Advertisement

அத்தியாயம் இருபத்தி ஒன்பது :

துன்பமில்லாத நிலையே சக்தி

தூக்க மிலாக்கண் விழிப்பே சக்தி

அன்பு கனிந்த கனிவே சக்தி

ஆண்மை நிறைந்த நிறைவே சக்தி

( பாரதி )

சக்தியின் ஹாஸ்பிடல் திறப்பு விழா மிகவும் கோலாகலமாக நடைபெற எல்லா விஷயங்களும் கைதேர்ந்து நடந்தது. ஆம், அவள் பின் பின் என்று வரிசைபடுத்தி வைத்திருந்த வேலைகள் எல்லாம் சேர்ந்தே ஒரு வடிவம் பெற ஆரம்பித்து.

திறப்பு விழாவோடு ஹாஸ்பிடல் ஒரு யூனிட்டும் செயல்பட ஆரம்பிக்க வேலைகள் நடந்தன. பிரபு சொன்ன டாக்டர் பெரிய நாயகம் ஹாஸ்பிடல் பொறுப்பை எடுத்துக்கொள்ள வேலைகள் மிகவும் ஜரூராக நடை பெற்றன.

பெரியநாயகம் மிகவும் நேர்மையான மனிதர்…. தான் செய்யும் டாக்டர் தொழிலை தெய்வம் என்று நினைக்கும் மனிதர். முக்கியமாக முன்னால் மிகுந்த மரியாதை கொடுக்கப்பட்டு பின்னால், “இவனும் பொழைக்க மாட்டான், நம்மளையும் பொழைக்க விடமாட்டான்…. எப்பவும் நீதி நேர்மை நியாம்னு பேசிக்கிட்டு”, என அடையாளம் காணப்பட்டவர்.

பிரபுவும் அவருக்கு உதவியாக இருந்தான். அவர்கள் மட்டுமல்லாது இன்னும் நான்கைந்து டாக்டர்களும் அன்றே பொறுப்பெடுத்துக் கொண்டனர்.

சக்தியை மீறி எதுவும் நடக்கவில்லை….. அவள் என்ன செய்ய வேண்டும் என்று நினைத்தாளோ அதை ஒழுங்குபடுத்தி மற்றவர் கவனத்தை கவராமல் அவள் பின் நின்று நடத்திக் கொடுத்தான் கார்த்திக்.

சக்தியால் இதை தனியாகவும் செய்திருக்க முடியும் தான். ஆனால் நிறைய டென்சனாகியிருப்பாள்….. செய்ய வேண்டிய வேலைகளும் நேரம் எடுத்திருக்கும்.

இப்போது வேலைகள் அதன் அதன் பாட்டிற்கு நடந்தன. சக்தியும் உற்சாகமாக இருந்தாள். ஆனால் அன்று வீட்டில் பார்த்து இன்விடேஷன் எடுத்துக் கொண்டு போன கார்த்திக் அதன் பிறகு அவள் கண்ணில் படவேயில்லை.

அவன் யார் யாரை அழைத்திருக்கிறான் என்ற விவரம் கூட தெரியவில்லை. அதன் பிறகு அவன் வீரமணியையும் பார்க்கவில்லை. அவருடன் மட்டும் அவ்வப்போது தொலைபேசியில் பேசிக்கொண்டான்.  

யாரிடம் வேலை சொல்கிறான்……. எப்படி நடத்திக்கொள்கிறான் என்று சக்திக்கு தெரியவில்லை.  ஹாஸ்பிடல் வேலைகளை பொருத்தவரை பிரபுவிடம் எல்லா வேலைகளையும் சக்தி தான் சொன்னாள். என்ன செய்ய வேண்டும் என்ற யோசனைகளையும் பிரபு சக்தியிடம் நேரடியாக சொன்னான்.

பெரிய நாயகம் வந்த பிறகு அந்த அவசியம் கூட இல்லை. பிரபுவும் அவருமே பேசிக்கொண்டனர். அவர்கள் முடிவெடுத்த பிறகு செயல்படுத்தும் முன் அவளின் கவனத்திற்கு வந்தது. அதற்கான முழு சுதந்திரத்தையும் பெரிய நாயகத்திற்கும் பிரபுவிற்கும் கொடுத்து இருந்தாள்.

