Advertisement

9

“இல்லடா உன்னை நம்பி வேற என் பிசினெசை விட்டுட்டு வந்துட்டேன். ஒழுங்கா பார்த்துபேன்ற கவலை வேற எனக்கு அதிகமா இருக்கு” என்றான் போலியான வருத்தமாய்.

“ஆமா இவரு பெரிய அம்பானி. இவரு பிசினெஸ் இப்போ நம்பர் ஒன்ல இருக்கு. நான் தான் லாஸ் பண்ணப்போறேன். போடா பக்கி.” என்று திட்டினான் நந்து.

“சரி. என் தங்கச்சியை கண்டுபிடிச்சிட்டியா?” என்றான் ஷ்ரவன் ஆர்வமாய்.

“உன் தங்கச்சியை நான் ஏன் கண்டுபிடிக்கனும்? நான் இதுவரைக்கும் உன் தங்கச்சியை பார்த்ததே இல்லையே?” என்றான் அப்பாவியாய் நந்து.

“ஆமா. உனக்கு இருக்குற வாய்க்கு ஒரு பொண்ணோட வாழ்க்கை பாழா போறது பத்தாதா? இதுல என் தங்கச்சியை வேற கட்டிகொடுக்கனுமாக்கும். அதெல்லாம் நான் என் வீட்ல பேசிட்டு தான் இருக்கேன் எல்லார்கிட்டயும்  எங்கப்பாவை தவிர. நீ ஒரு தேவதைய பார்த்தியே அந்த மகராசியை கண்டுபிடிச்சிட்டியான்னு கேட்டேன். இப்போ விளங்குதா?” என்றான் நக்கலாய் ஷ்ரவன்.

“அம்மாவையும் நம்ம ரெண்டு கம்பனியையும் பார்த்துகிட்டு கண்டுபிடிக்கிறது கஷ்டமா இருக்குடா” என்றான் நந்து.

“கடவுளே இந்த நேரத்துல என் நண்பனுக்கு உதவ முடியாம போய்டுச்சே” என்று வருந்தும் நண்பனை காணமுடியாமல் சிரித்தான்.

“கவலை படாதடா. அய்யா யாரு அப்பகூட கண்டுபிடிச்சிட்டோம்ல. அவ தினமும் அதே கோவிலுக்கு வராடா. ஆனா இன்னும் பேசலை” என்றான் நந்து.

“சரி. சீக்கிரம் பேசிடு. உன்னோட விருப்பத்தை சொல்லிடு நான் வரும்போது நீங்க ரெண்டு பேரும் தான் என்னை கூப்பிட வரணும்” என்றான் ஷ்ரவன்.

“நீ கவலையேப்படாத. நீ வரும் போது எங்களை கணவன் மனைவியா பார்க்குற அளவு முயற்சி பண்றேன்” என்றான் நந்து.

அடுத்து வந்த மாதங்களில் ஷ்ரவன் தன் நண்பனுக்கு மேலும் பாரமாக இருக்க கூடாது என்று வெளிநாட்டில் பார்ட் டைம் வேலை, படிப்பு என்று உறங்ககூட சரியான நேரம் கிடைக்காமல் ஓடிக்கொண்டிருந்தான். அவ்வப்பொழுது இனையதளங்களின் உதவியோடு இங்கிருக்கும் தன் தொழிலையும் கவனித்து கொண்டிருந்தான்.

பத்து நாளைக்கு ஒரு முறை நந்துவிடம் நேரம் ஒதுக்கினான்.

நந்துவின் கம்பனியையும் ஷ்ரவனின் கம்பனியையும் சேர்த்து கவனிக்க நேரம் மிக வேகமாக சுழன்றுகொண்டிருந்தது.

இவ்வளவு வேலைகள் இருந்தாலும் தன் மனம் கவர்ந்தவளின் அழகு முகத்தினை தினமும் காண தவறவில்லை. அதோடு அவளையும் நெருங்கி தன் விருப்பத்தினை வெளிபடுத்தினான் நந்து.

