Advertisement

அத்தியாயம் எட்டு :

“யாராயிருக்கும்? எதுக்கு இவ்வளவு டென்ஷனா பேசறாங்க?” என்று யோசித்தவளுக்கு, “டாலி! அப்போ டால்! அப்போ பொம்மை! அப்போ அவனோட காதலியா? அதுக்கு தான் இந்த பில்ட் அப்பா!” என்று சலித்துக் கொண்டவள், கிச்சனில் வேலையை முடித்து வெளியே வந்து டீ வீ போட்டு அமர்ந்து கொண்டாள்.

“அய்யய்யோ இந்த சீரியல்!” என்று நொந்து கொண்டவள், வேறு என்ன சேனல் வருகிறது என்று மாற்றி மாற்றி கடைசியில் எதுவும் வராமல் நியூஸ் சேனல் போட்டுக் கொண்டாள்.

அரை மணிநேரம் குருபிரசாத் ரூம் விட்டு வெளியே வரவில்லை, மனதிற்குள் ஒரு சின்ன ஆசை குமிழ்விட்டது. “நம்ம தான் லவ்வே பண்ணலை! லவ் பண்றவங்களைப் பார்த்தாலும் அரை கிலோமீட்டர் தள்ளி நின்னுக்குவோம்! அப்படி என்ன பேசுவாங்க? இவன் போய் அரை மணி நேரமாச்சு! காணோம்?” என்று மனது குறுகுறுத்தது.

கிட்ட தட்ட ஒரு மணி நேரம் கழித்து தான் வந்தான்.

“சாரி! சாரி! நீ வந்த போது உன்னைப் பார்க்காம அனுப்பிட்டேன்!” என்று சாரி கேட்டவள், “அதுக்கு தானே நீ என் போன் எடுக்கலை! அப்போ உனக்கு என்னை இப்போ பிடிக்கலை!” என்று ஆரம்பித்து மேக்னா பேசிய விதத்தில், “அப்பப்பா பொண்ணுங்களே வேண்டாம்! சந்நியாசம் வாங்கிக்குவோமா?” என்று நினைக்கும் அளவிற்கு குருபிரசாத் மிகவும் நொந்து விட்டான்.

“இல்லை! அப்படி இல்லை! யு ஆர் மை லவ்!” என்று சொல்லி சொல்லி சலிப்பாகி விட்டது.  

வெளியே வந்தவனின் முகம் அப்படி ஒரு சோர்வைக் காட்டியது. சமையலறையில் சிரித்த அவனின் முகம் அவ்வளவு வசீகரமாய் இருக்க, இப்போது இருந்த முகம் காணச் சகிக்கவில்லை தமிழரசிக்கு. “எதற்கு இந்த கருமம் பிடித்த காதல், வாழ்க்கையின் ஒரு சிரிப்பைக் கூட தொலைக்க வைப்பதை ஏன் செய்ய வேண்டும்?” என்று தான் தோன்றியது.

குருபிரசாத்தைப் பார்க்க பாவமாக இருந்தது. ஏதாவுது பேசவும் தயக்கமாக இருக்க, அமைதியாகத் தான் இருந்தாள்.

உறங்கும் நேரமாவதை உணர்ந்து, “நீ ரூம் கதவை திறந்து வைத்து தூங்கிகோ!” என்றான்.

அவனாகப் பேசவும், “நான் நேத்து மாதிரி இங்கயே தூங்கிக்கறேன், ஒரு நாள் ஆகிடுச்சு தானே! இந்த இடம் கொஞ்சம் பழகிடுச்சு, நீங்க கதவை திறந்து வைத்து தூங்கிக்கங்க, நேத்து மாதிரி கலாட்டா பண்ண மாட்டேன்!” என்றாள் அவன் முகம் பார்த்து பரிவாக.

“சரி!” என்று வாய் வார்த்தையாக சொல்லாமல், தலையை மட்டும் அசைத்து குரு ரூம் போகப் போக,

“சாப்பிடலையா?” என்றவளிடம்,“இப்போ தானே சாப்பிட்டேன்!” என்று பதில் கொடுத்தான்.

“இப்போவா? அப்போ மணி அஞ்சு! இப்போ ஒன்பதரை!” என்று எடுத்துக் கொடுக்க, “பசியில்லை!” என்று அவன் உள்ளேப் போக,

“சாப்பிடுவீங்கன்னு சமைச்சிட்டேன்! வேஸ்ட் ஆகிடும்!” என்றாள் தயங்கிய குரலில், கோபப்படுவானோ என்று,

“இது என்னடா தொல்லை!” என்று குரு பார்க்க, “பயப்படாம சாப்பிடுங்க, இதெல்லாம் காரணமா வெச்சு இங்க இருந்துட மாட்டேன், ட்ரஸ்ட் மீ! போறேன்னு சொல்லிட்டேன்! கண்டிப்பா போய்டுவேன்!” என்றாள்.