பிரபுவை விட சீனியர் டாக்டர்ஸ் நிறைய பேர் வருவார்கள், அப்போது எதுவும் பிரச்சனை வந்து விடக்கூடாது என்பதற்காக பிரபு ஒரு மானேஜ்மென்ட்டின் ஆளாகவே சக்தியால் அடையாளம் காட்டப்பட்டான்.

விழா ஏற்பாடுகள் முழுவதும் கார்த்திக்கினதே…… கட்சி தலைமை வேறு வருவதால் விழா சிறப்பாக இருக்க வேண்டும் என்று வீரமணி பிரியப்பட செலவுகள் மிகவும் அதிகம் ஆகின.

நிறைய கட்சி காரர்களின் தலையீடு வேறு……. எல்லோரையும் திருப்தி படுத்த வேண்டியிருந்தது. கூட்டம் சேர்பதற்காக….. ஆட்களுக்கு பணம்…… அவர்களுக்கு பிரியாணி, தண்ணி என்று விழாவையும் மீறி ஏதோ கூட்டம் போல எக்கச்சக்க செலவு.

அவர்கள் தங்க மண்டபம் பார்த்து கொடுத்து….. வரும் வீ ஐ பீ க்கள் தங்க ரூம் போட்டு கொடுத்து…..   

சக்தி கொடுக்கிறாள் என்று வீரமணி நினைத்திருக்க…… வீரமணி கொடுக்கிறார் என்று சக்தி நினைத்திருக்க……. கொடுத்தது எல்லாம் கார்த்திக்.

எல்லா வேலைகளையும் அவனே சொல்வதால் எல்லோரும் பணத்திற்கு அவனிடமே சென்று நின்றனர். கார்த்திக்கும் கணக்கு பார்க்கவில்லை……… பணத்தை தண்ணீராய் செலவழித்தான்.

விழா அன்று காலை….. வீரமணி கட்சி தலைமையை அழைக்க சென்று விட….. சக்தி மட்டும் தான் தனியாக முதலில் வந்தாள். தெய்வானை சிறிது நேரம் கழித்து வருவதாக இருந்தது.

ஒரு கிலோமீட்டர் முன்பிலிருந்தே கட்சித் தலைமையின் வரவேற்பிற்கு ஆட்கள் நின்று கொண்டிருந்தார்கள். மிகவும் பிரமாண்டமான பேனர்கள்…… பேண்ட் வாத்தியம்…. அது இது என்று தூள் கிளப்பியிருந்தார்கள்.

நான் நேற்று போகும்போது கூட இதெல்லாம் இல்லையே என்ற யோசனையோடே சக்தி காரில் அதை கடந்தவள், அவள் ஹாஸ்பிடலுக்கு அருகில் வர வர அங்கே இருந்த கூட்டத்தை பார்த்து மனதிற்குள் சற்று படபடப்பாக இருந்தது.

இதுமட்டுமல்லாமல் எத்தனை பேர் வந்தாலும் உண்ணக் கூடிய பிரமாண்ட விருந்து……. அது ஒரு பக்கம் நடந்து கொண்டே இருந்தது. 

“கருப்பண்ணா! என்ன இவ்வளவு கூட்டம்?”, என்று சக்தி கேட்க…

“அரசியல்வாதிங்க வந்தாலே, அப்படிதான்மா!”, என்றார்.

பந்தோபஸ்திற்கு நின்ற போலிஸ்காரர்கள்…. இவர்கள் காரையும் யார் எவர் என்று விசாரித்தே உள்ளே அனுமதித்தனர். சற்று டென்ஷனாக இருந்தது சக்திக்கு.

ஹாஸ்பிடல் வாசலில் கருப்பண்ணன் கார் நிறுத்த……. சக்தி கதவை திறக்க முற்படும் முன்பே கதவு திறந்தது. கதவை திறந்தவன் கார்த்திக்.

