Advertisement

2.

தன் கணவன் செய்த துரோகத்தை தாள முடியாமல் கண்டபடி பேசிவிட்டு வந்துவிட்டாலும் பதுமையவளும் பெண் தானே?.

அவன் தவறிழைத்தாலும் அவனின் பால் அவள் கொண்டது உண்மையான அன்பல்லவா?

விழியில் மூண்ட கண்ணீரை அடக்கியபடி பாவையவளின் சிந்தனை குதிரை தன் சிறுவயதிலிருந்து ஏற்பட்ட அனுபவங்களை அசைபோட ஆரம்பித்தது.

ஸ்ருஷ்டிமீரா நம்மை பொறுத்தவரை ஒரு பெண், ஆனால் தன்னையே சிறு சிறு துகள்களையெல்லாம் சேர்த்து தன்னை தானே ஸ்ருஷ்டித்து கொண்ட ஒரு ஆச்சர்யமிகுந்த பெண்ணவள்.

இவர்களின் குடும்பம் மிகுந்த பணம் படைத்த வசதியில்லாத நடுத்தர குடும்பம் தான். ஷ்ருஷ்டிமீராவின் அப்பா குணசீலன் ஒரு தனியார் அலுவலகத்தில் கணக்காளராக பணிபுரிந்தவர். சிட்டு போட்டும் தனியாக சேமித்தும் வைத்திருந்ததால் வீட்டு லோனாக சிறிய தொகையை மட்டும் பெற்று ஒரு வீட்டையும்  கட்டிவிட்டார். அதற்கு அவர் மனைவி உமாவும் குடும்ப செலவுகளில் சிக்கனமாக கையாண்டு சேமித்து கடன் வராமல் மூன்று வருடத்தில் வாங்கிய கடனை அடைக்க பெருந்துணையாக இருந்தார். உடன்பிறந்தவன் ஒரே அண்ணன் வினோத், மீராவை விட ஆறு வயது பெரியவன். எதிர்பாராமல் மீராவின் தாயார் உடல்நலக்குறைவால் இறந்துவிட தாயின் பொறுப்பையும் சேர்த்து கவனித்தார் தந்தை.

எழு வருடங்களுக்கு முன் மீராவின் அண்ணன் பி.சி.ஏ முடித்துவிட்டு தனியார் அலுவலகத்தில் அக்கௌண்டன்ட்டாக பணிபுரிந்தான்.

ஐ.ஏ.சி.டியில் ஸ்ருஷ்டிமீரா இறுதியாண்டு இன்டீரியர் டிசைனிங் படித்து கொண்டிருந்தாள். குடும்பத்தின் வறுமை அறிந்ததால் வீட்டில் மாலை வகுப்பு எடுத்து அவளுக்கு தேவையான செலவுகளை குறைத்து தன்னால் முடிந்தசிறு வருமானத்தை தன் தாயிடம் கொடுப்பாள். படிப்பிலும் படுச்சுட்டி.

“என்னம்மா இந்த படிப்பு போறேன்னு சொல்லுற? எல்லாம் என்ன என்னவோ படிக்குறாங்க?” என்று அவளின் தந்தை கேட்க.

“அப்பா ப்ளீஸ் வீட்டை விதவிதமா வடிவம்மைக்கணும் இது என்னோட ரொம்ப நாள் கனவுப்பா. நம்ம வீடு இல்லன்னாலும் மத்த எல்லாருக்கும் புது புது டிசைன்ல செஞ்சி கொடுப்பேன்பா இதுல நல்ல ஸ்கோப் இருக்கு இப்ப எல்லாரும் இது மாதிரி தான்பா விரும்புறாங்க” என்று கெஞ்ச “சரிம்மா என்னமோ படி நல்லா படிச்சா போதும் உன் சொந்த கால்ல நீ நிக்கணும் எனக்கப்புறம் நீ யாரையும் எதிர்பார்த்து இருக்க கூடாது. இந்த படிப்பு படிக்க எவ்ளோம்மா செலவாகும்?” என்று கேட்டாலும் அவரின் குரலில் இருக்கும் தவிப்பு மகளுக்கு புரியாமல் இல்லை.