கோபமாக குரு பதில் பேச வரவும் “ப்ளீஸ்! சண்டை வேண்டாம், நான் ஜஸ்ட் ஃபேக்ட் சொன்னேன்! அப்புறம் உங்க இஷ்டம்!” என்று மீண்டும் டீ வீ யின் முன் அமர்ந்து கொண்டாள் வேறு வழி. சொல்லப் போனால் வெகு நேரம் டி வீ பார்ப்பதே அவளுக்குப் பிடிக்காது. இப்போது அதையே முழுநேரமாக செய்ய மனதிற்குள் எரிச்சலாக உணர்ந்தாள். ஆனாலும் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை.

குரு உறங்கப் போவதா சாப்பிடுவதா என்று பட்டி மன்றம் நடத்த, இங்கே தான் இருந்தால் உண்ணத் தயங்குவானோ என்று அரசி ரூம் உள் போக, அவள் சென்றதை உணர்ந்து வேகமாக சாப்பிட என்ன இருக்கின்றது என்று பார்க்கப் போனான்.

நான் இருக்கின்றேன் என்று இட்லியும் சட்னியும் அவனைப் பார்த்து சிரிக்க, “காலையில ஒன்னு, மதியம் ஒன்னு, இப்போ ஒன்னா, எப்படிக் கட்டுப்படி ஆகும், மதியம் செஞ்சதே நல்லா இருந்ததே! அதையே கொஞ்சம் சேர்த்து செஞ்சிருக்கலாமே” என்று நினைத்தான். அதுதான் குரு! லட்சங்களில் சம்பளம் வாங்கினாலும், ஒவ்வொரு பைசாவையும் எண்ணி எண்ணித் தான் செலவு செய்வான். அதனால் தான் இந்த ஏழுவருட வருமானத்திலேயே இவ்வளவு சேர்த்து இருந்தான்.

மனது ஒரு பக்கம் “விடுடா, இவ இருக்குற வரை ஏதாவது சமைப்பா! அதுவரைக்கும் எதுவும் சொல்லி வைக்காதே, நல்லா சாப்பிட்டுக்கோ” என்று மனது சொல்ல,

“தப்பில்லையா இது, நீ வேண்டாம் பிடிக்கலைன்னு சொல்லிட்டு அவ உழைப்பை அனுபவிக்கறதா?” என்றும் தோன்றியது. “நீ யோசிக்கறதுக்குள்ள அவ வெளில வந்துடுவா! முதலில் சாப்பிடு பிறகு யோசி!” என நினைத்தவன், வேகமாக இட்லிகளை உள் தள்ளி ரூமில் போய் புகுந்து கொள்ள, அவனின் அரவம் அடங்கியதும் வெளியே எட்டி பார்த்தாள் அரசி,

“என்ன சாப்பிட்டான்?” என்று பார்க்க, குரு உண்டிருப்பதை பார்த்ததும், சாப்பிட்டான் போல என்று நினைத்தவள் அவளும் உண்ண ஆரம்பித்தாள்.

உண்டு கொண்டே எண்ணங்கள் சுழல ஆரம்பித்தது, “என்ன செய்து கொண்டிருக்கிறாய் அரசி நீ! அவனுக்கு சமைத்துக் கொண்டிருக்கிறாயா?” எனக் கேள்வி கேட்க,

“பாவமாக இருக்கின்றது! அலட்சியமாகப் பேசுகின்றான்! என்னைக் காயப்படுத்த முயல்கின்றான்! ஆனாலும் என்னவோ பாவமாகத் தான் இருக்கின்றது. விடு பார்த்துக் கொள்ளலாம்” என்று மனதிடம் சமாதானம் சொன்னாள்.

ஆனாலும் மனது சொன்னது, “நீ செய்வது எனக்குப் பிடிக்கவில்லை! அவனுக்கு டார்ச்சர் கொடுக்க வேண்டாமா? தாலி கட்டி எவ்வளவு திமிராகப் பேசுகின்றான்! அவனை அப்படியே விடுவாயா?”

“வேறு என்ன செய்வது? வாழ்க்கையை அதிகாரத்தினால் தக்க வைக்க முயல்வது சரியல்ல! யாசகமாய் கேட்பதும் சரியல்ல! வரப் போகும் பிரச்சனைகளுக்கு இப்போது இருந்தே மனதை குழப்பாதே! வரும் போது பார்த்துக் கொள்ளலாம்!” என்று வெகுவாக சமாதானம் செய்தாள்.

