Advertisement

  1. மீராவின் அதிரடி.
வீட்டிற்கு வந்த சுதனுக்கு ஸ்ருஷ்டிமீரா எல்லா சாமன்களையும் அள்ளி கொண்டு போனது தெரிந்து வானத்துக்கும் பூமிக்கும் குதித்தான்.
‘கழுதை ரெண்டு நாள் கோவிச்சிட்டு உக்கார்ந்துருப்பா. அப்புறம் வந்துருவான்னு பார்த்தா? நெஞ்சழுத்தக்காரி எல்லாத்தையும் எடுத்துகிட்டு போயிருக்கா!! போய் அங்க கச்சேரி வெச்சா தான் அடங்குவா போல’ என்று எண்ணியபடி மீராவின் அலுவலகம் வந்தான்.
இவன் வந்த நேரம் மீரா வாந்தி எடுத்து எடுத்து முடியாமல் அரை மயக்கத்தில் படுத்திருந்தாள். இரவு எட்டு மணி ஆனதால் அவளுடைய தோழி வீட்டிற்கு சென்றுவிட இவள் மட்டும் தனியாக இருந்தாள்.
உள்ளே வந்து அலுவலகத்தை நோட்டமிட்டவன் எந்த பொருட்களும் இல்லாததால் ஆத்திரம் அடைந்து சோபாவில் உறங்கி கொண்டிருந்த மீராவின் மேல் ஒரு சொம்பு தண்ணீரை ஊற்றினான்.
முடியாமல் உறங்கி கொண்டிருந்தவள் திடிரென்று ஈரம்படவே பதறியடித்துக்கொண்டு எழுந்தாள்.
அங்கே மெஷ்வசுதன் சிரித்துகொண்டு நிற்க, அழுவதா சிரிப்பதா என்றே தெரியாமல் பாவமாய் நின்றாள் ஸ்ருஷ்டிமீரா.
‘காசிக்கு போனாலும் கர்மம் விடாதுன்ற கதையா இங்க வந்தாலும் இவன் விட மாட்றானே’ என்று எண்ணியவள், எதுவும் பேசாமல் உள்ளே சென்றாள்.
‘என்ன தூங்கனவ மேல தண்ணிய ஊத்திட்டோம் ஒண்ணுமே சொல்லாம உள்ள போய்ட்டா?’ என்று யோசித்து கொண்டிருக்கும் போதே பின்னிருந்து டமால் என்ற சத்தம் வந்தது.
‘என்ன? ஏது? ‘ என்று யோசிபதற்க்குள் மெஷ்வசுதன் முழுவதும் நனைந்திருந்தான்.          
“நான் ஒன்னும் உன் வீட்டு வேலைக்காரி இல்ல. அவங்ககிட்ட கூட மரியாதையா நடந்துக்கணும். என் இடத்துக்கு வந்து, உடம்பு முடியாம படுத்துட்டு இருக்க என் மேல தண்ணி ஊத்தற??? இடியட்!!” என்றாள் கோபமாக.
“என்னடி தனியா வந்துட்டதால வாய் ரொம்ப நீளுதோ?” என்று மெஷ்வசுதன் கர்ஜிக்க .
“ஹ்ம்ம்.. உன் மிரட்டலுக்கெல்லாம் பயந்த ஸ்ருஷ்டிமீரா இல்ல இப்ப நான். ஒரு காலத்துல நீ சத்தம் போட்டாலே அமைதியா இருந்துருக்கேன் அது உன்னை பார்த்து பயந்து இல்ல. என் கணவன்னு தந்த மரியாதை, நான் உன் மீது கொண்ட அன்புக்கான கட்டுப்பாடு. அதெல்லாம் இப்போ இல்ல. நீயே இப்போ எனக்கு தேவையில்லைன்னு ஆனப்புறம் தனியா இருக்க என்கிட்டே வந்து உன் திமிர காட்டாத. மரியாதையா வெளிய போ.” என்றாள் துணிச்சலாக அவன் கண்களை நேருக்கு நேர் பார்த்து.
“உனக்கு எவ்ளோ திமிரு இருந்தா இப்படி பேசுவ? இதுவரைக்கும் என் பேச்சுக்கு மறுபேச்சு பேசாதவ.” என்றான் நம்பமுடியாமல் அவனின் கோபம் எல்லை கடந்து கொண்டிருந்தது.