“அப்பா இந்த படிப்புலையே இன்னும் நிறைய மாஸ்டர் டிக்ரீல்லாம் இருக்கு. அப்போ உங்ககிட்ட நான் பீஸ் கேக்குறேன். ஏன்னா! இப்போ ஒத்த பைசா கூட நீங்க கட்ட வேண்டியதில்ல. எனக்கு மெரிட்லையே கிடைச்சிருச்சு” என்று சிரிக்கும் மகளை பெருமிதத்துடன் பார்த்தார்.

குணசீலனுக்கு மாதம் இருபத்தி ஐந்தாயிரம் வருமானம் வர அது இரு பிள்ளைகளின் படிப்பு செல்விற்க்கே பத்தாது என்று  கூடுதலாக மாலையில் சிறிய கடை ஒன்றில் கணக்கு எழுதும் வேலைக்கு சென்றார். அதில் ஒரு எட்டாயிரம் வர இந்த மூன்று மாதங்களாக தான் வினோத் வேலைக்கு செல்வதால் பதினைந்தாயிரம் ரூபாய் சற்று அதிக வருமானம் கிடைத்தது.

மீராவின் படிப்பிற்க்கும் திருமணதிற்க்கும் போட்டுவைத்த சேமிப்பு தொகை எடுக்காமல் ஆறு இலட்சமாக கூடிக்கொண்டு போனதில் அவருக்கு ஒரு மகிழ்ச்சி பெண்ணுடைய திருமணதிற்கு ஓரளவு சேர்த்து வைத்துவிட்டோம் என்று. மகளுக்கு படிப்பு முடிந்து ஒரு நல்ல வாழ்க்கை அமைய வேண்டாத நாள் இல்லை.

திடுதிப்பென்று வினோத் ஒரு நாள் திருமண கோலத்தில் வந்து நிற்க ஆட்டம் கண்டு போனார்கள் இருவரும். வெளியே மணமக்கள் நிற்க மீரா தான் அப்பாவிடம் அண்ணனுக்கு தூதுவனாய் மாறி போனாள்.

“அப்பா எதுவா இருந்தாலும் வீட்டுக்குள்ள கூப்பிட்டு பேசிக்கலாம். கூப்பிடுங்கப்பா ப்ளீஸ்… எல்லாரும் வெளிய ஒரு மாதிரி பார்க்கறாங்க” என்று கூற “உன் விருப்பப்படி செய்ம்மா” என்று அமைதியாக உள்ளே சென்று தன் மனைவியின் படத்தின் முன் நின்றுகொண்டார்.

மீரா தான் வயதுக்கு அதிகமான முதிர்ச்சியோடு தன் அண்ணனையும் அண்ணியையும் திருஷ்டி கழித்து உள்ளே அழைத்தாள்.

“அண்ணா என்னன்னா இப்படி அவசர பட்டுடிங்க? அப்பாகிட்ட சொல்லி அவரோட சம்மதத்தோட கல்யாணம் பண்ணிருக்கலாம் இல்ல?” என்று வருத்தமாய் கேட்க.

“என்ன மன்னிச்சிருடா… இவங்க வீட்ல எங்க விவகாரம் தெரிஞ்சு சத்தமே இல்லாம வேற ஒருத்தர்கூட  கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிட்டாங்க. வேற வழியே இல்லாம தான் இப்படி பண்ணிட்டேன்” என்று தான் செய்த தவறுக்கு உண்மையாகவே வருந்தினான்.

அதற்கு மாறாக அவனுடைய புது மனைவியோ “இப்ப எதுக்கு ரொம்ப பீல் பண்றிங்க என்னைக்கு இருந்தாலும் கல்யாணம் பண்ணிக்க தான போறோம் அது இப்பயே நடந்துருச்சு. எனக்கு  ரொம்ப டயர்டா இருக்கு நான் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கணும் உங்க ரூம் எது?” என்று கேட்க ஒரு நிமிடம் ஸ்ருஷ்டிமீரா ஆடிப்போனாள்.