அவள் இறங்குவதற்காக கதவை திறந்து பிடித்து வைத்திருக்க…… கார்த்திக்கை கண்டதும் இருந்த படபடப்பு டென்ஷன் எல்லாம் மாயமாய் மறைந்தது சக்தியிடமிருந்து.

“என் கண்ல படாத”, என்று அவ்வளவு வெறுப்பாக கார்த்திக்கிடம் சொன்ன சக்தி… இப்போது அவன் கண்ணில் பட்டதும் தான் நிம்மதியாக உணர்ந்தாள். 

சக்தி இறங்கவும்…… அப்போது தான் அவர்களை பார்த்த செல்வம் விரைந்து வந்தான்.

கார்த்திக் செல்வத்தை பார்த்து, “மேம் கூட்டிட்டு போய் உட்கார வை…. இங்க எல்லோரும் வந்த பிறகு சொல்றேன், அப்போ அவங்களை வரவேற்க வந்தா போதும்….. பொக்கே இவங்க கைல குடுத்து அனுப்பு”, என்றான்.

கார்த்திக்கும் சக்தியிடம் ஏதும் பேசவில்லை, சக்தியும் எதுவும் பேசவில்லை. செல்வம் கூட்டிச் சென்றான்.

செல்வத்திடம் பேச்சுக் கொடுத்தபடியே சென்றாள்…… “நேத்து நான் பார்த்தப்போ கூட இத்தனை ஏற்பாடு இல்லையே? எப்போ செஞ்சீங்க?”, என்றாள்.

செல்வம் தயங்கி தயங்கி, “எனக்கே தெரியாது மேடம்……. நான் நைட் பத்து மணிவரைக்கும் இங்க தான் இருந்தேன்… அப்போ கூட எதுவும் இல்லை.. காலையில ஆறு மணிக்கு வந்துட்டேன் வந்து பார்த்தா…. இடமே மாறிபோச்சு”,

“எல்லாம் பாஸோட ஏற்பாடு போல”, என்றான்.

“நீயெல்லாம் இங்க அட்மினிஸ்ட்ரேடிவ் ஆபிசர்ன்னு சொல்லாத”, என்று கோபப்பட்டாள் சக்தி.

“நான் கேட்டேன் பாஸ்கிட்ட என்ன செய்யறதுன்னு? நான் பார்த்துக்கறேன்னார்! என்ன செய்ய போறீங்கன்னு கேட்டேன்? என்னை கேள்வி கேட்கற அளவுக்கு பெரிய ஆள் ஆயிட்டியா? வேலையை பாருடான்னு திட்டிட்டார்!”, என்றான் பரிதாபமாக.

“பணம் நம்ம தானே குடுக்கறோம்!”, என்றாள்.

“நான் குடுக்கலை, ஐயா கிட்ட வாங்கறாரான்னு தெரியலை”, என்றான்.

சக்திக்கு கட்டுக்கடங்காமல் கோபம் வந்தது……. “இதையெல்லாம் பார்க்காம என்ன கிழிக்கற நீ இங்க……”, என்று செல்வத்திடம் எரிந்து விழுந்தவள்….. “எனக்கு அப்பா இவ்வளவு செலவு செய்வார்ன்னு தோணலை…..”, என்றாள் யோசனையாக.

அதற்குள் பிரபு வந்து, “வாங்க மேடம்! அங்க யூனிட்ல வந்து அரேஞ் மென்ட்ஸ் பாருங்க”, என்றான்.

அங்கே சென்றாள்…… சில நோயாளிகள் அமர்ந்திருந்தார்கள்……. அன்றிலிருந்து மருத்துவமும் தொடங்க இருந்தது.

அது மட்டுமல்லாமல் ஒரு ரத்த தான முகாமிற்கு வேறு ஏற்பாடு செய்ய பட்டிருந்தது. இன்னொரு பக்கம் கண் தானம், உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு முகாமும் இருந்தது. அவர்களின் பொறியியல் கல்லூரியின் மாணவர்கள் அதில் பங்கெடுக்க இருந்தார்கள்.