முதலில் மறுத்தவள் நந்துவின் காதலை விடாமல் அவளுக்கு உணர்த்த அவளும் சம்மதம் கூறி இருந்தாள்.

இருந்தாலும் இது தனக்கு படிப்பில் கடைசி ஆறு மாதம். நிறைய கடுமையாக படிக்க வேண்டி இருப்பதால் கொஞ்ச நாளைக்கு இருவரும் நேரம் சந்தித்து கொண்டால் போதும் என்றிருந்தாள்.

அது நந்துவுக்கும் வசதியாய் இருக்க சற்று நிம்மதியாய் தன் வேலைகளை கவனித்து கொண்டிருந்தான்.

இப்படியே நாட்கள் நகர்ந்து கொண்டிருக்க, மாதங்களும் கடந்து வருடம் ஆகிப்போனது. இதோ ஷ்ரவன் தன் படிப்பை நந்து எதிர்பார்த்தபடி வெற்றிகரமாய் முடித்து யுனிவர்சிட்டியில் மூன்றாவது இடத்தை பிடித்திருந்தான்.   

நிறைய எதிர்பார்ப்புகளுடன் தன் சொந்த மண்ணில் கால் பதித்து இருந்தான் ஷ்ரவன்.

நந்துவை தேடி கொண்டிருந்தவனின் பார்வையில் விழுந்தாள் ஷன்மதி.

“மதி இங்க என்ன பண்றா? உன்கிட்ட என் காதலை சொல்லாமலே நம்ம வாழ்க்கைக்காக ஒரு வருஷம் கஷ்டப்பட்டு கடந்துட்டு வந்துருகேன்டி. இங்க நான் கால் வச்ச நேரமே என் காதலை உன்கிட்ட சொல்ல சொல்லி கடவுளே உன்னை எனக்கு காட்டிருக்கார். இதோ வரேன்டி செல்லகுட்டி.” என்று வாய்விட்டு முனகியவன் அவளை நோக்கி நகர்ந்தான்.

அவளை நெருங்க ஒரு சில நொடிகளே இருக்க அவளை நோக்கி வந்து அணைத்தவரை கண்டவுடன் அதிர்ந்தான்.

‘ஹுக்கும் இந்தாளுக்கு இங்க என்ன வேலை? எனக்கு ஹிட்லரை விட மிக பெரிய எதிரி இவரு தான். எப்போலாம் அவளை நான் நெருங்குறேனோ அப்போலாம் எப்படியோ மோப்பம் பிடிச்சு வந்துட்றாரு. வேற யாரு என் வருங்கால மாமனாரு தான்’ என்று தலையில் அடித்துக்கொண்டவன் ஏக்கமாய் ஷன்மதியை பார்க்க.

அவன் தோளில் ஒரு அடி போட்டபடி பின்னே இருந்து வந்தான் நந்து.

“ஹாய் டா ஷ்ரவன்! எப்படி இருக்க? ஐ மிஸ் யு டா” என்று ஷ்ரவனை கட்டிக்கொண்டான்.

“டேய் நந்து. எப்படிடா இருக்க? எவ்ளோ நாள் ஆச்சு உன்னை பார்த்து. அம்மா எப்படி டா இருக்காங்க?” என்று நந்துவை இறுக்கி அணைத்து கொண்டான்.

“நான் நல்லா இருக்கேன். அம்மா நல்ல இருக்காங்க. இப்போ முழுசா குணமாகிட்டாங்க. வாடா போகலாம்” என்று சரவணை அணைத்தபடி நடந்தான்.

“அது சரி. எங்க உன் தேவதையை கூட்டிட்டு வரசொன்னேனே?” என்று புருவம் உயர்த்தி கேள்வியாய் பார்க்க.

“கூட்டிட்டு வந்துருகேன்டா. அதோ பாரு” என்று ஷன்மதி இருந்த இடத்தினை கட்ட,   ஒரு நொடி ஷ்ரவனின் இதயம் வெளியே வந்து விழுந்துவிடும் போல் இருந்தது.