“இவள் தன் குடும்பத்திற்கு ஒத்து வரமாட்டாள் என்று அப்பொழுது முடிவு செய்துவிட தானும் அவளிடம் சற்று ஒதுங்கி இருப்பது நல்லது என்று அவ்வாறே நடக்கவும் செய்தாள். தன் அண்ணனிடம் மட்டும் எப்பொழுதும் மிகவும் செல்லம் கொஞ்சுவாள். புது மருமகள் சமையல் அறையில் புகுந்த உடன் இவர் வெளியேறிவிடுவார். அவள் சென்ற பின் தனக்கும் தன் மகளுக்கும் மட்டும் தனியே சமையல் செய்து இருவரும் சாப்பிடுவர். அப்பாவின் கோபம் சற்றும் குறையாமல் ஒரு மாதம் ஓடிவிட்டது. வினோத் கொடுக்கும் சம்பளத்தையும் அவர் தொடவில்லை என்பதையும் தன் அண்ணி சற்றும் கண்டுகொள்ளவில்லை என்பதையும் கவனித்துகொண்டு இருந்தாள்.

ஒரு மாலை பொழுதில் ஷ்ருஷ்டிமீரா, “அப்பா இன்னைக்கு நான் ப்ரீ தான் கொஞ்சம் வாக்கிங் போயிட்டு வரலாமா?” என்றாள்.

“சரிம்மா.. இதோ வரேன்” என்று உள்ளே சென்று வந்தார்.    

பூங்காவில் இருக்கும் மணலில் விளையாடி கொண்டிருக்கும் குழந்தைகளை பார்த்து கொண்டிருந்தவரிடம் “அப்பா!’ என்றாள் மெதுவாக.

“என்னம்மா?” என்றார் தன் மகளின் தலைகோதி.

“அப்பா அண்ணன் மேல உள்ள கோபம் இன்னும் குறையலையாப்பா? பாவம்ப்பா அண்ணன் ஏதோ தப்பு செஞ்சுட்டான். அதுக்காக இவ்ளோ பெரிய தண்டனை வேண்டாம்பா. அவனுக்கு இந்த ஒரு மாதமா நீங்க அவன் முகத்தைக்கூட பாக்கறதில்லை. ரொம்ப வருதபட்றான்பா அண்ணா” என்று தன் தமையனுக்கு வக்காலத்து வாங்கும் மகளை பார்க்க கண்கள் கலங்கியது அவருக்கு.

சிறிது நேரம் அமைதியாக இருந்தவர், “உங்க அண்ணனுக்கு இவ்ளோ சப்போர்ட் பண்ற! ஆனா அவன் உன்னை பத்தி நினைக்கிலையேம்மா? வயசுக்கு வந்த பெண் வீட்டில் இருக்கும் போது உன்னை பத்தி யோசிக்காம இப்படி செஞ்சுட்டானே அவன் என்கிட்டே சொல்லிருந்தா அவங்க வீட்ல நானே பேசி கல்யாணத்த நடத்திருப்பேனே?” என்று வருத்தப்பட.

“அப்பா விடுங்கப்பா. ஏதோ நடந்துருச்சு. இனி அதை மாத்தமுடியாது. அவன் இன்னும் அண்ணிகூட சந்தோசமா வாழலப்பா” என்றவுடன் அதிர்ச்சியாய் பார்த்தார்.

“எதேட்சையா அண்ணா ரூம் பக்கமா போனப்ப, அண்ணி போன்ல அண்ணன்கூட பேசினத கேட்டேன் உங்கப்பா பேசலன்னா அதுக்கு ஏன் என்னை கல்யாணம் பண்ணிகூட்டிட்டு வந்து என்னை ஏன் நோகடிக்கிறிங்க?” அப்டினாங்க. ப்ளீஸ் அவன்கிட்ட பேசுங்கப்பா” என்று கூறும் மகளை பார்த்து “சரிம்மா” என்றார்.