“இது நல்ல ஐடியா”, என்று சக்தி பாராட்ட……..

பிரபு அவளை சற்று புன்னகையோடு  பார்த்தவன், “உங்க யோசனையை நீங்களே பாராட்டிக்குவீங்களா”, என்றான்.

சட்டென்று நூல் முனை பிடிபட…….. “கார்த்திக் சொன்னானா, நான் செய்ய சொன்னேன்னு”, என்றாள்.

“ம், நீங்க சொல்லலையா”, என்றான் யோசனையாக பிரபு……

அந்த நேரம் பார்த்து ஏற்பாடுகள் சரியாக இருக்கிறதா என்று பார்க்க கார்த்திக் வர…… இவர்களின் பேச்சை கேட்டவன்…..

“அவங்க தான் சொன்னாங்க பிரபு”, என்றான்.

சக்தி மறுத்து சொல்லவில்லை. அமைதியாக நின்றுவிட்டாள்.

அவன் ஏற்பாடுகளை பார்த்துவிட்டு செல்லவும் அவன் பின் சென்றவள்…….. “இந்த செலவெல்லாம் நீதான் செய்யறியா”, என்றாள். 

அவன் அமைதியாக நிற்கவும்……. “சொல்லு நீதான் செய்யறியா….”,

“யார் செஞ்சா என்ன?”, என்றான்.

“நீயேன் செய்யனும்? சொன்னா நான் குடுக்க மாட்டேனா! எவ்வளவு ஆச்சுன்னு சொல்லு நான் குடுக்கறேன்…”,

“இல்லை! இருக்கட்டும்! தேவைங்கறப்போ நானே வாங்கிக்கறேன்!”,

“இல்லை! அப்பப்போ செட்டில் பண்ணிக்கலாம்!”,

“நமக்குள்ள செட்டில்மென்ட் தேவையில்லை!”,

“செட்டில்மென்ட் ஆரம்பிச்சது நீதான் நாங்க இல்லை……”, என்று சற்று கடுமையான குரலில் சக்தி சொல்ல…….

“ப்ளீஸ் சக்தி! மறுபடியும் ஏதாவது பேசிடாத! என்னால நிச்சயமா தாங்க முடியாது! நீ பேசினா எனக்கு பயமாயிருக்கு!”, என்றான் நைந்த குரலில்……

சொன்ன அவனின் குரல் சக்தியை உயிர்வரை உலுக்கியது.

கார்த்திக்கிற்கு பயமா??? அதை போக்கியேயாக வேண்டும் போல ஒரு உந்துதல்…. வேறு எதுவும் சக்தியின் ஞாபகத்தில் இல்லை……  

அவனை தேற்ற வேண்டும் போல தோன்றியது. அது நேரடியாக அவளால் முடியாது என்பதால்……

“ஹேய்! என்ன நீ……. நான் என்னவோ உன்னை கொடுமைப்படுத்துற வில்லி மாதிரி பேசற?”, என்றாள் முயன்று வரவழைத்த லகுத்தனமையோடு….

அவள் இயல்பாக பேச முயற்சிப்பதை உணர்ந்த கார்த்திக்…… “நீ எப்பவுமே ஹீரோயின் தான்”, என்றான். 

அதை கவனியாதவள் மாதிரி, “பணம் வாங்கிக்கோ”, என்றாள்…..

“வாங்கிக்கறேன்! நிச்சயம் வாங்கிக்கறேன்…. ஆனா இப்போ வேண்டாம் ப்ளீஸ்…..”,

சக்தி ஏதோ சொல்ல வர……..

“நிறைய வேலையிருக்கு,  அதை பார்க்கனும்”, என்றபடி விரைந்து விட்டான்.

மனம் முழுக்க கார்த்திக் மேல் கோபமும் வருத்தமும் இருந்தாலும்…… சக்தி நிறைய முறை அவனை காயப்படுத்தி விட்டாலும்……  “எனக்கு பயமாயிருக்கு”, என்ற கார்த்திக்கின் வார்த்தை அவளை மிகவும் அசைத்தது.

