இவர்களுடையது.. இவங்க வாழ்க்கையில ரெண்டு பேரும் சேர்ந்து இந்த வேலையெல்லாம் செய்வோம்னு எப்போவாவது நினைச்சு இருப்பாங்களா?” என்று ரஞ்சனி வயிற்றை பிடித்துக் கொண்டு சிரிக்க ஆராம்பித்தாள்..  

“என்ன சிரிக்கற?” என்று ஈஸ்வர் முறைக்க.. பத்து அதற்கும் மேலே “வா! வந்து நீயும் எடு!” என,

“முடியாது” என கிண்டலாய் சிரிக்க..

“சிரிக்கிற நீ!” என அவளின் கை பிடித்து இழுக்க.. இதை எதிர்பாராதவள் அவன் மேலே விழ.. அவன் அதை எதிர்பாராமல் ஈஸ்வர் மேல் விழ..

ஈஸ்வர் எதிர்பாராமல் கீழே அப்படியே சாய்ந்தான்.. அதுவும் அந்த டப்பாக்கள் மேல்! அது ஏக சத்தம் செய்ய..

ஈஸ்வர் கீழே, அவன் மேல் பத்து, அவன் மேல் ரஞ்சனி!

சத்தம் கேட்டு வர்ஷினியும் தாத்தாவும் வர.. இருவருக்குமே சிரிப்பு.. தாத்தா சிரித்துக் கொண்டே இடத்தை விட்டு அகன்று விட.. வர்ஷினி வாய் விட்டு சத்தம் போட்டு சிரித்தவள்.. தாள முடியாமல் ரிஷியை கீழே அமர்த்தி.. அமர்ந்து சிரித்தாள்.

ரஞ்சனி எப்படியோ எழுந்து நின்றவள், அவளும் சிரிக்க.. பத்து ஈஸ்வரின் மேலிருந்து விலகி கீழேயே உருள..

ஈஸ்வர் அப்படியே படுத்திருந்தான்.. பின்னே இருவர் மேலே விழுந்தால்..

ரஞ்சனி பத்துவிற்கு கை கொடுத்து தூக்க, ஒரு வழியாக எழுந்து நின்ற பத்துவிற்கு முகம் கொள்ளாச் சிரிப்பு.. பத்து ஈஸ்வருக்கு கை கொடுக்கப் போக..

“குடுக்காதீங்க! அங்க ஒருத்தி நம்மளை வெச்சு காமெடி செஞ்சிட்டு இருக்கா! அவளே தூக்கி விடட்டும்!” என்றவள், “வாங்க இதுக்கு மேல எனக்கு சமைக்க முடியாது.. ஏதாவது ஆர்டர் பண்ணுவோம்” என்று ரிஷியை தூக்கிப் போக.. பின்னேயே பத்து சென்றான்.

அப்போதும் சிரித்துக் கொண்டிருந்தாள் வர்ஷினி!

“ஹேய், சிரிச்சது போதும்! வந்து தூக்குடி! அதுக்கு அப்புறம் தான் என்ன டேமேஜ்ன்னு தெரியும்!” எனக் கடுப்பாக ஈஸ்வர் சொல்லவும்..  

சிரித்துக் கொண்டே எழுந்து வந்தவள்.. “ம்ம்ம், எழுந்திருங்க!” என்று கையை நீட்ட..

அவளுடைய உற்சாகம் பொங்கும் சிரித்த முகத்தை பார்த்தவன் தானாக இலகுவாகி, “தூக்கு” என்று கையை நீட்டினான்.

ம்கூம்! தூக்க முடியவில்லை! ஏனென்றால் ஈஸ்வர் எழ முயலவேயில்லை… “அச்சோ, எழ முடியலையா” என்று சிரிப்பை விட்டு அவன் முன் ஏதோ அடி போல என நினைத்து குனிய.. “என்னமா சிரிச்ச நீ! உன்னை…” என்று இழுத்து மேலே போட்டுக் கொண்டான்..

அவன் மேலே விழுந்தவள்……  “ஐயோ, விடுங்க, யாராவது வரப் போறாங்க” எனப் பதற,

“வரலைன்னா பரவாயில்லையா வர்ஷ்” என்றான்.  

“அச்சோ என்ன இது?” என வேகமாக எழ முற்பட அவளை விடாது இறுக்கிப் பிடித்தவன்.. “இப்போ சிரி பார்க்கலாம்” என,

“ஏன்? சிரிக்க மாட்டேனா?” என்றாள் விறைப்பாக..  

