Advertisement

நிகழ்காலத்தில் இன்று
அது ஒரு அழகான காலை பொழுது, ரம்யமான விடிவெள்ளி, கை வளை கொஞ்ச கோலமிட்டு, துளசிக்கு பூசை முடித்து,விலக்கேற்றி, மங்கள முகத்துடன் தன் துணைவனின் பாதம் பணிந்து அவனுக்கென ஆசை ஆசையை தான் தயாரித்த காபியுடன் கணவனின் நெற்றியில் ஆசை முத்தம் பதித்து எழுப்ப சென்றவள் கால்களை யாரோ (எதுவோ) பிடித்து இழுப்பது போன்று தோன்றவே வேகமாய் அதை உதறினாள்.
     அவள் உதைத்ததில் உருண்டு விழுந்தான் ஸ்ப்ரிங் என்று ருத்ராவால் அழைக்கப்படும் சுருட்டை. ருத்ராவிற்கு வலது கை, இடது கை, வலது கால், இடது கால்.என்று நான்கு நண்பர்கள் உண்டு
    இதில் ஸ்ப்ரிங் எனப்படும் சுருட்டையாகப்பட்டவன் மிகவும் ஒல்லியாய் வளர்ந்து கெட்டவன் தலைக்குள் வைக்கவேண்டிய அவன் மூளையை ஆண்டவன் வெளியே வைத்துவிட்டாரா என்னுமளவு பந்தாய் கிடக்கும் அவன் முடி ஆகவே காரணப் பெயர் (உபயம் ருத்ரா). எதையும் முழுமையாக யோசித்து செய்ய தெரியாது.
   “ஏய் ருத்ரா இன்னைக்கும் ஓங் கனவுக்கு நாந்தா பலியா ” என்று தன் இடுப்பை தேய்த்துக்கொண்டே எழுந்தவன் தன் பார்வையை சுழற்ற விழுந்தது மற்ற மூவரும் குப்புறடித்து தூங்கும் காட்சி “எழுந்து தொலைங்கடா தடிமாடுகளா இவகூட படுத்தா தூக்கத்துல கூட ஸ்டண்ட் பண்ராடா, ஐயோ டிடுப்பே போச்சே” என்று தன் இடுப்பை நீவிக்டொண்டே மற்றவர்களை உதைத்து எழுப்பினான்.
    சுருட்டைக்கடுத்து ருத்ராவின் கூட்டாளிகள் மண்ணாங்கட்டி எனப்படும் (சாண்ட் பிலாக்), ஒரு குழந்தையை ஓத்த தோற்றம், வெகுளி, மெக்கானிக் ஷெட்டில் வேலை பார்ப்பவன் ருத்ராவின் சொல்லே இவனுக்கு வேதவாக்கு எதிர்த்து இன்றுவரை பேசியதில்லை இனியும் பேசும் எண்ணமும் அவனிடம் இல்லை.
    அடுத்தவன் ஏழுமலை (செவன் ஹில்ஸ்) மிகவும் பலசாலி அனால் தன் பலத்தில் சிறிதும் நம்பிக்கை கிடையாது, இவனுக்கு ருத்ரா ஒரு ரோல்மாடல்
    நான்காமவன் மலையப்பன் (டாடி ஹில்ஸ் ) நால்வரில் அழகானவன், சினிமாவில் கதாநாயகனாகும் ஆசை உண்டு. இவனிடம் ஒரு விசேஷம் உண்டு சாதாரணமாக இருப்பவன் காதில் சினிமா பாடல் ஒலித்தால் அந்த கதாநாயகனாக சில மணித்துளிகள் மாறிபோவான் (சிறுவயதில் இருந்தே சினிமா பைத்தியமாக இருந்ததால் வந்த விளைவு).
இனி இவர்கள் நாவரையும் கட்டி மேய்க்கும் நம் நாயகி ருத்ராவை பற்றி அறிந்து கொள்வோம். ருத்ரா அழகானவள் தான் ஆனால் பெண்களுக்கு என்று நம் நாட்டில் வரையப்பட கோட்பாடுகளுக்கு பொருந்தாதவள்.
