Advertisement

10
ஸ்ருஷ்டிமீராவை விட்டுவிட்டு வர மனம் இல்லாமல் வந்தவன். உண்ண முடியாமல் உறக்கமும் வராமல் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தான். விடியும் பொழுதிற்காக இரவு முழுவதும் விழிமூடாமல் காத்திருந்தவன், மணி ஆறை தொட்டவுடன் முதல் ஆளாக மீராவின் விட்டின் முன் நின்றான்.
தூக்கமாத்திரையின் உதவியால் நன்கு ஆழ்ந்த நிம்மதியான உறக்கத்தில் இருந்தவளை எழுப்ப மனம் இல்லாமல் அங்கிருந்த பெண் காவலர்களை நன்றி கூறி அவர்களின் வீட்டிற்கு சென்று ஒய்வு எடுத்துகொள்ளும்படி கூறி அனுப்பிவைத்தான்.
ஸ்ருஷ்டிமீராவின் அருகினில் நின்று சில நொடிகள் அவளை அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தவன் மெல்ல ஒரு நாற்காலியை எடுத்து அவள் அருகினில் போட்டு அமர்ந்து கொண்டான்.
அவனின் விழிகள் மட்டும் அவளை நோக்கி கொண்டிருக்க மனம் நேற்று நடந்ததை அசைபோட ஆரம்பித்தன.
இரவு பணி முடிந்து வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தவன் ஸ்ருஷ்டிமீராவின் வீட்டிற்கு அருகில் வரும்பொழுது யாரோ ஒரு ஆண் தன் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே வேகமாக செல்வதை பார்த்து பதற்றமடைந்து இரண்டு வீட்டிற்கு முன்பே ஜீப்பை நிறுத்த சொல்லி இறங்கி நடந்து அவள் வீட்டின் வாசலில் நின்றான்.
முதலில் உள்ளே செல்வதா வேண்டாமா என்று யோசனையை நின்றவன் உள்ளே நடந்த அணைத்து உரையாடல்களையும் கேட்டு அமைதியாக நின்றான்.
ஆரம்பத்திலேயே உள்ளே செல்லும்படி அவன் மனம் கட்டளையிட்டாலும் தான் உள்ளே சென்று இவர்களின் சண்டையில் இடைபுகுந்தால்  ‘இது புருஷன் பொண்டாட்டி சண்டை நீங்க எதுக்கு வந்தீங்க?’ என்று மீரா கேட்டால் என்ன செய்வது? என்று தயங்கி அங்கேயே நின்றான். ‘ சண்ட பெருசாவுது உள்ள போலாமா?? வேணாம்.. கண்டிப்பா இவ என்னை ஏதாவது கேப்பா?’ என்று யோசித்து அங்கேயே நின்றான்.       
கண்ணாடி துண்டு உடையும் சத்தம் வந்தவுடன் நிலைமை கைமீறி போவதை உணர்ந்து வேகமாக உள்ளே நுழைந்தான்.
இவன் நினைத்ததிற்கு எதிர்மாறாக இருந்தது அவளின் செய்கை. தனக்கு பிடிக்காதவர் தன்னை கண்டபடி திட்டும்போது அன்னையை கண்ட குழந்தையாய் ஓடிவந்து க்ருஷ்வந்தை கட்டிக்கொண்டாள். அவளின் நிலை புரிந்து அவனும் அதை தவறாக எண்ணாமல் அவளுக்கு ஆதரவாய் சுதனிடம் பேசினான்.
“என்னை ஏன் தொல்லை பண்ற? எனக்கு நீ வேண்டாம் வேண்டாம்!! ஐ ஹேட் யூ” என்று ஸ்ருஷ்டிமீரா உறக்கத்தில் பிதற்ற,
சுயஉணர்விற்கு திரும்பியவன். என்ன செய்வதென்று தெரியாமல் தயங்கியபடி அவளின் தலையை மெதுவாய் வருட, அவனின் கரத்தை அழுந்த பற்றிக்கொண்டு “அப்பா ஏன்ப்பா என்னை விட்டுட்டு போனிங்க? இந்த கல்யாணம் வேணாம்னு எவ்ளோ சொன்னேன் நீங்க கேக்கவே இல்லை…” என்று உறக்கத்திலே விசும்ப.
மெல்ல குரல் கொடுத்தான். “மீரா!! மீரா!!” அவன் குரல் கேட்டதும் தூக்கத்தில் இருந்து விழித்தவள் ஒரு நிமிடம் அவனை கண்டு திகைத்தவள். ‘இவன் எப்படி இங்கு? எப்பொழுது வந்தான்? அதுவும் இங்கே ஏன் அமர்ந்திருக்கிறான்?’ என்று யோசித்தாள்.
