Advertisement

1

“காங்கிராட்ஸ்!  மிஸஸ். மீராசுதன். யு ஆர் ப்ரெக்நென்ட்!”  என்று  டாக்டர் கூறியதில்  இருந்து நிற்காமல் வழியும் விழிநீரை துடைத்தபடி மகிழ்ச்சி கடலில் மூழ்கியவள், தன்னவன் முகம் பார்த்து  நேரில் கூற ஓடோடி  போய் கொண்டிருந்த வேளை வழியில் கண்ட காட்சி  கனவாய்  இருக்கக்கூடாதா? என்று மீண்டும் மீண்டும் கண் சிமிட்டி பார்க்க, கண்ட காட்சி அப்படியே கண் முன்  பூதாகரமாய் தெரிந்தது . அடி மேல் அடி வைத்து அவர்களின் அருகில் சென்றாள்.

“மெனி மோர் ஹாப்பி  ரிட்டர்ன்ஸ் ஆப்  தி டே மை டியர் சன்” என்றவன் அருகில் சென்றதும் விக்கித்து போனான்.

ஆம்.. யாரிடம்  ஆசைஆசையாய்  தான் கருவுற்றிருப்பதை  கூற விரைந்தோடினாளோ? அவனே எதிரில் நின்றிருந்தான்.

வில்லிலிருந்து  புறப்படும்  அம்பை போல்  அவளின் விழிகள் அவனை துளைத்தெடுக்க,  நேருக்கு நேர் சந்திக்க முடியாதவன்  திணறியபடி  அருகில் குழந்தையுடன்  நிற்பவளை  “இவங்க என் மனைவி சந்திரா”  என்றான்.

“அப்ப நான் யார்? ”  என்றாள் ஒற்றைவரியில்.

எதுவும் பேசாமல் வியர்த்து  கொட்டியபடி அமைதியாய் நிற்க, “இந்த நிமிஷம் வரைக்கும் மிஸஸ்.மீரா சுதனா இருந்த நான் இனி மிஸ்.மீரா மட்டும் தான்.” என்றாள் சுட்டெரிக்கும் சூரியனாய்.

“சொடுக்கு போட்ற நேரத்துல  உன்னை தூக்கி உள்ள வைக்க முடியும். உன்னையும் நம்பி என்னை மாதிரி இவளும் ஏமாந்துருக்காளே அதனால விட்டுட்டு போறேன். என் கண் முன்னாடி தப்பி  தவறி கூட வந்துடாதிங்க. விளைவு நீ எதிர்பார்க்க  முடியாத அளவு இருக்கும்.”  என்று போக திரும்பியவள்.

ஒரு நொடி நின்று,
“உன் வீடு தேடி  டிவோர்ஸ் பேப்பர்  வரும்.  எதுக்காக எனக்கு இப்படி ஒரு துரோகத்தை செஞ்சியோ?  கடவுள் எனக்கு அந்த வரத்தை கொடுத்துட்டார். குட் பை”  என்று கருவுற்றிருப்பதை புதிராய்  கூறிவிட்டு  புயலாய்  வெளியேறினாள். 

சந்திராவிடம் திரும்பி, “வீ வில் மீட் இன் ஹோம். ப்ளீஸ் கோ சேப்லி” என்று கூறியவனுக்கு தலையசைத்து விடைபெற்றாள் சந்திரா.

வேகமாக மீராவின் பின்னால் சென்றவன்.

“ஷ்ரு! ப்ளீஸ் நீ நினைக்கிற மாதிரி எதுவும் இல்ல. நில்லு கொஞ்சம் நான் சொல்றத கேளு”என்றான்.

அவனின் வார்த்தைகளுக்கு செவி மடுத்து நிற்காதவளின் கரம் பற்றி நிறுத்த முயல.

பொங்கியெழும் எரிமலையென சீறிக்கொண்டு தன் கரத்தை அவனிடம் இருந்து வெடுக்கென உதறியவள், “இப்ப என்ன வேணும் உங்களுக்கு? என்னை தொடுற தகுதியை பத்து நிமிஷத்துக்கு முன்னாடியே நீங்க இழந்துட்டிங்க மிஸ்டர்.” என்றாள் எந்நேரத்திலும் சீர காதிருக்கும் எரிமலையாய்.

“என்ன பேசுற நீ? நான் உன்னுடைய கணவன்” என்றான் சிடுசிடுப்பாக.

“என்ன நீங்கள் என் கணவன் என்றால் அதோ அந்த பெண்ணுக்கு யார்?” என்று அவள் வினா எழுப்ப.

“இங்க பாரு அது ஏதோ… நான்… பொறுமையா உனக்கு சொல்லி புரியவைக்கிறேன். ப்ளீஸ்“ என்றான் சுதன் பார்வையில் கெஞ்சியபடி.