குருவின் ரூம் பார்க்க, அவன் கதவை திறந்து வைத்து படுக்கையில் சாய்ந்து அமர்ந்தபடி லேப்பில் நொண்டிக் கொண்டிருக்க, அவன் தெரிவது போல சோபாவை நகர்த்திப் போட்டு லைட் ஆஃப் செய்யாமல் உறங்க ஆரம்பித்தாள்.

என்ன செய்கின்றாள் என்று அரசி மேல் ஒரு கண் வைத்து தான் குருபிரசாத் வேலை செய்து கொண்டிருந்தான்.

படுத்தவள் ஐந்து நிமிடங்களில் உறங்கிவிட, குருவிற்கு உறக்கமில்லை, வேலை செய்து கொண்டே இருந்தான். மணி இரண்டு என்று காட்ட, பசிக்கவும் சமையல் அறை வந்து ஒரு காஃபி போட்டுக் குடித்து மீண்டும் வேலை செய்ய அமர்ந்தான். நான்கு மணி வாக்கில் தான் உறங்கினான்.

அதனால் காலையில் உறக்கம் கலையவில்லை, எட்டு மணிவரை உறங்க, அரசி தான் நேரமாகிறதே ஒரு வேலை போகவேண்டியது இல்லையோ என்று யோசித்தவள், எதற்கும் எழுப்புவோம் ஆனது ஆகட்டும் என்று அபார்ட்மென்ட் வெளியே சென்று பெல்லை ஒரு இரண்டு மூன்று முறை அழுத்த, உறக்கம் கலைந்தவன் “யார்?” என்று பார்க்க வர,

அரசி தான் பெல் அழுத்திக் கொண்டிருந்தாள், குருவைப் பார்த்ததும், “உங்களுக்கு லேட் ஆகிட்டா? அதுதான் எழுப்ப அழுத்தினேன்!” என்று நிற்க,

அப்போதுதான் நேரத்தைப் பார்த்தவன் “ஆமாம் லேட்!” என்று குளிக்க ஓடினான், பத்து நிமிடத்தில் தயாராகி வர,

அவனின் டிஃபன், காபி, லஞ்ச், எல்லாம் பேக் செய்யப்பட்டு தயாராக இருந்தது, குரு வெகுவாக தயங்க, “சாப்பிடுங்க!” என்றாள் வேகமாக உண்டவன், காஃபி குடித்து லஞ்ச் எடுத்துக் கொண்டவன், “தேங்க்ஸ், ஈவ்நிங் நான் வந்து சமைக்கறேன்!” என்று சொல்லிப் போக,

“நீ சமைப்ப ஆனா அதை யார் சாப்பிடுவா?” என்று மனதிற்குள் நினைத்தாள், ஆனால் வெளியில் சொல்லவில்லை.

அம்மா வேறு போன் செய்து, “கண்ணு என்ன செய்யற?” என்று கேட்க, நேற்றிலிருந்து இவள் செய்த சமையலையும், வேலைகளையும் அடுக்க,

“என்னோட பொண்ணா?” என்று வியந்த அம்மா உடனே போன் வைத்து, மகள் குடும்பம் நடத்தும் அழகை, வீட்டினரிடம் செய்தி பரப்ப, எல்லோர் முகத்திலும் சற்று நிம்மதி.

“நாம அவ சாமான் எல்லாம் எப்போ கொண்டு போய் குடுக்கலாம்!” என்று பூமா கேட்க, “இந்த வார கடைசியில அவங்களை வரச் சொல்வோம்! அப்போ போகும் போது கொண்டு போய் கொடுக்கலாம், இப்போதான் மனசு பிடிச்சு அவ இருக்குறா! நாம் இப்போவே போய் நிற்க வேண்டாம்!” என்றார் அர்த்தனாரி.

பாதி மனதாக பூமா தலையாட்ட, கலையரசியும் அதே தான் சொன்னால், “அம்மா! இப்போ போனா நானும் வர்றேன்னு சொன்னா என்ன பண்ணுவ? அவ அங்க பழகட்டும்!” என,

ராஜா தான் தவித்துப் போனான், “அரசி எப்படி இருக்கின்றாளோ? கீழே விழப் போகும் போதே அவன் பிடிக்க முயலவில்லை? எப்படிப் பார்த்துக் கொள்கின்றானோ? என்பது போல,  

“நானும் கலையும் வேணாப் போய் பார்த்துட்டு வரட்டுமா?” என்றான் ராஜசேகர்.

“வேண்டாம் ராஜா! அரசிக்கு என்னவோ மாப்பிள்ளையை பிடிக்கலை, அவ பழகட்டும் அவர்கிட்ட, அவளால பேசாம இருக்க முடியாது! நாம யாரும் போகலைன்னா மாப்பிள்ளை தம்பிக்கிட்ட பேசிப் பழகுவா, கண்டிப்பா அவளுக்குப் பிடிக்கும், என் பொண்ணுக்கு எது பிடிக்கும் எது பிடிக்காதுன்னு எனக்குத் தெரியும் இல்லைன்னா இவரை நேர்ல பார்க்காம போட்டோல பார்த்தே செலக்ட் பண்ணுவனா?” என்றார் அர்த்தனாரி கர்வமாக.