அவளின் எண்ணம் புரிந்து, ‘வேதாளம் திரும்பி முருங்க மரம் எறிடுமோ? எதுக்கு வம்பு இவ எதாவது கேள்வி கேக்கறதுக்கு முன்னாடி நாம் முந்திப்போம்’ என்று “இப்போ எப்படி இருக்கு?” என்றான்.
இரவு நடந்தது அனைத்தும் ஞாபகம் வர அவன் முகத்தை காண முடியாமல் தடுமாறினாள் மீரா.
“இங்க பாருங்க நைட் நடந்தத மறந்துருங்க. என்னை ஒரு நண்பனா பாருங்க. அதுக்காக எந்த அட்வான்டேஜும் எடுத்துக்க மாட்டேன். பயபடாம தயங்காம எந்த உதவினாலும் என்கிட்டே கேளுங்க” என்றான்.
எதுவும் பேசாமல் தலையை மட்டும் சரி என்று ஆட்டியவள் கடிகாரத்தை தேட.
“அது நேத்து நைட் உடைஞ்சுருச்சு மணி இப்ப எட்டு ஆகுது. அதான் லேடி கான்ஸ்டபல்சை அனுப்பிட்டு நான் இருந்தேன். பிரெஷ் ஆகிட்டு வாங்க. நாம வீட்டுக்கு போகலாம். அம்மாகிட்ட கூட சொலாம வந்துட்டேன் தேடுவாங்க.” என்றான்.
தன் அப்பா அண்ணனிற்கு பிறகு அவனின் அக்கறை புதியதாய் தெரிய,  அவனை விசித்தரமாய் பார்த்தாள்.
தன்னை இமைக்காமல் பார்த்துக்கொண்டிருக்கும் அவளின் விழிமுன் கைகளை அசைத்து “போயிட்டு வாங்க” என்றான்.
எதுவும் பேசாமல் உள்ளே எழுந்து சென்றவள் முகம் கழுவி தன்னை சரி செய்து கொண்டு வருவதற்குள் அவளின் உடைமைகளை காரில் வைத்திருந்தான் க்ருஷ்வந்த்.
அவனின் உதவிகள் அவளை பலவீன படுத்திவிடுமோ?? இதுவரை தன் வாழ்வில் பெற்ற அடிகளே போதும், இனி எந்த ஏமாற்றத்தையும் தாங்கிக்கொள்ளும் சக்தி தனக்கில்லை என்று அஞ்சி தான் அதற்கு தகுதி அற்றவளாக நினைத்து அவனிடம் இருந்து ஒதுங்கி இருக்க முடிவு செய்தாள்.
அவளை வீட்டிற்கு கூட்டி வந்தவனை விநோதமாய் பார்த்தார் சுந்தரி. இருந்தாலும் முகத்தில் காட்டிகொள்ளாமல், “வாம்மா!! உடம்பு இப்போ எப்படி இருக்கு? பரவாலையா?” என்று விசாரித்தார்.
அவரை கண்டதும் எதுவும் பேசாமல் கட்டிக்கொண்டு கண்ணீர் வடிக்க, பின் சமாதானம் ஆகி. எங்கே தனக்கு உதவி செய்ததால் அவனுக்கு திட்டு விழக்கூடுமோ? என்ற பயத்தில் “ஒன்னும் இல்லம்மா. நான் நல்லா இருக்கேன். சார்! அந்த பக்கமா வந்தார் போல அதான் என்னையும் கூட்டிவந்தார்.” என்றாள் க்ருஷ்வந்தை பார்க்காமல்.
தான் எதிர்பார்க்காமல் தனக்காக பரிந்து பேசியதால் ஆச்சரிமாக மீராவை பார்த்தான் க்ருஷ்வந்த்.
சுந்தரியும் அவளின் எண்ணம் புரிந்து, “பரவால்லம்மா நானே சொல்லனும்னு இருந்தேன் அவனே கூட்டிட்டு வந்துட்டான்.” என்று அவளை சகஜமாக்க முயற்சி செய்தார்.
“சரி வா! நீ இப்போ எந்த வேலையும் செய்ய கூடாதில்ல அதனால நானே ஆள் வெச்சு வீட்ட கிளீன் பண்ணி உன் சாமானை எல்லாம் அடுக்கி வச்சுட்டேன். பால் காய்ச்சினா மட்டும் போதும். என் மேல ஒன்னும் கோபமில்லையே உன்னை கேட்காமல் இதெல்லாம் பண்ணதற்க்கு?” என்றாள் சுந்தரி.
“அய்யய்யோ என்னம்மா இப்படி கேக்கறிங்க? நான் கேக்காமலையே என் நிலைமை புரிஞ்சுகிட்டு உதவி செய்திருக்கிங்க. அதுக்கு போய் கோபப்படுவேனா? ரொம்ப நன்றிம்மா” என்றாள்.