   ருத்ரா சிறுவயதிலேயே தாய் தந்தையை இழந்து சினிமாவில் ஸ்டண்ட் மேனாக வேலை பார்த்து வந்த தாய்மாமன் வீரமணியின் பொறுப்பில் வளர்ந்தாள். ருத்ராவின் தாய் விசாலாட்சி மிகவும் பயந்த சுபாவம் கொண்டவர், வாயில்லா பூச்சி, இதனாலேயே அவள் கணவனாகிய வரதராஜனால் பல கொடுமைகளுக்கு ஆளாகி தன் மகளே பிடிமானம் என்று வாழ்ந்து வந்தவர். ஒரு கட்டத்தில் காசுக்காக தன் மகளையே விற்க முயன்ற கணவனின் கொடும் செயல் தாங்க முடியாமல் குழந்தயை தன் அண்ணன் பொறுப்பில் விட்டுவிட்டு கணவனை எதிர்கொண்டாள். குடித்து விட்டு வந்தவன் குழந்தயை காணாமல் வெறிகொண்ண்டவன் ஆனான், மனைவியை மிரட்டுவதற்காக வீட்டை பூட்டிவிட்டு சமையல்கட்டில் இருந்து மண்ணெண்ணெயை அவள் மேல் ஊற்றினான். இயற்கையிலேயே பயந்த சுபாவம் கொண்ட பெண் ஆகவே இப்படி மிரட்டினால் குழந்தயை கொடுத்து விடுவாள் என்று எண்ணினான், அனால் அவனே எதிர்பாராத ஒன்று விசாலாட்சி தன்னையும் எரித்து கொண்டு தன் கணவனையும் அணைத்து உயிருடன் எரித்து கொண்டாள்.(பெண்கள் எவ்வளவு பயந்த சுபாவம் கொண்டவர்களாயினும் தன் குழந்தையை காக்க எந்த எல்லைக்ககும் சென்று விடுவார்கள் அதனால் தான் தாய் பாசத்தை இன்றுவரை ஏவராலும் ஈடு செய்ய முடிவதில்லை).
  தன் தங்கை மகளுக்காகவே திருமணம் கூட செய்யாமல் தன் காலத்தை ஓட்டிவிட்டார் வீரமணி. அவருக்கு எல்லாமே ருத்ரா தான். ருத்ரவையே தான் கற்ற தற்காப்பு கலைக்கும் வாரிசாக்கினார். அவர் சினிமாவில் சண்டை பயிற்சி பிரிவில் இருந்தது அதற்கு வலு சேர்த்தது.
   சிறு வயது முதலே ஆண்களின் மத்தியில் அதுவும் சினிமாவின் சண்டை பயிற்சி மையத்தில் ருத்ராவின் இளமை காலம் கழிந்ததால் இயற்கையாகவே முரட்டுதனமாய் வளர்ந்து விட்டவள். இந்த நாணம், நளினம் போன்றவை ருத்ராவை பொறுத்தவரை வராத ஒன்று இன்றுவரை அவள் அதற்கு முயற்சித்ததும் இல்லை இனி எதிர்காலம் அவளுக்கு என்ன வைத்திருக்கிறதோ?
   வெளி உருவம் எப்படி இருந்தாலும் தூய்மையான உள்ளம் கொண்டவள் நம் ருத்ரா, அவள் நண்பர்கள் நால்வரும் வெவ்வேறு காரணங்களாளும் அவர்களின் குணத்தாலும் சமுதாயத்தில் அனாதையாய் ஒதுக்க பட்டவர்கள். தன் எட்டு வயதிலேயே இவர்களை தாயாய் அரவணைத்துக்கொண்டவள். அவர்கள் நால்வருக்கும் தாய்,தந்ததை,தோழி, வழிகாட்டி, ஆசான் அனைத்தும் ருத்ராவே.அவளின் ஆண்மைக்குள் இருக்கும் பெண்மையை அந்த பெண்மைக்குள் இருக்கும் தாய்மையை அவளே உணர்ந்தது இல்லை.