“ஆமா நானே தான் உன் முகத்தை பார்க்க கூட எனக்கு பிடிக்கலை மரியாதையா வெளிய போய்டு” என்றாள் எச்சரிக்கும் தொனியில்.
“என்னடி சொன்ன? என்னை வெளிய போவ சொல்றியா? உன்னை கல்யாணம் பண்ணி இதுவரைக்கும் நிராகரிச்சு வச்சவண்டி நான் நீ என்னை பார்த்து வெளிய போக சொல்றியா??? காலத்துக்கும் நீ என்னோட அடிமை தான்… யாராலும் உன்னை என்கிட்டே இருந்து காப்பாத்த முடியாது. உன்னை!!!” என்று நெருங்கி அவளின் தலைமுடியை கொத்தாய் பிடித்தான்.
ஏற்கனவே உடல்நிலை சுகமில்லாமல் இருந்தவள் அவனின் இறுக்கமான பிடியை தாளமுடியாமல் “அம்மா…!!!” என்று அலறினாள்.
வலியால் துடிக்கும் அவளை பார்த்து இறக்கம் இல்லாமல் மிகவும் ரசித்து சிரிக்க…
எதற்கும் துணிந்துவிட்டபின் யாருக்காகவும் பயப்பட தேவையில்லை. தன்னை பாதுகாத்து கொள்ள என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலையில் ஸ்ருஷ்டிமீரா, தன் பலம் முழுவதையும் ஒன்று திரட்டி தன் வலது கால்முட்டியால் பலமாக அவன் வயிற்றில் தாக்கினாள்.
அடி பலமாக பட, வலி தாளாமல் சுருண்டு கீழே விழுந்தான் மெஷ்வசுதன்.
“ஏண்டா நாயே! நீ எல்லாம் மனுஷனா கூட மதிக்க தகுதி இல்லாதவன்னு தான உன்னை விட்டு நான் விலகி இருக்கேன். என்னை எதுக்கு மறுபடியும் வந்து தொல்லை பண்ற?” என்று கத்த.
வலியோடு வெறியும் சேர்ந்து கொள்ள மொத்த ஆத்திரத்தையும் காட்ட வேகமாக எழுந்தவன்.
“உன்னை இன்னைக்கு கொல்லாம விடமாட்டேன்டி” என்று அருகில் இருந்த கண்ணாடி வெயிட்டை எடுத்து அவள் வயிற்றை பார்த்து அடிக்க, அவன் கணிப்பை அறிந்து லாவகமாக விலகினாள் ஸ்ருஷ்டிமீரா.
அந்த வெயிட் அவளின் பின்புறம் சுவற்றில் மாட்டி இருந்த கண்ணாடியில் பட்டு சுக்குநூறாய் உடைந்து தரையில் கொட்டியது.
அடுத்த தாக்குதல் ஆரம்பிக்கும் முன் வாசலில் அழைப்பு மணி அடிக்க,  ஆபத்பாந்தவனாய் நின்றிருந்தான் மீராவின் எதிர்கால நாயகன் கிருஷ்வந்த்.
அழைப்பு மணி ஓசை கேட்டு அமைதியாய் நின்ற மெஷ்வசுதன், வாசலில் காக்கி உடை அணிந்து கம்பீரமாய் ஒரு ஆண் நிற்க சற்று பதற்றமானான்.
ஸ்ருஷ்டிமீரா அவனை கண்டதும் விழிகளில் ஒர் நிம்மதி பரவ… என்ன யோசித்தாளோ? வேகமாக ஓடிச்சென்று அவனை அணைத்துக்கொண்டாள்.
இதை சற்றும் எதிர்பார்க்காத கிருஷ்வந்த் சற்று தடுமாறினாலும் முதலில் மெஷ்வசுதனை வெளியேற்றவேண்டும் என்று அவளை தன் வலக்கரத்தால் நகர்த்தி பக்கவாட்டில் நிற்க வைத்து. “மீரா உங்களுக்கு என்னாச்சு? யார் இவன்? கண்ணாடியெல்லாம் உடைஞ்சிருக்கு?” என்று கேள்விகளை அடுக்கி கொண்டே போக.