“அதுதான் சொல்றேன் சிரி” என,

சிரிக்கும் வாயை இழுத்துப் பற்றி நிறுத்தினான். என்ன செய்யப் போகிறான் அவன் என வர்ஷினி ஈஸ்வரின் இயல்பை தெரிந்தவளாய் பார்க்க.. “கிஸ் மீ” என அவனின் கண்கள் யாசித்தது சில நொடி அவனை அறியாமல்..

“பார்த்தாயா? இதுதான் நீ!” என்று வர்ஷினி பார்த்திருக்கவும்.. அந்தக் நீல நிறக் கண்களை சரியாக படித்தவன்…

“சாரி” என கண்களாலேயே மீண்டும் யாசித்து.. “கிஸ் பண்ணட்டுமா?” என்று கேட்க..

“வேண்டாம்னு சொன்னா விட்டுடுவீங்களா” என வர்ஷினி ரகசியம் பேசினாள்.

ஈஸ்வரின் முகம் தானாகப் புன்னகை பூசி, அவளின் இதழ்களை நெருங்கிய சமயம்…

“விஸ்வா” என்ற ரஞ்சனியின் குரல் கேட்க..

மின்னல் வேகத்தில் அவளின் இதழ் மீது இதழ் பதித்து.. அவளை கீழே உருட்டி அவன் எழுந்து நிற்க..

என்ன நடந்தது என்றே வர்ஷினிக்குத் தெரியவில்லை..

அவள் எழ ஈஸ்வர் கைநீட்டி நிற்க..

“போடாங்” என்று எப்போதும் போலக் கெட்ட வார்த்தையில் திட்டினாள்.. அதை வாங்குவதற்கே பிறந்தவன் போலப் புன்னகை முகமாய் அவளுக்கு கை கொடுக்க…

“கொஞ்சம் கூட வெட்கமேயில்லை உங்களுக்கு” என்றபடி அவன் கைபிடித்து எழுந்து நின்றாள்.

“அது எதுக்கு எனக்கு? உனக்கு தான் வர்ஷ் வேணும்!” என..

மீண்டும் அவள் திட்டுவதற்குள் “விஸ்வா” என்ற ரஞ்சனியின் குரல் கேட்க வெளியில் விரைந்தான்..

“லேண்ட் மார்க் கேட்கறாங்க டிஃபன் ஆர்டர் பண்ணினேன், அது கொண்டு வர்றதுக்கு” என,

ஃபோனை வாங்கி அவன் வழி சொல்லவும்.. ரிஷியை மீண்டும் வாங்கிக் கொண்ட வர்ஷினி, அவன் எதோ பெரிய மனிதன் போல அவனிடம் கதை பேசி நின்றாள்..

உணவு வந்து எல்லோரும் உண்டு முடித்து மீண்டும் தாத்தா அவளிற்கு ஒரு வண்டி அட்வைஸ் செய்ய…

“இவரை பேசாம இருக்கச் சொல்லுங்க, இல்லை என்னை ஒரு வழியாக்கிடுவா” என்று பரிதாபமாக ரஞ்சனியையும் பத்துவையும் பார்த்தான்.

“போகலாம் தாத்தா” என ரஞ்சனி சொல்ல..

“நீங்க சொன்னாலும் அவ கேட்கப் போறது இல்லை” என்று பத்துவும் சொல்ல..

அது எதோ ஒரு வகையில் வர்ஷினிக்கு எரிச்சலைக் கொடுக்க.. “அட அண்ணா, நீ கொஞ்சம் புத்திசாலி ஆகிடீங்க போல” என்று பத்துவைக் கீழிறக்கி வர்ஷினி கிண்டல் பேசினாள்.

அவள் பத்துவைப் பேசிய விதம் ரஞ்சனிக்கு கோபம் கொடுக்க.. ரஞ்சனி பேச வரும் போதே ரஞ்சனி முகம் பார்த்தே “அவ அண்ணா கிட்ட அவ பேசறா ரஞ்சி.. நீ என்னோட பேசும் போது வர்ஷினி நடுவுல பேசறது இல்லை” என ஈஸ்வர் சொல்ல ரஞ்சனி அதன் பிறகு வாயே திறக்கவில்லை.

ஆனாலும் பத்துவைக் கிண்டல் செய்தது கோபம் வந்தது.. பிறகு அவர்கள் விடைபெற்றுக் கொள்ள..        