அவளுக்கு தெரியும் யாரிடமும் கார்த்திக் எப்போதும் இந்த வார்த்தையை சொல்ல மாட்டான் என்று.

அவனறியாமல் அவனை கவனிக்க ஆரம்பித்தாள்…… எப்போதும் இறுக்கமாக இருக்கும் அவனின் முகம் இப்போது இன்னும் இறுக்கமாக இருப்பது போல தோன்றியது.

இவனாக இழுத்து விட்டுக் கொண்டது தானே இது நானா இழுத்து விட்டேன்…. என்று முயன்று மனதை வேலைகளில் திசை திருப்பினாள்.

அதன் பிறகு எதை பற்றியும் நினைக்க நேரமில்லாமல் கட்சி தலைமை வந்து விட….. அவரை சக்தி பொக்கே கொடுத்து இன்முகத்தோடு வரவேற்றாள்.

கட்சி தலைமை மட்டும் வரவில்லை…… தமிழ் நாட்டில் அவர் கட்சியில் இருந்த எம் பீ க்கள்…… கட்சி பிரமுகர்கள்…….. சில அரசு அதிகாரிகள் என்று அந்த இடமே வீ ஐ பீ க்களால் நிரம்பி வழிந்தது. 

“My daughter sakthi priyadarsini”, என்று வீரமணி அவளை அறிமுகப்படுத்த……..

“she has got indra maa’s half name priyadarsini”, என்றார் அந்த தலைமை….  இந்திரா காந்தியின் பெயர் இந்திரா பிரியதர்சினி அவர் அதை தான் சொன்னார்.  

அவரின் வார்த்தையை ஏற்று மரியாதையாக அவரை பார்த்து புன்னகைத்தாள் சக்தி. அதன் பிறகு அவளின் அந்த புன்னகை குறையவும் இல்லை மறையவும் இல்லை….. இப்போது கூட்டத்தை பார்த்து பயமும் இல்லை.

திறப்பு விழா சிறப்பாக நடந்தது.

மருத்துவமும் தொடங்கியது….. ரத்த தான முகாமும் தொடங்கியது…… கண் தான உறுப்பு தான முகாமும் தொடங்கியது…

“execellent idaes and arrangements, able to coordinate with this many youngsters, good”, என்றார் சக்தியை பார்த்து.  

எல்லாம் கார்த்திக்கின் ஐடியா என்று சொல்ல சக்தியின் வாய் துடித்தது. இந்த மாதிரி ஏதாவது செய்துவிடுவாள் என்று அவளின் பார்வை வட்டத்தில் இருந்த கார்த்திக், கண்ணாடியை கழட்டி கண்களால் அவளை அடக்கினான். 

அவர்கள் கல்லூரியின் மாணவர்கள் மட்டுமல்லாமல் வேறு சில கல்லூரியின் மாணவர்களும் அங்கே வரவைக்கப்பட்டு இருந்தனர்.

முகாம்கள் சிறப்பாக நடந்தது.

எல்லாம் பார்வையிட்ட பிறகு கட்சியின் தலைமை இரண்டு நிமிடம் அமர்ந்தார்.

“உங்க அப்பா வர்ற எலெக்ஷன்ல உனக்கு சீட் கேட்கறாரேம்மா, குடுத்துடலாமா?”, என்றார் நேரடியாக கட்சியின் தலைமை  சக்தியை பார்த்து ஆங்கிலத்தில்.       

அவள் என்ன சொல்வது என்று யோசிக்க, வீரமணி ஆர்வமாக தன் மகளை பார்த்தார்

“உங்க அப்பா கேட்கறதுக்காக மட்டும் கேட்கலை, i can judge people, something says me you have the capacity….. we need more youngters to be actively participating in politics…. this is the time where more youngters should come to develope our country”,  

அப்போதும் சக்தி யோசித்தாள்…… இது விளையாட்டு போல பதிலளிக்கும் விஷயம் அல்ல கண்கள் அவளையும் மீறி கார்த்திக்கை தேடியது….