“சரிம்மா நீ போய் குளிச்சிட்டு வா. பால் காய்ச்சிடலாம்.” என்றவுடன் அங்கிருந்து மீரா தலை அசைத்து சென்றாள்.
சுந்தரி எதுவும் கேட்கும் முன்னரே இரவு நடந்த எல்லாவற்றையும் கூறினான் க்ருஷ்வந்த். தன் மகன் எடுக்கும் முடிவு எந்த நிலையிலும் தவறாது என்று நினைத்துகொண்டு அமைதியாக இருந்துவிட்டாள் சுந்தரி.
வந்த அடுத்த நாளே மது க்ருஷ்வந்திடம் ஸ்ருஷ்டிமீராவை பற்றி ஒப்படைக்க, ஸ்ருஷ்டிமீராவின் இருந்த மதிப்பு பலமடங்காக உயர்ந்தது. இந்த நிலையிலும் யாருடைய உதவியையும் ஏற்கக்கூடாது என்று இருக்கும் அவளின் வைராக்கியம் மலைப்பாக இருந்தது அவனுக்கு. மெஷ்வசுதனின் மீது கொலை வெறி ஏற்பட்டாலும் அவளுக்காக எதுவும் செய்யாமல் இருந்தான்.
அவன் அறியாத விஷயங்கள் ஒரு சிலதும் இருக்கிறது என்பதை அவன் உணரவில்லை. ஆம் கடைசியாக ஸ்ருஷ்ட்மீராவும் மெஷ்வசுதனும் பேசிக்கொண்டது அவர்கள் இருவரை தவிர யாருக்கும் தெரியாது. அதை சொல்லவும் அவள் விரும்பவில்லை.    
அவளாக சொல்லும் வரை தனக்கு தெரிந்ததாக காட்டிகொள்ளவேண்டாம் என்று அவளிடம் எதையும் கேட்காமல் இருந்தான் க்ருஷ்வந்த்.
மெல்ல மெல்ல அவளின் தன்னம்பிக்கையான நடவடிக்கையால் அவளையும் அறியாமல் க்ருஸ்வந்தின் மனதில் வேருன்றி கொண்டிருந்தாள் ஸ்ருஷ்டிமீரா.  
வந்து ஒரு மாதம் ஆகிவிட்ட நிலையில், ஒரு பாதுகாப்பான இடத்திற்கு வந்துவிட்ட தெம்பு பிறந்தது ஸ்ருஷ்டிமீராவிற்க்கு ..
அவ்வளவாக கிருஷ்வந்திர்க்கும் ஸ்ருஷ்டிமீராவிற்க்கும் பேச்சுக்கள் இல்லையென்றாலும் இருவரின் விழிகளும் அவ்வப்போது நட்பின் மொழியோடு பரிமாறிக்கொண்டன.
முடிந்தால் சமைத்து உண்ணுவாள். இல்லையென்றால் அமைதியாக இருக்க அவளை தேடி வந்து உணவு கொடுத்துவிட்டு செல்வார்.
“கொஞ்ச நாளைக்கு உனக்கு வாமிட் நிக்கறவரைக்கும் நானே உனக்கும் சமச்சி தரேன்’ என்ற சுந்தரியிடம் “எதுக்கும்மா உங்களுக்கு வீண் சிரமம்?” என்றவளை முறைத்து, “அப்போ என்னை அம்மான்னு கூப்பிட்றது எல்லாம் சும்மா வெறும் வாய் வார்த்தை தானா?” என்று அன்பாய் கோபித்துகொண்டு கேட்க. மறுத்துபேச முடியாமல் “சரி” என்றாள். .
சில மாலை வேலைகளில் தோட்டத்தில் நடந்துகொண்டிருக்கும் ஸ்ருஷ்டிமீராவை நோக்கி வந்து “நல்லா இருக்கிங்களா? ஏதாவது உதவி வேணுமா?” என்ற இரண்டு வரிகளை மட்டும் கேட்டுவிட்டு  போய்விடுவான்.
தான் பார்த்த ஆண்களில் தன் மாசற்ற பார்வையாலும் நாகரிகமான நடவடிக்கைகளாலும் இவன் வேறுபட்டு தெரிய,அவளுக்கே தெரியாமல் இவளின் மனதில்ஒளி விடும் சுடராய் ஒட்டிகொண்டிருந்தான் க்ருஷ்வந்த்.
மீராவிற்கு இப்போது நான்கு மாதங்கள் நடைபெற இப்போதெலாம் க்ருஷ்வந்திடம் ஓரளவு பேச தொடங்கி இருந்தாள் ஸ்ருஷ்டிமீரா.    
அவ்வபொழுது ஒரு சில ஞாபகங்களால் நிலை துவண்டு போனாள் ஸ்ருஷ்டிமீரா.

Advertisement