Advertisement

10

“ஹை சூப்பர்! நந்துவும் உங்க தங்கச்சி அகல்யாவும் கல்யாணம் பண்ணிகிட்டாங்களா? அவங்களை நான் இதுவரைக்கும் பார்த்ததே இல்லையே? நந்துவை பத்தி நீங்க எதுவும் சொன்னதே இல்லையே? அப்போ ஏர்போர்ட்ல என்னை பார்த்துருகேன்னா? என்னை அதுக்கு முன்னாடிலர்ந்து காதலிக்கிறியா? எனக்கு தலையே வெடிச்சிரும் போல இருக்கு. எனக்கு எல்லாத்தையும் சொல்லு ஷ்ரவன்” என்றாள் மூச்சுவிடாமல்.

“நில்லு நில்லு… எதுக்கு இவ்ளோ அவசரம் மதிம்மா?நான் தான் எல்லாத்தையும் சொல்லிட்டு தான இருக்கேன்.” என்று சிரித்தான் ஷ்ரவன்.

“நீ என்னை அதுக்கு முன்னாடி எவ்ளோ நாளா விரும்புற?” நெற்றி சுருக்கியபடி.

விழிகளை ஒரு நொடி மூடியவனின் முகம் முழுவதும் அந்த காதல் நினைவுகளில் மின்னியது.

பின் “நான் அதுக்கு முன்னாடி ஒன்றரை வருஷமா விரும்பிட்டு இருந்தேன். அதுக்கு அப்புறமா தான் உன்கிட்ட சொல்லி நீ அக்செப்ட் பண்ணாம ஆறு மாசம் ஆச்சு.” என்று சிரித்தான்.

வேகமாய் அவனை அணைத்து கொண்டு அவனின் நெற்றியில் இதழ்கள் படாமல் ஒரு உணர்வுகளின் முத்தத்தை பதித்தாள்.

“ஐ லவ் யு ஷ்ரவன்” என்று விழிகளும் புன்னகையின் காதலில் இழைந்தோடியது.

“ஐ லவ் யு டூ மதி குட்டி. நான் இல்லன்னாலும் இன்னும் ஏழு ஜென்மம் எடுத்தாலும் உன்னை மட்டும் தான் விரும்புவேன்” என்று அவளின் நெற்றியோடு நெற்றி மோதினான்.

“ம்ம்.. போதும் போதும்… கதையை மறுபடியும் சொல்லு” என்றாள் ஷன்மதி.

அன்னைக்கு,

“என்ன திடீர்னு என் மேல பாசம்?” என்றான் சந்தேகமாக ஷ்ரவன்.

“அதெல்லாம் ஒன்னுமில்ல. நாளைக்கு எனக்கும் உங்கம்மாக்கும் நடக்கபோற இருபத்தி அஞ்சாவது வருஷ கல்யாணத்துல எல்லாரும் வருவாங்க. யாராவது வந்து எங்க உங்க பையனை காணோம்னு கேக்கக்கூடாது பாரு. அதான். உன்னை பையனா பெத்தத்துக்கு அந்த ஒரு உதவியாவது செஞ்சுட்டு போ.” என்றார் ஷ்ரவனின் தந்தை.

தன் கைக்கடிகாரத்தில் இரவு 10 பத்துமணி பார்த்தவன்.

‘அதானே என்னடா இது உலக அதிசயமா இருக்குன்னு பார்த்தேன். இவருக்காவது என் மேல பாசம் வரதாவது’ என்று யோசித்தவன் “ஹான் .. சரி வரேன்..” என்று போனை கட் செய்தான்.

‘ஏன் அம்மா போன் பண்ணலை. ஏதாவது இருந்தா அம்மா எனக்கு முதல்லையே சொல்லிருப்பாங்களே? ஹிட்லர் திடிர்னு எதாவது முடிவு பண்ணிருப்பார் போல. கூப்ட மரியாதைக்கு போயிட்டு வருவோம்” என்று யோசித்தபடி நாளை இதனால் ஏற்பட போகும் விபரிதம் ஏதும் தெரியாமல் உறங்கிப்போனான் ஷ்ரவன்.