“ஹலோ! நீங்க யாரு முதல்ல? உங்களுக்கு என்ன வேணும்? நான் இவளுடைய கணவன்.” என்றான் திமிராக.
கிருஷ்வந்த் எதுவும் பேசாமல் ஸ்ருஷ்டிமீராவை பார்க்க, கண்ணசைவில் ஆம் என்று உரைத்தாலும், சற்று அவனிடம் தள்ளி நின்று “இங்க பாருங்க மிஸ்டர்.சுதன் இவர் என்னுடைய நண்பர். நான் நாளைலர்ந்து இவங்க வீட்ல தான் தங்க போறேன். பை தி வே. நான் உங்களுடைய மனைவி இல்ல. இன்னும் ரெண்டு நாள்ல உங்க வீடு தேடி டிவோர்ஸ் பேப்பர் வரும். இன்னொரு தடவை என்னை உன்னோட பொண்டாட்டின்னு சொன்ன உன் நாக்க இழுத்து வச்சு அறிஞ்சிருவேன் பார்த்துக்க” என்றாள் அதே துணிவோடு.
கிருஷ்வந்த்திடம் திரும்பி, “இவன் என்னுடைய முன்னாள் கணவன். ஒரு சில காரணங்களால் நான் இவரை பிரிஞ்சிட்டேன். ஆனா, என்னை இவர் துன்புறுத்திட்டே இருக்கார்.” என்றாள் உரிமையாய்., அவளின் பதில் மெஷ்வசுதனை கலவரமடைய செய்தது.
கிருஷ்வந்த் அவளின் இந்த பதிலுக்காக தான் காத்திருந்தது போல் முன்னேறியவன்.
“இவன் மேல ஒரு கம்ப்ளைன்ட் கொடுங்க மீரா. இருக்க எல்லா கிரிமினல் கேஸ்லையும் இவன சேர்த்து வச்சு ஒரு வழி பண்ணிடறேன்.” என்றான் ஆக்ரோஷமான குரலில்.
மெஷ்வசுதனுக்கு வேர்த்துகொட்ட தொடங்கியது. எதற்காக இங்கே வந்தோம் என்று எண்ணுமளவிற்கு இப்போது பயம் வந்துவிட்டிருந்தது அவனுக்கு. அவளின் பதிலுக்காக திகிலோடு பார்க்க…
“இல்ல அது மாதிரி எதுவும் செய்யவேண்டாம்” என்றாள் உடனே.
பொசுக்குன்னு போச்சுப்பா என்ற தொனியில் அவளை கேள்விக்குறியோடு க்ருஷ்வந்த் பார்க்க.
“இவன் வெளில தான் இருக்கனும். ஆனா என்னை எதுவும் டிஸ்டர்ப் பண்ணாம இருந்தா போதும்.” என்றாள் அமைதியாக.
‘எனக்கும் அவனுக்கும் ஒரு கணக்கு பாக்கி இருக்கு. என்னை மிஸ் பண்ணதுக்காக அவன் வருந்தணும். அதுவரைக்கும் அவன விடறதா இல்ல நான்’ என்று நினைத்துகொண்டாள்.
அவளின் எண்ணம் எதுவும் புரியாததால், “சரி. ரெண்டு கான்ஸ்டப்ல்ஸ இங்க விட்டுட்டு போறேன். நாளைக்கு காலைல பத்திரமா வந்து சேருங்க” என்று அவன் புறம் திரும்பி “மீரா சொல்றதால இப்போ உன்னை ஒண்ணுமே செய்யாம விட்டுடறேன். ஆனா, இன்னொரு தடவை இந்த மாதிரி ஏதாவது கேள்விப்பட்டேன். நீ வெளி உலகத்தை கண்ணால கூட பார்க்கமுடியாத மாதிரி பண்ணிடுவேன் தெரிஞ்சுக்க. ஒரு செக்கண்ட்கு மேல இங்க நிக்காத ஒழுங்கா போய்டு” என்றான்.
எதுவும் பேசாமல் அமைதியாக மீராவை ஓரக்கண்ணால் பார்த்தபடி சென்றான் மெஷ்வசுதன்.                 
அவன் போவதையே பார்த்து கொண்டிருந்தவள் அதற்குமேல் நிற்கமுடியாமல் தள்ளாடியபடி தரையில் அமர்ந்தாள்.