“ஏன் பத்துவை கிண்டல் பண்ற? பாரு, ரஞ்சனிக்கு கோபம் வந்துடுச்சு!” என்று ஈஸ்வர் சொல்லவும்..

“அண்ணி ஒரு குரல் கொடுத்தா, அவங்க அண்ணன் பொண்டாட்டியை கிஸ் பண்றதை கூட விட்டுட்டு அடுத்த நிமிஷம் அவங்க முன்னாடி நிக்கறாங்க.. நான் என் அண்ணனை கிண்டல் பண்ணக் கூட உரிமை கிடையாதா?” என,

ஈஸ்வர் பேச்சற்று போனான்..

அப்போது மட்டுமல்ல அதன் பின்னும் அருகிலேயே விடவில்லை.. “ஒரு சேன்ஸ் கொடுத்தேன், மிஸ் பண்ணிட்ட, நான் என்ன பண்ண? போடா?” என்று விட…

“போடி” என சொல்லத் தான் ஈஸ்வருக்கு தோன்றியது..

ஆனால் சொல்ல முடியவில்லை.. பயம்.. பின்னே அதுதான் சாக்கென்று போய்விட்டாள்..

“இப்படி, இதுவல்ல வாழ்க்கை!” என அவளுக்கு புரிய வைக்கப் பேச வர்ஷினி வாய்ப்பே கொடுக்கவில்லை..

ஆரம்பிக்கும் போதே “வேறு பேசுவோம்” என்று விடுவாள்..

உணர்வுகள் இருவருக்கும் பொது என அவனுக்கு ஞாபகத்திலேயே இல்லை.. ஆணாதிக்க சமுதாயம் எல்லாம் அவர்கள் பார்வையில் இருந்து தான் பார்க்கும்..

குடும்பத்தில் பெண்களுக்கு ஆண்கள் செய்து கொடுக்கும் வேலைகள் எல்லாம் என்றுமே அவர்களின் வேலைகள் ஆகாது.. அது பெண்களுக்குச செய்யும் உதவி.. அப்படி செய்யும் ஆண்மகன் தாராள மனம் படைத்தவன்.. பெண்களை மதிப்பவன்.. சரிசமமாக நடத்துபவன்.. பார்த்து பார்த்து கவனித்துக் கொள்பவன்!

தெரிவதேயில்லை! அது அவனின் குடும்பமும் தான்! அது அவனின் வேலையும் தான்! என..

ஈஸ்வருக்கு வாழ்க்கையே சலிப்பாகத் தோன்றியது… இன்னும் வர்ஷினியைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்ற நினைப்பிற்கு அவனே வந்து விட்டான்.       

கடவுள் மீது பாரத்தை போட்டு விட்டான்..

“நான் நடந்தே திருப்பதி மலை ஏறுரேன்னு வேண்டியிருக்கேன். அடுத்த வாரம் போகலாமா உனக்கு? அப்போ கோவிலுக்கு வர முடியுமா? இல்லை அதுக்கு அப்புறம் போவோமா?” 

“இல்லை, அடுத்த வாரம் போகலாம் எனக்குப் பிரச்சனையில்லை! யாரெல்லாம் போறோம், நீங்க என்கிட்டே எதுவுமே சொல்றதில்லை, அண்ணி என்கிட்டே கேட்கறாங்க, என்ன வேண்டுதல்ன்னு எனக்குத் தெரியவேயில்லை!”

“இது இப்போ வேண்டினது இல்லை.. ரொம்ப முன்ன.. உங்க வீட்ல நான் வாங்கின பணத்தை நல்ல படியா திரும்பக் கொடுக்கணும்னு.. தொழில் பிரச்சனை எல்லாம் தீரணும்னு.. மூணு வருஷம் மேல ஆகப் போகுது.. நீயில்லாம எனக்கு போக மனசில்லை!” என,

ஈஸ்வர் திருப்பதி சென்று, என்ன என்ன செய்யப் போகிறான் என.. “என்ன?” என்று வியந்தாள்.. பின்னே “நான் என்ன பண்ணனும்?” என,

“என்னோட நடந்து வர்றியா?” என,

“நான் நடந்து வர்றேன்” என்றவள், “யாரெல்லாம் போறோம்” என,

என்னவோ அவளின் குரலில் இருந்தது போலத் தோன்ற, “யாரெல்லாம் போகலாம்” என்றான்.  