என்ன செய்வது என்று தெரியாமல் கைகளையும் கண்களையும் பிசைந்தபடி தன்னறையில் கண்ணீர் விட்டபடி எல்லா கடவுளையும் வேண்டி கொண்டிருந்தாள் அகல்யா.

‘கடவுளே! எனக்கு ஏதாவது ஒரு நல்ல வழிய காட்டுங்க. இல்ல நான் சாகரத தவிர வேற வழியே இல்ல’ என்று அழுது கொண்டிருந்தாள்.

“என்ன? உன் பொண்ணு ஏதாவது சாப்பிட்டாளா?” என்று மனைவியை முறைத்தபடி கேட்டார் விஷ்ணு (ஷ்ரவனின் தந்தை).

எதுவும் பேசாமல் நிற்கும் மனைவியை மீண்டும் முறைக்க, “என்னடி நான் கேட்டுட்டே இருக்கேன். எதுவும் பேசாம இருந்தா என்ன அர்த்தம்?” என்றார்.

“நீங்க செய்ற வேலைக்கு எங்களுக்கு சாப்பாடு ஒன்னு தான் குறைச்சல்..” என்று வழியும் நீரை பொருட்படுத்தாது முகத்தை வெடுக்கென திருப்பி கொண்டார்.

“நான் என்ன கொலையா பண்ணிட்டேன். இப்படி மூஞ்சி திருப்பி வச்சிக்கிற?” என்றார் சிரித்தபடி.

அதை பார்த்தவரின் வயிறு பற்றி எரிய, “ஏன் நீங்க என்ன பன்றிங்கன்னு தெரிஞ்சு தானே எல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கீங்க?” என்றார் கோபமாய்.

எதுவும் பேசாமல் எழுந்து வந்த விஷ்ணு அமைதியாய் மனைவி முன் நின்று முகத்தை உற்று பார்த்தவர், ஓங்கி அரு அரைவிட்டார்.

கன்னத்தை பிடித்தபடி சுருண்டு கிழே விழுந்தார் கல்யாணி (ஷ்ரவனின் தாய்).

“உன்னோட உருப்படாத பையனையே நான் வீடுக்குள்ள சேர்க்கலை. அந்த நாயோட கூட்டு சேர்ந்து சுத்திட்டு இருக்க இன்னொரு நாய இந்த வீட்டுக்கு மருமகனா கொண்டு வருவேன்னு நினைச்சியா? பொண்ணாடி பெத்து வச்சிருக்க?” என்று எட்டி காலால் மனைவியை உதைத்தவர்.

“அந்த தறுதலை சரி இல்லைன்னு தான் இவளை என் பாசம் எல்லாத்தையும் கொட்டி வளர்த்தேன். ஆனா, இவளும் கண்ட பரதேசியோட சுத்திட்டு இருக்கா. வெட்டி போடுவேனே தவிர அவனுக்கு என் பொன்னை தர முடியாது.” என்று கர்ஜித்தார்.

“நாளைக்கு காலைல கல்யாணம். நான் என் பிசினெஸ் பார்ட்னர் பேசிட்டேன். அவங்களும் ரொம்ப நாளா எப்போ சரின்னு சொல்வேன்னு காத்திடு இருந்தாங்க. இப்போ உடனே ஓகே சொல்லிட்டாங்க. நீயும் உன் பொண்ணும் எதாவது தில்லு முள்ளு பண்ணணும் நினைச்சிங்க. அப்புறம் என்னை உயிரோட பார்க்கவே முடியாது.” என்று தன் பாக்கெட்டில் இருந்த விஷ பாட்டிலை கையில் எடுத்து காட்டினார்.