“கடவுளே! எல்லாம் சரியாக்கிவிடு!” என்று அவசரமாக வேண்டுதல் வைத்தான் ராஜா.

அன்று மேக்னா அலுவலகத்திற்கு வந்திருந்தாள், ஆனால் நிறைய நாள் விடுப்பு எடுத்து இருந்ததினால் சில நிமிடங்கள் கூடப் பேச விடாமல் வேலை நெருக்கித் தள்ளியது அவளை. குருபிரசாத் இரண்டு மூன்று முறை வந்து பார்த்துப் போக, “ஐ வில் கம் பிரசாத்!” என்று அனுப்பி வைத்தாள்.

வேலையையும் மீறி அவளின் முகத்தில் எதோ குறைய, “இந்த மைதா மாவு ஏன் இப்படி இருக்கா?” என்று யோசித்த பவித்ரா, “வொய் மேக்னா யு ஆர் லுக்கிங் டல் டுடே!” என்றவளிடம்,

“ஃபீலிங் பீவரிஷ்” என்றாள்.

“அதுதான் இவளோட டின்னர் கதையைப் பேசி, நம்மளை கடுப்படிக்கலை போல, எப்படியோ நான் க்ரேட் எஸ்கேப்!” என்று பவித்ரா நினைத்தாள்.

மதிய உணவின் போது குருபிரசாத்தை தேடி வந்த மேக்னா, “சாரி பிரசாத்!” என்றாள் திரும்ப.

“அதைவிடு டாலி! திரும்பப் பேச வேண்டாம்!” என்றவன் வேறு பேச, என்னவோ குருவிடம் மேக்னாவால் உரிமையோடு பேச முடியவில்லை முன் போல, அவளின் மனது ஒரு விலகல் தன்மை உணர்ந்தது.

“சாப்பிட்டியா?” என்ற குருவிடம், எப்போதும் சாப்பிட்டாலும், “சாப்பிடவில்லை! வா கேண்டீன் போகலாம்!” என்று அவனோடு இருக்கும் நேரத்தை விரும்பி அழைப்பவள், இப்போது உணவே உண்ணவில்லை,  ஆனாலும் உண்டு விட்டேன் என்று பொய் சொல்லி வந்தாள்.

இத்தனை நாட்கள் குருபிரசாத் மேலே பித்தாக இருந்தவள் தான், அவன் காதல் சொன்ன தினத்தை கணத்தை பொக்கிஷமாக படம் பிடித்தவள் தான். ஆனாலும் அடுத்தவளின் கணவன் என்ற நினைவு வெகுவாக கசந்தது. மேக்னாவை குருவிடம் இருந்து தள்ளி நிறுத்தியது.

அந்தக் காதல் உணர்வுகள் தன்னுள் குறைவது போல தோன்ற ஆரம்பித்தது.

சவுத் இந்தியன் பாய் என்றாலே அவளின் பெற்றோர்கள் திருமணத்திற்கு சம்மதிப்பார்கள் என்று சொல்ல முடியாது. இருந்தாலும் குருவின் குணம், அவனின் பெர்சனாலிட்டி, அவனின் பதவி, சம்பளம், எல்லாம் சரி என்று சொல்ல வைத்து விடும் என்று நினைத்து இருந்தாள்.

இந்த முறை ஊருக்கு சென்ற போதே அப்பா அம்மாவிடம் சொல்லி விடுவோமா என்று நினைத்து இருந்தவள், அவன் இந்தியா வரட்டும் பிறகு சொல்லிக் கொள்ளலாம், ஒரு வேளை நேரில் பார்க்க வேண்டும் என்று சொன்னால் உடனே பார்க்க வைத்து விடலாம் என்று தோன்ற அப்படி நினைத்தாள்.

இனி சொல்லும் வாய்ப்பு வரும் என்று தோன்றவில்லை. இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்தவன், டைவர்சி, என்றெல்லாம் முன் நிறுத்த முடியாது. எப்படி ஏமாற்றி விட்டான் இவன் என்னை என்று குருபிரசாத்தின் மேல் ஆத்திரமாக வந்தது.

வாழ்க்கையில் காதலித்தவனாக இருந்தாலும், அடுத்தவள் கணவனைப் பிடுங்கும் அளவிற்குத் தான் கீழ் இறங்க செய்வோமா என்று யோசிக்க ஆரம்பித்தாள். 

 

Advertisement