ஆனால், மறுநொடி அவனின் விரல் ஷன்மதியை கடந்து வேறு ஒரு பெண்ணிடம் நிற்க ஷ்ரவனின் இதயம் வெளியே வந்து விழுந்துவிட்டது என்றே கூறலாம்.

அவளை பார்த்த நொடி விழிகளில் நீரோடு வேகமாக ஓடிச்சென்று பொது இடம் என்றும் பாராமல் அணைத்து நெற்றியில் இதழ் பதித்தான்.

“அண்ணா” என்றாள் அதிர்ச்சியாய்.

“அகுமா! எப்படிடா இருக்க? நீ இங்க என்ன பண்ற? ஹிட்லர்க்கு தெரியாம வந்தியா?” என்று பாசத்தோடு அவளை அணைத்தபடி கேட்டான்.

தூரத்தில் இருந்து ஒன்றும் புரியாமல் பார்த்து கொண்டிருந்த நந்து வேகமாக வந்து, “டேய்” என்று ஷ்ரவனை தள்ளிவிட்டான்.

“என்னடா பண்ற?” என்று முறைத்தான்.

பதில் எதுவும் கூறாமல் மீண்டும் அகல்யாவை இழுத்து அணைத்து,  “அகுமா இவன் என் பெஸ்ட் பிரெண்ட் நந்தேஷ்வரன். நாங்கல்லாம் நந்துன்னு கூப்பிடுவோம்” என்று அறிமுகபடுத்த ஒன்றும் புரியாமல் முழித்தான் நந்து.

‘என்னடா நடக்குது இங்க? நாம தான் இவனுக்கு என் லவரை அறிமுக படுத்தனும். இவன் ஏன் அவளை எனக்கு அறிமுகப்படுத்துறான்.’ என்று யோசித்தபடி பார்த்துகொண்டிருக்க.

“டேய் நந்து! இவ என் தங்கச்சி அகல்யா டா” என்று நந்துவுக்கு அறிமுகபடித்த ஒரு நொடி பேயரைந்தார் போல மாறியது நந்துவின் முகம்.

“என்…ன..து? உ..ன் தங்..கச்…சியா?” என்றான் நந்து அதிர்ச்சியாய்.

அகல்யா நந்து இருவரும் அதிர்ச்சியில் இருந்தனர்.

“டேய் ஷ்ரவா…” என்று இழுத்தான் நந்து.

“என்னடா?” என்றான் ஷ்ரவன் அவன் சொல்லவருவதை அறிந்தும்.

அவனுக்கு ஒரு நொடி நந்துவின் காதலியாக ஷனம்தி இருப்பாளோ என்று நொறுங்க அவள் இல்லை என்று இப்பொழுது நிம்மதியாய் இருந்தது.

“நான் விரும்புன பொண்ணும் உன் தங்கச்சியும் ஒன்னு தான்டா” என்று மெதுவாய் கூறினான்.

“என்னடா சொல்ற? நீ விரும்பினது என் தங்கச்சியா? நீ இப்படி பண்ணுவன்னு நான் எதிர்பார்க்கவே இல்லைடா” என்றான் போலி கோபத்தை முகத்தில் காட்டி.

உள்ளுக்குள் உடைந்து போன நந்து ‘ஆமா’ என்றான் தலையாட்டி.

அவனின் தவிப்பை ஒரு நொடி ரசித்தவன் வேகமாக நந்துவை அணைத்துக்கொண்டான்.

“டேய் இதை நான் எதிர்பார்க்கலை தான். ஆனா என் தங்கச்சிக்கு உன்னைவிட நல்ல மாப்பிள்ளை கிடைக்க மாட்டான்டா” என்று சிரித்தான்.

அவ்வளவு குற்றவுணர்வில் இருந்த நந்துவின் முகம் பிரகாசமாக, “அப்பாடா நீ என்ன சொல்லுவியோன்னு நான் ஒரு நிமிஷம் பயந்துட்டேன் டா” என்றான் நந்து.    

Advertisement