“நாம மட்டும் போகலாமா?” என,

“அம்மா அப்பா விட்டு எப்படிப் போக” என,

“அத்தை வந்தா, அண்ணி கூப்பிடுவாங்க.. அப்புறம் அவங்க இவங்கன்னு பெருசா ஆகிடும்.. அவங்களோட எல்லாம் போக நீங்க எனக்கு ஏன் வெயிட் பண்ணனும், முன்னமே போயிருக்கலாம்” என,

“வர்ஷ், நாம நடந்து போகப் போறோம். எனக்கு முடி இறக்கணும்.. காணிக்கை செலுத்தணும்.. அடுத்த நாள் காலையில அங்கப் பிரதட்சணம் பண்ணனும், திருகல்யாணம் உற்சவம் பார்க்கணும்..”

“அதெல்லாம் கூட இல்லை.. அவ்வளவு பெரிய காணிக்கை நான் செலுத்தும் போது அம்மா அப்பா இல்லாம நான் எப்படி செய்வேன்” என்றான் பொறுமையாக.

“ஏன்? எதுக்கு? கோபம் என்மேல தானே! அவங்க எல்லாம் என்ன பண்ணினாங்க.. இப்படி கோபத்தை இழுத்து வெச்சு என்ன பண்ண போற? நீ எப்போ மாறுவ?” என,

“ஏன் நான் மாறுறதைப் பத்தியே யோசிக்கறீங்க? நீங்க ஏன் மாறக் கூடாது? என்னவோ அப்படி ஒரு ஆசை, காதல், என் மேல சொல்லி.. காதல் சொன்ன பொண்ணை கூட விட்டு வந்தீங்க.. ஆனா எனக்காக என்ன செஞ்சீங்க.. ஒன்னுமே கிடையாது.. தனியா என்னை கூட்டிட்டு வந்திருந்தாலும்.. எப்பவும் உங்க குடும்பம் தான்! அம்மா, அப்பா, அக்கா, தங்கை, அண்ணா, அண்ணி, இப்படி.. நான் தனியா வளர்ந்ததால எனக்கு இதெல்லாம் தெரியலை.. தெரியவும் வேண்டாம்.. முதல்ல உங்களை எனக்கு தெரிய வைங்க.. அதுக்கு என்ன செஞ்சீங்க?”   

“ஒன்னுமே செய்யாம என்ன?.. ட்ரக் அடிக்ட் பொண்ணை பெரிய மனசு பண்ணி ஏத்துக்கிட்டீங்க, அண்ட் அவ பண்ணின தப்பு எதுவும் சொல்லிக் காட்டுறது இல்லை, வெளில தெரியவும் விடலை, அவ நல்லா இருந்தா போதும்னு பெரிய மனசு பண்ணி அவளை பிரிஞ்சு இருந்தீங்க ரைட்.. அப்போ நீங்க நல்லவங்க இல்லையா” என நிறுத்தினாள்..

ஈஸ்வர் என்ன வரப் போகிறதோ என்று தடதடக்கும் இதயத்தோடு பார்த்திருக்க..

“ஆனா இதுக்கெல்லாம் காரணம் நீங்க? அது பின்ன போயிடுச்சு இல்லையா? ஈஸ்வர்ன்ற ஒருத்தனை நான் பார்க்காம இருந்திருந்தா நல்லா இருந்திருப்பேன்னு எனக்கு எப்பவும் தோணுதே? அதை நான் என்ன செய்ய? எல்லாம் உன்னால, போ, போ” என்று கத்தியவள் சென்று விட..     

வாழ்க்கையில் அவனுக்கு இது முடியவே முடியாது என்று தோன்றியது..

அவனுக்கு இன்னும் அவனின் தவறு புரியவே இல்லை.. “நீதான் எனக்கு எல்லாம், உன் பின் தான் எனக்கு எல்லாம்” என்ற ஒரு வார்த்தை எல்லா ஜாலங்களும் செய்யக் கூடும் என.. உண்மையில் அதுதான் அவன்.. ஆனால் அதை உணரவைக்க இன்னுமே முடியவில்லை..

ஏன் அவள் முன்பு கேட்டதும் அதுதானே!   

“இவளுக்கு என்னைப் பிடிக்கவே பிடிக்காதா? என்ன செய்ய?” என்று ஈஸ்வர் யோசிக்க..

“நிறைய, நிறைய பிடித்ததினால் தான் இந்த அவளின் நடத்தை” எனப் புரியவில்லை.. அதனால் தான் எதையும் சரி சரி என்று அவளால் விட முடியவில்லை எனப் புரியவில்லை..

அவளுக்கும் புரியவில்லை! அவனுக்கும் புரியவில்லை! 

 

Advertisement