அந்த சூழ்நிலையை கார்த்திக் ஆராய்ந்து கொண்டிருந்தான்…. கட்சியின் தலைமை ஆர்வமாக இருப்பதையும்….. வீரமணி இன்னும் ஆர்வமாக சக்தியின் பதிலுக்காக காத்திருப்பதையும்.

சக்தி ஏதாவது மறுப்பாக சொல்லிவிட்டாள் அதை வீரமணி ஜீரணிக்க மாட்டார் என்று அவனுக்கு தெரியும்….. சக்தியை பற்றிய அவரின் ஆசை லட்சியம் கனவு எல்லாம் அதுதான்.

அதுவுமில்லாமல் அவர் கேட்ட ஒரு வார்த்தை கார்த்திக்கின் ஞாபகத்தில் என்றும் இருந்தது….. “பொண்ணை பெத்து வெச்சிருக்கேன் இவனால என்ன செய்ய முடியும்னு தானே இப்படி பண்ணிட்ட கார்த்திக்”, என்ற அவரின் வார்த்தை………

சக்தி என்பதையும் மீறி அவரின் பெண்ணை ஆளாக்க வேண்டிய கடமை அவனுக்கு இருக்கிறது.

சக்தியின் கண்கள் அவனை தேடுவதை உணர்ந்தவன்….. அவளின் பார்வையில் நின்றான்.

சக்தி அவனை பார்த்தாள்! பார்த்தாள் மட்டுமே! சரியென்று சொல்லவா? வேண்டாமா? என்ற எந்த கேள்வியும் அதில் இல்லை.

 கார்த்திக் தானாக மீண்டும் அணிந்திருந்த கண்ணாடியை கழற்றி…. ஒத்துகொள் என்பது போல கண்மூடி திறந்தான்.    

“sure sir will do whatever my best is possible”, என்றாள்.

அந்த வார்த்தையை சக்தி சொன்ன பிறகே வீரமணி சரியாக மூச்சு விட்டார். அதன் பிறகு அவரிடம் கரை காணாத உற்சாகம்… என்னவோ தன் மகள் இப்போதே எலெக்ஷனில் நின்று ஜெயித்து விட்ட மாதிரி…….

அதன் பிறகே அங்கே இருந்த தெய்வானையை கூட கூப்பிட்டு தலைமையிடம் அறிமுகப்படுத்தி வைத்தார்….. அருகில் இருந்த கார்திக்கையும் கூப்பிட்டு, “my friends son”, என்று அறிமுகப்படுத்தியவர்….. “todays arangements for party people, all were taken care by him…. all including banners everything…”, என்றார்.

good work என்று அவன் தோளில் தட்டி கொடுத்த கட்சியின் தலைமை உடனே கிளம்பிவிட்டார். வீரமணியும் அவரோடு சென்று விட்டார்.

அவர்கள் சென்றதும், “எனக்கு அவசர வேலை நான் கிளம்பறேன்! பார்த்துக்கோ செல்வம் எந்த பிரச்சனையும் வரக்கூடாது….. சும்மா சில்ர செட்டில் மென்ட் ஏதாவது இருந்தா பணம் குடு! பெருசு எதுனாலும் நான் வரனும்னு சொல்லிடு! யாருக்கு எவ்வளவு குடுத்தேன்னு உனக்கு தெரியாது……”,

சக்தியிடம் வந்தவன்……. “இனிமே நீங்க பார்த்துகோங்க”, என்று சொல்லி பிரபுவிடமும் சொல்லி சென்றான்.

அவன் செயல்களில் ஒரு அவசரம் தெரிந்தது.

எங்கே இவ்வளவு அவசரமாக செல்கிறான் என்று தெரிந்து கொள்ளாவிட்டால் மண்டையே வெடித்து விடும் போல இருந்தது சக்திக்கு.

“எங்க போறான் இவ்வளவு அவசரமா?”, என்று சக்தி கேட்க……

“தெரியலைங்க மேடம்”, என்று செல்வம் சொன்னான். 