“எனக்கு உங்க ஸ்டோரி எல்லாம் தேவை இல்ல. அந்த குழந்தைக்கு அப்பா நீங்களா? அவ கழுத்துல இருக்குற தாலி நீங்க கட்டினதா? இந்த ரெண்டு கேள்விக்கு பதில் அவ்ளோ தான்” என்று அவனின் விழிகளை நேருக்கு நேர் நோக்க.

“ஆமா…” என்றான் உள்ளே சென்ற குரலில்.

“அப்படினா அந்த குழந்தை உங்களோது சரியா?” என்றாள்.

ஆம் என்று தலையாட்டிய நொடி அவனின் கன்னத்தில் விழுந்தது அனல் பார்க்கும் ஒரு அரை.

“கல்யாணம் ஆனா நாள்ல இருந்து ஒரு சின்ன விஷயம் மறைச்சிருப்பேனா உன்கிட்ட!! ஆனால் நீ…?” என்று கொதிக்க.

“ப்ளீஸ் எனக்காக ஒரு பத்து நிமிஷம். நான் சொல்றத கேளு” என்றான்.

எதுவும் பேசாமல் அமைதியாய் நிற்க.

“ஷ்ரு” என்றவனை முறைத்து “டோன்ட் கால் மீ லைக் தட்” என்றாள் அழுத்தமாக.

“சந்திராவும் நானும் காலேஜ் டேஸ்ல விரும்பினோம். ஆனா, சந்தற்பவசதால அவள் வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டாள்.

அதனால் மனம் வெறுத்து எதிலும் நாட்டம் இல்லாமல் திரிந்த போது தான் உன்னை என் வீட்டில் எனக்கு திருமணம் செய்து வைத்தனர்.

சத்தியமாக உன்னை திருமணம் செய்ததில் இருந்து உன்னை மட்டும் தான் நான் விரும்பினேன்.

நமக்கு ஒரு வருடம் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்ததால் டாக்டர்கிட்ட போனப்ப தான் சந்திராவ பார்த்தேன்.

அவள் தாயின் கட்டாயத்தால் வேறு ஒருவரை திருமணம் செய்த அன்றே கார் விபத்தில் கணவனும் தாயும் ஒன்றாக தவறி விட்டதாகவும் அவளுக்கும் தலையில் ரத்த கட்டு இருப்பதாகவும் யாருமில்லாமல் தான் தனியாக தான் இருப்பதாகவும் எப்பொழுது வேண்டுமானாலும் தன் மரணம் நேரும் என்று கூறினாள்.

அதற்கு பிறகு அவளை அடிக்கடி சென்று பார்க்க ஆரம்பித்து உதவினேன்.

அப்படி ஒருமுறை செல்லும் பொழுது எங்களுக்குள் தவறு நேர்ந்து விட்டது.

அதன்பிறகு என்னை தொந்தரவு செய்யகூடாது என்று எங்கோ செல்ல போனவளை நான் தான் திருமணம் செய்து கொண்டேன். எப்பொழுது வேண்டுமானாலும் மரணம் வரலாம் என்ற எண்ணத்தில் தனித்து இருப்பது கொடுமையல்லவா?” என்றான் தன் பக்கம் இருக்கும் நியாயத்தை எடுத்து கூறுவதாய் நினைத்து.

“அப்போ என் ஞாபகம் உங்களுக்கு வரலையா? அவளுக்கு உடம்புக்கு முடியலைன்னா நம்ம வீடுக்கே கூட்டிட்டு வந்துருக்கலாமே? உங்களுக்கு தெரிந்தவர்கள் என்றாள் நான் பார்த்துக்கொள்ள மாட்டேனா?” என்று ஏமாற்றம் தந்த வலியில் துடித்தபடி அவள் கேட்க.

“அதெல்லாம் பேச நன்றாக இருக்கும் ஷ்ரு. நடைமுறைக்கு ஒத்துவராது. ஏதோ ஒருமுறை நாங்க செய்த தவறு இந்த குழந்தையாய் வந்து நின்னுச்சு. அதுக்கப்புறம் தான் நான் அவளை மனைவியாய்…” என்று முடிக்கும் முன் தன் கரம் கொண்டு நிறுத்துமாறு சைகை செய்தவள் அவனை எரித்துவிடுவது போல் முறைத்தாள்.

“செய்யறதை எல்லாம் செஞ்சுட்டு சப்ப காரணம் சொல்லாதிங்க. அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டு என்கூடயும் ஒண்ணுமே தெரியாத மாதிரி வாழ்ந்துருக்கிங்க. எச்‌எம்‌எம் வாழாம நடிச்சிருக்கீங்க.. வெட்கமா இல்ல உங்களுக்கு?” என்று அடிக்குரலில் சீறினாள்.