“உங்களுக்கு மனசாட்சி இல்லையா?நம்ம பொண்ணு வேற ஒருத்தனை விரும்புறான்னு தெரிஞ்சும் எதுக்கு இப்படி பண்றிங்க? அந்த பையனுக்கு என்ன குறை? அவனும் நல்ல பையன் அவங்க குடும்பமும் நல்ல வசதியான குடும்பம் தான? அப்புறம் என்ன தான் உங்களுக்கு பிரச்சனை?” என்றார் கண்ணீர் சிந்தியபடி.

“எனக்கு பிரச்சனையே உன் பையன் தான். அந்த தறுதலையோட பிரெண்ட் தான அவன்… அதான். இப்ப எதுக்கு அதெல்லாம். நாளைக்கு கல்யாணத்துக்கு ஒழுங்கு மரியாதையா தயாராகிடுங்க” என்று உள்ளே சென்றார்.

தன் தந்தையின் செயலால் மனம் நொந்து நேற்றிலிருந்து சாப்பிடாமல் இருக்கும் அகல்யாவை பார்க்க வந்த கல்யாணி, “அகல்யா! எழுந்துருடா. நேத்துலர்ந்து எதுவுமே சாப்பிடலை நீ. கொஞ்சமா சாப்பிட்றா.” என்றார் கண்ணீரை துடைத்தபடி.

“சாப்பிட்றேன்மா. ஆனா அதுல உன் கையால கொஞ்சம் விஷத்தையும் கொடுத்துடு ஒரேடியா உங்களுக்கு தொல்லை இல்லாம போய் சேர்ந்துடறேன்.” என்றாள் அழுதபடி.

தன் மகளை அணைத்தபடி, “ஏன்டா இப்படி எல்லாம் பேசுற? உன்னை பெத்து இவ்ளோ நாள் அரும்பாடு பட்டு வளர்த்தது எல்லாம் இதுக்காகவா?” என்று அவரும் கண்ணீர் விட.

“பின்ன வேற என்ன செய்ய சொல்றிங்க? நான் வேற ஒருத்தரை காதலிக்கிறேன்னு தெரிஞ்சும் யாரோ ஒருத்தனுக்கு என்னை கல்யாணம் பண்ணி வைக்க பார்க்கிறார் அப்பா. ஒருத்தரை நினைச்சிகிட்டு இன்னொருத்தர்கூட வாழமுடியாது என்னால. அதுக்கு நான் செத்ருவேன்.” என்று அழும் மகளை தேற்றவும் முடியாமல் ஆறுதல் சொல்லவும் முடியாமல் தவித்தவர் ஒரு முடிவுக்கு வந்தவராய் எழுந்து வெளியே சென்றார்.

‘ஏன் ரெண்டு நாளா அகல்யா என்கிட்டே பேசவே இல்லை. அவங்க வீட்ல ஏதாவது பிரச்சனையா இருக்குமா? எங்க விஷயம் எதாவது அவங்க அப்பாவுக்கு தெரிஞ்சிருக்குமோ? இல்ல அவளுக்கு எதாவது உடம்புக்கு முடியலையோ? இப்போ எப்படி தெரிஞ்சிக்கிறது?’ என்று இரண்டு நாளாய் மண்டையை போட்டு உடைத்து கொண்டிருந்தான் நந்து.

‘பேசாம ஷ்ரவன் கிட்ட கேக்கலாமா? ம்ப்ச் அங்க ஏதாவது பிரச்சனைன்னா அவனுக்கு இந்நேரம் தெரிஞ்சிருக்குமே? நமக்கும் சொல்லிருப்பானே?’ என்று சாப்பிடகூட தோன்றாமல் வெறும் வயிற்றுடன் வெறுமையான பார்வையை சுவற்றில் செலுத்தி யோசித்திருந்தான் நந்து.

Advertisement