“உனக்கு என்ன தான் தெரியுது! இங்க நடக்கறதும் தெரியலை! அவன் என்ன செய்யறான்னும் தெரியலை! பெருசா பாஸ்ன்னு கூப்பிட்டா ஆச்சா…….. கொஞ்சமாவது உனக்கு அவன் மேல அக்கறை இருக்கா”, என்று அவனிடம் எரிந்து விழுந்தாள்.

“எதையும் தாங்கும் இதயம்”, என்பது போல போஸ் கொடுத்து செல்வம் நிற்க……. அதில் இன்னும் எரிச்சலானவள், “அவன் என்ன பண்றான்னு நீ சொல்ற!”, என்றாள்.

“தெரிஞ்சா சொல்றேன்!”, என்று செல்வம் சொல்ல…..

“டையலாக்லாம் அடிச்ச பிச்சிடுவேன்…. தெரிஞ்சு சொல்ற!”, என்றாள்.

“சரி”, என்று சொல்வதை தவிர வேறு ஆப்ஷன் செல்வத்திடம் இல்லை.

கார்த்திக் விரைந்தது சென்னைக்கு……. அவனின் அடுத்த படம் இரண்டு நாட்களுக்கு முன்பு தான் ரிலீஸ் ஆகியிருந்தது.

முதல் படம் புதுமுகங்களை வைத்து மிகவும் பிரமாண்டமாய் எடுத்தான்….. லாபம் என்று எதையும் பார்க்கவில்லை….. சுமாருக்கும் குறைவான மதிப்பையே பெற்றது.

அடுத்த படம் மிகப் பெரிய இயக்குனர், ஸ்டார் நடிகர் நடிகையை வைத்து இன்னும் பிரமாண்டமாய் தயாரித்தான். படம் எடுக்க ஆன செலவை விட…. நடிகர், நடிகை, இயக்குனர் மற்றும் காமெடி நடிகரின் சம்பளமே ஆளை சாப்பிட்டது. 

போன படத்தை சொந்தமாக வெளியிட்டான்….. இந்த படத்தை டிஸ்ட்ரிபுட்டர்களின் வசம் விட……… பெரிய நடிகர், இயக்குனர் என்பதால்……  படமும் நல்ல வியாபாரம் ஆகிற்று தான்……..

ஆனால் படம் படு ப்ளாப்….. இப்போது விநியோகிஸ்தர்கள் இயக்குனரின் வீட்டின் முன்பு பணத்தை கேட்டு தகராறு செய்து கொண்டிருந்தார்கள்….

அதை முன்னிட்டே இந்த அவசர பயணம்.    

காலையில் இருந்து அவனுக்கு தொலைபேசி அழைப்பு வந்த வண்ணம் தான் இருந்தது. இங்கே திறப்பு விழாவை விட்டு செல்ல மனமில்லாமல் அது முடியும் வரை காத்திருந்து சென்றான். 

அவன் சென்ற போது அங்கே சத்தமாக இருந்தது.

அவனை தனியாக கூட்டிகொண்டு போன இயக்குனர், அவனிடம், “காம்பென்சேஷன் குடுக்க வேண்டிய அவசியமில்லை. என்னுடைய மத்த படத்துல லாபம் பார்த்தாங்க தான…. இப்போ மட்டும் லாபம் வந்திருந்தா எனக்கா குடுத்திருப்பாங்க…… நஷ்டம் வந்தா நாம என்ன பண்றது”, என்றார்.

கார்த்திக், “நான் குடுத்துடறேன்”, என்று சொல்லிய போதும்……

“தேவையில்லை, அப்படியே குடுக்கனும்னு நினைச்சா உட்கார்ந்து பேசி ஏதாவது ஒரு அமௌன்ட் செட்டில் பண்ணலாம்……. முழுசா வேணாம்”, என்றார் .

“இல்லைங்க, நான் முழுசும் குடுத்துடறேன்! என்னால ஒருத்தன் வாழ்ந்ததா தான் இருக்கனும்……… வீழ்ந்ததா இருக்கவே கூடாது!”, என்றான் முடிவாக கார்த்திக்.              

 

Advertisement