“நான் பண்ணது தப்பு தான். ப்ளீஸ் அவளுக்கு டாக்டர்ஸ் இன்னும் ஒரு மாசம் தான்னு சொல்லிட்டாங்க. அவ கடைசி காலத்த சந்தோசமா இருக்கணும்னு தான் நான் இப்படி எல்லாம்.. “ என்றான் தவிப்பாய்.

“ஸ்டாப் இட்! இன்னொரு பொண்ணுக்கு உதவறதா சொல்லி என்னை  ஏமாத்திட்டிங்க. அவ்ளோ தான்.. நீங்க…. நான்….. இனி தனி தான் ஓட்டமுடியாது” என்று அவள் முன்னே நடக்க.

“இல்ல நிச்சயமா உன்னை என்னால விட முடியாது” என்றான் அவளுக்கு முன்னே தடையாய் நின்று.

“நெவெர். இனி கனவுல கூட என் பக்கத்துல வர உங்களை அனுமதிக்க மாட்டேன்.” என்று முன்னேறினாள்.

“ஷ்ரு கடைசியா சொல்றேன். நீ எனக்கு மட்டும் தான் சொந்தமானவ. உனக்கு டிவோர்ஸ் தரமாட்டேன்” என்றான் அழுத்தமாக.

“என் வாழ்க்கைல உங்க சாப்ட்டர் ஓவர். எனக்குன்னு இப்ப ஒரு பெரிய கடமை இருக்கு அது என் குழந்தைய நல்ல படியா பெத்து வளர்க்கணும். உங்களுக்கு என் மனசுல இடம் இல்ல… கண்டிப்பா இப்படியே இருக்க மாட்டேன் நிச்சயமா கடவுள் எனக்குன்னு ஒருத்தர அனுப்பி வைப்பார். என்னையும் என் குழந்தையும் வைத்து தங்கமாய் தாங்குபவரை” என்று வேகமாக தன் காருக்கு அருகே செல்ல, அவளின் முன் வேகமாக போய் நின்றான் சுதன்.

“பார்க்கலாம் அதையும் என் பார்வை எப்பவுமே உன் மேல மட்டும் தான் இருக்கும் என்னை மீறி உன்கிட்ட யாரால நெருங்க முடியும். சீக்கிரமா கோவத்தை எல்லாம் மூட்டை கட்டி வச்சிட்டு என் கூட வாழற வழிய பாரு” என்றான் திமிராக.

“அதானே பார்த்தேன். திமிர் என்பது உன் கூடவே பிறந்ததாச்சே..?? அடக்கி வாசிக்கிரியேன்னு பார்த்தேன்” என்றாள் ஏளனமாக சிரித்தபடி.

“நான் வீட்டுக்கு வரும்போது நீ அங்க இருக்கனும்” என்றான் கட்டளையிடும் விதமாக.

“ஒரு நிமிஷம் என் முடிவுல எந்த மாற்றமும் இல்ல… அந்த வீட்டு பக்கம் வந்திடாத. அப்புறம் விலங்கு மாட்டிட்டு ஜெயிலுக்கு தான் போவ” என்று காரில் ஏறி வேகமாக நகர்ந்தாள் மீரா என்கிற ஷ்ருஷ்டிமீரா.

சென்னையில் நடுத்தர குடும்பத்தில் மகளாக பிறந்தவள். படிப்பில் கெட்டிக்காரியாக விளங்கி மெரிட்டில் பேஷன்டிசைனிங் முடித்து மெல்ல மெல்ல தொழிலில் முன்னேறி பிரபலமான பேஷன் டிசைனராக விளங்கியவள்.

தன் குடும்பத்தை மெல்ல நல்ல நிலைமைக்கு உயர்த்தினாள். தன் தந்தைக்கு என ஒரு தொழில் தொடங்கி அதில் அவருக்கு உதவிகரமாக இருந்தாள்.

இந்நிலையில் தான் பெரிய குடும்பத்து பையனான சுதன் வீட்டில் வந்து கேட்டு வற்புறுத்தி தங்கள் மகனுக்கு  திருமணமும் முடித்தார்கள்.

சுதனும் நன்றாக தான் மீராவை  பார்த்துகொண்டான்.

திருமணத்திற்கு பின் கணவனின் விருப்பமில்லாமல் வீட்டிலேயே இருந்து விட்டாள்.                

ஆனால் இப்பொழுது சொந்தத்தின் முன் போய் நிற்க விருப்பமில்லாமல் தன் வேலையை தொடர நினைத்தாள்.

அதுவும் மீண்டும் அவன் காலில் விழவே கூடாது என்று முடிவே செய்துவிட்டாள். ஒரு வேலை இவ்வளவு காலம் குழந்தை பிறக்காமல் இருந்தது கூட அவனின் வேலையாய் இருக்குமோ என்று சந்தேக பட்டாள்.

Advertisement