   தூக்கத்தில் இருந்து எழுந்த நால்வரும் தன் காலை கடன்களை முடித்து ஆளுக்கு ஒன்றாய் அணைத்து வீட்டு வேலைகளையும் செய்து முடித்து கையில் காபியுடன் படுக்கை அறைக்கு வந்தனர், ருத்ரா இன்னமும் படுக்கையில் ஸ்டண்ட் செய்துக்கொண்டுதான் இருந்தாள்.
   யார் அவளை எழுப்புவது? நால்வரும் ஒருவர் மூஞ்சியை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
மண்ணாங்கட்டி “டேய் ஸ்ப்ரிங்கு இன்னைக்கு ஓம் முறை டா ஒழுங்கா போய் எழுப்பு போடா”என்று அவனை பிடித்து தள்ளினான். சுருட்டை “டேய் அவ ஒதைய நினச்சா ஆடி வயறு கலங்குதுடா முடியாது போடா”
ஏழுமலை ” எழுப்பின அடியோட முடிஞ்சிடும், எழுப்பாம விட்டேன்னு வை கொன்னுடுவா, இன்னைக்கி யாரோட சூட்டிங் தெரியுமுள்ள?” சுருட்டை “பயமுறுத்தாதடா எழுப்புறேன், மாடு மாதிரி ஒடம்ப மட்டும் வள்ளத்து  வெச்சிருப்பான் ஆனா பச்சப்புள்ள நம்மளையே கோர்த்துவிடுவானுக” என்று முனகிக்கொண்டே மெதுவாய் சென்று ருத்ராவை உலுக்கினான்
  
    “ருத்ரா இன்னைக்கி வேதாந்த் சாரோட சூட்டிங் இருக்கு எந்திரி” அவன் கூறிக்கொண்டிருக்கும் போதே அடிவயிற்றில் விழுந்த உதையில் பத்தடி தள்ளி விழுந்தான்.(ஹீரோயின் இன்ட்ரொடக்ஷன் பா எல்லாரும் ஜோரா கைதட்டுங்க).
சிக்கென்று ஜீன்ஸ் பேண்ட் டாப் அணிந்து கையில் தன் புல்லட்டின் சாவியை சுற்றிக்கொண்டே படியிறங்கிய ருத்ராவை பெருமை பொங்க பார்த்தார் வீரமணி. அவருக்கு ருத்ரா  எப்போதும் தன் வாரிசுதான் அவள் பெண் என்பதால் எதயும் கற்றுத்தர பயந்ததோ அல்லது ஒதுக்கியதோ இல்லை சில ஆண்களும் செய்ய முடியாத அல்லது சேய்ய துணியாத ஸ்டண்டுகளையும் ருத்ரா அசால்ட்டாய் செய்யும் பொழுது வீரமணிக்கு கர்வத்தில் நெஞ்சு விடைக்கும் இப்போதும் அதே கர்வ பார்வையை தன் மருமகள் மீது வீசிக்கொண்டிருந்தார் “ஆரம்பிச்சுட்டாருயா, இப்ப பாரேன் நெஞ்ச நிமித்திக்கிட்டு மீசையை முறுக்கி விட்டு நம்மள ஒரு லுக்கு விடுவாரு பாரேன் ” மலையப்பன் மண்ணாகட்டியின் காதை கடித்த்தான் “சும்மா இருடா மனுசனுக்கு பாம்பு காது கேட்டுச்சு பாத்ரூம் கழுவ விட்டுடுவாரு, நேத்து நீ பண்ண லொல்லுல அம்புட்டு துணியையும் ஸ்ப்ரிங் தொவச்சான் இன்னைக்கி என்ன மாட்டி விட பாக்குறயா, எஸ்கேப் டா நா, நாங்கல்லாம் யாரு ” இருந்த இடம் தெரியாது நழுவினான்.
   வாழ்க்கை தெளிந்த நீரோடையாக சென்றுகொண்டிருந்தது வீரமணிக்கு முதல் வலி இதயத்தை தாக்கும் வரை இனி?

Advertisement