அன்றில் இருந்து மகனுடன் பேச ஆரம்பித்தார் அவர்களுடைய வாழ்க்கையும் சந்தோசமாக நகர்வதை உணர அடுத்த குண்டை தூக்கி போட்டாள் அண்ணி.

வேலை முடிந்து வீடு வந்த தந்தை அவர்களின் ரூமில் இருந்து கூச்சல் கேட்கவே மகளை பார்க்க தன்கொன்றும் தெரியாது என்று சைகை செய்தாள் மகள்.

“வினோத் இங்க வா” அவர்கள் அறை நோக்கி குரல் கொடுக்க வெளியே வந்தனர்.

“என்ன பிரச்சனை உங்களுக்குள்ள? எதுக்கு இப்படி சத்தம் போடறிங்க?” என்று கேட்டார்.     

“ஒன்னுமில்லப்பா” என்றான் மழுப்பலாக.

“நான் சொல்றேன்” என்று முன் வந்தாள் மருமகள்.

“நீ சும்மா இரு. தேவை இல்லாம எதுவும் பேசாத” என்று அவளை கடிந்து கொள்ள.

“டேய் நீ சும்மா இரு. நீ சொல்லும்மா” என்றார்.

“அது வந்து எங்களுக்கும் கல்யாணம் ஆகிடுச்சு. நாங்களும் சேர்த்து வைக்கணும் எங்களுக்கும் பிள்ளைங்கன்னு வந்துட்டா கஷ்டபடக்கூடாதில்ல?” என்றாள்.          

“அதுக்கு இப்ப என்னம்மா? எதுவா இருந்தாலும் நேரடியா சொல்லு” என்றார்.

“போன மாசம் வரைக்கும் நாங்க தனியா சமைச்சிக்கிட்டோம். எல்லா செலவும் நாங்க தனியா செஞ்சுகிட்டோம். ஆனா இந்த மாசம் எல்லாரும் ஒன்னா இருக்கறதால நாங்க எங்க செலவுக்குன்னு நாலாயிரம் தருவோம். இது சொந்த வீடுன்றதால வாடகை எல்லாம் தரமுடியாது” என்றாள் வெடுக்கென்று.

ஸ்ருஷ்டிமீரா அவளின் பேச்சில் நிலைக்குலைந்து போனாள்.ஆனால் அவளின் தந்தையோ சிரித்தபடி, “சரிம்மா எனக்கு நாலாயிரம் போதும் அதை மட்டும் கொடுங்க” என்றார்.

“அப்பா என்னப்பா நீங்க அவ தான் ஏதோ அறிவுகெட்டதனமா பேசிட்டு இருக்கான்னா நீங்களும் சரின்னு சொல்றிங்க. அதெல்லாம் முடியாது முழு சம்பளமும் உங்ககிட்ட தான் கொடுப்பேன்” என்று கோபமாக மனைவியை பார்த்தபடி கூறினான்.

“இங்க பாருங்க நான் சொல்றது தான் நடக்கணும் இல்ல நான் மனுஷியாவே இருக்க மாட்டேன்” என்று கத்த அவளின் கன்னத்தில் அறைய கையை ஓங்கியவனை தடுத்து நிறுத்தினார் குணசீலன்.

“டேய் என்னடா இது புது பழக்கம் பொம்பளைபிள்ளைய கைநீட்றது?” என்று கேட்டார்.

“பின்ன என்னப்பா பொண்ணு மாதிரியா நடந்துக்குறா?” என்றான் அவளை முறைத்தபடி.

“இது நான் ஏற்கனவே எதிர்பார்த்தது தான். என்ன இன்னும் இரண்டு மாசம் கழிச்சு தான் நடக்கும் என்று நினைத்தேன். ஆனா, இந்த மாசமே முடிஞ்சுடுச்சு” என்று கூறிவிட்டு உள்ளே சென்றார்.

அண்ணி ரஞ்சனியும் முகத்தை வெடுக்கென்று திருப்பிக்கொண்டு உள்ளே சென்றுவிட, வினோத் தலையை பிடித்து கொண்டு சோபாவில் அமர்ந்தான்.

Advertisement