அவளின் நிலைக்கண்டு அவனுக்கே தெரியாமல் அவன் தசைகள் கலங்கினாலும் எதுவும் செய்யமுடியாமல் நின்றான்.
“என்ன செய்யுது? ஏன் ரொம்ப ஒரு மாதிரி இருக்கீங்க? ஹாஸ்பிடல் போகலாமா?” என்றவனிடம் “இல்ல டாக்டர் வாமிட்டிங் சிக்னஸ் குறைய டாப்லெட் சொன்னாங்க. ஆனா, என்னால தான் இப்போ வெளிய போயிட்டு வாங்கிட்டு வரமுடியலைன்னு டையர்டா படுத்திருந்தேன். அதுக்குள்ள இப்படி எல்லாம் நடந்திருச்சு.” என்றாள் அவன் விழிகளை பாராமல்.
“தயக்கம் இல்லாம உங்களுக்கு என்ன பண்ணுதுன்னு மட்டும் சொல்லுங்க?” என்றான்.
“தலை ரொம்ப பாரமா இருக்கு. வாமிட்டிங் ரொம்ப அதிகமா இருக்கு. எதுவும் சாப்பிட முடியலை. தண்ணி குடிச்சா கூட வாமிட்டிங் இருக்கு. ரொம்ப டையர்டா இருக்கு.” என்றாள்.
“இது தான் முதல் குழந்தையா?” என்றவன் காலையில் அவள் திட்டியது ஞாபகம் வரவே. ‘இது இப்போ ரொம்ப முக்கியமான கேள்வியா உனக்கு. நல்லா அர்ச்சனை பண்ணப்போறா வாங்கிகட்டிக்கோ’ என்று உள்ளுணர்வு எச்சரிக்க.
‘தனக்கும் இதற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை’ என்பதை எப்படி சொல்வது என தெரியாமல் தன் இதழை மெல்ல கடித்து ஆசுவாசபடுத்திகொண்டு அமைதியானவள்.
“ஆமாம்” என்று தலையாட்டினாள்.
“ஒரு நிமிஷம். நீங்க இப்படி உக்கார்ந்து ரெஸ்ட் எடுங்க. நான் இதோ வந்துடறேன்” என்று வெளியே சென்றவன், கால் மணிநேரம் கழித்து இரு பெண் காவலர்களை அழைத்துக்கொண்டு வந்தான்.
“இவங்க உங்ககூட இன்னைக்கு நைட் மட்டும் இருப்பாங்க. இந்தாங்க நீங்க சாப்பிட்றதுக்கு காரமில்லாத டிபன். உங்களுக்கு மாத்திரை இதுலையே இருக்கு. சாப்பிட்றதுக்கு முன்னாடியே ஒரு டேப்லட் போட்டுக்கோங்க. வாமிட் சென்ஸ் குறையும். சாப்டுட்டு டேப்லட் போட்டுட்டு நல்லா ரெஸ்ட் எடுங்க. காலைல நான் வண்டி அனுப்புறேன் வந்துருங்க” என்றான்.
“இல்ல வேண்டாம். நானே வந்துடறேன்” என்றாள் வேகமாக.
ஒரு சில நொடி அமைதியாக அவளின் முகத்தை பார்த்தவன்.
“சரி. பத்திரமா வந்துருங்க. நான் வரேன்” என்று கிளம்பினான்.
இரண்டாவது முறையாக அவனின் மனதை அவளையும் அறியாமல் கவர்ந்துவிட்டாள் மீரா.
‘இது தப்பு நீ ஒரு போலிஸ். நீ மக்களை காப்பாத்தனும் அதை விட்டுட்டு நீயே இப்படி திருமணமான பெண்ணை நினைக்கலாமா?’ என்று அவனுக்குள் கேள்வி எழ.
“தவறு தான். ஆனால் அவர்கள் இருவருக்கும் தீர்க்க முடியாத பிரச்சனை எனும் பட்சத்தில் நான் என்றும் அவளுக்கு துணையாக இருப்பேன்‘ என்று எண்ணி கொண்டு, அவளை விட்டு செல்ல மனம் இல்லாமல் அங்கிருந்து புறப்பட்டான்.
பார்ப்போம் என்ன நடக்கிறது என்று…???

Advertisement